பட்ஜெட் விலையில் சாம்சங் போன்கள்


பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் சாம்சங் நிறுவன மொபைல் சாம்சங் இ 1207. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போன், 108x45x13.5 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எடை 65 கிராம். பார் டைப் வடிவில் எண், எழுத்து கொண்ட வழக்கமான கீ போர்டுடன் உள்ளது. 

இதன் திரை 1.52 அங்குல அகலத்தில் வண்ணத்திரையாக உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

உள் நினைவகம் 8 எம்பி திறன் கொண்டுள்ளது. கேமரா தரப்படவில்லை. நெட்வொர்க் கிடைக்காது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி உண்டு. 800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 430 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். தொடர்ந்து 8 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 1,280.

சாம்சங் இ 1282:

இரண்டு அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் சாம்சங் இ 1282 மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 1,750. இதன் பரிமாணம் 109.2 x 45.5 x 14.5 மிமீ. இதன் எடை 74.5 கிராம். பார் டைப் வடிவில் எண், எழுத்து கொண்ட வழக்கமான கீ போர்டுடன் உள்ளது. 

இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்திரையாக உள்ளது. 128x160 பிக்ஸெல் திறன் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

இதன் ஸ்டோரேஜ் மெமரியை, மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இன்டர்னல் மெமரி இல்லை என்பதால், இதனையே மெமரியாகப் பயன்படுத்த வேண்டும். 

ஆனால், புளுடூத் வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் பயன்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. 

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கு இணைப்புநேரடியாகக் கிடைக்கிறது. 1,000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 660 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். தொடர்ந்து 12 மணி நேரம் பேசலாம்.


நோக்கியா லூமியா 510


சென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் சந்தையில் அனைவரையும் கவரும் மொபைல் போனாக வலம் வருகிறது நோக்கியா லூமியா 510. 

நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த 3ஜி போன், ஜி.எஸ்.எம். மினி சிம்மினைப் பயன்படுத்துகிறது.

இதன் பரிமாணம் 120.7x64.9x11.5 மிமீ. எடை 129 கிராம். பார் டைப் வடிவில் அமைக்கப்பட்ட இந்த மொபைலில், 4 அங்குல அகலத்தில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 

லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ராம் மெமரி 256 எம்.பி. இதன் தகவல்களை ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி வரை பதிந்து வைக்கலாம். 

ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வைபி ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. AD2P இணைந்த புளுடூத் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் பயன்படுத்தலாம். 

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. இதன்கேமரா 5 எம்.பி. திறனுடன் ஆட்டோ போகஸ் வசதி கொண்டது. வீடியோ விநாடிக்கு 30 பிரேம் வேகத்தில் இயங்குகிறது. 

இதன் சிபியு 850 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் அனைத்து ஆடியோ பார்மட் பைல்களை இயக்குகிறது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 9 பதியப்பட்டு இயங்குகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. 

ஆபீஸ் டாகுமெண்ட் வியூவர், வீடியோ போட்டோ எடிட்டர், வாய்ஸ் மெமோ ஆகிய வசதிகளும் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1300 ட்அட திறன் கொண்டது. 

தொடர்ந்து 739 மணி நேரம் மின்சக்தியை தக்க வைக்கிறது. 6 மணி 15 நிமிடம் தொடர்ந்து பேச முடியும். 38 மணி நேரம் பாடல்களை இயக்கிக் கேட்க இயலும். 

இந்த மொபைலின் அதிக பட்ச விலை ரூ. 10,000 மட்டுமே.


மொபைல் சாதனங்களில் ஆபீஸ் தொகுப்பு
டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இணையத் தேடலுக்கும், மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படும்; அவற்றில் ஆபீஸ் தொகுப்பில் நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை எளிதில் இயக்க முடியாது என்ற நிலை தற்போது அடியோடு மாறிவிட்டது. 

வழக்கமாக, நாம் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளும் அனைத்தையும் டேப்ளட் பிசிக்களிலும் மேற்கொள்லலாம் என்ற அளவிற்கு பல்முனைத் திறனுடன், டேப்ளட் பிசிக்களும் அவற்றிற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களும் தற்போது கிடைக்கின்றன. 

எனவே, பலர் தங்களின் லேப்டாப் கம்ப்யூட்டர் இயங்கிய இடத்தில், டேப்ளட் பிசிக்களை வாங்கி இயக்க முடிவு செய்கின்றனர். இவர்கள் இந்த முடிவெடுத்து, டேப்ளட் பிசிக்களை வாங்கும் முன், தங்களின் தேவைகளையும், அதற்கான சரியான டேப்ளட் பிசிக்களையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

இதில் பல அம்சங்களைக் கவனித்து முடிவெடுக்க வேண்டியதுள்ளது. இல்லை எனில், வழக்கமான ஆபீஸ் அப்ளிகேஷன் செயல்பாடுகளை மேற்கொள்வது சிரமமாகிவிடும். 

டேப்ளட் பிசிக்களுக்கான ஆபீஸ் தொகுப்புகளை வழங்குவதில் மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் 8 ஆகியவற்றிற்கான ஆபீஸ் தொகுப்பினைத் தான் வடிவமைக்கப் போவதில்லை என கூகுள் அறிவித்துவிட்டது. 

விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் செயல்படும் கூகுள் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேஷனே போதும் என கூகுள் எண்ணுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் டெஸ்க் டாப் செயல்பாட்டில், தன் ஆபீஸ் தொகுப்பு இயங்குவதே போதுமானது என கூகுள் திட்டமிடுகிறது. இதே நேரத்தில், ஆப்பிள் சாதன வாடிக்கையாளர்களுக்கு தன் ஆபீஸ் தொகுப்பினை வழங்க மைக்ரோசாப்ட் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதனை ஆப்பிள் ஸ்டோர் வழி விற்பனை செய்திட திட்டமிடுகிறது. இதற்கான முடிவுகளை எடுக்க மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனத்துடன் முயற்சிக்கிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பு இலவசமாக தரப்படும். ஆனால், அதனைச் செயல்படுத்த முயற்சிக்கையில், ஆபீஸ் 365 தொகுப்பிற்குக் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இதற்கு 30% கட்டணத்தைக் கேட்கிறது.

கூகுள் ஆண்ட்ராய்ட் இயக்க சாதனங்கள் மற்றும் குரோம் புக் கம்ப்யூட்டர்களில் தன் ஆபீஸ் தொகுப்பு இயங்கி பிரபலமாக வேண்டும் என முயற்சிக்கிறது. அதே போல மைக்ரோசாப்ட் தன் ஆபீஸ் தொகுப்பினை, மொபைல் சாதனங்களில், முன்னுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. 

ஆனால், மொபைல் சாதனங்களைப் பொறுத்த வரை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இயக்கங்களே பெரும் அளவில் பயன்படுத்தப்படுவதால், அந்த சிஸ்டங்களில் இயங்கும் ஆபீஸ் தொகுப்புகளையும் வடிவமைத்து வழங்கி, இந்த மொபைல் ஆபீஸ் சந்தையில் நல்ல இடம் பிடிக்க திட்டமிடுகிறது.

எனவே, தங்கள் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ் தொகுப்பினை இயக்கி தங்கள் பணியினை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்த மூன்று கோணங்களையும் தெளிவாக உணர்ந்த பின்னரே, தங்களுடைய டேப்ளட் பிசிக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

கூகுள் தரும் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்த எண்ணினால், விண்டோஸ் சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசி, தற்போதைக்குச் சரியான தீர்வாக இருக்காது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினையே பயன்படுத்த முடிவெடுத்தால், ஐபேட் அல்லது ஆண்ட்ராய்ட் டேப்ளட் வாங்குவதைத் தள்ளிப் போட வேண்டும்.

ஆனால், என்றாவது ஒரு நாளில், அனைத்து சாதனங்களிலும் செயல்படும் வகையில், இந்த ஆபீஸ் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


2012 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்
கடந்து போன 2012 ஆம் ஆண்டினைத் திரும்பிப் பார்த்தால், எத்தனை டிஜிட்டல் அதிசயங்கள் நடந்தேறி இருந்தன என்ற வியப்பு நம்மை நிச்சயம் சூழ்ந்து கொள்ளும். 

இவற்றில் அதிக அதிசயத்தைத் தந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் தான். அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, 2012 ஆம் ஆண்டு, அதன் சாதனைகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடையும் ஆண்டாகவே அமைந்தது. 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முற்றிலும் புதிய முறையில் வடிவமைத்து, யாரும் எதிர்பாராத வகையில் வசதிகளைக் கொண்டதாக விண்டோஸ் 8 தொகுப்பினை வழங்கியது. பயனாளர்களுக்கான யூசர் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் வியப்பினையும், வேகச் செயல்பாட்டினையும் வழங்கியது. 

குறிப்பாக அதன் தொடுதிரை இயக்கம், நாம் அனைவரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தன் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் வழங்கி, டிஜிட்டல் பாதையில், இன்னும் ஒரு வெற்றி மைல்கல்லினை மைக்ரோசாப்ட் அமைத்தது. 

விண்டோஸ் ஆர்.டி. என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏ.ஆர்.எம். கட்டமைப்பிலும் இயங்கி, இரு வேறு வகையான சாதனங்களிடையே ஒருங்கிணைப்பினைத் தந்தது. 

அடுத்ததாக, விண்டோஸ் போன் 8 மொபைல் சாதனத்தினையும் மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. பல புதிய வசதிகள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல புதிய கூடுதல் வசதிகளை அமைப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த போன் தந்தது. 

இதன் அமைப்பிற்கேற்ப, வடிவைக்கப்பட்ட நோக்கியா லூமியா 920 மற்றும் எச்.டி.சி. 8 எக்ஸ் மொபைல் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை ஆகி, மக்களின் வரவேற்பை உறுதி செய்து வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மக்கள் பதிப்பாகிய, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புதிய தொகுப்பும் 2012ல் வெளியானது. இது இன்னும் விற்பனைச் சந்தைக்கு வரவில்லை என்றாலும், பயனாளர்கள் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

பல லட்சக்கணக்கானவர்கள் இதனைப் பயன்படுத்தி, இதில் இன்னும் மேற்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆபீஸ் தொகுப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வரும் மற்ற தொகுப்புகளுடன் எளிதில் இணைந்து செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும், அனைவரும் எளிதில் பெற்று பயன்படுத்தும் வகையில், இதன் உரிமம் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பாகும். 

மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் ஹார்ட்வேர் பிரிவிலும் சிறப்பாக இயங்க முடியும் என்பதனை 2012ல், சர்பேஸ் ஆர்.டி. என்னும் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ஒரு சாப்ட்வேர் நிறுவனமாகத் தன்னை 

முன்னிறுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட், டிஜிட்டல் உலகில் சேவை மற்றும் ஹார்ட்வேர் நிறுவனமாகவும் இந்த ஆண்டில் தடம் பதித்துள்ளது. 

சர்பேஸ் ஆர்.டி. என்னும் இந்த டேப்ளட் பிசியின் செயல்பாடுகள், முற்றிலும் புதிய முறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளன. இதன் மிகச் சிறந்த வடிவமைப்பு இன்னும் பலரை வியக்க வைக்கிறது. 

மிக மிகக் குறைவான அளவில் தடிமன் கொண்ட இதன் கீ போர்டு, இதுவரை டிஜிட்டல் உலகம் பெற்றிராத ஒன்று. அது மட்டுமின்றி, அதனை விலக்கி, டேப்ளட் பிசிக்கான பாதுகாப்பு மேல் மூடியாகவும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தான் ஏற்கனவே வழங்கி வரும் சேவைகளிலும் பல புதிய திருப்பங்களை மைக்ரோசாப்ட் 2012ல் ஏற்படுத்தியது. 

அதில் முதன்மையானது ஸ்கை ட்ரைவ். இதில் பல்வேறு நுன்மையான வசதிகளை ஏற்படுத்தி, மேம்படுத்தி, சிறந்த க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவாக ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன், அதன் மற்ற சேவைகளுடன் இதனை முற்றிலுமாக ஒருங்கிணைத்துத் தன் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான, முழுமையான சேவை வசதிகளைத் தந்தது. அடுத்ததாக, மிக நம்பிக்கை வைத்து, கூடுதல் வசதிகளைக் கொண்டதாக அளித்த சேவை எக்ஸ்பாக்ஸ் மியூசிக் சாதனமாகும். 

இசையைப் பொறுத்த வரை, தன் முடிவான ஒரு சாதனமாக இதனை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இன்டர்நெட்டில் இசைக் கோப்புகளை ஒருங்கிணைக்க எளியதாகவும், அதிக திறனுடன் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. 

ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்குத் தேவையானதை, தாங்கள் விரும்புவதனை இன்டர்நெட் வழியே பெற இது வழி செய்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஆண்டில் தந்த புதிய சேவையாக அதன் அவுட்லுக் டாட் காம் சேவையைக் கூறலாம். 

இது இறுதியான சேவையாக இருந்தாலும், புதியதாகப் பல மாற்றங்களைக் கொண்டதாக இதனை மைக்ரோசாப்ட் புதுப்பித்து வழங்கியது. தன் ஹாட்மெயில் தளத்தினை முற்றிலுமாக நீக்கிவிட்டு, தொடக்கத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் மின்னஞ்சல் சேவைத் தளத்தை மாற்றி அமைத்துள்ளது. 

புதியதாகவும், பயன்படுத்த எளியதாகவும், கூடுதல் பாதுகாப்பு கொண்டதாகவும் அமைத்துத்தரப்பட்ட இந்த மின்னஞ்சல் சேவைக்கு, மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அளவில் வரவேற்பினைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து சாப்ட்வேர் பிரிவில் மன்னனாக இயங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, 2012 ஆம் ஆண்டு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிலான ஆண்டாக இருக்கும். 

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் மொபைல் பிரிவிலும் சாதனங்களைக் கொண்டு வந்த இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் முக்கிய சாதனைக் கற்களைப் பதித்த ஆண்டாகும்.


மூடப்பட்டது மோட்டாரோலா


பன்னாட்டளவில், மொபைல் போன் விற்பனையில் இயங்கி வரும் மோட்டாரோலா நிறுவனம், இந்தியாவில் தன் வர்த்தகத்தினை மூடி விட்டது. இந்தியாவில் தன் இணைய தளத்தை முடிவிற்குக் கொண்டு வந்தது. 

சென்ற ஆகஸ்ட் மாதம், தான் இனி எந்த புதிய மொபைல் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை என, இந்நிறுவனம் அறிவித்தது. 

இருக்கின்ற மொபைல் போன்கள் விற்பனையாகும் வரை தன் வர்த்தகம் நீடிக்கும் எனவும் அறிவித்தது.

மொபைல் போன் வர்த்தகத்தில், ஆசியா கண்டத்தில் மட்டுமின்றி, உலக அளவில், இந்தியா மிகப் பெரிய அளவில் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

பல பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் எந்த அளவில் தங்கள் வர்த்தகத்தில் விரிவாக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடும் நேரத்தில், இந்தியாவில் தன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளும் முதல் பன்னாட்டு நிறுவனமாக, மோட்டாரோலா உள்ளது. 

மோட்டோ ரேசர் என்ற மொபைல் மாடல் மூலம், 2005 ஆம் ஆண்டில், மோட்டாரோலா நிறுவனம், நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டது. 

ஆனால், அதன் பின்னர், அந்த அளவிற்கு ஆரவாரத்தைத் தர இயலவில்லை. 2009ல் தன் விநியோகஸ்தர்கள் கட்டமைப்பினை மூடியது.

தற்போது சந்தையில், மோட்டாரோலா நிறுவன மொபைல் போன்கள் அவ்வளவாகக் காணப்படவில்லை. 

தற்போது இந்நிறுவனத்தின் மொபைல் போன்களைக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து யாரிடம் சர்வீஸ் பெறுவது என விழித்துக் கொண்டுள்ளனர்.


2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்


பல நூறு கோடி டாலர் முதலீட்டில் தொடர்ந்து இயங்கும் தொழில் பிரிவு எது எனக் கேட்டால், சிறிதும் தயக்கம் இன்றி, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிக்கும் நிறுவனப் பிரிவினைச் சுட்டிக் காட்டலாம். 

கம்ப்யூட்டர்களில் நுழைந்து, பெர்சனல் தகவல்களையும், நிறுவனங்களின் முக்கிய தகவல்களையும் திருடி, அவற்றின் மூலம் பல கோடி டாலர் இழப்பினைத் தரும் வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இணையம் வழி பரவி வருகின்றன. 

எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தனி நபர்கள் இதில் பணத்தைச் செலவழிக்கத் தயங்குவதால், பல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் அடிப்படை வசதிகளைத் தரும் தொகுப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்கி வருகின்றனர். 

வரும் 2013 ஆம் ஆண்டில் நமக்கு உறுதியாகத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.

1. அவாஸ்ட்:

அண்மைக் காலங்களில் அவாஸ்ட் (avast!) ஆண்ட்டி வைரஸ், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமாகி வருகிறது. CNET நிறுவனத்தின் டவுண்லோட் தளத்தில், அவாஸ்ட் இலவச புரோகிராம் அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. 

இலவசமாகக் கிடைக்கும், ஏவிஜி மற்றும் அவிரா ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவச பதிப்பு தரும் வசதிகளில், SafeZone, Firewall மற்றும் Antispam தவிர அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன என்பதால், மக்கள் இதனை விரும்புகின்றனர். 

வைரஸ் புரோகிராம்களைத் தடுப்பது மட்டுமின்றி, இதன் செயல்பாட்டிற்கு மிகக் குறைந்த அளவே ராம் மெமரியை அவாஸ்ட் பயன்படுத்துகிறது. மேலும் பல கூடுதல் வசதிகள் (auto sandbox, boottime scan, remote assistance, nonannoying browser protection plugins, 8 different realtime shields and cloud reputation) இதில் தரப்பட்டுள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com/freeantivirusdownload

2. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் (avg antivirus):

பல ஆண்டுகளாக, இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு பயன்பாட்டில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தான் முதல் இடத்தில் இருந்தது. 

வைரஸ், கெடுதல் விளைவிக்கும் மின்னஞ்சல்கள், இணைய வழி வரும் வைரஸ் தாக்குதல்கள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு தருவதில் சிறப்பாக இயங்குகிறது ஏவிஜி ஆண்ட்டி வைரஸ். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அதன் யூசர் இன்டர்பேஸ் தளத்திற்கு ஏற்ற வகையில், இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் கிடைக்கிறது.

ஆனால், இதனை இன்ஸ்டால் செய்வது தான் சற்று சுற்றி வரும் வழியாக உள்ளது. முதலில் 4 எம்பி அளவிலான இன்ஸ்டலேஷன் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். 

அடுத்து 60 எம்பி அளவிலான வைரஸ் குறிப்புகளுக்கான குறியீடுகள் அடங்கிய பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். பின்னர் இவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். தனித்தனியாக இல்லாமல், மொத்தமாக செட் அப் செய்திடவும் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் தரப்படுகிறது. 

இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் பல டூல் பார்கள், மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கான கேள்விகள் வருவதனைப் பார்த்து, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பது நல்லது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://free.avg.com/inen/downloadfreeantivirus

3. ஆட் அவேர் ஆண்ட்டி வைரஸ் (AdAware Free Antivirus+):

ஒரு முழுமையான வைரஸ் எதிர்ப்பு புரோகிராமாக இது வளர்ச்சி பெற்றுள்ளது. அதனாலேயே, தற்போது மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராமில் உள்ள சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் இல்லை என்பது வருத்தம் தரும் தகவலாகும். இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://www. lavasoft.com/products/ad_aware_free.php

4. அவிரா (Avira):

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள், எந்த வழியில் நுழைந்தாலும், அந்த கெடுதல் புரோகிராமினைக் கண்டறிவதில், இது சிறந்த புரோகிராமாகக் கருதப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கவும், நிறுத்தவுமான பட்டன் மட்டுமே காட்டப்படுகிறது. 

இதனை இன்ஸ்டால் செய்தால், பிரவுசரின் மாறா நிலை தேடல் சாதனம் ASK.com என்பதாக மாற்றப்படுகிறது. தினந்தோறும் இதனை அப்டேட் செய்திடுமாறு கிடைக்கும் பாப் அப் செய்தி பலருக்கு எரிச்சலாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இது முதல் இடத்தில் இருந்தது. ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்களினால், தற்போது நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. இதனைப் பெற http://www.avira. com/en/avirafreeantivirus என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

5. ஸோன் அலார்ம் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால்:

வைரஸ் தடுப்பிற்கென இலவசமாக பயர்வால் தந்து வந்த ஸோன் அலார்ம், தற்போது முழுமையான ஆண்ட்டி வைரஸ் செயல்பாட்டினையும் கொண்டுள்ளது. இதற்கான வைரஸ் தடுப்பு தொழில் நுட்பத்தினை காஸ்பெர்ஸ்கி வழங்கியுள்ளது. 

பொதுவாக, அனைத்து இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், குறிபிட்ட அளவில் தான் பாதுகாப்பு வசதிகளை வழங்கும். கட்டணம் செலுத்தினால்தான், முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், ஸோன் அலார்ம் முழுமையான வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது. 

இதன் யூசர் இன்டர்பேஸ் மிக மிக எளிதானதாக உள்ளது. இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தும் செட் செய்திடலாம். http://www.zonealarm.com /security/enus/zonealarmfreeantivirusfirewall.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.

6. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials):

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அதன் விண்டோஸ் இயக்கத்தினைக் கட்டணம் செலுத்திப் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. 

அதுவும், கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாத போது இது கிடைக்கிறது. இதில் ஸ்கேன் மேற்கொள்ளப்பட வேண்டாம் என என்னும் பைல்களுக்கு விலக்கு அளிக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலும் இது தரப்படுகிறது. 

ஆனால், இதன் பெயர் அங்கு Windows Defender என உள்ளது. மைக்ரோசாப்ட் தரும் இந்த வைரஸ் எதிர்ப்பு புரோகிராம், அனைத்து வைரஸ்களுக்கும் எதிராகப் போராடும் என உறுதியாக நம்ப முடியாது. எனவே வேறு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினையும் வைத்து செயல்படுத்துவது நல்லது.

7. பண்டா க்ளவுட் ஆண்ட்டி வைரஸ் (Panda Cloud Antivirus):

வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு, க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காகவும் பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதலில் வந்தது இந்த தொகுப்பு. இலவசமாகவே இது கிடைக்கிறது. 

இதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள தேடல் சாதனம் மற்றும் ஹோம் பேஜ் ஆகியவற்றை இது மாற்றுகிறது. 

மேலும், டூல்பார்களையும் பதிக்கிறது. க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுபவர்களுக்கு இது தேவை. முழுமையான மற்ற வகை பாதுகாப்பிற்கு வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் இது கிடைக்கிறது.

8. ரைசிங் ஆண்ட்டி வைரஸ் (Rising Antivirus):

இது ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடைத்து வந்த இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன. 

பன்னாட்டு தொகுப்பு www.risingglobal.com என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் 2011 ஆம் ஆண்டு தொகுப்பு தான் வழங்கப்படுகிறது. இதன் சீன தளத்திற்குச் (www.rising .com.cn) சென்றால், V16 2012 என்ற அண்மைக் காலத்திய பதிப்பு கிடைக்கிறது. 

இருப்பினும், ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகவே இயங்குகிறது. 

இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பயன்படுத்த கிடைக்கின்றன. அவற்றின் பெயர்களையும், கிடைக்கும் தள முகவரிகளையும், ஒரு சில சிறப்புகளையும் இங்கு காணத் தருகிறேன்.

9. கிங்சாப்ட் ஆண்ட்டி வைரஸ் (Kingsoft Antivirus):

கடந்த 11 ஆண்டுகளாக இந்த சீன நிறுவனம் இயங்கி வருகிறது. வேறுபட்ட பல வசதிகளை இது தருகிறது. தள முகவரி: http://en. softonic.com/s/freekingsoftantivirus2011download

10: போர்ட்டி கிளையண்ட் (FortiClient):

நெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனமான Fortinet வழங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். 11 வகை செயல்பாடுகளை இது தருகிறது. தள முகவரி: http://www.forticlient.com/

11. அன்த்ரெட் (UnThreat):

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பிரிவில், 2011 முதல் செயல்படும் நிறுவனத்தின் தொகுப்பு. இன்ஸ்டலேஷன் செய்திட 100 எம்பி அளவிலான பைல்கள் தேவை. கிடைக்கும் தளம்: http://download.cnet.com/UnThreatFreeAntiVirus2013/30002239_475628288.html 

12. கொமடோ ஆண்ட்டி வைரஸ் (Comodo Antivirus):

ஆண்ட்டி வைரஸ் மற்றும் டிபன்ஸ் என இரு பிரிவுகளில் செயல்படுகிறது. புதிய வைரஸ்கள் வந்தாலும் அவற்றை வடிகட்டி எதிர்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. பெறுவதற்கு http://www.softpedia.com/get/Antivirus/ComodoAntiVirus.shtml என்ற முகவரிக்குச் செல்லவும்.

13. நானோ ஆண்ட்டி வைரஸ் (NANO AntiVirus)

ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் தொகுப்பு. தற்போது சோதனைத் தொகுப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் உள்ளது. 

தள முகவரி: 

http://www. nanoav.ru/index.php?option=com_content&view=article&id=4&Itemid=50&lang=en
இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து அதே திறனுடன் இயங்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இருப்பினும், இவை குறித்த ஆய்வு குறிப்புகளைப் படித்துப் பார்த்து பயன்படுத்தலாம்.


ஐ போனில் கூகுள் மேப்ஸ்


ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் Apple’s iOS 6 Maps வழங்கிய பின்னர், பல்வேறு பிரச்னைகளையும், வாடிக்கையாளர்களிடமிருந்து மோசமான பின்னூட்டுக்களையும் பெற்றது. இந்த பிரச்னையிலிருந்து, ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில், தன் கூகுள் மேப்ஸ் வசதியை கூகுள் மீண்டும் அளித்துள்ளது. 

இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் அதன் பின்னர் வந்த ஐ.ஓ.எஸ். சிஸ்டங்கள் கொண்ட ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், இதனைப் பெற்றுக் கொள்ளலாம். 

கூகுள் மேப்ஸ் சாதனத்தின் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன. மேப்பில் ஒவ்வொரு திருப்பத்திற்குமான குறிப்பு தருதல், தெருத் தோற்றத்தினைக் காட்டுதல், அருகே உள்ள இடங்கள் குறித்த தேடல் தகவல்கள் உட்பட, கூகுள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமான அனைத்து வசதிகளும், இதில் கிடைக்கின்றன. 

தன்னுடைய செய்தி தகவல் வலைமனையில், கூகுள் நிறுவனம், தன் மேப்ஸ் சாப்ட்வேர் எவ்வாறு மிகவும் துல்லியமாக இடங்களைக் காட்டுகிறது என அறிவித்துள்ளது. தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான எண்ணிக்கையில் அப்டேட் அமைக்கப்படுகின்றன. 

கூகுள் மேப்ஸ் பார்க்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், பயன்படுத்தும் சாதனத்தை ஒரு குலுக்கல் குலுக்கிவிட்டு, உடனடியாகக் காட்டப்படும் படிவம் மூலம், பிழைச் செய்தியினை அனுப்பலாம் என, கூகுள் அறிவித்துள்ளது. 

ஐ போனுக்குக் கிடைக்கக் கூடிய இலவச அப்ளிகேஷன்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அப்ளிகேஷன் கூகுள் மேப்ஸ் ஆகும். வெளியான சில நாட்களிலேயே முதல் இடத்தினைப் பிடித்தது கூகுள் மேப்ஸ். 

கூகுள் மேப்ஸ் குறித்த பின்னூட்டுக் கருத்துக்கள், சில மணி நேரங்களி லேயே 8,000 என்ற எண்ணிக்கையை எட்டின. அனைத்துமே, ஐந்து நட்சத்திர தகுதியை கூகுள் மேம்ப்ஸ் வசதிக்கு அளித்திருந்தன. 

ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தின் தரமான செயல் தன்மையினை குகூள் மேப்ஸ் வசதியிலும் பார்க்கலாம். நமக்குத் தேவையான இடம் குறித்த தகவல்களுக்கான கேள்வியை டைப் செய்தோ, குரல் மூலம் பேசியோ பெறலாம். 

குறிப்பிட்ட முகவரி, இடம், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் இடம் குறித்து தெளிவாகத் தகவல்கள் கிடைக்கின்றன. நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்களா, வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களா, வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறீர்களா எனக் குறிப்பிட்டு, அதற்கேற்ற வகையில் பதில் பெறலாம்.

ஐபேட் சாதனத்திற்கென தனியே கூகுள் மேப்ஸ் வெளியிடப்படவில்லை. ஆப்பிள் சாதனங்களுக்கென வெளியிடப் பட்டுள்ளவற்றையே இதிலும் பயன்படுத்தலாம். தொடக்கத்தில், ஆப்பிள் தன் போன்களுடன், கூகுள் மேப்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினையும் இணைந்தே தந்து வந்தது. 

பின்னர், தானும் மேப்ஸ் தயாரிக்க முடியும் என்று காட்ட, ஆப்பிள் மேப்ஸ் தொகுப்பினை உருவாக்கத் தொடங்கியது. சென்ற செப்டம்பரில், ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென தனியே மேப்ஸ் வசதி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரித்து வெளியிட்டவுடன், கூகுள் மேப்ஸை தன் ஸ்டோரிலிருந்து தூக்கி வெளியேற்றியது.

ஆனால், ஆப்பிள் தந்த மேப்ஸ் சாப்ட்வேர் எவ்வளவு தவறான தகவல்களைக் காட்டுகின்றன என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியவுடன், ஆப்பிள் தன் தவறினை உணர்ந்தது. மேப்ஸ் தவறான தகவல்களைத் தருவதால், பலர் குழப்பத்திற்கு ஆளாகின்றனர் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினர். எனவே தன் மேப்ஸ் வசதியை, ஆப்பிள் வாபஸ் பெற்றது. 

மக்களிடம் இதன் தலைமை நிர்வாகி டிம் குக் மன்னிப்பு கேட்டார். இப்போது கூகுள், ஐபோனுக்கான மேப்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினைச் சீர் செய்து அளித்ததன் மூலம், இதன் உதவிக்கு வந்துள்ளது. இப்போது, ஐபோன், ஐபாட் டச் 4ஜி, ஐ.ஓ.எஸ்.5 மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டங்களுக்கான கூகுள் மேப்ஸ் கிடைக்கிறது. 40 நாடுகளில், 29 மொழிகளில் இந்த மேப்ஸ் கிடைக்கிறது. இவற்றில் ஆங்கிலம், சீனம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிஷ், டச் மற்றும் ஸ்பேனிஷ் ஆகியவை அடங்கும். 

மேப்ஸ் சாப்ட்வேர் பிரச்னையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு, ஆப்பிள் நிறுவனம், அதன் சாப்ட்வேர் பிரிவின் தலைமை அதிகாரியை, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் கடிதத்தில் கையெழுத்திட்டு வெளியிடக் கேட்டது. மறுத்த அவரை, உடன் வெளியேற்றியது. 

இருந்தாலும், மேப்ஸ் விஷயத்தில் ஆப்பிள் தன் மூக்கை உடைத்துக் கொண்டது கொண்டதுதான்.


கம்ப்யூட்டரில் அன்றும் இன்றும்


புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம். 

மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம். சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.

பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். 

இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.

லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம். எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டரின் குழந்தைக்கான படுக்கை.

கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம். 

எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப். காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.


மூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்


பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. 

இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. 

பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில், விண்டோஸ் லைவ் மெஷ் முதலிடம் பெற்றிருந்தது. 

ஆனால், பின்னர், மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், ஸ்கை ட்ரைவ் என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. லைவ் மெஷ் மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 

தற்போது லைவ் மெஷ் வசதிகள் அனைத்தையும் ஸ்கை ட்ரைவில் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஸ்கை ட்ரைவிற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. 

வரும் பிப்ரவரி 13 முதல் லைவ் மெஷ் வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.லைவ் மெஷ் பயன்படுத்திய அனைவருக்கும் இது குறித்து தனித்தனியே மெயில் மெசேஜ் அனுப்பி, மைக்ரோசாப்ட் தான் எடுத்த முடிவினை அறிவித்தது. 

தற்போது 25,000 பேருக்கும் குறைவாகவே விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கை ட்ரைவ் வசதியினை 20 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. 

லைவ் மெஷ் மூலம், அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை தூரத்தில் இருந்து இயக்கும் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், ஸ்கை ட்ரைவில் அந்த வசதியினை மைக்ரோசாப்ட் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இந்த வசதியினை தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்பினை தான் வழங்கும் ரிமோட் டெஸ்க் டாப் தொடர்பினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், லைவ் மெஷ் வாடிக்கையாளர்கள் இதனை விரும்பவில்லை.


வேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. 

மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: 

மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. 

புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். 

அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். 

பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 

இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.


மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்


பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.

இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது. 

திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம். 

இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.


ஆப்பிள் சாதனங்களில் தமிழ்


விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. 

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. 

இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார். 

இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. 

தமிழ் மொழிக்குத் தன் சேவையாகவே இதனைக் கருதுகிறார். ஆப்பிள் சாதனங்களுக்கான தமிழ் தெரிந்து கொள்ளும் முன், தமிழ் மொழி ஏன் மிகத் தாமதமாகவே கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம். 

கம்ப்யூட்டர் பயன்பாடு தொடங்கிய காலத்திலிருந்து, ஆங்கிலம், அதுவும் அமெரிக்க ஆங்கிலமே அதன் மொழியாக இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு, ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளும், கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய கட்டாயத்தினைக் கொண்டு வந்தன. 

இதனை அடுத்து, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூடப் பயன்படுத்தாத நாடுகளின் மொழிகள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு நாடுகளின் மொழிகள், கம்ப்யூட்டரில் இடம் பெற்றன. 

இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கியதால், மாநில மொழிகள் தேவை முதல் கட்டத்தில் இல்லாமல் இருந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போல, அரசு, நம் மொழிகள் கட்டாயமாக கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை. 

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தன. இந்திய மாநில மொழிகள், 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே செம்மைப் படுத்தப்பட்டன. பல்வேறு காரணங்களால், தமிழ் இடம் பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. 

கம்ப்யூட்டர் வல்லுநரான தமிழர்கள், அவரவர் எண்ணப்படி பலவகைகளில் தமிழ் மொழி பயன்பாட்டினைக் கொண்டு வந்தனர். இன்று தமிழ் மொழி பயன்பாடு, யூனிகோட் என்ற வகையில், ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சில சொந்த காரணங்களுக்காக, தமிழ் இன்னும் பல முகங்களில் கம்ப்யூட்டரில் இடம் பெற்று வருகிறது. 

இது சாதாரணப் பயனாளர், எளிமையாகத் தமிழைப் பயன்படுத்தத் தடையாக உள்ளது. இந்தக் குழப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல இயலவில்லை.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பயன்படுத்த மெல்லினம் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. தமிழில் மெல்லினம், வல்லினம் மற்றும் இடையினம் என மெய்யெழுத்துக்கள் பிரிவிற்குப் பெயர்கள் இருப்பதைப் போல, டிஜிட்டல் தமிழை, குறிப்பாக மொபைல் சாதனங்களுக்கான தமிழை, மெல்லினம் என, இதனைத் தயாரித்தவர் பெயரிட்டுள்ளார்.

மொபைல் போனில் தமிழ் என்றவுடன், நமக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திதான் நினைவுக்கு வரும். மொபைலில் தமிழ் பெற, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருமே, தமிழ் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்க வேண்டும். செல்லினம் ஆப்பிள் சாதனங்களில் இயங்க, ஐ.ஓ.எஸ்.4 (iOS4) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். 

இது இல்லாதவர்கள், ஐ போன் 3ஜி, ஐபோன் 3ஜி எஸ் மற்றும் ஐபாட் டச் வைத்திருப்பவர்கள், இலவசமாகவே இதனை அப்கிரேட் செய்து கொள்ளலாம். http://www.apple.com/ iphone/softwareupdate/ என்ற முகவரியில் உள்ள தளத்தில், இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, ஐட்யூன்ஸ் சாப்ட்வேர் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து, அதற்கான அக்கவுண்டினைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், கீழே உள்ள லிங்க் நமக்குத் திறக்கப்பட்டு, செல்லினம் மென்பொருள் கிடைக்கும். 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்த பின்னர், http://www.iphoneappshome. com/sellinamiphone337936766.html என்ற ஆப்பிள் நிறுவன இணையதளத்திற்குச் சென்று, செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளலாம். 

http://download. cnet.com/Sellinam/300012941_475091250.html என்ற முகவரியிலும் இந்த மென்பொருள் கிடைப்பதாகக் கூகுள் தேடுதளம் தகவல் தரும். இங்கு சென்றாலும், முதலில் சொல்லப்பட்ட ஆப்பிள் இணைய தளத்திற்குத் தான் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். 

இந்த மென்பொருளை, ஆப்பிள் சாதனங்களில் பதிவதும் எளிதே. தற்போது செல்லினம் பதிப்பு 3.0 கிடைக்கிறது. பைலின் அளவு 1.7 எம்.பி. இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. 

இதனைப் பயன்படுத்தும் வழிகளை http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/usermanual.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியலாம். செல்லினம் மென்பொருளுக்கென இயங்கும் தளத்திலும் (http://sellinam.com/) வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன. 

செல்லினம் மூலம், நாம் தமிழில் செய்திகளை அமைத்து அனுப்பலாம். இதில் அமைக்கப்பட்ட செய்திகளை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் அமைக்கலாம். போனடிக் எனப்படும் (ஆங்கில) ஒலி அடிப்படையில் இதன் கீ போர்டு இயங்குகிறது. இதனை பதிந்து வைத்திருந்தால், சில நூல்களையும், இலக்கியங்களையும் படிக்கலாம். 

செல்லினம் தவிர, தமிழர்களிடையே பிரபலமான, ஆங்கிலம்- தமிழ், லிப்கோ அகராதியும், ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படும் வகையில் தரப்படுகிறது.ஆனால், இதனைப் பெற 5 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இதனையும் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில், http://itunes.apple.com/ app/lifcosellinamtamildictionary/id391740615?mt=8 என்ற முகவரியில் பெறலாம். இந்த அகராதியில், சொற்களைத் தேடிப் பெரும் வசதி தரப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா


மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியா, இந்த வகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு ஆண்டு இதன் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இணையத்தில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் கொண்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், இதுவரை 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தில் பிரேசில், அடுத்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. 

இந்தியாவில், மொத்த மொபைல் போன்களில் 4% என்ற அளவில் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இதனால், ஆண்டுக்கு ஆண்டு 52% என்ற அளவில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த வளர்ச்சி சீனா மற்றும் அமெரிக்காவினைக் காட்டிலும் அதிகமாகும். உலக அளவில், தற்போது நூற்றி பத்து கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில், தற்போது ஐபேட் விற்பனை ஆறு மடங்காக அதிகரித்து வருகிறது. ஐ போன் விற்பனையைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இதன் விற்பனை உள்ளது.

இணையப் பயன்பாட்டினைப் பொருத்த வரை, 2008–12 ஆண்டுகளில் 8.8 கோடி பயனாளர்கள் இருந்த நிலையில், இப்போது 13 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 26% இந்தப் பிரிவு வளர்ந்துள்ளது. 

இந்த வகையில் சீனா முதல் இடத்தில், மொத்தம் 53 கோடியே 80 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். மொத்த ஜனத்தொகையில் 40% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 

இந்தியாவில் இணைய ஜனத்தொகை, மொத்த ஜனத்தொகையில் 11% மட்டுமே. 

பன்னாட்டளவில் இணையப் பயன்பாட்டினையும், மொபைல் பயன்பாட்டினையும் ஆய்வு செய்த மேரி மீக்கர் என்ற ஆய்வாளர் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.


கேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது

பிரபலமான ஹோட்டல்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலம், கம்ப்யூட்டர் களைத் தாக்கும் கேமரூ எனப்படும் மால்வேர் இந்தியாவில் 1.89 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில் பரவி உள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால், அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள், தங்கள் மெயில் லிஸ்ட்டில் இந்த மால்வேர் கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு பலியாகிறார்கள். 

இந்த மால்வேர், அஞ்சல்களில் உள்ள, தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. 

இந்த மால்வேர் BKDR_ANDROM.P என்ற பைல் பெயரில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

ட்ரெண்ட் மைக்ரோ இதற்கான பாதுகாப்பினைத் தருகிறது. மேலே குறிப்பிட்ட பைலைக் கண்டறிந்து அழிக்கிறது.


விண்டோஸ் 8க்கான விண்ஸிப்


1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. 

பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. 

iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான். 

பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. 

பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது. 

மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


IPAD அப்ளிகேஷன் புரோகிராம்கள்


புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. 

எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. ட்ராப் பாக்ஸ் (Dropbox):

க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். 

இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.

2. பிளிப் போர்ட் (Flipboard):

உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple. com/us/app/flipboardyoursocialnews/id358801284?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. பேஸ்புக் (Facebook):

நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப் பெற இணைய தளத்தில் https://itunes.apple.com/us/app/facebook/id284882215?mt=8 என்ற முகவரிக்குச் செல்லவும். 

4. எய்ம் (AIM for IPAD):

பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது. 

இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். 

இதுவும் இலவசமே. இதனைப்பெற https://itunes. apple.com/us/app/ aimforipad/id364193698?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


மொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது


மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்களின் மாநிலத்தைவிட்டு, அடுத்த மாநிலத்தில் அவற்றைப் பயன்படுத்துகையில், அதற்கான ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது நீக்கப்படும் என முன்பு அரசு அறிவித்தது.

இதற்கான பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து, மார்ச் மாதம் முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நாட்டின் எந்த பகுதிக்குச் சென்று ஒருவர் தன் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், அது உள்ளூர் அழைப்பாகவே கருதப்படும். 

இதுவரை வெளி மாநிலங்களில் இருக்கும்போது அழைப்பு வந்தால், வரும் அழைப்பிற்கு, அழைப்பு பெறுபவரும் கட்டணம் செலுத்த வேண்டும். இனி, இது நீக்கப்படுகிறது. எப்படி, உள்ளூர் அழைப்புகளைப் பெறுபவர், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்தத் தேவையில்லையோ, அதே போல கூடுதல் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

இதே போல, ஒருவர் எண்ணை மாற்றாமல், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்திற்கு மாறும் வசதியில் உள்ள சில தடைகள் நீக்கப்படுகின்றன. இப்போது ஒருவர் தான் வாங்கியுள்ள இணைப்பு உள்ள இடத்தில் இயங்கும், 

மற்றொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மட்டுமே மாறிக் கொள்ள முடியும். இனி, ஒரு நிறுவனத்திடம் எண் மற்றும் சேவை பெற்ற ஒருவர், வேறு எந்த மாநிலத்திற்கு மாறினாலும், அந்த மாநிலத்தில் அந்த மொபைல் சேவை நிறுவனம் இல்லை என்றாலும், வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம்.


காலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக சோனியின் எக்ஸ்பீரியா ஓடின்


ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் காலக்ஸி வரிசை போன்களுக்குப் போட்டியாக, ஒரு ஸ்மார்ட் போனைக் கொண்டு வர சோனி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதன் தற்போதைய பெயர் எக்ஸ்பீரியா ஓடின் (Xperia Odin).இதுவே இறுதியான பெயராகவும் இருக்கலாம்.

எச்.டி. டிஸ்பிளே கொண்ட ஐந்து அங்குல திரை, 1.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட், 2 ஜிபி ராம் மெமரி, 13 எம்.பி. கேமரா, 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பு அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் சிஸ்டம் தரப்படலாம்; விண்டோஸ் போன் 8 ஓ.எஸ். அனைவராலும் விரும்பப்பட்டால், அதனை சிஸ்டமாக அமைக்கும் திட்டமும் சோனியிடம் உள்ளது. 

இந்நிறுவனத்தின் மிகச் சிறந்த மொபைல் போனாக இந்த போன் இடம் பெறும் என சோனி நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். வரும் 2013 மொபைல் கருத்தரங்கில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை


சென்ற அக்டோபர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப் பட்டுள்ளது. 

"எங்கள் நிறுவனத்தின் ஒரு மிகச் சிறந்த வெற்றி தயாரிப்பாக இது தடத்தைப் பதித்து வருகிறது'' என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியும், நிதி அலுவலருமான டாமி ரெல்லர் தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் 7 வெளியான போது இதே போல ஒரு வரவேற்பினைப் பெற்றது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளியான காலநிலை மற்றும் சிஸ்டங்களின் செயல்பாட்டு நிலை வேறு வேறானவையாகும். 

விஸ்டாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த மக்கள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்தக் குறைகளைத் தீர்க்கும் என நம்பிக்கை வைத்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பிரியத்துடன் வரவேற்றனர். 

ஆனால், விண்டோஸ் 8, முற்றிலும் ஒரு மாறுதலான இயக்கச் சூழ்நிலையைத் தர இருப்பதனைக் காட்டியதால், மக்கள் ஆர்வத்துடன், தாங்களாகவே முன் வந்து இதனைப் பெற்றுள்ளனர். 

இதே போல, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் டாட் காம், மீண்டும் வெளியிடப்பட்டதில், அதற்கு 2 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்திருப்பதாகவும் டாமி ரெல்லர் கூறினார். 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சார்ம்ஸ் மற்றும் ஸ்டார்ட் பயன்பாடு பரவலாக உள்ளதெனவும், மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன் ஸ்டோரினை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதனையும் குறிப்பிட்டார். 

பயனாளர்கள் சராசரியாக, 19 டைல்ஸ்களை விண்டோஸ் 8 ஸ்டார்ட் திரையில் புதியதாக இணைத்து வருகின்றனர். இது வாடிக்கையாளர்கள், புதிய சிஸ்டத்தின் இயக்கத்தினைப் புரிந்து கொண்டு, இணைந்து செயல்படுவதனைக் காட்டுகிறது. 

விண்டோஸ் 8 வெளியான பின்னர், இதற்கான ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது. நவம்பர் இறுதியில், இதன் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. (சரியாக 20,610) விரைவில் இதனை ஒரு லட்சமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்டோஸ் 95 சிஸ்டம் தொகுப்பிற்குப் பின்னர், விண்டோஸ் 8 தான், மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கும் மிகப் பெரிய திட்டமாகும். மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும், விண்டோஸ் 8 முற்றிலும் புதிய மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது. 

ஸ்டீவன் சிநோப்ஸ்கி மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர், அவரின் சில பணிகளை ரெல்லர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.


சத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114


சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா மொபைல் போன் வரிசையில்ஆஷா 205 மற்றும் 206 போன்களை அறிவித்து அறிமுகம் செய்தது. 

ஆனால், அதே நேரத்தில், தன் இந்திய இணைய தளத்தில், நோக்கியா 114 என்ற மொ பைல் போனையும் அறிமுகப் படுத்தியுள்ளது. நோக்கியா 114, இரண்டு சிம்களில் இயங்குகிறது. 

போகிற போக்கில், பேஸ்புக் தளத்தினை அணுகி இயக்க, தனி கீ தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்தில் உள்ளது. நோக்கியா பிரவுசர் இணைக்கப்பட்டுள்ளது. 

புளுடூத் 2.1, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பினைத் தருகின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 

இதன் உள் நினைவகம் 16 எம்பி. இதன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டதாக உள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். 

டிக்ஷனரி, டிஜிட்டல் கடிகாரம், ரெகார்டர், கால்குலேட்டர் போன்ற தனி நபர் விரும்பும் வசதிகள் பல இதில் தரப்பட்டுள்ளன. 

0.3 எம்பி திறனில் இயங்கும் கேமராவும் இதில் உள்ளது.இதன் விலை குறித்து கேட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என நோக்கியா நிறுவன விற்பனைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes