விண்டோஸ் ஸ்டோரில் 1,42,000 புரோகிராம்கள்


சென்ற 2012 ஆம் ஆண்டில், விண்டோஸ் ஸ்டோரில், வாடிக்கையாளர்கள் டவுண்லோட் செய்து பயன் படுத்தத் தரப்பட்ட, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது. 

தற்போது அதன் எண்ணிக்கை, இந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது என்பது சிறப்புக்கும் வியப்புக்கும் உரிய தகவலாகும். 

சென்ற ஜூலை மாத மத்தியில், மைக்ரோசாப்ட் தன் ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியதாக அறிக்கை வெளியிட்டது. 

இன்றைக்கும் தினந்தோறும், இதன் தளத்தில் புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்லோட் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன.


மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் மேட் A 94


தன் கான்வாஸ் வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, கான்வாஸ் மேட் ஏ 94 (Canvas Mad A94) என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் சிறப்பு என்ன வெனில், இதில் உள்ள MAd அப்ளிகேஷன், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு, உங்களுக்குப் பரிசு அளிக்கிறது. பரிசுகள் புள்ளிகளாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பின்னாளில், இந்த புள்ளிகளைப் பணமாக நீங்கள் மாற்றி உஙக்ள் போஸ்ட் பெய்ட் அல்லது பிரீ பெய்ட் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் 4.5 அங்குல அகலத்தில் டிஸ்பிளே காட்டும் வண்ணத்திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். இதில் 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா இயங்குகிறது. முன்னால் உள்ள கேமராவும் அதே 5 எம்.பி. திறனுடன், ஆட்டோ போகஸ் கேமராகவாக உள்ளது. 


MAd அப்ளிகேஷன் எப்படி இயங்குகிறது?

இந்த போனில் இணைந்து கிடைக்கும் MAd அப்ளிகேஷன், நம்மை விளம்பரங்களைக் காண அனுமதிக்கிறது. ஒருவர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் புள்ளிகள் அவர் கணக்கில் சேரக்கப்படும். இதற்கு ஒரு முறை வாடிக்கையாளர், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்தின் பெயரோடு தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு மொபைல் எண்ணை டயல் செய்திட முயற்சிக்கையில், விளம்பரம் ஒன்றைப் பார்க்கிறீர்களா? என்ற கேள்வி காட்டப்படும். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, எண்ணை டயல் செய்திடலாம். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு அழைப்பிற்கும், உங்கள் கணக்கில் புள்ளிகள் சேர்க்கப்படும். இந்த புள்ளிகள் குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், இவற்றைப் பணமாக மாற்றி, உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தில் நீங்கள் கொண்டுள்ள அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.

இத்துடன் இன்னும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் பதிந்தே கிடைக்கின்றன. இலவச திரைப்படங்கள் பார்க்க Spuul, Kingsoft Office, Opera Mini மற்றும் பல புரோகிராம்கள் தரப்படுகின்றன. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இது குறித்து பேசுகையில், இந்த போனை அறிமுகப்படுத்துவதன் மூலம், மக்களின் பொழுது போக்குத்தேவைகளை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வழி கிடைத்துள்ளது என்றார். 

மேலும் புதுமையான இந்த வழிகள், தங்கள் நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப் புள்ளியைத் தரும் என்றார். விற்பனையிலும் இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று குறிப்பிட்டார். 

இந்த போனின் மற்ற சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் இயக்கம், 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபிக்கு அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்.என நெட்வொர்க் வசதிகள் ஆகியவை கிடைக்கின்றன. 

இதன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. 5 மணி நேரம் தொடர்ந்து பேச மின் திறன் அளிக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 8,490 ஆகும்.


எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது?


எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. 

இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. 

இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. 

இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. 

நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன. 

இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது. 

பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது. 

6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.

இவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது. 

Avira Internet Security 2014, 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அடுத்ததாக FSecure Internet Security 2014 (16.5), BullGuard Internet Security 14.0 (15.5), Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3 (15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15), McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன. 

Bitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.

AVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை. 

இது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.


அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்


நம் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும். 

நம் பெயர், குழந்தை மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார்கள். 

இந்த வழியில் இயங்கி, பெர்சனல் தகவல்களைத் திருடும் கூட்டம், இணையத்தில் நிறைய உள்ளது.

ஒரு சிலர் பாஸ்வேர்டாக "password” என்பதையே வைத்துக் கொள்வார்கள். இதுவும் தவறானதே. ஒரு சில எழுத்துக்களைக் கண்டறிந்தால், இதனை உறுதி செய்வது எளிதாகிவிடும். 

SplashData என்னும் நிறுவனம், உலக அளவில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் குறித்து ஆய்வு செய்கையில் "password” என்பதே இதுவரை முதலிடம் பெற்றதாக அறிந்தது. 

ஆனால், தற்போது ""123456'' என்ற பாஸ்வேர்ட் தான் மிக அதிகமாகப் பயன் படுத்தப்படும் பாஸ்வேர்ட்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் "password” உள்ளது. 

அடுத்த மூன்றாவது இடத்தில் எது உள்ளது தெரியுமா? "12345678,” என்பதுதான். இது 2012 ஆம் ஆண்டில் இருந்து இதே இடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில், "qwerty” மற்றும் "abc123” ஆகியவை உள்ளன. 

அடோப் சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்படுத்தும் பலர், 'adobe123' மற்றும் 'photoshop' ஆகியவற்றையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுவும் தெரிய வந்துள்ளது. 

இது போல பாஸ்வேர்ட்களைப் பயன் படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஆனால், பாஸ்வேர்ட்களை மனதில் இருத்திக் கொள்வது, நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளது என எண்ணுகிறீர்களா? 

அதுதான் இல்லை எளிதில் நினைவில் இருக்கும் வகையிலும் பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். கீழே சில எடுத்துக் காட்டுகள் தரப்பட்டுள்ளன. 

Skip_a_smile / bend1the2sky இதே போல நீங்களும் உருவாக்கிப் பயன்படுத்திப் பாருங்களேன்.


மைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட்டிப்பு


வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது. 

எக்ஸ்பிக்கு சப்போர்ட் நிறுத்திக் கொள்ளும் நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி இயங்கும் சிஸ்டங்கள் வழியாக, இதனை டவுண்லோட் செய்திட அனுமதி இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்தது. 

இந்த புரோகிராமிற்கு தொடர்ந்து அப்டேட் வழங்கி வரும் மைக்ரோசாப்ட், அவற்றையும் எக்ஸ்பி பயன்படுத்துவோருக்கு வழங்க முடியாது எனத் தெளிவாகக் கூறியது. 

அப்டேட் பைல்கள் இல்லாமல், செக்யூரிட்டி எசன்சியல் புரோகிராமினை இயக்குவது என்பது புத்திசாலித்தனமான நிலை அல்ல. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சப்போர்ட் இல்லாவிட்டாலும், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான அப்டேட் பைல்களை டவுண்லோட் செய்து, ஓரளவிற்குப் பாதுகாப்பினைப் பெறலாம் என எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தவர்கள் எண்ணியிருந்தனர். 

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மைக்ரோசாப்ட் அறிவிப்பு இருந்தது. இதனால் எக்ஸ்பி வாடிக்கையாளர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது மைக்ரோசாப்ட் தன் நிலையைச் சற்று தளர்த்தியுள்ளது. எக்ஸ்பியிலிருந்து மாறுபவர்களின் நிலையைப் பாதுகாப்பாக வைத்திட, வரும் 2015 ஜூலை 14 வரை, செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான ஆண்ட்டி மால்வேர் எதிர்ப்பு குறியீடுகளைத் தொடர்ந்து அப்டேட் செய்திடலாம் என்று அறிவித்துள்ளது. 

ஆனால், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமினை முழுமையாக, புதியதாக டவுண்லோட் செய்பவர்கள், ஏப்ரல் 8க்குப் பின்னர் பெற முடியாது. இதனைத் தெளிவாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்


புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! 

இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம். அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். 

வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் கொள்வது நல்லது. 

அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்ற நிலையில், நிச்சயமாய் கம்ப்யூட்டரில் இடம் பெற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.


1. பிரவுசர்: 

சாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்திட, இணையத்தை நாட வேண்டி வரலாம். அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு பிரவுசர். விண்டோஸ் தொகுப்புடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் உங்களுக்கு உதவலாம். இல்லை, நான் ஏற்கனவே பழகிய ஷூ தான் என் காலுக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை அமைத்து இயக்குங்கள்.


2. ஆண்ட்டி வைரஸ்: 

இணையத்துடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை இணைத்து பைல் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குத் தேவை மால்வேர்களையும் வைரஸ்களையும் கண்டறிந்து எச்சரித்து பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளாகும். 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்னும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், மாறா நிலையில் தானாகவே பதிந்து கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும். ஆனால், இது வைரஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. 

எனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

Avast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது. 

ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கக் கூடாது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைப் பதிந்து வைத்து, ஒன்றை நிறுத்தி இன்னொன்றை இயக்கி நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இவற்றைப் பெற avast.en.softonic.com/download?// free.avg.com/inen/download என்ற முகவரிகளில் உள்ள இணைய தளங்களை நாடவும்.


3. தேவையற்ற சாப்ட்வேர் நீக்கி (PC Decrapifier): 

நம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர். 

இவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது? இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம். 


4. வழி திறக்கும் Unlocker: 

புரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு ""உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம். 

அந்நிலையில் என்ன செய்வது? இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் Unlocker.. இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம். இதனைப் பெற pcdecrapifier.com/download என்ற இணைய தளம் செல்லவும்.


5. மீட்டெடுக்கும் ரெகுவா (Recuva): 

சில வேளைகளில் நமக்குத் தேவைப்படும் பைல்கள் அல்லது புரோகிராம்களை, அவசரப்பட்டு நீக்கிவிடுவோம். அதன் பின்னர், கைகளைப் பிசைந்து கொண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைப்போம். இந்தச் சூழ்நிலையில் நமக்கு உதவும் புரோகிராம் ரெகுவா. அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம். 

இதனை இயக்கினால், அழித்த புரோகிராம்களில் எவற்றை மீட்டெடுக்கலாம் எனப் பட்டியல் தந்து நம் விருப்பப்படி அவற்றை மீட்டுத் தரும். ஆனால், "file shredder” போன்ற டூல்களால், பைல்கள் அழிக்கப்பட்டிருந்தால், ரெகுவா மீட்டெடுக்காது. Piriform நிறுவனம் இதனை இலவசமாக வழங்குகிறது. இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் recuva.en.softonic.com


ஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது


இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. 

ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது. 

தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளது. 

ஆனால், தற்போதைய விலை கூட, ஆப்பிள் போனை மத்திய அளவில் விலையிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்கள் வரிசையில் கொண்டு வரவில்லை என, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர். 

ஆப்பிள், பெரும்பாலும் மத்திய அளவிலான விலையிடப்பட்ட போன் சந்தையில் தன் வாடிக்கையாளர்களை எப்போதும் கொண்டதில்லை. அது குறித்து எந்த விற்பனை தந்திரத்தினையும் மேற்கொண்டதில்லை. 

இப்போது விலை குறைப்பும் இந்த நிலையை மாற்றவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். இந்தப் பிரிவில், மைக்ரோமேக்ஸ், ஸோலோ மற்றும் லாவா போன்கள் தொடர்ந்து போட்டியிட்டு, கணிசமான இடத்தைப் பிடித்து வருகின்றன. 

ஆப்பிள் நிறுவனம், தன் புதிய ஐபோன் 5 வரிசை போன்களை விற்பனைக்கு அனுப்பிய பின்னர், ஐபோன் 4 தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்தியது. 

ஆனால், ஐபோன் 5 விலை மிக மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிள் போன் விற்பனை மந்தமாகவே தொடர்ந்து இருந்தது. ஐபோன் 4 எஸ் போனை விலை குறைத்து கொடுக்க ஆப்பிள் முன்வரவில்லை. 

ஏனென்றால், அதன் லாப விகிதம் கணிசமாகக் குறைந்துவிடும். எனவே, விற்பனைக்குச் செல்லாமல் தங்கிய ஐபோன் 4 அனைத்தையும், குறைவான விலையில், நம் நாட்டுச் சந்தையில் தள்ளுகிறது.


விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. 

இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும். 

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த டூல்ஸ் "backup” போன்ற சொற்களை சர்ச் பாக்ஸில் போட்டு தேடினாலும் கிடைக்காது. இவற்றைப் பெற, விண்டோஸ் கீயினை அழுத்தவும். பின்னர் தேடவும். Settings category தேர்ந்தெடுத்து, Save backup copies of your files with File History விண்டோவினைத் திறக்கவும். 

இந்த File History விண்டோவில், கீழ் இடது மூலையில், Windows 7 File Recovery என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பழைய விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் "Windows 7 File Recovery.” என்ற பெயரில் இருப்பதனைக் காணலாம். இதனை இயக்கினால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் செயல்பட்டது போலவே இதுவும் செயல்படுவதனைக் காணலாம். 

ஆனால், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் என இரண்டினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது, என விண்டோஸ் 8 சிஸ்டம் கூறுகிறது. எனவே, விண்டோஸ் 7 அடிப்படையில் பேக் அப் காலத்தினை செட் செய்திருந்தால், விண்டோஸ் 8 தரும் File History கிடைக்காது. 

இந்த விண்டோவினை உடனடியாகப் பெறுவதற்கு இன்னொரு வழியும் உள்ளது. recovery எனச் சொல்லிட்டு தேடினால், Windows 7 File Recovery கிடைக்கும்.


1.முழு சிஸ்டம் பேக் அப் ஆக: 

விண்டோஸ் 8 பேக் அப் டூல்ஸ் போல இல்லாமல், விண்டோஸ் 7 பைல் ரெகவரி டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் ஒன்றை பேக் அப் செய்திடலாம். 

சிஸ்டம் இமேஜ் என்பது, நம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் காப்பி ஆகும். இந்த இமேஜை மீட்டு செயல்படுத்தினால், அனைத்து பைல்களும் நமக்குக் கிடைக்கும். பைல்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள் மற்றும் செட்டிங்ஸ் அமைப்புகளும் மீளப் பெறலாம். 

சிஸ்டம் இமேஜ் பேக் அப் செய்திட, சைட் பாரில் உள்ள Create a system image option என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இமேஜை ஹார்ட் டிஸ்க்கில் பதியலாம்; அல்லது பல டிவிடிக்களில் பதியுமாறு கட்டளை கொடுக்கலாம். 

நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், பிற கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அல்லது இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் என எதிலும் பதியலாம். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் இமேஜ் என்பதால், இது சற்று பெரியதாகவே இருக்கும்.


2, பேக் அப் இமேஜ் ரெஸ்டோர் செய்திட: 

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் ஒரு இமேஜாகப் பேக் அப் செய்திட்ட பின், என்றாவது ஒரு நாள், அவற்றை விரித்துப் பைல்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும். இதற்கு PC settings ஸ்கிரீனைத் திறக்கவும். அடுத்து Windows Key+C அழுத்தவும். 

Settings கிளிக் செய்து, அதில், Change PC settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General category என்பதைனைத் தேர்ந்தெடுத்து, கீழாக Advanced startup என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இப்போது கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க, இந்த மெனுவில், Restart now என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். 

இப்போது Advanced options என்ற திரை காட்டப்படும். இதில் Troubleshoot > Advanced Options > System Image Recovery எனச் செல்லவும். இங்கு சிஸ்டம் இமேஜ் கிடைக்கும். இதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை ரெஸ்டோர் செய்திட இயலும். விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திட பல முறை முயற்சித்தும் இயலவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் தானாக அட்வான்ஸ்டு ஸ்டார்ட் அப் ஆப்ஷன்ஸ் என்னும் வழிமுறைக்குச் செல்லும். 

அல்லது பூட் செய்திடுகையில், ஷிப்ட் கீயினை அழுத்தியவாறு இருப்பதன் மூலம் பூட் செய்திடலாம். இல்லை எனில், விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் டிஸ்க் அல்லது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பூட் செய்து, பின்னர் பேக் அப் செய்த பைல்களைப் பெறலாம். 


3. பேக் அப் காலம் செட் செய்திட: 

நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் பைல் ஹிஸ்டரி வழி பேக் அப் விரும்பாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் அப் வழிகளை விரும்பினால், Windows 7 File Recovery விண்டோவில், Set up backup லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

இதில் விண்டோஸ் 7 சிஸ்டம் பாணியில், சிஸ்டம் ஷெட்யூல் செட் செய்திடலாம். விண்டோஸ் 8 பைல் ஹிஸ்டரி பேக் அப் டூலில் சில வரையறைகள் உள்ளன. இந்த வழியின் மூலம், சிஸ்டம் லைப்ரரீஸ் பிரிவில் உள்ள பைல்களை மட்டுமே பேக் அப் செய்திட முடியும். 

எனவே, இதனைத் தவிர்த்து வேறு போல்டரில் உள்ள பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் எனில், அவற்றை லைப்ரரீஸ் பிரிவில் சேர்க்க வேண்டும். ஆனால், விண்டோஸ் 7 டூல்ஸ், முழுக் கம்ப்யூட்டருக்குமான பைல்களை இமேஜ் பைலாகத் தருவதால், இதுவே எளிய வழியாகவும், அனைவரும் விரும்பும் சாதனமாகவும் உள்ளது.


வெளிவருகிறது சாம்சங் கேலக்ஸி S5


வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் Mobile World Congress (MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். Mobile World Congress அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். 

காலக்ஸி எஸ் 5 வடிவமைப்பில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம், போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, காலக்ஸி எஸ் 5 இரண்டு மாடல்களில் வரும். ஒன்று முழுவதுமாக மெட்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும். 

மெட்டல் அமைப்பில் உருவாகும் போன் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.

சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. 

அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே, 2 கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம் 4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன.


கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்


புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. 

இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.

புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும். 

வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. 

magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.

இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன. 

புரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.

தற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.

RRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும். 

NAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.


நூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்

நடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.


உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.

கூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும். 

இந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதனங்களின் விற்பனையைக் கணக்கிடுகையில், விண்டோஸ் இயங்கும் சாதனங்களின் கூடுதல் 10%, ஐ.ஓ.எஸ். 29%, ஆண்ட்ராய்ட் 25.6% என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் சிஸ்டம் மூலம் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில், மைக்ரோசாப்ட் இந்த ஆண்டில் தொடர்ந்து போராடும். 2012 ஆம் ஆண்டில் 34 கோடியே 63 லட்சம் சாதனங்களிலும், 2013ல், 32 கோடியே 80 லட்சம் சாதனங்களிலும் விண்டோஸ் இருந்தது. இந்த 2014ல், இது 35 கோடியே 99 லட்சமாக இருக்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சிஸ்டம் எதிர்பார்த்த இலக்குகளை சென்ற ஆண்டு எட்டவில்லை. மிகப் பிரமாதமாக மக்களால் விரும்பப்படும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலையில், போன் தயாரிப்பவர்களின் ஒத்துழையாமை மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பரவல், இதன் இலக்குகளைத் தகர்த்தது. 

ஆனால், 2013ன் இறுதி மாதங்களில், நோக்கியா தன் விண்டோஸ் போன்களின் விற்பனையில், மிகப் பிரமாதமான முன்னேற்றத்தினைக் காட்டியது. 

இந்த ஆண்டில் நோக்கியாவைக் கைப்பற்றி இயக்க இருக்கும் மைக்ரோசாப்ட், இந்த நிலையைத் தொடர்ந்து உயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினைப் பரவலாக்கும் என கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது.


20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்


சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும்.

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும். 

இன்னொரு கேமரா முன்புறமாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இது முந்தைய போனில் இருந்த 3,000 mAh திறன் கொண்டது இல்லை என்பது சற்று வியப்பினைத் தருகிறது. இந்த போன் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.


இந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்


அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது. 

மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது. 

இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது. 

இந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான். இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன.

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தியே அணுகுகின்றனர் என்பதாலேயே, பேஸ்புக்கிற்கு இந்த தொழில் நுட்பம் தேவையாய் உள்ளது. பயனுள்ள மொபைல் அப்ளிகேஷன்களை பேஸ்புக் தன் பயனாளர்களுக்குத் தரத் திட்டமிடுகிறது. 

அந்த வகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் பக்க பலமாக இருக்கும் என பேஸ்புக் நிறுவன பொறியியல் மேலாளர் சுப்பு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பிரிவுகளைத் தொடங்கி தங்களுக்கு வேண்டிய தொழில் நுட்பத்தினைத் தயாரித்து வரும் வேளையில், பேஸ்புக் இந்திய தகவல் தொழில் நுட்ப திறமையின் மதிப்புணர்ந்து, நிறுவனத்தையே வாங்கியுள்ளது, நம் திறமைக்குச் சான்றாகும்.

நூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் பேஸ்புக் இணைய தளப் பயனாளர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டில் ஐ லேப்ஸ் என்ற இந்த தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கி ஓராண்டு தான் ஆகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். 

இந்நிறுவனத் தின் அனைத்து பொறியியல் வல்லுநர்களும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்குச் செல்ல இருக்கின்றனர். அங்கு கிடைக்கும் உலகத் தரத்திலான தொழில் நுட்பக் கட்டமைப்பு, இன்னும் சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இந்தியாவில் நோக்கியா ஆஷா 500 போன்


மொபைல் போன் விற்பனை மையங்களில், இன்னும் விற்பனைக்கு வராத நோக்கியா ஆஷா 500 போன், இணைய தளங்களில் (Infibeam) விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் இணைய தள விற்பனை விலை ரூ.4,649. தற்போதைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த போன், விற்பனை பரவலாக்கப் படுகையில் மேலும் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

100.3 x 58.1 x 12.8 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனின் எடை 101 கிராம். இதன் 2.8 அங்குல வண்ணத்திரை, எல்.சி.டி. ட்ரான்ஸ்ப்ளெக்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. 

இந்த டிஸ்பிளேயில், அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் தரப்பட்டுள்ளது.

 இதில் இயங்குவது நோக்கியா ஆஷாசாப்ட்வேர் 1.1.1. இந்த போனில், சில பாதுகாப்பு வசதிகள் பதியப்பட்டே கிடைக்கின்றன. 

இதனை இணையத் தொடர்பிற்கு எளிதாகப் பயன்படுத்தி, பேஸ்புக், வாட்ஸ் அப், வி சேட் போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம். 

இரண்டு சிம் இயக்கமும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இதன் மற்ற சிறப்புகளாகும். இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 14 மணி நேரம் பேசுவதற்கான திறனை அளிக்கிறது.


விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்


விண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. 

பின்னர், வர்த்தக ரீதியான, முழுமையான விண்டோஸ் 8.1 பதிப்பினை வெளியிட்டது. வெளியிட்ட பின்னர், சோதனைப் பதிப்பினை வரும் ஜனவரி 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. 

ஜனவரி 15க்குப் பின்னர், இந்த சிஸ்டம் முழுமையான பயன்பாட்டில் இருக்க முடி யாது. இதில் சேவ் செய்யப்படாத டேட்டா வினைத் திரும்பப் பெற இயலாது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி வாங்கியவர்கள், விண்டோஸ் 8.1 சோதனைப் பதிப்பினைப் பயன்படுத்தினால், அவர்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம். 

விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா/எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள், இந்த 8.1 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக இதனைக் கைவிட்டுத் தங்கள் பழைய சிஸ்டத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைப் புதியதாகப் பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். 

ஏனென்றால், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களிலிருந்து, விண்டோஸ் 8.1க்கு நேரடியாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படவில்லை. அல்லது விண்டோஸ் 8க்கு முதலில் மாறிக் கொண்டு, பின்னர் விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொள்ளலாம். 

இதற்கான வழிமுறைகள் குறித்து அறிய விரும்புபவர்கள் http://windows. microsoft.com/enus/windows8/upgradefromwindowsvistaxptutorial என்ற முகவரியில் உள்ள இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம். 

ஆனால், விண்டோஸ் 8 உட்பட எந்த சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 8.1க்கு மாறினா லும், நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் பதிந்து கொள்ள வேண்டும். Net Applications என்னும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன் படுத்துபவர்கள், மொத்த பயனாளர்களில் 9.3 சதவீதம் மட்டுமே. 

இது குறித்து மேலதிகத் தகவல்களுக்கும், சந்தேகங்களுக்கான தீர்வுகளுக்கும்,http://windows.microsoft.com/enus/windows8/upgradetowindows8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லலாம்.


நோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399


உயர்ரக ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிடும் நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது. 

அண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.1,399 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. 

1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், நோக்கியா சிரீஸ் 30 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல அத்தியாவசிய வசதிகளைக் கொண்டுள்ளது. 

இதன் 800 mAh திறன் கொண்ட Nokia BL5CB பேட்டரி 9.9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 35 நாட்கள் மின்சக்தி தங்குகிறது. 

இந்த போனின் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 74.2 கிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரம் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. 

ஏற்கனவே, இதே வரிசையில் வெளியான நோக்கியா 105 மொபைல் போனைக் காட்டிலும் சற்று பெரிய திரையினை இது கொண்டிருப்பதால், பட்ஜெட் விலையில் போனை விரும்புபவர்கள் இதனை விரும்பலாம்.


2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்


சென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. 

இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனைhttp://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது. 

உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே, எக்ஸ்பியிலிருந்து மாறின. 

ஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன. 

2013 ஆம் ஆண்டின் இறுதியில் இரு பிரிவுகள் தெளிவாகத் தெரிந்தன. விஸ்டா மற்றும் எக்ஸ்பி இணைந்து 32 சதவீத இடத்தையும், விண்டோஸ் 7 மற்றும் 8 இணைந்து 58 சதவீத இடத்தையும் கொண்டிருந்தன. 

வரும் ஆண்டில், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சற்று சரியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, 2014ல், 30 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் இணைய தளத்திலிருந்து அப்டேட் செய்திடும் பழக்கத்திற்கு வளைத்துள்ளனர். 

எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்குப் பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்துள்ளனர். இந்த இரண்டு சிஸ்டங்களின் மொத்தத்தில், 8.1க்கு அப்டேட் செய்தவர்கள் எண்ணிக்கை 34.4 சதவீதமாக இருந்தது.

இதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 39 சதவீதம் பேர் தங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்துள்ளனர். உலக அளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தினை 7.5 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த அளவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் உள்ளது. 

ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) அமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆய்வும் இதே தகவலைத் தெரிவிக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு 57.8%, விண்டோஸ் 8 சிஸ்டம் 10.35%, எக்ஸ்பி 20%க்கும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரவுசர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆண்டின் இறுதியில் 2.5% உயர்ந்து, மொத்தத்தில் 58% பங்கினைக் கொண்டிருந்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம், முறையே இரண்டாவது (18.4%) மற்றும் மூன்றாவது (16.2%) இடத்தில் இருந்தன. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 மிகவும் குறைவான பயன்பாட்டிலேயே இருந்தன. மொத்தத்தில் இவை 6.6 சதவீதப்பங்கினைக் கொண்டிருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பிரவுசர் என்ற இடத்தைப் பெற்றிருந்தது. 

இதன் பங்கீடு 20.6%. ஆனால், ஆண்டு இறுதியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் பங்கு 21.5% ஆக உயர்ந்திருந்தது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதால், இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மாறா நிலை பிரவுசராகத் தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்கி வருகிறது.


மொபைல் சாதனங்களின் மறு பக்கம்


சென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. 

பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. 

நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன. 

சென்ற மாதம், டில்லியில், ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, பூமியை வலம் வரும் சாட்டலைட்களுடன் தொடர்பு கொண்டு, தான் செல்ல வேண்டிய திருமண மண்டபத்திற்குச் சரியான வழியில் ஒருவர் சென்றார் என்ற செய்தி வெளியானது. ஒரு டாக்சி ட்ரைவர் கூட, சாலையில் செல்பவர்களைக் கேட்டே, வழியை அறிவார். ஆனால், சரியாக இயக்கினால், ஒரு ஸ்மார்ட் போன் சிறப்பாக வழியைக் காட்டுகிறது.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், 2013 ஆம் ஆண்டில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன -- தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 8 கோடியே 20 லட்சம் பேரில், 6 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் 19 கோடியே 80 லட்சம் பேரில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.

டில்லியில், ஜெய்சல் கவுரவ் என்னும் 16 வயது பள்ளி மாணவி, தான் தொடர்ந்து தினந்தோறும், மற்ற தோழிகளுடன் உரையாடுவது, தகவல்களை, ஜோக்குகளை, படங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், யு ட்யூப் வீடியோ காட்சிகளைக் கண்டு களித்தல் மற்றும் பேஸ்புக் செய்திகளை அமைத்து அனுப்புதல் போன்ற வற்றை, மொபைல் போன் வழியாகவே மேற்கொள்வதாகப் பெருமையுடன் கூறி உள்ளார். 

இவை மட்டுமின்றி, தன் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் ஜெய்சல் தெரிவித்துள்ளார்.


ஜிமெயில் பேக் அப்


ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் கொள்ளளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? 

ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது. 

நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. 

எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். 

எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.

இதற்கான ஒரு பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe என்ற புரோகிராமினை http://www.gmailbackup. com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். 

இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில் மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும். 

அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். 

பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். 

மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes