இணையம் தரும் போதைசிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதைபதைப்பு ஏற்படுகிறது. 

மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். 

இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். 

இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டுள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர். 

ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


டிசம்பரில் விண்டோஸ் 8 பயர்பாக்ஸ்


விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இண்டர்பேஸ் திரையில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு, வரும் டிசம்பர் 10ல் வெளிவர இருக்கிறது. 

இந்த, பயர்பாக்ஸ் 26, பிரவுசர் தொகுப்பு கடந்த ஓர் ஆண்டாக வடிவமைக்கப்பட்டு தயாராக இருந்தது. 

ஆனாலும், விண்டோஸ் 8 விற்பனைக்கு வந்த பின்னரும், மொஸில்லா இதனை வெளியிடவில்லை. இப்போது விண்டோஸ் 8.1 வெளி வந்த பின்னர், இது வாடிக்கையாளருக்குக் கிடைக்க இருக்கிறது.

மைக்ரோசாப்ட், இனி வருங்காலத்தில், தொடு உணர் திரை இயக்கம் தான் அனைவரும் பயன்படுத்தும் செயல்பாடாக இருக்கும் என உறுதியாகக் கூறி வந்தாலும், அதன் விண்டோஸ் 8 இதனை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், டிஜிட்டல் உலகில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபேட் சாதனங்களில் தான் அதிகமாக, தொடு உணர் திரை இயக்கங்கள் அதிகமாக இருந்து வந்தன. 

இதற்கிடையே, மொஸில்லா, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் தொடு உணர் இயக்கமாக பயர்பாக்ஸ் பிரவுசரை வடிவமைத்து வழங்கியது. 

அதே நேரத்தில், ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றையும் மொஸில்லா வடிவமைத்தது. எனவே, இந்த அனுபவத்தின் அடிப்படையில், விண்டோஸ் 8க்கான பிரவுசரையும் வடிவமைத்து, வரும் டிசம்பரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மொஸில்லா.

ஏற்கனவே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், மெட்ரோ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனமும் தன் குரோம் பிரவுசரைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. 

இப்போது பயர்பாக்ஸ் 26 மெட்ரோ பதிப்பாக வர இருக்கிறது. இனி, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவற்றில் எந்த பிரவுசர் வெற்றி பெற உள்ளது என நாம் பார்க்க வேண்டும்.


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீ தொகுப்பு


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில், அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஷார்ட் கட் கீ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது.

F1 – உதவி.

F3 – சர்ச் பேனலை இயக்கவும், நிறுத்தவுமான டாகிள் கீ 

F4 – அட்ரஸ் பார் விரிப்பு. 

F5 – அப்போதைய இணைய தளப் பக்கம், மீண்டும் புதுப்பிக்கப்படும். 

F6 அட்ரஸ் பாரை மையப்படுத்தும். 

F11 – முழுத்திரைப் பயன்பாடு இயக்கமும், நிறுத்தமும். 

Alt + (Left Arrow) – பிரவுசிங் ஹிஸ்டரியை பின்னோக்கிப் பார்க்க. பேக் ஸ்பேஸ் செயல்பாடு போல. 

Alt + (Right Arrow) – பிரவுசிங் ஹிஸ்டரியை முன்னோக்கிப் பார்க்க. 

Ctrl + A – அனைத்தும் தேர்ந்தெடுக்க.

Ctrl + C – தேர்ந்தெடுத்ததை காப்பி செய்திட. 

Ctrl + E – சர்ச் பேனல் பெற. 

Ctrl + F – தேடிப் பார்க்க (பக்கத்தில்).

Ctrl + H – ஹிஸ்டரி பேனல் பெறவும் மூடவும். 

Ctrl + I – பேவரிட்ஸ் பேனல் பெறவும் மூடவும். 

Ctrl + L – பைல் திறக்க. 

Ctrl + N – புதிய பிரவுசர் விண்டோ திறக்க. 

Ctrl + P – அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட 

Ctrl+R – ரெப்ரெஷ் செய்திட. எப்5 கீ செயல்பாடு. 

Esc – இணையப் பக்கம் இறங்கிக் கொண்டிருந்தால், அது நிறுத்தப்படும். 

Ctrl + D – அப்போதைய பக்கத்தினை பேவரிட் ஆக இணைக்க. 

Double click (சொல்லின் மீது ) – சொல்லைத் தேர்ந்தெடு .

Triple click (சொல்லின் மீது) – முழு வரியையும் தேர்ந்தெடுக்க. 

Wheel click –ஸ்குரோல் செய்வதனை இயக்க.

Hold Ctrl + Scroll Wheel forward – எழுத்துருவின் அளவை அதிகப்படுத்த 

Hold Ctrl + Scroll Wheel backward – எழுத்துருவின் அளவைக் குறைக்க.


ரூ. 1 விலையில் டவுண்லோட்


பாரதி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஆகஸ்ட் 15ல் தன்னுடைய ரூ.1 எண்டர்டெய்ன்மெண்ட் ஸ்டோரினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. 

இங்கு சென்று, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மியூசிக், வீடியோ, கேம் மற்றும் போட்டோக்களை ரூ.1க்குப் பெறலாம். இணையம் பிரவுஸ் செய்வதற்கும் இதே போல திட்டங்கள் தரப்பட்டுள்ளன. 

இங்கு கிடைக்கும் இந்த வசதிகளை, ஏறத்தாழ 5,500க்கும் மேலான மொபைல் போன்களில் பயன்படுத்தலாம்.

ரூ1 க்கு வீடியோ டவுண்லோட் செய்திடும் வசதியை, ஏர்டெல் சென்ற ஏப்ரல் மாதத்தில் வழங்கியபோது, அது மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, வெற்றியை வழங்கியது. 

இதனைத் தொடர்ந்து, ஏர்டெல் மற்றவற்றையும் ரூ1 க்கு வழங்கும் திட்டத்தினை விரிவு படுத்தியது. இதற்கென நான்கு விளம்பரங்களை, தொலைக்காட்சி சேனல்களில் ஏர்டெல் தொடர்ந்து வழங்கி வருகிறது. 

இந்த ரூ.1 பொழுதுபோக்கு ஸ்டோரினை அணுக, இரண்டு வழிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள், கட்டணமில்லாத தொலைபேசி எண் 56789 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.

இப்போது, அழைப்பவரின் மெசேஜ் இன்பாக்ஸில், எண்டர்டெய்ன்மெண்ட் ஸ்டோருக் கான லிங்க் தரப்படும். இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், வாடிக்கையாளர், ரூ1 ஸ்டோருக்கு எடுத்துச் செல்லப்படுவார். இங்கு அவர் டவுண்லோட் செய்திட ஆப்ஷன்கள் தரப்படும்.

இரண்டாவது வழியில், வாடிக்கையாளர் நேரடியாக, தங்கள் போன் பிரவுசரில், http://one.airtellive.com என டைப் செய்து, தளத்திற்குச் சென்று, தேவையானவற்றை டவுண்லோட் செய்திடலாம். இதே போல Facebook, Yahoomail, Twitter மற்றும் LinkedIn இணைய தளங்களுக்கான நேரடி லிங்க் தொடர்புகளைப் பெற்றுப் பயன்படுத்தலாம். 

ஒரு நாள் மட்டும் இவற்றைப் பயன்படுத்தக் கூடிய திட்டம் தரப்படும். 3 எம்.பி. அளவில் டேட்டா டவுண்லோட் செய்து கொள்ளலாம். அன்றைக்கு நள்ளிரவு வரை இந்த வகையில் பெற்ற வசதியைப் பயன்படுத்தலாம். டேட்டா டவுண்லோட் 3 எம்.பி. என்ற அளவினைத் தாண்டுகையில், கூடுதலான அளவிற்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.


புதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1


வரும் அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். 

விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். 

முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது. 

இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், பல விஷயங்களை முதல் முதலாக இதில் மேற்கொண்டுள்ளது. 

விண்டோஸ் 8.1 தொகுப்பில்தான் முதல் முதலாக மைக்ரோசாப்ட் புதிய வசதிகளை இலவசமாக அமைத்துத் தருகிறது. 

இதுவரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த தவறுகளை நீக்கும் பேட்ச் பைல்களைத்தான் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எண்ணப்போக்கிலும், செயல்முறை யிலும் ஏற்பட்ட நல்லதொரு மாற்றமாகும்.

இந்த புதிய செயல்பாட்டிற்குக் காரணமும் உள்ளது. முன்பு சிடி வழியாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தன. ஆனால், இப்போது இணையம் மூலம் எதனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம். 

சிஸ்டத்தில் மாற்றங்களைத் தயார் செய்தால், பல மாற்றங்களை இணைத்து, பெரிய அளவில் அப்டேட் ஆகத் தராமல், எப்போதெல்லாம் புதிய வசதிகள் வடிவமைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், உடனுக்குடன், அவற்றை இணையம் வழியாகத் தரலாம். 

மேலும் வாடிக்கையாளர்களை என்றென்றும் தங்களுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கையில், மாற்றங்களுடன் கூடிய வசதிகளை இலவசமாகத் தருவதே நல்லது. 

இந்த வகையில், விண்டோஸ் 8.1 வருகையில், விண்டோஸ் 8 பயனாளர்கள் அதனை ஒதுக்க மாட்டார்கள். நிச்சயம் ஏற்றுக் கொண்டு செயல்படுவார்கள். 

1. ஸ்டார்ட் பட்டன், சிறிய லைவ் டைல்ஸ், அளவினை மாற்றி அமைக்கக் கூடிய டைல்ஸ், மற்றும் ஒருங்கிணைந்த தேடுதல் வசதி. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கேட்ட ஸ்டார்ட் பட்டன், திரையின் இடது புறம் கீழாக உள்ளது. 

இதனைக் கிளிக் செய்தால், ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்பட்டு, அதில் சில சொற்களை அமைத்துத் தேடி, நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பெறலாம். 

ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ், டாஸ்க் மேனேஜர், தேடல் கட்டம் மற்றும் பயனுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்கள் தரப்படுகின்றன. 

இந்த பாப் அப் மெனுவின் கீழாக, சிஸ்டத்தை ஷட் டவுண் செய்திட, ரீஸ்டார்ட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. (விண்டோஸ் 8ல், திரையின் மேல் வலது மூலைக்குச் சென்று, கீழாக இழுத்து, செட்டிங்ஸ் கிளிக் செய்து, பின் பவர் என்பதில் கிளிக் செய்து, அதன் பின் ஷட் டவுண் அல்லது ரீஸ்டார்ட் தேர்ந்தெடுக்க வேண்டியதிருந்தது)

2. டைல்ஸ்களை குரூப்பாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

3. பயனாளர்கள், இப்போது நேரடியாக, டெஸ்க்டாப் நிலைக்கு லாக் இன் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் மெனு சென்று தான் இதனைப் பெற முடியும்.

4. லாக் ஸ்கிரீனிலேயே அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.

5. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவுடன் இணைந்த கிளவ்ட் ஸ்டோரேஜ்.

6. ஒருவழியாக விண்டோஸ் ஸ்டோருக்கான அப்டேட் இதில் கிடைக்கிறது.


செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 எஸ்


ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெருமைக்குரிய மொபைல் போனாகிய ஐபோன் 5 எஸ், வரும் செப்டம்பர் 10ல் வெளியிடப்படக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. 

இத்துடன், குறைவான விலையிடப்பட்ட ஐபோன் மாடல் ஒன்றும் வெளியாகும் எனத் தெரிகிறது. இது ஐபோன் 5 சி என அழைக்கப்படலாம். 

ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் பதியும் வேகம் கொண்டதாக இருக்கும். 

தற்போதைய ஐபோன் கேமராக்கள், விநாடிக்கு 30 பிரேம் பதியும் திறன் கொண்டுள்ளன. இதனால், புதிய போனைக் கொண்டு ஸ்லோ மோஷன் திரைப்படங்களைக் கூடப் பதியலாம்.

ஆப்பிள் ஐபோன் சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையைக் குறைக்க முடிகிறது. 

தற்போது விலை குறைந்த மற்றும் மத்திய நிலையில் விலையிட்டுள்ள, ஸ்மார்ட் போன்களே, மொபைல் சந்தையில் கோலோச்சிக் கொண்டுள்ளன. 

இதனாலேயே, குறைவான விலையில் மாடல் ஒன்றைக் கொண்டு வருவதில் ஆப்பிள் குறியாய் உள்ளது. 

இந்த விலை குறைவான மாடல் மூலம், மொபைல் சந்தையில், தன்னுடைய ஸ்மார்ட் போனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், நாம் காத்திருந்து இந்த இரண்டு மாடல்களும் என்ன தகவல்களைக் கொண்டு வர இருக்கின்றன என்று பார்க்கலாம்.


அமோகமான ஆன்ட்ராய்ட் பயன்பாடு

ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சியில் லாபம் அடைவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். 

அண்மையில், ஐ.டி.சி. வெளியிட்ட அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன் விற்பனை 73.5 சதவீதம் உயர்ந்து, 18 கோடியே 70 லட்சத்தினை எட்டியது. 

மொத்த ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 79.3 சதவீத போன்களில் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த வளர்ச்சிக்கு, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் பெரும் அளவில் உதவி செய்துள்ளன. இந்நிறுவனம் மட்டும், சென்ற மூன்று மாதங்களில், 7 கோடியே 20 லட்சம் ஆண்ட்ராய்ட் போன்களை விற்பனை செய்துள்ளது.


9 இந்திய மொழிகளில் சாம்சங் அப்ளிகேஷன்கள்


தங்களுடைய காலக்ஸி ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும், ஒன்பது இந்திய மொழிகளில், அப்ளிகேஷன்கள் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. 

இந்த ஒன்பது மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் குஜராத்தி அடங்கும். 

இதனால், ஸ்மார்ட் போன் பயனாளர்கள், இந்த போன்களில் இடைமுகத்தினைத் தங்கள் மொழிகளிலேயே பெற்று, எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம். 

முதலில் காலக்ஸி கிராண்ட், காலக்ஸி எஸ்4 மற்றும் காலக்ஸி டேப் 3 ஆகியவற்றில், ஆகஸ்ட் 13 முதல் இந்த சேவை வழங்கப்படுகிறது. 

பொழுது போக்கு, வர்த்தகம், கேம்ஸ், பாரத் மேட்ரிமனி, இந்தியா ப்ராப்பர்ட்டி, டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் ஆகியவற்றைத் தங்கள் மொழிகளில் சென்று காணலாம். 

ஏற்கனவே சில சேவைகள் வட்டார மொழிகளில் உள்ளன. பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை சில குறிப்பிட்ட போன்களில் மாநில மொழிகளில் கிடைக்கின்றன. 

Reverie language Technologies என்னும் நிறுவனம், Reverie PhoneBook என்ற அப்ளிகேஷனைத் தருகிறது. 

இதனைத் தமிழ் உட்பட பல மொழிகளில் பயன்படுத்தலாம். சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரில் இது கிடைக்கிறது. 

வரும் டிசம்பர் வரை இது இலவசமாகக் கிடைக்கும் என இந்நிறுவனத் தலைமை அதிகாரி கூறியுள்ளார். 

தொடர்ந்து மற்ற போன்களிலும் இந்த மாநில மொழி பயன்பாட்டினை, சாம்சங் தர இருக்கிறது.


விண்டோஸ் 8 - டிபிராக் செயலைக் கட்டுப்படுத்த


விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும். 

இவற்றை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அவை எழுதப்பட்டு அமைக்கப்படும் வழி தான் டிபிராக் ஆகும். இதனை நாமாக மேற்கொள்ளும் வகையிலேயே முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் இருந்தன. 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8, தானாக ட்ரைவ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், டிபிராக் செய்திடுவதை மாறா நிலையில் கொண்டுள்ளது. 

நம் ஹார்ட் டிஸ்க் புதியதாக இருந்தால், ஹார்ட் டிஸ்க் சாலிட் ஸ்டேட் டிஸ்க்காக இருந்தால், ட்ரைவ்களில் மிக அதிகமாக இடம் இருந்தால், இவற்றில் டிபிராக் மேற்கொள்வது தேவையற்ற ஒன்றாகும். 

எனவே இதனை நிறுத்திவிட்டு, சில டிஸ்க்குகளை டிபிராக் செய்வதி லிருந்து விலக்கி வைப்பதும், தேவைப்படும்போது சிலவற்றில் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்வதும் சரியான செயலாகும். 

இதனை எப்படி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் செட் செய்திடலாம் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள், செட்டிங்ஸ் செய்வதற்கான ஒரு வழியைக் காட்டுகிறது. வேறு சில வழிகளும் இருக்கலாம். 

1. ஸ்டார்ட் மெனுவில் defrag என்று டைப் செய்திடவும்.

2. திரையின் வலது பக்கம் “Settings” என்பதில் கிளிக் செய்திடுக.

3. திரையின் இடது பக்கம், “Settings Results for defrag” என்பதற்குக் கீழே “Defragment and optimize your drives” என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

4. டெஸ்க்டாப்பில் “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் “Change settings” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. சிறிய “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். “Drives” என்பதை அடுத்து “Choose” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

6. மூன்றாவதாக, “Optimize Drives” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். எந்த ட்ரைவ் தானாக டிபிராக் செய்யப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 

மற்றவற்றில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதே போல, “Automatically optimize new drives” என்பதில் நம் விருப்பப்படி டிக் அடையாளத்தை அமைக்கலாம். 

7. “Ok” அல்லது “Close” மீது கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.


வேர்ட் 2007ல் வாட்டர்மார்க்


வேர்ட்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் பலர், அதில் ஒரு வாட்டர்மார்க் அடையாளத்தை இணைப்பார்கள். டாகுமெண்ட்டிற்கு அடையாளம் தரும் வகையில் இது அமையும். 

நிறுவனத்தின் பெயர், டாகுமெண்ட்டினை தயாரிப்பவர் பெயர், டாகுமெண்ட்டின் தன்மை (ரகசியம், முதல் நகல், அனுமதிக்கப்பட்டது, போன்றவை) ஆகியவற்றில் ஒன்றை அமைப்பார்கள். 

இது டாகுமெண்ட்டின் பக்கம் முழுவதும் அமையும்படியாகவோ அல்லது டாகுமெண்டைத் தயாரிப்பவர் விருப்பப்படியோ, அதன் டெக்ஸ்ட் தன்மையைக் கெடுக்காமல் அமைக்கப்படும். இதனை வேர்ட் 2007 தொகுப்பில் எப்படி அமைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

வேர்ட் 2007 வாட்டர்மார்க் அமைக்க பல வழிகளைக் கொண்டுள்ளது. வாட்டர்மார்க் அமைக்க மாறா நிலையில், சில வழிகளைக் கொண்டிருந்தாலும், நம் விருப்பப்படியும் இதனை அமைக்கலாம். நாம் விரும்பும் டெக்ஸ்ட், எழுத்துரு, வண்ணம் என எதனை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். 

1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். 

இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 

இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம்.

“No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம். 

படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். 

தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். 

இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். 

இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.


பழைய போன்களுக்கு நோக்கியா லூமியா விலையில் தள்ளுபடி


தன்னுடைய லூமியா 520 மற்றும் லூமியா 620 போன்களை வாங்கத் திட்டமிடுபவரின் பழைய மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு, விலையில் தள்ளுபடி தரும் திட்டத்தினை நோக்கியா அறிவித்துள்ளது. 

ஏற்கனவே இந்த போன்களின் விலை, சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த தள்ளுபடி திட்டத்தினையும் நோக்கியா கொண்டு வந்துள்ளது. 

இதன்படி, மேலே சொல்லப்பட்ட இரு ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புபவர்கள், தங்களின் பழைய மொபைல் போன்களைக் கொண்டு வந்து விலையில் தள்ளுபடி பெறலாம்.

1. லூமியா 520 வாங்க, தள்ளுபடி விலைக்குத் தகுதியான போன்களாக, நோக்கியா ஆஷா 305, 306, 308, 309, 311, லூமியா 510, 610, 710, 800, நோக்கியா 206, இ5, இ71 மற்றும் இ72 ஆகிய நோக்கியா போன்கள் மற்றும்,

1.1சாம்சங் காலக்ஸி ஒய், ஒய் டூயோஸ், காலக்ஸி பாக்கெட் டூயோஸ், எஸ் டூயோஸ், காலக்ஸி சேட், மியூசிக் டூயோஸ், ஏஸ், ரெக்ஸ் 80, ரெக்ஸ் 90.

1.2 சோனி எக்ஸ்பீரியா இ, மினி, நியோ, டிபோ

1.3 மைக்ரோமேக்ஸ் ஏ 87, கேன்வாஸ்2, கேன்வாஸ் எச்.டி.

1.4 எல்.ஜி. குக்கி.


2. லூமியா 620 வாங்க தள்ளுபடிக்குத் தகுதியான மொபைல் போன்கள்:

2.1. நோக்கியா ஆஷா 308, 311, லூமியா 510,610,710,800, இ 72, என்8.

2.2.சாம்சங்: நியோ, காலக்ஸி பாக்கெட் டூயோஸ், ஒய் டூயோஸ், மியூசிக் டூயோஸ், ஏஸ், ரெக்ஸ் 90, எஸ் டூயோஸ், காலக்ஸி யங்.

2.3. பிளாக் பெரி: 8520, 9520, 9300.

2.4. சோனி: எக்ஸ்பீரியா, மினி, நியோ, டிபோ

2.5. எச்.டி.சி:டிசையர் சி, டிசையர் வி

2.6. மைக்ரோமேக்ஸ்:கேன்வாஸ் 2, கேன்வாஸ் எச்.டி.

தள்ளுபடி பெற இந்த போன்களைக் கொண்டு செல்கையில், நீங்கள் தரும் பயன்படுத்திய மொபைல் போன் உங்களுடையதுதான் என்பதற்கான சான்றினைக் கொண்டு செல்ல வேண்டும். போனின் செயல் தன்மைக்கேற்றபடி, ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரை தள்ளுபடி கிடைக்கலாம்.


விண்டோஸ் 8 க்கான ஆண்ட்டிவைரஸ்


1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials): 

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. 

இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://windows.microsoft.com/enus/windows/securityessentialsdownload


2. ஏ.வி.ஜி. (AVG): 

அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். 

இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. 

இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது. இதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://free.avg.com/inen/homepage.


3. பண்டா செக்யூரிட்டி (Panda Security): 

மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம். 

http://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையதளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம்.


4. அவாஸ்ட் (Avast): 

இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. 

வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது. இலவசமாக இதனைப் பெற, நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com


5.பிட் டிபண்டர் ஆண்ட்டி வைரஸ் ப்ளஸ் (Bit Defender Anti Virus Plus): 

இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம். 

ஆன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது. நம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பாப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை. 

இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bitdefender. com/Downloads/


6. அவிரா (Avira): 

அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோ கிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. 

நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது. இலவசமாக இதனைப் பெறhttp://www.avira.com/en/avirafreeantivirus என்ற இணைய தளத்திற்குச் செல்லவும். 


7. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் (Kaspersky Antivirus): 

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. 

வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது. இதனைப் பெறhttp://usa.kaspersky.com/downloads என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

மேலே தரப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன், இன்னும் சில இணைய வெளியில் கிடைக்கலாம். அனைத்து புரோகிராம்கள் குறித்தும் அறிந்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதே நமக்குப் பாதுகாப்பினைத் தரும்.


ஆண்ட்ராய்டு 4.1 கூடிய Sony Xperia M ரூ.12.990


Sony Xperia M ஸ்மார்ட்போன், 4 அங்குல திரை கொண்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான Saholic-ல் இப்போது கிடைக்கும்.  

Saholic ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஸ்மார்ட்ஃபோனை இலவச டெலிவரி வழங்கி வருகிறது. Saholic வலைத்தளத்தில் ஸ்மார்ட்ஃபோன் ரூ.12.990 விலையில் கிடைக்கும் மற்றும் அதே விலையில் Flipkart for pre-order-ல் கிடைக்கும். 

தொலைபேசியில் 4 அங்குல FWVGA காட்சி மற்றும் இரட்டை மைய 1GHz ஸ்னாப்ட்ராகன் S4 செயலியும் உள்ளது. இது ஜெல்லி பீன் உடைய ஆண்ட்ராய்டு 4.1 உருவாக்கத்தில் இயங்கும். 

மற்ற அம்சங்கள் 1GB ரேம், 4GB உள்ளக சேமிப்பு இடம், 5MP பின்புற கேமரா மற்றும் முன் VGA கேமரா அடங்கும். இணைப்பு விருப்பங்கள் GPRS, EDGE, 3G, ப்ளூடூத், 3G, Wi-Fi,, மற்றும் USB ஆகியவை அடங்கும். தொலைபேசி 1750 Mah பேட்டரி, FM ரேடியோ, மற்றும் 32GB எல்லை கொண்ட ஒரு microSD ஸ்லாட் கொண்டிருக்கிறது.


Sony Xperia M அம்சங்கள்:
  1. 4 அங்குல, 480 × 854 TFT காட்சி
  2. 1GHz இரட்டை கோர் ஸ்னாப்ட்ராகன் MSM8227 செயலி
  3. Adreno 305 GPU
  4. ரேம் 1GB
  5. 4GB உள் நினைவகம், 32GB microSD அட்டை வரை வழியாக விஸ்தரிக்கலாம்
  6. ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ப்ளாஷ் ஒளியுடன் 5MP கேமரா
  7. NFC இணைப்பு
  8. நீக்கக்கூடிய 1750 Mah பேட்டரி
  9. 115 கிராம் எடை மற்றும் 9.3 மிமீ மெல்லியதன்மை
  10. ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்.


செவ்வாய் கிரகத்தில் குடியேற 1800 இந்தியர்கள் விருப்பம்


நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. இந்த தன்னார்வ அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

7 டாலரில் முன்பதிவுசெவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம்பிப்பது முதல் அங்கு சென்று வாழும்வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 

2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். 

திடமான மனநிலை உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

1,800 இந்தியர்கள் விருப்பம்: இதில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 1,800ஆக உள்ளது என்றும், இதில் பெரும்பான்மையானோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்நிறுவனத்தின் தகவல் அதிகாரி ஆஷிமா டோக்ரா தெரிவித்துள்ளார். 

கடந்த மே 6ஆம் தேதி பதிவு செய்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாக இருந்தது என்றும் அது இப்போது 1,800ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்குக் காரணம் தங்களின் விண்வெளிப் பயணம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டிருப்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதுமட்டுமின்றி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம், 2013ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிட்டுள்ள செவ்வாய்க் கிரக விண்வெளிப் பயணத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த ஆண்டில் மேலும் 50 இந்தியர்கள் சேர விருப்பம் தெரிவிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. 

மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். 

இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.

செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. 

ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 

செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. 

இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.

2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)

3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. 

4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.

5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது. 

6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.

7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?

எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.

10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.


சாம்சங் கேலக்ஸி கோர்


தொடர்ந்து பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி தன் முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் சாம்சங்க் கேலக்ஸி கோர் ஐ 8262 என்ற பெயரில் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் இரண்டு சிம் இயக்கம், நான்கு பேண்ட் செயல்பாடு, 3ஜி பயன்பாடு ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 129.3 x 67.6 x 9 மிமீ. எடை 124 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4.3 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. 

மல்ட்டி டச் செயல்பாடு கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. 

ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன், 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. 

இதில் ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம், ஸ்மைல் தெரிந்து இயங்கும் தன்மை ஆகிய வசதிகள் சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பிற்கென முன்புறம் ஒரு வி.ஜி.ஏ. கேமரா உள்ளது. 

இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை இயங்குகின்றன. 

இதன் சிபியு 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். 4.1.2 ஜெல்லி பீன் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., இமெயில், புஷ் மெயில், இண்ஸ்டண்ட் மெசேஜிங் ஆகிய வசதிகளும் உள்ளன. 

இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 14 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,449.


தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் போன் மைக்ரோமேக்ஸ் A 34


இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பட்ஜெட் விலையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மொபைல் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. 

அண்மையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, மைக்ரோமேக்ஸ் ஏ34 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் திரை 3.95 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக அமைக்கப்பட்டுள்ளது. ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

மற்ற மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்களைப் போலவே, இதுவும் இரண்டு சிம்களை தனித்தனியே இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. 

எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்ட 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. 

3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, எட்ஜ், புளுடூத், வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை கிடைக்கின்றன. ராம் மெமரி 252 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 165 எம்.பி. ஆகவும் உள்ளது. 

ஸ்டோரேஜ் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி ஆக உயர்த்தலாம். இதன் பேட்டரி 1,350 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 120 மணி நேரம் இதன் மின்சக்தி தங்குகிறது. 

மற்ற நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில், நவீன ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4 வகையினைத் தருகையில், மைக்ரோமேக்ஸ் இதில் ஏன் ஆண்ட்ராய்ட் 2.3.5, ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தருகிறது என்பது தெரியவில்லை. 

இந்த தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனின் விலை ரூ. 4,399. ப்ளிப் கார்ட் இணைய விற்பனை தளத்தின் மூலம் இதனை வாங்கலாம். கருப்பு வண்ணத்தில் இது கிடைக்கிறது.


மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் இனி இல்லை


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தளமான ஸ்கை ட்ரைவ் இனி வேறு பெயரில் அழைக்கப்படும். இந்த பெயர் குறித்த வழக்கு ஒன்றில்,மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிறுவனத்தின் பெயரில் பாதியை ஸ்கை ட்ரைவ் என்பதில் வைத்துக் கொண்டுள்ளது என்றும், மைக்ரோசாப்ட் தன் காப்புரிமையில் தலையிடுவதாகவும் பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் (BSkyB) நிறுவனம் வழக்கு தொடுத்தது. 

தன் பெயரில் உள்ள Sky என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ் என்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களால் அறியமுடியாமல் போய்விடும் என பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது. 

மைக்ரோசாப்ட் இந்த வழக்கை எதிர் கொண்டு,தான் வைத்துள்ள ஸ்கை ட்ரைவ் என்ற பெயர் யாருடைய உரிமையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என வாதிட்டது. 

ஆனால், வழக்கில், சென்ற ஜூன் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்திடக் கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுமா? இழப்பு என ஒன்றும் ஏற்படாது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவ் பெயரை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். 

வழக்கு செலவிற்காக, பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியதிருக்கும். வழக்கு முடிவினால், முதல் முதலாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சேவைக்கான டூல் பெயரினை மாற்ற வேண்டியதுள்ளது. என்ன பெயர் சூட்டப்படுகிறது எனப் பார்க்கலாம்.


ஆப்பிள் ஸ்டோரில் VLC பிளேயர்


2011 ஆம் ஆண்டு, வீடியோலேன் நிறுவனத்தின் வி.எல்.சி. பிளேயர், ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பதிப்பு 2.0.1 என்ற பெயருடன், மீண்டும் அதே ஸ்டோரில் இடம் பிடித்துள்ளது. 

ஐ போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தும் பதிப்பாக இந்த வி.எல்.சி. பிளேயர் இடம் பெற்றது. என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டு, தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இடம் பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் வசதிகள் புதியனவாக இடம் பெற்றுள்ளன. 

வை-பி மூலம் இந்த சாதனங்களுக்கு பைல்களை அப்லோட் செய்திடலாம். ட்ராப் பாக்ஸ் இந்த சாதனங்களுடன் இணைக்கப்பட்டு பைல்களைக் கையாளும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பயன்படுத்தி ஒரு வீடியோ மீடியா லைப்ரேரி ஒன்றை உருவாக்கி நிர்வகிக்கலாம்.

வண்ணக் கலவைகள் எப்படி இருக்க வேண்டும் என இதன் மூலம் செட் செய்திடலாம்.

அனைத்து வகையான பைல்களையும் இதில் இயக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆடியோ ட்ரேக்குகளை இதில் இயக்கலாம். 

நெட்வொர்க் பைல் இயக்கத்திற்கு வழி தரப்பட்டுள்ளது. 

புளுடூத் ஹெட் செட் மற்றும் ஏர் பிளே ஆகியவற்றை இதில் மேற்கொண்டு செயல்படுத்த முடியும்.

இது முற்றிலும் இலவசம் மற்றும் ஓப்பன் சோர்ஸ் தன்மை கொண்டது.

வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ் ஆகியவற்றுக்கும் சப்போர்ட் தரப்படும்.

சென்ற ஆண்டு ஜூலையில், வீடியோ லேன், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான வி.எல்.சி. பிளேயரை சோதனைப் பதிப்பாக வெளியிட்டது. இது இன்னும் சோதனைப் பதிப்பாகவே உள்ளது.

ஆப்பிள் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயரை இயக்க ஐ.ஓ.எஸ். சிஸ்டம் பதிப்பு 5.1 அல்லது அதற்கும் மேற்பட்டது தேவை. 

இந்தியாவின் ஆப்பிள் ஸ்டோரிலும் வி.எல்.சி. மீடியா பிளேயர் இலவசமாகக் கிடைக்கிறது.https://itunes. apple.com/in/app/id650377962 என்ற இணைய தளம் சென்று இதனைப் பெறலாம்.


இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற


இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. 

சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.


1. தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்: 

நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள்http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். 

உங்கள் வீட்டுச் சிறுவன் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும். 

2. கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் (family safety tools) பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன.


2. குடும்ப பாதுகாப்பிற்கான டூல்ஸ்: 

Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை (filters) அமைக்கலாம். 

பாலியல் தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம். 

ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். 

இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். 

கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.


3. சிறுவர்களின் பிரவுசர்களை கண்காணிக்கவும்:

சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர். 

இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.


4. சமூக வளைதளங்கள்: 

உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும். 

ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர். 


5. பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள்: 

உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும். 

“நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். “அப்படி பார்ப்பது நல்லதுதான்” என்று அவர்கள் கொள்ள வேண்டும்.

தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம். 

உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்.


கூகுள் Play டவுண்லோட் எச்சரிக்கை


தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. 

(ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. 

உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், உலகெங்கும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. 

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சென்ற ஏழு மாதங்களில், ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

செமாண்டெக் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. 

இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். 

இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. 

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes