தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை?

அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. 

தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர். 

இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் ஆலோசகர் ஏ.கே. பார்கவா உரையாற்றுகையில், “புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதிகமான தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம் காரணமாக, டேட்டா பரிமாற்ற கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார். 

மத்திய அரசு 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை வரிசைக்கான ஏலத்தினை நடத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டேட்டா பரிமாற்ற கட்டணத்தைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறது. 

அலைக்கற்றை வரிசை அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால், டேட்டா பரிமாற்ற சேவையில், பைபர் ஆப்டிகல் துணையுடன் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதனால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் மாறுதலான திட்டங்களுடன் களத்தில் இறங்கும். 

மொபைல் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் பேசுகையில், ஒலி மற்றும் டேட்டா பரிமாற்றத்தில், இந்தியாவில் வரும் நாட்களில் 35% வளர்ச்சி ஏற்படும் என்றார். அதற்கேற்ற வகையில், இதில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். 

அரசு விதிக்கும் மிக அதிகமான கட்டணம் இதற்குத் தடையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். USO Fund நிதிக்காக, நிறுவனங்களின் பங்களிப்பு தற்போது இருக்கும் 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

அரசு, கொள்கை வகுப்பவர்கள், கண்காணிப்பு அமைப்புகள், சேவை நிறுவனங்கள் மற்றும் சாதனங்களைத் தயாரிப்பவர்கள் என அனைத்துப் பிரிவினரும் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் வெற்றியை அடையலாம் என்று இந்த கருத்தரங்கில் அனைவரும் ஒருமுகமாகக் கருத்து தெரிவித்தனர்.


4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும்

இந்தியாவில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, வரும் ஆண்டில் வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டில், 1.5 கோடி பேர், இந்த அலைவரிசையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள், 1,800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை இதற்குப் பயன்படுத்துவார்கள். 

வாடிக்கையாளர்கள், மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் வேகத்தினைக் கொள்ள விரும்புவதால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டினை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. PwC India என்ற அறிக்கையில் இந்த கணிப்புகள் தரப்பட்டுள்ளன. 

ஏற்கனவே பாரதி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஏற்கனவே 4ஜி அலைவரிசை சேவையினை வழங்கி வருகின்றனர். கொல்கத்தாவில், 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, பின்னர் பல நகரங்களில் விரிவடைந்தது இந்த சேவை. 

2014 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமானது. ஏர்செல், இதே சேவையினை, 2014ல், தெலுங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. 

தற்போது ரிலையனஸ் நிறுவனமும் இந்த பிரிவில் இறங்கியுள்ளது. தன் துணை நிறுவனமான ஜியோ இன்போகாம் (Jio Infocomm) மூலம் இந்த சேவையினை வழங்க இருக்கிறது. 

தற்போது சோதனை அடிப்படையில் ஜாம்நகர் என்ற நகரில் மட்டும் இது வழங்கப்படுகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல நகரங்களில், ஜியோ இன்போகாம் இச்சேவையை வழங்கும். முதலில், டில்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

இதற்கான தொடக்கமாக, ஜியோ இன்போகாம், மும்பையில், பல பெரிய அளவிலான வீட்டு வளாகங்களில், அறிமுகச் சேவையாக, இலவச மூன்று மாத 100 mbps வேக இணைய இணைப்பினை வழங்க முயற்சிகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. 

அரசின் “டிஜிட்டல் இந்தியா” மற்றும் “ஸ்மார்ட் சிட்டீஸ்” திட்டங்களின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்த வை பி இணைப்பு வழங்குவது இந்த ஆண்டில் சாத்தியம் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் பார்க்கையில், 4ஜி அலைவரிசை சேவையில், தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களிடையே பலத்த போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அரசு இந்த சேவை குறித்த தன் நிலைப்பாட்டினையும், கொள்கை விதிகளையும் இன்னும் முறையாகத் தெரிவிக்காததால், போட்டியில் பல நிறுவனங்கள் இறங்கிட வாய்ப்பு உள்ளது. 

Reliance 4G LTE போன்று புதிய நெட்வொர்க் கட்டமைப்புகள் உருவாக உள்ளன. இதனால், 2010 ஆம் ஆண்டில், மொபைல் போன் சேவையில் ஏற்பட்ட கடுமையான போட்டி போல, இப்போதும் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயனாளர்களை மையமாகக் கொண்ட இணையம்

முடியப்போகும் இந்த ஆண்டில், இணையப் பயன்பாட்டிலும், டிஜிட்டல் சாதனங்களிலும் ஏற்பட்ட புதிய மாற்றங்களைக் கண்ணுற்றால், அவை பயனாளர்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

நம் நடவடிக்கைகளை, நடப்பதைக் கண்டறிந்து சொல்லுதல், இதயத் துடிப்பினை அளந்து காட்டுதல், அன்றாடம் நாம் உட்கொள்ள வேண்டிய உணவினையும், அதன் அளவையும் எடுத்துச் சொல்லுதல் என்ற ரீதியில், பலவகை செயல்பாடுகள் தற்போது புதியதாகத் தோன்றியுள்ளன.

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் லாக் என்று சென்று கொண்டிருந்த செறிதிறன் சாதனங்கள் வரிசையில், இப்போது தனிநபர் பயன்படுத்தும், ஸ்மார்ட் ப்ரேஸ்லெட், கடிகாரங்கள், கழுத்தில் அணியும் டாலர்கள் என தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. 

மொபைல் போனில் யாரேனும் தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரைக் காட்டி, தகவல் பரிமாற உதவிடும் வகையில் பிரேஸ்லெட்கள் விற்பனையாகிக் கொண்டுள்ளன. ஏன், நாம் வளர்க்கும் செல்ல நாய்கள் எங்கு செல்கின்றன என்பதைக் காட்ட, அவற்றின் கழுத்தில் அணியும் ஸ்மார்ட் பட்டைகளும் கிடைக்கின்றன. 

இடத்தைக் கண்டறிவதுடன், நம் செல்லப் பிராணிகள் குறிப்பிட்ட நேரம் தூங்கினவா, குறைந்த அளவு தூரமாவது ஓடினவா என்றும் இதன் மூலம் அறியலாம். இவற்றில் உள்ள சென்சார்கள், இவை நடமாடும் வகையைக் கணக்கிட்டு, நம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்குத் தகவல்களைத் தருகின்றன.

 நம் உடல் நிலையைக் கணக்கிட்டு தரும் ஆப்பிள் வாட்ச், வரும் ஆண்டில் அறிமுகமாகிக் கலக்கப் போகிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்கும் சென்சார்கள் வடிவமைப்பில் பல புதிய விஷயங்கள் இந்த ஆண்டில் அறிமுகமாயின. மேம்படுத்தலுக்காக அடுத்த ஆண்டுக்குச் செல்கின்றன.

ஸ்மார்ட் போன்களிலும் புதிய வசதிகள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. மின் அஞ்சல், காலண்டர் மூலம் நாட்களை நினைவூட்டல், இருக்கும் இடத்தினை மற்றவருக்குக் காட்டுதல் போன்ற வசதிகள் தற்போது முன்னேறிய அளவில் கிடைக்கின்றன. 

2020 ஆம் ஆண்டுக்குள், நம் தேவைகளுக்கு, நம் கைகளில் உள்ள சாதனங்களிடம் பேசுவோம். அவை நமக்குச் சரியான தீர்வினைப் பதிலாக அளிக்கும். எடுத்துக் காட்டாக, ”பசிக்கிறதே” என்று கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் ப்ரேஸ்லெட்டிடம் கூறினால், அது நாம் ஏற்கனவே, எந்த உணவு விடுதிகளில், என்ன உணவு சாப்பிட்டோம். 

எதனை விரும்பிச் சாப்பிட்டோம். அவற்றின் விலை என்ன? தற்போதைய விலை என்ன என்பதனை, நம் மொபைல் போன் திரையில் பட்டியலிடும். நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், பணம் எப்படி செலுத்தப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு, உணவு விடுதிக்குத் தானே ஆர்டர் செய்து, முகவரி தந்து, மொபைல் வாலட் மூலம் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணத்தையும் செலுத்தும்.

கூகுள் நவ் (Google Now) சாப்ட்வேர், நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் படித்து, நம் பயணம் உறுதியானதை எடுத்துக் காட்டும். விமான நிலையத்திற்கு புறப்பட எது சரியான நேரம் எனச் சொல்லும். இதே வகையில், ஆப்பிள் நிறுவனம் Siri virtual assistant என்ற ஒரு புரோகிராமினைக் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் Cortana என்ற புரோகிராமினை, விண்டோஸ் இயக்கும் மொபைல் போன்களுக்காக வடிவமைத்துள்ளது. 

ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் டிஜிட்டல் வளையங்கள் இப்போது பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சாம்சங், சோனி, எல்.ஜி., மோட்டாரோலா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன. 

உடல் நலம் குறித்த தகவல்களை மட்டும் முதலில் இவை பெற்று, நமக்கு அறிவித்தன. இப்போது, இவற்றைப் பயன்படுத்தி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அழைப்புகளைப் பெற்று பேசலாம். மின் அஞ்சல்களைப் படிக்கலாம், அனுப்பலாம். போட்டோக்கள் எடுக்கலாம். .

ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களுடன் தொடர்பு கொண்டு இயக்கலாம். டேட்டா பெறுவது என்ற நிலையில் இருந்து, இருக்கும் டேட்டாவினைப் பயன்படுத்துவது என்ற நிலைக்கு, இவை முன்னேற்றம் பெற்றுள்ளன.

வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வந்த பின்னர், முன்பு எப்படி ஐபாட் எம்.பி.3 மியூசிக் அமர்க்களப் பட்டதோ, மக்களிடம் வேகமாகப் பரவியதோ, அதே போல, இதுவும் மக்களிடம் அதிக அளவில் சென்றடையும் என்று எதிர்பார்க்கிறது. மற்ற நிறுவனங்களும், அதனைப் பின்பற்றி, போட்டியில் தங்கள் சாதனங்களையும் சந்தையில் இறக்கலாம்.

எப்போது தகவல் கைகளில் உள்ள வளையங்களுக்குக் கிடைக்கிறதோ, அப்போதே, அவற்றை நம் கண்கள் முன்னால் கொண்டு வரலாம் என்ற சிந்தனை நம் நிறுவனப் பொறியாளர்களிடம் ஓடும். அதன்படி, கூகுள் கிளாஸ் போன்ற சாதனங்கள், இவற்றுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். 


சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் (Samsung Galaxy Core Prime)

சென்ற அக்டோபரில், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி கோர் ப்ரைம் (SM-G360H/DS) மொபைல் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. 

தற்போது அது விற்பனைக்கு தளத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,599. 

இதில் 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த பின்புற கேமரா, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, 14 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் எனப் பல சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது. 

இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். 

இதன் தடிமன் 8.8 மிமீ. இதில் எப். எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. வெள்ளை வண்ணத்தில் மட்டும் இது கிடைக்கிறது. 

இதன் சில்லரை விலை ரூ.11,300 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இதன் சந்தை விற்பனை விலை ரூ. 9,599 ஆக உள்ளது.


இணையம் கற்றுத் தரும் ஏர்டெல்

தகவல் தொழில் நுட்பப் பிரிவில், பெரிய அளவில் செயல்படும், ஏர்டெல் நிறுவனம், இணையம் குறித்து இதுவரை தெரியாத, பயன்படுத்தாத, தன் வாடிக்கையாளர்களுக்கு, இணையம் குறித்துக் கற்றுத் தரும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. 

ஏர்டெல் அலுவலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தியாவெங்கும் உள்ளனர். 14 லட்சம் சில்லரை விற்பனையாளர்கள், 20 ஆயிரம் கள அலுவலர்கள் மற்றும் 15,000 அலுவலர்கள் என ஏர்டெல் ஊழியர் கட்டமைப்பு விரிவாக உள்ளது. 

ஏறத்தாழ 1,800 நகரங்களில் இவர்கள் இயங்குகின்றனர். இவர்கள் அனைவரும், முதன் முதலாக இணையம் பயன்படுத்துவோருக்கு, இணையத்தை இயக்கும் வழிகள் குறித்து கற்றுத் தருகிறார்கள்.

இணையத்தைப் பயன்படுத்துவதில், மூன்று வகையான தடைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, ஸ்மார்ட் போன்களில் இணையத்தைத் தொடர்பு கொள்ள அஞ்சுதல், அதற்கான தேவைகள் அதிகம் என்ற தேவையற்ற பயம் மற்றும் மெகா பைட், கிகா பைட் போன்றவை எத்தகைய அளவு என அறியாதிருத்தல். 

இதில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட அலகுகள் குறித்த பயம் முக்கியமானது. ஏனென்றால், இதுவே இணையம் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதால், இவை என்ன அளவு, எதனைக் குறிக்கிறது என்பதனை மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 

இந்தியாவின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையத்தை 25% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்காவில் 85% ஆகவும், சீனாவில் 46% ஆகவும் உள்ளது.

இருப்பினும் இணைய சந்தாதாரர் எண்ணிக்கை, உலக அளவில் மூன்றாவதாக, 25 கோடி என்ற அளவில் உள்ளது. 

இந்த திட்டம் மூலம் இணையம் பயன்படுத்துவோர் அது குறித்த கல்வி மற்றும் செயல்முறை அறிவினைப் பெறுவதோடு, தற்போது பிரதமர் மோடி அறிவித்த ”டிஜிட்டல் இந்தியா” திட்டத்திற்கும் உதவியாக இருக்கும். 

ரூ.1.13 லட்சம் கோடி பணம் திட்டச் செலவாக அறிவிக்கப்பட்டு டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ள, மக்கள் இணையச் செயல்பாட்டு அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பாகும். 

இந்தியாவில் 11.5 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டில், இன்னும் 10 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் (One Touch Internet) இந்நிறுவனத்தின் செயல் அலுவலர்கள், மக்களிடம் சென்று, எப்படி ஸ்மார்ட் போனை ஒரு முறை தொடுதல் மூலம், உடனடியாக இணையத் தொடர்பினை மேற்கொள்ளலாம் என்றும், மேலும் இதனை எப்படி அன்றாட நம் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் கற்றுக் கொடுப்பார்கள். 

இவர்கள் சந்திக்கும், இதுவரை இணையம் பயன்படுத்தாத மக்களிடம், ஸ்மார்ட் போன் இல்லை என்றாலும், தாங்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் போனில் இதனைக் கற்றுக் கொடுப்பார்கள்.

இவர்களுக்கு, இணைய இணைப்பு, செயலாக்கம், சமூக வலைத் தளங்களில் தகவல் பரிமாற்றம், ஆடியோ மற்றும் வீடியோ காணுதல், கோப்புகள் தரவிறக்கம், இணைய தளங்களின் மூலம் பொருட்கள் வாங்குதல், பயணங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை வீடியோ மூலமும், நேரில் செயல்முறைப் பயிற்சியின் மூலமும் கற்றுக் கொடுப்பார்கள்.


ஆண்ட்ராய்ட் போனுக்கான VLC பிளேயர்

கம்ப்யூட்டரில், எம்பி 4 உட்பட பல பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்க நாம் அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவது வி.எல்.சி. பிளேயர் ஆகும். 

இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர். 

இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. 

கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனைப் பெறலாம். அதற்கான முகவரி : https://play.google.com/store/apps/details?id=org.videolan.vlc.betav7neon. 


சோதனைத் தொகுப்பு ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகையில் அடிக்கடி கிராஷ் ஆனது. மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத சில பிரச்னைகளும் கண்டறியப்பட்டன. 

குறிப்பாக ARMv8 ப்ராசசர் பொருத்தப்பட்ட, ஆண்ட்ராய்ட் போன்களில் இவை ஏற்பட்டன. இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு, முழுமையான தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட் பதிப்பு 2.1 முதல் அதன் பின் வந்த அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களிலும் இது சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இலவச அழைப்பு

இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தரைவழி மற்றும் மொபைல் போன்களை இலவசமாக அழைத்துப் பேசலாம். 

இந்த வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் தன் ஸ்கைப் அப்ளிகேஷன் மூலம் தந்துள்ளது. 

இந்த நாடுகளில் உள்ள தொலைபேசியை அழைக்க, ஸ்கைப் அப்ளிகேஷன் திறந்து, அதில் உள்ள டயல் பேடில், அமெரிக்க அல்லது கனடா தொலைபேசியை டயல் செய்து அழைக்க வேண்டியதுதான். இணையம் வழியாக இணைப்பு கிடைத்துப் பேசலாம். இந்த இலவச அழைப்பு வசதி வரும் மார்ச் 1, 2015 வரை மட்டுமே கிடைக்கும்.

முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கைப் குழுவாக விடியோ அழைப்பினை ஏற்படுத்தி பயன்படுத்தும் வசதியைத் தந்தது. முதலில் மாதந்தோறும் 9.99 அமெரிக்க டாலர் கட்டணமாக இருந்தது. பின்னர், இது இலவசமாக்கப்பட்டது. 

சென்ற வாரத்தில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 தொகுப்பில் செயல்படும் ஸ்கைப் மொழி பெயர்ப்பாளர் என்னும் சோதனை முறையில் இயங்கும் அப்ளிகேஷனை வழங்கியது. இதில் சில மொழிகளுக்கிடையே உடனடியாக மொழிபெயர்ப்பு பணி கிடைக்கும் வசதி தரப்பட்டது. 

நம்முடன் பேசுபவரின் மொழி தெரியாவிட்டால், அந்த மொழி இந்த திட்டத்தில் இருந்தால், உடனடியாக, அப்போதே, பேசுபவரின் கருத்து மொழி பெயர்க்கப்பட்டு நீங்கள் விரும்பும் மொழியில் கிடைக்கும். 

திரையின் கீழாக, இரு மொழிகளிலும் டெக்ஸ்ட் காட்டப் படும். தற்போது இந்த வசதி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கிடையே மட்டும் இயங்குகிறது. அத்துடன் 40 மொழிகளில் சில குறிப்பிட்ட தகவல்களை மொழி பெயர்த்து தருவதாகவும் உள்ளது. 

இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் ஆய்வகம், ஸ்கைப் மற்றும் பிங் பிரிவுகளுடன் இணைந்து மேற்கொண்டது. இதற்கான ஆய்வு பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. 

பேசப்படும் இயற்கை மொழியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளுதல், தானாக மொழி பெயர்த்தல் ஆகிய தொழில் நுட்ப பணிகளுடன் பயனாளரின் அனுபவங்கள் குறித்தும் பெரிய அளவில் தகவல் தொகுப்பு உருவாக்குதலும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. 


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி (Micromax Canvas Selfie)

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வேகமாகத் தன் பங்கினை அதிகரித்து வருகிறது. அண்மையில், கேன்வாஸ் செல்பி என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

எச்.டி.சி. டிசையர் ஐ என்ற போனில் தரப்பட்டுள்ளது போல, இதில் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. 

இத்துடன் சோனி சென்சார் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் திரை 4.7 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் இயக்கம் மற்றும் 3ஜி இணைப்பு இயக்க முறை ஆகியனை இதன் மற்ற சிறப்பம்சங்களாகும். 

இந்த செல்பி கேமரா போனைப் பயன்படுத்தி, நாம் எடுத்த செல்பி போட்டோக்களை செம்மைப் படுத்தலாம். கண்கள், இமைகள், முக அமைப்பு, கண் புருவம், உதட்டுச் சாயம் இன்னும் பல விஷயங்களைத் திருத்தலாம். 

ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 10 லட்சம் செல்பி படங்கள் மக்களால் எடுக்கப்படுகின்றன. இவற்றில் 40% படங்களைச் சீர் செய்திட வேண்டியதுள்ளது. 

இந்த இலக்கினை முன் நிறுத்தியே, இந்த செல்பி போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த போனின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளன. 

இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதில் இரண்டு நானோ சிம் கார்ட்களைப் பயன்படுத்தலாம். 

முன்னாலும், பின்னாலும் 13 எம்.பி. திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ, 3.5. மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இதன் பேட்டரி 2300 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விழா ஒன்றில், மைக்ரோமேக்ஸ் தலைமை நிர்வாகி வினீத் தலைமையில், விளையாட்டு வீராங்கனைகள் இதனை அறிமுகப்படுத்தினார்கள். விற்பனை மையங்களில், இது ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து கிடைக்கலாம். 

வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் இவை வெளிவருகின்றன. இதன் விலை ரூ.19,000 முதல் ரூ.20,000 என்ற வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


வாட்டர் புரூப் ஸ்மார்ட் போன்கள் ஏன் வருவதில்லை?

தங்களுடைய மொபைல் போன்களை, குறிப்பாகப் பெரிய அளவில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் போன்களைத் தண்ணீரில் தவற விடுபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். 

நீச்சல் குளங்களில் இறங்குகையில், தங்கள் கால்சட்டை அல்லது சட்டைப் பாக்கெட்டில் வைத்தவாறே இறங்குதல், குளியலறையில் நீர் நிரம்பிய வாளிக்குள் தவறவிடுதல், டாய்லட் தொட்டியில் விழவிடுதல், மழை நீர் தேங்கி இருக்கும் சாலைகளில் தவற விடுதல் என இது பல வகைகளில் உள்ளது. 

சிலர், இவ்வாறு தவறவிட்டு உடனே எடுக்கப்படும் போன்களை, அரிசியில் 72 மணி நேரம் புதைத்து வைத்து எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு சரி என்று இதுவரை யாரும் தங்கள் அனுபவத்தினைத் தெரிவிக்கவில்லை. 

ஆனால், அதிக நேரம் நீரில் மூழ்கிவிட்டால், ஸ்மார்ட் போன் விலை உயர்ந்த டேபிள் வெய்ட்டாகத்தான் பயன்படுத்த வேண்டியதிருக்கும். 

பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன், மொபைல் போன்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கையில், தண்ணீரினால், கெட்டுப் போகாத அல்லது தண்ணீரில் மூழ்கினாலும், செயல்படுகின்ற வாட்டர் புரூப் மொபைல் போன்கள் ஏன் வருவதில்லை. 

ஒன்றிரண்டு அது போல வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சோனி எக்ஸ்பீரியா இஸட் 3 மாடலைச் சொல்லலாம். இதற்கான விளம்பரத்தில் கூறியுள்ளபடி, இதனைக் கைகளில் வைத்துக் கொண்டு அடை மழை பெய்திடும் நாளில் ஓடலாம். குளத்தங்கரையில், கைகளில் வைத்தபடியே குதித்து நீரில் மூழ்கலாம். 

1.5 மீட்டர் ஆழத்தில் இதனை 30 நிமிடங்கள் மூழ்க வைத்து இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற சில மாடல்களும் இது போல தண்ணீரில் நனைந்தாலும் கெட்டுப் போகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டன. 

ஆனால், மக்கள் அந்த பண்பிற்காகவே அவற்றை வாங்கியதாக இதுவரை நமக்குத் தகவல் இல்லை. எனவே தான் பல நிறுவனங்கள், நீரில் நனைந்தாலும் இயங்கும் மொபைல் போன்களை வடிவமைத்து வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. 


புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. 

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. 

பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள், அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும், கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை, ஜூலியட் அடையாளம் கண்டது போல, புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. 

ஓர் எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. 

இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. 

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். 

இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. 

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம். 


விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. 

ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் சிஸ்டம் பைல்களை மாற்றி அமைக்க முடியாது. அந்த பைல்கள் எல்லாம், செயல்பாட்டில் வளைக்கப்பட்டிருக்கும். அவை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது.

ரீபூட் என்ன செய்கிறது? விண்டோஸ் இயக்கம் செயல்பாட்டில் உள்ள பைல்களை அப்டேட் செய்திடவோ அல்லது நீக்கவோ முடியாது. விண்டோஸ் அப்டேட் செயல்பாடு, புதிய அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடுகையில், நேரடியாக, விண்டோஸ் இயக்கத்தில் அதனைச் செயல்படுத்த இயலாது. 

இயக்கத்தில் இருக்கும் சிஸ்டம் பைல்களில் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள இயலாது. எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுத்தி மீண்டும் இயக்கினால் தான், அவை தானாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும். ரீபூட் இதனைத்தான் செய்கிறது.

சில வேளைகளில், பைல்களை நீக்கும் போதும் ரீபூட் தேவைப்படுகிறது. சில வகையான சாப்ட்வேர் தொகுப்புகளை அப்டேட் செய்திடுகையில் அல்லது நீக்குகையில், ரீபூட் அவசியத் தேவையாகிறது. 

எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை அல்லது ஹார்ட்வேர் ட்ரைவர் பைல்களை இயக்குகையில், அவற்றின் பைல்கள் மெமரியில் ஏற்றப்படுகின்றன. 

இத்தகைய பைல்களில் அப்டேட் செய்திடுதல் அல்லது நீக்குதல் செயல்பாடு மேற்கொள்ளப்படுகையில், விண்டோஸ் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டுகிறது. சிஸ்டம் முழுமையாக இயங்கும் முன்னர், இந்த பைல்கள் மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வருகின்றன. 

விண்டோஸ் அப்டேட் ரீபூட்: மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை இவை வெளியாகின்றன. 

மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. அவை தளத்தில் ஏற்றப்பட்டவுடன், நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பு பெறுகையில், தாமாகவே அவை கம்ப்யூட்டரில் இறங்குகின்றன. 

பின் நாம் செட் செய்தபடி, அவை பதியப்படுகின்றன. அவை பதிவு செய்யப்பட்டவுடன், சிஸ்டம் பைல்கள் அப்டேட் செய்திட நம் கம்ப்யூட்டரை ரீபூட் செய்தால் தான், புதிய பேட்ச் பைல்களின் செயல்பாட்டினால், சிஸ்டம் பைல்கள் மேம்படுத்தப்படும். 

விண்டோஸ் இயக்கம் இந்த பேட்ச் பைல்கள் கிடைத்தவுடன், உங்களைக் கட்டாயமாக ரீபூட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான், இந்த பேட்ச் பைல்கள் தரப்படுகின்றன. 

எனவே, எவ்வளவு சீக்கிரம் ரீபூட் செய்து, இவற்றை அப்டேட் செய்கிறோமோ, அந்த அளவிற்கு நம் கம்ப்யூட்டர் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. முன்பு எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பாதிக்கும் வகையில் Blaster, Sasser, மற்றும் Mydoom ஆகிய வைரஸ்கள் பரவிய போது, மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களைத் தந்து, கம்ப்யூட்டரின் பயனாளரின் அனுமதியைப் பெறாமலேயே கம்ப்யூட்டரை ரீபூட் செய்தது. 

ஏனென்றால், அந்த வைரஸ்களின் தாக்கம் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது. பயனாளர்கள் காத்திருந்து, சில நாட்கள் கழித்து பூட் செய்து, அவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், பேட்ச் பைல்களின் செயல்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும். 


விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. 

இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.


1. அசைத்து எறி (Shake It Off): 

ஒரே நேரத்தில் பல விண்டோக்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மானிட்டர் திரை, எந்த ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாமல் குழப்பமான ஒரு காட்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறதா? 

விண்டோஸ் 7 மற்றும் அதனை அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இதற்கான தீர்வாக, வியக்கத்தக்க வழி ஒன்று தரப்பட்டுள்ளது. நீங்கள் எந்த விண்டோவினை மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதன் டைட்டில் பார் மீது கிளிக் செய்து அப்படியே மவுஸைத் தக்க வைக்கவும். 

பின், அதனை மவுஸ் கொண்டு முன்னும் பின்னுமாகச் சற்று அசைத்திடவும். இப்போது பிற விண்டோக்கள் அனைத்தும் டாஸ்க் பாருக்கு வந்துவிடும். இந்த வசதிதான் Aero Shake என அழைக்கப்படுகிறது. 

இதே வசதி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா சிஸ்டத்தில் தேவை எனில், அதற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி ஏற்படுத்தலாம்.


2. வால்பேப்பர் ஸ்லைட் ஷோ: 

உங்களுடைய டெஸ்க் டாப்பில் ஒரே ஒரு வால் பேப்பர் காட்சியை அமைத்து, அதனையே தொடர்ந்து பார்ப்பது, உங்களுக்கு சில வேளைகளில் அலுத்துப் போகும். ஏன் ஒரே ஒரு வால் பேப்பருடன் நாம் திருப்தி அடைய வேண்டும்? 

ஒரே நேரத்தில் பல வால் பேப்பர்களைக் காட்டும்படி நாம் செட் செய்திடலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalise > Desktop Background எனச் செல்லவும். இது உங்கள் வால் பேப்பரை செட் செய்திடத் தேவையான விண்டோவினைத் திறக்கும். 

இங்கு பல படங்கள் கிடைக்கும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், எந்த கால அவகாசத்தில் இந்த படங்கள் மாறி காட்சி அளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். 

எந்த படத்தில் தொடங்கி முடிய வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடலாம். இதன் மூலம், டெஸ்க் டாப் படத்தினை மாற்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் டெஸ்க்டாப்பில் வேலை செய்திட வேண்டியதில்லை.


3. விரைவாக டாஸ்க்பார் திறத்தல்: 

வேகம் வேகமாகக் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நமக்கு, மவுஸை டாஸ்க் பார் கொண்டு சென்று, அங்குள்ள ஐகான்களைக் கிளிக் செய்வது கூட நேரம் எடுக்கும் செயலாக இருக்கும். 

இதற்குப் பதிலாக, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் ஐகான் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்த வேண்டும். 

எடுத்துக் காட்டாக, டாஸ்க் பாரில் வேர்ட் புரோகிராமிற்கான ஐகான் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3 அழுத்தினால் போதும். வேர்ட் விண்டோஸ் திறக்கப்படும்.


4. ரிசோர்ஸ் மானிட்டர்: 

உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் வழக்கத்திற்கும் மாறாக, மெதுவாக இயங்கினால், அது நம்மைக் கவலைக்குள்ளாக்கும். எதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று அறிய ஆவலாயிருக்கும். இதற்கு ரிசோர்ஸ் மானிட்டர் நமக்கு பயன்படும். 

Resource Monitor எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்து, அதனைத் திறக்கவும். இங்கு கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் பலவகைத் திறனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வரும். 

ஒரு குறிப்பிட்ட புரோகிராமின் செயல்பாட்டினை சி.பி.யு. மற்றும் மெமரியினை அடுத்து அடுத்துப் பார்க்கையில் அதன் செயல்பாட்டுக்கான திறன் எவ்வளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிய வரும். இதில் அதிகம் நம் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் புரோகிராமினைக் கண்டு, அதனை நிறுத்திப் பின்னர் இயக்கலாம். 


செய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை

உடனடியாக செய்திகளை அனுப்புவதற்கு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அப்ளிகேஷன்களின் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் 52% இடம் பெற்றுள்ளது. 

அடுத்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், அடுத்து ஸ்கைப் மற்றும் வி சேட் (WeChat) இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, மிகக் குறைவான இடத்தை வைபர் மற்றும் லைன் (Viber / Line) பெற்றுள்ளன.

 இந்த தகவல்களை, உலக அளவில் இவற்றின் பயன்பாட்டினைக் கவனித்து வரும் குளோபல் வெப் இண்டெக்ஸ் (GlobalWebIndex (GWI)) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கிடையே, வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 334% உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், வி சேட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2356% அதிகரித்துள்ளது. பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஸ்கைப் முறையே 192% மற்றும் 190% உயர்ந்தன. 

விசேட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலக அளவில், சென்ற ஆண்டில், மிக அதிகமாக வளர்ந்துள்ளது. உலக அளவில், இணையம் பயன்படுத்துவோரில்ல் 23% பேர் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதில் தரப்படும் இலவச கூடுதல் வசதிகளே இதற்குக் காரணம்.

மொபைல் சாதனங்கள் வழியாக, உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வது, தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இவர்கள், சமூக இணைய தளங்களை, இந்த வேலைக்குப் பயன்படுத்துவதனைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த வகையில் மொபைல் சாதனங்களின் பயன்பாடு 113% அதிகரித்துள்ளதாக, மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இணையம் பயன்படுத்துவோரில், 79% பேர் ஸ்மார்ட் போன்களை வைத்துள்ளனர். இவர்களில் 40% பேர் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.


சாம்சங் வழங்கும் புதிய 2ஜி போன்

சாம்சங் நிறுவனம், அண்மையில், Samsung G 130E Galaxy Star 2 என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. 

இந்த மொபைல் போன் 2ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடியது. இரண்டு சிம்களை இயக்கும். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

திரையில் மல்ட்டி டச் வசதி உள்ளது. கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. 320 x 480 பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.5 அங்குல திரை உள்ளது. ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. 

ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்களுடன், நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத் மற்றும் யு.எஸ்.பி., வை பி தரப்பட்டுள்ளன. ஒரே ஒரு கேமரா 2 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயங்குகிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2.2 கிட்கேட். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. 

எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் உள்ளன. இவற்றுடன் ஆர்கனைசர், போட்டோ/விடியோ எடிட்டர், கூகுள் சர்ச், மேப்ஸ், மெயில், யு ட்யூப், காலண்டர், கூகுள் டாக், பிகாஸா, வாய்ஸ் டயல், மெமோ ஆகிய பயன் தரும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது.


எக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்

வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 

தற்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 10 தொகுப்பிற்கு நான்கு திருத்தங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 79 பிழை திருத்த அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

வழக்கம் போல, விண்டோஸ் இயக்க முறைமை, எம்.எஸ். ஆபீஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய அனைத்திற்கும் பிழை திருத்த குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஐந்து பிழைக் குறியீட்டுத் திருத்தங்கள், தொலைவில் இருந்தே நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, (Remote Code Execution) கம்ப்யூட்டரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய பிழையான குறியீடுகளைச் சரி செய்வதாகும். 

ஹேக்கர்களுக்கு, இது போன்ற பிழைக் குறியீடுகள் தான் மிகவும் பிடித்த இடங்கள். நல்ல வேளையாக மைக்ரோசாப்ட் இவற்றைக் கண்டு கொண்டு சரி செய்துள்ளது. அறிக்கை 6, எம்.எஸ். ஆபீஸ் 2007க்கானது. மற்றவை எல்லாம், டாட் நெட் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதாக அமைந்துள்ளன. 

விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், அது எந்த பதிப்பாக இருந்தாலும், இந்த அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து, இயக்கி அமைப்பது நல்லது. கொஞ்ச நேரமே ஆகிறது. 

நீங்கள், உங்கள் கம்ப்யூட்டரில் ஆட்டோமேடிக் அப்டேட் அமைத்திருந்தால், நீங்கள் எதுவுமே செய்திட வேண்டாம். தானாகவே, அப்டேட் நடந்தேறும். அப்டேட் நடந்து முடிந்தவுடன், கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டியது அவசியம். 


குறள் தமிழ்ச் செயலி - ஒரு கண்ணோட்டம்

குறள்சாப்ட் (Kuralsoft) மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், மவுண்ட்வியூ நகரில், இதன் நிறுவனர் கலை கந்தசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

தமிழ் மொழிக்கான உள்ளீடு மென்பொருளை வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டு, 'குறள் தமிழ்ச் செயலி' முதல் தொகுப்பு, 2001ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. 

அப்போது ஒலியியல் கீ போர்ட் மற்றும் திஸ்கி குறியீடு எழுத்து முறை ஆகிய வசதிகள் மட்டுமே இருந்தன. 2003 ஆம் ஆண்டில், பதிகை 2ல், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு கீ போர்ட் வசதிகள் இணைக்கப்பட்டு தரப்பட்டது. 

2004 ஜனவரியில், குறள் தமிழ்ச் செயலி பதிகை 3 வெளியானது. இதில் திஸ்கி, டாம், டாப், லிபி, பழைய தமிழ் குறியீடுகளும், ஒலியியல், தமிழ்நெட் 99 மற்றும் புதிய, பழைய தமிழ் தட்டச்சு முறை கீ போர்டுகளும் தரப்பட்டன. 

2007 ஜூன் மாதத்தில், குறள் தமிழ்ச் செயலி பெரும் அளவில் மாற்றங்களுடன் வெளியானது. இதில் யுனிகோட் குறியீடு கட்டமைப்பு வசதி இணைக்கப்பட்டது. 

2014ல் தற்போது, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கங்களில் இயங்கும் வகையில், முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரிடையே “குறள் தமிழ்ச் செயலி” அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு கீ போர்ட் வசதி, பல தமிழ் மொழி குறியீடு முறை கட்டமைப்புகள் ஆகியவற்றை இது தருவதே இதற்குக் காரணம். 


ஏர்டெல் 4ஜி கட்டணம் குறைப்பு

ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி எல்.டி.இ. சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதனை மனதில் கொண்டு, அதற்குப் போட்டியாக தன் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 

4ஜி சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அதன் 3ஜி சேவையைக் காட்டிலும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும். 

தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையைப் பயன்படுத்துபவர்கள், அந்த மொபைல் போன் 4ஜி சேவையைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால், 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளலாம். 

இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி சேவையினைப் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன்களின் விலை மிக அதிகமாக உள்ளது. அனைவரும் எளிதாக வாங்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் இல்லை. 

பார்தி ஏர்டெல், தன் 4ஜி சேவைக்கு, 10 ஜி.பி. டேட்டா அளவிற்கு ரூ.999 கட்டணம் என அறிவித்துள்ளது. அதன் 3ஜி சேவையில், இந்த அளவு டேட்டாவிற்கு ரூ.1,499 வசூலிக்கப்படுகிறது. 

5 ஜி.பி. டேட்டாவிற்கு, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளில், ரூ. 850 என ஒரே கட்டணம் தான். 3ஜி பயன்படுத்துபவர்களுக்கு, 4 ஜி.பி. டேட்டாவிற்கு ரூ.749ம், 4ஜி சேவையினைப் பயன்படுத்துபவர்களுக்கு அதே அளவிலான டேட்டாவிற்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. இதே போல் 1 ஜி.பி. டேட்டாவிற்கு, முறையே ரூ.249 மற்றும் ரூ. 250 வசூலிக்கப்படுகிறது.

ஏர்டெல் வழங்கும் 4ஜி மொபைல் டேட்டா சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதலில் கொல்கத்தாவில் இது தொடங்கப்பட்டது. பெங்களூருவில் தரப்படும் இந்த சேவை, இன்னும் சென்னைக்கு வரவில்லை. விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடக்கத்தினை எதிர்பார்த்துள்ளனர். அதன் சேவை தொடங்கிய பின்னர், அனைத்து நிறுவனங்களும், தங்கள் கட்டணத்தைப் பெரும் அளவில் மாற்றி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்தது 20% வரை குறைக்கப்படலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் மட்டுமே, இந்தியா முழுமையும் 4ஜி அலைவரிசை சேவை வழங்கும் உரிமத்தினைப் பெற்றுள்ளது.


விண்டோஸ் 8 உங்களுடையதாக்க

டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். 

மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.

அதனால் தான், முற்றிலும் புதிய இலக்குகளுடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அதன் நோக்கங்கள் மட்டும் சரியாக, மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், டிஜிட்டல் தொழில் நுட்ப உலகத்தில், புதிய புரட்சி ஒன்று ஏற்பட்டிருக்கும். 

இவ்வுலகின் தொழில் நுட்பத்தின் எதிர்காலம், அதி வேகத்தில் துள்ளிக் குதித்து மாற்றங்களைச் சந்திக்கும் என மைக்ரோசாப்ட் நம்பியது. அதனால் தான், முற்றிலும் மாறுபட்ட செயல்பாடுகளையும், இயக்கத்தினையும் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டது. 

இது வெற்றி பெறும் என நினைத்தது. தொழில் நுட்பத்தின் எதிர்காலம், திரை தொடர் உணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நம்பியது. அதனால் தான், மிகப் பெரிய பட்டன்களுடன் கூடிய திரையைப் பயன்பாட்டிற்குத் தந்தது.

ஆனால், மக்கள் முழுமையான, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்திற்குத் தயாராக இல்லை என்பதனை வெளிப்படுத்தினார்கள். 

இருப்பினும், குறைந்த பட்ச அளவிலேனும், பயனாளர்கள் பலர் இதனை விரும்பி ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒவ்வொருவரும் தன் விருப்பங்களுக்கேற்ப அமைத்துக் கொள்ள தரப்பட்டிருக்கும் வசதிகளை ஆர்வத்துடன் கவனித்து, பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


ஸ்டார்ட் ஸ்கிரீனில் அப்ளிகேஷனை பின் செய்தல்: 

நீங்கள் ஏதேனும் புரோகிராம் ஒன்றினை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா? சிலர் தங்கள் பணி நாள் முழுவதும் வேர்ட் புரோகிராமினையே பயன்படுத்துவார்கள். சிலர் எக்ஸெல் விரும்பலாம். 

சிலரோ, கிராபிக்ஸ் அனிமேஷன் புரோகிராமிலேயே மூழ்கிக் கிடக்கலாம். இவர்கள், இந்த புரோகிராம்களை எளிதாகப் பெற்று இயக்க, விண்டோஸ் 8ல், ஒரு வசதி தரப்பட்டுள்ளது. ஸ்டார்ட் ஸ்கிரீனில் இதனைப் பின் செய்து கொள்ளலாம். 

புரோகிராம் மட்டுமின்றி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் பைல்கள் உள்ள போல்டர்களையும் பின் செய்து கொள்ளலாம். இதனால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் முதல் திரையிலேயே, இவை பெரிய அளவில் காட்சி தருவதனைப் பார்க்கலாம்.


டைல்ஸ்களின் அளவினை மாற்றுக: 

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படை நோக்கமே, காட்சிக்குச் சிறப்பாக இதன் தோற்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இதுவரை பயனாளர்கள் பார்த்து அறியாத கிராபிக்ஸ் காட்சிகளை திரையிலேயே விண்டோஸ் 8 காட்டுகிறது. 

ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே இது நமக்குப் புரிந்துவிடும். இந்த திரைக் காட்சியை, நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள டைல்ஸ்களை, நாம் விரும்பும் அளவுகளில் மாற்றி அமைக்கலாம். 

இவற்றை, அவை பிரதிபலிக்கும் புரோகிராம் செயல்பாட்டிற்கேற்ப, பல்வேறு அளவுகளில் அமைக்கலாம். அவை, அந்த அப்ளிகேஷன் புரோகிராமின் பல்வேறு செயல் தன்மைகளைக் காட்டும். டைல் அளவினை மாற்றி அமைக்க, வலது மேல் மூலைக்குச் செல்லுங்கள். அங்கு தெரியும் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பலமுறை கிளிக் செய்கையில், நீங்கள் விரும்பும் அளவிற்கு அது மாறும். 

நீங்கள் எந்த அளவில் அது இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த அளவு வந்தவுடன் கிளிக் செய்வதை நிறுத்திவிடுங்கள். இது ஒரு பெரிய வசதியாகும். விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் இந்த டூலை இயக்கிப் பார்க்க வேண்டும்.


ஸ்டார்ட் ஸ்கிரீனை உங்கள் வசப்படுத்துங்கள்: 

தனிநபர் விருப்பப்படி காட்சி தோற்றத்தை அமைக்கும் வழிகளைத் தருவதில், விண்டோஸ் 8 முதல் இடம் கொண்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் பலர் இதனை உணரவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை. 

ஸ்டார்ட் ஸ்கிரீனுடைய வண்ணம் மற்றும் கட்டங்கள் பிரதிபலிக்கும் கருத்தினை நாம் நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். அதே போல, டாஸ்க் பார் மற்றும் திரை சார்ந்த பல விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு டாஸ்க் பார் சென்று, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் properties என்பதில் கிளிக் செய்திடவும். 

தொடர்ந்து personalize என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் start screen என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் விருப்பப்படி இதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் விருப்பப்படிதான், திரை தோற்றம் அளிக்கும்.


சாம்சங் 130 இ காலக்ஸி ஸ்டார் 2 (Samsung 130 E Galaxy Star 2)

மத்திய நிலையில் இட்ட விலையுடன் இரண்டு சிம்களில் இயங்கும் 2ஜி போன் ஒன்றை சாம்சங் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் சாம்சங் 130 இ காலக்ஸி ஸ்டார் 2. 

இதன் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் தன்மை கொண்ட ஸ்கிரீன் 3.5 அங்குல அளவில், 320 x 480 பிக்ஸெல் டிஸ்பிளே அளவில் காட்சி அளிப்பதாக உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. 

இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டு சாப்ட் கீகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மெமரி 512 எம்.பி. அளவில் உள்ளது. 

ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. விடியோ பதிவு 480p@24fps வேகம் கொண்டதாகும். 

அக்ஸிலரோமீட்டர் சென்சார், எப்.எம். ரேடியோ, லவுட்ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. 

இதன் சி.பி.யு. 1கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2. கிட் கேட். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் உள்ளன. 

எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள் இயங்குகின்றன. ஆர்கனைசர், போட்டோ/விடியோ எடிட்டர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், ஜி டாக், பிகாஸா, வாய்ஸ் மெமோ, பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது.

இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290.


மொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., (SOR) சாப்ட்வேர்

தூத்துக்குடி: இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டினால் மீனவர்கள் மொபைல் போனில் எச்சரிக்கை செய்யும் புதிய சாப்ட்வேரை, தூத்துக்குடி இன்ஜினியர் ரெசிங்டன் அறிமுகம் செய்தார். 

எல்லை தாண்டி மீன் பிடித்து பிற நாட்டு படையினரால் கைது செய்யப்படும் அவலத்தை தவிர்க்க முடியும். புதிய சாப்ட்வேர் அறிமுகம்:இந்திய- இலங்கை மீனவர்கள் தங்களது கடல் எல்லைகளை தாண்டி மீன் பிடிப்பதால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எல்லைக்கோடு குறித்து தெரிவதில்லை. இதன் காரணமாக எல்லை மீறுவது நடந்து வருகிறது. 

இதனை தவிர்க்கும் பொருட்டு மீனவர்கள் தங்களது கடல் எல்லையை தாண்டும் போது, அவர்களது மொபைல் போனில் எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் டவுன் லோடு செய்திருந்தால், அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த இன்ஜினியர் ரெசிங்டன் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று அறிமுகம் செய்தார். 


ரெசிங்டன் தெரிவித்ததாவது: 

தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். 

இதற்கான தீர்வு வேண்டும், என இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன். 


இந்திய- இலங்கை கடல் எல்லை:

இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா,பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். 

எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது.1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. இது கடலில் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.


டவுன்லோடு செய்யலாம்: 

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி கடலில் மீன் பிடிக்கலாம். 


எச்சரிக்கை செய்யும்: 

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்னரை கி.மீ., தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை படகு அடையும் போது, மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். 

அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன், ஒலியினை எழுப்பும். 

இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


லெனோவாவின் புதிய ஸ்மார்ட் போன்

தன் புதிய மாடல் ஸ்மார்ட் போன் ஒன்றை லெனோவா விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் பெயர் லெனோவே ஏ 319. 

இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 6,499. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். 

இதன் பரிமாணம் 123.5 x 63.8 x 10.2 மிமீ. பார் டைப் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. இதில் மல்ட்டி டச் வசதி உள்ளது. 

4 அங்குல அகலத்தில் 480 x 800 பிக்ஸெல் டிஸ்பிளே கொண்டு இயங்குகிறது. எம்.பி.3 பைல் இயக்கம், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை கிடைக்கின்றன. 

இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகரிக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், வை பி, எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பைத் தருகின்றன. 

பின்புறக் கேமரா 2592 x 1944 பிக்ஸெல்கள் கொண்டு 5 எம்.பி. திறனுடன் உள்ளது. முன்புறக் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. இதன் டூயல் கோர் சிப் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை கிடைக்கின்றன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆகும். மல்ட்டி மீடியாவிற்கு எம்.பி. 3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் உள்ளன. 

இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி, 1,500 mAh திறன் கொண்டது. இதனைப் பயன்படுத்தி 2ஜி அலைவரிசையில் தொடர்ந்து 4 மணி நேரம் பேசலாம்; 3ஜி அலைவரிசையில், 3.30 மணி நேரம் பயன்படுத்தலாம். இதன் மின்சக்தி, ஒருமுறை சார்ஜ் செய்தால், 372 மணி நேரம் தங்குகிறது.


ஸியாமி ரெட்மி நோட் அறிமுகம் (Xiaomi Redmi Note)

பல நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர், இந்தியாவில் ஸியாமி ரெட்மி நோட் ஸ்மார்ட் போன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

டிசம்பர் முதல் வாரத்தில் இது இந்தியாவெங்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திரை 5.5. அங்குலத்தில் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டக்கூடியதாகும். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் ப்ராசசர் இயங்குகிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாக இயங்குகிறது. 

இதன் விடியோ 1080p பதிவுத் திறன் கொண்டது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் ராம் நினைவகம் 2ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி., இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் இயங்குகின்றன.இதன் பேட்டரி 3,100 mAh திறன் கொண்டதாக உள்ளது. 

இதன் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், விற்பனைச் சந்தையில் ரூ.1,000 வரை குறைவாக விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes