புதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் iOS 8

தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. 

சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. 

சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது. 

2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

இப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம். சில மாற்றங்களும், வசதிகளும், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் தந்தனைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாக உள்ளன. 


1. Handoff: 

இது ஓர் எதிர்பாராத வசதி என்று அனைவரும் பாராட்டுகின்றனர். மேக் கம்ப்யூட்டர் ஒன்றில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது படம் ஒன்றைத் திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது இமெயில் ஒன்றை அனுப்ப தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

அந்த நிலையில், வேறு ஒரு வேலையாகச் சற்று வெளியே செல்ல வேண்டியதுள்ளது. அந்த நிலையில், உங்களுடைய ஐபோன் அல்லது ஐபேட் கொண்டு, அதே வேலையை அதில் மேற்கொள்ளலாம். Handoff வழியாக, உங்களுடைய அனைத்து ஆப்பிள் சாதனங்களும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையினை உணர்ந்து தெரிந்து கொண்டிருக்கும். 

எனவே, இன்னொரு வசதியான சாதனத்தினை திறந்து, வேலையைத் தொடரலாம். Handoff பயன்படுத்த ஐ.ஓ.எஸ்.8, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.10 மற்றும் வேலையை மேற்கொள்வதற்கான, அங்கீகரிக்கப்பட்ட தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உங்கள் சாதனங்களில் இருக்க வேண்டும்.


2. Healthkit: 

ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில் இணைந்தே அறிமுகமாகியுள்ள இன்னொரு அப்ளிகேஷன் Health என்பதாகும். இந்த அப்ளிகேஷனில், உங்கள் உடல் நலம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிந்து வைக்கலாம். 

எடை, எப்படி உறங்குகிறீர்கள், இரத்த அழுத்தம், மருத்துவ ரீதியாக உடல் நிலை இன்னும் உங்கள் உடல் நலம் சார்ந்த அனைத்தும் பதிவு செய்திடலாம். ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 6 வழியாக, நீங்கள் உங்கள் உடல் நலம் சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அப்ளிகேஷன் பெற்று தக்க வைக்கும். 

வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனமும் இந்த தகவல்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் உடல் நலம் குறித்த அன்றைய நாள் வரையிலான தகவல்கள் பதிக்கப்பட்டு, உடனடியாக உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கிடைக்கின்றன.


3. Customised Keyboard: 

இதுவரை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் மட்டுமே, நம் இஷ்டப்படி வடிவமைக்கக் கூடிய கீ போர்டினைப் பெற்றுள்ளனர் என்று கூறிக் கொண்டிருந்தனர். Swype என்ற மாற்று கீ போர்ட் மூலம் போன்களில் துல்லியமாகவும் எளிதாகவும் எழுத முடிகிறது என்று கூறி புகழ்ந்து வந்தனர். 

ஐ.ஓ.எஸ்.8 இந்த பிரிவில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. Swype உட்பட, எந்த கீ போர்டையும் நம் வசதிப்படி மாற்றி அமைத்து இயக்க முடியும் வசதியினைத் தந்துள்ளது.


4. App-to-App: 

அனைத்து அப்ளிகேஷன்களும் பயன்படுத்தக் கூடிய பொதுவான வசதிகள் பல இந்த சிஸ்டத்தில் அப்ளிகேஷன்களுக்குத் தரப்பட்டுள்ளன. 

இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னிடத்தே சில வசதிகளைக் கொண்டு, அவற்றை அப்ளிகேஷன்கள் பயன்படுத்த வழங்கி வந்தது. இப்போது ஐ.ஓ.எஸ்.8, ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கும் வசதிகள், மற்ற அப்ளிகேஷன்களும் பயன்படுத்தும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. 

எனவே, அப்ளிகேஷன்கள் இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்க தன்மையைப் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆடியோ அப்ளிகேஷன் ஒன்றின் வசதிகளை, வீடியோ அப்ளிகேஷன் ஒன்றும் பகிர்ந்து கொள்ளலாம்.


5. iOS to Mac AirDrop: 

ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில், ஏர் ட்ராப் (AirDrop) என்னும் வயர்லெஸ் பைல் மாற்றும் வசதி தரப்பட்டது. அது ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையே மட்டுமே செயல்படுத்தும் வகையில் இயங்கியது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

ஆனால், ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையேதான் இயங்கியது. தற்போது, ஐ.ஓ.எஸ். 8, இந்த பைல் மாற்றும் வசதியை மேக் கம்ப்யூட்டர்களுக்கும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு இடையேயும் தந்துள்ளது.


ஆண்ட்ராய்ட் Vs ஐபோன் 6 - ஓர் ஒப்பீடு

இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். 

ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. 

அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.

வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது. 

எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது. 

என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது. 

இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும். 

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன. 2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன. 

ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது. 

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை. 

அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை. 


ஆப்பிள் வளர்ந்த வரலாறு

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம்.


1. ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007: 

ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய இணைப்பில் புதிய வழி என மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தினார். 

இன்றைய நிலையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு அன்று விதையிடப்பட்டது. இந்த போன் ஜூன் 29, 2-007ல் வெளியானது. பல மணி நேரம் காத்திருந்து மக்கள் இதனைப் பெற்றுச் சென்றனர். 

இது அறிமுகமாகி 74 நாட்கள் கழித்து, பத்து லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஆப்பிள் அறிவித்தது. 


2. ஆண்ட்ராய்ட் போட்டி: 

ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது.


3. பிரச்னை 2010: 

ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்ததை அடுத்து, ஊழியர் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டது.


4. மல்ட்டி டாஸ்க், ஜூன் 21, 2-010: 

ஐ.ஓ.எஸ்.4 சிஸ்டம், ஐபோனுக்கு ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்கள் இயக்கும் திறனை அளித்தது. 


5. டெவலப்பர் வருத்தமும் மகிழ்ச்சியும்: 

தன்னுடைய Objective-C கம்ப்யூட்டர் மொழியில் உருவாக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ஆப்பிள் அறிவித்தது. 

இதனால், பல புரோகிராம் டெவலப்பர்கள் அதிர்ச்சியுற்றனர். சில மாதங்கள் கழித்து, இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டதால், அதிகமான எண்ணிக்கையில் ஐபோனுக்கான அப்ளிகேஷன்கள் கிடைத்தன.


6. காப்புரிமை வழக்கு, ஏப்ரல் 15, 2011: 

சாம்சங் தன் தொழில்நுட்பத்தினைத் திருடிப் பயன்படுத்துவதாக ஆப்பிள் வழக்கு தொடுத்தது. பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 


7. ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்: 

2011, அக்டோபர் 5ல், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற டிம் குக், ஐபோன் போல, டிஜிட்டல் உலகில் முழுமையான மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய சாதனம் ஒன்றை வடிவமைக்கும் சவாலை எதிர்கொண்டார்.


8. அதிர்ஷ்டம் தந்த ஐ.ஓ.எஸ்.7: 

செப்டம்பர் 18, 2013ல், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் வெளியாகி, பல புதிய மாற்றங்களையும் வசதிகளையும் தந்தது. இதனைத் தொடர்ந்து ஐபோன் 5 எஸ், ஐபோன் 5சி வெளியாகின. விற்பனைக்கு வந்த 3 நாட்களில், 90 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆப்பிள் அறிவித்தது.


9. இன்றைய நிலை: 

ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் சாதனங்களே மிக அதிகமாக இயங்கி வருகின்றன. உலக அளவில் 84.7% ஆக உள்ளது. ஐ.ஓ.எஸ். 11.7% மற்றும் விண்டோஸ் போன் 2.5% ஆக உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்மார்ட் போன் விற்பனையில் அதிக லாபம் ஈட்டுவது ஆப்பிள் போன்களே.


10.இன்றைய சூழ்நிலையைச் சந்தித்து, விற்பனையில் முதல் இடம் பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தன் விற்பனைக் கொள்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதுள்ளது. 

அதிக மொபைல் போன் பயன்பாடு மேற்கொள்ளப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில், விலை குறைந்த ஆண்ட்ராய்ட மாடல்கள் பெருகி வருகின்றன. இவற்றுடன், என்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், போட்டியில் பங்கேற்க இயலவில்லை. 

புதிய ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டம், வீடுகளில் ஆப்பிள் சாதனங்கள் பயன்பாட்டை முன்னிறுத்தி பல வசதிகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஆப்பிள், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வோடபோன் புதிய வை பி இணைய சாதனம்

இணைய இணைப்பினைத் தரும் வகையில் பலவிதமான டேட்டா கார்ட்களை வோடபோன் நிறுவனம் வழங்கி வருகிறது. இவற்றின் கட்டணமும், இணைய இணைப்பில் டேட்டா பரிமாற்றமும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. 

இவற்றை டெஸ்க்டாப் மற்றும் லேட்டாப் கம்ப்யூட்டர்களில் இணைத்து, இணைய இணைப்பு பெறப் பயன்படுத்தலாம். 

அண்மையில் இந்த நிறுவனம், வயர் இணைப்பு எதுவும் இல்லாத நிலையில் இணைய இணைப்பு தரும் வோடபோன் R206Z என்னும் வை பி இணைய சாதனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

இதன்மூலம் நமக்கு 21.1 Mbps அளவில் டேட்டா பரிமாற்றம் கிடைக்கும். வை பி வழி செயல்படுவதால், ஒரே நேரத்தில் 10 பேர் தனித்தனியாக தங்கள் சாதனங்கள் வழியாக இணைய இணைப்பு பெறலாம். 

மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் நினைவகத்தினை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். WPS authentication தொழில் நுட்பம் வழியாக, இணைய உலா வருகையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 3 மணி 45 நிமிடம் தொடர்ந்து பயன்படுத்த மின் சக்தி கிடைக்கிறது. இதனுடன் ஒரு சார்ஜர் மற்றும் யு.எஸ்.பி. கேபிள் தரப்படுகிறது. 

இது போன்ற வை பி வழி இணைய இணைப்பு தரும் சாதனங்களின் தேவை தற்போது அதிகரித்து வருவதால், வோடபோன் நிறுவனம் மிகச் சிறந்த 3ஜி மொபைல் வை பி ஒன்றை வடிவமைத்து தற்போது வழங்கியுள்ளதாக இந்நிறுவன தலைமை வர்த்தக அதிகாரி மாத்தூர் தெரிவித்துள்ளார். 

இதன் அதிக பட்ச விலை ரூ. 2,399. டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் முதலில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


ஆண்ட்ராய்ட் - தவறுகள் தவிர்க்க

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். 

இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். 

இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.


1. பாதுகாப்பினை உருவாக்குக: 

ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. 

மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.


2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 

பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” 

இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 


3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 

சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. 

எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 


ஆண்ட்ராய்ட் போனை உங்கள் வசப்படுத்த

இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. 

இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. 

இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. 

சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. 

ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.


போனுடன் வந்த சாப்ட்வேர்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய சாப்ட்வேர் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. 

இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கம்ப்யூட்டர்களிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். 

மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். 

இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் "All" என்பதனைக் காணவும். 

இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும். 


பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். 

இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக் நிறுவனம், இதனைச் சரி செய்திடும் முயற்சியில் இறங்கி, புரோகிராமினைச் சரி செய்தது. இருந்தாலும், மறுபடியும் இந்த வைரஸ் அதே வழியில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் முதலில் ஓர் அறிவிப்பனை வெளியிடுகிறது. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின் நிறத்தை மாற்றலாம், என இந்த புரோகிராமிற்கான விளம்பர அறிவிப்பாக இது வெளியிடப்படுகிறது. 

இதன் பால் ஈர்க்கப்பட்டு, இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்த பின்னர், நாம் வைரஸ் அடங்கியுள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். அங்கு, எப்படி நிறம் மாறுதலை மேற்கொள்ளலாம் என்பது வீடியோ காட்சி மூலம் விளக்கப்படுவதாக ஒரு வீடியோவிற்கான லிங்க் கிடைக்கிறது. 

இதில் கிளிக் செய்தவுடன், பேஸ்புக் வாடிக்கையாளரின் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன. 

வீடியோ காட்சியைப் பார்க்க வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால், உடன் புரோகிராம் ஒன்றைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. உடன் நாம் அந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்தால், அதனை இயக்கும்போது, வைரஸ் கம்ப்யூட்டரிலிருந்து பரவுகிறது. 

இந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்து, ”அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று உள்ளவர்கள், உடனடியாக அந்த புரோகிராமினைக் கப்யூட்டரிலிருந்தே நீக்குவது நல்லது. உடன் பாஸ்வேர்டினை மாற்றுவதும் அறிவுறுத்தப்படுகிறது. 


ஸ்ட்ராங் பாஸ்வேட் எப்படி இருக்க வேண்டும்?

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். 

ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். 

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.


1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். 

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. 

எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம். 

3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர் களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes