கூகுள் டாக்ஸ் அவசியமா?

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன்படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.

ஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:

1) இலவசம்:

கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

2) இணைய வெளியில் இயக்கம்:

கூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான்.

பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.

3) பகிர்ந்து கொள்ளல்:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

4) பயன்படுத்த எளிது:

மைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.

அதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.

5) இணைவமைவு:

எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.


ஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.


1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.


G-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்

மொபைல் போன் சந்தையில், பெரிய நிறுவனங்கள் முப்பரிமாணத் திரை மற்றும் டூயல் கோர் ப்ராசசர்கள் என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கையில், ஜி-ஃபை (G’Five) நிறுவனம், கூடுதல் வசதிகளுடன் கூடிய, ஜி99 மற்றும் ஜி 66டி மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் கொண்டு வந்துள்ளது.

ஜி99 மொபைல் ரூ.2,789 மற்றும் ஜி 66டி மொபைல் ரூ.4,089 அதிக பட்ச விலையாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஜி99 மொபைல் தொடுதிரையும் கீ போர்டும் கொண்டதாக உள்ளது. இதன் கீ பேடைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.


இதனுடன் உபரி பேட்டரி ஒன்று தரப்படுகிறது. இது ஜாவா இயக்கத்தில் இயங்குவதால், ஆப்பரா மினி, நிம்பஸ் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கலாம். இதன் பேட்டரி திறன் 800mAh என்பது மிகவும் குறைவான திறன் கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால் அதனால்தான், கூடுதலாக ஒரு பேட்டரியினை இந்த போனுடன் தருகிறார்கள். இதன் திரை 2.6 அங்குல அகலம் கொண்டது.

இணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ ஏ.பி., 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.

ஜி 66டி மொபைல் போனின் திரை 2.8 அங்குல அகலம் கொண்டதாக உள்ளது. EDGE/GPRS, WiFi Bluetooth with A2DP, USB 2.0 ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன.

2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 16 ஜிபி வரை உயர்த்தலாம்.


இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.


விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம்.

இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம்.

அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.

ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.


எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும்.


இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:

1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. Insert மெனு சென்று, அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல் (Not enabled and gray in colour) இருப்பின், உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

3. இந்த பாக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக, ஆடியோ பைலைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனைப் பயன் படுத்தி, நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இந்த பாக்ஸிலேயே, Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும்.

5. அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில், ஆடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், அந்த பைல் இயக்கப்பட்டு ஒலிக்கும்.


யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது.

இதனைhttp://www.montpellierinformatique.com/predator/en/index.phpஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.

நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.

இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.

பிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம்.

சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.

நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

அனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.

இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.

பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.

ப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.

தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.


ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.


ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.

கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.

இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.

அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.

உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.

தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.


வந்துவிட்டது 4ஜி மொபைல்

உலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

காலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவை.


எஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது.

இதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது.

இந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும்.

180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.

4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெசல்யூ சனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பயர்பாக்ஸ் பதிப்பு 7

குறைந்த இடைவெளிக் காலத்தில், பிரவுசரைப் புதுப்பித்து வெளியிடும் திட்டத்தின் கீழ் செப்டம்பர் இறுதி வாரத்தில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் ஏழாவது பதிப்பினை வெளியிட்டது. விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மேக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கான பதிப்புகளும் இணைந்தே வெளியிடப் பட்டுள்ளன.

இந்த பிரவுசருக்கு நாம் நிச்சயம் மொஸில்லாவைப் பாராட்ட வேண்டும். குறைவான மெமரி பயன்பாடு, மிக வேகமான இயக்கம், திரையில் சிறிது இடமே எடுத்துக் கொள்ளுதல், கூடுதலாக பல சிறப்பு வசதிகள் என நாம் விரும்பும் பல வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன.

பயர்பாக்ஸ் 7 இன்ஸ்டால் செய்வது வேகமாக நடைபெறுவது மட்டுமின்றி, நம்மை ஆர்வத்துடன் கவனிக்க வைக்கிறது. இதனை உங்கள் மாறா நிலை (default) பிரவுசராக ஏற்றுக் கொண்டால், இதற்கான விண்டோஸ் இயக்க ஐகான் ஒன்று திரையில் பதிக்கப்படுகிறது.

புதிய பதிப்பின் முதல் சிறப்பு அம்சம், கம்ப்யூட்டரின் மெமரியை அது பயன் படுத்தும் விதமே. MemShrink என்ற பெயரில் மொஸில்லா மேற்கொண்டு வந்த திட்டம் இதில் இணைக்கப்பட்டு புதிய பதிப்பு 7 உருவாக்கப்பட்டுள்ளது. மெமரி பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பல விஷயங்களில் 20% முதல் 30% மெமரி குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. சில அப்ளிகேஷன்களில் இது 50% குறைக்கப்பட்டுள்ளது.

பயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ இன்ஸ்டால் செய்திடுகையில், Telemetry என்ற புதியதொரு வசதியைத் தேர்ந்தெடுக்கும் படி உங்களுக்கு நினைவூட்டப்படும். இந்த புதிய சாப்ட்வேர் வசதி மூலம், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் ஒருவரின் எந்த வகை டேட்டா, எதற்காக பிரவுசரால் எடுக்கப்படுகிறது என்பது தெரியவரும். மெமரி பயன்பாடு, சிபியு செயல் சுழற்சி, சுழற்சிக்கான நேரம் மற்றும் தொடங்கு வதற்கு பிரவுசர் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றை டெலிமெட்ரி கண்காணித்து பயனாளருக்கு வழங்கும்.

இதன் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வேண்டும் எனில் about:telemetry என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் Telemetry வசதியை நீக்கவும் செய்திட ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

மெனு பார் அனைத்தும் ஆரஞ்ச் வண்ணத்திலான பட்டன் ஒன்றில் குறுக்கப்பட்டுள்ளது. மெனு ஆப்ஷன்ஸ் அனைத்தும் இரண்டு வரிசைகளாகத் தரப்படுகின்றன. அனைத்து துணை மெனுக்களும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இதனால், புக்மார்க், ஆட் ஆன் போன்ற அடிக்கடி நாம் திறக்கும் மெனுக்களை எளிதாக இடம் அறிந்து திறந்து பயன்படுத்த முடிகிறது.

புக்மார்க் துணை மெனுவில் Get Bookmark Addons என்ற புதிய பிரிவு தரப்பட்டுள்ளது. ஹிஸ்டரி துணை மெனுவில், Recently Closed Tabs and Recently Closed Windows ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன. ஸ்டாப் மற்றும் ரெப்ரெஷ் பட்டன்கள் (stop and refresh) லொகேஷன் பாரின் வலது புறமாக, புக்மார்க் ஸ்டார் அருகே அமைக்கப் பட்டுள்ளது.

நீங்கள் இணைய முகவரி (URL) ஒன்றை டைப் செய்கையில், Go பட்டன் பச்சை நிறத்தில் உள்ளது. யு.ஆர்.எல். பெற முயற்சிக்கையில், இது எக்ஸ் என்னும் ஸ்டாப் பட்டனாக சிகப்பாக மாறுகிறது.

லொகேஷன் பாருக்கு வலது புறமாக, வழக்கமான தேடல் கட்டம் உள்ளது. ஓர அம்புக்குறியினைக்
கிளிக் செய்தால், சர்ச் இஞ்சின்கள் பட்டியல் காட்டப்படுகிறது.

மிகச் சிறந்த புதிய அம்சமாக இதன் Sync வசதியைக் கூறலாம். ஏற்கனவே, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, பலர் இதனைப் பயன்படுத்தத் தயங்கினர். அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு குறை இருந்து வந்தது. இப்போது அனைத்தும் மிக எளிதாக மேற்கொள்ளப் படுகின்றன.

நம் புக்மார்க்,பாஸ்வேர்ட், முன்னுரிமை தள செயல்பாடுகள், ஹிஸ்டரி, டேப்ஸ் என அனைத்தும் இணைந்து செயல் படுகின்றன. மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்து கையிலும் இந்த இணைவமைதி கிடைக்கிறது. இதனை இயக்க, மெனு பாரில், இடதுபுறப் பிரிவில் உள்ள Set Up Sync என்பதில் கிளிக் செய்தால் போதும். ஏற்கனவே உள்ள Sync அக்கவுண்ட் இணைக்கப்படும்; அல்லது புதியதாக ஒன்றை நாம் தொடங்க முடியும்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் App Tabs. டேப்பின் அகலம் இதன் மூலம் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது. இடது பக்கம் நிரந்தரமாக இவை அமைக்கப்படுகின்றன. இதனால், இணைய முகவரி டைப் செய்திடுகையில், சார்ந்த டேப் ஒளி அதிகரித்து, திறக்கப்படுகிறது. மேலும் இந்த தளம் அப்டேட் செய்யப் பட்டிருந்தால், அது கூடுதல் ஒளியுடன் காட்டப்படுகிறது.

இதுவரை கீழாகக் காட்டப்பட்ட ஸ்டேட்டஸ் பார் மறைக்கப்பட்டுள்ளது. இப்படியே தரப்பட்டுள்ள பல இன்டர் பேஸ் மாற்றங்கள், இந்த தொகுப்பைப் புதுமையாக்கிக் காட்டுகின்றன. சில புதிய வசதிகளை இங்கே பட்டியலிட்டுக் காட்டலாம்.

இணைய தள முகவரியில் “http://” என்ற முன்னொட்டு இப்போது மாறா நிலையில் இந்த பிரவுசரில் தரப்படுகிறது.

எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்யப் படுவதன் மூலம், கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் கார்டின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஓப்பன் டைப் எழுத்துரு வகைகள் நன்றாகக் கையாளப்படுகின்றன. அடுத்து வர இருக்கும் இணைய தர வரைமுறை இப்போதே இந்த பிரவுசரில் கிடைக்கிறது.

ஒரே தளத்திற்கான டேப் இருமுறை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

பிரைவேட் பிரவுசிங் புதிய மாற்றங்களுடன் கூடுதல் வேகத்துடன் இயங்குகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Do Not Track வசதியின் மூலம் விளம்பரங்கள், நம் இணைய செயல்பாட்டில் தலை யிடுவது தடுக்கப்படுகிறது.

நமக்குப் பாதுகாப்பு தர, இரண்டு புதிய வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை Content Security Policy மற்றும் HTTP Strict Transport Security. இவற்றின் மூலம் நாம் பார்க்கும் தள சர்வர்கள் நம் லாக் ஆன் தகவல்களைப் பெறுவது தடுக்கப் படுகிறது. வேகம், குறைவான மெமரி பயன்பாடு, புதிய பாதுகாப்பு அம்சங்கள், தளங்களை இயக்க புதிய எளிய வசதிகள் ஆகியவற்றிற்காக இந்த பதிப்பிற்கு நாம் மாறிக் கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ மொஸில்லா வின் இணைய தளத்திலிருந்து (http://www.mozilla.com/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4,5 மற்றும் 6 பயன் படுத்துபவர்களுக்கு, தானாக அப்டெட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துபவர்தான் இயக்க வேண்டும்.


பயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்

கம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOSbasic input/output system) என்கிறோம்.

இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது.

இந்த ஹார்ட்வேர் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான், இந்த சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.


ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து, அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இந்த பயாஸ் உள்ளாக, ஒரு பாஸ்வேர்டை செட் செய்திடலாம்; ஹார்ட்வேர் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம்; கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.

பயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.

பயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடனேயே, பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும். எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால், விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கான வழியைப் பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும். அதில் எந்த கீயை அழுத்தினால், பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.

சில கம்ப்யூட்டர்களில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.

‘Press F1 to enter setup’
‘BIOS settings: Esc’
‘Setup = Del’
‘System configuration: F2'

இதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து
காணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன், ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும். அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால், முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம்.

இதில் பிரச்னை ஏற்பட்டால், சிடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சிடி வழியாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில், மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும்.

இதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர், இந்த மாற்றங்களை இயக்க, மீண்டும் ஒரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திட வேண்டும்.


பிளாக்பெரியின் இலவச அப்ளிகேஷன்கள்

ரீசர்ச் இன் மோஷன் நிறுவனம், அதன் பிளாக்பெரி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 100 டாலர் (4,900 ரூபாய்) மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் (கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர் (சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது:

கடந்த வாரம் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிளாக்பெரி மொபைல் போன் சேவை, பாதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

நெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என, பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

டிசம்பர் இறுதி வரை, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பிளாக்பெரி அகடமி திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு, பிளாக்பெரி அப்ளிகேஷன்களை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு

பயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட்டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது.


மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

பிரவுசர் இயக்கத்தினைத் தொடங்கு கையில், நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.

இதனால், பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில், அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.

இணைய தளம் உருவாக்கு பவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இனி புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன், அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும்.

பின்னர் அதன் சோதனை பதிப்பு (Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல், வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன.

அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.
முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும்.

விண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன.

சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது.

இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக் கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர் களில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது.

ஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.


இலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)

ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன.

இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.


இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.

இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம்http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது.

டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.

இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.

இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான
ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes