இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டிப்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் 9 ஆம் பதிப்பு, சில மாதங்களாகவே நம்முடன் புழக்கத்தில் உள்ளது. இது பாதுகாப்பானது மட்டுமின்றி, அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராகவும் இடம் பெற்றுள்ளது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்த ஒன்றாக இது தரப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது பொது மக்களுக்குக் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 பிரவுசரில், நிறைய வசதிகளும், சிறப்பு களும் கிடைக்கின்றன.

இவற்றை நீங்கள் இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை என்றால், அல்லது பயன் படுத்திப் பார்த்துவிட்டு விலக்கி வைத்துள்ளீர்கள் என்றால், மீண்டும் ஒருமுறை அவை குறித்து தெரிந்து கொள்வது நல்லது.

உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்தே இதனை நீக்கி இருந்தீர்கள் எனில், மைக்ரோசாப்ட் தளம் சென்று இதனை இலவசமாக டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அல்லதுhttp://tech2.in.com/IE9_download/ என்ற முகவரி யில் இயங்கும் தளத்தில் இருந்து கிளிக் செய்தும் பெறலாம். இன்ஸ்டால் செய்யப் பட்ட பிரவுசர் என்னவெல்லாம் சிறப்பாகப் பெற்றுள்ளது என இங்கு காணலாம்.


1.மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சின் மாற்ற:

ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென ஒரு சர்ச் இஞ்சினை, தன் மாறா நிலை சர்ச் இஞ்சினாகக் கொண்டுள்ளது. மைக் ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவு சரில், தன்னுடைய பிங் (Bing) சர்ச் இஞ்சினைக் கொண்டுள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் கூகுள் சர்ச் இஞ்சினையே நம் சர்ச் இஞ்சினாகக் கொண்டுள்ளோம்.

இதனையே இன்டர் நெட் எக்ஸ்புளோரரிலும் மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சினாகக் கொண்டு வர, அட்ரஸ் பாரில் உள்ள, கீழ் விரியும் சர்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Add பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பல ஆட் ஆன் தொகுப்புகளை லோட் செய்திடும். இதில் சர்ச் (Search addons) என்னும் ஆட் ஆன் தொகுப்பினைப் பார்க்கவும்.

இங்கு உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அதிகம் விரும்பும் சர்ச் இஞ்சினும் இருக்கும். இதில் Google தேர்வு செய்து Add to Internet Explorer என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதிலேயே இதனை உங்கள் மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சினாக அமைத்திடவும் ஆப்ஷன் கிடைக்கும். அதனையும் செட் செய்திடவும்.


2. இணையதளங்களை பின் செய்திடுக:

விருப்பமான, அடிக்கடி நாம் பார்க்க வேண்டிய இணைய தளங்களைக் குறித்து வைக்க புக்மார்க்குகளைப் பயன்படுத்துவது எல்லாம், இப்போது பழங்கதையாகி விட்டது. இப்போது இந்த தளங்களை "பின்' செய்து வைத்துப் பயன்படுத்துவதே எளிதான வசதியாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, நீங்கள்www.dinamalar.com என்ற நம் இதழின் இணைய தளத்தை பின் செய்து வைத்து, தேவைப்படுகையில், அதில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தினமலர் இணைய தளம் சென்று, அந்த டேப்பினை அப்படியே இழுத்து வந்து, விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துவிடலாம்.


3. தொடங்கும் பொழுதே பிரைவேட் பிரவுசிங்:

இப்போதெல்லாம், அனைத்து பிரவுசர்களும், பயனாளர் பார்க்கும் தளங்கள் அதில் பதியப்படக் கூடாது என விரும்பினால், அதற்கான வசதியையும் தருகின்றன. இதன் மூலம் நாம் பார்க்கும் இணைய தளங்கள், பிரவுசரின் கேஷ் மெமரியில் தங்காது.

நாம் என்ன பார்த்தோம் என அந்தக் கம்ப்யூட்ட ரைப் பார்க்கும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாது. இதற்கு பிரவுசரை இயக்கிய பின்னர், அந்த ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல், பிரவுசர் இயங்கும் போதே, இத்தகைய நிலையில் தொடங்கும்படி செட் செய்திடலாம்.

இந்த நிலைக்கான பிரவுசர் ஷார்ட்கட் ஒன்றை அமைத்து இயக்கிவிட்டால் போதும். இந்த ஷார்ட்கட்டினை, உங்கள் விருப்பம் போல, ஸ்டார்ட் மெனு அல்லது டெஸ்க்டாப்பில் அமைத்துக் கொள்ளலாம். இதற்கென இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான புதிய ஷார்ட்கட் ஒன்றை அமைக்க வேண்டும். டெஸ்க்டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.

இதில் New > Shortcut எனச் செல்லவும். பின்னர், Browse என்பதில் கிளிக் செய்து, Internet Explorer என்ற பிரிவிற்குச் செல்லவும். வழக்கமாக இது Program Files என்ற போல்டரில் கிடைக்கும். இங்கு லொகேஷன் பாரில் “C:Program FilesInternet Exploreri explore.exe” private என டைப் செய்திடவும். அடுத்து, Next என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர், இந்த ஷார்ட்கட்டிற்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த ஐகான், நீங்கள் விரும்பும் இடத்தில் இடம் பெறும். இதில் டபுள் கிளிக் செய்தால், உடனே இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பிரைவேட் மோட் எனப்படும் இணைய முகவரிகள் தேக்கப்பட்டு பதியப்படாத நிலையில் இயங்கத் தொடங்கும்.


4. தொடர்ந்து மெனு பார் கிடைக்க:

மாற்றி அமைக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9ல், சுருட்டி வைக்கப்பட்ட மெனு பார் தான் தரப்படுகிறது. இதனால், இதில் உள்ள அனைத்து வசதிகளையும், பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் பெற்று பயன்படுத்த முடியாது. ஆல்ட் கீ அழுத்தி, சம்பந்தப்பட்ட மெனுவினைத் தேர்ந் தெடுத்து, வசதிகளில் கிளிக் செய்தே பெற முடியும்.

இதற்குப் பதிலாக, அனைத்தும் காட்டப்படும் நிலையில் வைத்திட விரும்பினால், அதற்கான செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இதற்கு ஆல்ட் கீ அழுத்திப் பின் View > Toolbars எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் மெனு பாரினை (Menu bar) இயக்கிவிட்டால், மெனு பார் தன் அனைத்துப் பிரிவுகளுடன் தொடர்ந்து கிடைக்கும்.


5. தனிநபர் விருப்பங்களை மேலும் மூடி வைக்க:

பெரும்பாலான பிரவுசர்களும், இணைய தளங்களும், பயனாளர் ஒருவர் இயங்கும் இடத்தினை அறிந்து செட் செய்து கொள்கின்றன. அந்த பயனாளரின் இடத்திற் கேற்ப தகவல்களைத் தருகின்றன. இதற்கு ஜியோ லொகேஷன் (“Geo location”) என்னும் சாதனத்தைப் பயன்படுத்து கின்றன. நீங்கள் இது போல உங்கள் இடத்தினை அறிந்து, உங்களைக் கண்டறியும் தகவல் இருக்கக் கூடாது என எண்ணினால், இந்த வசதியை நிறுத்தலாம்.

மறைக்கும் வசதி கூட இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற Tools > Internet Options எனச் சென்று, Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Never allow websites to request your physical location என்று கிடைக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.


6. பிரவுசர் டியூனிங்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது வேறு எந்த பிரவுசர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், காலப் போக்கில் அதற்கான சில ஆட் ஆன் தொகுப்புகளையும், பிளக் இன் புரோகிராம்களையும், சில வசதிகளுக்கென இணைக் கிறோம். இது பிரவுசர் இயங்கத் தொடங்குவதைச் சற்று தாமதப்படுத்துகிறது.

அதிர்ஷ்டவசமாக, இவற்றை இயங்காமல் நிறுத்தி வைக்கும் வழியும் பிரவுசரில் தரப்படுகிறது. இதனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கத்திற்கு தொடங்குவது விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பிரவுசரின் விண்டோவில் வலது மேல்புறமாக உள்ள டூல்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும்.

தொடர்ந்து Manage Addons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த ஆட் ஆன் தொகுப்புகள், பிரவுசர் தொடங்கும் போதே இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதற்கு, குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Disable என்பதனைக் கிளிக் செய்திடவும்.


7. பிரவுசரையே நீக்கலாம்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்துடனேயே வழங்கப் படுகிறது. எனவே, இதனை மட்டும் தனியே அன் இன்ஸ்டால் செய்திட முடியாத நிலை இருந்தது. பதிப்பு 9ல் இந்த குறை நீக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள மற்ற புரோகிராம்களை நீக்குவது போல இதனையும் நீக்கிவிடலாம். Turn Windows features on or off என்ற லிங்க் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.


8. கூடுதலாக டேப்கள்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல், டேப்களுக்கான இடம், சரியான கட்டமைப்புடன் தரப்பட்டுள்ளது. அட்ரஸ் பாரில் உள்ள இடத்தை, மற்ற பட்டன்களுடன் இந்த டேப்கள் பகிர்ந்து கொள்கின்றன.

இதனால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தளங்கள் திறக்கப்பட்டு டேப்கள் அமைக்கப்பட்டால், எந்த டேப், எந்த தளத்திற்கு என அறிய முடியாத வகையில், மிகச் சிறியன வாகக் காட்டப்படுகின்றன. இந்நிலையில், டேப்களை அடுத்த வரிசைக்குக் கொண்டு செல்வதே நல்லது.

இதனை மேற்கொள்ள, காட்டப்படும் டேப்களில் ஒன்றின் மீது கிளிக் செய்து, இங்கு கிடைக்கும் Show tabs on a separate row menu என்பதில் கிளிக் செய்திடவும்.


நோக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த சாம்சங்

அதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். உலகம் முழுக்க செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக செல்போன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான செல்போன் விற்பனையில் எந்த நிறுவனம் அதிக செல்போன்களை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.

இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.

சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும்.

இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங்.

சாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ‌மொபைல்கள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.


சூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்

இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கிறது.

இந்த போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், போனில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.

மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 90 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

அதிக நேரம் மின்சக்தி தரும் பேட்டரிகள், இரண்டு சிம் பயன்பாடு ஆகியவற்றை இந்தியாவில் முதலில் வழங்கிய தங்கள் நிறுவனம், இப்போது இந்த வகை மொபைல் போன்களையும் மக்களுக்கு வழங்க உள்ளது என இந்நிறுவன செயல் இயக்குநர் ராகுல் சர்மா தெரிவித்தார்.

இந்த வகை மொபைல் போன் வழக்கம் போல வசதிகளைக் கொண்டதாக இருக்குமா அல்லது ஸ்மார்ட் போனாக இருக்குமா என்ற தகவல் இல்லை. இருப்பினும் விரைவில் விற்பனைக்கு இந்த போன்களை எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் வி.எப். 247 என்ற மாடல் பின்புறமாக சோலார் பேனலுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் வசதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

எப்.எம். ரேடியோ, வண்ணத்திரையும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,500. மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் மாடலில் கூடுதல் வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லேப்டாப் இப்போது வாங்கலாமா?

விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் நிறுவனத்தின் அடுத்த கட்ட சி.பி.யு சிப்கள் Ivy Bridge ப்ராசசர்களுடன் வெளியாக இருப்பதால், லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க விரும்புபவர்கள், இப்போது கிடைக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கலாமா? அல்லது பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா? என்ற பரிதவிப்பில் இருக்கின்றனர்.

ஒரு சிலர், இது போல அறிவிப்புகளை நம்பி நம் தேவைகளை ஒத்தி போட வேண்டியது இல்லை. மேலும், இப்போது வாங்கிக் கொண்டாலும், அதனால் பெரிய தொழில் நுட்ப வசதி இழப்பு பெரிய அளவில் இருக்காது; நம் தேவைகளுக்கான சாதனங்களை தேவைப்படும்போது வாங்கிப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால், ஒரு சிலர், காத்திருந்து வாங்குவதே சிறந்தது என்று கூறி வருகின்றனர். விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் மட்டுமின்றி, என்விடியா நிறுவனமும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான புதிய கிராபிக்ஸ் கட்டமைப்பினை உருவாக்கி வெளியிட உள்ளது. எனவே காத்திருப்பதே நல்லது என்று இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்போது வாங்கும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்றாலும், ஹார்ட்வேர் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. புதிய சிபியு சிப்களை எப்படி இணைப்பது இயலாது என்றும் கூறுகின்ற னர். வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் பழைய கம்ப்யூட்டராகப்போகும் ஒன்றை இப்போது வாங்குவது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

தகவல் தொழில் நுட்ப உலகம் வர இருக்கும் புதிய தொழில் நுட்பம் மற்றும் கூடுதல் வசதிகள் (அதிகப் பணத்தை செலவு செய்திட வைக்கும்) குறித்து அறிவிப்பு வழங்கி, நம்மை செயல்பட விடாமல் நிறுத்தி வைக்கின்றனர். ஆனால், இது பெரும்பாலும், நாம் உடனே வாங்கும் சாதனம் அதிகம் பயன்படுத்திய பின்னரே கிடைக்கும். அது மட்டுமின்றி, பலருக்குத் தேவைப்படாத வசதிகள் தான் புதியதாகக் கிடைக்கும்.

எனவே நம் தேவைக்கேற்ப, அப்போது இருப்பதனை வாங்கிப் பயன் படுத்தத் தொடங்குவதே புத்திசாலித்தனம் என்று கூறுவோரும் உள்ளனர். அப்படி வாங்கும்போது, அடுத்து வர இருப்பதற்கு அப்டேட் செய்திடும் வசதி கொண்ட சாதனத்தைத் தேர்ந்தெடுப்பது நம் சாமர்த்தியம் என்கின்றனர் இன்னொரு சாரார். அப்படி என்ன புதிய சாதனங்கள் நம் வேலைப் பளுவினைக் குறைக்கப் போகின்றன.

இன்னும் எத்தனை பேர் விண்டோஸ் எக்ஸ்பி போல இன்னொரு சிஸ்டம் வரப் போவதில்லை என்று சொல்லி கடந்த பத்து ஆண்டுகளாக அதனையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் என்று இவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்திட முடியும் என்றாலும், அதனை மேற்கொள்ளாதவர்கள் அதிகம் இருக்கையில், என்றோ வரப்போகும் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்ற வாதமும் நியாயமானதே.

லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான திறனைக் கொண்டே அமைக் கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வாங்கிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இன்றைக்கும் புதிய வசதிகள் கொண்டதாக, நவீனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே புதிய விண்டோஸ் 8 மற்றும் ஹார்ட்வேர் கட்டமைப்பு வந்தாலும், பொறுத்திருந்து ஓராண்டு கழித்து வாங்குவது கூடத் தவறில்லை என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நம் வேலைக்கு, நம் பணிப்பாங்கிற்கு ஏற்ற லேப்டாப் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே இதற்கான வழி என்று அமைதிப்படுபவர்களும் இருக்கின்றனர்.


ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்

ரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ். இயங்கும் ஆறு லட்சம் கம்ப்யூட்டர்கள் பிளாஷ் பேக் ட்ரோஜன் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மிக மோசமான பாட்நெட் வைரஸின் மேக் அவதாரமாக உள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பேட்ச் பைலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெருகி வந்தது. Flashback Trojan என்று அழைக்கப்படுகிற இந்த வைரஸ் புரோகிராம், தான் நுழைந்த கம்ப்யூட்டரிலிருந்து, பிரபலமான இணைய தளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுகிறது.

பாதித்த கம்ப்யூட்டரின் அனைத்து நெட்வொர்க் பணிகளையும் கண்காணித்து இந்த திருட்டு வேலையை மேற்கொள்கிறது. ரஷ்யாவில் இயங்கும் டாக்டர் வெப் என்னும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் முதலில் இதனைக் கண்டறிந்த போது, பாதித்த கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டி இருந்தது.

அந்நிறுவனம் இதனை Mac botnet என அழைத்தது. இந்த அழைப்பு வந்த பின்னரே தங்களின் நாடுகளில் இயங்கும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இவை காணப்படுவதாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்தன.

பிளாஷ்பேக் (Flashback) என்னும் இந்த வைரஸ், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரவத் தொடங்கியது. முதலில் அடோப் பிளாஷ் பிளேயரின் அப்டேட் பைல் போல வேடமிட்டு இணைய தளங்களை இது அணுகும். பின்னர் அவ்வப்போது புதிதாகக் காணப்படும் வைரஸ்களுக்கு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்படும் புரோகிராம்களை செயலிழக்கச் செய்திடும்.

இதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கு எளிதாக வழி கிடைக்கும். இந்த வைரஸ் பாதித்த இணைய தளம் ஒன்றினை அணுகியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள ஜாவா இயக்கத்தில் உள்ள பிழையைப் பயன்படுத்தி மிக எளிதாக தளத்தை அணுகும் கம்ப்யூட்டரில் சென்று அமர்கிறது.

இதே வைரஸ் புரோகிராமின் இன்னொரு பதிப்பு, சென்றடைந்த கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகளைக் கேட்டு வாங்கும். இது பரவுவதற்கு அவை தேவை இல்லை என்றாலும், அவற்றைக் கேட்டுப் பெறும். அவற்றைக் கொடுத்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன் போல்டரைச் சென்றடைந்து பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களில் அமர்ந்து கொள்ளும்.

இவற்றில் எதனைப் பயன்படுத்த தொடங்கினாலும் உடனே நெட்வொர்க்கில் உள்ள மற்ற தளங்களுக்கும் பரவும். அட்மினிஸ்ட் ரேட்டர் குறித்த தகவல்களையும் அனுமதியையும் தரவில்லை என்றால், யூசர் அக்கவுண்ட்ஸ் போல்டரில் சென்று அமர்ந்து கொள்ளும். அதன் பின் எந்த அப்ளிகேஷனை இயக்கினாலும், அதன் இயக்கத்திலும் சென்று அமர்ந்து கொண்டு தனக்கு வேண்டிய தகவல்களைத் திருடி அனுப்பும்.

இந்தியாவில் இது பரவவில்லை என்றாலும், கண்டறியப்படாத நிலையில் இருக்க வாய்ப்புண்டு. மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவனம் இதற்கென Java for Mac OS X 10.6 Update 7 என்ற பேட்ச் பைலை வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பினைப் பலவீனப்படுத்திய குறியீடுகளைச் சரி செய்து அமைக்கப்பட்ட ஜாவா பதிப்பாகும்.

இதனைhttp://support.apple.com/kb/DL1516 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். Java for OS X Lion 2012001 என்ற பேட்ச் பைலும் இதனுடன் இணைந்து தரப்படுகிறது. இதனை http://support.apple.com/ kb/DL1515 என்ற முகவரியில் பெறலாம்.

விண்டோஸ் இயக்கங்களில் மட்டுமே பரவும்படி வைரஸ் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன என்ற கூற்றினைப் பெரிய அளவில் இந்த பிளாஷ் பேக் பாட்நெட் வைரஸ்கள் உடைத்துள்ளன. மேக் கம்ப்யூட்டர் இயக்குபவர்களும் கவனத் துடன் இருந்து, வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.


பிரவுசர்களின் புதிய பதிப்புகள்

கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் பிரவுசர் வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.

இதன் மூலம் சி.பி.யுவின் வேலைப் பளு குறையும். அந்தப் பணி ஜி.பி.யு. எனப்படும் கிராபிக்ஸ் சிப்பிற்குச் சென்றுவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த வசதி குரோம் பிரவுசரின் முந்தைய பதிப்புகளில் தரப் பட்டது.

ஆனால், சில நாட்களில் இது மாறா நிலையிலேயே முடக்கிவைக்கப்பட்டது. தற்போது வந்திருக்கும் புதிய பதிப்பில் இது இயங்கும் நிலையில் தரப்பட்டுள்ளது. இதன் இயக்கத்திற்குத் தேவையான இணக்கமான கிராபிக்ஸ் ஹார்ட்வேர் இருக்கும் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கம்ப்யூட்டரில் இது இயங்குமா எனத் தெரிந்து கொள்ள “chrome://gpu” என குரோம் பிரவுசர் யு.ஆர்.எல். விண்டோவில் டைப் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டி மூலமாக, தகவல்களைப் பெற்றது. அவை குறை எதுவும் தெரிவிக்காததனால், இந்த பதிப்பு வெளி யாகிறது. இந்த புதிய பதிப்பில், கேம் விளையாட WebGL, ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி முப்பரிமாண காட்சி எனப் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றாலும், இந்த பிரவுசர் இயங்கும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் சில காட்சி இயக்கங்கள் கிடைக்காது.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான இந்த பிரவுசர் பதிப்புகள்http://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கின்றன.

மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 10 ஐ சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது. இது பெரும்பாலும் முந்தைய பதிப்பில் இருந்த பிழை திருத்தப் பதிப்பாகவும், ஒரு சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டதாகவும் கிடைக்கிறது. தரப்பட்டுள்ள சில வசதிகளை இங்கு பட்டியலிடலாம்:

1. Back பட்டனை ஒருமுறை அழுத்திய பின்னரே Forward பட்டன் கிடைக்கும்.

2. வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களில், முழுத்திரையையும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

3. WebGL graphics மற்றும் CSS3 3D ஆகியவற்றிற்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது.

4. பெரிய அளவிலான ஜாவா ஆப்லெட்களை இயக்கும் போதும், புக்மார்க்குகளை சீரமைக்கும்போதும், பிரவுசர் கிராஷ் ஆவதில்லை.

விண்டோஸ் இயக்கத்திற்கான பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த பதிப்பைப் பெற http://www. mozilla.org/products/download.html?product=firefox10.0&os=win&lang=enUS என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


ஐபோன், ஐபேட் விற்பனையால் 11.62 பில்லியன் லாபம்

ஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது.

சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில்லியனாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 5.98 ஆக இருந்துள்ளது.

கடந்த 3மாதங்களில் ஐ-போன் மற்றும் ஐ-பேட்கள் அதிகளவு விற்பனையால் இவ்வளவு லாபம் பெற்றிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் 2ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 35.1 மில்லியன் ஐபோன்களையும், 11.8 மில்லியன் ஐ-பேட்களையும் விற்பனை செய்துள்ளது.

இதன்மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.18 பில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும்.


பேஸ்புக்கில் அடுத்தடுத்து சில்மிஷங்கள்

ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.

இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.

இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும்.

இங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும். வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும்.

இதன் பின்னர், வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்றுவிடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.

மேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.


விண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்

மானிட்டரில் குறிப்புகளை எழுதி வைக்க விண்டோஸ் 7 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் புதிய கூடுதல் வசதியைத் தருகிறது. இதுவரை இதனை தர்ட் பார்ட்டி புரோகிராம் கள் மூலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தோம்.

தற்போது சிஸ்டத்திலேயே இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால், எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசி யில் பேசுவது, இன்டர்நெட் வெப்சைட்டில் இயங்குவது, பேக்ஸ் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும், இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பார்க்கலாம்.

சிஸ்டத்திலேயே இதனை ஒருங்கிணைத் துக் கொடுப்பதால், இயக்கத்திற்கு இதனைக் கொண்டுவருவது எளிது. ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். மிக விரைவாகவும் இதனைக் கையாளலாம். இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும்.

இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும்.

நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.

ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கி யவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம்.

அதே போல, இதன் மீது கிளிக் செய்தால், அவை இயக்கப்பட்டு, திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது, எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம்.

நோட்டினை மூடி வைக்க, ரைட் கிளிக் செய்து, Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.

ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை.

எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப் பட்ட ஒரு சொல்லினை இதில் காப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.

நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய் வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள லாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)

நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம்.

அப்படிப்பட்டவர் களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.

இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\{username}\AppData\RoamingMicro soft\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.


கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்

வெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும்.

கூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. இப்போது, பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த, இலவச கிளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதியையும் தர இருக்கிறது.

இதன்படி ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 ஜிபி கொள்ளளவு இடம் உள்ள ட்ரைவ் இடம் தரப்படும். இதில் நாம் நம் பைல்களை சேமித்துப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்த ட்ரைவில் உள்ள பைல்களை, டெஸ்க்டாப், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள் வழியாக அணுகி டவுண்லோட் செய்து கொள்ளலாம். drive.google.com தளம் சென்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் தன் எம்.எஸ். ஆபீஸ் பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட, ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில், 25 ஜிபி அளவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இடம் தந்து வருகிறது. அத்துடன், இதே போன்ற சேவையை Box, Amazon Cloud Drive மற்றும் Apple’s iCloud ஆகியவை வழங்கி வருகின்றன.

ஆனால் இவை 2 ஜிபி அளவி லேயே இடம் தருகின்றன. அதிகமாகத் தேவைப்படும் இடத்தைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இந்த வகையில் கூகுள் நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு மேல், கட்டணம் செலுத்திப் பெறும் வசதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோரேஜ் இடம் அளிக்கும் வசதியை அளிப்பதில் கூகுள் தற்போதுதான் வந்துள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அளித்து வருகின் றன. கூகுள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப் படையில் மியூசிக் பைல்களுக்கு இடம் அளித்து வருகிறது.

வாடிக்கையாளர் ஒருவர் அதிக பட்சம் 20 ஆயிரம் பாடல் பைல்களை இதில் பதிந்து வைத்து, எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் இவற்றைப் பெறும் வசதியைத் தந்து வருகிறது.


யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.

ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.

பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.

இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.

யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.

இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.

இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.

இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.

“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும்.

விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.

இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.


கம்ப்யூட்டர் இயக்கம் "டிவி'யில் காண

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.

இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.

கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.


1.எச்.டி.எம்.ஐ. (HDMI):

புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.


2. டி.வி.ஐ. (DVI):

இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.


3. வி.ஜி.ஏ. (VGA):

இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.


4. எஸ்-வீடியோ (Svideo):

இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.

ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.

இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.


பி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்

பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.

கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா!

பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும்.

இந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப் பட்டும் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங்கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.

அப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப் படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக்கும்.

அப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது.

இதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.

இந்த தளத்தின் சேவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கு நன்கொடையை நீங்கள் அனுப்பலாம். ஆனால், சேவைகள் முற்றிலும் இலவசமே.


கம்ப்யூட்டர் தூங்கட்டுமா?

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate, மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.


1. ஸ்லீப் மோட் (Sleep mode):

இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக் கம், டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கம்ப்யூட்டரின் அனைத்து இயக்கங் களும் நிறுத்தப்படும்.

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் மெமரியில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது “Standby” செயல்பாட்டினைப் போன்றதாகும். குறை வான காலத்திற்குக் கம்ப்யூட்டர் செயல் பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.


2. ஹைபர்னேட் (Hibernate):

இதனை மேற்கொள்கையில், திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கம்ப்யூட்டர் “shut down” செய்யப்படுகிறது.

இந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில், அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரை குறிப்பாக லேப்டாப்பினை இந்த நிலைக்கு மாற்றலாம்.


3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந் ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதி. இந்த நிலையை மேற்கொள்கையில், திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகு மெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

நீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப் பட்டுள்ளது. லேப்டாப்பில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.

ஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயல வில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பைல்களையும், அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes