இன்டர்நெட்டில் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது.

தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது.

இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும்.

IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன.

ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.

வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன.

வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.

அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.

விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.


இந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்

இந்தியாவில், மொபைல் போன்களைப் பொறுத்தவரை, மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்ற முதல் நிறுவனமாக நோக்கியா இடம் பெற்றுள்ளது.

ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (TRA Trust Research Advisory) என்ற நிறுவனம் அண்மையில், இந்தியாவில், எந்த மொபைல் நிறுவனம் மக்களிடையே அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளது (“Brand Trust Report, India Study 2011) என்ற ஒரு கணிப்பை மேற்கொண்டது.

16,000 மொபைல் போன் மாடல்கள் குறித்து ஒன்பது நகரங்களில், 2310 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை டாட்டா மற்றும் சோனி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

அடுத்த இடங்கள் எல்.ஜி. மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளன.

இது விற்பனையை அல்லது போன்களின் திறனைச் சார்ந்தது அல்ல. மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிவது.

எனவே அந்த நம்பிக்கையை 61 தன்மைகள் கொண்டு மக்களிடம் சோதனை நடத்தப்பட்டது என இந்த ஆய்வினை மேற்கொண்ட ட்ரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சந்திர மௌலி தெரிவித்தார்


தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது

கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.html) அறிவித்துள்ளார்.

இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும்.

சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.


தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்

நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படியானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்தளவை கண்ட்ரோல் கீ அழுத்தியபடி + அல்லது - அழுத்தி, பெரியதாகவும், சிறியதாகவும் மாற்றுகிறீர்கள்.

இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனுவில் பிரிவுகள் உள்ளன. இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அளவை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை.

அவர்களுக்கு, தண்டர்பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப்பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் விரும்பும் பலவகை வசதிகளை ஏற்படுத்தலாம். அவற்றை இங்கு காணலாம்.

முதலில் தண்டர்பேர்ட் தொகுப்பின் பொதுவான ஆப்ஷன் மெனு பெற Tools > Options செல்ல வேண்டும். அடுத்தபடியாக Advanced பிரிவில் General டேப் கிளிக் செய்திட வேண்டும். இதன் மூலம் தண்டர்பேர்ட் தொகுப்பின் Config எடிட்டர் பிரிவிற்குச் செல்லலாம்.

இப்போது about:config விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்கள் இருப்பதால், பில்டர் விண்டோவில் நமக்குத் தேவையான கட்டளை சொற்களைக் கொடுத்து கேட்கலாம். இங்கு mousewheel.withcontrolkey.action எனக் கொடுக்கவும். பட்டியல் விண்டோவில் ஒன்று மட்டும் இருப்பது நல்லது.

ஏற்கனவேமாறா நிலையில் டாகுமெண்ட்டில் உள்ள வரிகளில் எத்தனை வரிகள் என்பதனைக் கொண்டிருக்கும். இங்கு இருக்கக் கூடிய மதிப்புகள்: 0 - எத்தனை வரிகள் ஸ்குரோல் செய்திட வேண்டும் என்பதனை செட் செய்திட. 1- பக்கங்களில் சென்றிட, 2- முன்னும் பின்னுமாகச் சென்றிட, 3- டெக்ஸ்ட்டை சிறிது பெரிதாக மாற்ற, 4- பிக்ஸெல்களைக் கூட்டிக் குறைத்துப் பார்க்க.


இந்த மதிப்புகளில் விளக்கத்துடனும் வரிகள் காட்டப்பட்டிருக்கும். இந்த வரியில் டபுள் கிளிக் செய்தால், மதிப்பினை திருத்தும் வசதி கிடைக்கும். 0 முதல் 3 வரையில் தரப்படும் மதிப்பிற்கேற்ப, கண்ட்ரோல் கீயுடன் மவுஸ் வீல் சுழல்கையில் செயல்பாடு இருக்கும்.

கண்ட்ரோல் கீயுடன் செயல்பாட்டுக்கான மாற்றம் இருப்பது போல, மற்ற கீகளுடனும் செயல்பாடுகளை இங்கு செட் செய்திடலாம். அந்த வரிகள் கீழே உள்ளது போல கிடைக்கும்.

·mousewheel.withnokey.action

·mousewheel.withshiftkey.action

·mousewheel.withmetakey.action

·mousewheel.withaltkey.action

·mousewheel.withcontrolkey.action


இவை அனைத்தும் ஒரே முயற்சியில் பெற பில்டரில் mousewheel.with என அமைக்க வேண்டும். பின்னர் நம் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி அமைக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஷிப்ட் கீ அழுத்தி மாற்றங்களை ஏற்படுத்த, mousewheel.withshiftkey.action என்ற பாராமீட்டரில் மதிப்பை 3 எனத் தர வேண்டும்.


2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.

கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது. வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது. ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.

சபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா!


1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)

3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)

4. ஆப்பரா 6.6% (144)

5.சபாரி 0.92% (20)

6. மற்றவை 0.32% (7)

இந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம்


கோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்

கோகோ கோலா குளிர்பானம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விவரத்தை, பிரிட்டன் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 1886ல், ஜான் பெம்பர்டன் எனும் மருத்துவ ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட கோகோ கோலா குளிர்பானம், தற்போது உலக அளவில் முதன்மை இடத்தில் உள்ளது.எனினும், இந்த குளிர்பானம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது,

அதில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தும், பரம ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. கோகோ கோலாவின் ரகசியத்தை கண்டறியும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில், 'திஸ்அமெரிக்கன்லைப்.ஓஆர்ஜி' எனும் இணையதளத்தில், 'கோகோ கோலாவின் மூலப்பொருட்கள்' எனும் தலைப்பில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ஏற்கனவே, கடந்த 1979, பிப்ரவரி 8ம் தேதியிட்ட 'அட்லான்டா ஜர்னல் கான்ஸ்டிடியூஷன்' நாளிதழில் வெளி வந்துள்ளது.


புகைப்படத்தில், புத்தகம் ஒன்று திறந்த நிலையில் உள்ளது; அந்த புத்தகத்தில், கோகோ கோலா தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் பார்முலா விவரங்கள் அனைத்தும் பட்டியலி டப்பட்டுள்ளன.


மூலப்பொருட்களின் விவரம்:கோகோ திரவம் குறிப்பிட்ட அளவு, சிட்ரிக் அமிலம் மூன்று அவுன்ஸ்கள், கேபைன் லோஸ் மற்றும் சர்க்கரை குறிப்பிடத்தகுந்த அளவு, தண்ணீர் 2.5 கேலன், எலுமிச்சை சாறு 32 அவுன்ஸ்கள், வெனிலா 1 அவுன்ஸ், கேராமெல் நிறமி (குறிப்பிட்ட நிறம் வரும் வரையில் சேர்க்க வேண்டும்.)


கோகோ கோலாவின் தனித்துவமான சுவையை ஏற்படுத்த, 'மெர்சன்டைல் 7எக்ஸ்' என்ற பொருள் பயன்படுகிறது.


இந்த 'மெர்சன்டைல் 7எக்ஸ்' தயாரிக்க பயன்படும் எண்ணெய் பொருட்கள் விவரம் வருமாறு: ஆல்கஹால் 8 அவுன்ஸ்கள், ஆரஞ்சு ஆயில் 20 துளிகள், லெமன் ஆயில் 30 துளிகள், ஜாதிக்காய் ஆயில் 10 துளிகள், தனியா ஆயில் 5 துளிகள், சாத்துக்குடி ஆயில் 10 துளிகள், இலவங்கப்பட்டை ஆயில் 10 துளிகள்.இவற்றில் இருந்து தயாரிக்கப்படும், 'மெர்சன்டைல் 7எக்ஸ்' வேதிப்பொருளை மொத்த அளவில், 1 சதவீதத்திற்கு கலக்கும் போது, கோகோ கோலாவின் தனித்துவமான சுவை நமக்கு கிடைக்கிறது.


புதிய நோக்கியா சி5-03

அதிகார பூர்வமாக அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், சில வாரங்களாக நோக்கியாவின் சி5-03 மொபைல் கடைகளில் கிடைக்கிறது. அதிக பட்ச விலையாக ரூ.9250 எனக் குறிக்கப்பட்டுள்ள இந்த போன், பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் அம்சமாக இதன் கவர்ச்சியான, ஸ்லிம்மான தோற்றத்தினைக் குறிப்பிடலாம். இதன் பரிமாணம் 105.8 x 51 x 13.8 மிமீ. எடை மிகவும் குறைவாக 93 கிராம் என்ற அளவில் உள்ளது. இது ஒரு 3ஜி மற்றும் வை-பி நுட்பம் கொண்டுள்ள போனாகும்.

திரை 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் வகை. ப்ராசசரின் வேகம் 600 மெகா ஹெர்ட்ஸ். சிம்பியன் எஸ்.60 பதிப்பு 5 இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்குகிறது. இந்த சிரீஸ் வகையில் வந்த நோக்கியா போன்களில் இது வேகமாக இயங்கும் போனாக உள்ளது.

ஓவி மேப்ஸ் பதிந்தே தரப்படுகிறது. 2ஜிபி மெமரி கார்ட் இணைக்கப் பட்டுள்ளது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார், ஹேண்ட் ரைட்டிங் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 40 எம்பி ஸ்டோரேஜ் நினைவகம், 128 எம்பி ராம் மெமரி, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத், 5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, விநாடிக்கு 15 பிரேம் அளவில் வீடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர், போட்டோ எடிட்டர், ஆர்கனைசர், பிளாஷ் லைட் 3.0, 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி, 600 மணி நேரம் வரை மின் சக்தியைக் கொள்ளும் வசதி, தொடர்ந்து 35 மணி நேரம் பாட்டு இசைக்கும் திறன் ஆகியவற்றை இதன் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிடலாம்.


கிளிப் போர்டு வியூவர்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது?

எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்லது என்று தெரியவரும்.


ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட்கட்

ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஷார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும்.


வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி

லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.

MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.

இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.

இரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.

அறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.

இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.


1.WindTouch UI:

இந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.


2.EasyFace:

முகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.


3. Taskbar magnifier:

டாஸ்க் பாரினைச் சற்றுப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.


4. Photo Management Software:

விரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.


5. பதிந்தே கிடைப்பது:

பல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.


6. ஹார்ட்வேர் சிறப்புகள்:

இதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.

இதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000 என்ற அளவில் திட்டமிடப்பட்டது.

இந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும்.

கிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.


கர்சர் முனையில் உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, "டிவி' முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள்.

13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகின்றன. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை இந்த போட்டிகள் நடைபெறு கின்றன.


இந்த போட்டிகளைத் தொடர்ந்தோ அல்லது குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் காணவேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சி நிரலைத் தேடி அறிவது எப்படி?

இதற்கெனவே அருமையான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுடன் தளம் ஒன்று http://www.cricbuzz.com/ cricketschedule/series/228/iccworldcup2011 என்ற முகவரியில் இயங்குகிறது.

இந்த தளத்திற்குச் சென்றால், உடன் கிரிக்கெட் மைதானம் போல ஓவல் வடிவில் திரை காட்டப்படுகிறது. சுற்றிலும் டேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கு பெறும் நாடுகள், நடைபெறும் நகரங்கள், நாட்கள், அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள், குவார்ட்டர், செமி பைனல் மேட்ச்கள் என அனைத்திற்கும் டேப்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், உடன் டேப்பில் குறிப்பிட்டது சார்பான அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இந்தியா என்ற டேப்பில் கர்சர் செல்கையில், திரையின் நடுவே, இந்தியா எந்த நாட்டுக் குழுவினை எதிர்த்து, என்று, எங்கே விளையாட்டுக்களில் பங்கேற்கிறது என்ற விபரம் காட்டப்படும்.

அதே போல, குறிப்பிட்ட நாளுக்கான டேப்பில் கர்சர் சென்றால், அந்த நாளில் நடைபெறும் போட்டிகள் சார்பான தகவல்கள் தரப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் நகரம், ஸ்டேடியத்தின் பெயர் கொண்ட டேப்பில் கர்சர் செல்கையில், அந்த ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்ற போட்டிகள், கலந்து கொள்ளும் குழுக்கள், நாட்கள் பட்டியல் காட்டப்படுகின்றன.

அனைத்தும் மிக அழகாக, வேகமாகக் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் நிச்சயமாக இந்த தளத்தில் தகவல்கள் உடனடியாக அப்டேட் செய்யப்படும். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, எப்படி எல்லாம் ஒரு நிகழ்வைக் காட்டலாம் என்று அறியவிரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தளம்.


வேர்டில் கால்குலேட் கமாண்ட்

வேர்ட் டாகுமெண்ட்டில் வித்தியாச மான முறையில் Calculate என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். இந்த கட்டளை எண்களைக் கணக்கிடும் முறையே தனி.

எடுத்துக்காட்டாக காய்கறி 25, கறி 34, துணி 162, பஸ் செலவு 35 , என ஒவ்வொரு வரியாக எழுதி இவற்றை மொத்தமாக செலக்ட் செய்து கூட்டச் சொல்லலாம். சொற்கள் இருந்தாலும் அவற்றை நீக்கிவிட்டு எண்களை மட்டும் வேர்டின் கால்குலேட் கட்டளை கணக்கிட்டுச் சொல்லும். இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.

முதலில் மெனு பாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு Tools மெனு சென்று Customize என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Commands என்ற டேபில் கிளிக் செய்க.

இப்போது கிடைக்கும் விண்டோவில் Commands மற்றும் Categories என்ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இனி Commands கட்டத்தில் வரிசையாகக் கட்டளைகள் இருக்கும்.

இதில் Tools Calculate என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அதனை அப்படியே இழுத்து வந்து டாகுமெண்ட்டுக்கு மேலாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டுவிடவும். அல்லது அந்த மெனுவில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிவிடலாம்.

இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள் போல் இல்லாமல் கிரே கலரில் தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண்ட்டில் ஏதேனும் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.

கால்குலேட் கட்டளையை மெனு பாரில் ஒட்டியாயிற்று. இனி இந்தக் கட்டளையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். டெக்ஸ்ட்டில் உள்ள எண்களை அப்படியே கூட்டிச் சொல்ல இதனைப் பயன்படுத்தலாம்.

மற்ற கணக்குகளுக்கு அதற்குண்டான அடையாளங்களைப் (– / * /) பயன் படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக "உசிலம்பட்டி 123, திண்டுக்கல் 236, சென்னை 424, மதுரை 326' என டைப் செய்து அந்த வரியை சொற்கள் மற்றும் கமாக்களோடு செலக்ட் செய்து பின் கட்டளையைக் கிளிக் செய்தால் இதன் கூட்டுத் தொகை டாகுமெண்ட்டின் கீழாகக் காட்டப்படும்.

கிளிப் போர்டிலும் ஏற்றப்படும். அதன் மூலம் கூட்டுத் தொகையை எங்கு வேண்டு மானாலும் ஒட்டிக் கொள்ளலாம். இதில் என்ன விசேஷம் என்றால் எண்களைக் கூட்டுவதற்கு + அடையாளமும் தரலாம்.

ஜஸ்ட் ஒரு ஸ்பேஸ் அடையாளமும் தரலாம். எடுத்துக்காட்டாக 220+419 982 என டைப் செய்தால் 419 மற்றும் 982க்கும் இடையே உள்ள ஸ்பேஸ் கூட்டல் அடையாளத்திற்கு இணையாக எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்று எண்களும் கூட்டப்பட்டு விடையாக 1621 கிடைக்கும்.

எனவே இனி வேர்டில் ஏதேனும் பட்டியலில் வகைகளை எண்களுடன் அமைத்தால் தாராளமாக அவற்றைத் தேர்ந்தெடுத்து கால்குலேட் கட்டளை மூலம் கணக்கிடலாம்.


பத்து ஆண்டுகளில் பயமுறுத்தியவை

2011 ஆம் ஆண்டுடன் அடுத்த பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். தகவல் தொழில் நுட்பத்தில், நாம் கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், சாதனைகளுடன், சந்தித்த சோதனைகளும் அதிகமாவே இருந்துள்ளன.

அந்த சோதனைகளில் நம்மை அதிகம் பயமுறுத்திய சில விஷயங்களை இங்கு காணலாம். வரும் காலங்களில் இது போன்ற இடர்ப்பாடுகள் வருகையில், சமாளிக்கும் திறனை இது அளிக்கும்.


1. ஒய் 2 கே (Y2K):

2000 ஆண்டு தொடங்கும் போது, அனைத்து கம்ப்யூட்டர் களிலும் பிரச்னை ஏற்பட்டு விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆண்டினை கம்ப்யூட்டர் இரண்டு இலக்கங்களிலேயே ஸ்டோர் செய்து வந்தது.

அதனால் 99க்குப் பின் 00 என்று வந்தால், அதனால் தர்க்க ரீதியாக தவறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து இயக்கங் களும் கம்ப்யூட்டர் அடிப்படையில் இருப்பதனால், உலக இயக்கமே ஒரு முடிவிற்கு வந்துவிடுமோ என்று அனைவரும் பயந்தனர். 1984 ஆம் ஆண்டிலேயே, இது குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டதால், பலர் முனைந்து இதனைச் சரி செய்தனர்.


2.கான்பிக்கர் வோர்ம் (Conficker Worm):

2008 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் குறி வைத்து தாக்கியது. 2008-09 ஆம் ஆண்டு வாக்கில் இது குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடி தனிநபர், நிறுவன மற்றும் அரசு கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன.

இதனை உருவாக்கி அனுப்பியவர், இதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. இது Downup, Downadup, and Kido எனவும் அழைக்கப்பட்டது. இதனை உருவாக்கி பரப்பியவர்கள் குறித்து உறுதியான தகவல் தருபவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித் திருந்தது. இன்று வரை அவர்கள் சிக்கவில்லை.


3. மைடூம் (Mydoom):

2004–09ஆம் ஆண்டு களில் பரப்பப்பட்டு, அதிவேகமாக இமெயில் வழி பரவிய வைரஸ் என்று பெயர் பெற்றது. இதனைப் பரப்பி யவர்களையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.


4. ஐ லவ் யு வைரஸ் (I Love You):

ஆண்டு 2000. 5 கோடிக்கும் மேலான கம்ப்யூட்டர் களைப் பாதித்தது. “LOVELETTERFORYOU.TXT.vbs,” என்ற இணைப்பு மூலம் இது பரவியது. 550 கோடி டாலர் மதிப்பில் இதன் சேதம் மதிப்பிடப்பட்டது.
இவற்றுடன் இன்னும் பல வைரஸ்களும் நம்மைப் பயமுறுத்தின. ஆனால் விரைவில் அவை கண்டறியப் பட்டு, குறைந்த அளவினாலான சேதத்துடன் நிறுத்தப்பட்டன.

ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வகை சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.


பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற

பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம்.

ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை அமைப்பதற்குத் தேவையான வழிகளை இங்கு காணலாம்.


1. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில், ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந்தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும்.

2. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைகும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.

3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் குடித்ஞு Size group-ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், Size மீது கிளிக் செய்திடவும். இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும்.

இந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே - மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும்.

(சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா!). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, [Ctrl]+Z கீகளை எப்போதும் அழுத்தலாம்.


4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குடித்ஞு Size group -ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் இடூணிண்ஞு என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும்.


வேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க

வேர்ட் 2010 தொகுப்பைப் பொறுத்தவரை, அதன் மிகச் சிறந்த அம்சமாக, அதன் வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கூறலாம். நம் விருப்பப்படி, பல வசதிகளை அமைத்துக் கொண்டு எளிதாகச் செயல் படலாம்.

இந்த வசதி, வேர்ட் 2007 தொகுப்பில் தரப்பட்ட ரிப்பன் இடைமுகத்தில் தரப்படவில்லை. இத்தொகுப்பு தரும் அந்த வசதிகளை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.

நீங்கள் என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இவை நகாசு வேலைகளாகவோ அல்லது செயல்பாட்டு வேலை களாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் வேர்ட் மிக விரைவாகச் செயல்பட வேண்டும் என விரும்பலாம்.

டூல்ஸ் மற்றும் டாகுமெண்ட் குறித்த விபரங்களை எளிதாகப் பெறும் வகையில் வைக்கலாம். உங்கள் ஆசை அல்லது விருப்பம் எதுவாக இருந்தாலும், அதனை நிறைவேற்றிக் கொள்ள வேர்ட் 2010, அதற்கான வழிகளைத் தருகிறது.


1. Quick Access Toolbar–ஐ மாற்றி அமைக்க: குயிக் அக்செஸ் டூல்பார் என்பது, சில டூல்ஸ் கொண்ட ஒரு சிறிய செட். இது வேர்ட் 2010ன் இடது மேல் மூலையில் காணப்படும். மாற்றப்படாத நிலையில் இந்த டூல்பாரில் Save, Undo, மற்றும் Repeatஆகிய வசதிகள் காணப்படும்.

ஆனால், நீங்கள் Customize Quick Access Toolbar அம்புக் குறி மீது கிளிக் செய்து, கூடுதல் வசதிகளைப் பெறலாம். இந்த டூல்பாரில் கூடுதலாக ஒரு டூலைச் சேர்க்க, டூல்பார் பட்டியலில் அதன் மீது கிளிக் செய்திடவும். இன்னும் தெளிவாக இது குறித்து அறிய, More Commands என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, வேர்ட் ஆப்ஷன்ஸ் பாக்ஸில், Quick Access Toolbar category கிடைக்கும்.

இதில், நீங்கள் அப்போது அமைத்துக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்டில் மட்டும் பயன்படுத்த இந்த டூல் தேவையா, அல்லது எப்போதும் தேவையா என்பதனை அமைக்க வேண்டும். மேலும் இந்த மாற்றத்தினை மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்பினால், அதற்கான ஆப்ஷனும் இதில் தரப்பட்டுள்ளது.


2.ரிப்பனில் உங்களின் டேப் மற்றும் குரூப்களை இணைக்க: வேர்ட் 2007 தொகுப்பு வந்த பின், இந்த இணைக்கும் வசதியினைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்போம். வேர்ட் 2010ல் நாம் விரும்பும் டேப்களை ரிப்பனில் இணைக்க முடியும். இவற்றை டேப் குழுக்களாகவும் அமைக்கலாம்.

ஒரு புதிய டேப் குரூப்பினை (tab group) இணைக்க File tab மீது கிளிக் செய்திடவும்.பின்னர் இதில் Options கிளிக் செய்க. இதற்குப் பின், Customize Ribbon என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக, வேர்ட், புதிய டேப் குரூப் ஒன்றை இணைத்திடும். நீங்கள் தேர்ந்தெடுத்த டேப்பிற்கு அடுத்தபடியாக இது அமைக்கப்படும். இந்த டயலாக் பாக்ஸிற்கு வலது பக்கத்தில், உள்ள New Tab என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இந்த டேப்பின் பெயரை மாற்றலாம்; இணைக்கலாம்; குழுப் பெயரும் கொடுக்கலாம்.

அடுத்து, இந்த குரூப்பில் நீங்கள் விருப்பப்படும் டூல்களை இழுத்து வந்து இதில் விட்டுவிடலாம். அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து, மாற்றங்களை சேவ் செய்துவிடலாம்.


3.வேர்ட் வண்ணக் கட்டமைப்பினை மாற்ற: வேர்ட் தொகுப்பின் கட்டமைப்பில், நம் இஷ்டப்படி, வண்ணக் கலவை அமைக்கும் வகையில் வழிகள் இல்லை. இருந்தாலும், மாறா நிலையில் வரும், அந்த ஸ்டீல் கிரே வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். மாற்றப்படும் வண்ணம் நீல நிறமாகவோ, திரிந்த கருப்பு நிறமாகவோ இருக்கலாம்.

வண்ண அமைப்பு கட்டம் ரிப்பன், டைட்டில் பார் மற்றும் நம் திரையில் உள்ள டெஸ்க்டாப் சுற்று வட்டத்தில் தெரியவரும். மாறா நிலையில் வேர்ட் 2010 தொகுப்பு, கிரே கலர் கட்டமைப்பைப் பயன்படுத்து கிறது. இருப்பினும் சில மாற்றங்களை நாம் இதில் மேற்கொள்ளலாம்.

ரிப்பனில், இன்னும் சற்று கூடுதலாக வெண்மையைக் கொண்டு வரலாம்; சில டூல்ஸ் மற்றும் ஆப்ஷன் களில், பளிச் என்ற நிலையையும், சில டூல்களின் பார்டர்களில் வண்ணக் கலவையையும் கொண்டு வரலாம். வண்ணங்களை இணைக்கையில் வேறுபட்ட வண்ணங்கள் இருந்தால் தான், உங்களால் நன்றாகப் பார்த்துப் படிக்க முடியும் என்றால், அந்தக் கலவையில் அமைத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஏற்படுத்தும் வண்ண மாற்றங்கள், அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் ஏற்படுத்தப்படும். எனவே இங்கே மாற்றிவிட்டு, அடுத்து அவுட்லுக் செல்கையில் அங்கேயும் இந்த மாற்றங்கள் இருந்தால், ஆச்சரியப்படாதீர்கள்.


4. டாகுமெண்ட் ப்ராப்பர்ட்டீஸில் கூடுதல் வசதிகள்: வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ , நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது.

File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் (Document Panel) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.


5.அடிக்கடி டைப் செய்திட வேண்டுமா? சில வாக்கியங்களை நாம் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அமைப்போம். ஒரு மையத்தின் நோக்கத்தினை விளக்கும் வாக்கியம், ஒரு நிறுவனத்தின் முழு பெரிய பெயர், முகவரிகள், முடிக்கும் சொற்கள் என எத்தனையோ விஷயங்களை, ஓராண்டில் எத்தனை முறை நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் அமைக்க வேண்டியதிருக்கும்? ஏன் ஒவ்வொரு முறையும் டைப் செய்து நம் நேரத்தினையும், உழைப்பையும் செலவழிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி, இவற்றைக் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையில் தான் அமைக்க விரும்புவோம். இதற்கும் கூடுதலாக சில நிமிடங்கள் ஆகலாம். இவற்றை ஏதேனும் ஒரு வழியில் அமைத்து, நேரம், உழைப்பு வீணாகாமல் அமைக்க முடியுமா? நாமே, நம்முடைய Quick Parts என்ற பகுதியை உருவாக்கி, இவற்றை அமைத்து, நொடியில் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் என்ன வாக்கியங்கள், எந்த எழுத்துவகையில், என்ன ஸ்டைலில் அமைக்க முடியுமோ, அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Insert டேப்பினைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் பட்டியலில், Quick Parts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள Save Selection To Quick Part Gallery என்பதில் கிளிக் செய்திடவும்.

இறுதியாக Create New Building Block என்ற டயலாக் பாக்ஸில், இந்த Quick Parts –க்கு ஒரு பெயர் சூட்டவும். எந்த கேலரியில் இது இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பிடவும். மேலும் பிற தேவைகளையும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதியாக ஓகே, கிளிக் செய்து மூடவும்.


6. மாறா நிலை போல்டரை அமைக்க: புதிய பைல் ஒன்றை உருவாக்கும் ஒவ்வொரு வேளையும், அதனை எந்த போல்டரில் சேவ் செய்திட வேண்டும் என, அந்த போல்டரைத் தேர்ந்தெடுக்க விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அலைய வேண்டும். வேர்ட் 2010ல் எந்த போல்டரில் இவை சென்றடைய வேண்டும் என்பதனை, வரையறை செய்து மாற்றலாம்.

மாறா நிலையில் தரப்பட்டிருக்கும் போல்டரை மாற்ற, File டேப்பில் கிளீ செய்து Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Word Options டயலாக் பாக்ஸில், Word Options என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Default File Location என்ற பீல்டில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டருக்கான டைரக்டரி வழியை (Path) டைப் செய்திடவும்.

இப்படியே ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும் அமைத்து, இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் ஆன்லைன் சர்வரில் உள்ள ட்ரைவில் கூட சேவ் செய்திடும் படி அமைக்கலாம். ஆனால், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் அப்போது இயங்க வேண்டும்.


7. உங்கள் திட்டப்படி பக்க வடிவம்: வர்த்தக அலுவலகங்கள், கல்வி மையங்கள் என ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும், ஒரு வகையில் அதன் பக்கங்கள் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஒன்றில் மார்ஜின் இடைவெளி அதிகமாக, அதில் குறிப்புகள் எழுத இடம் இருக்கும்படி அமைக்க வேண்டும். இன்னொன்றில், பிரிண்ட் இடம் நான்கு பக்கங்களிலும் சற்று கூடுதலாக இருக்க விரும்புவோம். இது போல நம் விருப்பப்படி பக்கங்களை அமைக்க வேர்ட் 2010 உதவுகிறது.


இதற்கு, Page Setup டயலாக் பாக்ஸை முதலில் கொண்டு வரவும். அதில் நீங்கள் விரும்பும் வகையில் பக்க அகலம், உயரம், நீளம் ஆகியவற்றை செட் செய்திடவும். பின்னர், Set As Default என்பதில் கிளிக் செய்திடவும். இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும். நீங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறீர்களா? என்று கேட்கப்படும்.

ஏனென்றால், இந்த மாற்றங்கள் Normal.dot என்ற டெம்ப்ளேட் பைலில் மாற்றப்பட்டு அமைக்கப்படும். நிலையாக இந்த அளவுகளில் பக்கங்கள் வேண்டும் எனில், Yes என்பதைக் கிளிக் செய்திடவும். அதுவே மாறா நிலையாக, புதிய அளவுகளில் பக்கமாக அமைக்கப் பட்டு, அந்த அளவுகளிலேயான பக்கம் உங்களுக்கு புதிய பைலில் காட்டப்படும்.


8. பிடித்த எழுத்துவகையை அமைக்க: ஒவ்வொரு வருக்கும் ஒரு குறிப்பிட்ட எழுத்துவகை (Font) யினைப் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு Calibri, Footlight, Palatino போன்ற மிதமான எழுத்து வகைகள் பிடிக்கும். ஒரு சிலருக்கு Times New Roman எழுத்துவகைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். எது ஒருவருக்குப் பிடித்திருந்தாலும், அவர் கம்ப்யூட்டரில், வேர்ட் 2010 தொகுப்பில் அதனை, மாறா நிலை எழுத்துவகையாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இதற்கு MManage Styles என்ற டயலாக் பாக்ஸ் செல்லவும். Set Defaults என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Font, Size, Color, Position, Line Spacing, and Paragraph Spacing ஆகியவற்றில், நீங்கள் விரும்பும் அளவில் செட் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து இவற்றை சேவ் செய்திடவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துவகை, செட் செய்யப்பட்ட அளவில், வண்ணத்தில் கிடைக்கும்.


நோக்கியாவின் புதிய போன் X02-1

வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, நோக்கியாவின் எக்ஸ் 02-1 மொபைல் போன், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,459. பல இடங்களில் சற்றுக் குறைவான விலையிலும் கிடைக்கிறது.


இது மத்திய நிலையில் இயங்கும் ஒரு 2ஜி போன். நோக்கியாவின் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இதில் குவெர்ட்டி கீ போர்டு, 2.4 அங்குல வண்ணத்திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் A2DP இணைந்த புளுடூத் தொழில் நுட்பம், விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் செயல்படும் வீடியோ விஜிஏ கேமரா, எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி4 மற்றும் எம்பி3 மியூசிக் பிளேயர், 64 எம்.பி. நினைவகம், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஸ்பீக்கர் போன், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,லித்தியம் அயன் 1,020 எம்.ஏ.எச். பேட்டரி ஆகியவை உள்ளன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 மணி நேரம் பேட்டரி சக்தியுடன் இருக்கும். தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச முடியும்.

இதன் பரிமாணம் 119.4 x 59.8 x 14.3 மிமீ. எடை 107.5 கிராம்.


எந்த இடத்திலும் இன்டர்நெட்

இன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர்.

சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில் உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.

இது போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில் இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.

இருந்தாலும், சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல் உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.

இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.


1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா?

எப்போதும் இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட் அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத் தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல வேகத்தில் கிடைக்கலாம்.

ஆனால், மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம் தரலாம்;

அல்லது அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம். எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட்வொர்க் கார்டுகளை, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.


2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு:

உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம்.

ஆனால் டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில் என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன் டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது.

ஆனால் அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக் கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள் இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம், உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.


3. விடுதிகளில் வை-பி:

பல சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட் இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர்.

அங்கு போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை வயர்வழி இணைத்திருக்கும்

அறையைக் கேட்டு வாங்கி, அங்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வசதிகளை மேற்கொள்கையில், நீளமான இணைப்பு தரும் கேபிள்களைக் கையுடன் கொண்டு செல்லுங்கள். அறைகளில் உள்ள ஈதர்நெட் இணைப்பு மிகக் குறைவான நீளமுள்ள கேபிளைக் கொண்டிருக்கும். நீங்களோ படுக்கையில் வைத்து லேப்டாப்பில் இன்டர்நெட் இணைப்பினை மேற்கொள்ள எண்ணுவீர்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.


4.இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்திடுங்கள்:

நம் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, பெரிய அளவிலான பைல்களை அப்லோட் செய்திட வேண்டிய திருக்கும். இன்டர்நெட் இணைப்புதான் உள்ளதே என்று, பைல்களை அப்லோட் செய்திட முனைந்தால், அப்லோட் செய்திடும் நேரத்தில் நாமே நம் அலுவலகத்திற்குச் சென்று திரும்பலாம் போலத் தோன்றும். எனவே, பைல்களை அப்லோட் செய்திடும் முன், கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பினை ஒருமுறை சோதனை செய்திடவும்.


5. பாதுகாப்பினைப் பயன்படுத்தவும்:

திறந்த வெளியில் வை-பி இணைப்பு கிடைக்கிறதா? சற்று கவனத்துடன் பாதுகாப்பாகச் செயல்படவும். ஹாட்ஸ்பாட் ஷீல்ட் (Hotspot Shield) போன்ற பயன்பாட்டு புரோகிராம் களைப் பயன்படுத்தினால் உங்கள் மெயில் மற்றும் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாளலாம். இதனை எல்லாம், இன்டர்நெட் இணைப்பினை வை-பி மூலம் பெறும் முன்னர் ஏற்பாடு செய்து கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


6.கிளவ்ட் இணைப்பினைத் தள்ளி வைக்கலாம்:

கிளவுட் கம்ப்யூட்டிங் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் செலவுகளைக் குறைத்திட இந்த முறைக்குத் தாவி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் உங்களுடைய நகல் ஒன்றை, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வரில் இணைக்கப்படாமலேயே, அலுவலகப் பணிகளை மேற்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.


7.பயணத்திட்டத்தில் இன்டர்நெட்:

பயணம் ஒன்றை, அலுவலகப் பணிகளுக்கோ, குடும்பத்தினருடனோ அல்லது தனி நபர் சந்தோஷத்திற்காகவோ, மேற் கொள்ளத் திட்டமிடுகையில், மாத்திரைகள், பெர்சனல் ஆடை, உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயார் செய்வது போல, இன்டர்நெட் இணைப்பினையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெளியூர்களில் உறவினர் அல்லது நண்பர் வீடுகளில் தங்கினாலும், விடுதிகளில் தங்கினாலும் அங்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்குமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். அது போன்ற விடுதிகளிலேயே அறைகளை முன்பதிவு செய்திடவும். உங்களுடன் இன்டர்நெட் இணைப்பு தரும், பழகிய நிறுவனத்தின் டேட்டா கார்டுகளை எடுத்துச் செல்லவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes