வேர்டில் டாகுமெண்டில் சிறப்பு அடையாளங்கள் பெற


வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். 

இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான பேடிலிருந்து எண்களை டைப் செய்திட வேண்டும். 

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற ஆல்ட் + 0134

‡ இதனையே இரட்டையாகப் பெற ஆல்ட் + 0135

™ டிரேட் மார்க் அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0153

£ பவுண்ட் ஸ்டெர்லிங் அடையாளம் பெற ஆல்ட் + 0163

¥ ஜப்பானிய கரன்சியான யென் அடையாளம் பெற ஆல்ட்+0165

© காப்பி ரைட் அடையாளம் கிடைக்க ஆல்ட் + 0169

® ரெஜிஸ்டர்ட் ட்ரேட் மார்க் அடையாளம் உண்டாக்க ஆல்ட்+0174

° டிகிரி என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற ஆல்ட் +0176

± பிளஸ் ஆர் மைனஸ் என்பதனைக் காட்ட ஆல்ட்+0177

² சூப்பர்ஸ்கிரிப்ட் 2 என்பதனைக் காட்ட ஆல்ட் +178

³ சூப்பர்ஸ்கிரிப்ட் 3 என்பதனைக் காட்ட ஆல்ட் +179

· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0183

¼ கால் என்பதைக் குறிக்க ஆல்ட் + 0188

½ அரை என்பதைக் குறிக்க ஆல்ட் + 0189

¾ முக்கால் என்பதனைக் குறிக்க ஆல்ட் + 0190

இந்த கால், அரை மற்றும் முக்கால் பின்னங்களை ஒரே கேரக்டரில் அமைக்க அதனை 1/4, 1/2, 3/4 என டைப் செய்து ஸ்பேஸ் பார் தட்டினால் அவை ¼,½,¾ எனத் தானாகவே அமைக்கப் பட்டுவிடும். 

இன்னும் பல குறியீடுகளை இதேபோல ஏற்படுத்தலாம். மேலே தரப்பட்டுள்ளவை நாம் அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கும் குறியீடுகளே. 

மேலும் பல குறியீடுகளும் அவற்றைத் தரும் கீ தொகுதிகளையும் காண http://home.earthlink.net/~awinkelried/keyboard_shortcuts.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.


ஆரவாரமின்றி வெளியான Nokia Lumia 900

நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தன் புதிய ஸ்மார்ட் போன் லூமியா 900 ஐ, நோக்கியா எந்தவித ஆரவாரமும் இன்றி ரூ.32,999 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த போன் விண்டோஸ் போன் 7.5 (மாங்கோ) சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் 4.3 அங்குல AMOLED திரை தரப்பட்டுள்ளது. 

முழு வெளிப்பக்கமும் பாலிகார்பனேட்டில் ஆனது. 1.4 கிகா ஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் குவால்காம் ப்ராசசர் இயங்குகிறது. 

GPRS, HSPA, EDGE,HSUPA, GSM, HSDPA, LTE, WDCMA, WiFi, DLNA ஆகிய தொழில்நுட்பங்கள் இயங்குகின்றன. 

டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் கேமரா வும், முன்புறமாக விஜிஏ கேமராவும் உள்ளன. 

512 ராம் மெமரி தரப்பட்டுள்ளது. உள் நினைவகம் 16 ஜிபிஆக உள்ளது. இதில் இன்னும் பல நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. 

இதன்அதிக பட்ச விலை ரூ. 32,999.


ஒரே தனி எண்ணில் 18,000 மொபைல் போன்கள்


ஒரு மொபைல் போனை, மற்ற மொபைல் போன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் 15 இலக்க IMEI (International Mobile Equipment Identity) எண்ணாகும். 

அண்மையில் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மொபைல் போன்கள், ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பு துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது போன்ற கள்ளத்தனமான எண்கள் தயாரித்து அளிப்பது, ஜி.எஸ்.எம். போன்களில் தான் அதிகமாக உள்ளது. 

அண்மையில் பாட்னாவில் காவல்துறையினரிடம் சிக்கிய ஆறு பேர், இது போல மொபைல் போன்களின் தனி எண்களையும், சிம் கார்டுகளையும் போலியாகத் தயாரித்து வந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில், பல்லாயிரக்கணக்கான போன்கள், ஒரே எண்களில் இருப்பது தெரிய வந்தது. 

இதனால், மொபைல் போன் குறித்த சட்ட விதி முறைகளை அமல்படுத்துவது இயலாமல் போகிறது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனி எண் இல்லாத மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தினைக் கொண்டு வந்து, அப்படிப்பட்ட போன்களுக்கான சேவையினை அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் ரத்து செய்திடும்படி அரசு ஆணையிட்டது. 

தொடர்ந்து மேலும் பல கிடுக்கிப்பிடி விதிமுறைகளை வெளியிட்டது. ஜி.எஸ்.எம். வகை போன்களுக்கு மட்டுமின்றி, சி.டி.எம்.ஏ. வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்களின் தனி எண்களை (Electronic Serial Number (ESN) or Mobile Equipment Identifier (MEID)) இந்த விதிமுறைகளின் கீழ் கொண்டு வந்தது. 

தற்போது இது போல ஒரே எண்ணைக் கொண்டுள்ள மொபைல் போன்களைக் கண்டறிந்து விதிமுறைகளை அவற்றின் மீது செலுத்திட அரசு திட்டமிட்டு வருகிறது.


சமூகத்தள யூசர் பெயர், பாஸ்வேர்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் வேண்டாம்


ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் பிரபலமான செமாண்டெக் நிறுவனம், ஆன்லைன் வர்த்தக செயல்முறைகளில், சமூக வலைத்தளங்களில் நாம் பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்களைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடும் முயற்சியில் பல மால்வேர் புரோகிராம்கள் இலக்கு வைப்பதால், இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த எனத் தனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை அமைத்துக் கொள்வது பாதுகாப்பானது. 

ஆன்லைன் வங்கிக் கணக்குகளைக் கையாள எனத் தனியே பெயர்களையும், பாஸ்வேர்ட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் சமூக வலைத் தளங்களில், தங்கள் நிதி ஆதாரம் குறித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தவறு. 

அதே போல, உறுதி செய்யப்படாத லிங்க்களில் கிளிக் செய்வதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

அண்மையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் குறித்து ஒரு லிங்க் சமூக வலைத் தளங்களில் தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்தவர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 

இந்தியாவில், இணையப் பயன்பாட்டில், பல லட்சக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. 

எனவே பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைத்து செயல்படுவதே சிறந்தது. இந்த தகவல்களை செமாண்டெக் நிறுவன நிர்வாக இயக்குநர் ஷந்தனு கோஷ் தெரிவித்துள்ளார்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தொகுப்பை மூடுங்கள்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. 

இதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது. 

எனவே இவர்கள் பாதுகாப்பில்லாமல், பதிப்பு 8 ஐப் பயன்படுத்த வேண்டும். அல்லது புதிய ஹார்ட்வேர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும். 

அக்டோபர் 26ல், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. நவம்பர் 15ல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8க்கான உதவி நிறுத்தப்படுகிறது. 

இந்த நாளுக்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம், கூகுள் அப்ளிகேஷன் சர்வீஸ் தளத்திலிருந்து ஏதேனும் பெற விரும்பினால், பிரவுசரை மேம்படுத்த நமக்கு செய்தியும் அறிவுரையும் வழங்கப்படும். ஏனென்றால், கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 (ஜனவரி 2010) மற்றும் 7னை (ஜூலை 2011) ஒதுக்கி வைத்துவிட்டது. 

கூகுள் எப்போதும் அப்போதைய நடப்பில் உள்ள பிரவுசரையும், அதற்கு முந்தைய அந்த பிரவுசரின் பதிப்பினையும் மட்டுமே அனுமதிக்கும். இது அந்நிறுவனத்தின் கொள்கை முடிவாகும். இது நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்.

ஐ.இ. 7 க்கான சப்போர்ட் நிறுத்தப் படுகையில் அது உலகில் 7% பேரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஐ.இ. பதிப்பு 8, உலக அளவில் பரவலாக 25% பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரு பதிப்புகளையும் பயன்படுத்தியவர்களில், ஐ.இ. 8, 47% பேரால் பயன்படுத்தப்படுகிறது. 

எனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் ஐ.இ. 8 பயன்படுத்துபவர்கள் பாடு இனி கஷ்டம் தான். 

ஐ.இ. 8 மூலம் கூகுள் மெயில், கூகுள் டாக் மற்றும் கூகுள் காலண்டர் வசதிகளும் கிடைக்காமல் போகலாம். ஒரு கட்டத்தில் உள்ளே சென்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். 

இதனால், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசருக்கு மாறலாம். இந்த பிரவுசர்கள் எக்ஸ்பியில் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை.


புதிய வசதிகளுடன் ஸ்கைப் (Skype) சோதனை பதிப்பு


ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்த, இனி அதற்கென தனியே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினால் போதும். 

இன்டர்நெட் வழியே, நம் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச, ஸ்கைப் தொகுப்பு பயன்படுகிறது. 

இதனைப் பயன்படுத்த இதுவரை தனியே ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை உருவாக்கிப் பதிந்து அதனையே பயன்படுத்த வேண்டும். நம்மை நம் நண்பர்கள் அழைக்கவும், அதே யூசர் நேமையே பயன்படுத்த வேண்டும். 

ஆனால், இப்போது தரப்பட்டிருக்கும் சோதனைப் பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தியே ஸ்கைப்பினையும் பயன்படுத்தலாம். 

(ஸ்கைப் நிறுவனத்தை, சென்ற ஆண்டு மே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 860 கோடி டாலர் கொடுத்து தனதாக்கிக் கொண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 

இருப்பினும் இது ஒரு தனிப் பிரிவு நிறுவனமாகவே இன்றும் இயங்கி வருகிறது.) மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவனப் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவு இது. 

முதலில் பேஸ்புக் தன் தளத்தில் ஸ்கைப் வீடியோவினை, அதன் வெப்சைட் சேட் வசதியில் இணைத்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிங் சர்ச் தளத்தில், பேஸ்புக் அம்சங்களை இணைத்தது. 

இந்த புதிய வசதிகள் ஸ்கைப் சோதனை பதிப்பு 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, ஸ்கைப் இணைத்துள்ளது. 

இதன் மூலம், இணையத்தில் நண்பர்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள ஸ்கைப் தொகுப்பினை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது தெரிகிறது.


விண்டோஸ் எக்ஸ்பி செயல்திறன்


எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதனை நிறுத்துமாறும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களுக்கு மாறிக் கொள்ளுமாறும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டு வருகிறது. 

பல முனைகளில் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2014க்குப் பின்னர், இதற்கான சப்போர்ட் தருவதை நிறுத்தப் போகிறது. இப்போதே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை, எக்ஸ்பியில் இல்லாத வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இருப்பினும் மக்கள் தொடர்ந்து இதனையே தாங்கள் விரும்பும் சிஸ்டமாகப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 42% க்கும் மேற்பட்டோர் இதனைப் பயன்படுத்துவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது இன்னும் அதிகமாக உள்ளது. 

எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், இந்த சிஸ்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், தீர்வுகள் எங்கு கிடைத்தாலும் தேடிப் பிடித்து சரி செய்கின்றனர். இணையத்திலும் பலர் எக்ஸ்பி சிஸ்டம் இயங்குவது குறித்து பல தீர்வுகளை வழங்கி வருகின்றனர். 

இங்கு அப்படிப்பட்ட தீர்வுகளில் சிலவற்றைப் பார்க்கலாம். எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களில், நாளடைவில் செயல்படும் வேகத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மெதுவாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உண்டு. 

அவை குறித்து கம்ப்யூட்டர் மலரில் தகவல்கள் ஏற்கனவே தரப்பட்டன. இங்கு எக்ஸ்பி பெர்பார்மன்ஸ் செட்டிங்ஸ் பிரிவில் உள்ள நிலைப்பாடுகள், சிஸ்டத்தின் இயக்கத்தை எப்படி கட்டுப் படுத்துகின்றன எனக் காணலாம்.


1. பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் (Performance Options):

பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் என்ற பிரிவில் எக்ஸ்பி செயல்படுவதற்கான நிலைப்பாடுகளைப் பல வழிகளில் மாற்றி அமைக்கலாம். அவ்வாறு மாற்றி அமைக்கையில், நாம் விரும்பாத விளைவுகள் ஏற்பட்டால், மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரலாம். இதனைப் பெற முதலில் ஸ்டார்ட் அழுத்தி கண்ட்ரோல் பேனல் பெறவும். 

இதில் சிஸ்டம் என்பதனைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்திடவும். இப்போது System Properties என்ற விண்டோ கிடைக்கும். இதில் ஏழு டேப்கள் இருக்கும். அவற்றில் Advanced என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கு Performance என்ற பிரிவில் செட்டிங்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Performance Options என்ற விண்டோ காட்டப்படும். 

இதில் Visual Effects, Advanced, Data Execution Prevention என்ற டேப்கள் காட்டப்பட்டு, Visual Effects என்ற பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதில் Adjust for best performance என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் கிடைக்கும். 

இதில் நாம் விரும்பும் ஆப்ஷனைத் தேர்வு செய்து, அல்லது வேண்டாதவற்றை விலக்கி, செட் செய்திடலாம். எக்ஸ்பியின் சுமை மாற்றப்பட்டு, அதன் செயல்பாடு வேகமாகும். இதே விண்டோவில் மற்ற இரு பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து, தேவையற்ற செயல்பாடுகளைத் தவிர்க்கலாம். 

2. விசுவல் எபக்ட்ஸ் செட்டிங்ஸ்:

எக்ஸ்பி செயல்படுவதைச் சீர் செய்திட விசுவல் எபக்ட்ஸ் செட்டிங்ஸ் அமைப்பு எளிய வழிகளைத் தருகிறது. மாறா நிலையில், விண்டோஸ் எக்ஸ்பி விசுவல் எபக்ட்ஸ் அனைத்தையும் இயக்கியே வைத்துள்ளது. 

எடுத்துக்காட்டாக, ஸ்டார்ட் மெனுவில் உள்ள ஸ்குரோல் ஆப்ஷனைச் சொல்லலாம். இந்த விளைவுகள் எல்லாம், கம்ப்யூட்டர் இயங்குகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறனை அதிகம் எடுத்துக் கொள்ளும் செயல்பாடுகளாகும். 

மொத்தமாக, இது போன்ற செயல்பாடுகளை மாற்றி அமைக்க Adjust For Best Performance என்ற பிரிவினைத் தேர்ந்தெடுத்து இயக்கலாம். இதனால், சில அழகிய தோற்றங்கள் மாற்றப்படலாம். ஆனால், செயல் திறன் சிறப்பாக இருக்கும். 


கூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்


வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, இலவசமாக ஆன் லைனில் முடிவுகளைத் தரும், வைரஸ் டோட்டல் என்ற நிறுவனத்தினைச் சென்ற வாரம் கூகுள் வாங்கியுள்ளது. இதற்கு எவ்வளவு பணம் பரிமாறப் பட்டது என்ற தகவல் இல்லை. 

இணைய முகவரிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் என எதனைக் குறிபிட்டாலும், இலவசமாக, ஆன்லைன் வழியாகவே ஸ்கேன் செய்து முடிவுகளைத் தரும் நிறுவனமாக வைரஸ் டோட்டல் இயங்கி வருகிறது. 

இதற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் குறியீடுகளையும் வழிகளையும் வைரஸ் டோட்டல் பயன்படுத்தி வருகிறது.

கூகுள் இதனை வாங்கியதன் மூலம், வைரஸ் மற்றும் மால்வேர் தேடி அறிவதில், மூலதனம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், நவீன தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும் என வைரஸ் டோட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

"எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களை இணையத்தில் பாதுகாப்பாக வைப்பதுதான் எங்களுடைய முதன்மையான நோக்கம்' என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து தனியொரு பிரிவாகவே சுதந்திரமாக இயங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

கூகுளைப் பொறுத்தவரை, இணையத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்பதால், இப்பிரிவில் திறமையாகச் செயலாற்றும் வைரஸ் டோட்டல் நிறுவனத்தை வாங்கியதாக அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தன் குரோம் பிரவுசரைக் கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக கூகுள் அறிவிக்க உள்ளது.


கம்ப்யூட்டர் விற்பனையைக் குறைக்கும் விண்டோஸ் 8


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளி வர இருப்பதனால், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனை மிக மோசமாக இருக்கிறது. இது சாதாரணமானவர்களின் கருத்து அல்ல; 

கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்திடும் முன்னணி நிறுவனங்களான டெல் மற்றும் எச்.பி. ஆகியவையே இந்த கருத்தை வெளியிட்டுள்ளன.

தங்களுடைய விற்பனை குறித்துப் பேசுவதற்கான கருத்தரங்கில், டெல் நிறுவன அதிகாரிகள், விண்டோஸ் 8 சிஸ்டம் வெளியிட இருப்பதுவே, கம்ப்யூட்டர் விற்பனை குறைந்திடக் காரணம் என நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். 

எச்.பி. நிறுவனம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் குறிப்பிடாமல், குற்றம் சாட்டியுள்ளது. புதியன வருவதற்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களால், இந்தக் காலாண்டில்,பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை மந்த நிலையை அடைந்துள்ளது எனக் கூறியுள்ளது.


இணையம் வழியாக அதிக பயன் பெறும் நாடு


இணையத்தைப் பயன்படுத்தி அதிகம் பயனடையும் நாடுகள் குறித்து அண்மையில் வைய விரி வலையை அறிமுகப்படுத்திய டிம் பெர்னர்ஸ் லீ கருத்து தெரிவித்துள்ளார். 

மிக அதிகம் பயன் பெறும் நாடாக ஸ்வீடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து அமெரிக்காவும், அதனை அடுத்து கிரேட் பிரிட்டனும் உள்ளன. மொத்தம் எண்பது வகைப் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்து இந்த முடிவினை இவர் அறிவித்துள்ளார். 

பிராட்பேண்ட் கேபிள் இணைப்பு, நவீன தொழில் நுட்ப பயன்பாடு போன்றவற்றை முதன்மை அளவு கோலாக வைத்துள்ளார். மேலும், ஒரு நாட்டின் இணைய தளம் எந்த அளவிற்குப் பயன் தரும் வகையில் செயல்படுகிறது என்பதனையும் தன் ஆய்வின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். 

இணைய தளங்கள் ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை எந்த அளவிற்குக் கொண்டு வருகின்றன என்பதுவும், இவர் ஆய்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 

மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளை அடுத்து, அதிகப் பயன் பெறும் நாடுகளின் வரிசையில், கனடா, பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் அயர்லாந்து இடம் பெற்றுள்ளன. 

முதல் பத்து நாடுகளில் சீனா இடம் பெறாததற்குக் காரணம், அந்நாடு பல இணைய தளங்களுக்குத் தடை விதித்துள்ளதே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். 

அயர்லாந்து மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதியினை அளித்தே அதிகம் பயன் பெற்றுள்ளதாகவும் இவர் கண்டறிந்துள்ளார்.

தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல மிகக் குறைந்த பயனைப் பெற்ற நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் கடைசி இடம் பெற்றிருப்பது நேபாளம். யேமன் நாட்டில் மத்திய கிழக்கு மாநிலம் மிகவும் குறைவான பயனையும், பயன்பாட்டையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொறுத்தவரை பல நாடுகளில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. 61 நாடுகளில், ஒரு பிராட்பேண்ட் இணைப்பிற்காக, ஒருவரின் சராசரி வருமானத்தில் பாதி செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.

உலக நாடுகளை மொத்தமாக எடுத்துக் கொண்டால், 80% பேர் இணையத்தைப் பார்ப்பதை தங்கள் வழக்கமான செயல்பாடாக மேற்கொள்ளவில்லை என போர்ப்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலை மாற வேண்டும் எனில், இணையத்திலிருந்து பயன் பெறும் ஒவ்வொருவரும், அடுத்தவரை அதே போல பயன் பெறும் வகையில் இணையத்தைப் பயன்படுத்தத் தூண்ட வேண்டும் என பெர்னர்ஸ் லீ கருத்து தெரிவித்துள்ளார்.


உங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்


* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். 

மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

* உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். 

கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும். 

* கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. 

நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.

* பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.


வெளியானது ஆப்பிள் ஐபோன் 5


பல மாதங்களாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 5, சென்ற வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் டிம் குக் தலைமையில் வெளியிடப்பட்டது. 

மூன்று மாடல்களில் 16ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி எனக் கொள்ளளவுகளுடன், இரண்டு ஆண்டு மொபைல் சேவை ஒப்பந்தத்துடன் முறையே 199, 299 மற்றும் 399 டாலர் செலுத்தி இதனை அமெரிக்காவில் பெறலாம். 

செப்டம்பர் 14 முதல் இதற்கான ஆர்டரைப் பதியலாம். செப்டம்பர் 19 முதல் வழங்கப்படும். உரிமம் பெற்ற கடைகளில் செப்டம்பர் 21 முதல் விற்பனை செய்யப்படும். 

எந்தவித சேவை கட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிங்கப்பூரில், இந்த போனின் 16ஜிபி மாடல், செப்டம்பர் 21 முதல் 948 சிங்கப்பூர் டாலருக்குக் கிடைக்க உள்ளது. இந்திய பண மதிப்பில் இது ஏறத்தாழ ரூ. 42,600 ஆகும். இதே போல, பிரிட்டனில் 529 பவுண்ட் என்ற விலையில் இது விற்பனை செய்யப்படும். இந்திய பண மதிப்பில் ரூ.47,000. 

முதல் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்க இருக்கிறது. அடுத்த நிலையில் 100 நாடுகளில் 240 மொபைல் சேவை நிறுவனங்கள் வழியாக, வரும் டிசம்பரில், இது விற்பனை செய்ய அறிமுகப்படுத்தப்படும். அதில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். 

2007ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தினார். இப்போது அந்த வரிசையில், ஐ போன் 5 மிகப் பெரிய அளவிலான நவீன மாற்றங்களுடன் வந்துள்ளது. 

இது பல புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அலுமினியம் மற்றும் கிளாஸ் மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன், இதுவரை ஆப்பிள் போன்களில் இல்லாத அளவிற்கு, முந்தையவற்றைக் காட்டிலும் 18% குறைவாக 7.6 மிமீ அளவில் உள்ளது. திரை, ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்புமிகு ரெடினா டிஸ்பிளேயினைக் கொண்டுள்ளது. 

ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல் திறன் கொண்டுள்ளது. இதில் கை ரேகை பதியாது. இதன் திரை, 0.3 அங்குலம் கூடுதலாக, 4 அங்குலமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயரம் அதிகரிக்கப்பட்டு, திரையில் மேலும் ஒரு வரி கூடுதலாக ஐகான்கள் காட்சி அளிக்கின்றன. எடை 20% குறைக்கப்பட்டு 112 கிராம் ஆக உள்ளது. 

மொத்தத்தில் இதன் பரிமாணம் 4.8 அங்குல நீளம், 2.3 அங்குல அகலம் மற்றும் 0.3 அங்குல தடிமன் ஆக உள்ளது. இதில் நானோ சிம் கார்ட் பயன்படுத்த வேண்டும். 

"அதிவேக வயர்லெஸ் சாதனம்' என செல்லமாக இந்த போன் அழைக்கப்படுகிறது. இதில் நெட்வொர்க் இணைப்பு தருவதற்கு HDPA+, DCHSPDA ஆகிய தொழில் நுட்பங்களுடன், அடுத்த சந்ததியினருக்கான 4 ஜி தொழில் நுட்பமும் இயங்குகிறது. 

பல்வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கிடையே மாற்றிக் கொண்டு செயல்பட, கூடுதல் திறனுடன் கூடிய ஆன்டென்னா தரப்பட்டுள்ளது. மூன்று ஸ்பீக்கர்களும் மூன்று மைக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே தரப்பட்ட 30 பின் சாக்கெட் இணைப்புக்குப் பதிலாக, நவீன தொழில் நுட்பத்தில் உருவான லைட்னிங் (Lightning) என்ற கனெக்டர் பின் தரப்பட்டுள்ளது. இது முந்தையதைக் காட்டிலும் 80% சிறியதாகும். 

புதிதாகத் தரப்பட்டுள்ள A 6 ப்ராசசர், முந்தையதைக் காட்டிலும் இரு மடங்கு வேகத்தில் செயல்படுகிறது. பேட்டரியின் திறனும் கூடுதலாக உள்ளது. 225 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பிரவுசிங் அல்லது 8 மணி நேரம் 3ஜி பயன்பாட்டினைத் தருகிறது.

இதில் தரப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐசைட் கேமரா, வழக்கமான கேமராவினைக் காட்டிலும், அளவில் 25% சிறியதாக உள்ளது. 8 மெகா பிக்ஸெல் திறனில் 3264x2448 பிக்ஸெல் அளவில் படங்களைத் தருகிறது. 

பத்து பேர் வரை முகம் தேடி படம் எடுக்கிறது. 1080p திறனுடன் வீடியோ இயங்குகிறது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் உள்ளது. முன்புறம் உள்ள கேமரா 1.2 எம்பி திறனில் இயங்குகிறது. ஆப்பிள் தானே உருவாக்கிய மேப் வசதி, போக்குவரத்து தகவல்களையும் வழியையும் காட்டுகிறது. 

பேஸ்புக் இணைய தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தூங்கும் நேரத்தில் Do Not Disturb என செட் செய்துவிட்டு, போனின் ஒலி எதுவுமின்றி உறங்கலாம். இதன் ஆடியோ பிளேயர் AAC, MP3, AAX, AAX+, AIFF, WAV ஆகிய பார்மட்டுகளை இயக்குகிறது. வீடியோ பிளேயரில் H.264, MP4, MOV ஆகிய பைல்களை இயக்கலாம். Threeaxis gyro, accelerometer, proximity sensor, ambient light sensor, digital compass ஆகியவை தரப்பட்டுள்ளன. 

பல தொழில் நுட்ப முன்னோடி வசதிகள் தரப்பட்டாலும், இத்துறையில் தற்போது கிடைத்து வரும் புதிய வசதிகள் சில இதில் தரப்படவில்லை. என்.எப்.சி. என அழைக்கப்படும் அண்மைத் தள தகவல் தொடர்பு வசதி இல்லை. 

இதனால், இந்த போனைப் பயன்படுத்தி, கடைகளில் பணம் செலுத்த முடியாது. ஆனால், ஆப்பிள் தன்னுடைய பாஸ்போர்ட் மொபைல் பேமென்ட் சாட்ப்வேர் புரோகிராமினை அளிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. 

தற்போது வேகமாகப் பரவி வரும் வயர்லெஸ் சார்ஜ் வசதியும் இதில் தரப்படவில்லை. அண்மையில் வெளியான நோக்கியா லூமியா 920 விண்டோஸ் போன் 8, இந்த வசதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


விண்டோஸ் 7 நினைவில் கொள்ள

இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.


1. பின் அப் போல்டர்:

நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை.

குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க, டாஸ்க் பாரில் உள்ள அதன் ஐகானில் கிளிக் செய்திடலாம்.


2. டபுள் விண்டோஸ்:


புரோகிராம் ஒன்றைத் திறந்து இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில், அதே புரோகிராமின் இன்னொரு வகைச் செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்பி, அதனையே இன்னொரு இயக்க விண்டோவில் திறக்க, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகானில் கிளிக் செய்திடவும். மவுஸின் நடு பட்டனை அழுத்தியும் இதே செயல்பாட்டினைக் கொண்டு வரலாம்.


3. டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்ற:

மானிட்டரின் காட்சித் தோற்றத்தினைச் சரி செய்து, அதில் காட்டப்படும் படங்கள் மற்றும் டெக்ஸ்ட் துல்லிதமாகத் தெரிய, மானிட்டரை அட்ஜஸ்ட் செய்திடாமல், நேரடியாக சில பைல்களை இயக்கி சரி செய்திட விண்டோஸ் 7 உதவுகிறது. இதற்கென இரண்டு ஆப்லெட் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.

இவை Clear Type Text Tuning மற்றும் Display Color Calibration. இவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வர, ரன் கட்டத்தில் cttune.exe மற்றும் dccw.exe எனக் கொடுத்து இயக்கவும்.


4. ஐகான்களை வரிசைப்படுத்த:

டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகான்களை நாம் விரும்பும் வகையில் வரிசைப்படுத்தி அமைக்கலாம். ஐகான் மீது ரைட் கிளிக் செய்து இழுத்து வந்து, விரும்பும் இடத்தில் விட்டுவிடலாம். முதல் ஐந்து ஐகான்களின் புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீயுடன், அது அமைந்துள்ள வரிசை எண்ணை 1,2,3 என அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராம் ஐகான் முதலாவதாக இருந்தால், விண்டோஸ் கீயுடன் 1 என்ற எண் கீ அழுத்தினால், வேர்ட் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.


5. டாஸ்க் பார் மெனு:

டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களை முழுமையாகப் பார்த்து செயல்பட, விண்டோஸ் கீயுடன் கூ கீயை அழுத்தவும். திரையில் டாஸ்க்பார் மெனு காட்டப்பட்டு, அதில் உள்ள புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான புரோகிராமினை ஆரோ கீ மூலம் தேர்ந்தெடுத்து, என்டர் அல்லது கிளிக் செய்வதன் மூலம் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இந்த திரைக் காட்சியிலிருந்து வெளியேற எஸ்கேப் கீயை அழுத்தவும்.


6.விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்:

சிறு சிறு விஷயங்களை நாம் அடிக்கடி மறந்துவிடுவோம். எனவே தான் சிறிய தாள்களில் அவற்றைக் குறித்து வைப்போம். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டியதை நம் நாட் குறிப்பு, மாத காலண்டர்களில் சிறியதாகக் கிறுக்கி வைப்போம். ஆனால், பல வேளைகளில், இந்த நினைவு படுத்த வேண்டிய குறிப்பு, கிறுக்கலாக அமைத்ததால், என்னவென்று தெரியாது. அல்லது எங்கே குறித்து வைத்தோம் என்பது நினைவிற்கு வராது.

நாம் அன்றாடம் பல மணி நேரம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் இவை இருந்தால் எவ்வளவு வசதி. விண்டோஸ் 7 சிஸ்டம் திரையில் இதற்கான வசதி Sticky Notes என்ற பெயரில் தரப்பட்டுள்ளது. ஏழு வண்ணங்களில் இந்த ஸ்டிக்கி நோட்ஸ் அமைத்துக் கொள்ளலாம். இதனால், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை வகைப்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்டிக்கி நோட் வண்ணக் கட்டத்தில் சென்று, ரைட் கிளிக் செய்தால், வண்ணத்தையும் மாற்றி அமைக்கலாம். இன்னொரு நோட் பிட் தேவை எனில், இதே நோட் பிட்டில், இடது மேலாக உள்ள + அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் பெறலாம். ஸ்டிக்கி நோட்ஸ் பெற தேடல் கட்டத்தில், StikyNot.exe என டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது Start >All Programs > Accessories >Sticky Notes எனச் சென்று பெறவும்.


பேஸ்புக் (Facebook) தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம்.

ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.

விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

1. புதிய மெசேஜ் பெற M
2. பேஸ்புக் சர்ச் ?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ் 1
4. உங்கள் புரபைல் பேஜ் 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் 3
6. மெசேஜ் மொத்தம் 4
7. நோட்டிபிகேஷன்ஸ் 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் 7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் 9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் O

இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.


கம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால்

தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.

இதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வேலியுடன் வடிவமைக் கப்பட்டு வருகின்றன. இதனால், புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எதனையும், இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட முடியாது.

ஏற்கனவே பதிந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, அப்டேட் செய்திடவும் முடியாது. அப்படியானால், எப்படித்தான், நம் கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராமிடமிருந்து காப்பாற்றுவது? மால்வேரை அழிப்பது?

வேறு வழியில்லை; அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை சிடியில் இருந்தவாறே இயக்க வேண்டியதுதான். கம்ப்யூட்டரை இயக்கவும் முடியாமல், மால்வேர் முடக்கிவிட்டால் என்ன செய்திடலாம்?

பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்துடனேயே (bootable malware scanners) கிடைக்கின்றன. இவற்றை, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், இணையத்திலிருந்து சிடியில் பதிவு செய்து, எடுத்து வந்து, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் சிடி ட்ரைவ் மூலம் இயக்கி, மால்வேரை நீக்கலாம்.

சிடி மட்டுமின்றி, பிளாஷ் ட்ரைவில் பதிந்து கூட இதே போல இயக்கலாம். இந்த வகையில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் சிறப்பாக இயங்குகின்றன. அவை "காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க்' மற்றும் "எப்செக்யூர் ரெஸ்க்யூ சிடி'. இவை இயக்குவதற்கு எளிது என்பதுடன், தயாரித்த நிறுவனத்தால், பல்வேறு சோதனைகளுக்குட் படுத்தப்பட்டு கிடைக்கின்றன.

இவற்றின் தள முகவரிகள்:


இந்த இரண்டு புரோகிராம்களும் ஐ.எஸ்.ஓ. பைல்களாக, இந்த தளங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மீது கிளிக் செய்தவுடன், ஒரு யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டு, சிடியில் இதனை பதிவதற்கென வழி நடத்துகிறது.

இதன் மூலம் பதிந்து எடுக்க இயலவில்லை என்றால், Active@ ISO Burner என்ற யுடிலிட்டி புரோகிராம் மூலம், சிடியில் பதிந்து எடுக்கலாம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின்னர், மேலே கூறப்பட்ட ஐ.எஸ்.ஓ. பைல் மீது டபுள் கிளிக் செய்து, சிடியில் அதனைப் பதிய வேண்டும்.

இவற்றை யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்தும் இயக்கலாம். ஆனால், இந்த ஐ.எஸ்.ஓ. பைல்களை, பிளாஷ் ட்ரைவில் பதிந்து இயக்க, சில புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஐ.எஸ்.ஓ. பைலைப் பதிய Utility to record Kaspersky Rescue Disk 10 to USB devices என்னும் புரோகிராம் தேவைப்படுகிறது.

இதனைhttp://rescuedisk.kasperskylabs.com/rescuedisk/updatable/rescue2usb.exe என்னும் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். எப் செக்யூர் ஆண்ட்டி வைரஸ் ஐ.எஸ்.ஓ. பைலை, யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்து பெற, Universal USB Installer என்னும் புரோகிராம் தேவைப்படும்.

இதனை http://www.pendrivelinux.com/downloads/UniversalUSBInstaller/UniversalUSBInstaller1.9.0.6.exe என்ற முகவரியில் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


சிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்டது

வயர்லெஸ் நெட்புக், டேப்ளட் பிசிக்கள் பெருகி வருவதால், சிடி, டிவிடி மற்றும் ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை, அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் மூடிவிட ஜப்பான் சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மார்ச், 2013 முதல் இவை இயங்காது.

இவற்றின் இடத்தில் ஸ்மார்ட் போன், டேப்ளட் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் பணியில் சோனி ஈடுபடும். இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் 420 தொழிலாளர்கள், வேறு பிரிவிற்கு மாற்றப்படுவார்கள்.

சோனி ஆப்டியார்க் என்ற தனிப் பிரிவு நிறுவனம் மூலம், சோனி இவற்றை இதுவரை தயாரித்து விற்பனை செய்து வந்தது. அண்மைக் காலங்களில், ட்ரைவ் எதுவும் இல்லாத ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், சிடி, டிவிடி மற்றும் இவற்றிற்கான ட்ரைவ்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வந்தது.

மேலும் சிறிய நிறுவனங்கள் கூட இந்த ட்ரைவ்களைத் தயாரித்து விற்பனை செய்திடலாம் என்ற நிலை வந்ததனால், சோனி இந்த முடிவினை எடுத்துள்ளது.

டிவிடி மற்றும் ஹை டெபனிஷன் டிவிடிக்களுக்குப் போட்டியாக, சோனி நிறுவனம் ப்ளூ ரே பார்மட் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வந்து வெற்றி பெற்றது. 2006 ஆம் ஆண்டில், அழித்து எழுதக் கூடிய ப்ளூ ரே ட்ரைவினைக் கொண்டு வந்த போது, சோனியுடன் போட்டி போட எந்த நிறுவனமும் இல்லாத நிலை இருந்தது.

ஆனால், ப்ளூ ரே ட்ரைவ் மக்களால் அவ்வளவாக விரும்பப்படாத நிலை ஏற்பட்டதாலும், டிவிடி ட்ரைவ் விலை 50 டாலருக்கும் குறைவாக இறங்கியதாலும், சோனி இந்தப் பிரிவில் இருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளது.

ஆனாலும், ஆடியோ சாதனங்களுக்கான ஆப்டிகல் ட்ரைவினைத் தொடர்ந்து சோனி தயாரிக்கும் எனத் தெரிகிறது.


காஸ்மாலஜி படிப்புக்கு உதவும் சூப்பர் கம்ப்யூட்டர்

கடந்த மாதம் இங்கிலாந்தில் ஒலிம்பிக் மட்டும் துவங்கவில்லை... இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்திருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும் காஸ்மாலஜி படிப்புக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட உலகின் முதல் காஸ்மாலஜி சூப்பர் கம்ப்யூட் டர் இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

வானவியலிலும் பிரபஞ்ச அறிவியலிலும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், இருக்குற கஷ்டத்துல இது வேற தேவையா என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.

ஆம், ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை நிர்வகிப்பது என்பது யானையைக் கட்டி மூன்று வேளை ஃபுல் மீல் போடுவது போன்றது.

உதாரணத்துக்கு, கடந்த 2010 முதல் 2011 வரை உலகின் நம்பர் ஒன் சூப்பர் கம்ப்யூட்டராக இருந்த கே கணினியைப் பற்றிப் பார்ப்போமே. நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று கோர் ப்ராசஸர்கள் வருகின்றன.

இந்த கே கணினியின் ப்ராசஸர் கோர்களின் எண்ணிக்கை 5,48,352. இந்தக் கணினிக்குத் தேவையான வன்பொருட்கள் எல்லாம் நீண்ட பெரிய அறை ஒன்றில் ரேக்குகள் அமைத்து அடுக்கப்பட்டிருக்கும். அப்படி 672 ரேக்குகளைக் கொண் டது கே கணினி.

இத்தனை பிரமாண்டமான கணினிகள் இயங்க வேண்டுமென்றால், அதற்கான மின்சாரமும் பிரமாண்ட அளவில்தான் தேவைப்படும்.

உதாரணத்துக்கு கே கணினி, தான் இயங்குவதற்கு 9.9 மெகா வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. இதற்காக வருடத்துக்கு மின்சார செலவு மட்டுமே ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.

உலகின் டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர் என்று பட்டியலிடப்பட்டுள்ள பத்து கணினிகளும் இயங்க மொத்தம் 42.8 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. இதை 40 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க முடியுமாம்.

புவி வெப்பமடைதல், மின்சார சிக்கனம் என்றெல்லாம் உலகமே பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு சூப்பர் கணினி தேவையா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி! எதற்காக சூப்பர் கம்ப்யூட்டர்?

பெரிய செலவுதான் என்றாலும் இது தண்டச் செலவில்லை. நாளைய உலகுக்காக செய்யப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மிகுந்த செயல் திறன் கொண்ட கணினிகள் கண்டிப்பாகத் தேவை. அதற்காகத்தான் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு சூப்பர் கணினிகளைத் தயாரிக்கின்றன.

நம் இந்தியாவில் கூட சாகா-220 என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டு புனேயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள முக்கியமான 500 சூப்பர் கம்ப்யூட்டர்களில், 274 அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. அடுத்தபடியாக சீனாவில் 41 உள்ளன. இந்தியாவில் 40 உள்ளது. ஆக, நாமும் போட்டியில் இருக்கிறோம்!


விண்டோஸ் 8 பயர்பாக்ஸ்

மொஸில்லா நிறுவனம் வர இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதிக்குள் இதன் சோதனை பதிப்பு வெளியிடப்படும். இதில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என இதில் ஈடுபடும் புரோகிராமர் பிரையன் தெரிவித்துள்ளார்.

கிராஷ் ஏற்படுகையில் அது குறித்த அறிக்கை தானாக அனுப்பப்படுவது, பி.டி.எப். ஆவணங்களைப் படிக்க பிரவுசரிலேயே ஒரு ரீடர், பிளாஷ் சப்போர்ட் எனப் பல புதிய வசதிகள் கிடைக்க இருக்கின்றன.

முதலில் வெளியிடப்படும் பிரவுசருக்கு எந்தவித ஆட் ஆன் சப்போர்ட் இருக்காது. ஆனால், பின்னர் படிப்படியாக பல ஆட் ஆன் புரோகிராம்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Wi-Fi வலைப்பின்னல்

வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பி இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது.

ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது.

இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன.

சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.


1. லேப்டாப்பில் உள்ள வை-பி பட்டன்:

காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பி இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும்.

உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பி பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.


2. கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்:

வை-பி பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும்.

இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும்.

அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும்.

இதனை “power cycling” வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.


சில தொழில் நுட்ப சொற்கள்

தகவல் தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்நாளில், பல கலைச் சொற்களை நாம் சந்திக்கிறோம். அவை எதனைக் குறிக்கின்றன என்று நாமாக சிலவற்றை எண்ணிக் கொள்கிறோம். சில சொற்கள் மிகச் சரியாக எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Application:

நம் கம்ப்யூட்டரை ஒரு குறிப்பிட்ட சாதனமாக மாற்றும் புரோகிராம். எடுத்துக் காட்டு வேர்ட் ப்ராசசர், போட்டோ எடி ட்டர், பிரவுசர். பொதுவாக நாம் இந்த புரோகிராம்களை இயக்கி நம் தேவைகளை நிறைவு செய்திடத்தான், கம்ப்யூட்டர் வாங்குகிறோம். சிலர் கேம் விளையாடுவதற்கும் கம்ப்யூட்டர்களை வாங்குகின்றனர். ஆனால் game என்றால் என்ன என்று தான் உங்களுக்குத் தெரியுமே!

Utility:

கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது அல்லது வேகமாக,எளிதாக, நம்பிக்கை தரும் வகை இல் இயக்குவது என்ற வேலைகளை மேற்கொள்ளும் பயன்பாட்டு புரோகிராம். இவற்றை மட்டும் இயக்க என யாரும் கம்ப்யூட்டர் வாங்குவதில்லை. கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிய பின்னரே, இதனை வாங்க முடியும்.


வேர்ட் டிப்ஸ் - டாகுமெண்ட் டெக்ஸ்ட் லிங்க்ஸ்

வேர்டில் பல டாகுமெண்ட்களை ஏற்படுத்துகிறோம். சில வேளைகளில் ஒன்றில் ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இன்னொரு கட்டுரையில் இதனைப் பற்றியும் ஒரு முக்கிய குறிப்பினை எழுதியுள்ளோமே என்று எண்ணலாம்.

இதனைப் படிக்கும்போது அதனையும் படித்து வைத்தால் நல்லது என்று திட்டமிடலாம். அல்லது ஒரு டாகுமெண்ட்டில் சொன்னதை ஏன் மறுபடியும் எழுத வேண்டும். படிப்பவர்கள் அங்கும் சென்று படித்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணலாம்.

இந்த எண்ணத்தைச் செயல்படுத்த வேர்ட் வசதி ஏற்படுத்தியுள்ளது. ஒரு டாகுமெண்ட்டுக்கும் இன்னொன்றுக்குமான தொடர்பினை அந்த டாகுமெண்ட்டிலேயே ஏற்படுத்தலாம். இதனை ஹைபர் லிங்க் என்று சொல்கிறோம்.

இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் இரு டாகுமெண்ட்களையும் திறந்து கொள்ளவும். பின் Window மெனு சென்று அதில் Arrange All என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இப்போது அடுத்த அடுத்த விண்டோக்களில் இரண்டு டாகுமெண்ட்களும் திறக்கப்பட்டிருக்கும்.

இனி முதல் டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட பொருள் தொடர்புக்கான அடிப்படை சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் இதனை ரைட் கிளிக் செய்து அடுத்த டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் வாசகர் முந்தைய டாகுமெண்ட்டினைத் தொடர்பு கொள்ள வேண்டுமோ, அந்த வாக்கியத்தின் கடைசி சொல்லுக்குப் பக்கத்தில் விட்டுவிடவும்.

பின் இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Create Hyperlink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி வாசகர்கள் இரண்டாவது டாகுமெண்ட்டைப் படிக்கையில் இந்த இடத்திற்கு வந்தவுடன் அங்கு ஹைப்பர் லிங்க் இருப்பதற்கான அடையாளம் தெரியும்.

அந்த இடத்தில் கண்ட்ரோல் அழுத்தி கிளிக் செய்தால் உடனே முந்தைய டாகுமெண்ட் திறக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் கர்சர் நிற்கும். இந்த இரு டாகுமெண்ட்களையும் நீங்கள் இணைய தளத்தில் பதிக்க விரும்பினால் இரண்டும் ஒரே போல்டரில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


புக்மார்க் செய்திட சுருக்க வழி

இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?

கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்று கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.

இதற்குப் பதிலாக கண்ட்ரோல் + டி (Ctrl+D)அழுத்துங்கள். உடன் உங்களுக்கு புக்மார்க்கிற்கான பெயர் அமைக்கும் கட்டம் கிடைக்கும்.

ஒவ்வொரு பிரவுசரிலும் என்ன ஷார்ட் கட் கீ எனக் கேட்கிறீர்களா? பயர்பாக்ஸ், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர் என அனைத்திலும் இதே ஷார்ட் கட் கீ தொகுப்புதான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சிலர் கேட்கலாம்? எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Ctrl+B இருக்கலாமே என்று. ஆனால் இந்த ஷார்ட் கட் கீ Bold அமைக்க அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களில் பயன்படுத்த என ஒதுக்கப்பட்டுவிட்டதால், இங்கு Ctrl+D பயன்படுத்தப்படுகிறது.

குரோம் பிரவுசரில் Ctrl+Shift+D என ஷார்ட்கட் கீ கொடுத்தால், புக்மார்க் அமைப்பதில் இன்னும் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம்.

தளத்தினை புக்மார்க் செய்து, தகவல்களை எடிட் செய்திடலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரில், இந்த கீகளை அழுத்தினால், திறந்திருக்கும் அனைத்து டேப்களில் உள்ள தளங்களும் புக்மார்க் செய்யப்படும்.


எக்ஸெல் 2013 புதிய வசதிகள்

அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில், எக்ஸெல் புரோகிராமின் புதிய சிறப்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம்.

எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது. வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ் செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.

எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது. அத்துடன் புதியதாக கம்ப்யூட்டரில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.

ஆன்லைன் டெம்ப்ளேட் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது. இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள், உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.

வழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில் (quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன. ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் பார்மட் செய்திட முடிகிறது. இதிலேயே டேட்டாவினை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை, அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.

நெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும், அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.

இதில் தரப்படும் சார்ட் தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில், ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.

இது போன்ற வசதிகள் மூலம், வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால், எக்ஸெல் தொகுப்பிலும் ஆன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில், ஒர்க்ஷீட்கள் ஆன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.

எக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால், ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில், அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில், மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.

எனவே, ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு, வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.

குறிப்பாக, பைல்களை ஆன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes