பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்

கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. 

தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். 

இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம். 
டாகுமெண்ட் போல்டரில் 

பைல் சிஸ்டம் உருவாக்குதல்: முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது. 

நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும். 

சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம். 

இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.

டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம். 

ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது. 

இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும். 


கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 

இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். 

இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

இப்போது நாடெங்கும் நடத்தப்படும் spelling bee என்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த சோதனைத் தளம் அதிகம் பயன் தரும். இந்த தளம் எப்படி செயல்படுகிறது என்று காட்டிட சிறிய வீடியோ படம் ஒன்று http://googleblog.blogspot.com/2014/05/speak-and-learn-with-spell-up-our.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் முதலில் இதனைக் காணலாம்.

இந்த கேம் உள்ள இணைய தளம் https://spellup.withgoogle.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. இந்த தளம் சென்றவுடன், இது காட்டும் கிராபிக்ஸ் அனிமேஷன் படங்கள் பார்ப்பதற்கு ஆர்வத்தினைத் தூண்டுகின்றன. 

இந்த கேம் விளையாடுவதற்கு ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். அவை இல்லை என்றால், விளையாட்டினை மேற்கொள்ள நமக்கு அனுமதி கிடைக்காது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை விளையாடுவதைக் காட்டிலும், ஸ்மார்ட் போனில் விளையாடுவது எளிதாக உள்ளது. 

கூகுள் குரோம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வழியாக என்றால், விளையாடுகையில் நாம் சொற்களை உச்சரித்தும் விளையாடலாம். மற்ற ஐபோன், ஐபேட் சாதனங்கள் வழி என்றால், டைப் செய்து மட்டுமே விளையாட முடியும். 

ஆங்கில மொழியை முதல் மற்றும் இரண்டாவது மொழியாகக் கொண்டவர்களுக்கு, விளையாட்டு வாக்கில் அதன் சொற்கள், அவற்றின் எழுத்து ஆகியன குறித்து அறிந்துகொள்ள இந்த தளம் மிகவும் உதவும். ஸ்பெல்லிங், எப்படி உச்சரிப்பது, இல்லாத எழுத்தைக் கண்டுபிடிப்பது எனப் பல வகைகளில் இதனை விளையாடலாம். 

சரியான விடை அளிக்க, அளிக்க பக்கத்தில் ஒரு கோபுரம் எழுப்பப்படும். தவறான விடை தரும்போது, அந்த கோபுரம் சரியும். உங்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகிறது இந்த தளம்.


விண்டோஸ் 7 விந்தைகள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. 

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். 

ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undo cumented Features எனச் சில உண்டு. 

இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். 

அவற்றை Easter Eggs என அழைப்பார்கள். அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்தும் Easter Eggs குறித்தும் இங்கு காணலாம்.


சில ஷார்ட்கட் கீகள்

1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். 

எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.


2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.


3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும்.

திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:

விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.

அதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.


கூகுள் மூடிய குயிக் ஆபீஸ்

கூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த Quickoffice அப்ளிகேஷனை மூடிவிட்டது. தன் Google Apps வலைமனையில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 

கூகுள் ப்ளே மற்றும் அப்ளிகேஷன் ஸ்டோரில் இனி இது கிடைக்காது. தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தலாம். 

ஆனால், புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. புதிய பயனாளர்கள் யாரும் இதனை இன்ஸ்டால் செய்திட முடியாது. 

குயிக் ஆபீஸ் அப்ளிகேஷனில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸ் (Google Docs, Sheets and Slides apps) அப்ளிகேஷன்களில் இணைக்கப்பட்டு விட்டதால், இதனை கூகுள் மூடுகிறது. 

கடந்த ஓராண்டாகவே குயிக் ஆபீஸ் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள் அனைவரும் இதன் பயன்பாடுகள் குறித்து மிகவும் பாராட்டி வந்தனர். 

இதனைப் பயன்படுத்தி டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள் மற்றும் ஸ்லைட் பிரசன்டேஷன் பைல்களை எடிட் செய்திட முடிந்தது. பயன்படுத்திய பலரும் இதற்கு 5 ஸ்டார் சான்றிதழ் அளித்து வந்தனர். 

ஏறத்தாழ ஒரு கோடி கம்ப்யூட்டர்களில் இது பதியப்பட்டதாக கூகுள் அறிவித்திருந்தது. தேவைப்படுவோர், தனித்தனியாக Google Docs, Google Sheets and Google Slides ஆகியவற்றைப் பதியவும் வசதி தரப்பட்டது. 

கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த குயிக் ஆபீஸ் அப்ளிகேஷனை அதன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்களை எடிட் செய்திட ஏதுவாக, இதனை இலவசமாக அளித்து வந்தது. தற்போது இதனை மூடிவிட்டது. 

பொதுவாக, தனக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை வாங்குவதும், பின்னர் அதில் உள்ள சில வசதிகளை தன் அப்ளிகேஷன்களில் புகுத்திப் பயன்படுத்தத் தருவதும், பயனாளர்கள் பழகிப் போன பின்னர், அவற்றை எடுத்துவிடுவதும், கூகுள் நிறுவனத்திற்கு வழக்கமான ஒரு செயல்பாடு தான். அதையே இப்போது குயிக் ஆபீஸ் விஷயத்திலும் செய்துள்ளது.


மேம்படுத்தப்பட்ட அவிரா ஆண்ட்டி வைரஸ்

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது அவிரா நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். இது முன்பு AntiVir என அழைக்கப்பட்ட்து. 

தற்போது இது பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு, புதிய தொகுப்பாக்க் கிடைக்கிறது. இதன் பெயரும் Avira Free Antivirus என மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் புரோகிராம்களுக்கு எதிராக இதன் செயல்பாடு வேகமாகவும் நம்பிக்கை தருவதாகவும் உள்ளது. 

கட்டணம் செலுத்தியவர்களுக்குத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் பயன்படுத்தப்படும் மால்வேர்களுக்கு எதிரான தொழில் நுட்பம் இந்த இலவச தொகுப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இது, பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில், வைரஸ் மற்றும் மால்வேர்களுக்கு எதிராக, அடுக்கடுக்காக பாதுகாப்பு வளையங்களை அமைக்கிறது. இதனால், தொல்லை தரக்கூடிய வைரஸ், ட்ரோஜன்கள் மட்டுமின்றி, அனுமதியின்றி நம் கம்ப்யூட்டர்களுக்குள் வரும் விளம்பரங்கள் மற்றும் ஸ்பைவேர்களையும் தடுக்கிறது. இவற்றைக் கொண்டிருக்கும் இணைய தளங்களுக்கு, அவற்றின் தன்மையை அறியாமல் நாம் செல்ல முயற்சிக்கையில், நமக்கு எச்சரிக்கை செய்தி வழங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும், வைரஸ்கள் உள்ளனவா என்று நம் கம்ப்யூட்டர்களை ஸ்கேன் செய்திடத் தேவை இல்லை. ஏனென்றால், கம்ப்யூட்டர் இயங்கும் ஒவ்வொரு வேளையிலும், அவிரா தொடர்ந்து ஸ்கேன் செய்கிறது. 

பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரஸ்களின் தன்மையைப் பதிவு செய்து கொண்டு, அவற்றின் அடிப்படையில் வைரஸ்கள் தாக்க முற்படுகையில் கண்டறிகின்றன. 

அவிரா, புதியதாக ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டினை ஏதேனும் ஒரு புரோகிராம் மேற்கொண்டால், சந்தேகப்பட்டு அது வைரஸ் புரோகிராமா என்று சோதனை செய்கிறது. இந்த வகையில் புதியதாக வரும் மால்வேர் தொகுப்புகளும் கண்டறியப்படுகின்றன.

இதனுடன் இலவசமாகக் கிடைக்கும் Avira Search டூல் பாரினை இன்ஸ்டால் செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் மேலும் இரண்டு வசதிகள் கிடைக்கின்றன. முதலாவதாக, Website Safety Advisor என்னும் டூல் கிடைக்கிறது. நாம் ஒவ்வொரு முறை ஓர் இணைய தளத்தினை அணுகும்போதும், அதன் நம்பகத் தன்மை என்ன என்று ஓர் அளவுகோலில் கணக்கிட்டுக் கூறுகிறது. இதன் மூலம் நாம் நம்பிக்கை கொள்ளக் கூடிய இணைய தளங்கள் எவை என்று நாம் அறிய முடியும். 

இரண்டாவது டூல் பார் Browser Tracking Blocker ஆகும். இது நாம் இணையத்தில் மேற்கொள்ளும் தேடலை, தளங்களை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தானும் பதிந்து கொள்வதில்லை. 

முழுவதுமாக பிரைவேட் தேடலாக நம் இணையத் தேடலை வைத்துக் கொள்கிறது. மேலும், மற்றவர்கள் குக்கிகள் மூலமாக நாம் தேடும் தளங்கள், பொருட்கள் குறித்து அறிந்து கொள்வதனை முழுமையாகத் தடுக்கிறது. இதனால், நாம் தேடும் பொருட்களை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விளம்பரங்களை பிரவுசர்கள் அளிக்க முடியாது.

இது இலவசம் என்பதோடு, இதனைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் தலா 5 ஜிபி இடம் இலவசமாக அளிக்கிறது. 

இந்த இடத்தைப் பயன்படுத்தி, நம் டாகுமெண்ட், போட்டோ மற்றும் வீடியோ பைல்களை க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பதிந்து பாதுகாப்பாக வைத்திடலாம்.

இதனைக் காட்டிலும் மிக வேகமான செயல்பாடு மற்றும் அப்டேட் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தியும் சற்று மேம்படுத்தப்பட்ட தொகுப்பினைப் பெறலாம்.

இலவசமாக இதனைப் பெற http://www.avira.com/en/avira-free-antivirus என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.


ரூ.5,301 விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 069 மொபைல் போன்

போல்ட் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் போன் போல்ட் ஏ 069 ஆகும். இதில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 சிஸ்டம் தரப்படுவது இதன் சிறப்பு.

இதன் மற்ற சிறப்பம்சங்கள்: 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, இரண்டு சிம் பயன்பாடு, டூயல் கோர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் MediaTek MT6572 ப்ராசசர், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறமாக அமைந்த கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி, புளுடூத் தொழில் நுட்பம். 7 மணி நேரம் தொடர்ந்து பேசும் வசதி தரும் 1800 mah திறன் கொண்ட பேட்டரி இதில் தரப்படுகிறது. 

இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 210 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது. ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் இந்த மொபைல் ஸ்மார்ட் போனின் விலை ரூ.5,301. தற்போதைக்கு ஆன்லைன் வர்த்தக தளங்களில் இதனைப் பெறலாம்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பிற்குப் பதிலடி

அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஒன் ட்ரைவில் வழங்கப்படும் இலவச இணைய இடத்தினையும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் இடத்தின் அளவையும் அதிகப்படுத்தி அறிவிப்பினை வெளியிட்ட்து. 

இந்த வகையில், அப்போது இதே வகையில் இடம் தந்து முதல் இடத்தில் இருந்த கூகுள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

தற்போது இதற்குப் பதிலடியாக, அளவற்ற இடம் தருவதாக கூகுள் அறிவித்துள்ளது. 

இப்போது செலுத்தி வரும் கட்டணத்துடன், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 5 டாலர் செலுத்தி, நிறுவன வாடிக்கையாளர்கள் அளவற்ற இடம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில், ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும் கூகுள் அப்ளிகேஷன்கள் பிரிவுகளைத் தலைமை ஏற்று நடத்தும் சுந்தர் பிச்சை இதனை அறிவித்துள்ளார். 

அதற்கேற்ற வகையில், கூகுள் இணைய தளம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிய http://www.google.com/enterprise/apps/business/pricing.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்

நம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. 

இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார். தொடர்ந்து வி.சி.ஆர். வந்தது. 

நாம் பார்க்காத சேனல், வி.சி.ஆரில் பதிந்து கிடைத்தது பெரிய அதிசயமாக்க் கருதப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், வினைல் இசைத் தட்டுக்கள் 15 ஆண்டுகளில், மொத்தமாக, வழக்கொழிந்து போகும் என யாராவது எண்ணி இருப்பார்களா? 

அதன் பின்னர், வந்த சிடிக்களும் காணாமல் போகும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? ''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற கோட்பாட்டினை, இவை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.இனி அடுத்து வழக்கொழிந்து போக இருப்பது, ஸ்மார்ட் போன் திரைகளே என சிலர் அடித்துச் சொல்கின்றனர். அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கி உள்ளன.

ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை டச் ஸ்கிரீன் திரைகள் கொண்ட ஸ்மார்ட் போனின் இடத்தைப் பிடிக்க இருக்கின்றன. இந்த 2014 ஆம் ஆண்டில், 1.9 கோடி என்ற எண்ணிக்கையை இந்த அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் எட்ட இருக்கின்றன. 2018ல் இவற்றின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருக்கும். 

ஆனால், அவை இன்றைக்குக் கிடைக்கும் அணியும் சாதனங்களாக இருக்காது. இவை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடனும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் இருக்கும். உங்கள் சட்டையில் முதல் பட்டன், உங்களின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவிற்கான முகவாயிலாக இயக்கப்படும். கூகுள் கிளாஸ் தொடர்ந்து மேம்பாடு அடைந்து, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.

அடுத்த நிலையாக, மனித உடலில் பதித்து இயக்கக் கூடிய RFID சிப்கள் வடிவமைக்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி, நம் வீட்டின் கதவுகளையும், கார் கதவுகளையும் திறக்கலாம். கண் பார்வையிலேயே இவை இயக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில், எந்த செயல் மனிதன் செய்யக் கூடியது, எந்த செயல் கம்ப்யூட்டர் செய்யக் கூடியது என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிவிடும்.

இன்றைய சாதனங்களின் பயன்பாட்டில், பேட்டரிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை கையாள்வதற்குப அதிக எடை கொண்டனவாகவும், பெரியனவாகவும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவையாகவும் உள்ளன. எனவே, பேட்டரிகளுக்கு மாற்றாக, சூப்பர் கெபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் கொண்ட செல்கள் (Fuel cells) பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 

மவுஸ் மற்றும் கீ போர்ட்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குரல், கையசைவு, முக அசைவு, கண் அசைவு மற்றும் சில புதிய வகை கட்டளைகள் பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு மாற்றிப் பெறப்படும். தொடு உணர் திரை கட்டளைகள் தொடரலாம். ஆனால், அவை ஆய்விற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனமாக இருக்கும்.


நோக்கியா எக்ஸ் 2 ஸ்மார்ட் போன்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் 2 டூயல் சிம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பினை சென்ற வாரம் வெளியிட்ட்து. இதில் 4.3 அங்குல திரை, 1.2 டூயல் கோர் ஸ்நாப்ட்ரேகன் 200 ப்ராசசர் உள்ளது. 

இதில் நோக்கியா எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் சிஸ்டம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தாகும். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட வெப் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 

இதன் வீடியோ பதிவும் வேகத்தன்மை கொண்ட து. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி. இதனை 32 ஜிபி வரை விரிவு படுத்திக் கொள்ளலாம். 

இதில் எதிர்பார்த்தபடி, ஹோம் மற்றும் பேக் பட்டன்கள் உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல பணிகளை எளிதாக இயக்கலாம். ஜ் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,800 mAh திறன் கொண்ட து. 

ஆறு வகை வண்ணங்களில் இது கிடைக்கும். இதன் விலை உத்தேசமாக ரூ. 8,000 முதல் ரூ.9,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


சமூக தள, மின் அஞ்சல் அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள்

உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. 

நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). 

அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே இருக்கக்கூடாது என விரும்பினால் என்ன செய்திட வேண்டும். 

இதில் என்ன ஒரு நல்ல தகவல் எனில், ஏறத்தாழ அனைத்து மின் அஞ்சல் வசதி தரும் நிறுவனங்களும், உங்கள் மின் அஞ்சல் கணக்கினை நிரந்தரமாக மூடிக் கொள்ள வழி ஒன்றைத் தருகின்றன. 

ஆனால், அந்த வழிகளை நாம் நேரடியாக, எளிதாகப் பெற இயலவில்லை. அவற்றைப் பெற பல்வேறு சுற்று வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


ஹாட்மெயில்/எம்.எஸ்.என்./விண்டோஸ் லைவ்:

1. கீழ்க்காணும் லிங்க் உள்ள தளம் செல்லவும். http://mail.live.com/mail/CloseAccountConfirmation.aspx இது கிடைக்கவிலை என்றால் https://account.live.com/CloseAccount.aspx என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

2. உங்களுடைய இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டினை இங்கு அமைக்கவும். 

3. தொடர்ந்து Close Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 

4. உங்கள் அக்கவுண்ட் 270 நாட்களுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்தக் காலத்தில் மீண்டும் உங்கள் அக்கவுண்ட்டினை உயிர்ப்பிக்க விரும்பினால், மீண்டும் அதனை இயக்கலாம். இல்லை என்றால், 270 நாட்களுக்குப் பின்னர், முழுமையாக நீக்கப்படும். உங்கள் நண்பர்கள் இதற்கு தொடர்பு கொண்டால், அப்படி ஒரு அக்கவுண்ட்டே இல்லை என்ற செய்தி அவர்களுக்குத் தரப்படும்.


யாஹூ தளம்:

1. இந்த தளத்தில் உள்ள மின் அஞ்சல் கணக்கினை நீக்க https://edit.yahoo.com/config/delete_user என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. உங்களுக்கான தனி நபர் தகவல்களை அளித்து, நீக்க விரும்புவதனை confirm என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தவும். 

3. 90 நாட்களில் உங்கள் அக்கவுண்ட் முழுமையாக நீக்கப்படும். பின்னர், நீங்கள் விரும்பினாலும், அக்கவுண்ட் கிடைக்காது.


ஜிமெயில்:

1. https://www.google.com/accounts/DeleteCaribouService என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. இங்கு உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அமைக்கவும்.

3. இங்கு கிடைக்கும் செக்பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். பின்னர், மற்ற கூகுள் சேவைகளைப் பயன்படுத்த என்ன அக்கவுண்ட் பயன்படுத்தப் போகிறீர்கள் என்ற வினாவிற்கு, மாற்றாக உள்ள கூகுள் அக்கவுண்ட் பெயரினை அமைக்கவும். 

4. பாஸ்வேர்டினைக் கொடுத்து, "Remove Gmail"என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இரண்டு நாட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்படும்.

5. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்பட்ட பின்னர், என்ன செய்தாலும், அந்த அக்கவுண்ட்டினை மீண்டும் பெற முடியாது. அதில் உள்ள மெசேஜ்கள் கிடைக்காது.


ஆர்குட் சமூக இணைய தளம்

ஆர்குட் தளம், வரும் செப்டம்பருடன் மூடப்பட உள்ளது. இருப்பினும் அக்கவுண்ட் நீக்கும் வழிகளைப் பார்ப்போம்.

1. https://www.google.com/accounts/DeleteService?service=orkut&hl=en-US என்ற இணைய தளத்திற்கு முதலில் செல்லவும்.

2. இங்கு பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் அமைக்கவும்.

3. பின்னர் செக் பாக்ஸில் டிக் அமைக்கவும்.

4. அடுத்து Remove orkut என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உங்கள் ஆர்குட் அக்கவுண்ட் உடனடியாக நீக்கப்படும்.


பேஸ்புக் சமூக இணைய தளம்:

பலரும் பயன்படுத்தும் இந்த தளத்திலிருந்து தங்கள் அக்கவுண்ட்டினை நீக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்குக் காரணம், ஒருவரே பல அக்கவுண்ட்களில், பெயர்களில் சிறிய வித்தியாசத்துடன் அக்கவுண்ட்களை அமைத்துவிடுவதே காரணம்.

1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும்.

2. இது Settings பக்கத்தினைத் திறக்கும். 

3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம். 

5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்க ளுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deacti vate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம். 

6. http://www.facebook.com/help/contact.php? show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம். 


ட்விட்டர் சமூக இணைய தளம்:

1. ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

2. இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள "Deactivate my account" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

3. அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் "Okay, fine, deactivate my account" என்பதில் கிளிக் செய்து கணக்கினை முடிக்கவும்.


லிங்க்ட் இன் சமூக இணைய தளம்:

1. முதலில் லிங்க்ட் இன் சமூக இணைய தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். 

2. வலது மூலையில் தரப்பட்டுள்ள "Settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

3. இது Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இங்கு "Personal Information" என்ற பிரிவில், "Close Your Account" என்பதில் கிளிக் செய்திடவும். 

4. அல்லது https://www.linkedin.com/secure/settings?closemyaccountstart என்ற லிங்க்கில் கிளிக் செய்து நேரடியாக உங்கள் அக்கவுண்ட்டினை முடிக்கலாம். 

5. "Close Account Reason" என்ற பிரிவில் நீங்கள் விரும்புவதில் கிளிக் செய்து, "Continue" அழுத்தி தொடரலாம்.


மேற்காணும் வழிகளில், எந்த மின் அஞ்சல் மற்றும் சமூக இணைய தளங்களில் உள்ள உங்கள் தேவைப்படாத, பயன்படுத்தாத அல்லது நீக்கப்பட வேண்டும் என எண்ணுகிற அக்கவுண்ட்டினை நீக்கலாம்.


விண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகள்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்குப் பல விஷயங்கள் புதிதாகவே தெரிகின்றன. 

இவற்றைக் கற்றுக் கொண்டு, நினைவில் வைத்துக் கொண்டு இதில் செயல்பட வேண்டியுள்ளது. 

குறிப்பாக விண்டோஸ் கீயுடன் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்துவதில் பல செயல்பாடுகளும் அவற்றிற்கான கீ தொகுப்புகளும் புதியதாக, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியனவாகவும் உள்ளன. 

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. Windows Key + X - 

கண்ட்ரோல் பேனல், டாஸ்க் மானேஜர், பைல் எக்ஸ்ப்ளோரர் மற்றும் கமாண்ட் ப்ராம்ப்ட் ஆகியவற்றுடன் அடங்கிய மெனு ஒன்று பாப் அப் ஆகி, நாம் தேர்வு செய்திடத் தயாராய் கிடைக்கும். 


2. Windows Key + Q 

அப்ளிகேஷன் சர்ச் டூல் ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இன்ஸ்டால் செய்திட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் நமக்குத் தேவையானதைத் தேடிக் கண்டறியும் திறனை இது வழங்குகிறது.


3. Windows Key + C 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சார்ம்ஸ் மெனு (charms menu) வினை இது தரும். 


4. Windows Key + I 

திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனுடைய செட்டிங்ஸ் மெனுவினை அணுக இது அனுமதி தரும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசர் திறந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்த கீகளை அழுத்துகையில், Internet options செட்டிங்ஸ் மெனுவினை இது தரும். 


5. Windows Key + D 

அடிக்கடி பயன்படுத்தும் ஷார்ட் கட் கீ இது. இது டெஸ்க்டாப் நிலையை நமக்குத் தரும். விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதே செயல்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


6. Windows Key + M 

டெஸ்க்டாப் நிலையைத் தருவதுடன், அதில் அப்போது திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோக்களை மினிமைஸ் செய்வதற்கான திறனைத் தருகிறது. 


7. Windows Key + Tab

மேற்கொள்ளும் பல்வேறு அப்ளிகேஷன் பணிகளை மாற்றிக் கொள்ளும் வசதியைத் தரும் பாப் அப் கட்டம் கிடைக்கும். 


8. Windows Key + W 

அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. search settings அமைத்துத் தருகிறது. இதன் மூலம் பயனாளர் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் குறிப்பிட்ட அமைப்பினை எளிதாகக் கையாளலாம்.


9. Windows Key + F 

அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. இங்கு அனைத்து பைல்களைத் தேடும் வாய்ப்பு தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர் டாகுமெண்ட், இமேஜஸ், ஆடியோ மற்றும் பிற பைல்களைத் தேடி அறிந்து சேவ் செய்திடலாம். 


10. Windows Key + E 

மை கம்ப்யூட்ட ரில் பைல் எக்ஸ்ப்ளோரர் பிரிவைக் காட்டுகிறது. இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் கையாளலாம். 


விண்டோஸ் 8.1 மைக்ரோமேக்ஸ் போன்கள்

விண்டோஸ் மொபைல் போன்கள் விற்பனைச் சந்தையில் புதியதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு போன்கள் நுழைந்துள்ளன. 

அவை Canvas Win W092 மற்றும் Canvas Win W121. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், இதற்கென மைக்ரோமேக்ஸ் ஒப்பந்தம் கொண்டது நினைவிருக்கலம். 

இவற்றை குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 200 ப்ராசசர்கள், 1.2 கிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயக்குகின்றன. விண்டோஸ் போன் 8.1 சிஸ்டம் தரப்பட்டுள்ளது.

விண் 092 போனில், 4 அங்குல திரை, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா கொடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1ஜி.பி. 

இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,500. 

விண் 121 மாடல் போனில் HD display கொண்ட 5 அங்குல திரை, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை உள்ளன. 

இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். அதே ப்ராசசர் தரப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களும் முந்தைய போனில் உள்ளவையே. பேட்டரியின் திறன் 2,000 mAh ஆக உள்ளது. 

இவற்றின் பின்புறமாக நல்ல தோலில் தயாரிக்கப்பட்ட பேனல் ஷெல் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,500. வரும் ஜூலை முதல் வாரத்தில் இவற்றை வாங்க முடியும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes