நிறவெறியை வென்ற தமிழ்ப் பெண்!

நவநீதம் பிள்ளை... தென் ஆப்பிரிக்க தேசத்தின் முதல் பெண் நீதிபதியான இவர், தமிழ் வம்சாவளிப் பெண்! 

நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், இந்தியப் பெண்ணான இவர் நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக.. அகில உலகமும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார் இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்களின் ஜென்ம பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, மீடியாக்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுக்கவுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பஸ் டிரைவரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் யுனிவர்சிட்டி (Harvard University) வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.

“என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்பவில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்!” என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1950-களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தபோதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அசந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார்.

“நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன். ஒரு வக்கீலாக, கோர்ட்டில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது” என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிக் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

1992-ல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக்கறிஞர்கள் இருவர் துணையுடன் “இக்வாலிட்டி நவ் (Equality Now)” என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

“இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வக்கீல்தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்” என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை.

“ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை “பிளாக் பியூட்டி” என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத்தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அதுதான் எங்களின் வெற்றி...” என்று கண்களை மூடி மெதுவாக சிரிக்கிறார் இந்த 66 வயதான நீதிபதி.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes