புளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். 

நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. 

பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. 

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. 

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. 

இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. 

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. 

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.


அதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்

மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே. 

ஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. 

இருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும். 

அதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.


1. பாதுகாப்பான இயக்க தொடக்கம் (Secure Boot): 

பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும். 

இதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது. 

விண்டோஸ் 8 இதனை அனைத்து அம்சங்களிலும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/whatisuefiandhowdoesitkeepyoumoresecure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும். 


2. மால்வேரைக் கட்டுப்படுத்தும் முதல் இயக்கம் (Early Launch Anti Malware (ELAM)): 

இது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும். 

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும். 

சோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும். 

அவற்றை 'good', 'bad', 'bad but boot critical' மற்றும் 'unknown' என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். 'bad' என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.


ஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்

ஆதாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் ஜிமெயில் தளத்திற்கு புதிய வடிவம் தரப்படும் என கூகுள் நிறுவனத்திலிருந்து கசிந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் இன்பாக்ஸ் பக்கத்தின் இடதுபுறமாக, புதிய கீழ்விரி மெனு தரப்பட்டு, அதில் inbox, sent, mail, trash, drafts, spams என அனைத்தும் தரப்பட இருக்கின்றன. இதே திரையின் வலது பக்கத்தில், கீழாக அணுகி, மெனு ஒன்றைப் பெற்று மின் அஞ்சல் ஒன்றை வடிவமைக்கலாம். சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Social, Promotion and Primary ஆகியவற்றிற்கு மாறாக இது அமையலாம். 

ஹேங் அவுட் ஆப்ஷன் திரையின் மேலாக நீர்க்குமிழி வடிவத்தில் கிடைக்கும். 

புதிய வடிவமைப்பில், நாம் முன்னுரிமை தர விரும்பும் மின் அஞ்சல் கடிதங்களை எளிதாக அணுகும் வகையில், புதியதாக pin system ஒன்று தரப்பட உள்ளது. 

இதன் மூலம் pin செய்யப்பட்ட அஞ்சல்களை மேலாக இழுத்துச் சென்று விடலாம். இதன் மூலம் முக்கிய தகவல்கள் அடங்கிய மெயில்களை நம் முன் எப்போதும் வைத்து இயக்கலாம். இதனால், ஜிமெயில் தளம் வெகுநாட்களாகப் பயன்படுத்தும் 'Start' சிஸ்டம் நீக்கப்படலாம்.

ஜிமெயில் தளத்தின் கீழாக வலது பக்கத்தில் உள்ள சிகப்பு "+” ஐகான் பாப் அப் மெனு ஒன்றைத் தரும். இதன் மூலம் அஞ்சல் செய்திகளை அமைக்கலாம். புதிய reminders களையும் இதில் அமைக்கலாம்.

மேலே சொல்லப்பட்ட மாற்றங்களை, மிக ரகசியமாக ஒரு சிலருக்கு மட்டும் அனுப்பி, சோதனை செய்து பின்னூட்டக் கருத்துகளை, கூகுள் பெற்று வருகிறது. 

விரைவில் நடைபெற இருக்கும் கூகுள் கருத்தரங்கில் இது வெளியிடப்படலாம். அப்போது மேலே சொல்லப்பட்ட அனைத்து கூறுகளும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில மாற்றப்படலாம்; சில சேர்க்கப்படலாம்.


ரௌட்டர் (Router) என்பது என்ன?

ஒரு ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை. 

நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. 

அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.

பொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம். 

இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம். ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும்ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

ஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whati smyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும். 

இவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.

ரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது. 

ஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.


விண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். 

இவை தேவைப்படாதவர்கள், ""இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?'' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.

ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். 

இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது. விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும். விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். 

பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் "Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். "All Programs” என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் "Games” என்ற போல்டருக்குச் செல்லவும். 

அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Cut” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

தோற்றமும் வண்ணமும் மாற்ற: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மாற்றலாம் என்பதைக் காணலாம். 

குறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திடும் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.

விண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். 

இனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும். 

இதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும். இதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்றவற்றிற்கான வசதிகளைக் காணலாம். 

இவற்றை மாற்றிய பின்னர், advanced என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எழுத்து வகை, ஐகான் அளவு, ஐகான் வடிவம் ஆகியவற்றை மாற்றுவதற்கான லிங்க்ஸ் கிடைக்கும். அனைத்தையும் விருப்பம் போல் மாற்றிவிட்டு, save changes என்பதில் கிளிக் செய்து வெளியேறினால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அமல்படுத்தப் பட்டிருப்பதனைக் காணலாம்.


பிரவுசர் எக்ஸ்டன்ஷன் பிரச்னைகள்

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன. 

மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன. 

இருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. இவற்றை அறிந்து பாதுகாப்பாக இயங்குவது எப்படி என இங்கு பார்க்கலாம்.

பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் என்பது நம் இணைய பிரவுசரின் உள்ளாக இயங்கக் கூடிய சில குறியீடு வரிகள் அடங்கிய தொகுப்பாகும். இவை சில வேண்டத்தகாத செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. 

டிஸ்பிளே விளம்பரங்கள் காட்டுவது, நாம் காணும் இணைய தளங்கள் எவை எனப் பின் தொடர்வது மற்றும் நம் பாஸ்வேர்ட், தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன.

ஒரு பாதுகாப்பான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கூட தானாகவே அப்டேட் செய்து கொண்டு, மோசமான மால்வேர் புரோகிராமாக மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் இப்போது பெருகி வருகின்றன. 

குரோம் பிரவுசர், நாம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் டயலாக் பாக்ஸ்களில் இதனைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னை குரோம் பிரவுசருக்கு மட்டுமின்றி, அனைத்து பிரவுசர்களுக்கும் உள்ளது. குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் இந்த பிரச்னைகளை எதிர் கொள்கின்றன.

குரோம் வெப் ஸ்டோர் அல்லது மொஸில்லா ஆட் ஆன் ஆகிய தளங்களில் இருந்து, பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், உங்கள் பிரவுசரில் உள்ளாக இயங்கும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்கிறீர்கள். 

அப்போது குரோம் பிரவுசர், அது சிறிய ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், பல்வேறு நிலைகளில் உங்களிடம் அனுமதி கேட்கிறது. மேலும் சிறிய வேலையை மேற்கொள்ளும் ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், அது அனைத்து இணையதளப் பக்கங்களில் இருந்தும் உங்களுடைய தகவல்களை அணுகும் வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால், அந்த சிறிய புரோகிராம் கூட, உங்கள் பிரவுசரின் உள்ளீடாக இயங்குகிறது.

இதிலிருந்து நம்மால் தப்பிக்க இயலவில்லை. இணைய தளங்களை நாம் விரும்பும் வகையில் மாற்றிக் கொடுக்கும் போது, அவை தாங்கள் விரும்பும் விளம்பரங்களை நுழைக்கும் வகையிலும் செயல்படுகின்றன. ஆனால், பயர்பாக்ஸ் பிரவுசர் இந்த வகையான எச்சரிக்கையை வழங்குவதில்லை. அதற்கெனப் பதியப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், தன்னிச்சையாக, நம் தனித் தகவல்களைப் பெறும் வேலையில் ஈடுபடுகின்றன.

பல ஆட் ஆன் புரோகிராம்கள், இந்த பிரிவில் இயங்கி வரும் பெரிய நிறுவனங்களால் தயார் செய்து வழங்கப்படுகின்றன. இவை எல்லாம், தனி மனிதர் ஒருவர் தன் இச்சைக்கேற்ப உருவாக்கப்படும் புரோகிராம்களாகும். இவற்றில் சில, நீங்கள் இன்ஸ்டால் செய்கையில் நல்ல பாதுகாப்பான தன்மையுடனேயே இருக்கும். இவற்றை சில நிறுவனங்கள் பெற்று தங்கள் உரிமைப் பொருட்களாக வைத்துக் கொள்கின்றன. 

இந்த நிறுவனங்கள், தாங்கள் பணம் சம்பாதிக்க, நம்மைப் போன்றவர்களின் தனி நபர் தகவல்களை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வழியாகப் பெற்று, விற்பனை செய்கின்றன. இதற்கு தங்களின் விளம்பரங்கள் வழியாக, ஏற்கனவே பாதுகாப்பானது என்று அறியப்பட்ட புரோகிராம்களில் மாற்றங்கள் செய்கின்றன. 

அல்லது இவற்றை அப்டேட் செய்திட வேண்டும் என்ற தகவலை அனுப்பி நம்மை அப்டேட் செய்திட வைக்கின்றன. அல்லது இன்ஸ்டால் செய்திடுகையில், தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கச் சொல்லி நம்மைத் தூண்டி, அவர்கள் வலையில் சிக்க வைக்கின்றன. 

இது போன்ற கெடுதலை விளைவிக்கும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் குரோம் வெப் ஸ்டோரில் இன்னும் இருக்கின்றன என்று இந்த பிரிவினைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. வங்கிகளின் இணைய தளங்களை நாம் அணுகிச் செயல்படுகையில், இவை நம் கிரெடிட் கார்ட் எண், அக்கவுண்ட் பாஸ்வேர்ட் ஆகியவற்றை எளிதாகத் திருடி அனுப்புகின்றன.

பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வது என்பது, அப்ளிகேஷன் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதற்கு இணையாகும். எனவே, அவை நம்பகத் தன்மை கொண்டவையா என நாம் முதலில் ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டும். 

முதலில் உண்மையானவை என அறியப்பட்டாலும், பின்னாளில் இவை மற்ற நிறுவனங்களிடம் செல்கையில், மோசமானதாக மாறக் கூடியவை என்பதால், இதனை இன்ஸ்டால் செய்த பின்னரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம்மிடம் அனுமதி பெறாமல், அப்டேட் செய்திட அனுமதிக்கக் கூடாது. 


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120

சில நாட்களுக்கு முன்னால், மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் காணப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் ஏ 120 மொபைல் போன், தற்போது, ஸ்நாப்டீல் வர்த்தக இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 

5 அங்குல திரை HD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4. 2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இரண்டு சிம்களை இது இயக்குகிறது. 

பின்புறக் கேமரா, 8 எம்.பி. திறன் கொண்டதாக, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது. 

முன்புறமாக, இணையத் தொடர்பிற்கென 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 

எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி. 

இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.

வெள்ளை உட்பட பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது. 

பின்புறக் கவரினை பல வண்ணங்களில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதன் இணைய தள விலை ரூ. 10,299.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. 

இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது. 

பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன. 

இந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் பயனாளர்களின் அனுமதியின்றி அமைத்துவிடலாம். 

இந்த புரோகிராம்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், நாம் இணையத்தில் காணும் தளங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியன குறித்தும் தகவல்களைச் சேகரித்து, இந்த புரோகிராம்களை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே அடுத்தவருக்குக் கொண்டு செல்லும் வகையில் செயல்படும்.

முதன் முதலாக, இந்த பிழைக் குறியீடு இருப்பதனை FireEye என்ற இணைய பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்தது. வழக்கம் போல ப்ளாஷ் (Flash) அடிப்படையில் இயங்கும் புரோகிராம்கள் மூலமாக இது இயங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகள் 9,10 மற்றும் 11 ஆகியவற்றில் தான் இந்த பிழைக் குறியீடு உள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் தான் இவை இயங்குகின்றன என்றாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6லிருந்தே இந்த பிழைக் குறியீடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகங்களின் தகவல்களைத் திருடும் நோக்கில் ஹேக்கர்கள் இந்த பிழைக் குறியீட்டினை முதலில் பயன்படுத்தினர் என்றும், தற்போது இது பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அதன் ப்ளாஷ் ப்ளக் இன் அப்ளிகேஷன் புரோகிராமினைச் செயல் இழக்கச் செய்துவிட்டு பயன்படுத்துமாறு FireEye அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பாதுகாப்புடன் இயக்க Microsoft's Enhanced Mitigation Experience Toolkit security app என்ற ஒரு புரோகிராமினையும் தருகிறது. ஆனால், பாதுகாப்பான இணைய உலா மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், பிரவுசரை மாற்றிக் கொண்டு, இன் டர்நெட் எக்ஸ்புளோரரைத் தவிர்ப்பதே நல்லது என அனைத்து இணைய பாதுகாப்பு வழங்குவதில் பணியாற்றும் வல்லுநர்களும் அறிவித்துள்ளனர். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எத்தனை பேர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில், இதனைக் கண்காணிக்கும் அமைப்புகள் வழங்கும் புள்ளி விபரங்களில், வேறுபாடுகள் உள்ளன. NetMarketShare என்னும் அமைப்பு, டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில், 55 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. 

ஆனால், StatCounter இதனை 22.58% என அறிவித்துள்ளது. இந்த புள்ளி விபரங்களில் பலத்த வேறுபாடு இருந்தாலும், பயனாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையான தகவலாகும்.


இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?

முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. 

பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. 

கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம். 

பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம். 

கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின. 

இன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது. 

மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது. 

2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.

நோக்கியா உச்சத்திலிருந்த போது, வேறு எந்த நிறுவனமும் அதனைத் தொட முடியவில்லை. அதுவே, ஓர் அரக்கத்தனத்தை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது. முதலில் அதனை அசைத்துப் பார்த்தது மோட்டாரோலா ரேசர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களே. 

தன்னுடைய பங்கு இல்லாமலே, தான் ஆண்டு வந்த மொபைல் சாம்ராஜ்யம் முன்னேறுவதனைப் பார்த்த போது, நோக்கியா தன் தவறை உணர்ந்தது. தனக்கே உரிமையான மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை தத்தெடுத்தது. 

மூன்று ஆண்டுகள், தன் லூமியா போன்களை சந்தையில் கொண்டு வந்து ஓரளவு இடம் பிடித்தது. ஆனாலும், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தஞ்சம் கொண்டது. இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் பிரிவின் ஒரு அம்சமாக நோக்கியா இயங்க உள்ளது.

1992 ஆம் ஆண்டில், ஜோர்மா ஒலைலா, நோக்கியா சிதிலமடைந்து திண்டாடிய போது தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அதன் மொபைல் போன் பிரிவினை மற்றவருக்கு விற்று விடலாம் என்ற முடிவை, வன்மையாக எதிர்த்தார். அதனை விட்டுவிட வேண்டாம் என்று அறிவித்து, தொலை தொடர்பு கட்டமைப்பு தொழில் பிரிவுடன், மொபைல் போன் பிரிவையும் வளமாக்க முயற்சிகள் எடுத்தார். 

அதன் பின்னர், இன்று உலக நாடுகள் அனைத்திலும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தினை முன்னெடுத்துச் செல்வதில், நோக்கியா பெரும் பங்கு வகித்தது. கூடவே, மொபைல் போன் வடிவமைப்பிலும், தயாரிப்பிலும் பெரும் மாற்றங்களை மேற்கொண்டது. 

இனி, மைக்ரோசாப்ட் நிறுவனம், லூமியா போன்களில், தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் கூடுதல் வசதிகளைத் தந்து, நோக்கியா போன்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.

இருந்தாலும், அந்தக் காலத்தில் எளிமையான வசதிகளுடன், அனைவரும் வாங்கும் விலையில் வந்த நோக்கியா மொபைல் போன்கள், என்றும் மக்கள் மனதில், நோக்கியா நிறுவனத்தை நிலை நிறுத்தும். 

அனைவரையும் இணைத்த நோக்கியாவிற்கு இனிய வணக்கமும் நன்றியும் கூறுவதைத் தவிர இனி என்ன இருக்கிறது.


மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் கான்வாஸ் வரிசையில் டூடில் 3 மாடல் மொபைல் போனை அண்மையில், ரூ. 8,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

6 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 

இத்துடன் கிங்சாப்ட் ஆபீஸ், ஆப்பரா மினி ப்ரவுசர், பல பிரபலமான கேம்ஸ் ஆகியவை பதிந்து கிடைக்கின்றன. 

மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். 

இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது. இந்த போன் வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் வெளியாகியுள்ளது.


பேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்

பேஸ்புக்கில், ஒருவருடன் நட்பு கொண்டால் மட்டுமே, அவரின் கருத்துக்களுக்கு நீங்கள் கமெண்ட் என்னும் பதில் குறிப்பினைப் பதிய முடியும். 

உங்கள் இருவருக்கிடையே பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஒருவர் அனுப்பும் நட்பு வேண்டும் விண்ணப்பத்தினை இன்னொருவர் ஏற்று சம்மதித்தால் மட்டுமே இது முடியும். 

ஆனால், ஒருவர் இது போன்ற நட்பு கொள்ள விரும்பும் வேண்டுகோளை அனுப்பாமலேயே, நண்பருக்கு வேண்டுகோள் செல்வதும், அவர் ஏற்றுக் கொள்வதும் எப்படி நிகழ முடியும்?

பேஸ்புக் தளத்தின் உதவிப் பக்கத்தில், (https://www.facebook.com/help/215747858448846) இதற்கான விளக்கத்தினைத் தேடினால், இது போல ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. 

இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் நமக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், இது போல யாருமே அனுப்பாமல், நட்பு நாடும் விண்ணப்பங்கள் அனுப்பப்படுவது, பெறப்படுவது, பேஸ்புக் தளத்தில் அவ்வப்போது நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று பலர் கருதுகின்றனர்.

உலகில் மிக அதிகான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், நாள் தோறும் 75 கோடி பேர் நுழைந்து பயன்படுத்துகின்றனர். இவ்வளவு பேரைக் கொள்ளும் இணைய தளத்தில், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கையே. 

நீங்கள் அனுப்பாத நட்பு வேண்டுகோளை, ஒருவர் பெற்றிருந்தால், நீங்கள் https://www.facebook.com/help/www/186570224871049 என்ற முகவரியில் உங்கள் குற்றச் சாட்டினைப் பதியலாம். மேற்கொண்டு இது போல நடக்காத அளவிற்கு நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். 

அடுத்ததாக, நீங்கள் நட்பு பாராட்ட விரும்பாதவர் எனக் கருதும் ஒருவரின் நட்பை நீக்கலாம் ("Unfriend”). அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டாம் என எண்ணினால், அவருடைய தகவல் எதுவும் உங்களுக்கு வராதபடியும் செட் செய்திடலாம். 

அப்போது நண்பர்களாக நீங்கள் தொடரலாம். "Friends” என்னும் ஐகானில் கிளிக் செய்து, "Get Notifications” என்ற ஆப்ஷனை நீக்கலாம். 

இதன் பின்னரும், உங்கள் தகவல்களின் மேல் அவர்கள் கமெண்ட் அனுப்பும் பட்சத்தில், அவர்களைத் தடை (block) செய்து வைக்கலாம். 

இவ்வாறு தடை செய்துவிட்டால், எந்த தகவல் பரிமாற்றமும் உங்கள் இருவருக்கிடையே நடைபெறாது. இதற்கு "Report/Block” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அது கேட்கும் தகவல்களைத் தரவும். 

இதன் பின்னரும், உங்களுக்கு நட்பு விண்ணப்பம், உங்களுக்குத் தெரியாமலேயே செல்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பாஸ்வேர் டினை மாற்றி அமைக்கவும். 

உங்கள் கம்ப்யூட்டரில் எதுவும் spyware உள்ளதா என முழுமையாக ஸ்கேன் செய்திடவும். உங்கள் அக்கவுண்ட்டினை வேறு ஒருவர், உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இந்த தில்லுமுல்லுகளை மேற்கொண்டிருக்கலாம்.


லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.

லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

நீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் ப்ராசசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள். 

அதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம். 

இது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்கலாம்.

முதலில், லேப்டாப் கம்ப்யூட்டரை மின்சார இணைப்பிலிருந்து நீக்கவும். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, power options என டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் விண்டோவில், current plan அடுத்து, 'Change plan settings' என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து 'Change advanced power settings' என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், 'Processor power management என்பது வரை கீழாகச் செல்லவும். இந்த ஆப்ஷனை விரித்து, Maximum processor state' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும். 

இங்கு எப்போதும் 100% என்ற நிலையில் இருக்கும். இதனைக் குறைத்து அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

நீங்கள் அமைத்தது சரியாக வரவில்லை என்றால், அதன் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் முழுமையாக இல்லை எனில், பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவிற்கு மீண்டும் சென்று, மாறா நிலைக்கு மாற்றும்படி தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


சோனி எக்ஸ்பீரியா எம்2

சோனி மொபைல் நிறுவனம், சென்ற ஆண்டு இறுதியாகத் தான் வெளியிட்ட எக்ஸ்பீரியா எம் மொபைல் போனின் தொடர்ச்சியாக, அண்மையில் எக்ஸ்பீரியா எம்2 என்ற மொபைல் போனை வெளியிட்டுள்ளது. 

இது கடந்த பன்னாட்டளவிலான மொபைல் போன் கருத்தரங்கில் காட்டப்பட்டது. 4.8 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் அமைந்த, வீடியோ பதிவு இயக்கம் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம் இயக்கம், அண்மைக் கள தொடர்பு (NFC), 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, ஒரு ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. 

இதன் தடிமன் 8.64 மிமீ, எடை 148 கிராம். இந்த போனில் தரப்பட்டுள்ள பேட்டரி 2300 mAh திறன் கொண்டது. 

கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.21,990.


டெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்

Delta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது. 

நம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம். 

இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது. 

சிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. 

கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

ஏதேனும் புரோகிராம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், இதுவும் ஒட்டிக் கொண்டு வருகிறது. பின்னர், தன் செயல்பாடுகளை வலிந்து மேற்கொள்கிறது. இதற்குப் பல முகங்கள் உண்டு. முதலாவதாக Delta Search virus. 

இது டெல்டா சர்ச் டூலின் இன்னொரு முகம். இது உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா என நீங்கள் சோதனையிட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். இதனு டன் பல மால்வேர், ப்ரீவேர் மற்றும் ஷேர்வேர் எனப் பல புரோகிராம்கள் இணைந்து வருகின்றன. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவதாக, Deltasearch.com redirect என்பதாகும். இது டெல்டா சர்ச் வைரஸினால் ஏற்படுத்தப்படுவது. நம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கத்தில் அனைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, அடிக்கடி டெல்டா சர்ச் காம் என்ற தளத்தினைத் திறந்து காட்டும்.

அடுத்ததாக yhs.deltasearch.com. இது டெல்டா சர்ச் இஞ்சினின் காப்பி புரோகிராம். இதனைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், பல பிரபலமான இணையதளங்கள் போல அமைந்த போலியான தளங்களுக்கான முகவரிகளை தேடல் முடிவுகளாகத் தந்து நம் கம்ப்யூட்டரில் சிக்கல்களை இது ஏற்படுத்தும்.

இன்னொரு முகமாக நமக்குக் கிடைப்பது mixidj.deltasearch.com. டெல்டா சர்ச் வைரஸ் இணைந்து மிக அதிகமாகப் பரவுவது இதுதான். இந்த தேடல் சாதனமும், நம்மை போலியான இணைய தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் செயல்படுகிறது. இன்னொரு வகையான வைரஸ் தரும் தேடல் தளம் visualbee.deltasearch.com. குறிப்பிட்ட தளங்களுக்கு நம்மை வழி நடத்தி, அதில் அதிகம் பேர் வந்ததாகக் காட்டும் வேலையை இந்த தேடல் தளம் செய்கிறது. மற்றும் பல மோசமான விளைவு

களைத் தரும் தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த தேடல் தளம் உங்கள் பிரவுசரில் இயங்குவதாக இருந்தால், உடனடியாக அதனை நீக்க வேண்டும். இல்லையேல் பல பாதகவிளைவுகள் ஏற்படும்.

எந்த இலவச புரோகிராம் அல்லது ஷேர்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இறக்கம் செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். இந்த டெல்டா சர்ச் மற்றும் சார்ந்த அனைத்து வகைகளும், இத்தகைய புரோகிராம்களுடன் தான் ஒட்டிக் கொண்டு வருகின்றன. டெல்டா சர்ச் சார்ந்த எந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவது தெரிந்தாலும், உடனே அதனை நீக்க வேண்டும்.

டெல்டா சர்ச் இஞ்சினை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் செயல்படத் தொடங்கும். அதனை அனுமதிக்கக் கூடாது. உடனே அந்த டேப்பினை மூடிவிட வேண்டும். பின்னர், Add/Remove Programs பட்டியலில் இருந்து இதனை நீக்க வேண்டும். 

இதற்கு ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Settings > Control Panel > Add/Remove Programs எனச் செல்லவும். அங்கு டெல்டா சர்ச் இருந்தால் நீக்கவும். அத்துடன் Delta Chrome Toolbar, Delta toolbar, Yontoo, Browser Protect மற்றும் Mixi.DJ ஆகியவையும் தென்பட்டால் அனைத்தையும் நீக்கவும். அத்துடன் உங்கள் பிரவுசரில் இருக்கும் டெல்டா சர்ச் டூலையும் நீக்கவும். அதற்கான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. இன் டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறந்து 'Tools' > “Manage Addons' >'Toolbars and Extensions' எனச் செல்லவும். இங்கு Delta Search மற்றும் சார்ந்த அனைத்தையும் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து Tools கிளிக் செய்து Manage addons' > 'Search Providers' எனச் செல்லவும். இங்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதுகாப்பான சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

2. மொஸில்லா பயர்பாக்ஸ்: பிரவுசரைத் திறக்கவும். Tools' > 'Addons' >'Extensions' எனச் சென்று டெல்டா சர்ச் இருப்பதைக் கண்டறியவும். மற்றும் இது சார்ந்த மற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து 'Tools' > 'Options' எனச் சென்று, தொடக்க ஹோம் பேஜ் என்பதில் கூகுள் டாட் காம் அல்லது யாஹூ டாட் காம் அல்லது உங்களுக்குத் தேவையான தேடல் தளத்தினை அமைக்கவும்.

3. குரோம் பிரவுசர்: பிரவுசரினைத் திறந்து குரோம் மெனு பட்டனைக் கிளிக் செய்திடவும். Tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Delta Search எக்ஸ்டன்ஷன் கண்டறிந்து, பின் Recycle Binல் கிளிக் செய்து அதனை நீக்கவும். 
தொடர்ந்து ரென்ச் ஐகான், அல்லது மூன்று கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். 

கிடைக்கும் பட்டியலில் Settings என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் பக்கத்தில் 'Manage search engines' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குத் தேவையான, பாதுகாப்பான சர்ச் இஞ்சினை, உங்கள் மாறா நிலை சர்ச் இஞ்சினாக அமைக்கவும். 

இதனைத் தொடர்ந்து, "On start” என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு புதிய டேப் ஒன்றினைக் கிளிக் செய்கையில், எந்த தளமும் இல்லாமல் காலியான பக்கம் (blank page) கிடைக்கும்படி அமைக்கவும். 

நீங்களாக இன்ஸ்டால் செய்யாத புரோகிராம் ஏதேனும் உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாகவோ, இயக்கப்படுவதாகவோ தெரிந்தால், உடனே, முழு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினையும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால் அழிக்கவும். 

இதற்குக் கீழ்க்காணும் புரோகிராம்களும் உங்களுக்குத் துணை புரியும். அவை SpyHunter, STOPzilla மற்றும் Malwarebytes Anti Malware.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes