மைக்ரோசாப்ட் லூமியா 532 டூயல்சிம் விலை ரூ. 6,499

மைக்ரோசாப்ட் நிறுவனம், அனைவரும் வாங்கும் விலையில், தன்னுடைய லூமியா 532 டூயல் சிம் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் ரூ. 6,499 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த போனில், WVGA டிஸ்பிளே கொண்ட 4 அங்குல திரை உள்ளது. இதில் குவாட் கோர் ஸ்நாப்ட்ரேகன் 200 எஸ்.ஓ.சி. ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. ப்ளாஷ் இல்லாத 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமராவும், வி.ஜி.ஏ. முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. 

இதனை அறிமுகப்படுத்திய விழாவில், மைக்ரோசாப்ட் மொபைல் தென்னிந்தியப் பிரிவின் இயக்குநர் ஸ்ரீதர் பேசுகையில், முதன் முதலில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், அதில் கிடைக்கும் அனைத்து வசதிகளிலும் எந்தவிதக் குறைபாடும் இன்றி தங்கள் போன் இருக்க வேண்டும். 

அதுவும் தாங்கள் வாங்கக் கூடிய விலையில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அந்த வாடிக்கையாளர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் இந்த போன் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

இந்த போனின் சிறப்பம்சங்கள்: 800 x 480 பிக்ஸெல்கள் கொண்ட 4 அங்குல எல்.சி.டி. திரை 1.2 குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம் நினைவகம், 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் வசதி, இரண்டு சிம் இயக்கம், 5 எம்.பி. கேமரா, வி.ஜி.ஏ.கேமரா, 11.6 மிமீ தடிமன், 136.3 கிரம் எடை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் உள்ளன. இதன் பேட்டரி 1,560 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 12 மணி நேரம் பேசும் திறன் அளிக்கிறது.

நல்ல பச்சை, இளஞ்சிகப்பு, வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது. 


கூகுள் டாக் (GTalk) இனி இயங்காது

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. 

ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

தான் வழங்கும் கூகுள் Hangouts மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளுமாறு, தன் வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 முதல் ”ஜி டாக்” வசதியை கூகுள் நிறுத்தி உள்ளது. 

(இனி, தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் (எ.கா. http://goo.gl/FSbCX5) இதனைத் தொடந்து மேற்கொள்ளலாம் என்றாலும், அவை கூகுள் அங்கீகாரம் பெற்றவை இல்லை என்பதால், ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்று கூகுள் எச்சரித்துள்ளது.

இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். உலகில் மிகப் பெரிய அளவில், மொபைல் சாதனங்களில் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தால், அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டத்தினைத் தர இயலவில்லை. 

முதலில் வாட்ஸ் அப் மெசேஜிங் திட்டத்தினை கூகுள் வாங்கிட முயற்சி செய்தது. 1000 கோடி டாலர் வரை தர முன் வந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், மிகச் சாதுர்யமாக, அதனை 1,900 கோடி டாலருக்குத் தட்டிச் சென்றது. 

எனவே, கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் ப்ளஸ் சார்ந்த தன்னுடைய “ஹேங் அவுட்ஸ்” புரோகிராமினை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

ஹேங் அவுட், மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கான வசதி கொண்டதாக இயங்குகிறது. இதில் பல கூடுதல் வசதிகள் இருந்தாலும், தினந்தோறும் கூகுள் தரும் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட, கூகுள் ஹேங் அவுட் தரும் வசதிகளைப் பயன்படுத்தத் தயாராய் இல்லை. 

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்ற ஜனவரி 2015ல், வாட்ஸ் அப் 70 கோடி வாடிக்கையாளர்களையும், வி சேட் (WeChat) 50 கோடி பேரையும் கொண்டுள்ளது. தற்போதுதான் இந்த பிரிவில் வந்திருக்கும் ஹைக் (Hike) 3.5 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. 

ஆனால், கூகுள் தரும் ஹேங் அவுட் வசதியை மிகக் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர். எத்தனை பேர் மாதந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை. 

கூகுள் போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மெசேஜிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, அதற்கு ஜி டாக் தேர்ந்தெடுத்தது. 

ஆனால், இப்போது திடீரென, அதனையும் விட்டுவிட்டு, ஹேங் அவுட் வசதியைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.


பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு வாரிசு

சமூக இணைய தளமாகிய பேஸ்புக், அண்மையில், 'Legacy Contact' என்னும் டூல் ஒன்றைப் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம், இத்தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்தால், அவருடைய அக்கவுண்ட்டினை, அவரின் பக்கத்தினை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

நாமே நமக்கான வாரிசை நியமிக்கலாம். இவர் நம் பக்கத்தில் தகவல்களைப் பதியலாம்; நண்பர்களின் வேண்டுகோள்களை நிர்வகிக்கலாம். நம் முகப்பு பக்கம், அதில் உள்ள போட்டோக்கள் மற்றும் நாம் தேக்கி வைத்துள்ள தகவல்களை, இறந்தவர் சார்பாக நிர்வகிக்கலாம். 

ஆனால், அவர்கள் நாம் லாக் இன் செய்வது போல நம் பக்கத்தில் செல்ல முடியாது. நம் தனிப்பட்ட தகவல்களைப் படிக்க இயலாது. டைம்லைன் மற்றும் முன்பு நாம் இட்ட லைக் மற்றும் கமெண்ட்களைப் படிக்க முடியாது.

பல வாடிக்கையாளர்கள், தாங்கள் இறந்த பின்னர், தங்களின் பக்கத்திற்கு என்ன கதி ஏற்படும் எனக் கவலைப் பட்டதால், இந்த ஏற்பாட்டினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது என பேஸ்புக் நிறுவன வலை மனைப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதனை http://newsroom.fb.com/news/2015/02/addingalegacycontact/ என்ற முகவரியில் உள்ள தளப் பக்கத்தில் காணலாம். 

பேஸ்புக் என்பது நண்பர்கள் மற்றும் நம் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, ஒருவருக்கொருவர் தகவல்களை, அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான இடம் ஆகும். 

ஆனால், பலருக்கு இதுவே நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவரின் நினைவைப் போற்றும் இடமாகவும் உள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர் ஒருவர் இறந்த பின்னர், அவரின் பக்கத்தினை அவரின் வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அனுபவத்தின் நினைவிடமாக மாற்றிப் போற்றலாம்.

இந்த வகையில் இந்த 'Legacy Contact' டூல் நமக்கு உதவுகிறது. ஒருவர் இறந்து விட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தவுடன், அவருடைய அக்கவுண்ட், அவரின் நினைவிடமாக மாற்றப்படும். 

அவரின் வாரிசாக அறியப்பட்டவர், அவருடைய காலப் பக்கத்தின் தலைப்பில் அவர் மரணம் குறித்த தகவலை அமைக்கலாம். இதுவரை அவருடன் தொடர்பில் இல்லாமல், தற்போது பேஸ்புக் தளத்தில் இணையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வேண்டுதல்களுக்குப் பதில் அளிக்கலாம். பக்கத்தில் உள்ள படத்தையும், கவர் போட்டோவினையும் அப்டேட் செய்திடலாம். 

இந்த வாரிசை நியமிப்பவர், தன் மரணத்திற்குப் பின்னால், தன் வாரிசாகச் செயல்பட இருப்பவர், தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள், போட்டோக்கள் ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்திட முன்பாகவே அனுமதி அளிக்கலாம். 

ஆனால், வாரிசாகச் செயல்படுபவர், இறந்தவர் போல அவர் பக்கத்தில் லாக் இன் செய்து, செயல்பட முடியாது. அவரின் தனிப் பட்ட தகவல்களைப் பெறவும் முடியாது. 

இந்த வாரிசு நியமனம் செய்திட, எப்படி 'Legacy Contact' டூலைப் பயன்படுத்துவது? உங்கள் பக்கம் சென்று செட்டிங்ஸ் (settings) திறக்கவும். தொடர்ந்து Security தேர்ந்தெடுக்கவும். 

பின்னர், அப்பக்கத்தின் கீழாக உள்ள Legacy Contact என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், நீங்கள் வாரிசாக நியமிப்பவருக்கு, மெசேஜ் ஒன்று அனுப்பலாம். விருப்பப்பட்டால், தேர்ந்தெடுத்த தகவல்களை, படங்களின் தொகுதியை தரவிறக்கம் செய்திட அனுமதி தரலாம்.

குறிப்பிட்டவர் இறந்த பின்னர், அத்தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரின் பக்கத்தில் அவரின் பெயருக்கு மேலாக, “அவர் நினைவாக” என்னும் பொருளில், “Remembering” என்ற சொல் சேர்க்கப்படும். 

இந்த வாரிசு அமைக்கும் டூல், முதலில் அமெரிக்க நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர், படிப்படியாக, மற்ற நாட்டவருக்கும் வழங்கப்படும்.


கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்

நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். 

தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. 

இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். 

ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்கக் கிடைக்கும். 

இவை தனிப்பட்ட நபரின் தேடல்கள் என்றால், இவை காட்டப்படக் கூடாதே. இவற்றை சர்ச் இஞ்சினிலிருந்து நீக்கப்படும் வழிகளை நாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் நிம்மதியாக இருப்போம். அவற்றை இங்கு காணலாம். 

முதலில், உங்கள் கூகுள் அக்கவுண்ட் வழியே உட்செல்லவும். பின்னர் கூகுள் ஹிஸ்டரி பக்கம் (https://history.google.com/history/) செல்லவும். நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்திருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். 

உங்கள் கூகுள் தேடல்களின் ”ஹிஸ்டரி” பக்கம் காட்டப்படும். இந்தப் பக்கத்தில் மேலாக உங்கள் தேடல் வகைகள் (trends) காட்டப்படும். இதற்குக் கீழாக, ஒரு செக் பாக்ஸ் மற்றும் “Remove items” பட்டன் ஒன்றும் தரப்படும். 

இதற்குக் கீழாக, உங்கள் தேடல்களின் வகைகள் பட்டியலிடப்படும். அனைத்து தேடல் குறிப்புகளையும் நீக்க வேண்டும் எனில், செக் பாக்ஸ் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் எத்தனை பதிவுக் குறிப்புகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள் என்று ஒரு செய்தி காட்டப்படும். 

இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பக்கத்தில், நீங்கள் மேற்கொண்ட அனைத்து தேடல் பதிவுகளும் காட்டப்படுவதில்லை. நீங்கள் நீக்கிய பின்னர், அங்கு உங்களின் இன்னும் சில தேடல் பதிவுகளைப் பார்க்கலாம். 

இவற்றையும் நீக்க வேண்டும் என எண்ணினால், மீண்டும் செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அப்போது காட்டப்படும் பதிவுகளுக்கு முன்னால் மேற்கொண்ட தேடல் பதிவுகளைக் கண்டு நீக்க வேண்டும் என எண்ணினால், “Older” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த பட்டன், அந்தப் பக்கத்தில் காட்டப்படும் பட்டியலுக்கு மேலாக, வலது பக்கத்தில் காணப்படும். இதே போல இன்னொரு பட்டன் பட்டியலுக்குக் கீழாகவும் காட்டப்படும்.

உங்கள் தேடல் குறிப்புகள் மிக அதிகமாக இருந்தால், இப்படி ஒவ்வொரு பக்கமாகக் கண்டறிந்து நீக்குவது சற்று கடினமாகத்தான் இருக்கும். பல பதிவுக் குறிப்புகளை ஒரே நேரத்தில் நீக்க வேண்டும் என எண்ணினால், “History” பக்கத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கியர் பட்டனைக் கிளிக் செய்திடவும். 

அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் “Remove Items” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் “Remove Items” என்ற டயலாக் பாக்ஸில், “Remove items from” என்ற பட்டியலில் ஏதேனும் ஓர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேடல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என எண்ணினால், “the beginning of time” என்பதனைத் தேர்ந்தெடுத்து “Remove” என்பதனைக் கிளிக் செய்திடவும். 

இனி உங்கள் தேடல்கள் குறித்த பதிவுகள் எதுவும் இருக்காது. இந்த வேலையை மேற்கொண்ட பின்னர், நம் தேடல்களை, கூகுள் பின் தொடர்ந்து கண்காணிப்பதனால் தானே இந்த பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏன், நம்மைப் பின் தொடர்வதிலிருந்து கூகுள் தேடல் சாதனத்தை நிறுத்தக் கூடாது என நாம் எண்ணலாம். 

அதற்கும் வழி உள்ளது. தேடுவதைப் பதிவு செய்வதை முதலில் தற்காலிகமாக நிறுத்தலாம். “History” திரைப் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானை கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Account history” பக்கம் கிடைக்கும். இதில் “Pause” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். நீங்கள் உறுதியாக உங்கள் தேடல்கள் பதிவு செய்யப்படக் கூடாது என முடிவு செய்கிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் தேடல்களை கூகுள் தெரிந்து பதிவு செய்வதில் உள்ள நன்மைகளைப் பட்டியலிடும். அவ்வாறு அறியப்படக் கூடாது என்றால், மொத்தமாகத் தடை செய்திடாமல், அப்படிப்பட்ட தேடல்களின் போது, மற்றவர் அறியாத வகை வழியான Incognito mode நிலையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அறிவுறுத்தும். 

இதற்குப் பின்னும் நீங்கள் தேடலைப் பதிவு செய்வதனை நிறுத்தச் செய்திட வேண்டும் என முடிவு எடுத்தால், இந்த டயலாக் பாக்ஸில், “Pause” என்பதில் கிளிக் செய்திடவும். உடன், நீங்கள் “Account history” பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். “Pause” பட்டன், “Turn on” என்ற பட்டனாக மாறிவிடும். மாறிய இந்த பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் உங்கள் தேடல்களைப் பதிவு செய்திட விருப்பமா என்று கேட்கப்படும். 

கூகுள் சர்ச் தேடல்களைப் பின் தொடர்வதனை நிறுத்துவதுடன், ஹிஸ்டரியை சேவ் செய்வதிலிருந்து, குக்கீஸ் மற்றும் நம் தனி நபர் தகவல்களைப் பதிவு செய்வதனை நிறுத்தலாம். ஆண்ட்ராய்ட் சாதனங்களில், ஹிஸ்டரி, கேஷ் மெமரி, குக்கீஸ் போன்றவற்றை நீக்கிடவும் வழிகள் உள்ளன. ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் சபாரி பிரவுசரில் உள்ள இவற்றை நீக்கவும் இதே போன்று வழிகள் உள்ளன. பேஸ்புக் சர்ச் ஹிஸ்டரியையும் நீக்கலாம்.


பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் சலுகைகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பல சலுகைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. பல பயனுள்ள இணைய தளங்களை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதியினை வழங்குகின்றன. 

Internet.org என்ற அப்ளிகேஷன் மூலம், 30க்கும் மேற்பட்ட இணைய தளங்களை இலவசமாக அணுகிப் பயன்படுத்தலாம். செய்திகள், தாய்மை நலம், பயணங்கள், சுற்றுலா, வேலை வாய்ப்புகள், விளையாட்டு செய்திகள், தொலை தொடர்பு மற்றும் அரசு தகவல்களை எந்தவித 2ஜி அல்லது 3ஜி கட்டணம் இன்றிப் பெறலாம்.

தற்போது இணைய இணைப்பினைப் பெறாமல் அல்லது பெற முடியாமல் இருக்கும் 500 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பினை வழங்குவதைத் தன் இலக்காகக் கொண்டுள்ளதாக முன்பு பேஸ்புக் அறிவித்திருந்தது. 

அத்திட்டத்தின் ஒரு முயற்சியாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Internet.org என்னும் தன் அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது. 

இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை இணைய வசதியினை இலவசமாகப் பெறலாம். தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலம், குஜராத், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இது அறிமுகமாகியுள்ளது. 35க்கும் மேற்பட்ட இணைய சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த தளங்கள், இணைய அலைக்கற்றையில் குறைந்த அளவே பயன்படுத்துகின்றன. மேலும் மொபைல் போன்களுக்கேற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அடிப்படை பயன்களை வழங்கக் கூடிய இணைய தளங்களுக்கு இதன் மூலம் இலவச இணைய இணைப்பு கிடைக்கும். மற்றபடி பொதுவான, கட்டற்ற இணைய இணைப்பு வழங்கப்பட மாட்டாது. 

விக்கிபீடியா, வேலை வாய்ப்பு குறித்து தகவல் தரும் தளங்கள், சீதோஷ்ண நிலை குறித்து தகவல் தரும் தளங்கள், விளையாட்டு, செய்திகள் மற்றும் தன் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய தளங்களில் கிடைக்கும் சேவை இந்த இலவச இணைய இணைப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் இவை படிப்படியாக அமல்படுத்தப்படும். மேலும் பல இணையதளங்கள் இந்த இலவசப் பட்டியலில் இணைக்கப்பட்டு கூடுதல் பயன்கள் மக்களுக்குக் கிடைக்கும். 

இன்னும் 90 நாட்களில் இந்தியா முழுவதும் இந்த இலவச சேவை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் Internet.org Android என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் இந்த சேவைகளை அனுபவிக்கலாம். 

இது www.internet.org என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆப்பரா மினி பிரவுசரின் தொடக்க திரையிலேயே இந்த தளம் கிடைக்கிறது. அல்லது வாடிக்கையாளர்கள், இந்த சேவையைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளைப் பெற 180030025353 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பேசலாம். 

எந்தவிதமான இணைய இணைப்பிற்கான டேட்டா திட்டமும் இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் இதனைப் பெறலாம். இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கின்றன.

இந்த திட்டம் ஒவ்வொருவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை உலகில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது. 

இதற்கு முன் இது போன்ற இலவச இணைய திட்டத்தினை கொலம்பியா, ஸாம்பியா, கென்யா மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த இலவச சேவையைத் தொடங்கி வைத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குர்தீப் சிங் பேசுகையில், இதன் மூலம் இணைய இணைப்பில் செயல்படும் இந்தியக் குடி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும், இவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதனால், கல்வி, தகவல் தொடர்பு, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் செயல்பாடுகள் மக்களிடையே அதிகரித்து, அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்திடும் என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் பேசுகையில், இந்த சேவை இணையத்தை இன்னும் பல லட்சம் இந்தியர்களிடையே கொண்டு செல்லும் என்றார். இணையம் வழி ஒவ்வொரு இந்தியரும் இணைவதற்கு நல்லதொரு கருவியாக இந்த சேவை இருக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என்றார்.


ஸ்மார்ட் போன் கேமராவில் தெளிவான போட்டோ எடுக்க

கேமராவில், லென்ஸை முன் பின் இழுத்து, போகஸ் செய்து, போட்டோக்களை எடுத்த காலம் ஒன்று இருந்தது. பின்னர், டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் அறிமுகமாகி, போட்டோ வல்லுநர்களின் பிரச்னையைப் பெரிதும் தீர்த்தன. 

இப்போது நாம் அனைவருமே எப்போதும் கேமராவுடன் தான் செல்கிறோம். ஆம், யாருடைய மொபைல் போனில், கேமரா வசதி இல்லாமல் உள்ளது? இருப்பினும், ஸ்மார்ட் போனில் கிடைக்கும் கேமராக்கள் தான், தரம் உயர்ந்ததாக, நல்ல படங்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகளைத் தருவதாக அமைந்துள்ளன. அதனை எப்படிப் பயன்படுத்தி, சிறந்த தரம் வாய்ந்த படங்களை எடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.


1. போகஸ் (Focus):: 

படங்கள் தெளிவாகத் தெரிய, கேமராவில் உருவம் குவியச் செய்வதனை இது கூறுகிறது. படம் ஒன்று எடுக்கப்படும் முன், திரையைப் பார்த்து, அது சரியாக போகஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

நீங்கள் படம் எடுக்கும் நபர் அல்லது பொருள் சரியான போகஸ் நிலையில் இல்லை என்றால், உங்கள் ஸ்மார்ட் போனை, முன் பின்னாக அட்ஜஸ்ட் செய்திடவும். அல்லது நீங்கள் முன், பின்னாகச் செல்ல வேண்டியதிருக்கும்.


2. இன்னொரு வழியும் போகஸ் செய்திட ஸ்மார்ட் போனில் உண்டு. பொருளில் எந்த இடத்தைப் போகஸ் செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, கேமராவின் திரையில், அந்த இடத்தில் தொடவும். 

ஸ்மார்ட் போனின் கேமரா, நீங்கள் தொட்ட இடத்தை மையமாகக் கொண்டு, போகஸ் செய்திடும். இத்தனையும் சரி செய்த பின்னர், ஸ்மார்ட் போனில், கிளிக் செய்திட வேண்டிய இடத்தைத் தொடவும்.


3. ஸூம் தவிர்க்கவும்: 

பல ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராவில், ஸூம் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் ஸூம் செய்வது நல்ல படத்தைத் தராது. இங்கு தான், ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும் மற்ற கேமராக்களுக்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் உணரலாம். 

மற்ற கேமராவில் ஸூம் செய்திடுகையில், கேமராவின் லென்ஸ் முன் பின்னாக நகர்ந்து நிற்கும். ஆனால், ஸ்மார்ட் போனில் லென்ஸ் நகராது. தற்போது வந்திருக்கும் சில ஸ்மார்ட் போன்களில், திரையை இரு விரல்களால் கிள்ளி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 

ஆனால், இதனைச் செய்யக் கூடாது. ஏனென்றால், லென்ஸ் நகரப் போவது இல்லை. இந்த கிள்ளும் வசதி, படத்தின் அளவைக் குறைக்க, அதிகரிக்க மேற்கொள்ளலாம். ஸூம் செய்திட அல்ல. 

படம் எடுத்த பின்னர், நாம் படத்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். எனவே, ஸ்மார்ட் போனில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.


4. ப்ளாஷ் வேண்டாம்: 

முன்பு பயன்படுத்தப்பட்ட, பொருட்கள் அல்லது ஆட்களைப் பார்த்து குறி வைத்து எடுக்கப்பட்ட கேமராக்களில், ப்ளாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பது சரியே. சுற்றுப் புறச் சூழல் வெளிச்சத்தைப் படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் ப்ளாஷ் கொண்டு என்ன செய்கிறோம் என நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால், ப்ளாஷ் பயன்படுத்துவது சரி அல்ல. ஒரு பொருள் சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருந்தால், அதனைத் தெளிவாகக் காட்டுவதற்கு ப்ளாஷ் உபயோகிக்கப்படுகிறது. 

ஆனால், அது சரியான வழி அல்ல. குற்றம் நடந்த இடத்தில், அங்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும், துல்லியமாகப் படம் எடுக்க திட்டமிட்டால், ப்ளாஷ் பயன்படுத்தலாம். 

சாதாரணமாக என்றால், இயற்கை வெளிச்சத்தினைப் பயன்படுத்துவதே நல்லது. கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, எடுக்கப்படும் பொருளுக்கு ஒளி தருவதைக் காட்டிலும், சுற்றிலும் உள்ள இயற்கை வெளிச்சத்திற்கு ஆட்களைக் கொண்டு செல்லவும். 

அல்லது, ஆள், பொருள் இருக்கும் இடத்திற்கு விளக்கு ஒளியைத் தரவும். எனவே, மிக அவசியம் என்றால் ஒழிய, கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்த வேண்டாம்.


5. பின்புறக் கேமராவைப் பயன்படுத்துக: 

ஸ்மார்ட் போன் அனைத்திலும், இப்போது முன்புறமாகவும், பின்புறமாகவும் என இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. இதில் பின்புறமாகத் தரப்படும் கேமராவே, அதிகக் கூடுதல் திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. 

எனவே, போட்டோ எடுக்க இதனையே பயன்படுத்த வேண்டும். முன்புறமாக உள்ள கேமராவினைப் பயன்படுத்தக் கூடாது. தானாக எடுக்கப்படும் செல்பி போட்டோ ஷூட் செய்திட வேறு வழியில்லை. 

முன்புறமாக உள்ள கேமராவினையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நம் நண்பர் யாரையாவது நம்மைப் போட்டோ எடுக்கச் சொல்லலாம்.


6. கேமரா அப்ளிகேஷன்கள்: 

அண்மையில் வெளியான கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், கேமரா அப்ளிகேஷன் தரப்படுகிறது. தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை போனில் உள்ள அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படுகின்றன.


இணைய வர்த்தகத்துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும், இணைய வர்த்தகத்துறையில், வரும் 6 மாதங்களில், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என இந்த தொழில் பிரிவில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய இணைய வர்த்தகத்தின் இன்றைய மதிப்பு ரூ. 73,759 கோடி (1,200 கோடி டாலர்). வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பல்வேறு இந்திய நிறுவனங்களைப் பல நிறுவனங்கள் தங்களுக்கு இணைய வர்த்தகத்தை நிர்வகித்திட ஆட்கள் தேவை எனக் கேட்டுள்ளனர். ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டில், இந்திய இணைய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ரூ.23,757 கோடியாக இருந்தது. 2013 ஆம் ஆண்டில் இது ரூ.77,447 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் இந்தப் பிரிவில் வளர்ச்சி 8முதல் 10 சதவீதமாக இருந்த போது, இந்தியாவில் 30% ஆக வளர்ச்சி பெற்றது. 

இந்த வர்த்தகப் பிரிவினைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவால், அதில் ஈடுபடும் உயர்நிலை அலுவலர்களை நிறுவனங்களில் தக்க வைப்பதுதான். என்ன ஊதியம் கொடுத்தாலும், இந்த பிரிவில் ஈடுபடுபவர்கள், பணம் தவிர மற்றவற்றை எதிர்பார்க்கின்றனர் என, பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தினர் கூறுகின்றனர். மற்ற வர்த்தகப் பிரிவுகளைப் போல் அல்லாமல், இதில் பணியாற்றுவதற்கு தனிப் பண்பும், திறமையும் தேவையாய் உள்ளது. 

தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இணைய வழி வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி, வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, இதில் ஈடுபடும் நிறுவனங்கள் எப்படியாவது தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் பிரிவின் வாடிக்கையாளர்கள், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும் முன், அதற்கெனத் தனியே ஏதேனும் அப்ளிகேஷன்கள் உள்ளனவா என்று ஆர்வத்துடன் தேடுகின்றனர். 

வாடகைக் கார் ஓட்டுநர்கள் கூட, தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கின்றனர். இதனால் தான், மும்பையில் இயங்கும் வாடகைக் கார் இணைய நிறுவனமான Bookmycab.com நிறுவனத்திற்கு, பங்கு முதலீடு அதிகமாகக் கிடைத்துள்ளது. 

இந்த அசுர வளர்ச்சிக்கு, இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் முனைப்பான டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஒரு காரணமாகும். திடீரென 25 கோடியாக உயர்ந்த இணைய வர்த்தக வாடிக்கையாளர் எண்ணிக்கை, இப்பிரிவின் வளர்ச்சியை அடையாளம் காட்டியுள்ளது. 

தொலை தொடர்பு கட்டமைப்பு, புதுமையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஆன்லைனில் எளிதாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவை, இணைய வர்த்தகத்தில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன. 

இணைய வர்த்தகப் பிரிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடைகள் பிரிவுகளில் தான், மிக அதிகமாக வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக அறியப்பட்டுள்ளது. 

2013 ஆம் ஆண்டில், திடீரென 80% வளர்ச்சியை மேற்கொண்ட இந்தப் பிரிவில் வரும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் மறந்த ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். 

இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலும், நாம் சில ஷார்ட்கட் கீ தொகுப்புகளை மட்டுமே நினைவில் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். சிலவற்றை, அவை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், மறந்து பயன்படுத்தாமல் இருந்து விடுகிறோம். 

இதற்குக் காரணம், அவை அடிக்கடி பயன்படுத்தப்படாதவையாக இருப்பவை; அல்லது, கீ போர்டில், குறிப்பிட்ட கீகள் சற்று தொலைவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலை. அந்த வகையில் விண்டோஸ் சிஸ்டத்தில், மறக்கப்பட்ட சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் காணலாம்.


1. கண்ட்ரோல் + ஒய் (Ctrl + Y): 

நம்மில் பலர், “Ctrl + Z” கீகளைப் பயன்படுத்தினால், அப்போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு நீக்கப்படும் என அறிந்திருக்கிறோம். இது பல வேளைகளில் நமக்கு உதவியாக இருக்கிறது. 

ஆனால், இதே போல “Ctrl + Y” என்ற கீ தொகுப்பும் உள்ளது என்று ஒரு சிலருக்கே தெரியும். அவர்களும் இதனைப் பயன்படுத்துவது இல்லை. இந்த கீ தொகுப்பு, நாம் மேலே சொன்னபடி, நீக்கப்பட்ட செயல்பாட்டினை, மீண்டும் கொண்டு வரும். 

இதனால், நாம் தவறுதலாக, முன்பாக மேற்கொண்ட செயலை நீக்கிவிட்டால், அதனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இந்த கீ தொகுப்பு பயன்படுகிறது. இது பல வேளைகளில், நம் வேலைக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும். எனவே, இதனை மறந்திடாமல், மனதில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்த வேண்டும்.


2. விண்டோஸ் + பிரேக்/ பாஸ் (Win + : 

உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் கட்டமைப்பு தகவல்கள் குறித்து அறிய, நாம் கண்ட்ரோல் பேனலில் இருந்து நேரடியாகப் பெறுகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது. 

“Win + X” என்ற கீகளை அழுத்தி, கிடைக்கும் பட்டியலில், “System” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். ஆனால், இதனை இன்னும் எளிமைப் படுத்த, உங்கள் கீ போர்டில், “Win + Pause/Break” அழுத்துங்கள். சிஸ்டம் குறித்த தகவல்கள், பாப் அப் விண்டோவாக எழுந்து வரும்.


3. ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் (Alt + Print Screen): 

நம் கீ போர்டில் உள்ள (Prt Scr) கீ, அடிக்கடி, ஸ்கிரீனில் தெரியும் தோற்றத்தினை அப்படியே படமாக மாற்றி எடுக்கப் பயன்படுகிறது. திரைக் காட்சி முழுமையும் இந்த செயல்பாட்டில் காட்டப்படும். 

இதற்குப் பதிலாக, செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ காட்சி மட்டும் தேவை என்றால், “Alt + Print Screen” கீகளை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் காட்சி, நாம் விரும்பும் செயல்பாட்டை மட்டும் காட்டும் விண்டோ காட்சியாக இருக்கும். இதனால், திரை முழுமையும் காப்பி செய்து, பின்னால், அதனை எடிட் செய்திடும் வேலை மிச்சமாகிறது.


4. விண்டோஸ் + இ (Win + E) 

விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படும் ஒரு புரோகிராம் உள்ளது என்றால், அது விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான். பொதுவாக, இதனை ஸ்டார்ட் மெனு இயக்கிப் பெறுகிறோம். 

அல்லது டாஸ்க் பாரில் உள்ள இதன் ஐகானில் கிளிக் செய்கிறோம். அல்லது, திரையில் காட்டப்படும் “My Computer” ஐகான் மீது கிளிக் செய்து பெறுகிறோம். ஆனால், மிக வேகமாக, விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பெற வேண்டும் என்றால், உங்கள் கீ போர்டில், “Win + E” அழுத்துங்கள். 

இதனைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே இல்லை. ஆனாலும், இது மிக மிகப் பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்பு என்பதில் சந்தேகமே இல்லை.


5. கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl + Shift + N): 

புதிய போல்டர் ஒன்றை உருவாக்க, நாம் அனைவரும் பின்பற்றும் வழி, டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, பின்னர் “New > Folder.” எனத் தேர்ந்தெடுப்பதுதான். 

இதைக் காட்டிலும் எளிய வழி, “Ctrl + Shift +N,” ஆகிய கீகளை அழுத்துவதாகும். இந்த கீகளை அழுத்தினால், உங்களின் புதிய போல்டர் உருவாக்கப்பட்டு, நீங்கள் அதற்கு ஒரு பெயர் கொடுப்பதற்காகக் காத்திருக்கும். 

கைகளை எடுத்து, மவுஸை இயக்கி, கிடைக்கும் மெனுவில், இதற்கான பிரிவுகளை இயக்கி, போல்டரைப் பெறுவதைக் காட்டிலும், இது எவ்வளவு எளிய, குறைந்த நேரம் எடுக்கும் வழி என தெரிந்து கொள்ளலாம்.


2014ல் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவை

சென்ற ஆண்டில், இணையத்திலிருந்து அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவை என இணையத்தைக் கண்காணிக்கும் மையங்கள் தெரிவித்துள்ளன.
  1. அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
  2. ஏ.வி.ஜி. இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
  3. சிகிளீனர்
  4. அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தொகுப்பு
  5. ஒய்.டி.டி. விடியோ டவுண்லோடர்
  6. இலவச யு ட்யூப் டவுண்லோடர்
  7. டவுண்லோட் இலவச அப்ளிகேஷன்
  8. ட்ரைவர் பூஸ்டர் 2
  9. மால்வேர் பைட்ஸ் ஆண்ட்டி மால்வேர்
  10. ஹாட்ஸ்பாட் ஷீல்ட்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes