மின்னஞ்சல் மூலம் பைல் பார்மட் மாற்ற

எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் கள், தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான பைல்கள் கிடைத்தால், திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள்.

ஏனென்றால், மாறா நிலையில், இந்த புதிய தொகுப்புகள், ஆபீஸ் 2003 தொகுப்பினால், திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன. எடுத்துக் காட்டாக, வேர்ட் 2003 தொகுப்பில் ‘doc’ என்ற பார்மட்டில் டாகுமெண்ட் கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை ‘docx’ என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன.

இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக் கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க, மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து, பின்னர் Save அண் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்த வரை இன்னும் ஆபீஸ் 2003 தொகுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றவர் களுக்கு உதவ இணையத்தில் பல தளங்கள், இலவசமாக இந்த பார்மட் மாற்றத்திற்கு உதவுகின்றன.

இவற்றில் மிகச் சிறப்பான முறையில், வேகமாக மாற்றித் தரும் தளமான www.zamzar.comகுறித்து முன்பே கம்ப்யூட்டர் மலரில் குறிப்பிட்டிருந்தோம். இந்த தளத்தில் நுழைந்து, மாற்ற வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், பைல் பார்மட் மாற்றப்பட்டவுடன், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு, பார்மட் மாற்றப் பட்ட பைலை டவுண்லோட் செய்திட லிங்க் கிடைக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, பார்மட் மாறிய பைலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின் அஞ்சல் வழியாக, நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாற்றப்பட்டு, மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.

எந்த வகை பார்மட்டினை மாற்ற வேண்டுமோ அதனை ஒட்டி இதற்கான மின்ன்னஞ்சல் முகவரி தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாற்றபட வேண்டியது டாகுமெண்ட் பைல் எனில், doc@zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பி.டி.எப். பைலை டாகுமெண்ட் பைலாக மாற்ற வேண்டும் என்றாலும், இதே முகவரிக்கு அனுப்பலாம். ஒரே மின்னஞ்சலில், பல பைல்களை அனுப்பலாம். ஒரு பைலை பல்வேறு பார்மட்டுகளில் மாற்ற வேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி கட்டத்தில், இதற்கான முகவரிகளை வரிசையாக அமைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பி.எம்.பி. பைலை ஜேபெக் பார்மட்டில் ஒரு பைலாகவும், ஜிப் பார்மட்டில் ஒரு பைலாகவும் மாற்ற வேண்டி இருந்தால், அந்த பி.எம்.பி. பைலை jpg@zamzar.com, gif@zamzar.com என இரு முகவரிகளை இட்டு அனுப்ப வேண்டும். இதில் ஒரு வரையறை உண்டு. பைல் ஒன்றின் அளவு 1 எம்பிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலாக பெரிய பைலாக இருந்தால், கட்டணம் செலுத்தி மட்டுமே பார்மட் மாற்றிப் பெற முடியும்.

iPhone, iPad, Android or Blackberry ஆகிய சாதனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால், அவை வழியாகவும் பைலை அனுப்பி, மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பைல், மேலே கூறப்பட்ட சாதனங்களில் பார்க்க இயலாத பார்மட்டில் இருந்தால், மின்னஞ்சல் மூலம் அனுப்பி, சாதனங்களில் பார்க்கும் வகையில் மாற்றிப் பெறலாம்.

இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் www.zamzar.com என்ற தளத்தில் உள்ள FAQ பக்கத்தில் தேடிப் பெறலாம்.


புரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்

எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.

இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரிwww.codeacademy.com

இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.

நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது.

இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.

புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.

எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்கள்.


மார்ச் 8ல் இணையம் முடக்கப்படுமா?

அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறை தன் தளத்தில் விடுத்த எச்சரிக்கையால், பலர் கதிகலங்கி உள்ளனர். மார்ச் 8 அன்று எப்.பி.ஐ.(FBIFederal Bureau of Investigation) என அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் தளம் மூடப்படும் என்ற செய்தி பரவலாகப் பல வலைமனைகளில் பரவி வருகிறது.

இதற்குக் காரணம் டி.என்.எஸ். சேஞ்சர்(DNS Changer) என்னும் வைரஸ் தான். இது ஒரு ட்ரோஜன் (Trojan) வகை வைரஸ். இதன் அளவு 1.5 கிலோ பைட்ஸ் . இதனை OSX.RSPlug.A மற்றும்OSX/Puper என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர்.

இது பெரும்பாலும் வீடியோ கோடக் பைல் போல, பாலியல் தளங்களில் காட்டப்படுகிறது. வீடீயோ பைல்களைப் பார்க்கும் ஆர்வத்தில், கோடக் குறியீடு தேவை என்ற செய்தியின் அடிப்படையில், பலர் இதனை டவுண்லோட் செய்து விட்டு மாட்டிக் கொள்கின்றனர்.

இதில் மிக வேடிக்கையும் அதிர்ச்சியும் தரும் செய்தி என்னவென்றால், அமெரிக்காவின் பார்ச்சூன் (Fortune 500)நிறுவனங்கள் என்று கருதப்படும் முதல் 500 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களின் சர்வர்களை, இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் பல துறைகளின் தளங்களிலும் இது காணப்படுகிறது.

பல நாடுகளில் பரவி உள்ள இந்த வைரஸ், தான் அடைந்துள்ள கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில், பயன்படுத்துபவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தளத்திற்கு மாறாக, பாலியல் சார்ந்த தளங்களுக்கு அவர்களை இழுத்துச் செல்கிறது. இந்த தளங்கள் சைபர் கிரிமினல்களின் கட்டுப் பாட்டில் உள்ள தளங்களாகும். இதன் பின்னர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரை தங்கள் வசம் வைத்துக் கொண்டு தகவல்களை இவர்கள் திருட ஆரம்பிப்பார்கள்.

அல்லது தவறான சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பிற வசதிகளைத் தருவதாகக் கூறும் தளங்களுக்குச் சென்று, இந்த வைரஸை உருவாக்கியவர்களுக்குப் பணத்தைப் பெற்றுத் தருகிறது. இதற்குக் காரணம், பாதித்த கம்ப்யூட்டரில் உள்ள டி.என்.எஸ். சர்வரின் செட்டிங்ஸை இந்த வைரஸ் மாற்றிவிடுவதே காரணம்.

கம்ப்யூட்டரில் உள்ள ‘NameServer’’ ரெஜிஸ்ட்ரி கீயினை வேறு ஒரு ஐ.பி. முகவரிக்கு இது மாற்றுகிறது. இதனால், அந்த கம்ப்யூட்டர் இணைய தளங்களைத் தேடுகையில், மாற்றப்பட்ட டி.என்.எஸ். சர்வர் தரும் போலியான தளங்கள் நமக்குக் காட்டப்படுகின்றன.

அது மட்டுமின்றி, கம்ப்யூட்டர்களில் பதியப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை செயல் இழக்கச் செய்கிறது. பாதுகாப்பிற்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடாமல் தடுக்கிறது. இதனை எதிர்கொண்டு அழிக்க, பல தொழில் நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து புரோகிராம்களை வடிவமைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இதனை நீக்கும் சாத்தியக் கூறுகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

நம் கம்ப்யூட்டரில் இது உள்ளதா என எப்படி அறிவது? நீங்கள் குறிப்பிட்ட முகவரியினை டைப் செய்து தளத்தை எதிர்பார்க்கையில், அதே போல தோற்றம் கொண்ட இன்னொரு தளம் உங்களுக்குக் காட்டப்பட்டாலோ, அல்லது வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அதில் நீங்கள் கேட்காத சில புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்பட்டாலோ, உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் வந்து அமர்ந்துவிட்டது என்று பொருள்.

நாம் கொடுக்கும் இணைய முகவரிகள், முதலில் டொமைன் நேம் சர்வர்களுக்குச் செல்கின்றன. அங்கு அந்த முகவரிகளுக் கான தள எண்கள் பெறப்பட்டு, அவை மூலம் தான் நமக்கு தளங்கள் பெறப்பட்டு காட்டப்படுகின்றன. இந்த டொமைன் நேம் சர்வர்களின் பணிகளைப் பாதிக்கும் வேலையைத் தான் இந்த வைரஸ்கள் செய்கின்றன.

இது ஏற்கனவே 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கண்டறிந்த போது அடக்கப்பட்டது. ஆனால் இப்போது பல நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மார்ச் 8 ஆம் நாள் அன்று தன் முழு வேகத்தைக் காட்டி, இணைய தளங்களை முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியின் அடிப்படையில் தான், அமெரிக்கப் புலனாய்வுத் துறை தன் இணைய தளத்தை மார்ச் 8 அன்று மூடும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் நம் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா? வந்து அமர்ந்துள்ளதா? என்று அறிய இணைய தளத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.http://www.avira.com/en/supportforhomeknowledgebasedetail/kbid/1199 என்ற முகவரியில் கிடைக்கும் புரோகிராம் இதில் ஒன்று.

ஆனால் வைரஸை நீக்குவதில் இந்த புரோகிராம் வெற்றி அடைய முடியவில்லை. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் பல நிறுவனங்கள், இந்த வைரஸை அழிப்பது சிரமம் என்று அறிவித்துள்ளனர். இதனால், மார்ச் 8 அன்று இன்டர்நெட் பல கம்ப்யூட்டர்களுக்குக் கிடைக்காது என்கின்றனர். அப்படியானால், இதற்குத் தீர்வு தான் என்ன? வழக்கம் போல, ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா பைல்களை நகல் எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்து, சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அமைப்பதுதான் ஒரே வழி என்கின்றனர் பலர்.

சிகிளீனர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு இந்த வைரஸ் தொகுப்பினை நீக்கினாலும், மீண்டும் அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்குகையில் இந்த வைரஸ் காணப் படுகிறது. இணையத்தில் இத்தகைய புரோகிராம்களை வழங்கும் சாப்ட் பீடியா (Softpedia) நிறுவனம் தன் தளத்தில், இந்த வைரஸை நீக்க ஒரு புரோகிராமினை http://mac.softpedia.com/get /Security/DNSChangerRemovalTool.shtml என்ற முகவரியில் தருகிறது.

இதன் பெயர் DNSChanger Removal Tool. இந்த தளம் சென்று இதற்கான புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன், முகப்பு பக்கத்தில் Scan என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டி.என்.எஸ். சேஞ்சர் வைரஸ் இருந்தால், தகவல் தெரிவித்து, அதனை நீக்கவா என்று ஆப்ஷன் கேட்கிறது. சரி என ஆப்ஷன் கொடுத்த பின்னர் வைரஸ் நீக்கப்படும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறையின் இணைய தளத்தில் இந்த வைரஸ் இருப்பதனை சோதனை செய்திட ஒரு டூல் தரப்பட்டுள்ளது.

இதனை https://forms.fbi. gov/checktoseeifyourcomputerisusingrogueDNS என்ற முகவரியில் காணலாம். இந்த தளம் சென்று உங்கள் டி.என்.எஸ். சர்வரின் இணைய தள முகவரியைத் தர வேண்டும். அதன் பின்னர், , “Your IP corresponds to a known rogue DNS server, and your computer may be infected. Please consult a computer professional.” என்ற செய்தி கிடைத்தால், உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் புகுந்துள்ளது என்று பொருள். இதனை நீக்க நீங்கள் வேறு தள உதவியைத் தான் நாட வேண்டும்.

http://www.fbi.gov/news/stories/2011/november/malware_110911/DNSchangermalware.pdf என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், எப்படி இந்த வைரஸை கண்டறியலாம் என்பதற்கான குறிப்புகள் அடங்கிய பி.டி.எப். கோப்பு கிடைக்கிறது. இதுவும் அமெரிக்க அரசின் எப்.பி.ஐ. தளமாகும். டவுண்லோட் செய்து முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

காஸ்பெர்ஸ்கி என்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தன் தளத்தில் இந்த வைரஸை நீக்கும் உதவியை வழங்குகிறது. http://support.kaspersky.com/ downloads/utils/tdsskiller.exe என்ற முகவரி யில் உள்ள இந்நிறுவன தளத்தில் இருந்து, tஞீண்ண்டுடிடூடூஞுணூ.ஞுதுஞு என்ற பைலை தரவிறக்கம் செய்து, அதனை இயக்க வேண்டும். கம்ப்யூட்டர் முழுமையும் சோதனை செய்திட விருப்பம் தெரிவிக்க வேண்டும். வைரஸ் இருந்தால், நிச்சயம் அதனை நீக்குவதாக இந்த தளம் அறிவிக்கிறது.


யுனிநார் தரும் பட்ஜெட் பந்தா

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் களை இலக்கு வைத்து, மொபைல் சேவை யில் ஈடுபட்டு வரும் யூனிநார் நிறுவனம், பட்ஜெட் பந்தா என்ற பெயரில் புதிய மொபைல் சேவை திட்டத்தினை வழங்கி யுள்ளது.

இதன் படி, மாதந்தோறும், ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால், இந்நிறுவனத்தின் மற்ற உள்ளூர் இணைப்புகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் விநாடிகள் பேசிக் கொள்ளலாம்.

மற்ற நிறுவன சேவையில் இயங்கும் உள்ளூர் போன்களுக்கு 42 ஆயிரம் விநாடிகள் பேசிக் கொள்ளலாம்.

தினந்தோறும் 100 எஸ்.எம்.எஸ். செய்தி களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.

கூடுதலாக, ரூ.47க்கு ரீசார்ஜ் செய்தால், இணைய இணைப்பு பெற்று மூன்று ஜிபி வரை தகவல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.


வேர்ட் டேபிள் - செல்கள் இடையே இடைவெளி அமைக்க

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன. இவை முன்மாதிரி என அழைக்கப்படும் டெம்ப்ளேட்டுகளாகக் கிடைக்கின்றன.

இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உதவி செய்வதில்லை. ஆனால், இதனை அமைத்திட முடியும். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

முதலில் மாற்றப்படாத, மாறா நிலையில் கிடைக்கும் டேபிள் ஒன்றை எடுத்துப் பார்க்கலாம். இந்த டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுத்தால், அதில் மார்ஜின், இடது பக்கமும் வலது பக்கமும் .08 அங்குலம் இருப்பதனைக் காணலாம். டேபிள் ஒன்று உருவாக்கப்படுகையில், வேர்ட் இந்த மார்ஜின் இடத்தைத் தானாக அமைத்துக் கொள்கிறது.

இந்த டேபிளைப் பெற, Insert மெனு சென்று, Tables group பிரிவில் உள்ள Table என்ற பிரிவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவினைப் பயன்படுத்தி, மூன்று நெட்டு வரிசை (columns) மற்றும் ஐந்து படுக்கை வரிசை (rows) கொண்ட டேபிளை உருவாக்கவும்.

இதில், மேலும் கீழுமாக மார்ஜின் உருவாக்க கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.

1. டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும். மூவ் ஹேண்டில் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம் போன்ற கர்சரை டேபிளின் இடது மேல் மூலையில் கிளிக் செய்தால், டேபிள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

2. அடுத்து contextual Layout டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள குரூப்பில், Cell Margins என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Table பிரிவில் Options என்பதில் கிளிக் செய்திடுக.

3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், மேல் மற்றும் கீழ் (top and bottom) பகுதிக்கான மார்ஜின் அகலத்தினை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, செல்களுக்கிடையே எப்படி இடைவெளி அமைப்பது எனப் பார்க்கலாம்:

1.முதலில் மேலே கூறியபடி ஸ்டெப்ஸ் 1 மற்றும் 2னை மேற்கொள்ளவும்.

2.கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Allow Spacing Between Cells என்பதில் கிளிக் செய்து. 0.08 என்று குறிக்கவும்.

3. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.

மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளினால் கிடைக்கும் டேபிள் அமைப்பு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், எளிதாகவும் இருப்பதனைக் காணலாம். நாம் செய்ததெல்லாம், மாறா நிலையில் கிடைக்கும் டேபிளில், சிறிது இடம் கூடுதலாக அமைத்ததுதான்.

இன்னொரு வழியிலும் இதனை அமைக்கலாம். செல்பார்டர்களை மறையச் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி டேபிள் ஒன்றை உருவாக்கி, கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.

1. டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.

2. contextual Design டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Table Styles குரூப்பில், Borders கீழ்விரி மெனுவினைப் பெறவும். அதில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Table டேப்பில் Borders and Shading என்பதில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வண்ணங்களுக்கான கட்டத்தில் white கலர் தேர்ந்தெடுக்கவும். அடுத்து பிரிவில் பெரிய அளவில் எழுத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும். வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கையில், டாகுமெண்ட்டின் பின்னணி வெள்ளையாக இருந்தால், வெள்ளை வண்ணத்தினையும், வேறு வண்ணத்தில் பின்னணி இருந்தால், அந்த வண்ணத்தினையும் அமைத்திடவும். இதனால், செல் பார்டர்கள் தானாகவே மறைந்திடும்.

4. அடுத்து Shading டேப்பில் கிளிக் செய்திடவும். செல் பின்புலத்திற்கு தகுந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.

இங்கு, நாம் செல்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, செல்களின் பார்டரின் அகலத்தினை அதிகரித்து, பின்னர் இடைவெளி அதிகப்படுத்தப்பட்டிருக்கும் தோற்றத்தைக் காட்ட அவற்றை மறைத்திருக்கிறோம்.

இது ஒரு சோதனை தான். உங்களுக்கும் இதன் மூலம் டேபிளின் கூறுகளை எப்படிக் கையாளலாம் என்பது தெரிந்திருக்கும்.


மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, அண்மையில் உச்சநீதி மன்றம் பல நிறுவனங்களுக்கு அளித்த 122 உரிமங்களை ரத்து செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பாதிப்பு வருமா என்ற கேள்வி மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.


1. யுனிநார்:

22 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உங்கள் சேவை இணைப்பு இருந்தால், இன்னும் நான்கு மாதங்களில் அதற்கான மாற்றினைத் தேடுவது குறித்து சிந்திக்கவும்.


2. வீடியோகான்:

21 மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நிறுவனம் தங்கள் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தன் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.


3. லூப் டெலிகாம்:

21 மண்டலங்களில் சிக்கல் ஏற்படும்.


4. எம்.டி.எஸ்.:

சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற பெயரில் இதன் நிறுவனம் இயங்குகிறது. 21 மண்டலங் களில் உரிமம் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.


5. எடிசலாட் :

சியர்ஸ் மொபைல் எனவும் இதன் சேவை அழைக்கப்படுகிறது. 15 மண்டலங்களில் இதன் சேவை பாதிக்கப் படும்.


6. ஐடியா செல்லுலர் அண்ட் ஸ்பைஸ்:

13 மண்டலங்களில் இதன் சேவை பாதிப்பு இருக்கலாம்.

மேற்கண்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவையினை வழங்கி வரும் நிறுவனங்கள். இவற்றிடம் சேவை பெற்றவர்கள் காத்திருந்து பார்க்கலாம். அல்லது மூன்று மாதங்களுக்குள் இதே எண்ணில் மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாறலாம்.


எக்ஸெல்-சில அவசிய ஷார்ட்கட் கீகள்

எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கிய மானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரண மாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம்.

இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.

Control + “C”: Copy

Control + “X”: Cut

Control + “V”: Paste

F2:அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)

F5: Go to

F11:உடனடி சார்ட் கிடைக்க

Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.

Control + F3: பெயரை டிபைன் செய்திடலாம்.

Control + “+”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை
இடைச் செருகும்.

Control + “”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.

Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + Space: முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப் படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + “!” (அல்லது Control + Shift + “1”): எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் பார்மட் செய்திடும்.

Control + “$” (அல்லது Control + Shift + “4”): கரன்சியாக பார்மட்செய்திடும்.

Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத்தில் பார்மட் செய்திடும்.

Control + “/” (அல்லது Control + Shift + “7”): சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.

Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.


கடைசிப் பைலுடன் வேர்ட் திறக்க

வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணு வோம்.

பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக் கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது My Recent Documents பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் செய்து, பின்னர் இயக்கலாம்.

இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால், வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே, இறுதியாக நாம் பயன்படுத்திய பைலுடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.

1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும்.

2. ரன் தேர்ந்தெடுக்கவும்.

3.இறுதியில் தரப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்திடவும்: winword.exe /mFile1

4.ஓகே கிளிக் செய்திடவும்.

இதில் தரப்பட்டுள்ள /m ஸ்விட்ச் ஒரு மேக்ரோ அல்லது கட்டளையை இயக்கும். இந்த இடத்தில், File1 என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு பெயர்.

ஒரு பைலின் பெயர் என்னவாக இருந்தாலும், இதுவே பெயராக மாறும். இதனை அடுத்து,

1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில், winword.exe என்ற பைலைக் கண்டறியவும். இது வழக்கமாக, C:\Program Files\Microsoft Office\Office\folder என்ற இடத்தில் கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும். பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் செய்து Send To Desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி டெஸ்க்டாப்பில், புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.

3. இதில் ரைட் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுக்கவும்.

4. ஷார்ட்கட் டேப்பில், /mFile1 என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.

5.ஓகே கிளிக் செய்திடவும்.

இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி, எப்போதெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ, இறுதியாகப்
பயன்படுத்தப்பட்ட பைலுடனேயே, வேர்ட் திறக்கப்படும்.

ஓர் எச்சரிக்கை. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், மேலே 1ல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரியான போல்டரின் பெயரைத் தர வேண்டியதிருக்கும்.


விண்டோஸ் 7 பேக் அப் (Backup and Restore)

நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.

முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.

இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.

இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.

அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.

முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.


பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்:

பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.

அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும்.

குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.


நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.


மெயில் சர்வர்களில் அனுப்பிய மெயிலை நிறுத்த

பெரும்பாலான மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன், அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும். கட்டளை கொடுத்த பின்னர், அதனைத் திரும்பப் பெற இயலாது. நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவரின் இன் பாக்ஸுக்கு அந்த மெயில் சென்றுவிடும்.

ஒரு நொடியில் இது அனுப்பப்படுகிறது. இதனைத் திரும்பப் பெற பகீரதப் பிரயத்னம் செய்திட வேண்டும். அந்த மெயிலைப் பெறும் சர்வரின் அட்மினிஸ்ட் ரேட்டரைத் தொடர்பு கொண்டு, மெயிலை அவர் முயற்சி எடுத்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. பெரும்பாலான சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் இது போன்ற வேண்டுகோள்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். இது மற்றவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது என எண்ணுவார்கள்.

ஆனால், இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. நான் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதனை நிறுத்தலாம்.

இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்பட வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை.

மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம்.

அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும்.

ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திட லாம்.

இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும்.

ஜிமெயில் வசதியை இணைய தள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது.

அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர், அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.


விண்டோஸ் 7 சிஸ்டர் - வரையறை மாற்ற

உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் மட்டு மின்றி, பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?

சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழிகளைத் தருகிறது.

கீழ்க்காணும் வழிமுறை களைக் கையாண்டால், குறிப்பிட்ட புரோகிராம் களை மட்டுமே, மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால், இதனைச் செயல்படுத்த முடியாது.)

விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு “gpedit.msc” என டைப் செய்திடவும். பின்னர் “Enter” அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் “Administrative Templates” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் “System” என்ற போல்டரில் கிளிக் செய்திடவும்.

இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில், கீழாகச் சென்று “Run only specified Windows applications” என்பதனத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு “Enabled” என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள “Show” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது “Show” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர் களை அமைத்து, பின்னர் “OK” பட்டனைக் கிளிக் செய்திடவும்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும். பாதுகாப்பினை நாடும் உங்கள் விருப்பமும் நிறைவேறும்.


Spice MI 350 N டூயல் சிம் மொபைல்

டூயல் சிம் இயக்கத்துடன், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தொடக்க நிலை மொபைல் ஒன்றை எம்.ஐ.350 என் என்ற பெயரில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

மெட்டல் அலுமினிய பூச்சினை முன் மற்றும் பின் பக்கங்களில் கொண்டுள்ளது. இரண்டு பக்க வாட்டிலும் ரப்பர் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 136 கிராம். இதன் திரை கெபாசிடிவ் ரெஸிஸ்டிவ் தன்மையுடையதாக 3.5 அங்குல அகலத்தில் உள்ளது.

திரைக்கு மேலாக, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் கேமரா, ஸ்பீக்கர்கள் தரப்பட் டுள்ளன.

பேட்டரியின் கீழாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், டூயல் சிம் ஸ்லாட் தரப்பட்டுள்ளன.

போனில் 2.3.4 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இயங்குகிறது.

இதில் 650 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் தரப்பட்டுள்ளது.

170 எம்பி போன் மெமரி கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,595.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes