இணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்


சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு போல இணையம், இன்றைய உலகையும் நம்மையும் கட்டிப் போட்டுள்ளது. இணையம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. 

நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும். இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது. 

நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம். 

இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே. அவர்களை இங்கு காணலாம்.


1. விண்ட் செர்ப் மற்றும் பாப் கான் (Robert Elliot “Bob” Kahn and Vinton G. Cerf): 

இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான் இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இயங்கிய பொறியாளர்கள். கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள். இணையத்தின் கட்டமைப்பான Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP), என்பதனை வடிவமைத்தவர்கள். 


2. டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee): World Wide Web (WWW) என்னும் கட்டமைப்பை உருவாக்கியவர். 

3. லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds): பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிற்கு அடிப்படையை அமைத்தவர். யூனிக்ஸ் சிஸ்டம் குறித்து பல்கலையில் படித்த பின்னர், லினக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பினை தன் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றவர். 

1991ல் இதனை வெளியிட்ட பின்னர், பல லட்சக் கணக்கானவர்கள் இன்று வரை இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பலரால் இது மேம்பாடு அடைந்துள்ளது. சாதாரண சர்வர்கள் முதல், மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றின் இயக்க முறைமையாக லினக்ஸ் இயங்கி வருகிறது. 


4. ராஸ்மஸ் லெர்டோர்ப் (Rasmus Lerdorf) டேனிஷ் நாட்டைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடிமகன். பொறியாளர். இன்று இணைய தளங்களில் பயன்படும் PHP ஸ்கிரிப்டிங் மொழியை அதன் வேரிலிருந்து அமைத்துக் கொடுத்தவர். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பத்து லட்சம் இணைய சர்வர்களை இது இயக்குகிறது. PHP என்பது முதலில் Personal Home Page என்பதன் சுருக்கமாக இருந்தாலும், இப்போது PHP Hypertext Preprocessor என அழைக்கப்படுகிறது. 


5. ரா தாமஸ் பீல்டிங் (Roy Thomas Fielding): அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி. HTTP என்பதனை வரையறுத்து வடிவமைத்துத் தந்தவர். கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர் என்னும் பிரிவில் ஒரு தலைமை விஞ்ஞானி.


6. ஹக்கான் வியூம் லீ (Håkon Wium Lie): ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை விஞ்ஞானி. இணைய பொறியாளர்களில் முன்னணியில் செயலாற்றியவர். Cascading Style Sheets (CSS) என்ற கோட்பாடினைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர்.


7. ரே டாம்லின்ஸன் (Ray Tomlinson): மின் அஞ்சலின் தந்தை எனப் போற்றப்படுபவர். 1971ல் ARPANET கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், முதன் முதலில் மின் அஞ்சலை இயக்கிக் காட்டியவர். 


8. ராபர்ட் டப்பான் மோரிஸ் (Robert Tappan Morris): இணையத்தில் முதல் வைரஸ் என அழைக்கப்படும் மோரிஸ் வோர்ம் என்ற வைரஸை உருவாக்கியவர். இது 1988ல் நடந்தது. கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர்.


9. டாம் ஆண்டர்சன் (Tom Anderson): முதல் சோஷியல் இணைய தளமான மை ஸ்பேஸ் (“My Space”) என்பதனை உருவாக்கியவர். 2003ல் இது உருவாக்கப்பட்டது.


10. ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales): விக்கிபீடியா தளத்தினை உருவாக்கியவர். இந்த கட்டற்ற இணைய வெளி கலைக் களஞ்சியத்தை, 2001 ஆம் ஆண்டு ஜனவரி 15ல், இவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்போதும் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.


11. ஷான் பேனிங் (Shawn Fanning): பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் நேப்ஸ்டர் என்னும் கட்டமைப்பினை வரையறை செய்து 1998ல் வழங்கியவர்.


12. பிராம் ஹோஹன் (Bram Cohen): P2P பிட் டாரண்ட் பைல் ஷேரிங் அமைப்பினை உருவாக்கித் தந்தவர். 


13. ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): அமேஸான் டாட் காம் என்னும் உலகின் பிரபலமான இணைய வர்த்தக தளத்தினை உருவாக்கியவர். இணைய வழி வர்த்தகத்தின் மாடல் இயக்கமாக இன்றும் பின்பற்றப்படும் வர்த்தக இணைய தளம்.


14. மார்க் ஸுக்கர் பெர்க் (Mark Zuckerberg): Mark Elliot Zuckerberg என்ற பெயர் கொண்ட இவர், பேஸ்புக் இணைய தளத்தை வடிவமைத்த ஐந்து பொறியாளர்களில் தலைமையானவர். பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. நூறு கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டு, உலகின் முதல் இடத்தில் இயங்கும் சமூக இணைய வலைத் தளம் பேஸ்புக் என்பது சொல்லத் தேவையற்ற தகவல்.


15. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page & Sergey Brin): உலகின் மிகப் பெரிய தேடுதல் தளமான கூகுள் டாட் காம் உருவாக்கிய கம்ப்யூட்டர் மற்றும் இணைய வல்லுநர்கள். பின்னர், கூகுள் நிறுவனம் பல பிரிவுகளைத் தொடங்கி இணையத்தைத் தன் வசப்படுத்தி வருகிறது. தற்போது மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் தந்து வருகிறது. எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி, உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனமாக கூகுள் இயங்கி வருகிறது.


ஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா?ஹார்ட் ட்ரைவ் திடீரென செயல் இழந்து நின்று போவது அடிக்கடி நிகழும் ஒன்றாக இல்லை என்றாலும், நிச்சயமாய் ஏற்படும் இது போன்ற நிகழ்வு, நம் வேலைகளை முடக்கிப் போடும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தவிர்க்க, நன்றாக ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, புதிய ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்கலாமா? 


இந்த பயம் பலரின் மனதில் உள்ளது. இருப்பினும் ஹார்ட் ட்ரைவ் மாற்றுவது சற்று பணச் செலவு ஏற்படுத்தும் என்பதால், ஹார்ட் ட்ரைவ் மாற்றும் வேலையை அடிக்கடி மேற்கொள்வது பலரால் முடியாத காரியம். 

எனவே, ஹார்ட் டிஸ்க் செயல் இழக்கும் நிலையை முன் கூட்டியே அறிய சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 

முதலாவதாக, ஹார்ட் டிஸ்க் பராமரிப்பு சோதனை ஒன்றை அவ்வப்போது செயல்படுத்தலாம். இதனை S.M.A.R.T. என அழைப்பார்கள். இதனை விரித்தால், Self Monitoring Analysis and Reporting Technology எனக் கிடைக்கும். தானாகச் சோதனை செய்து, தன் செயல்பாடு பற்றிய குறிப்புகளை வழங்குவது என்று இதற்குப் பொருள். 

இந்த சோதனையை மேற்கொண்டால், ஹார்ட் ட்ரைவில் மோசமான நிலை ஏதேனும் ஏற்பட்டுள்ளதா எனவும், அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறதா எனவும் காட்டப்படும். Active@ என்னும் நிறுவனம் Hard Disk Monitor என்னும் புரோகிராமினை இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்காக வடிவமைத்து வழங்குகிறது. 

இதனைப் பயன்படுத்தி, ஹார்ட் டிஸ்க்கின் S.M.A.R.T. நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம். இதனை http://www.diskmonitor. com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெற்றுப் பயன்படுத்தலாம். 14 நாட்கள் மட்டுமே இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். 

இரண்டாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹார்ட் டிஸ்க்கின் வாழ்நாளைக் குறைக்கும் சில விஷயங்களில் கவனம் செலுத்து வதாகும். குறிப்பாக, இந்த வகையில் வெப்பம் உருவாவதையும், மின் சக்தி தடுமாற்றத்தினையும் கூறலாம். 

வெப்பம் உருவாவதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் உள்ளாக, தூசு தொடர்ந்து படிவதாகும். பூச்சிகள் மற்றும் மனிதர்களின் உரோமத் துண்டுகள் சென்று இந்த தூசியுடன் இணைந்து, ஒரு படிமமாக படர்வது, வெப்பத்தினை வெளியேற விடாமல் தடுத்து, ஹார்ட் ட்ரைவின் செயல் தன்மையைப் படிப்படியாகக் குறைந்துவிடும். 

எனவே குறிப்பிட்ட காலத்தில், ஹார்ட் டிஸ்க், அதன் மேலாகவும், அருகேயும் அமைக்கப்பட்டுள்ள சிறிய மின்விசிறிகள், சர்க்யூட் போர்ட் மற்றும் பிற உதிரி பாகங்களில் சேர்ந்து கொள்ளும் தூசுகளை, அழுத்தமான காற்றினை வெளிப்படுத்தும் சிறிய சாதனங்கள் மூலம் வெளியேற்ற வேண்டும். 

இவ்வாறு செய்திடுகையில், தண்ணீர் ஈரம் அல்லது வேறு வகையான திரவத் துளிகள், கம்ப்யூட்டரின் உள்ளாகச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கம்ப்யூட்டரின் பாகங்களைத் தொடும் முன், நம் உடம்பில் உள்ள ஸ்டேட்டிக் மின் சக்தியை வெளியேற்றிவிட்டுத் தொட வேண்டும். 


மின்சக்தி இடையூறின்றி, தொடர்ந்து ஒரே அளவில், கம்ப்யூட்டருக்குக் கிடைப்பது அவசியமான தேவையாகும். இதற்கு நல்ல தன்மை உள்ள பேட்டரிகள் கொண்ட யு.பி.எஸ். போன்ற சாதனங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் திடீரென ஏற்படும் மின்சக்தி தடை தடுக்கப்படும். 

இதனால், ஹார்ட் ட்ரைவில் எழுதி அல்லது படித்துக் கொண்டிருக்கும் ஹெட் மற்றும் ட்ரைவ் பழுதாவது தடுக்கப்படும். இப்போது வரும் ஹார்ட் ட்ரைவ்கள், மின்சக்தி தடை ஏற்படுகையில், தாமாகவே இயங்காத பாதுகாப்பான நிலைக்குத் திரும்பிடும் வகையில் அமைக்கப்படுகின்றன. 

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலே குறிப்பிட்ட யு.பி.எஸ். போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதே நல்லது.


புளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்


வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. 

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. 

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. 

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. 

இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. 

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. 

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம். 

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. 

மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனை யும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். 

கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். 

இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.


புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். 

ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும். உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. 

ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.


விண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520


ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விற்பனை தளங்களின் மூலம், முதலில் இந்த போனுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டன. 

இந்த போனை வாங்குபவர்களுக்கு, முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1 ஜிபி இலவச 3ஜி டேட்டா தரவிறக்கம் செய்திட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

தற்போது ரிலையன்ஸ் காம் வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் தளங்களை இரண்டு மாதங்களுக்கு எந்தவித கால மற்றும் டேட்டா வரையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8 போன் வரிசையில், அனைவரும் வாங்கும் விலையில் வெளியான போன் லூமியா 520. இந்த ஆண்டு தொடக்கத்தில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இரண்டு பரிமாணத்தில் அமைந்த கடினமான கண்ணாடியில் அனைந்த நான்கு அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விண்டோஸ் 8 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 5 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, ஹை டெபனிஷன் வீடியோ பதிவினைத் தருகிறது. 

9.9. மிமீ தடிமன் கொண்டது. 512 எம்பி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்கை ட்ரைவில், 7 ஜிபி வரை டேட்டா ஸ்டோரேஜ் செய்திட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்ப டூல்களைக் கொண்டுள்ளது. இதன் 1430 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 9.6 மணி நேரம் பேச வாய்ப்பளிக்கிறது. 

மின்சக்தி 360 மணி நேரம் தங்குகிறது. மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.


ஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4


சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

சாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ஒரு சந்தையாக இந்தியா விளங்குகிறது. விலையைப் பொறுத்தவரை ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம். 

பனி படர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை என இரு மாடல்களில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக உள்ள, எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ரூ. 42,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 

இதற்கு முன்னர் வந்த காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் புதிய போனாக இருக்காது. 

முக்கியமான சில செயல்முறைகளில், அதற்கான பொருட் களில் உயர்நிலையில் உள்ளவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. 

ஆண்ட்ராய்ட் 4.1 இருந்த இடத்தில் ஆண்ட்ராய்ட் 4.2.2 தரப்படுகிறது. ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4 ப்ராசசருக்குப் பதிலாக, 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் எக்ஸைனோஸ் ப்ராசசர் உள்ளது. 

ராம் நினைவகம் 1 ஜிபியிலிருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.8 அங்குல கொரில்லா கிளாஸ் 2, ஐந்து அங்குல கொரில்லா கிளாஸ் 3 ஆக டிஸ்பிளே திரை உள்ளது. 

இதில் ஸ்டோரேஜ் வசதி 64 ஜிபி கொண்ட மாடலும் கிடைக்கிறது. 8 எம்பி / 1.9 எம்பி கேமராக்களுக்குப் பதிலாக, 13 எம்.பி/2 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள் இருக்கின்றன. 

2100 mAh திறன் கொண்ட பேட்டரிக்குப் பதிலாக, 2,600 mAh திறன் பேட்டரி இடம் பெறுகிறது.


விண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை


அண்மையில் தான் வெளியிட்ட பேட்ச் பைல் தொகுப்பில் உள்ள பைல் ஒன்றினை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடும்படி, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றினை வழங்கியுள்ளது. 

இந்த பைல், விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கும் போது, அடிக்கடி சிஸ்டம் கிராஷ் செய்தியினை வழங்குகிறது. இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் (‘Blue Screen of Death BSOD’) என பொதுவாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அழைப்பார்கள். 

இந்த செய்தி திரையில், நீல வண்ணக் கட்டத்தில், கம்ப்யூட்டர் இயங்க இயலா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, உடனடியாகக் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கக் கேட்டுக் கொள்ளப்படும். 

வேறு வழியே இல்லை; மீண்டும் இயக்கித்தான் ஆக வேண்டும். இந்த குறிப்பிட்ட பைல் இயக்கம், இது போல அடிக்கடி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட செய்தி தந்து கொண்டே இருப்பதாகத் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, மைக்ரோசாப்ட் தன் தவறான பைலை அன் இன்ஸ்டால் செய்திடும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

சென்ற ஏப்ரல் 8, வழக்கமான இரண்டாம் செவ்வாய்க் கிழமை அன்று, இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. இது வெளியான உடனேயே, இந்த பைலின் தவறான செயல்பாட்டினை உணர்ந்து கொண்ட மைக்ரோசாப்ட் இதனை தன் தளத்திலேயே சீர் செய்தது. 

ஆனால், ஆட்டோமேடிக் அப்டேட் முறையில், தானாகவே தங்கள் கம்ப்யூட்டர் அப்டேட் ஆகும் வகையில் செட் செய்தவர்களுக்கு, இந்த பிரச்னை உலகெங்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்கு ஏற்பட்டது. 

தொடர்ந்து அடிக்கடி, தங்கள் கம்ப்யூட்டர்களை ரீபூட் செய்திடும் நிலைக்கு ஆளாகி, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த இயலா நிலைக்குச் சென்றனர். 

சில கம்ப்யூட்டர்களில், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், ஹார்ட் டிஸ்க் சோதனையை இந்த பைல் இயக்கம் மேற் கொண்டது. இதனால், வேறு எந்தப் பணியினையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியவில்லை. 

இந்த பிரச்னையின் அடிப்படைத் தன்மையை யாராலும் அறிய இயலவில்லை. விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படை இயக்க குறியீடுகளை இந்த பேட்ச் பைல் குறுக்கிட்டு, இயக்கத்தின் தன்மையையே மாற்றியது. 

இதனால், பல கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல் தன்மையும் மாறியது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மைக்ரோசாப்ட் எச்சரிக்கையை உடனே வெளியிட்டது. 

ஆனாலும், மைக்ரோசாப்ட் வல்லுநர்களாலேயே இந்தப் பிரச்னையின் மூலத்தை அறிய முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கான முழு தீர்வினையும் தர இயலவில்லை. 

இது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://support.microsoft.com/kb/2839011 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகலாம்.


ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்


ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். 

இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தால் எந்தவித நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கூகுள் மெயில் தளத்தில் செட் செய்திட, வசதி தரப்பட்டுள்ளது. 

இந்த புதிய வசதி ‘Inactive Account Manager’ என்று அழைக்கப்படுகிறது. 

நம் கூகுள் அக்கவுண்ட் தளத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் வசதியாகும். கூகுள் தளத்துடனான நம் செயல்பாடு தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்களுக்கு இல்லா மல் போனால் மட்டுமே இது செயல் படுத்தப்படும். மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பன்னிரண்டு மாதங்கள் செயல் இல்லாமல் போனால், இந்த வசதியைச் செயல்படுத்துமாறு கூகுள் தளத்திற்கு நாம் செட் செய்து அறிவிக்கலாம். 

மரணம் மட்டுமல்ல, ஒன்றுமே செயல்பட முடியாமல் நாம் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றுச் சென்றாலும், இந்த வசதி செயல்படுத்தப்படும். இன்டர்நெட் இணைப்பே இல்லாத சூழ்நிலை உள்ள நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து கூகுள் தளம் தரும் வசதி எதனையும் பயன்படுத்தாமல் இருந்தாலும் இந்த வசதி செயல்படத் தொடங்கும். 

இதற்கான செட்டிங்ஸ் பக்கத்தில், நீங்கள் விரும்பினால், பத்து பேரின் பெயர்களையும், அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம். செயல்பட இயலாத காலம் கடந்தவுடன், இவ்வாறு பதிந்து வைப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு செய்தி ஒன்று உங்கள் அக்கவுண்ட் குறித்து அனுப்பப்படும். எந்த யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் மூலம், உங்கள் அக்கவுண்ட்டினை அணுகலாம் என்று காட்டப்படும். 

இவ்வாறு நம் வாரிசாக நியமிக்கும் நபர் களுக்கான மின்னஞ்சல் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும். கூகுள் இந்த எண் உள்ள தொலைபேசிக்கு சோதனை செய்திடும் குறியீட்டு எண்ணை அனுப்பும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் சேர்த்துள்ள டேட்டாவினை ஒரு கோப்பாக, இவ்வாறு நியமிப்பவர்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதியினையும் கூகுள் தருகிறது. 

பாதுகாப்பிற்காகவும், உங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் போனுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். ஜிமெயில் அல்லாத மற்ற மின் அஞ்சல் முகவரிக்கும் செய்தி அனுப்பப்படும். இந்த செய்தி, நீங்கள் வரையறை செய்திடும் காலம் முடிய, ஒரு மாதம் இருக்கையில் அனுப்பப் படும். இதன் மூலம் நாம்,பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தால், நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடர்ந்து உயிருடன் வைத் திருக்கும் வகையில் லாக் இன் செய்திடுவோம். இல்லையேல், ஒரு மாதம் கழித்து, நாம் நியமனம் செய்தவர்களுக்கு, கூகுள் தகவல் அனுப்பும்.

இந்த வசதி, கூகுள் தரும் பத்துவித சேவைகளில்(கூகுள் வாய்ஸ், மெயில், யு ட்யூப் போன்றவை) தரப்படுகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் இந்த சேவையினை, வெவ்வேறு கால வரையறையுடன் செட் செய்திடலாம்.


இந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7

கூகுள் நெக்சஸ் 7 டேப்ளட் இந்தியாவில் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் இதன் விலை ரூ.19,999 என அறிவிக்கப்பட்டாலும், இந்திய கூகுள் பிளே ஸ்டோர் இணைய தளத்தில், இதன் 16 ஜிபி மாடல் விலை ரூ.15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் இதன் விலை 237 டாலர் ஆக உள்ளது. 

இந்திய மதிப்பில் இது ரூ. 13,000 ஆகிறது. 16 சதவீதம் வரி செலுத்தப்பட வேண்டியதிருப்பதால், இங்கு விலை கூடுதலாக உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நேரடியாகவே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


கூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்

இந்தியாவில் தன் நெக்சஸ் 7 டேப்ளட் விற்பனைக்கு அறிமுகமாகும் நேரத்தில், கூகுள் அதன் கூகுள் பிளே ஸ்டோரில், இந்திய திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்திடும் வசதியை வழங்கியுள்ளது. 

இந்த திரைப்படங்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம்; அல்லது விலைக்கு வாங்கிப் பதிந்து வைத்தும் பார்க்கலாம். வாடகைக்கு கட்டணமாக, படத்தைப் பொறுத்து ரூ.80 முதல் ரூ.120 வரை வசூலிக்கப்படுகிறது. 

இந்தியா உட்பட, மொத்தம் 13 நாடுகளில் மட்டுமே, கூகுள் பிளே ஸ்டோர் இந்த வசதியை வழங்குகிறது. திடீரென கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா மீது அளவற்ற காதல் பிறந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னால், கூகுள் புக் ஸ்டோர் திறக்கப்பட்டது. இப்போது மூவி ஸ்டோர் கிடைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் சென்ற ஆண்டே, தன் ஸ்டோரை இந்திய மக்களுக்கு திறந்தது குறிப்பிடத்தக்கது


பட்ஜெட் போன் நோக்கியா 105


இந்தியாவில், ஏப்ரல் மாத இறுதியில், நோக்கியாவின் வண்ணத்திரை கொண்ட பட்ஜெட் மொபைல் போன், நோக்கியா 105 விற்பனைக்கு வர இருக்கிறது. 

சென்ற பிப்ரவரி மாதம் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் இது பற்றிய அறிவிப்பு வெளியானது. 

1.45 அங்குல வண்ணத்திரை, எப்.எம். ரேடியோ, நோக்கியா லைப் சப்போர்ட் ஆகியன இந்த போனில் கிடைக்கும். சென்ற ஆண்டு நோக்கியா நிறுவனம் வெளியிட்ட நோக்கியா 100 மற்றும் 101 போல இவை சந்தையைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதிலும் நோக்கியா சிரீஸ் 30 சிஸ்டம் உள்ளது. தொடர்ந்து 12.5 மணி நேரம் பேச முடியும். 35 நாட்களுக்கு இதில் மின்சக்தி தங்குகிறது. 

இதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், நோக்கியா தன் மாடல் 1280 போனை சந்தையிலிருந்து நீக்கிட முயற்சிக்கிறது. இந்த மாடல் போன், இதுவரை 10 கோடி விற்பனையாகியுள்ளது. 

இந்திய அரசு, ரூ.2,000க்குக் குறைவான விலையுள்ள மொபைல் போன்களுக்கு சுங்க வரி விதிப்பதில்லை. 

எனவே, மிகச் சொற்ப விலையில், நோக்கியா 105 போன்ற மாடல் போன்களை, அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. இறுதியாக இதன் அதிகபட்ச விலை ரூ.1249


பயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கி வருவதும் இந்த பிரவுசரில்தான். 

பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது. அதன் அளவை மாற்றுவது கூடச் சற்று கடினமான செயலாகும்.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதற்கென அமைக்கப்பட்ட ஆட் ஆன் எனப்படும் கூட்டுத் தொகுப்புகள் ஏராளம். அத்தகைய தொகுப்பு ஒன்று, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடைமுகத்தில் நமக்குப் பிடித்த எழுத்து வகையினை அமைக்க உதவிடுகிறது. 

எழுத்துவகையினை மாற்றாவிட்டாலும், அதன் அளவைப் பெரிதாக்கவும் உதவுகிறது. இதனால், சற்று பார்வைத் திறன் குறைவு உள்ளவர்கள், பலனடையலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer.

இதன் தளம் (https://addons.mozilla.org/enUS/firefox/addon/162063/) சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் (பயர்பாக்ஸ் பதிப்பு 4) ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது. 

இதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம். 

இந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது.

எழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக்களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை.

இந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla. org/enUS/thunderbird/addon/162063/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்


Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.

Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).

Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.

Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல. 

Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (Replace).

Ctrl+i: எழுத்து/சொல்லை சாய்வாக அமைக்க .

Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.

Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.

Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.

Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.

Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.

Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க

Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.

Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.

Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save). 

Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.

Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.

Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட. 

Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.

Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.

Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள. 

Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.


நோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டதுஇழந்த சந்தைப் பங்கினைத் திரும்ப எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என நோக்கியா நிறுவனம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதன் கவனம், இப்போது ஸ்மார்ட் போன்களில் நிலைத்துள்ளது. 

தன் லூமியா 820 ஸ்மார்ட் போனின் விலையை ரூ.23,499 எனக் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

(டீலர்கள் இன்னும் விலை குறைத்து விற்பனைச் செய்திடும் வாய்ப்புகளும் உள்ளன) 

சென்ற செப்டம்பரில் இந்த ஸ்மார்ட் போன் விலைக்கு வந்த போது, இந்திய விலை ரூ. 27,559 என நிர்ணயிக்கப்பட்டது. 

4.3 அங்குல AMOLED வண்ணத்திரை, சுத்த கருப்பு நிறப் பின்னணியில் காட்சி, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் கொண்டு, நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த போன் கிடைக்கிறது. 

மற்ற சிறப்பம்சங்களாக, இதன் இரண்டு கேமராக்கள், 1ஜிபி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 1650 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

இதனுடன் அறிமுகமான லூமியா 920 ஸ்மார்ட் போன் விலை குறைக்கப் படவில்லை.


மொபைல் ஜிமெயிலில் தமிழ்

மெயில் வசதி கொண்ட மொபைல் போன்களில், தமிழ் உட்பட ஆறு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதியினை கூகுள் தன் மொபைல் ஜிமெயில் தொகுப்பில் தந்துள்ளது. 

பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு பிற மொழிகளாகும். ஜிமெயில் தளத்தின் உள்ளாக இந்த மொழிகளைப் பயன்படுத்தலாம். 

இந்த மொழி களில் ஒன்றை, மாறா நிலையிலும் வைத்துக் கொள்ளலாம். 

மொபைல் போனில்,http://support.google.com/mail/answer/17091?hl=en என்ற இணைய தளம் சென்று, இந்த ஆறு மொழிகளில் ஒன்றை, உங்கள் மொழியாகத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம். 

ஆனால், ஆங்கில மொழிக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும், மாநில மொழிகளுக்குக் கிடைக்காது.


மொஸில்லாவின் ஆப்பரேட்டிங் சிஸ்டம்


பயர்பாக்ஸ் பிரவுசர் தந்து பிரபலமான மொஸில்லா, தற்போது மொபைல் போன்களில் இயங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றினைத் தருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் செல்வாக்கு குறைய இருக்கிறது. 

அடுத்த நூறு கோடி மொபைல் பயனாளர்கள் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துவார்கள் என மொஸில்லா அறிவித்துள்ளது. ஆனால், இந்திய பயனாளர்களுக்கு இந்த 2013 ஆம் ஆண்டில், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்காது என்றே தோன்றுகிறது. 

மொஸில்லா, பல நாடுகளில் இயங்கும் 18 மொபைல் போன் இயக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில், எந்த நிறுவனத்துடனும் அத்தகைய ஒப்பந்தத்தினை மேற்கொள்ளவில்லை. 

ஜூலையில் வர இருக்கும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரேசில், கொலம்பியா, ஹங்கேரி, மான்டெனக்ரோ, போலந்து, செர்பியா, ஸ்பெயின், வெனிசுலா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்த, மொபைல் போன் பிரிவில் வேகமான வளர்ச்சியினை மேற்கொண்டிருக்கும் நாடுகளை இலக்காகக் கொண்டிருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. 

இந்திய மொபைல் போன் பயனாளர் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சத்தினை இந்த ஆண்டில் எட்டப்போவதாக, கார்ட்னர் நிறுவனம் தன் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஸ்மார்ட் போன் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சமாக உயர இருப்பதாகவும் இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. 

மொஸில்லா இந்தியச் சந்தையைத் தற்போதைக்கு ஒதுக்கி இருப்பதற்குக் காரணம், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல, இங்கு இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்கள், மொபைல் போன்களைத் தங்கள் சேவைத் திட்டங்களுடன் இணைத்து, குறைந்த விலையில் வழங்குவதில்லை. 

அமெரிக்காவில் ஐ போன் 4, ரூ.10,000 என்ற அளவில் பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு, அதனை விற்பனை செய்திடும் சேவை நிறுவனத்தின் மொபைல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். 

இந்தியாவில் எந்த நிறுவன சேவையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஐ போன் கிடைக்கிறது. ஆனால் விலை ரூ.43,000 ஐத் தாண்டுகிறது)
எனவே, இந்தியாவில், மொஸில்லா தன் ஆப்ப@ரட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களைத் தானே விற்பனை செய்திட வேண்டும். 

அது ஒரு பெரிய பிரச்னையாக மொஸில்லா கருதுகிறது. இருப்பினும் தாமதமாகவே இந்தியாவில் மொஸில்லா நுழையலாம். இது அதற்கு வழக்கமே. பயர்பாக்ஸ் பிரவுசரைத் தாமதமாகத்தான் மொஸில்லா அறிமுகம் செய்தது. ஆனாலும், அனைத்து பிரவுசர்களுக்கும் அது சரியான போட்டியைத் தந்து வருகிறது.


விண்டோஸ் 8 வீடியோ பிளேயர்


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், வீடியோ பிளேயர் சாப்ட்வேர் இணைத்துத் தரப்படவில்லை. சென்ற ஆண்டில், தன் இணைய தள வெளியீடு ஒன்றில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கான காரணத்தை வெளியிட்டது. 

பட டிஸ்க் விற்பனை குறைந்து வருகிறது என்றும், டிவிடி பிளேயர் சாப்ட்வேர் தொகுப்பிற்கான உரிமத் தொகை பிரச்னைக்குரியதாக மாறி வருகிறது என்றும் குறிப்பிட்டு, இதனால் டிவிடி பிளேயர் தரப்படவில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால், டிவிடி டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் படிக்க இயலும். 

அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டம் வைத்திருக்கும் கம்ப்யூட்டரில், டிவிடி திரைப்படங்களைப் பார்க்க இயலாதா? மைக்ரோசாப்ட் வியாபார ரீதியில் இதற்கான பதில் ஒன்றைத் தந்துள்ளது. 

நீங்கள் விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பு கொண்டிருந்தால், விண்டோஸ் மீடியா சென்டர் பேக் என்ற சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது சும்மா கிடைக்காது. கட்டணமாக 10 டாலர் செலுத்த வேண்டும். 

இந்த தொகுப்பினை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எப்படித் தரவிறக்கம் செய்வது என,http://windows.microsoft.com/enus/windows8/featurepacks என்ற முகவரியில் உள்ள தன் தளத்தில், மைக்ரோசாப்ட் வழி காட்டியுள்ளது. 

சாதாரண விண்டோஸ் 8 சிஸ்டம் மட்டும் வைத்திருந்தால், இதற்கு 100 டாலர் செலுத்த வேண்டும். பலரும் இதனைப் படித்துவிட்டு, சிறிது அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். 

சிலரோ, அடப் போங்கய்யா, இதற்கு வழியா இல்லை என்று கூறி, ஓரிரு நிமிடங்களில் வழியைக் கண்டுபிடித்து, செயல்பட்டு, படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். அது என்ன வழி. http://www.videolan.org/vlc என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். 

அதிலிருந்து, மிகப் பிரபலமான வீடியோ லேன் நிறுவனத்தின் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பான, வி.எல்.சி. மீடியா பிளேயரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து, உங்களுக்குப் பிரியமான சினிமா பார்க்கத் தொடங்குங்கள்.


ஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க


விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். 

இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். 

ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் மேலும் சில கிளிக்குகளை ஏற்படுத்த வேண்டும். அவற்றை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.

முதலில் ஏதேனும் ஒரு போல்டரைத் திறக்கவும். “View” என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த வியூவினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் டூல்ஸ் மெனு சென்று Folder Options என்பதில் கிளிக் செய்து Folder Options டயலாக் பாக்ஸ் திறக்கவும். 

இங்கே Folder Options டயலாக் பாக்ஸில் வியூ டேப்பில் கிளிக் செய்திடுங்கள். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக உள்ள Apply to all folders என்பதில் கிளிக் செய்து முடிக்கவும். 

இப்போது நீங்கள் மேற்கொண்ட மாற்றம் குறித்து உறுதி செய்திட “Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and folder task)? Change will occur the next time you open them” என்ற மெசேஜ் காட்டப்படும். ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

இப்போது நீங்கள் எந்த வியூவில் அமைத்தீர்களோ அந்த வியூவில் அனைத்து போல்டர்களும் காட்சி அளிக்கும். இப்போதும் கூட குறிப்பிட்ட ஒரு போல்டரை நீங்கள் விரும்பும் தோற்றத்தில் பார்க்கலாம்.


சாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை

மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம் வியட்நாம் நாட்டில் அமைத்திட, பூர்வாங்கப் பணியினைத் தொடங்கியது. 

இதன் திட்ட மதிப்பீடு 200 கோடி டாலர். படிப்படியாக இந்த ஆலை அமைக்கப்படும் நிலையிலேயே, மொபைல் போன் தயாரிப்பு தொடங்கப்படும். 2015 ஆம் ஆண்டில் முழுமை அடையும் போது, இங்கு ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்படும். 

ஏற்கனவே இதே அளவில் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வியட்நாமில் சாம்சங் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


மருத்துவரை நாட உதவும் இணையதளம்


இணையத்தில், நம் உடல் நிலை, அதற்கான மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர் ஒருவரை நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. 

இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் தளங்களில்,www.askthedoctor.com/ என்ற முகவரியில் இயங்கும் ஒரு தளம் வித்தியாசமான முறையில் தகவல்களைத் தந்து நம் சந்தேகங்களையும் தீர்க்கிறது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருத்துவர்களும் இந்த தளம் சென்று, நோய், அதன் தன்மை, அதற்கான மருத்துவம் குறித்துத் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, இந்த தளத்தில் தொடர்பு கொண்டுள்ள மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். 

ஏற்கனவே இது போன்று கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களும் இந்த தளத்தில் கிடைப்பதால், சிரமமின்றி எளிதாகவும், விரைவாகவும் தகவல்களை அறியலாம். புதியதாக அறிய வேண்டும் எனில், இந்த தளத்தின் மூலம், மருத்துவ வல்லுநர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, தீர்வுகளைப் பெற முடியும். 

இந்த தளத்தில் மருத்துவ அறிவுரை இலவசமாக வழங்கப்படுகிறது. இது எப்படி செயல்படுகிறது எனப் பார்க்கலாம். இந்த தளம் சென்று உங்களுடைய பெயர், இமெயில் முகவரி, உடல்நலம் குறித்த முழு தகவல்கள், உங்களின் கேள்வி இவற்றை நிரப்பி அனுப்பினால், அந்த தளத்திலேயே உங்கள் கேள்வி குறித்து எத்தகைய பதில் கிடைக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படும். பின் உங்களுக்கான பதில், உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த சேவை இந்த தளத்தின் முதன்மைச் சேவை என்றாலும், வேறு சில பிரிவுகளும் இதில் உள்ளன. இதன் ஹோம் பேஜில், பொதுவாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து எழுப்பும் கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் இங்கு முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டிருக்கும்.


Topics A to Z: உடல்நலம் குறித்தெல்லாம் கேள்வி இல்லை. மருத்துவத்தில் குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு மேற்கொள்ள எண்ணமா? இந்த பிரிவில் நீங்கள் விரும்பும் தலைப்பு உள்ளதா எனத் தேடிப் பார்த்து, அது குறித்து பல கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.


Drugs A to Z: பலவகையான மருந்து குறித்த தகவல்களை இங்கு பெறலாம். அருகில் இருக்கும் மெனுவில் அடிக்கடி கேட்கப் பட்ட மருந்துகள் பட்டியலிடப்பட்டு தரப்பட்டிருக்கும். 


Diet and Fitness: இங்கு கட்டுப்பாடான உணவு, உடல் நலம் பேணல் குறித்த பல தகவல்கள் தரப்படுகின்றன. உணவு கலோரிகள், உடல் கட்டமைப்பு மற்றும் வளர்த்தல், உணவு உட்கொள்வதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தீங்கான இடைவெளிகள், வைட்டமின் என இது போன்ற பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன. 


Parenting and Pregnancy – இந்த பிரிவில் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.


Sex and Beauty – நாம் மற்றவரிடம், ஏன் டாக்டரிடம் கூடக் கேட்கத் தயங்கும் தகவல்கள் அழகாக இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்தும் பல தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.


விண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி


இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். 

அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.

நம் வாழ்க்கையில் புதியதாக எது வந்தாலும், கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்துகையில் சில பிரச்னைகள், சிக்கல்களைச் சந்திக்கிறோம். பின்னர் அதுவே, நாம் விரும்பும் ஒன்றாக மாறிவிடுகிறது. 

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், முற்றிலும் புதுமையான முறையில் பல வழிகளைக் கொண்டிருப்பதால், அதன் இயக்கத்திலும் பல விஷயங்கள் நமக்குத் தொடக்கத்தில் பிரச்னைகளைத் தருவதாகவே அமைகின்றன. ஆனால், அவற்றின் அமைப்பைப் புரிந்து கொள்கையில், அவையே நமக்குப் பிடித்த வசதிகளாகவும் காட்சி அளிக்கின்றன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது போல சிக்கலாகக் காட்சி தருவதில் முதல் இடம் பெறுவது, அதன் கண்ட்ரோல் பேனல் அமைப்பாகும். கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ் முழுமையும் நம்மால், ஒரே இடத்தில் பார்த்து செயல்படுத்த முடியவில்லை. 

இதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கம் அனைத்திலும் கண்ட்ரோல் பேனல் மற்றும் அதன் பிரிவுகள் அனைத்தும் நமக்கு ஒரே இடத்திலேயே கிடைத்து வந்தன. இதில் அப்படி தரப்படவில்லை என, விண்டோஸ் 8 பயன்படுத்தத் தொடங்கும் அனைவரும் உணர்கிறோம். 

இரண்டு இடங்களில் கண்ட்ரோல் பேனல் கட்டமைப்பினைக் காணலாம். ஒன்று ஸ்டார்ட் ஸ்கிரீனுடன் இணைந்து காணப்படுகிறது. இன்னொன்று டெஸ்க் டாப் இடைமுகத்துடன் உள்ளது. ஆனால், இரண்டுமே, அதில் உள்ள விஷயங்களை அமைத்திட முழு அனுமதியினை உடனே தருவதில்லை. இது தொடக்கத்தில் மிக மிகச் சிக்கலான ஒன்றாகவே காட்சி தருகிறது. 

இது, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள God Mode என்பதனை அறியும் வரையில் தான். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், முதலில் ஏற்பட்ட சிக்கலான உணர்வு மறைந்துவிடுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் God Mode என்பது ஒரு ஸ்பெஷல் போல்டராகத் தரப்பட்டுள்ளது. 

இதில் கண்ட்ரோல் பேனலின் அனைத்து தொடர்புகளையும், அமைப்பு வழிகளையும் உள்ளடக்கி அமைத்துவிடலாம். இந்த ஸ்பெஷல் போல்டரை அமைப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. ஆனால், சிறிய செட்டிங்ஸ் ஒன்றை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும்.

முதலில், டெஸ்க் டாப் திறந்து, விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரைத் தொடங்கவும். இதற்கு முதலில் விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில், வியூ டேப் திறக்கவும். இங்கு File name extensions மற்றும் Hidden items என்ற இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். 

இந்த இரண்டு மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் New மற்றும் Folder என்பதற்குச் செல்லவும். 

இங்கு ஒரு குறியீட்டினை அமைக்க வேண்டும். “New folder” என்ற தற்காலிகப் பெயருக்குப் பதிலாக, GodMode.{ED7BA4708E54465E825 C99712043E01C}என்ற நீளமான டெக்ஸ்ட்டைச் சரியாக அமைக்கவும். இதனை அமைத்தவுடன் என்டர் தட்டினால், புதிய போல்டர் GodMode என்ற பெயரில் அமைந்திருப்பதனைக் காணலாம். 

இந்த போல்டரில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்தும் பெரிய பட்டியலாகக் காட்டப்படுவதனைக் காணலாம். அதன் செட்டிங்ஸ், அமைப்பு வசதிகள் ஆகியன அனைத்தும் பல பிரிவுகளாகக் காட்சி அளிக்கும். 

நீங்கள் விரும்பினால், இந்த GodMode போல்டரை டெஸ்க் டாப்பிலேயே வைத்திருக்கலாம். அல்லது ரைட் கிளிக் செய்து, ஸ்டார்ட் பேஜில் பின் செய்து வைக்கலாம். 

இதன் மூலம் இதற்கென தனி டைல் அமைத்துக் காட்டப்படும். அல்லது விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில் பின் செய்து வைக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் பின் செய்து வைத்து அமைக்கலாம். என்ன, விண்டோஸ் 8 கொண்டிருக்கும் கடவுள் வழி இப்போது நீங்கள் விரும்பும் வழியாகிவிட்டதா!


நோக்கியா ஆஷா 310


நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 

அனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது. 

இதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டது. 

ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 

இதில் இயங்குவது எஸ் 40 ஆஷா ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஸ்வைப் செய்து இயக்கும் வகையிலான இன்டர்பேஸ் இயங்குகிறது. எளிதாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. 

இதில் தரப்பட்டுள்ள சிம் மேனேஜர் நமக்கு இந்த வசதியினைத் தருகிறது. போனை ஆப் செய்திடாமல், சிம்மினை மாற்றிக் கொள்ளலாம். 

பேஸ்புக், ட்விட்டர் சமூக தளங்களுக்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. டெட்ரிஸ், பெஜவல்டு, பிபா 2012 உட்பட 40 கேம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தடிமன் 13மிமீ. எடை 104 கிராம். வை-பியுடன், ஜி.பி.ஆர்.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 3.0., மைக்ரோ யு.எஸ்.பி. 2.0., யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. 

3.5 மிமீ ஆடியோ ஜாக், மியூசிக் பிளேயர், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 20 எம்.பி. இதனை 32 ஜிபி வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். 

இதன் பேட்டரி 1110 mAh திறன் உடையது. இந்த மொபைல் போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,550.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes