ஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு கட்டத்தில் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மாலையில் வர்த்தகம் முடியும்போது 160 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 16,852-ஐத் தொட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. அமெரிக்காவில் அபாட் லேபரட்டரீஸ் நிறுவனம் சோல்வே குழும நிறுவனத்தை வாங்கியதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. இதேபோல ஜெராக்ஸ் குழுமத்தின் கம்ப்யூட்டர் நிறுவனம் வெளிப்பணி ஒப்படைப்புக்கான 640 கோடி டாலர் ஒப்பந்தத்தைப் பெற்றதால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது.

தேசிய பங்குச் சந்தையில் 47 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 5,006 ஆக உயர்ந்தது.

அமெரிக்காவில் இரு பெரிய நிறுவனங்கள் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது அன்னிய முதலீட்டு நிறுவனங்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாய் அமைந்தது.

இது தவிர, உள்நாட்டில் 6 முக்கிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்ததோடு உற்பத்தி வரி வருவாயும் அதிகரித்ததும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் ஊக்குவிப்பதாய் இருந்தது என்று பங்கு தரகர்கள் தெரிவித்தனர்.

சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி, உருக்கு, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் 7 சதவீத வளர்ச்சியை எட்டியதாக அறிவித்ததும் பொருளாதார மீட்சியை உணர்த்துவதாய் இருந்தது.

இதை உணர்த்தும் வகையில் உற்பத்தி வரி வருவாய் 22.7 சதவீதம் உயர்ந்ததும் இந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகள் உயர்ந்ததும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு விலை 2 சதவீதம் உயர்ந்து ரூ. 2,287.80-க்கும், டிசிஎஸ் பங்குகள் 4 சதவீதம் உயர்ந்து ரூ. 610.40-க்கும் விற்பனையாயின.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை 1.7 சதவீதம் அதிகரித்து ரூ. 2,166-க்கு விற்பனையானது.

ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை 3.1 சதவீதம் அதிகரித்து ரூ. 864.80-க்கு விற்பனையானது.

மொத்தம் 1,703 நிறுவனப் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. 1,109 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 46.85 கோடி பங்கு வர்த்தகம் நடைபெற்றது


உன்னால் முடியும் உலக நாயகா!

வெறுப்பேற்றும் "பஞ்ச்' டயலாக்குகள், அழகு காட்டும் கதாநாயகியர், திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், தேச பக்தியை வியாபாரமாக்கும் வித்தை போன்ற எவையும் இல்லாமல் -படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்புடனும் "அட... அதற்குள் படம் முடிந்துவிட்டதே' என எண்ணத் தூண்டும் வகையிலும் செல்லுலாய்டில் சிறப்புற செதுக்கப்பட்ட "உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு கமல்ஹாசன் 5 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார்.

"உன்னால் மட்டுமே முடியும் உலக நாயகா!


ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்யும் கெüரவம் மிக்க நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

திரைப்படத்துறையில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். 1929-ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த திரைக்கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் 2009-ம் ஆண்டுக்கான நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஆஸ்கர் விருது கமிட்டியிடமிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 82-ம் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 139 பேருக்கு இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு சேர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 6,000 திரைத்துறை சாதனையாளர்கள் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கத் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இயக்குநர் மீரா நாயர், ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித், க்வென்டின் டரான்டினோ, ஜேக் நிக்கல்ஸன், ஹக் ஜேக்ஸன், பீட்டர் கேப்ரியல் ஆகியோரும் அடங்குவர்.

ஆஸ்கர் விருதுக்கு ஒரு முறையாவது பரிந்துரை செய்யப்பட்டவர்களே இந்தத் தேர்வுக்குழுவில் இடம்பெற மூடியும். இசைத்துறையில் தன்னுடைய பங்களிப்பால் சிறந்த சாதனை படைத்ததற்காகவும் 2008-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதாலும் ஏ.ஆர்.ரஹ்மான், இருவேறு கருத்துக்கு இடமில்லாமல் இந்த நடுவர் குழுவில் பொறுப்பேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. 43 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது "கப்ஃபுள்ஸ் ரெட்ரீட்', "எ நைட் ஆஃப் பேúஸஜ்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். ஆஸ்கர் விருதுகளை வென்ற பிறகு ஏராளமான ஹாலிவுட் படங்களில் பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழில் மணிரத்னத்தின் "ராவணா', ரஜினியின் "எந்திரன்', கெüதம் மேனனின் "விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட 7 திரைப்படங்களுக்கு இப்போது இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


ஸ்டார்ட் மெனுவை நகர்த்த

நமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்
ஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து
இங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும்.

இந்த சின்ன ப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.
இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய
டிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு
சிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்
நகர்த்துங்கள்.

அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்
கொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்
பெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.

பெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்
மின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்
Steps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்
மெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.

கீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம் வைத்துள்ளதை கவனியுங்கள்
நீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்
கீழே உள்ள விண்டொவில் காணுங்கள்

இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில் வைத்துள்ளேன்.


இப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால் Stop செய்யலாம். பயன்படுத்திப் பாருங்கள்


சமையல் குறிப்புகள் - 2

மாங்காய் இனிப்பு பச்சடி செய்யும் பொழுது தோலைச் சீவிவிடுவார்கள். ஆனால் தோல் சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமும் இரவு பால் அருந்தும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு அருந்தினால் இரும்புச்சத்து சேரும். சுவையும் நன்றாக இருக்கும்.

கொத்தமல்லி, புதினா, பூண்டு துவையல், சாம்பார் செய்யும்போது புளி நிறைய சேர்க்காமல் தக்காளியைச் சேர்க்கலாம். ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு.

வாரம் ஒரு முறை இஞ்சியையும், பூண்டையும் தனித்தனியாக அரைத்து விழுதாக ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் சைவ பிரியாணி மற்றும் அசைவ பிரியாணி செய்யும்போது எளிதாக இருக்கும்.

நூடுல்ஸ் செய்யும்பொழுது வெங்காயம், தக்காளி வதக்கும்போது சிறிது மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த் தூளையும் அதில் உள்ள மசாலாவோடு சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.


சமையல் குறிப்புகள் - 1

  • கடையிலிருந்து பிளாஸ்டிக் கவரில் வெண்ணெய் வாங்கி வந்தால் அப்படியே ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து பின் எடுத்தால் கையில், கவரில் வெண்ணெய் ஒட்டவே ஒட்டாது.

  • ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றா லும் உடனே எளிதாகச் செய்துவிடலாம்.

  • தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸôக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் (உப்பு, மிளகாய்ப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு பின் ஆற வைத்து) தக்காளி சாஸôகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தக்காளி இல்லாத சமயத்தில் சாம்பார், ரசத்திற்கும், கிரேவிகள் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • சுக்கு, ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக்கொண்டால் டீ போடும்போது அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.

  • இடியாப்ப மாவு, பூரண கொழுக்கட்டை மாவு பிசையும்பொழுது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டு கிளறினால் நல்ல வெள்ளையாக இருக்கும்


எம்.பி.பி.எஸ். : காலியிடங்கள் எவ்வளவு?

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 84 இடங்கள் (ஒரு இடம் நீதிமன்ற உத்தரவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது), ஏற்கெனவே கவுன்சலிங் நடந்த 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 3 காலியிடங்களுக்கு சனிக்கிழமை கவுன்சலிங் நடைபெறுகிறது.

தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 3 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே மறு ஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கும் சனிக்கிழமை (செப். 26) கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் 28-ம் தேதி...: மதுராந்தகம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி அளிக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பிஎஸ்ஜி உள்பட மற்ற நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 27 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். காலியிடங்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 28) கவுன்சலிங் நடைபெறுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கவுன்சலிங் நடைபெறுகிறது


குறும்பட திரைப்பட விழா

வறுமை ஒழிப்புக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நம் நாடு எட்ட வேண்டிய இலக்குகள் போன்றவற்றை வலியுறுத்தி தானம் அறக்கட்டளை சார்பில் குறும்பட விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் குறும்படங்களின் போட்டி கடந்த செப்டம்பர் 14 முதல் 18 வரை மதுரையில் நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட 90 குறும்படங்களில் இருந்து 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த 3 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ஃபிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

இந்த 15 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த குறும்படங்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கத் தொகை வழங்கப்படும். இந்த தொகையை கொண்டு உருவாகும் 3 குறும்படங்கள் தமிழகத்தில் உள்ள 14 திரைப்பட கழகங்களின் உதவியுடன் நடமாடும் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

நிறைவு விழாவில் இயக்குநர் பாலுமகேந்திரா, எடிட்டர் பி.லெனின், தானம் அறக்கட்டளையின் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் கே.ரங்கநாதன், தானம் அறக்கட்டளையின் குழுத் தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்


விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?

புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்.

MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்.

வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.

இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.

ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்


ISO பைல் என்றால் என்ன?

ஐ.எஸ்.ஓ பைல் அல்லது ஐ.எஸ்.ஒ இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடி யின் விம்பம் அல்லது பிரதி எனலாம். சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் அனைத்து டேட்டாவையும் ஒரே பைலாக ஐ.எஸ்.ஒ பைலில் உள்ளடக்கி விடலாம்.

ISO என்பது International Organization for Standardization என்பதைக் குறிக்கிறது. இது .ISO எனும் பைல் `ட்டிப்பைக் (file extension) கொண்டிருக்கும். ஐ.எஸ்.ஓ பைல் என்பது ஒரு சிப் (zip) பைல் அல்லது கேப் (cab) பைலைப் போன்றதே. எனினும் இவை Hப் பைல் போன்று சுருங்கிய வடிவத்திலல்லாமல் சிடி அல்லது டிவிடியில் அடங்கியுள்ள மொத்த பைல்களின் கொள்ளளவில் இருக்கும்.

இந்த ஐ.எஸ்.ஓ பைலை, பகுதி பகுதியாகப் பொருத்தி ஒன்று சேர்க்கும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தாஙகி வரும் ஒரு பெட்டிக்கு ஒப்பிடலாம். எமக்கு பயன்படுவது அந்தப் பெட்டிக்குள் அடங்கிருப்பவையே தவிர அந்தப் பெட்டியல்ல. ஐ.எஸ்.ஓ பைல்களும் இதே போன்றதே.

அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களை இனையத்தின் வழியே பகிர்வதற்காகவே ஐ.எஸ்.ஓ பைல்கள் அனேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மென்பொருளுக்குரிய அனைத்து பைல்களும் போல்டர் களும் ஒரே பைலுக்குள் அடங்கி விடுவதாலும் இதன் மூலம் பைல் இழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனாலும் ஐ.எஸ்.ஓ பைலாக அவை இணையத்தில் பகிரப்படுகின்றன. உதாரணமாக 600 மெகாபைட்டுக்கு மேல் கொள்ளளவு கொண்ட லினக்ஸ் இயங்குதளத் தின் உபுண்டு பதிப்பு இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளக் கூடியதாக ஐ.எஸ்.ஓ பைல் வடிவிலேயே கிடைக்கிறது.

ஐ.எஸ்.ஓ பைலில் என்ன அடங்கிIருக்கின்றன என நேரடியாகத் திறந்து பார்க்க விண்டோஸில் வழியில்லை. எனவே அவை வேறு வழிகளிலேயே கையாளப்படு கின்றன. அவற்றுள் முதலாவது வழி ஐ.எஸ்.ஓ பைலை கையாள்வதற்கான யூட்டிலிட்டிகளைப் பயன்படுத்துவதாகும். அதற்கென IsoBuster, CDmage ,Daemon Tools எனச் சில யூட்டிலிட்டிகலைப் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐ.எஸ்.ஓ பைலில் அடங்கியுள்ளவற்றை “சிப் பைல்” போல் வெறொரு போல்டருக்குள் விரியச் செய்து பார்க்கலாம்.

இரண்டாவது வழி அதனை சீடியிலோ அல்லது டிவிடியிலோ பதிவு செய்து பயன்படுத்துவதாகும். அனேகமாகப் பலரும் இந்த வழியையே கையாள்கின்றனர். எனினும் இந்த ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்வதென்பது வழமையான டேட்டா அல்லது வீடியோ பைலை பதிவு செய்வது போன்றதல்ல. இங்கு சீடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள் ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் ஒன்று சேர்த்துப் பொருத்த வேண்டியிருக்கிறது. எனவே சீடியில் பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஐ.எஸ்.ஓ இமேஜ் பைலைப் பதிவு செய்வதற்கான வசதியும் (image burner ) இருந்தாலே அதனைப் பதியலாம்.

ஒரு ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்த பிறகு சீடியில் அந்த பைலைக் காண முடியாது. மாறாக சீடியில் வேறு சில பைல்களையும் போல்டர்களையும் மட்டுமே காணக் கூடியதாய் இருக்கும்.

ஐ.எஸ்.ஓ பைலைக் கையாளும் மூன்றாவது வL அதனை ஒரு வேர்ச்சுவல் சீடி ரொம்மில் ஏற்றிப் பார்வையிடுவதாகும். ஒரு சீடி ரொம்மிலிருந்து மட்டுமே இயங்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை இயக்குவதற்கான ஒரு வழியே இந்த வேர்ச்சுவல் சீடி ரொம். Virtual CD-ROM Control Panel for Windows XP என்பது அவ்வாறான ஒரு இலவச யூட்டிலிட்டி.

ஐ.எஸ்.ஓ பைல்களை உருவாக்கவும் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களே உதவுகின்றன. ஒரு சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் டேட்டாவை ஐ.எஸ்.ஓ பைல் வடிவில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த சிடி அல்லது டிவிடி இல்லாமலேயே பிரிதொரு நேரம் அதனை சிடியில் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்த ஐ.எஸ்.ஓ பைல் தருகிறது.


இதயம் காக்கும் "எக்ஸ்னோரா

உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தை (செப். 27) முன்னிட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "ஹார்ட் எக்ஸ்னோரா' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இதய மருத்துவ நிபுணரும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் வி. சொக்கலிங்கம், எக்úஸôனோரா இண்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம். பி. நிர்மல், ஆண்டர்சன் பரிசோதனை மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. ஆனந்த், நடிகர் சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

""ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) இந்த ஆண்டு குறிக்கோள் "இதயபூர்வமாக செயல்படு' என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும்.

கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத சீரான உணவு முறை, தினமும் தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சி, புகை - மதுவைத் தவிர்த்தல் ஆகியவை மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

புகை பிடித்தல், உணர்ச்சிவசப்படுதல் உள்ளிட்ட தவறான வாழ்க்கை முறை காரணமாக இந்தியாவில் 19 வயது இளைஞருக்குக்கூட மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

100 ஏழைக் குழந்தைகளுக்கு...: இந்த அமைப்பின் மூலம் முதல் கட்டமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 ஏழைக் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் இந்தக் குழந்தைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவசமாக இதய மருத்துவப் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

செப்டம்பர் 27-ல்...: இதய நோய் விழிப்புணர்வு தினத்தை (செப். 27) முன்னிட்டு "இதயம் காக்க' என்ற தலைப்பில் நூல், குறுந்தகடு வெளியீடு, இணையதளம் தொடக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.

சென்னை சிவானந்தா சாலையில் உள்ள இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கக் கூடத்தில் நடைபெறும் இந்த விழாவில் விடியோ, ஆடியோ குறுந்தகட்டை துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிடுகிறார். நிதி அமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார்.

உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம், அமைச்சர் நேரு, நடிகர் கமல்ஹாசன், ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்'' என்று அவர்கள் தெரிவித்தனர்


ரிலையன்ஸின் பிக் டிவியில் மேலும் 8 தமிழ் சேனல்கள்

இந்தியாவில் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான ரிலையன்ஸ் பிக் டிவியின் டிடிஎச் சேவையில் புதிதாக மேலும் 8 தமிழ் சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி பிக் டிவி வாடிக்கையாளர்கள் இப்போது ஜெயா பிளஸ், மக்கள் டிவி, மெகா டிவி, ஜீ தமிழ், ஆதித்யா டிவி, சிரிப்பொலி மற்றும் வசந்த் டிவியை கண்டுகளிக்கலாம். பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் சிறுவர்களைக் கவரும் விதமாக இத்தகைய சேனல்களை வழங்க ரிலையன்ஸ் பிக் டிவி முடிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய பேக்கேஜ் திட்டங்களையும் ரிலையன்ஸ் பிக் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது. சன் குழும சேனல்கள் 15 மற்றும் தெற்கு பிராந்திய சேனல்கள் உள்பட 120 சேனல்கள் கொண்ட ரூ 2590 பேக்கேஜ் வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது.

எங்களது புதிய திட்டங்கள் தமிழக வாடிக்கையாளர்களுக்கு சேனல்களில் கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக உள்ளூரில் பிரபலமாக உள்ள சேனல்களை வழங்குகிறது. இது வாடிக்கையாளர் திருப்திக்கான பிக் டிவியின் பொறுப்புகளில் ஒரு பகுதி என ரிலையன்ஸ் பிக் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் பெஹல் தெரிவித்தார்


பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2010-ம் ஆண்டுக்கான நாட்டின் மிகப் பெரிய விருதான பத்ம விருது எனப்படும், பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கலை, பண்பாடு, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணிகள், அறிவியல், பொறியியல் துறை நிர்வாகம், வியாபாரம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து, தொண்டாற்றி சாதனைப் படைத்துள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று உரிய ஆதாரங்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப். 30-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


மாம்பழ அல்வா

தேவையான பொருட்கள்
வே‌ண்டியவை

மா‌ம்பழ‌ம் – 2
சர்க்கரை – 1 கப்
பால் – 2 கப்
ஏல‌க்கா‌ய் – 2
நெய் – 1 தே‌க்கர‌ண்டி
செய்முறை
மாம்பழ அல்வா
செய்முறை:-

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம். ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம். பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

உ‌ங்களு‌க்கு ‌வேறு ‌நிற‌ங்க‌ள் வே‌ண்டுமெ‌ன்றா‌ல் மா‌ம்பழ‌‌ம், ச‌ர்‌க்கரை, பா‌ல் கலவையுட‌ன் ‌‌நிற‌ப் பொடியை ‌சி‌றிது த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கல‌ந்து சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம்.

மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்.


பங்குச் சந்தை 17,000 புள்ளிகளை எட்டியது

மும்பை பங்குச் சந்தை மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மிகுந்த பரபரப்புடன் ஆரம்பமானது. இந்த வாரத் தொடக்கம் எப்படியிருக்குமோ என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு புள்ளிகள் உயர்வு ஆறுதலை அளித்தது.

நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரி அதிகரித்துள்ளதால் 145 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 16,886 புள்ளிகளைத் தொட்டது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனங்கள் செலுத்தும் முன் தேதியிட்ட வரி 14.7 சதவீதம் உயர்ந்துள்ளது. 16 மாத இடைவெளிக்குப் பிறகு புள்ளிகள் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் 44 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 5,000 புள்ளிகளைக் கடந்து 5,020 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு மே 22-ம் தேதிக்குப் பிறகு தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 5 ஆயிரத்தைக் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. பொருளாதாரம் மீட்சியடைவதை உணர்த்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக இருந்தது.

அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக சீனா, இந்தோனேசியாவில் வளர்ச்சி அதிகரிக்கும் என வெளியிட்ட தகவலால் ஆசிய பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றன. இது தவிர ஐரோப்பிய பங்குச் சந்தையின் ஏறுமுகமும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமானது.

ஹெச்டிஎஃப்சி பங்கு விலை ரூ. 134.35 அதிகரித்து ரூ. 2,667.40-க்கு விற்பனையானது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன. டிசிஎஸ் பங்குகள் 2.92 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.77 சதவீதமும், விப்ரோ 1.28 சதவீதமும் உயர்ந்தன.

மோசர் பேயர் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக 8.64 சதவீதம் உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 2.60 சதவீதமும், ஐடிசி 2.59 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.50 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.41 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.28 சதவீதமும், மாருதி சுஸýகி பங்குகள் 1.12 சதவீதமும் உயர்ந்தன.

பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 3.28 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்தை கையகப்படுத்தியதோடு அந்நிறுவன உயர் அதிகாரிகள் பணியில் தொடரலாம் என ஏர்டெல் அறிவித்தபோதிலும் அது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

இதனால் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பங்கு புள்ளிகள் உயர்ந்தபோதிலும் பங்கு வர்த்தகம் ரூ. 5,679.29 கோடியை மட்டுமே தொட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 6,309.48 கோடிக்கு பங்குகள் விற்பனையாயின. ஜின்டால் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 212.75 கோடிக்கு விற்பனையானது. ரிலையன்ஸ் பங்குகள் ரூ. 163.45 கோடிக்கும், டாடா ஸ்டீல் ரூ. 129.85 கோடி, சுஸ்லான் எனர்ஜி ரூ. 115 கோடிக்கும் விற்பனையாயின


Beta Version என்றால் என்ன?

ஒரு மென் பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும்.

அலபா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) வேர்சன் எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது.

பீட்டா நிலையில் அந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அம்மென்பொரு ளிலுள்ள நிரை குறைகள் கண்டறியப்படும்.

ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பை ஒரு முன்னோட்டமாகக் கருதலாம். ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பு அந்த மென்பொருளுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். எனினும் பரந்த அளவிளான விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்காது.

இந்த நிலையில் பீட்டா பதிப்பை பயன்படுத்துவோரிடமிருந்து மென்பொருள் பற்றிய கருத்துக்கள் சேகரிக்கப்படும். மென்பொருளை வெளியிட முன்னர் அவர்கள் எதனை விரும்புகிறார்கள், எதனை நீக்க வேண்டும் எதனை மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.


பீட்டா பதிப்பிலும் மூடிய பீட்டா (closed beta) திறந்த பீட்டா (open beta) என இரு வகைகளும் உள்ளன. . ஒரு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை மூடிய பீட்ட பதிப்பு எனப்படுகிறது. திறந்த பீட்டா பதிப்பு பொது மக்கள் யாவரும் பயன்படுத்துமாறு வழங்கப்படுவதாகும்.

பீட்டா பதிப்பில் இறுதியாக வெளிவிட விருக்கும் பதிப்பில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தாலும் அதன் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியையே வழங்கும். சில நிறுவனங்கள் தமது மென்பொருளைப் பல வருடங்களுக்கு பீட்டா பதிப்பிலேயே விட்டு வைக்கும். அப்போது முழுமையான பதிப்பைப் போலவே அதனைப் பலரும் பயன்படுத்தலாம்..

பீட்டா எனும் வார்த்தை கிரேக்க மொழி அரிச்சுவடியில் இரண்டாவது எழுத்தைக் குறிக்கிறது என்பது நீங்கள் அறிந்த விடயமே. பீட்டா பதிப்பு அல்லது பீட்டா சோதனை எனும் வார்த்தையை ஐபிஎம் நிறுவனமே முதலில் அறிமுகம் செய்தது.

ஐபிஎம் நிறுவனம் தனது கணினி வன்பொருள் சாதனங்கள் முறையாக இயங்குகிறதா எனச் சோதிப்பதற்கே பீட்டா சோதனை எனும் வர்த்தையைப் பயன்படுத்தியது, எனினும் தற்போது இந்த வார்த்தையை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

அனேகமான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்க்ள் பாவனைக்காக வெளியிட முன்னர் பீட்டா பதிப்பையே முதலில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


ஏழரை சனி முடிந்து விட்டது

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு நேற்று எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. வந்தார். சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை பிடித்திருந்த ஏழரை சனி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் குச்சனூர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்தேன். கட்சி ரீதியாக நான் அ.தி.மு.க.வில் இணைந்த போது எனக்கு ஏழரை சனி தொடங்கியது. தற்போது முடிந்து விட்டதால் அக்கட்சியில் இருந்தும் விலகி விட்டேன். இனி தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்.

தேவையில்லாமல் மயிலாப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வேண் டியதில்லை. ஒரே நேரத் தில் அ.தி.மு.க. சார்பில் வாக்களித்த பொதுமக்களுக் கும், தி.மு.க.வை சேர்ந்த வர்களுக்கும் நான் எம்.எல்.ஏ.வாக இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நானாக விலகவில்லை. கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதாதான் என்னை நீக்கினார். இருந் தாலும் எனக்கும், எஸ்.எஸ்.சந்திரனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இந்தியாவில் வெற்றி கரமாக செயல்படுவது கருணாநிதி ஆட்சி மட்டும் தான். அந்த நல்லாட்சி தொடர்வதால் தி.மு.க.வில் இணைவதில் உறுதியாக உள்ளேன். எனக்கென்று எதிரிகள் யாரும் இல்லை. என்னை எதிர்ப்பவர்களை சனி பகவான் பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


கை - காலில் வலி ஏற்பட்டாலே வாயு பிரச்னையா?

கை - கால் உள்பட உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும், அதற்குக் காரணம் வயிற்றுக்குள் இருக்கும் வாயுதான் காரணம் என்பது பொதுவான கருத்து. \

குறிப்பாக "கேஸ்' அங்கும், இங்கும் ஓடுகிறது எனப் பல நோயாளிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வாயின் வழியாக இரைப்பை மற்றும் சிறு குடலுக்கு வரும் காற்று வெளியேறும் ஓரே வழி ஆசனவாய்தான் என்பது உண்மை.

குடலுக்குள் இருக்கும் காற்று எந்தக் காரணத்தைக் கொண்டும் உடலின் மற்ற பகுதிகளுக்கோ அல்லது வேறு உறுப்புகளுக்கோ போக முடியாது.

பொதுவாக நாம் உணவு சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் உள்ளே செல்கிறது. மேலும் சில உணவுப் பழக்கவழக்கங்களாலும், வயிற்றுக்குள் காற்று உருவாகலாம். குறிப்பாக உருளைக் கிழங்கு, கடலை, சுண்டல் போன்ற உணவு வகைகளால்கூட சிலருக்கு வழக்கத்தைவிட அதிக வாயு உருவாகலாம். இதனால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். அத்துடன் வயிற்று வலி, ஆசன வாய் வழியாக அதிகமாக காற்று வெளியாகலாம். இனம் தெரியாத ஒரு அசெüகரியம் வரலாம்.

எனவே குறிப்பிட்ட உணவு வகைகளால் இந்த மாதிரி பிரச்னைகள் வந்தால், அந்த குறிப்பிட்ட உணவுப் பொருள்களை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இந்தப் பிரச்னையை மாத்திரைகளால் முழுவதும் சரிப்படுத்த முடியாது.

அத்துடன் உடலின் மற்ற பாகங்களில் குறிப்பாக கை மற்றும் கால்களில் ஏற்படும் வலிக்கு வாயு பிரச்னை எனக் கருதி, சுய மருத்துவம் செய்து உடல் நலனை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு...

டாக்டர் பி. சதீஷ்,

இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை

மற்றும் லாப்ராஸ்கோப்பி சிகிச்சை நிபுணர்,

லோட்டஸ் சூர்யா லாப்ராஸ்கோப்பி

அறுவை சிகிச்சை மையம்,

சாலிக்கிராமம், சென்னை.

செல்: 98400 - 53727.


பாசிப் பருப்பு பாயசம்

தேவையானவை:

பாசிப் பருப்பு 250 கிராம்.

வெல்லம் 250 கிராம்.

தேங்காய் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

நெய் தேவையான அளவு.

முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு.செய்முறை:

வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வறுக்கவும். அதன்பின்

தேவைக்கேற்ப நீரை ஒரு பாத்திரத் தில் ஊற்றி அதில் பாசிப் பருப்பை வேகவைக்கவும். நன்றாக பருப்பு வெந்தவுடன் ஏலக்காய், வெல்லத்தை அதில் சிறிது சிறிதாகப் போட்டு கரண்டியால் கிளறிவிடவும்.

வாணலி யில் முந்திரியையும், தேங்காயையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள் ளவும். இதனை சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கும் பாசிப் பருப்பு பாயசத் தில் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டால் சூடான பாசிப் பருப்பு பாயசம் தயார்.


திரையில் இதிகாச நாயகர்கள்!

ஸ்பைடர்மேன், அயன்மேன் என சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி ஹாலிவுட்டைக் கலக்கும் டிஸ்னி தயாரிப்பு நிறுவனம், இந்து மத புராண நாயகர்களை மையப்படுத்தி புதிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக விமானிகா காமிக்ஸ் என்ற ஹிந்தி பதிப்பகத்தோடு கூட்டணி அமைக்கிறது டிஸ்னி. விமானிகா, தனது வெளியீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் கர்ணன் பாத்திரத்தை மையப்படுத்தி இந்தப் புதிய படம் தயாராகிறது. தொடர்ந்து பல்வேறு இதிகாச நாயகர்களைப் பற்றியும் படங்களைத் தயாரிக்கவுள்ளது இந்த நிறுவனம்.

ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஒன்று பாலிவுட் பதிப்பகம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து படம் எடுக்கவுள்ளதை ஹிந்தி படவுலகம் ஆச்சரியமாகப் பார்க்கிறது.

விமானிகா நிறுவனம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் வெளியீடுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரிட்டனிலும் இப்போது விற்பனையைத் துவக்கியுள்ளது விமானிகா


அறிமுகம்: சாம்சங்கின் தொடுதிரை கேமரா

மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இளம் தலைமுறையினருக்கேற்ற செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிக்ஸன் 12 (எம்8910) என்ற இந்த செல்போன் முழு தொடுதிரை வசதியுடன் 12 மெகா பிக்ஸல் கேமராவை உள்ளடக்கியது. இதன் திரை 7.9 செ.மீ. அளவு இருப்பதால் பயணங்களின்போது திரைப்படங்கள் மற்றும் பிடித்தமான பாடல் காட்சிகளை பார்த்து ரசித்தபடியே பயணத்தைத் தொடரலாம்.

இதில் உள்ள கேமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களைப் பதிவு செய்ய முடியும். இதில் 28 மி.மீ. லென்ஸ் உள்ளதால் படங்கள் மிகத் தெளிவாக பதிவாகும். பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த கேமரா செல்போனின் விலை ரூ. 29,900.


பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளர் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்த ரகு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் வவுனியா முகாமில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

32 வயதான தேவகுமாரன் என்னும் ரகு பிரபாகரனின் பாதுகாப்புக்கான முக்கிய பொறுப்பாளராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.

வன்னியில் நடைபெற்ற போரின்போது அவர் மக்களுடன் கலந்து முகாமில் வசித்து வந்ததாக போலீஸôர் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் போலி சி.டி.க்கள் பறிமுதல்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் சி.டி.யை போலியாகத் தயாரித்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த விவரம்:

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்ஸர் வணிக வளாகத்தில் உள்ள இரு லேப்டாப் கடைகளில் சாஃப்ட்வேர் சி.டி.க்கள் போலியாகத் தயாரித்து விற்பதாக சிபிசிஐடி விடியோ தடுப்பு பிரிவு போலீஸýக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடைக்கு சென்ற போலீஸôர் தேடுதல் நடத்தினர். இதில் விண்டோஸ், எச்பி, விண்டோஸ் 2007, போட்டோஷாப் ஆகிய போலி சாஃப்ட்வேர் சி.டி.க்கள் இருந்தது தெரிந்தது. ஒரிஜினல் சாஃப்ட்வேர் சிடிக்களை வைத்துக் கொண்டு, போலி சி.டி.க்களை தயாரித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் பிரவீண்குமார், வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 260 போலி சாஃப்ட்வேர் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.19 லட்சம் என்று சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes