விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்

கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு.

இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும்.

இப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘R’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘H’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும்.

இறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.

யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது.

போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும்.

கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன. இதனை செட் செய்திட என்று Allow/Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம்.

உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.


கம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.

இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.


ராம் (RAMRandom Access Memory):

இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.

பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.

இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.

எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.


ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.

பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.

இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.

தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.

ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.

சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.

அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.

ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.


ஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்

ஆபீஸ் 2013 தொகுப்பின் சோதனை பதிப்பு வெளியாகி நமக்கு பழகிப் பார்க்க கிடைக்கிறது என்றாலும், இன்னும் ஆபீஸ் 2010 தொகுப்பே முழுமையாகப் பழக்கம் இல்லாமல் உள்ளதே என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்துபவர்கள் பலரிடம் உள்ளது.

ஆபீஸ் 2010ன் பல சிறப்பியல்புகளின் பயன்களை நாம் தெரிந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் பலரிடம் பதில் வருகிறது. எம்.எஸ். ஆபீஸ் வரிசையில், ஆபீஸ் 2010 வழக்கமான மாற்றங்கள் என இல்லாமல், பல புதிய வகை மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அவற்றில் புதிய மாற்றங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, மக்களிடையே அதன் அபார வெற்றி உறுதியான பின்னரே, ஆபீஸ் 2010 வெளியானது. விண்டோஸ் விஸ்டா போல, ஆபீஸ் 2007 தொகுப்பு பயனாளர்களிடையே அவ்வளவாக பெயர் எடுக்கவில்லை என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 2010 தொகுப்பினை புதிய இன்டர்பேஸ் மற்றும் பயன்தரும் வசதிகளுடன் வடிவமைத்து வழங்கியது.

இணைய அடிப்படையில், கூகுள் நிறுவனம், தன் கூகுள் டாக்ஸ் வசதி மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு சவாலைத் தந்ததனால், ஆபீஸ் 2010 தொகுப்பினை மிகக் கவனமாக முற்றிலும் புதிய எதிர்பாராத வசதிகளுடன் வடிவமைத்தது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.

தேடல் (Find) கட்டத்தில் நாம் தேடும் டாகுமெண்ட்கள் பட்டியலிப்படுகின்றன. இவற்றின் பிரிவியூ காட்சி தேடப்படும் வகையிலான டாகுமெண்ட்கள் அனைத்திற்கும் கிடைப்பதால், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம்.

ஒரே டாகுமெண்ட்டில் பலர் எடிட் செய்வதனை மிக எளிமையாக்கி உள்ளது ஆபீஸ் 2010. Windows Live account இருந்தால், டாகுமெண்ட்டினை எடிட் செய்கையிலேயே, வேர்டில் இருந்தபடியே, மற்றவருடன் கலந்தாலோசிக்கவும் முடியும்.

இத்தொகுப்பில், நம் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுக்கு shadow, bevel, glow, and reflection போன்ற விசுவல் எபக்ட் தர முடியும். இந்த எபக்ட் அமைத்த டெக்ஸ்ட்களிலும் ஸ்பெல்லிங் சோதனை நடத்த முடியும். இதுவரை படங்களுக்கு மட்டுமே நாம் இணைத்த சில எபக்டுகள், இப்போது டெக்ஸ்ட்களுக்கும் கிடைக்கின்றன.

இதற்கு SmartArt Graphics என்ற வசதி தரப்பட்டுள்ளது. போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் இல்லாமலேயே, இமேஜ்களுக்கு கூடுதல் கிராபிக்ஸ் வசதியினை வேர்ட் தொகுப்பில் இருந்த படியே மேற்கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் பைலை அமைத்துவிட்டு, சேவ் செய்திட மறந்து விட்டால், அதன் ட்ராப்ட் (Draft) பதிப்பை வேர்ட் 2010 வழங்குகிறது.

வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே, ஸ்கிரீன் ஷாட் எனப்படும் திரைக் காட்சிகளை உருவாக்கவும், இணைக்கவும் முடியும். இந்த ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ள Backstage வியூ, வழக்கமான பைல் மெனுவின் இடத்தைப் பிடித்துள்ளது. ரிப்பன் இன்டர்பேஸ் மூலம், மிக விரைவாக கட்டளைகளைப் பெற முடிகிறது.

வேர்ட் 2010 தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம், ஒரே நேரத்தில் நாம் பல மொழிகளைக் கையாளும் வசதி கிடைத்திருப்பதுதான். சொற்கள், சொல் தொகுப்புகள் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை மொழி பெயர்த்துப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழிக்குமான ஸ்கிரீன் டிப்ஸ்களை தனித்தனியே அமைத்துக் கொள்ள முடியும்.


மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84

ஆண்ட்ராய்ட் 2.3.6. சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை எலைட் ஏ84 என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் மல்ட்டி டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

ஜி.எஸ்.எம். அலைவரிசையில் நான்கு பேண்ட் இயக்கத்தில் செயல்படுவதால், இதனை உலகின் எந்த மூலையிலும் பயன்படுத்தலாம்.

5 எம்பி திறனில் பின்புறம் ஒரு கேமராவும், முன்புறம் வீடியோ அழைப்பிற்கென இன்னொரு கேமராவும் தரப்பட்டுள்ளது.

10.6 மிமீ தடிமனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், அக்ஸிலரோமீட்டர், புளுடூத், வைபி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன.

1630 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச மின்சக்தியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 150 மணி நேரம் தங்குகிறது.

இதன் விலை ரூ.10,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் குறைவான விலைக்குக் கிடைக்கிறது.


புதிய வகை மால்வேர் புரோகிராம்கள்

கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோ கிராம்கள், இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதைப் பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.

வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ்,பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கம்ப்யூட்டரில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றிற்கு இடையே, புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஷமூன் (Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர், அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.

செக்யூலர்ட் (Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கம்ப்யூட்டர் ஒன்றினை, இணையம் வழியே கைப்பற்றுகிறது. பிறகு அங்கிருந்து கொண்டு, நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை, திருத்தி எழுதுகிறது.

அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும் (MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.

2010 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.

இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.

எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ, அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.

தாங்கள் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம், வங்கிக் கணக்குகள் அவை குறித்த பாஸ்வேர்ட் உட்பட தகவல்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.

மேலும், கைப்பற்றிய கம்ப்யூட்டர்களைத் தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.

ஆனால், இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.


வேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்

எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பினை தரவிறக்கம் செய்து பார்த்ததில், அதன் அனைத்து கூட்டு தொகுப்புகளும் பல்வேறு புதிய வசதிகளையும், தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது.

தற்போது இந்த சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்ப்போர் தரும் அனுபவங்கள், குறிப்புகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் இறுதி வடிவத்தினை ஆபீஸ் 2013க்குக் கொடுத்து, அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை வர்த்தக ரீதியாக வழங்கலாம்.

இங்கு வேர்ட் 2013 தொகுப்பில் நாம் சந்திக்கும் புதிய வசதிகளையும், தோற்றத்தையும் இங்கு பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் வேர்ட் 2013 தொகுப்பில், ஆபீஸ் 2007/2010ல் உள்ள ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இதில் சில எதிர்பாராத முன்னேற்றமும் காணப்படுகிறது. டாகுமெண்ட்களை சேவ் செய்திடும்போதும், பகிர்ந்து கொள்ளும் போதும் இதனை நாம் அறியலாம்.

ஆபீஸ் 2013 தொகுப்பினை செட் அப் செய்கையில், நம்மை மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றில் நம்மை அறிமுகப்படுத்தச் சொல்கிறது. இந்த அக்கவுண்ட் மைக்ரோசாப்ட் தரும் Windows Live, Hotmail, MSN என எதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

நீங்கள் உங்கள் அக்கவுண்ட் பதிவை இயக்கியவுடன், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் உங்களுக்கென தயாராய் கிடைக்கிறது. இதில் உங்கள் டாகுமெண்ட்களை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்து பதிந்து கொள்ளலாம். இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையினை மைக்ரோசாப்ட் இலவசமாகவே தருகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் தயாரிக்கப்படும் பைல்கள், அவை எடிட் செய்யப்படுகையில், ஸ்கை ட்ரைவில் உள்ள பைலும் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த வகையில் மற்றவர்களுடனும் டாகுமெண்ட்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் வேர்ட் 2013 ஐத் திறந்தவுடன், புதிய டாகுமெண்ட்டுக்கான டெம்ப்ளேட் திரையை நீங்கள் பார்க்கலாம். இதில் உங்களுடைய அண்மைக் கால பைல்களையும், புதிய டாகுமெண்ட் உருவாக்கத் தயாராய் உள்ள டெம்ப்ளேட்டுகளையும் காணலாம்.

இந்த டெம்ப்ளேட்டுகள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், மைக்ரோசாப்ட் ஆன்லைன் டெம்ப்ளேட் டேட்டாவிலும் ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஆன்லைனில் உள்ள டெம்ப்ளேட் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தானாகவே அது உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட்
செய்யப்பட்டு திறக்கப்படுகிறது.

வேர்ட் 2013 தொகுப்பின் மிகப் பெரிய மாற்றம் அதன் சேவ் மெனுவில் உள்ளது. இப்போது மாறா நிலையில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்யப்படுகிறது. இருப்பினும், உங்கள் பைல், உங்கள் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது கம்ப்யூட்டரில் மட்டும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது நெட்வொர்க்கில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சேவ் செய்யப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்பட்டு, நீங்கள் மேற்கொள்ளப்படும் ஆப்ஷன் அடிப்படையில் மட்டுமே பைல் சேவ் செய்யப்படும்.

டாகுமெண்ட் தயாரிக்கப்படுகையில், இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனால், அது குறித்த செய்தி சிகப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. அதாவது, ஆன்லைனில் ஸ்கை ட்ரைவில் பைல் சேவ் செய்யப்படுவது தடைபட்டுவிட்டது என்ற செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இத்தொகுப்பின் பைல் மெனுவில், புதியதாக ஒரு பங்சன் தரப்பட்டுள்ளது. இதனை Share பங்சன் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பை அப்போது பயன்படுத்துபவர் யார் எனக் காட்டப்படுகிறது. யார் எந்த டாகுமெண்ட்டை எடிட் செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் காணலாம்.

நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டை அவர்கள் ""பார்க்க மட்டும்'', அல்லது ""பார்க்கவும் திருத்தவும்'' என இரு நிலைகளில் அனுமதியினை வழங்கலாம். அவர்களை, அவர்களின் இமெயில் முகவரி மூலம் அழைக்கலாம். வேர்ட் தொகுப்பில் இருந்தவாறே அழைக்கலாம்.

டாகுமெண்ட் ஒன்றுக்கு லிங்க் ஒன்று உங்களுக்குத் தரப்படும். எந்த பிரவுசரிலும் இந்த லிங்க்கினைப் பயன்படுத்தி, உங்கள் டாகுமெண்ட்டைப் படிக்கலாம், திருத்தலாம். இதன் மூலம் மற்றவர்கள், அந்த டாகுமெண்ட் சார்ந்து தெரிவிக்க விரும்புவதனை அதில் பதியலாம். அதனை நீங்கள் காணலாம்.

டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே, சமூக வலை தளங்களுக்கு அனுப்புதல், மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற வசதிகளுடன், இப்போது அதனை வலைமனைகளிலும் ஏற்றம் செய்திடலாம். வேர்ட் ப்ரெஸ், டைப் பேட் மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கும் ஷேர் பாய்ன்ட் ஆகியவற்றில் பதித்திடலாம்.

வேர்ட் தொகுப்பிலேயே அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். பார்மட்டுக்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்டிலேயே திறந்து காணலாம். வேர்ட் பைலை அப்படியே பி.டி.எப். பைலாகவும் மாற்றி சேவ் செய்திடலாம். இந்த வசதி இருப்பதனால், படிவங்களில் டேட்டா நிரப்புவது எளிதாகிறது. மற்றும் மற்றவர்கள் நிரப்பிட, படிவம் தயாரிப்பதும் எளிதாகிறது.

அடுத்த குறிப்பிடத்தக்க வசதி, இதில் தரப்பட்டுள்ள ரீடிங் வியூவாகும். டாகுமெண்ட்களை எளிதாகப் பார்த்துப் படிக்க இந்த வியூ தரப்பட்டுள்ளது. குறிப்பாக டச் ஸ்கிரீன் இயங்கும் பெர்சனல கம்ப்யூட்டர்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வியூவில், குறிப்பிட்ட இடத்தை மட்டும் விரல்களால் தேய்த்து ஸூம் செய்திடலாம்;

வலது இடதாக பக்கங்களுக்கிடையே செல்லலாம். ஒரு அச்சடித்த புத்தகத்தை எப்படிக் கையாள்கிறோமோ அதே போல, இந்த வியூவில் டாகுமெண்ட்டினைக் கையாளலாம். இந்த வசதி, வேர்ட் பயன்படுத்தி டாகுமெண்ட்களை உருவாக்குவதைக் காட்டிலும் படிப்பவர்களுக்கு கூடுதல் வசதியினைத் தரும்.

இதுவரை சோதனைப் பதிப்பில் காணப்படும் புதிய கூடுதல் வசதிகள் அனைத்துமே, மிக எளிமையானவையாகவும், புதுமையாகவும், வசதிகள் தருவதாகவுமே உள்ளன. பி.டி.எப். பார்மட்டில் டாகுமெண்ட்களைப் படிக்கையில் ஓர ஒழுங்குமுறை சரியாக அமையாமல் உள்ளது, இது இறுதிப் பதிப்பில் சரி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம்.


அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

எப்.பி.ஐ. என (FBI Federal Bureau of Investigation) அழைக்கப்படும் அமெரிக்க உளவுத்துறை, அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, ""நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள்.

எனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால், குறிப்பிட்ட கட்டணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்'' என அறிவிப்பும், அபராதத் தொகை செலுத்துவதற்கான லிங்க்கும் தரப்படுகிறது.

இது போல நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து எப்.பி.ஐ. அமைப்பின் இன்டர்நெட் குற்றப் பிரிவு அதிகாரி டோன்னா கிரிகோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "" இது Reveton ransomware என்னும் வைரஸால் ஏற்படுகிறது.

பலர் எங்களுக்கு இது குறித்து புகார் அனுப்பி உள்ளனர். பலர் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினை எப்.பி.ஐ. எடுக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேற இதுவரை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கும் அப்டேட் பைல் வெளியிடப்படவில்லை.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் சாதாரணப் பயனாளரால், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீள முடியவில்லை. விரைவில் தீர்வு கிடைக்கலாம்.


இந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்

அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிருத்வி-2 சோதனை இன்று இந்தியா வெற்றிகரமாக முடித்தது. ஒடிசா மாநிலம் பாலாச்சூர் கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்பட்டது.


இந்தியா தரப்பில் அறிவியல் துறையில் தொடர் முன்னேற்றம் கண்டு வருகிறது,. உலக அளவில் உள்ள போட்டிக்கு தாங்களும் தயாராக இருக்கும் பொருட்டு நமது பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் பல்வேறு சக்தி கொண்ட போர் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர்,500 கிலோ எடை அணு‌‌வை சுமக்கும்:


இன்று பிரிதிவி-2 சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது, இந்த ஏவுகணை தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை கொண்டு தாக்கும். 500 கிலோ எடை அணு பொருட்களை சுமந்து செல்லும் . 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.


நோக்கியா 112 டூயல் சிம்

டூயல் சிம் போன்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என உணர்ந்து கொண்ட நோக்கியா நிறுவனம், இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தன் பங்கினைத் தக்க வைக்க, தொடர்ந்து டூயல் சிம் போன்களை வெளியிட்டு வருகிறது.

மேலும் இந்த வகையில் பல மாடல்களை, பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பாகும். அவ்வரிசையில் நோக்கியா 112 டூயல் சிம், தற்போது அதிகபட்ச விலை ரூ. 2,595 எனக் குறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நோக்கியா 110 வெளியானபோது இந்த மொபைல் போன் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் திரை 1.8 அங்குல, 128#160 பிக்ஸெல்கள் கொண்ட டி.எப்.டி. டிஸ்பிளே திரை தரப்பட்டுள்ளது.

நோக்கியா மட்டுமே தரும் ஸ்வாப் வசதியுடன் டூயல் சிம் இயக்கம் கிடைக்கிறது. விஜிஏ கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி கார்ட் சப்போர்ட், புளுடூத், எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன உள்ளன.

இதில் நோக்கியா 105 போன் திறனுடன் தெளிவான ஒலி தரும் லவுட் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் தடிமன் 15.4 மிமீ. எடை 85.5 கிராம். பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களுடன் இணைக்கத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.

40 கேம்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது. 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 14 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் கொடுப்பதுடன், 35 நாட்கள் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வந்துள்ளது.


பாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்

இந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் பாதுகாப்பு வளையத்துடன் கூடிய மூன்று ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்டெல்லார், க்ரேஸ் மற்றும் ஹொரைஸான் (Stellar,Craze,Horizon) எனப் பெயரிட்டுள்ள இவற்றின் விலை ரூ. 6,499 முதல் ரூ. 11,999 வரை உள்ளது.

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவற்றின் பாதுகாப்பினை, ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி என்.க்யூ மொபைல் நிறுவனம் தருகிறது.

வைரஸ் தாக்கம், தகவல் இழப்பு மற்றும் திருடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் இவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் பார்க்கையில் ஏற்படும் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த வகை பாதுகாப்பு மொபைல் போன் விற்பனையில் ஒரு புதிய பரிமாணமாகும். இதுவரை மொபைல் போன் பயன்படுத்துவோர், இதற்கென உள்ள பாதுகாப்பு தரும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

போன் தயாரிப்பாளர்களே இந்த பாதுகாப்பினை வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் தன் விற்பனை ஆண்டுக்கு 60 லட்சம் என்பதிலிருந்து 70 லட்சம் என உயரும் என்று எதிர்பார்க்கிறது. மூன்று போன்களின் அம்சங்கள்:

1. ஸ்பைஸ் ஸ்டெல்லார்:

டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், இதனை அப்டேட் செய்திடும் வசதி, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ப்ராசசர், 245 மெகா ஹெர்ட்ஸ் வேக கிராபிக்ஸ் ப்ராசசர், 512 எம்பி ராம் மெமரி, 4 அங்குல டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கான தனி கேமரா, 7 மணி நேரம் தொடர்ந்து பேசிட மின்சக்தி வழங்கும் 2000 mAh திறனுடன் பேட்டரி, 3ஜி, புளுடூத் மற்றும் வைபி இணைப்பு ஆகியவை இதில் உள்ளன. அதிக பட்ச விலை ரூ. 9,999.


2.ஸ்டெல்லார் ஹொரைஸான்:

டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 4.0. சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், 300 மெகா ஹெர்ட்ஸ் கிராபிக்ஸ், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி பதியப்பட்ட நினைவகம், 5 அங்குல டச் ஸ்கிரீன், 5 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கு முன்புற கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய திறனுடன் 4 ஜிபி உள் நினைவகம், 2250 mAh திறனுடன் பேட்டரி, ஜி.பி.எஸ்., வைபி மற்றும் புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999.


3. ஸ்பைஸ் ஸ்டெல்லார் கிரேஸ் எம்.ஐ.355:

டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம்,இதனை அப்டேட் செய்திடும் வசதி, 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 3.5 அங்குல டச் ஸ்கிரீன், 1420 mAh திறனுடன் பேட்டரி, புளுடூத், வைபி, ஜி.பி.எஸ். ஆகியவை இந்த மொபைல் போனில் தரப்படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,499.

இந்த மூன்று போன்களுடன் ஓராண்டுக்கு, மாதந்தோறும் 100 எம்பி டேட்டா டவுண்லோட் செய்திடும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.


விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை

விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.

"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.

மிகப் பெரிய ஐகான்களுடன், தொடு உணர்வுடன் இயக்கத்தினை அமைத்து, மிக விரைவான இயக்கம் என்ற பொருளினை உணர்த்த, இந்த மெட்ரோ என்ற பெயரினை மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது.

ஆனால், விஷயம் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஜெர்மனியில் "மெட்ரோ ஏ.ஜி.' என்ற நிறுவனம் இந்த பெயருடன் இயங்குகிறது.

எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்திடுகையில், பெயர் காப்புரிமை பிரச்னை ஏற்படும் என, மைக்ரோசாப்டுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட ஐரோப்பிய நிறுவனங்கள் எச்சரித்தன.

தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட மைக்ரோசாப்ட் மெட்ரோ என்னும் பெயரினைக் கைவிடும் முடிவினை எடுத்துள்ளது.

தற்போதைக்கு மெட்ரோ ஸ்டைலை, “Windows 8 Style UI” என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதற்கு வேறு ஒரு பெயரினை அக்டோபர் 26க்குள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விண்டோஸ் 8 டேப்ளட் பிசி

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா, வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகும்போதே, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.

திங்க்பேட் (Thinkpad) லேப்டாப் கம்ப்யூட்டர்களை வெளியிட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழா ஒன்றில், லெனோவா இதனை அறிவித்துள்ளது.

வெளியிடப்பட இருக்கும் டேப்ளட் பிசி Thinkpad Tablet 2 என அழைக்கப்படும். இன்டெல் சிப்புடன், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்கும். தற்போது திங்க்பேட் டேப்ளட் பிசிக்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பதிந்து தரப்படுகிறது.

விண்டோஸ் சிஸ்டத்துடன் டேப்ளட் பிசிக்களைப் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப் பினை, லெனோவா வெளியிட்டுள்ளது.

இன்டெல் நிறுவனத்தின் “Clover Trail” ப்ராசசர், 1,366 x 768 ஐ.பி.எஸ். பேனல் டிஸ்பிளே, 10 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, தேவைகளின் அடிப்படையில் 3ஜி அல்லது 4ஜி, மைக்ரோ எச்.டி.எம்.ஐ. அவுட்புட், யு.எஸ்.பி. போர்ட், 2 எம்பி திறனுடன் முன் பக்க கேமராவும், 8 எம்பி திறனுடன் பின்பக்க கேமரா,விருப்பப்பட்டால் என்.எப்.சி., மற்றும் கைரேகை ரீடர் ஆகியவை இதில் தரப்படுகின்றன. இதன் ஓரத்தில் செருகி வைத்துப் பயன்படுத்த ஸ்டைலஸ் ஒன்றும் கிடைக்கிறது.

இதன் எடை 1 பவுண்டுக்கும் சற்று அதிகமாக உள்ளது. தடிமன் 9.4 மிமீ. விருப்பப்பட்டால், இதனுடன் கீ போர்ட், மூன்று யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் ஈதர்நெட் ஜாக் கொண்ட ஹப் தனியே தரப்படுகிறது.

மைக்ரோசாப்ட் தன்னுடைய சர்பேஸ் ப்ரோ டேப்ளட் பிசியை விற்பனைக்குக் கொண்டு வருகையில், மேலே சொல்லப்பட்ட லெனோவா டேப்ளட் பிசி போட்டியாக இருக்கும். இவற்றின் விலை இனிமேல் தான் தெரிய வரும்.


விண்டோஸ் வேகமாக இயங்க

விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.

தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.

இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.

2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும்.

இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!


புதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மொபைல் கோபுரங்களுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில், புதிய தகவல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம் வழங்கிய அறிவுரையைப் பின்பற்றி இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

மின்காந்த அலைகள் இயற்கைச் சூழ்நிலையில் உயிர்வாழும் தாவரங்களுக்கும் தீங்கு இழைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம், ஓர் ஆய்வுக்குப் பின் தெரிவித்துள்ளது.

எனவே, கூடுமானவரை கூடுதல் கோபுரங்களை அருகருகே அமைப்பதனைத் தடுக்குமாறு தொலைதொடர்புத் துறையினைக் கேட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மின் காந்த அலைகளால், இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை ஆய்வு செய்திட குழு ஒன்றை அமைத்தது. சிட்டுக் குருவிகள் மட்டுமின்றி, தேனீக்களும் மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு கணிசமானது மட்டுமின்றி, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையிலும், இந்த தேனீக்கள் உதவுகின்றன. எனவே தேனீக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அது இயற்கைச் சூழல் கட்டமைப்பினையே பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பறவைகளின் வழக்கமான பறக்கும் வழிகளில் புதிய கோபுரங்கள் அமைக்கப்படக் கூடாது.

அலைகள் பரவுவது, புதிய கோபுரங்களினால், குறிப்பிட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருக்கக் கூடாது.

விலங்குகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் மொபைல் கோபுரங்களை அமைக்கையில், காடுகளுக்கான அமைச்சகத்தினையும், துறையையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் தகவல் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மொபைல் கோபுரங்களில் ஏற்படும் மின் காந்த அலைகள், மனிதர்களின் நலத்தைப் பாதிக்கின்றனவா என்பதற்கு இதுவரை சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது.


ஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்

1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013 ற்கான வேறுபாடு என்ன?
ஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வசதிகளுடன் கூடிய பதிப்பாகும். இதில் டெஸ்க்டாப் புரோகிராம் உண்டு.

ஆபீஸ் 365 புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்று வருபவர்களுக்கு ஆபீஸ் 2013 வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ளல் வசதிகள் கிடைக்கும்.

ஆபீஸ் 365 வர்த்தகம், நுகர்வோருக்கானது, கல்வியாளர்களுக்கானது, அரசுக்கானது எனப் பல பிரிவுகளில் கிடைக்கிறது.


2. ஆபீஸ் 2013 இயக்குவதற்கு ஆபீஸ் 365 தேவையா?

இல்லவே இல்லை. ஆபீஸ் 2013 புரோகிராமினைத் தனியாகக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மைக்ரோசாப்ட் ஆன்லைன் அக்கவுண்ட் ஒன்றுடன் தொடர்பு படுத்தி (விண்டோஸ் லைவ்) இணைய வெளியில் பைல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.


3. ஆபீஸ் 2013 இயங்க தேவையான ஹார்ட்வேர் மற்றும் சிஸ்டம் தேவைகள் என்ன?

ஆபீஸ் 2013 விண்டோஸ் 7 மற்றும் இப்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 8 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இவை இயக்கப்படக் கூடிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களிலும் இயங்கும். குறைந்த பட்சம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் 3.5 ஜிபி காலி இடம் இருக்க வேண்டும்.


4. ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன் சோதனைப் பதிப்பினை எப்படி, எங்கு இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்?

ஆபீஸ் 365 திட்டத்தில் கட்டணம் செலுத்தியவர்கள், நேரடியாக இதனைப் பெறலாம். அணுக வேண்டிய தள முகவரி http://office. com/preview. தனியாக இதனை தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் http://www.microsoft.com/office/preview/en/trymoreproducts என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


5. எப்படி ஆபீஸ் 2013 புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்?

மைக்ரோசாப்ட் ஆன்லைன் போர்டல் தளத்தில் நுழைந்தால், கிளிக் செய்து, தானாக இன்ஸ்டால் ஆகும் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுவதனை இந்த தளம் கண்காணித்துக் கொள்ளும்.

எனவே, இந்த புரோகிராம் இத்தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்யப்படுகையில், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.


கூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்

கூகுள் அண்மையில் தன் தேடல் பக்கத்தில் புதிய வசதி ஒன்றைத் தந்துள்ளது. தேடல் கட்டத்தில், நீங்கள் ஏதேனும் கணக்கீட்டினை (எ.கா. 568*(23+4)–34) டைப் செய்தால், உடனே கால்குலேட்டர் ஒன்று இயக்கிப் பார்க்க உங்களுக்கெனத் தரப்படும்.

இதில் சாதாரண கணக்குகளிலிருந்து சயின்டிபிக் கால்குலேஷன் வரை போட்டுப் பார்க்கலாம். மிகப் பெரிய கட்டங்களில் இந்த கால்குலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக இதன் கட்டங்களை அறிந்து செயல்படலாம்.

இதில் உள்ள எண்களை மவுஸால் கிளிக் செய்து கணக்குகளைப் போடலாம். பார்முலாக்களை அமைத்தும் விடைகளைப் பெறலாம். நாம் அமைக்கும் கணக்குகள் அதன் ஒவ்வொரு படி நிலையிலும் மேலாக நமக்குக் காட்டப்படுகின்றன.

இதனால், நாம் போடும் கணக்கினை எந்த நிலையிலும் நாம் சோதனை செய்து கொள்ளலாம்.

இதுவரை, கூகுள் தேடல் கட்டத்தில், கணக்கினை டைப் செய்து அமைத்தால், உடனே அதற்கான விடை அதே கட்டத்தில் காட்டப்படும். முதல் முறையாக, கூகுள் இப்போது கால்குலேட்டர் ஒன்றைப் பல வசதிகளுடன் நமக்குத் தருகிறது.

இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், தன் தளத்திற்கு வந்தவர்கள், தேவைக்காக வேறு ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது. அனைத்தும் தரும் அட்சய பாத்திரமாக தன் தளம் இருக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு அமைக்கிறது.

ஏற்கனவே சென்ற மே மாதத்தில் கூகுள் Knowledge Graph என்ற ஒரு வசதியை அளித்தது. இதில் ஏறத்தாழ 50 கோடி மக்கள், இடம், பொருட்கள் எனப் பலவகையானவை குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.

இதனால் தேடலுக்கு கூகுள் சென்றவர்கள், மேலும் தகவல்களுக்காக வேறு தளங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தினை கூகுள் குறைக்கிறது.


முந்துகிறது விண்டோஸ் 7

விண்டோஸ் எக்ஸ்பி, மறக்க முடியாத, மறைக்கப்பட முடியாத விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 முந்தியுள்ளது.

அண்மையில் எடுத்த கணக்கின் படி, பன்னாட்டளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் எண்ணிக்கை, விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்து வோரினைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு, மாதந்தோறும் 1% இழந்து வருகிறது. விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது.

விண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

விஸ்டா வெற்றி பெறாத இடத்தில், எப்படி விண்டோஸ் 7 வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மிக உறுதியான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை இயைந்து இணைந்து இயக்குகிறது.

2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


நானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா

நானோ காருக்கு பிரத்யேக வர்த்தக பக்கத்தை டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. இதில், நானோ கார் பிராண்டுடன் டீசர்ட், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் டாடா நானோ கார் ஏழைகளின் கார் என்ற எண்ணத்தை மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், நானோ கார் பிராண்டின் மதிப்பை உயர்த்தும் வகையில், இ-பே ஆன்லைன் இணையதளத்தில் வியாபார பக்கத்தை திறந்துள்ளது.

டீசர்ட்டுகள், கைக்கடிகாரங்கள், தொப்பிகள், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்கள், மினியேச்சர் நானோ கார் மாடல் போன்றவை இந்த ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்க முடியும்.

இதுதவிர, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பலவிதமான சேவைகளை இந்த பக்கத்தில் பெற முடியும்.

இந்தியாவில் தயாரிப்பாகும் கார் மாடலுக்கு இபே ஆன்லைன் ஸ்டோரில் வியாபார பக்கம் திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

மேலும், ஆன்லைனில் கார் புக்கிங் செய்யும் முறை முதன்முதலாக நானோ காருக்குத்தான் அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மொபைல் போனில் செய்திகள்

டிவி மற்றும் செய்திகளை மொபைல் போன் திரையில் விரும்பிப் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அண்மையில் எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் பார்க்கும் 4.8 கோடி பேரில், ஏறத்தாழ 2 கோடி பேர், தங்களின் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான நேரத்தில் மொபைல் போன் திரையில் அவற்றைப் பார்த்து வருகின்றனர்.

இந்தியாவில், மொபைல் போன் பயன்பாடு மற்றும் விளம்பர ஊடகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்னும் அமைப்பு இந்த தகவல்களைத் தந்துள்ளது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இவர்கள் மொபைல் போனில் இன்டர்நெட் மூலம் ஏதேனும் ஒரு தொலைக்காட்சி சேனலைப் பார்க்கின்றனர்.

பலர் தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட இவற்றைக் காண்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இவர்களில் 60% பேர் இந்தப் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 99% பேர் மின்னஞ்சல் பயன்படுத்தவும், 95% பேர் சமூக இணைய தளங்களைக் காணவும் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றுடன், கேம்ஸ், பொழுதுபோக்கு, செய்திகள் பிரிவினைக் காண்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த மொபைல் இன்டர்நெட் பயனாளர்களில் 18% பேர் பெண்கள் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. மின்சக்தி தடை நமக்கு பல இடையூறுகளைத் தந்தாலும், அதுவே மொபைல் இன்டர்நெட் பரவலாகக் காரணமாக இருக்கிறது.

மின் தடை அடிக்கடி ஏற்படுவதனாலேயே மொபைல் இன்டர்நெட்டைப் பலர் பயன்படுத்த விரும்புகின்றனர். மொத்த மொபைல் இன்டர்நெட் பயனாளர்களில் 55% பேர், இந்தியாவின் எட்டு பெரிய நகரங்களில் வாழ்பவர்களாவார்கள்.

ஆனால், இந்த மொத்த பயனாளர்களில் 38% பேர் தங்கள் மொபைல் போனில் எந்தவிதமான பாஸ்வேர்ட் அல்லது வேறு வசதி மூலம் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

இதனைக் கண்டறிந்த நார்டன் நிறுவனம், மொபைல் போன் ஹேக்கிங் வளர்ந்து வரும் இந்நாளில்இது அபாயகரமான ஒரு பழக்கம் என்று கருத்து வெளியிட்டுள்ளது.


கூகுள் டூடில் பார்க்க விருப்பமா?

கூகுள் தன் தேடல் தளத்தில், விடுமுறை நாட்களிலும், சிறப்பு நிகழ்வுகள் கொண்ட நாட்களிலும், தன் கூகுள் லோகோவினை அந்த நாளுக்கேற்ப உருவாக்கும்.

இதனை டூடில் (“Doodle”) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். பின்னர் அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும்.

"அடடா! மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே; காப்பி செய்திடாமல் போய்விட்டோமே' என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர்.

இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் தளம் செல்லுங்கள். சர்ச் கட்டத்தில் “Google Doodles” என டைப் செய்திடுங்கள். முதல் விடையாக www.google.com/doodles/ என்ற தளம் காட்டப்படும்.

இந்த தளம் சென்றால், கூகுள் டூடில்ஸ் அனைத்தும் சேர்த்து வைத்திருப்பதனைக் காணலாம். இடது பக்கம் ஆண்டு வாரியாகத் தேடிக் காணும் வசதியும், வலது பக்கம் நாடு வாரியாகக் காணும் வசதியும் தரப்பட்டிருக்கும்.

இதில் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து காணலாம். இதில் ஏதாவது ஒரு டூடிலில் கிளிக் செய்தால், அதனை ஏன்,எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்ற தகவல் கட்டுரையையும், டூடில் உருவாகும் பல்வேறு படிநிலைகளையும் காணலாம்.


இதுதான் பேஸ்புக் (Facebook)

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி, தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள். அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.

இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.

இது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அடுத்து 2.4% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.

சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.

அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 1.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

எடுத்துக் காட்டாக, ஸ்பேம் மெயில்களை அனுப்பவென்றே சில அக்கவுண்ட்கள் இயங்குகின்றன.


இறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8

முற்றிலும் மாறுபாடான இயக்கமாக வடிவமைக்கப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வரும் அக்டோபர் 26ல் இது வெளியிடப்படும் எனவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.

இதன் முன்னோட்டமாக, சென்ற ஆகஸ்ட் 1 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள, கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து, இனி பொதுமக்களுக்கான வழங்கல் அக்டோபர் 26ல் நடைபெறும். அதே நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டேப்ளட் பிசி, விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் இன்னும் ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. அது இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விலையாகும். சிஸ்டம் பில்டர்கள் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்குக் கூட என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து மைக்ரோசாப்ட் இன்னும் மவுனம் சாதித்து வருகிறது. அதே போல விண்டோஸ் 8 வாங்க விரும்பும் பொதுமக்களுக்கான விலையும் அறியப்படவில்லை.

இந்த முறை மைக்ரோசாப்ட் மக்களின் தேவையைப் பெரிய அளவில் நிறைவேற்றியாக வேண்டும். விண்டோஸ் 8, பொதுமக்களுக்கு வெளியாகும் நாளில், குறைந்தது 5,000 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கவேண்டும். தற்போது ஒரு சில நூறு அப்ளிகேஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன.

விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்கு ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிவித்த நாளில் சரியாக, அதற்குத் தேவையான அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

விஸ்டா சிஸ்டம் 20% பயனாளர்களைக் கூட அடையாத நிலையில், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் சரியாக எடுத்து, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை வெளியிட்டது. இப்போதும் அதே கடப்பாடுடன் மைக்ரோசாப்ட் செயல்படும் என எதிர்பார்ப்போம்.


பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்த

பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக் கொள்கின்றனர். இதற்கான தீர்வினை இங்கு காணலாம்.


1. ப்ளக் இன் நீக்கம்:

ப்ளக் இன் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசர் ப்ளாஷ், சில்வர்லைட், ஜாவா மற்றும் ஆபீஸ் புரோகிராம்களை நிர்வகிக்க உதவுகின்றன. ஆனால், பல ப்ளக் இன் புரோகிராம்கள் நமக்குத் தேவையே இல்லை. இவை இயங்கிக் கொண்டிருப்பதால், பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கம் சற்றுத் தாமதம் அடையலாம். எனவே இவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.

இதில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ப்ளக் இன் புரோகிராம்களை நாம் நீக்கவோ அல்லது அன் இன்ஸ்டால் செய்திடவோ முடியாது; அவற்றின் இயக்கத்தை முடக்கி வைக்கலாம். ஏதேனும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்களை மட்டுமே நீக்கலாம். அந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை நீக்கினால், அவை தாமாக நீக்கப்படும்.

ப்ளக் இன் புரோகிராமினை முடக்கி வைக்க, பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Addons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Addons Manager புதிய டேப் ஒன்றைத் திறக்கும். இந்த டேப்பின் இடது பக்கம் காணப்படும் Plugins டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் முடக்கி வைக்க விரும்பும் ஒவ்வொரு ப்ளக் இன் எதிரே Disable பட்டனை இயக்கிவைக்கவும்.

முடக்கி வைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்கள் கிரே கலரில் காட்டப்படும். இவை மீண்டும் இயக்கப்பட வேண்டுமாயின், இங்கு மீண்டும் சென்று, Disable பட்டனைத் தேர்ந்தெடுத்ததை ரத்து செய்திட வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் ப்ளக் இன் பட்டியலில் இறுதிக்குக் கொண்டு செல்லப்படுவதனைக் காணலாம்.

சில ப்ளக் இன் புரோகிராம்களிலேயே அவற்றை அன் இன்ஸ்டால் செய்திட வழி காட்டப்பட்டிருக்கும். அவை தேவை இல்லை எனில் அன் இன்ஸ்டால் செய்துவிடலாம். ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கி வைப்பதில் கவனம் வேண்டும். Flash புரோகிராமிற்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கக் கூடாது. ஏனென்றால், இணையத்தில் இவை அடிக்கடி தேவைப்படும்.


2. எக்ஸ்டன்ஷன் நீக்கம்:

பயர்பாக்ஸ் பிரவுசர் அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றது. பலர் இதற்கென இவற்றை வடிவமைத்து இணையத்தில் இலவசமாகத் தந்து வருகின்றனர். பலவற்றை, மொஸில்லா தன் இணையதளத்தில் தருகிறது.

விளம்பரங்களைத் தடுக்க, வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, சமூக வலைத் தளங்களில் இணக்கமாகச் செயல்பட, ஏன் மற்ற பிரவுசர்களுக்கான கூடுதல் அம்சங்களை இங்கு பயன்படுத்த என எத்தனையோ பணிகளுக்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.

எந்த அளவிற்கு இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு பயர்பாக்ஸ் வேகம் குறைவாக இருக்கும். எனவே தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இயங்கா நிலையில் அமைப்பதே நல்லது.

மேலே கூறியபடி Addons Manager ஐத் திறக்கவும். இங்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் பட்டியல் கிடைக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையில்லையோ, அவற்றின் எதிரே உள்ள Disable பட்டனை இயக்கிவைக்கவும். பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்திட உங்களிடம் அனுமதி கேட்கும். கொடுக்கவும். அப்போதுதான், நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு அமலுக்கு வரும்.


3. பிரவுசிங் டேட்டா நீக்கம்:

பயர்பாக்ஸ் நாம் இணையத்தில் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வரும். தேடல்கள், தள முகவரிகள், குக்கீகள் எனப் பல வகையான பைல்களாக இவை இருக்கும். இவை தொடர்ந்து சேரும்போது, இவற்றின் சுமையால், பிரவுசர் வேகம் குறைந்து இயங்கலாம். எனவே இவற்றை நீக்குவது நல்லது.

இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, History | Clear Recent History எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Clear Recent History டயலாக் பாக்ஸில், பலவிதமான ஆப்ஷன் கிடைக்கும். குறிப்பிட்ட நாள் குறித்து பிரவுசிங் ஹிஸ்டரியை நீக்கலாம். அல்லது அனைத்தையும் நீக்கலாம். அழித்துவிட்டால், மீண்டும் கிடைக்காது என்று அப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அழிப்பது உறுதியாகிவிட்டபடியால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

அனைத்தையும் நீக்காமல், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கலாம். இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, டைக்கும் மெனுவில், History | Show All History எனச் செல்லவும். இங்கு Library dialog box கிடைக்கும். எந்த இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை அழிக்க திட்டமிடுகிறீர்களோ, அதனைப் பார்த்ததற்கான உத்தேச நாளைத் தேர்ந்தெடுக்கவும்.

அந்த காலத்தில் பார்த்த இணைய தளங்கள் அனைத்தும் வலது பக்கத்தில் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் இலக்கு வைத்த இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Forget About This Site என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹிஸ்டரி அழிக்கப்படும்.


4. தானாக ஹிஸ்டரி அழிக்கப்படுதல்:

பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில், பிரவுசிங் ஹிஸ்டரி சார்ந்த டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் செட் செய்திடலாம். பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். Options டயலாக் பாக்ஸில், டூல் பாரில் Privacy பட்டனைக் கிளிக் செய்திடவும்.

இதில் ஹிஸ்டரி பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Clear history when Firefox closes என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.

இப்போது Settings பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கே Settings for Clearing History டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி தேவையற்ற குப்பைகள் உங்கள் பிரவுசரில் சேராது. உங்கள் பிரவுசரின் இயக்கமும் வேகமாக இருக்கும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes