இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் இல்லை

டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து, இரண்டு மாடல்களை வெளியிட்டது. 

ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை. 

சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. (Android Wear SDK) என்ற சிஸ்டத்தினை ஸ்மார்ட் வாட்ச்களுக்கென அறிமுகப்படுத்தியபோது, எல்.ஜி. மற்றும் மோட்டோ நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அறிவித்தன. 

ஆனால், சோனி நிறுவனம் தன் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தவிர்த்து, தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினையே பயன்படுத்த இருப்பதாக அறிவித்தது. 

தன் நிறுவனம், தன்னுடைய சிஸ்டத்தினைத் தயாரிக்க பலரின் முயற்சிகளையும், பணத்தினையும் செலவழித்திருப்பதாகவும், எனவே அதனையே தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. 

இருப்பினும் தன் ஸ்மார்ட் வாட்ச்களில், ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து யோசிக்கும் எனவும் கூறியுள்ளது.


பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரை வெளியில் இருந்து இயக்க

விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது. 

ஏனென்றால், அந்த மால்வேர் அல்லது வைரஸ், முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினைத்தான் முடக்கும். சில மால்வேர் புரோகிராம்கள், தங்களை எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் கண்டறிய முடியாதபடி பதுங்கிக் கொள்ளும். 

சில, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைச் சரியாகச் செயல்பட விடாமல் தடுக்கும். புதியதாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட முயன்றாலும், அது தடுக்கப்படும். 

எனவே, கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் சிஸ்டத்தினை வெளியே இருந்து இயக்கினால்தான், மால்வேர் புரோகிராமின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். இதற்கான தீர்வுகளை, அவற்றைப் பெற நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளை இங்கு காணலாம்.


1. சேப் மோட்: 

இந்த வழி, விண்டோஸ் இயக்கத்திலிருந்து வெளியே இருந்து செயல்படும் வகை அல்ல. மால்வேர் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரை மிகத் தீவிரமாகப் பாதித்திருந்தால், இந்த வழியில் அதனைச் சரி செய்திட முடியாது. 

இந்த வகையில் பூட் செய்திட்டால், தர்ட் பார்ட்டி புரோகிராம் எதுவும் தொடக்கத்திலேயே இயங்காது. எனவே, சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்குகையில், மால்வேர் புரோகிராம் இயங்காது.

இந்த குறைந்த புரோகிராம்கள் இயங்கும் சேப் மோட் சூழ்நிலையில், நீங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடலாம். அதனைக் கொண்டு மால்வேர் இருப்பதனை ஸ்கேன் செய்து அறியலாம். 

அறிந்து அழிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு, மால்வேர் ஒன்றை அழித்த பின்னரும், மீண்டும் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, மால்வேர் தலைகாட்டுகிறது என்றால், சேப் மோடில் பூட் செய்து, கம்ப்யூட்டரைச் சரி செய்திட முயற்சிக்க வேண்டும்.

விண்டோஸ் 7 அல்லது அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், சேப் மோடில் நுழைய, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடத் தொடங்கியவுடன், F8 கீயை அடுத்தடுத்து தட்ட வேண்டும். கருப்பு திரையில் நெட்வொர்க்கிங் திரை காட்டப்பட்டு, எப்படி விண்டோஸ் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கு ஆப்ஷன்கள் காட்டப்படும். 

அதில் Safe Mode அல்லது Safe Mode with Networking என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால், இணையத்திலிருந்து புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பெற்று, இன்ஸ்டால் செய்து, தொடர்ந்து அதனை இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கலாம்.


2. ஆண்ட்டி வைரஸ் பூட் டிஸ்க்: 

ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள், உங்கள் கம்ப்யூட்டரை பழுது பார்க்கவும், ஸ்கேன் செய்திடவும் பூட் டிஸ்க்குகளை உருவாக்கும் வழிகளைத் த்ருகின்றன. இந்த டூல்களை ஒரு சிடி அல்லது டிவிடியில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 

பின்னர், அதன் மூலம் கம்ப்யூட்டரை பூட் செய்தால், ஆண்ட்டி வைரஸ் நிலை ஒன்றில் கம்ப்யூட்டர் பூட் ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டரை சரி செய்திடலாம். மால்வேர்களை நீக்கலாம்.


மொபைல் போன் பேட்டரி பராமரிப்பு

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.

* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.

* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.

* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது. 

* ஈரம் மற்றும் அதிக சூடு, இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். 

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும். 

* தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

* சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு கூடுகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.

* எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது. 

* பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.


கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்

பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். 

ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது போலவே தான், நம் வீட்டில் செயல்படும் வண்ணத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகளையும் பராமரிக்கிறோம். பல வேளைகளில், கண்ணாடியில் படிந்துள்ள கறைகளைப் போக்கும் சொல்யூசன்களைப் பஞ்சு அல்லது துணியில் நனைத்து, இந்த திரைகளைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது சரியா? இல்லை எனில் சரியான வழி என்ன என்று இங்கு பார்க்கலாம். கீழே என்ன என்ன வழிகளை மேற்கொள்ளலாம்; எவற்றை மேற்கொள்ளக் கூடாது எனத் தரப்பட்டுள்ளது.


மேற்கொள்ளக் கூடாதவை: 

ஏரோசால் எனப்படும் கிளீனர் சொல்யூசன்களைத் திரையின் மீது ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யக் கூடாது. சிறிய அளவில் வெதுவெதுப்பான நீர் தவிர வேறு எதனையும் கொண்டு, திரைகளைச் சுத்தம் செய்தல் அதற்கு தீங்கு விளைவிக்கும். 

இது தவிர எந்த வேறு ஒரு திரவத்தினையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு திரவத்தினையும் நேரடியாகத் திரை மீது தெளித்தலும் கூடாது. 

சுத்தம் செய்திட கனமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. திரையில் எளிதில் நீங்காத கறை இருந்தால், அதனை நம் நகம் அல்லது கூரான வேறு சாதனம் பயன்படுத்தி நீக்கக் கூடாது. 


மேற்கொள்ளக் கூடியவை: 

மெல்லிய, உலர்ந்த, கறை எதுவும் இல்லாத, முடிந்தால் மைக்ரோ பைபர் இழையிலான துணி கொண்டு தான், இந்த வகை திரைகளைச் சுத்தம் செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நீர் மற்றும் மென்மையான சோப் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்திடலாம். 

முதலில் உலர்ந்த மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடவும். இதற்கு சில அழுக்குகள் போகவில்லை என்றால், இரண்டு தனி துணிகளை எடுத்துக் கொள்லவும். 

சிறிய அளவில் மென்மையான சோப் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை இதில் சிறிய அளவில் நனைத்து திரையைச் சுத்தம் செய்திடவும். 

பின்னர், அதனையே நீரில் சோப் நீங்கும் அளவிற்கு அலசி, பின்னர் நன்றாகப் பிழிந்து, அதனைக் கொண்டு சுத்தம் செய்திடவும். இறுதியாக, உலர்ந்த இன்னொரு துணியைக் கொண்டு சுத்தம் செய்திடவும். 

ஐ பேட் போன்ற சாதனங்களின் திரையைச் சுத்தம் செய்திடவும் இந்த வழிகளைப் பின்பற்றலாம்.


அடி பணிந்த மைக்ரோசாப்ட்

சென்ற வாரம், தன்னுடைய நிறுவனத் தயாரிப்புகளின் இரகசியங்களைத் திருடிய ஒருவரைக் கண்டுபிடிக்க, மைக்ரோசாப்ட் அதன் சர்வர்களில் உள்ள தன் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கடிதங்களைப் படித்த செய்தி வெளியானது. 

இதனைப் பன்னா டெங்கும் உள்ள பெரும்பான்மையான ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செய்கை, அதன் நம்பகத்தன்மைக்கு எதிரானது என்றும், அதன் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களைப் படித்தறிவது நம்பிக்கைத் துரோகம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனமோ, அதற்கான ஒப்புதலை, மின் அஞ்சல் கணக்கு தொடங்கும்போதே வாடிக்கையாளர்கள் தந்துள்ளனர் என்று கூறியது. 

நாம் இமெயில் அக்கவுண்ட் தொடங்குகையில், ஒத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் இந்த பிரிவும் இருந்ததனைப் பின்னர் அனைவரும் தெரிந்து கொண்டனர்.

இருப்பினும் வாடிக்கையாளர்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, இனிமேல், தங்கள் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள, நிறுவனத் தகவல்களை யாரேனும் திருடு கிறார்கள் என்று தெரிய வந்தால், சர்வர்களில் உள்ள தகவல்களை மைக்ரோசாப்ட் தெரிந்து கொள்ள முயற்சிக்காது எனவும், திருட்டு குறித்து காவல்துறைக்குத் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நிறுவனத்தின் சட்டம் மற்றும் நிர்வாகத் திற்கான பிரிவின் துணைத் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

வருங்காலத்தில், வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்படும் மின் அஞ்சல் சேவை குறித்த ஒப்பந்தத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.


நோக்கியாவின் 20 ஆண்டு விழாவிற்கான ட்யூன்நீங்கள் நோக்கியா 2011 மாடல் போன் ஒன்றை வாங்கி இருந்தால், அதில் உள்ள நோக்கியாவிற்கு மட்டுமே உரித்தான ரிங் டோனைக் கேட்டிருப்பீர்கள். 

சென்ற 1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த ட்யூன் நோக்கியா போனுடன் தரப்பட்டு வருகிறது.

தன்னுடைய லூமியா விண்டோஸ் போன்களில் அமைக்க, இதே ட்யூனின் திருத்தப்பட்ட பதிப்பினை அமைத்துத் தர போட்டி ஒன்றை, 2011 ஆம் ஆண்டில் நோக்கியா அறிவித்திருந்தது. 

இதே போட்டியை, இந்தியா உட்பட பல நாடுகளில் 2012 ஆம் ஆண்டிலும் அறிவித்தது.

இது குறித்து, இந்த ட்யூனை அமைப்பதில் துணை புரிந்த இசை அமைப்பாளர் தாமஸ் டோல்பி குறிப்பிடுகையில், இந்த குறிப்பிட்ட ட்யூன் 150 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டதாகவும், அதன் திருத்திய பதிப்பு 1902 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டதாகவும் கூறி உள்ளார். 

இந்த ட்யூனின் பெயர் Grande Valse. 1902ல் உருவாக்கப்பட்ட இந்த ட்யூன், 92 ஆண்டுகள் கழித்து, நோக்கியா மாடல் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

உங்களிடம் நோக்கியா போன் இருந்தால், மேலே தரப்பட்ட தகவல்களுடன் இந்த ட்யூனைக் கேட்டுப் பார்க்கவும்.


2014 - ல் எந்த பிரவுசர் செயல்திறன் மிக்கது?

முன்னொரு காலத்தில், இணையப் பயன்பாடு மக்களிடம் ஊன்றத் தொடங்கிய பொழுதில், அனைவரும் ஏறத்தாழ நெட்ஸ்கேப் (Netscape) கம்யூனிகேடர் என்ற பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர். 

எல்லாரும் அதனைப் பயன் படுத்துவதில் மனநிறைவு கொண்டனர். தொடர்ந்த காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் வந்தன. 

பயனாளர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல் தன்மையின் அடிப்படையில், தர வரிசையில் வைத்தனர். இருப்பினும், அனைவரின் ஏகோபித்த பிரவுசராக நெட்ஸ்கேப் பல காலம் இருந்து வந்தது.

ஆனால், இப்போது பிரவுசர்களை வெகு எளிதாக ஒப்பிட முடியாது. பிரவுசர் ஒன்றின் செயல் தன்மைகள் பலவாறாகப் பெருகி உள்ளன. வாடிக்கையாளர்கள், தங்களின் தேவைகளின், எதிர்பார்ப்பின் அடிப்படையில் அவற்றிற்கு மதிப்பளித்தனர். மேலும், தற்போதைய பிரபலமான பிரவுசர்கள், ஒவ்வொரு 14 நிமிடத்திலும் அப்டேட் செய்யப்படுகின்றன. 

புதிய வசதிகள் தரப்படுகின்றன. எனவே, மிக நல்ல பிரவுசர் எது என உடனடியாக முடிவிற்கு வர இயலவில்லை. மேலும், கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையிலும், பிரவுசரின் செயல்திறன் கணிக்கப்படுகிறது. 

எக்ஸ்பி என்றால் ஒரு பிரவுசரையும், விண்டோஸ் 8 என்றால், இன்னொரு பிரவுசரையும், மேக் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர் எனில் அதன் தன்மை, எதிர்பார்ப்புகள் வேறாகவும் தற்போது உள்ளன. எனவே, நல்ல, பயனுள்ள பிரவுசர் எது என முடிவு செய்திட, பிரபலமாக உள்ள பிரவுசர்களின் இயக்கத்தை அவற்றின் அண்மைக் கால பதிப்புகளைக் கொண்டு பார்க்கலாம். 

விண்டோஸ் இயக்கத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11, பயர்பாக்ஸ் 28, குரோம் 33, ஆப்பரா 20 மற்றும் சபாரி 5.1.7 ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 ஆகியவற்றில் இயங்கு பவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


1. வேகமான இயக்கம்: 

பிரவுசர்களின் இயக்க வேகத்தின் அடிப்படையில் முதலில் பார்க்கலாம். வேகத்திறனை சோதனை செய்திட நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல புரோகிராம் Sunspider. இதனைக் கொண்டு சோதனை செய்ததில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி என்ற வரிசையில் இடம் பிடித்தன. 


2. ஆட் ஆன் தொகுப்புகள்: 

பிரவுசர்களில் கூடுதல் வசதிகள் பெற, இப்போது அனைத்து பிரவுசர்களும், ஆட் ஆன் தொகுப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் தொடக்க நிலை தொட்டு முதல் இடத்தில் இருப்பது பயர்பாக்ஸ் தான். அடுத்து குரோம் மற்றும் ஆப்பரா ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த வகையில், சபாரி இறுதி இடத்தையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதற்கு முந்தைய இடத்தைப் பெறுகிறது. 


3. விண்டோஸ் 8க்கான பிரவுசர்: 

முன்பே குறிப்பிட்டபடி, நாம் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற பிரவுசரைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கூறியபடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேகத்தில் முதலிடம் பெறுகிறது. பயர்பாக்ஸ், விண் 8 சிஸ்டத்திற்கு பிரவுசரை மாற்றி வடிவமைக்கும் திட்டத்தினைக் கைவிட்டு விட்டது. 

எனவே, விண் 8 சிஸ்டத்தில் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் பி.சி.களுக்கு, இன் டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றுதான் சரியான பிரவுசராக நமக்குக் கிடைக்கிறது. ஆனால், தொடு உணர் திரை இல்லாத கம்ப்யூட்டர்களுக்கெனப் பார்க்கையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் வளைந்து விரிந்து கொடுத்து கூடுதல் வசதிகளைத் தருவதாக உள்ளது.


4. விண்டோஸ் 7: 

இதே நிலை விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் பொருந்தும். வேகத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூடுதல் வசதிகளுக்கு பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களைக் கொள்ளலாம்.


5.பிறர் அறியா தேடல்: 

மற்றவர்கள் நம் தேடலை அறிந்திடாமல் இருக்க அனைத்து பிரவுசர்களும், பிரைவேட் மோட் அல்லது இன் காக்னிடோ மோட் போன்ற நிலைகளைத் தருகின்றன. ஆனால், தன்னிலை அறியக் கூடாத தன்மையில், இணையத்தில் உலா வர வேண்டும் என விரும்பினால், அதற்கென கிடைக்கும் தர்ட் பார்ட்டி ஆட் ஆன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். 

அந்த வகையில், HTTPS Everywhere, Disconnect மற்றும் AdBlock Plus ஆகியவை கிடைக்கின்றன. பொதுவாக, இது போன்ற தன்னிலை தெரியாமல் பிரவுஸ் செய்திட விரும்புபவர்கள், கூடுதல் வசதி களையும் எதிர்பார்க்கின்றனர். அந்த அடிப் படையில், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் முதலிடம் பெறுகின்றன.


6. எச்.டி.எம்.எல்.: 

எச்.டி.எம்.எல். பார்மட்டில் பிரவுசர் இயக்கத்தை விரும்புபவர்களுக்கு, குரோம் பிரவுசர், மற்ற அனைத்து பிரவுசர்களைக் காட்டிலும் சிறப்பான ஒன்றாக அமைகிறது. அடுத்த நிலையில், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா ஆகியவை உள்ளன.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் பிரவுசரை தேர்ந்தெடுப்பதில் வழி காட்டுபவையாகவே கொடுக்கப்பட்டுள்ளன். உங்களுடைய தேவைகள் மற்றும் பழகிய நிலைகளே, உங்களுக்கான சரியான பிரவுசரைத் தேர்ந்தெடுப்பதில் அடிப்படையாக அமையும்.


பத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்

ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. 

அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர். 

அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும். 

ஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள். 

ஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நிலை நிறுத்தி வருகிறது. 

(தற்போது அனைத்து கூகுள் சேவைகளுக்குமாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இடம் இலவசமாக வழங்கப்படுகிறது)

1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனம் வெளியானது. அப்போது பிரபல மாயிருந்த ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவைகளை கூகுள் ஊதித் தள்ளிவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

அதிகமான ஸ்டோரேஜ் இடம், இடைமுகம், உடனடித் தேடல் மற்றும் பிற வசதிகளுடன், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது கூகுள்.

கூகுளின் ஜிமெயில் கூறுகளைப் பார்த்த பின்னர், இணையம் இந்த வழியில் தான் செல்லப் போகிறது என அனைவரும் எண்ணத் தொடங்கினர். அஞ்சல் செய்திகளில் உள்ள சொற்களைத் தேடிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கிய போது, கூகுள் தொட்ட விளம்பர அலாவுதீன் பூதத்தின் வர்த்தகத் திறனை அனைவரும் உணர்ந்தனர். 

கூகுள் இவ்வாறு நம் அஞ்சல் செய்திகளைத் தேடி அலசித் தெரிந்து கொள்ளலாமா? அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா? என்ற கேள்விகள், இன்றைய அளவிலும் கேட்கப்பட்டு விடை காண முடியாத நிலையில், திருடன் போலீஸ் விளையாட்டாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது. 

கூகுள் நிறுவனம் திடீரென ஜிமெயில் கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. மூன்று ஆண்டுகள், இதற்கென பெரிய வல்லுநர் குழு ஒன்று உழைத்தது. பலமுறை, இது சாத்தியமா, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அந்த குழுவினருக்கு வந்தது. ஆனால், வெளி வந்த போது, இணைய உலகிற்கே அது சாதனைக் கணமாக அமைந்தது.

கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களை, அவர்களின் வேலை நேரத்தில் 20 சதவீத நேரத்தைத் தாங்கள் புதியதாக முனைய விரும்பும் திட்டங்களில் செலவிட அனுமதித்தது. அப்படிப்பட்ட நேரத்தில், பல வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஜிமெயில். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் Paul Buchheit ஆகஸ்ட் 2001ல் இதனைத் தொடங்கினார். 

ஆனால், இதற்கான விதை அவர் மனதில், கூகுள் நிறுவனத்தின் 23 ஆவது ஊழியராகச் சேர்வதற்கு முன்னரே, 1996 ஆம் ஆண்டிலேயே இருந்து வந்ததாக அவர் குறிப்பிடுவார். "பயன் தரத்தக்க ஒன்றை அமைத்துவிடு; பின்னர் அதனைத் தொடர்ந்து மேம்படுத்து என்பதே என் பணித் திட்டத்தின் தாரக மந்திரமாக இருந்தது” என்று அவர் அடிக்கடி கூறுவார். 

ஜிமெயில் திட்டம் முதலில் Caribou என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. புக்கெயிட் முதலில் தன் மின் அஞ்சல்களுக்கான தேடல் சாதனம் ஒன்றைத் தனக்கென வடிவமைத்தார். பின்னர், அதனையே ஏன் மற்றவர்களுக்கான அஞ்சல் சேவையோடு தரக் கூடாது என்று இலக்கை அமைத்துக் கொண்டு செயலாற்றினார்.

வேறு எந்த மின் அஞ்சல் சேவைத் தளமும், அஞ்சல்களில் தேடும் சாதனத்தைத் தராத நிலையில், புக்கெயிட் அதனைத் தந்தது, உலகைத் திருப்பிப் பார்க்க வைத்தது. 

அடுத்த இதன் சிறப்பம்சம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்த இடம் தான். ஹாட் மெயில் போன்றவை, மெகா பைட் அளவில் சிறிய இடத்தைத் தந்து வந்த நிலையில், ஒரு கிகா பைட் என்ற அதிக பட்ச உயரத்தை எட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் இழுத்தது. இதுவே, மின் அஞ்சல் சேவையினை மையமாகக் கொண்டு, கூகுள், ஓர் இணையப் பண்பினை வளர்த்துக் கொள்ள உதவியது.


வேர்டில் பிரச்னை - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

சில வாரங்களாக, வேர்ட் தொகுப்பில் உள்ள குறியீட்டுப்பிழை வழியாக, ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. 

மைக்ரோசாப்ட் வழங்கும் அவுட்லுக் 2007, 2010, 2013 தொகுப்புகளின் மாறா நிலை டாகுமெண்ட் வியூவராக, புரோகிராமில் இணைந்ததாக வேர்ட் இயங்குகிறது. 

இதில் அமைக்கப்படும் ஆர்.டி.எப். படிவ பைல்களில் உள்ள பிழைக்குறியீடுகளை, ஹேக்கர்கள் பயன்படுத்தி, கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களைத் திருடி வருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பைல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கம்ப்யூட்டரில் நுழையும் ஒருவருக்கு, அதன் அட்மினிஸ்ட்ரேட்டருக்கான உரிமையை வழங்குகின்றன. 

இதுவரை, வேர்ட் 2010 தொகுப்பில் மட்டுமே இந்த பிழை இருந்ததை மைக்ரோசாப்ட் உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போதுதான், இந்த குறியீட்டுப் பிழை வேர்ட் 2003 முதல் வேர்ட் 2013 வரை உள்ளதை மைக்ரோசாப்ட் அறிந்துள்ளது.

மைக்ரோசாப்ட் இதற்கான பாதுகாப்பினை வழங்கும் பேட்ச் பைல் தயாரிக்கும் வரையில், வாடிக்கையாளர்கள் கீழே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

1. அவுட்லுக் தொகுப்பில் மெயில்களை, டெக்ஸ்ட்டில் (plain text) பார்மட்டில் மட்டுமே படிக்கும் வகையில் செட் செய்யப்பட வேண்டும்.

2. கூடுமானவரை RTF பைல்களைத் தவிர்க்கவும். படித்தே ஆக வேண்டும் என்றால், அதனை வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கி, தெளிவு பெற்ற பின்னரே திறந்து படிக்கவும்.

3. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தாமல், குறைந்த பட்ச பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில், ஒரு யூசர் அக்கவுண்ட்டில், மின் அஞ்சல்களைப் பார்வையிட வேண்டும். 

கம்ப்யூட்டரில் பார்க்கும் வேலைகளையும் இதன் வழியே பார்க்கலாம். இதனால், கம்ப்யூட்டர் இந்த வழியில் பாதிக்கப்பட்டாலும், ஹேக்கர்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட் வழி கிடைக்காது. குறைந்த பட்ச அனுமதி தரும் யூசர் அக்கவுண்ட் மட்டுமே கிடைக்கும்.

இதற்கான பாதுகாப்பு தொகுப்பினை மைக்ரோசாப்ட் வழங்கும் வரை, Enhanced Mitigation Experience Toolkit (EMET) என்ற தான் தரும் டூலினைப் பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் எச்சரிக்கை ஒன்றையும் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. ஹேக்கர்களின் இந்த முயற்சி, வேர்ட் 2003 தொகுப்பு வழியாகவும் மேற்கொள்ளப்படுகிறது. 

வரும் ஏப்ரல் 8 முதல், இந்த தொகுப்பிற்குத் தரப்படும் பாதுகாப்பு பைல்கள் நிறுத்தப்படுவதால், மிக அதிகமாக ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, இந்த தொகுப்பினைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்குமாறும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் A 177

கூடுதல் திறன் கொண்ட பேட்டரி (3000mAh) ஒன்றுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்மார்ட் போன் Canvas Juice A177. 

இதன் அதிக பட்ச விலை ரூ.8,490. முன்பு Canvas Juice A 77 என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போன் ரூ.8,000 என விலையிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் போன் சற்று சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளது.

இதில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 5 அங்குல WFVGA டிஸ்பிளே, 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, புளுடூத் 4.0, வை-பி, ஜி.பி.எஸ். தொழில் நுட்ப பயன்பாடு, இரண்டு சிம் இயக்கம் எனப் பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 

இ-பே (eBay) வர்த்தக இணைய தளம் மூலம் இதனைப் பெறலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி சகாப்தம் முடிகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், மிகப் பிரபலமான விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வாழ்நாள் ஏப்ரல் 8 அன்று முடிவடைய இருக்கிறது. 

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த சிஸ்டம் இனி கம்ப்யூட்டர்களில் தவிக்க இருக்கிறது. 

13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், இன்னும் உலக அளவில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 

(2009ல் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சிஸ்டம் தான், இன்னும் 50% கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய இலக்கு விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான். 

இந்த ஏப்ரல் 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு விண்டோஸ் எக்ஸ்பி வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் கம்ப்யூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். இந்த நாளுக்குப் பின்னர், குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் பேட்ச் பைல்கள் கிடைக்காது. 

ஏன் எக்ஸ்பி கைவிடப்படுகிறது? மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக எக்ஸ்பி உருவெடுத்தது. 

இதனை அடுத்து வெளியான விஸ்டா, பரிதாபமாக 4% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது எக்ஸ்பி. 

இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற மைக்ரோசாப்ட், விஸ்டாவிற்கு வரவேற்பு கிடைக்காததால், எக்ஸ்பியைக் கைவிட திட்டமிட்டது. பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான சப்போர்ட் பைல்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. 

விண்டோஸ் 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான பைல்களை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக சப்போர்ட் தருவதை நிறுத்துகிறது.

அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயங்கும். 

மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தினை, ஏப்ரல் 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. 

அதாவது, தானாக எந்த கம்ப்யூட்டரும் பாதுகாப்பு தரும் பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடாது. ஆனால், மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஹேக்கர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான பைல்களை வழங்கும்.


போன் மூலம் அறை விளக்கைக் கட்டுப்படுத்த

படுக்கையில் விழுந்தவுடன் தான், அறை விளக்கை அணைத்திருக்கலாமோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். எழுந்து சென்று ஸ்விட்ச் போர்டில் அதனை அணைப்பது சோம்பேறித்தனமாக இருக்கலாம். 

இவர்களுக் காகவே, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் மூலம், கட்டுப்படுத்தக் கூடிய ஸ்மார்ட் பல்ப் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது புளுடூத் தொழில் நுட்பத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட் போன் மூலம் இது போல 64 பல்ப்களின் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். 

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. மூலம், விளக்கின் ஒளியைக் குறைக்கலாம், அதிகரிக்கலாம் அல்லது நிறுத்தலாம். 

இதற்கென மிக விரிவான செட் அப் எதுவும் தேவை இல்லை என சாம்சங் அறிவித்துள்ளது.

இதன் ஒளியை அதன் திறனில் 10% மட்டுமே இருக்குமாறு கட்டுப்படுத்தலாம். 

ஒரு ஸ்மார்ட் பல்ப் தினந்தோறும் நான்கு மணி நேரம் பயன்படுத்தினால், அதன் வாழ்நாள் பயன்பாடு 15 ஆயிரம் மணி நேரம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏறத்தாழ, இது பத்து ஆண்டுகள் காலம் ஆக இருக்கும். இதன் விலை என்னவென்று இனிமேல் தான் அறிவிக்கப்படும்.


மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. 

குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.

1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட் கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன. 

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். 

இந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும்.

2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம். 

இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது. 

இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.

3. இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும். 

4. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம்.

5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். 

முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும். 


உங்கள் ஹாட் மெயிலை படித்த மைக்ரோசாப்ட்

அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்ரோசாப்ட் , அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது. 

அப்போது, ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது. அப்போதுதான் இந்த உண்மை உலகிற்குத் தெரிய வந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், எப்படி ஹாட்மெயில் தளத்தில் உள்ள அதன் பதிவு பெற்ற சந்தாதாரர்களின் மின் அஞ்சல்களைப் படிக்கலாம்? எனப் பலர் கேள்வி கேட்டனர். அதற்கு, மைக்ரோசாப்ட், அதற்கு அனைத்து சந்தாதாரர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர் என்று மைக்ரோசாப்ட் பதிலளித்தது. அப்படியா? என்று வியப்பதற்கு முன்னால், இன்னும் ஒரு செய்தி.

நாம், ஹாட்மெயில் தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அமைக்கும்போது, அதற்கான அந்நிறுவனத்தின் விதிமுறைகளை முழுமையாகப் படிப்பதில்லை.

சிறிய எழுத்துக் களில் மிக நீளமாக இருப்பதனைப் பொறுமையுடன் படிக்க இயலாமல், அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக Accept என்ற பட்டனில் கிளிக் செய்து, அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம். 

இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், Microsoft 'may access or disclose information about you, including the content of your communications.' எனத் தரப்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது. 

இதனால், அனைவரின் அஞ்சல்களையோ, வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களையோ, மைக் ரோசாப்ட் தொடர்ந்து படித்து வெளிப்படுத்துகிறது என்று எண்ண வேண்டாம். 

கிடைக்கும் தகவல்கள், மேலே சுட்டிக் காட்டப்பட்டது போன்ற சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும் என எண்ணினால், மைக்ரோசாப்ட் அவற்றை அணுகி, படித்துத் தெரிந்து கொள்கிறது.

இதனை அடுத்து, கூகுள் மற்றும் யாஹூ மின் அஞ்சல் தளங்களின் சேவைகளுக்கான நிபந்தனைகளைப் பார்த்த போது, அவையும் இது போன்ற நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிகளையும் விதித்துள்ளன என்பது தெளிவாகிறது. 

நம்மைப் பற்றிய தகவல்கள் (டேட்டா) அவர்களின் சர்வர்களிலேயே பதிவாவதால், அவற்றை அணுகுவதற்கோ, கைப்பற்றுவதற்கோ, இந்த நிறுவனங்களுக்கு நீதி மன்ற ஆணைகளும் அனுமதியும் தேவை இல்லை.

மைக்ரோசாப்ட் இது குறித்து அறிவித் திருக்கும் நிபந்தனைகள் மற்றும் சேவைக்கான ஒப்பந்த விதிகளை http://blogs.technet.com/b/microsoft_on_the_issues/archive/2014/03/20/strengtheningourpoliciesforinvestigations.aspx என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.


நோக்கியா 220 டூயல் சிம் போன் ரூ. 2749

தொடக்க நிலை போன்களை பட்ஜெட் விலையில் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, அண்மையில், நோக்கியா 220 என்ற மாடல் போனை நோக்கியா வெளியிட்டுள்ளது. 

இது அண்மையில் நடந்த பார்சிலோனா உலக மொபைல் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. 

இதன் அம்சங்கள்: 2.4 அங்குல QVGA 262k எல்.சி.டி. திரை, இரண்டு சிம், இரண்டு அலைவரிசை இயக்கம், நோக்கியா ஆப்பரேட்டிங் சிஸ்டம், 2 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமரா, ப்ளாஷ்லைட், மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய வசதி, தொடர்ந்து 15 மணி நேரம் பேசுவதற்கு மின் சக்தி வழங்கும் 1100 mAh திறன் கொண்ட பேட்டரி எனப் பல சிறப்புகள் இந்த போனில் கிடைக்கின்றன. 

இந்த மாடல் போனின் பரிமாணம் 99.5 x 58.6 x 13.2 மிமீ. இதன் எடை 89.3 கிராம். சிகப்பு, கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது.

இதன் கூடுதல் சிறப்பாக இதில் தரப்படும் நோக்கியா எக்ஸ்பிரஸ் ப்ரவுசரைக் கூறலாம். 

அத்துடன் இணைந்த மைக்ரோசாப்ட் பிங் தேடு தள வசதியும் கிடைக்கிறது. 

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யாஹூ மெசஞ்சர் ஆகிய புரோகிராம்கள் இணைந்து தரப்படுகின்றன.


ஸ்மார்ட் போன் அனைத்திலும் இலவச இணைய வசதி

உலக அளவில், ஏறத்தாழ 700 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை. 

சிலர் இவற்றின் வழியே இணைய இணைப்பு பெறலாம் என்ற நிலையில் அது குறித்து யோசிப்பதே இல்லை. 

சிலர், இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதனையே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நட்பு பாலத்தில் இணைப்பதற்குத் தன் நிறுவனம் உதவியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தினைக் கொண்டு இயங்கும் பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், இணைய இணைப்பினை 

இலவசமாகத் தருவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது. 

பல கோடி மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை இணையத்திற்கென பயன்படுத்தாத நிலையிலேயே, பன்னாட்டளவில், இணையம் வழியேகோடிக்கணக்கான பண மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அனைத்து மக்களும் பயன்படுத்தும் காலம் வருகையில், நிச்சயம் இது பல மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளது. சமுதாய நிலையிலும் மக்களிடையே மாற்றங்கள் பல ஏற்படும். 

எனவே தான், பேஸ்புக் எப்படியாவது, ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இணைய இணைப்பினை இலவசமாக வழங்க முயற்சி எடுக்கிறது. இது குறித்து, ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன், பேஸ்புக் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes