இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5


ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ போன் 5, நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. 

அமெரிக்காவில் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னர் இது இங்கு கிடைக்கிறது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 100 நாடுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். 

மிகக் குறைந்த எடையில், மெலிதான அமைப்பில் 4 அங்குல அகலத் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் முந்தைய ஐ போன் 4 ஐக் காட்டிலும் 20% குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டளவில், மிக அதிகமான எண்ணிக்கையில் வேகமான விற்பனையை இந்த போன் பெற்றுள்ளது என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். 

இதன் 16 ஜிபி மாடல் ரூ. 45,000, 32 ஜிபி மாடல் ரூ.52,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.59,500 என விலையிடப்பட்டுள்ளன. சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றும் எச்.டி.சி. ஒன் எக்ஸ் போன்ற இதற்கு இணையான ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும், கூடுதலாக இது விலையிடப்பட்டிருந்தாலும், பலர் இதனை வாங்கிப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன் பதிவு செய்து பெற்று வருகின்றனர். பொதுவாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள் விற்பனை செய்திடும் கடைகளில் மட்டுமே, ஐ போன் விற்பனை செய்யப்படுவது வழக்கம். 

இம்முறை மற்ற விற்பனை மையங்களிலும் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. 

மேற்கு நாடுகளில் போல் அல்லாமல், இந்தியாவில் ஐபோன் பயன்பாடு குறைவுதான். 

இந்த போன் தரும் சில வசதிகளை (எ.கா. 4ஜி அலைவரிசை) இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10
அனைவரும் எதிர்பார்த்தபடி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர் பதிப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கென வடிவமைத்து, அதன் வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை (IE10 Release Preview) நவம்பர் 13ல் வெளியிட்டுள்ளது. 

இது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மட்டும் தான். விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இணைந்தே தரப்படுகிறது. விஸ்டா மற்றும் முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இயங்காது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் வெளியான போது, அதன் இயக்கத்தினை, விஸ்டா மற்றும் எக்ஸ்பியிலிருந்து மைக்ரோசாப்ட் தள்ளியே வைத்தது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என அறிவித்த நிறுவனம் மைக்ரோசாப்ட் ஒன்றுதான். 

வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு எனத் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பினை மைக்ரோசாப்ட் அழைப்பதால், இந்த பிரவுசரைப் பொறுத்தவரை, முழுமையான இறுதி வடிவத்தினை மைக்ரோசாப்ட் அமைத்துவிட்டது என்றே எதிர்பார்க்கலாம். 

இவ்வாறு அறிவிக்கப்பட்ட இ.எ. 9, ஒரு மாத கால அளவில், 2011 மார்ச் 14ல் வெளியானது. அதே போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இந்த ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கலாம். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் சிறப்பான, தொட்டு இயக்கும் வசதி, நிச்சயம் விண்டோஸ் 7க்கான பதிப்பில் கிடைக்காது. ஆனால், அதிகம் பேசப்படும் “Do Not Track” என்னும் தனிநபர் செல்லும் இணைய தளங்களைக் கணக்கெடுத்துப் பதியாத வசதி இதிலும் இணைந்தே கிடைக்கிறது. 

முதன் முதலில் இந்த பிரவுசரை இயக்குகையில், திரை ஒன்று காட்டப்பட்டு, இந்த வசதி தேவை இல்லாதவர்கள், தாங்கள் செல்லும் தளங்களைக் கண்டு கொண்டு பட்டியலிடும் வசதியை வேண்டுபவர்கள், அதற்கான தேர்வினை அமைக்க ஆப்ஷன் தரப்படுகிறது.

ஏற்கனவே, இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிடுபவர்கள், இந்த “Do Not Track” வசதி பிரவுசரில் இணைந்தே தரப்படுவதனை வர்த்தக ரீதியாக எதிர்த்தனர். இப்போதும் விண்டோஸ் 7 தொகுப்பான பிரவுசரிலும் இந்த வசதி தரப்படுவதால், எதிர்ப்பு வலுக்கலாம்.

தற்போது விண்டோஸ் 7, பன்னாட்டளவில் 45% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் தானாகவே அப்கிரேட் செய்யப்படும் வசதியின் மூலம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10க்கு மாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு மாறுகையில் “Do Not Track” வசதி தானாகவே இவர்களுக்குக் கிடைக்கும். 

இந்த வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், http://windows.microsoft.com/enUS/internetexplorer/downloadie  என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளத்தை நாடலாம்


இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா?


இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. 

இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.

சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுவரை இந்த அளவிற்கு தடை ஆணை வழங்கப்படவில்லை. தனி நபர்கள் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. 

சென்ற 2011 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஐந்து ஆணைகள் மூலம் ஒன்பது தகவல் கட்டுரைகள் நீக்கப்பட, நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. 

கூகுள் இந்த ஆணைகளை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு தரப்பட்ட ஆணைகளில் இதுவரை 33% மட்டுமே நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

நீதிமன்றங்கள் மூலம் கூகுள் பெறும் தடைகளின் எண்ணிக்கையில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. 

அமெரிக்க நீதிமன்றங்கள் இதே காலத்தில் 209 ஆணைகளை வழங்கி உள்ளன. 

அடுத்த இடங்களில், ஜெர்மனி, பிரேசில், துருக்கி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை உள்ளன.


தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு


ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் நேற்று, 24,480 ரூபாயாக உயர்ந்தது.பண்டிகை சீசன் முடிந்த நிலையிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில், தங்கம் விலை, கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 3,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 24,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 410 ரூபாய் அதிகரித்து, 32,730 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாயிலிருந்து, 70.20 ரூபாய்க்கு விற்பøனாயானது.

சென்ற வெள்ளிக் கிழமை, தங்கம், கிராமுக்கு, 23 ரூபாய் உயர்ந்து, 3,022 ரூபாய்க்கும், சவரனுக்கு, 184 ரூபாய் அதிகரித்து, 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 32,320 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த இரு தினங்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 61 ரூபாயும், சவரனுக்கு, 488 ரூபாயும் அதிகரித்துள்ளன. 10 காரட் சுத்த தங்கம் விலை, 660 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதற்கு முன், செப்டம்பர் மாதம் 14ம் தேதி, அதிகபட்சமாக, ஒரு கிராம் தங்கம், 3,041 ரூபாய்க்கும், சவரன், 24,328 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சர்வதேச சந்தையில், கடந்த இரு தினங்களில் மட்டும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 20 முதல், 30 டாலர் வரை அதிகரித்துள்ளது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துள்ளது. மேலும், விண்வெளி சாதனங்கள், விமான உதிரி பாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில், வெள்ளி பயன்பாடு உயர்ந்துள்ளது. 

இதனால், வெள்ளியில் முதலீடு மேற்கொள்வதும் அதிகரித்து, அதன் விலை உயர வழி வகுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்


கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? 

உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. 

அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. 

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. 

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். 

இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன. 

மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. 

யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது. 

இதன் முகவரி http://www.learnerstv.com/


எல்.ஜி. தரும் இரண்டு சிம் போன் டி 375


இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு அலை வரிசைகளில் எல்.ஜி.நிறுவனத்தின் இந்த மொபைல் செயல்படுகிறது. இதன் பரிமாணம் 103x59x10.7 மிமீ. எடை 96 கிராம். 

இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டு, பார் டைப் வடிவில், போன் அமைந்துள்ளது. இத்திரையில் மல்ட்டி டச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 2 எம்.பி. கேமரா இயங்குகிறது. 

ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, லவுட் ஸ்பீக்கர், வீடியோ பதிவுடன் எம்பி4 மற்றும் எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம், மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 

ஆயிரம் முகவரிகளை இதில் பதிந்து வைக்கலாம். இதன் உள் நினைவகம் 50 எம்.பி. ராம் நினைவகம் 64 எம்பி. நெட் வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் இயங்குகிறது. 

A2DP இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. டாகுமெண்ட் வியூவர் இயங்குகிறது. 

இதன் லித்தியம் அயன் பேட்டரி 950 mAh திறனுடன் உள்ளது. தொடர்ந்து 14 மணி 40 நிமிடங்கள் பேச மின்சக்தி கிடைக்கிறது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 528 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 4,699.


கூகுள் விளம்பர இலக்கு ரூ.2500 கோடி


இந்திய மொழிகளில் விளம்பரம் மூலம் இந்த ஆண்டில் ரூ. 2,500 கோடி ஈட்டுவதற்கு கூகுள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

ஆங்கில மொழி வழி இன்டர்நெட் வளர்ச்சி இனி அவ்வளவாக இருக்காது என்று உணர்ந்து கொண்ட கூகுள், இந்திய மொழிகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. 

இந்த இலக்கை அடைய முதல் படியாக, இந்திய மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களை உருவாக்க, அரசு மற்றும் தமிழ் டிஜிட்டல் எழுத்துக்களை உருவாக்குபவர்களுடன் ஆலோசித்து வருகிறது. 

கூடுதல் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய, உள்நாட்டு தகவல்களை அதிகம் அளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறோம் என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளை உள்ளீடு செய்வதிலும் புதிய வழிமுறைகளைத் தரும் தொழில் நுட்பத்தினை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இந்திய எழுத்துருக்கள் பெரும் சவாலாய் அமைந்துள்ளன. இவற்றைச் சுருக்கித் தரும் வழிகளைக் கண்டறிய வேண்டியதுள்ளது. இந்த வகையில் இந்தி மொழியைப் பேசினால், அது உள்ளீடு செய்யப்படும் வகையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீ போர்டு தேவையில்லை. 

உலக அளவில், இன்டர்நெட் பயன்பாட்டில், இந்தியா 13 கோடியே 70 லட்சம் பயனாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த 40 கோடி பேர் ஸ்மார்ட் போன் வழி இன்டர்நெட் பயனாளர்களாக இருப்பார்கள். ஏற்கனவே ஸ்மார்ட் போன் வழியில் இன்டர்நெட் பயன்படுத்தும் இந்திய பயனாளர்கள் 2 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். 

இன்டர்நெட் பயன்பாட்டில் பேண்ட்வித் என்னும் அலைவரிசை கட்டமைப்பு தேவையான அளவில் பெறுவதில் பிரச்னை இருப்பதால், பலரும் ஸ்மார்ட் போன் வழி இன்டர்நெட்டினையே நாடுகின்றனர். 

இந்திய இன்டர்நெட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு ஊடகமாக வீடியோ உள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யுட்யூப் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 3 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். மாதந்தோறும் புதியதாக 15 லட்சம் பேர் இணைந்து வருகின்றனர். 

இன்டர்நெட்டினைத் தங்கள் மொழிகளில் காணவும் பயன்படுத்தவும் இந்தியாவில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதனால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களைப் பெற வர்த்தக நிறுவனங்கள் விரும்புகின்றன.

 சென்ற ஆண்டில், இணைய தளங்களில் விளம்பரங்கள் மூலம் ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இது ரூ.2,500 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மேலும் 30 கோடி பயனாளர்களுக்கு சேவை செய்திடும் வகையில், இன்டர்நெட் பேண்ட்வித் இங்கு அதிகரிக்க இயலா நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுருக்கி விரித்து பயன்படுத்தும் தொழில் நுட்பத்தில், நவீன வழிகளைக் காண வேண்டியதுள்ளது. குறிப்பாக, இணையத்தில் தகவல்களை, இந்திய மொழிகளில் தர இது அவசியமாகிறது. 

இந்தியாவில், குறைந்தது ஐந்து ஊழியர்களைக் கொண்டு இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் ஒரு கோடியே 20 லட்சம் உள்ளன. ஆனால், இதுவரை ஒரு லட்சம் நிறுவனங்கள் மட்டுமே நல்ல முறையில் அமைக்கப்பட்ட இணைய தளங்களைக் கொண்டுள்ளன. 

கூகுள் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இணையத்தில் இடம் பெற உதவியுள்ளது. இணைய தளங்களை உருவாக்கத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை வழங்கி, நிறுவனங்களின் இணைய தளங்களை ஓராண்டு இலவசமாக இணையத்தில் பதிந்து இயக்கும் வாய்ப்பினையும் வசதியையும் தருகிறது. 2014 ஆம் ஆண்டில், இது போன்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் மூலம் விளம்பர வருமானமும் ரூ.2,500 கோடியை அடுத்த ஆண்டில் எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.


தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்


ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.

இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள் சென்று இதனை இயக்கலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் இருந்தவாறே போட்டோ எடுக்கலாம். ஸ்கிராட்ச் எதுவும் விழாத வகையில் இதன் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ.; எடை 105 கிராம். 

சூரிய ஒளியில் இந்த போனின் திரை அதன் டிஸ்பிளே தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதில் இயங்கும் Motion Conscious Audio system என்னும் தொழில் நுட்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து, வரும் அழைப்பின் ஒலியின் தன்மையை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.21,900.

தொடக்கத்தில் இது டாட்டா டொகோமோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை வாங்கும் டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எண் இலவசமாக வழங்கப்படுகிறது. 3ஜி டேட்டா வரையறை இன்றி 1ஜிபி வரை பயன்படுத்தலாம். 

ரூ. 899 ஜி.எஸ்.எம். போஸ்ட் பெய்ட் இணைப்பினை வாங்குவோருக்கு, எந்த நெட்வொர்க் இணைப்பில் உள்ள எண்களுக்கும் எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மற்ற திட்டத்தில் இணைபவர்களுக்கு, பிரிமியம் எண், மூன்று மாதத்திற்கு 3ஜி அலைவரிசையில் 1 ஜிபி டேட்டா இலவசம். 

ஜப்பான் நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இது போல பல சிறப்புகள் கொண்ட போன்களைத் தயாரித்தாலும், சோனி தவிர மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் விற்பனையில் வெற்றி பெற இயலவில்லை. ஷார்ப் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் என்ன முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. 

FujitsuF074/ujitsuF074Waterproof3GPhone 

ஆனால், ப்யூஜிட்ஸு நிறுவனம், இங்கு மொபைல் போன் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ வழியாக நுழைந்துள்ளது. டாட்டா டொகோமோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், போனின் சிறப்பான அம்சங்கள், ப்யூஜிட்ஸு நிறுவனத்திற்கு பெயர் வாங்கித் தரலாம்.


விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை


வழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். 

ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் 1 வெளியிடப்பட்டது. இப்போது சர்வீஸ் பேக் 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், இந்த சர்வீஸ் பேக் வடிவமக்கும் பணியில் உள்ள குழு இதனை அறிவித்துள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மூன்று சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டது. விஸ்டாவிற்கு இரண்டு பேக் கிடைத்தன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு, சர்வீஸ் பேக் வெளியிடுவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு சிக்கலான வேலையாகும். 

மேலும் விண்டோஸ் 8 வெளியாகிவிட்டதால், தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், விண்டோஸ் 7க்கு சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிட, வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

சர்வீஸ் பேக் ஒன்றில், நூற்றுக்கணக்கான தனிப்பட்ட வசதிகள் மேம்பாடு தரும் பைல்கள் மொத்தமாகக் கிடைக்கும். இவற்றை தனித்தனியே கொடுத்தால், நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் சிஸ்டத்தை மேம்படுத்துவதில் பல பிரச்னைகள் எழும். எனவே தான் சர்வீஸ் பேக் முறையை, மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. 

இரண்டாவது சர்வீஸ் பேக், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இல்லை என அறிவித்தாலும், சின்ன சின்ன மேம்பாட்டிற்கான பைல்களை, விண்டோஸ் 7 மூடப்படும் வரை, மைக்ரோசாப்ட் வெளியிடலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம்.


இந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்


தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரிகளிலிருந்து மெசேஜ் கிடைப்பது போல செய்தி வருகிறது. 

இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கிறது. 

பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது. 

அதனை இயக்குபவர், அங்கிருந்தே, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படுகிறது.

இதனைத் தவிர்க்க, அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்கைப் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது. 

இன்ஸ்டண்ட் மெசேஜில் அனுப்பப்படும் பைல்களை டவுண்லோட் செய்திடக் கூடாது. 

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அப்டேட் செய்து, எப்போதும் இயக்கியபடி வைக்கவும் என தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மேற்சொல்லப்பட்ட அமைப்பு எச்சரிக்கை தந்துள்ளது.


முப்பரிமாண காட்சிகளை ஐபோனில் எடுக்க ஓர் புதிய சாதனம்

பிரபல கைப்பேசி வகைகளுள் ஒன்றான ஐபோன்களில் காணப்படும் கேமரா மூலம் இதுவரை காலமும் இருபரிமாணமுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையுமே எடுக்கக்கூடியதாக காணப்பட்டது. 

எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள ஐபோன்களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய 3DCone எனும் பிரத்தியேக சாதனம் ஒன்றின் மூலம் முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கருவியில் காணப்படும் கண்ணாடி ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் இணைக்கப்படுவதன் மூலம் குறித்த காட்சியானது முப்பரிமாணமுள்ளதாக தோற்றமளிக்கின்றது. 

இக்கருவியினை ஐபோன் 4, ஐபோன் 4எஸ் ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த முடியும்.


லெனோவா தரும் ஸ்மார்ட் போன்கள்


எது அதிகம் விற்பனையாகிறதோ, அதனை உற்பத்தி செய்து, மக்களிடம் கொண்டு சேர் என்பது ஒரு வியாபார தந்திரம். 

பெர்சனல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், இப்போதெல்லாம், ஸ்மார்ட் போன்கள் பக்கம் செல்வதால், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த, பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான, லெனோவா, அண்மையில் ஐந்து ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தியாவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றின் விலை ரூ.6,500 முதல் ரூ. 28,500 வரையில் இருக்கும். 

கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி,மொபைல் போன்கள் மற்றும் தொலைக் காட்சி பெட்டிகள் (சீனாவில் மட்டும்) என நான்கு வகையான திரை கொண்ட சாதனங்களை, லெனோவா தயாரித்து விற்பனை செய்கிறது. 

சீனாவில், மொபைல் ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில், லெனோவா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது இந்தியாவில் தீவிரமாக இறங்க உள்ளது. 

லெனோவா கே 860, எஸ்880, எஸ்560, P700i மற்றும் ஏ60+ என இவை பெயரிடப்பட்டுள்ளன. முதல் நான்கு போன்களும், ஆண்ட்ராய்ட் ஐ.சி.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குபவை. ஏ 60+ மாடல், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்குகிறது. 

லெனோவா கே 860: இதில் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் சிபியு இயங்குகிறது. 5 அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் திரை 178 டிகிரி கோணத்தில் காட்சி தரும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் 8 எம்பி கேமரா, 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 1 ஜிபி ராம் மெமரி, வை–பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற நவீன வசதிகளுடன், 2250 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,499. 

லெனோவா எஸ்880 மாடல் போனில் 5 அங்குல அகலத் திரை உள்ளது. 9.9 மிமீ தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கம், 512 ராம் மெமரி, 0.3 எம்பி முன்புற கேமரா, பின்புறமாக 5 எம்.பி. கேமரா, ஜி.பி.எஸ்., மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 2250 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை உள்ளன. இதன் எடை 200 கிராம். 

லெனோவா எஸ்560 மாடலில், டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 5 அங்குல திரை, 5 மெகா பிக்ஸெல் கேமரா ஆகியவற்றுடன் ரூ.14,999 என விலையிடப்பட்டுள்ளது. இவற்றில் மிக விலை குறைவான போனாக ஏ 60+ உள்ளது. இதில் 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. 3.5 அங்குல அகலத் திரை உள்ளது. 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி உள்ளது. இதன் ராம் மெமரியின் அளவு 256 எம்பி. ஜி.பி.எஸ். கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் வர்த்தகத்தினை, எச்.சி.எல். மற்றும் ஏசர் நிறுவனங்களுடன், லெனோவாவும் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ரூ. 14,000 விலையில், 9 லட்சம் லேப்டாப் பிசிக்களைத் தமிழ்நாடு வாங்கிக் கொண்டிருக்கிறது.


மொபைல் தொழில் நுட்பம்


GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile):

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும். 

அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப்படுகின்றன.

Android:

இது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட போன். Open Handset Alliance என்னும் அமைப்பின் ஆஸ்தான போன் மாடலாக உள்ளது. இது போன் மட்டுமின்றி ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஆகும். 

இது லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது ஏறத்தாழ ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினை ஒத்ததாகும். 

ஜாவா வுடன் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் குறியீடுகளை இணைத்து இதற்கான கூடுதல் பயன் தரும் புரோகிராம்களை, புரோகிராம் எழுதத் தெரிந்த யாவரும் அமைக்கலாம் என்பது இதன் சிறப்பு.

முதன் முதலாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வந்த மொபைல் போன் எச்.டி.சி. நிறுவனத்தின் G1 போனாகும்.


கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி


அண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.

ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் பாக்ஸில் To கட்டத்திற்குச் சற்று மேலாக, Try out the new compose experience என்று ஒரு புதிய செய்தியைப் பார்க்கலாம். 

இங்கு கிளிக் செய்தால் புதிய வகை செய்தி தயாரிக்கும் கட்டத்திற்கு எப்போதும் செல்லலாம் என்றும் ஒரு விளக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம் புதியதாக எழுந்து வரும். அங்கே, New Message என்ற புதிய கட்டத்தினை ஒரு ஓரமாகப் பார்க்கலாம். 

இதில் நீங்கள் பெறுபவரின் பெயரை டைப் செய்த தொடங்கியவுடன், அந்த எழுத்தில் உள்ள அனைவரின் முகவரிகளும் வரிசையாகக் கிடைக்கும். இதில் என்ன புதிய வசதி என்கிறீர்களா? உங்கள் ஜிமெயில் நண்பர்கள், ஏதேனும் படத்தைப் பதிந்திருந்தால், போட்டோவினைப் பதிவு செய்திருந்தால், அவையும் காட்டப்படும். 

இதனால், இரண்டு கிருஷ்ணன் இருந்தால், அவர்களின் போட்டோவினை அடையாளம் வைத்து, சரியான முகவரியைக் கிளிக் செய்திடலாம். இந்த வசதி, CC மற்றும் BCC ஆகியவற்றிற்கும் தரப்படுகிறது. 

இதனால், தவறான நபர்களுக்கு அனுப்ப மாட்டோம்; விரைவாகவும் அஞ்சல் முகவரியினை அமைக்கலாம். மேலும், வரிசையாகக் காட்டப்படும் முகவரியில், நமக்கு வேண்டியதை மவுஸ் கர்சர் மூலம் இழுத்து வந்து, முகவரிக்கான கட்டத்தில் விட்டுவிடலாம்.

மேலும், மெசேஜ் பார்மட் செய்வதற்கு A என்ற ஐகானில் கிளிக் செய்து பார்மட்டிங் டூல்ஸ்களைப் பெறலாம். எழுத்து அளவு மாற்றல், போல்ட், அடிக்கோடு, புல்லட் என அனைத்து வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம். ஜெம் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, பைல்களை இணைக்கலாம். + ஐகானில் கிளிக் செய்து, மெசேஜ் எழுதும் பக்கத்திலேயே படங்களை, போட்டோக்களைப் பதியலாம். 

இதே போல ரிப்ளை, பார்வேர்டிங் போன்ற வசதிகளுக்கும் வழிகள் காட்டப்பட்டுள்ளன. விரைவில் எமோடிகான் இணைப்பு, இன்விடேஷன், லேபில், மெசேஜ் படித்ததற்கான ஒப்புதல் அனுப்பும் வழி ஆகியவை இணைக்கப்படவுள்ளன. 

மேலே காட்டிய வசதிகள் மட்டுமின்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு மெயில்களைத் திறந்து பதில் அனுப்பும் வசதியும் தரப்பட்டுள்ளது. சர்ச் ஆப்ஷனும் இயக்க முடியும். 

முன்பு, வேறு ஒரு மெயில் செய்தியிலிருந்து, வரிகளை எடுத்து காட்ட அல்லது படித்து எழுத வேண்டும் எனில், எழுதிக் கொண்டிருப்பதை சேவ் செய்துவிட்டு, பின் பழைய மெயிலைத் தேடிப் பிடித்துப் படித்து, பின் மீண்டும் சேவ் செய்த மெசேஜைத் திறந்து அமைக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை. ஒரே விண்டோவிலேயே, புதிய செய்தி, பழைய செய்தி தேடல், பார்த்தல் என அனைத்தையும் மேற்கொள்ளலாம். 

சரி, இதிலிருந்து விடுபட்டு பழையபடியான அஞ்சல் அனுப்பும் வழக்கமான கட்டத்திற்குச் செல்ல வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்? மெசேஜ் கட்டத்தில், கீழாக வலது புறத்தில் உள்ள ஐகானக் கிளிக் செய்திட வேண்டும். ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் மேலாக, “Switch Back to Old Compose” என்று இருப்பதில் கிளிக் செய்தால், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம் புதியதாகக் கிடைக்கும்.

இந்த புதிய வசதியை, ஜிமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால், எத்தனை பேர் பார்த்துப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அட! ஆமா!! பார்க்கவே இல்லையே எனப் பலர் வியப்பது எனக்குத் தெரிகிறது. இனிமேலாவது பார்த்து பயன்படுத்துங்களேன்!


7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்


கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

ஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக இயங்கி வருகிறது. இதில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்கள் பங்கினை அதிகப்படுத்த போட்டியிட்டு வருகின்றன. 

தற்போதைக்கு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன் சந்தையில், 65% பங்கினைக் கொண்டுள்ளது. டேப்ளட் பிசியைப் பொறுத்தவரை, கூகுளின் நெக்சஸ் 7, இதுவரை 10 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது. 

வரும் வாரத்தில், கூகுள் தன் நெக்சஸ் 4 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்சஸ் 10 டேப்ளட் பிசிக்களை வெளியிட உள்ளது. மேலும் கூகுள், டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் வெளியிடுமாறு, இந்தப் பிரிவில் பணியாற்றும் டெவலப்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பயன்பாட்டினை, மிக அதிக வசதிகள் கொண்ட சிஸ்டமாக மாற்ற கூகுள் திட்டமிடுகிறது என்று தெரிய வருகிறது. 

ஆப்பிள் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை மறுத்துள்ளது. தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

சென்ற வாரம் இது பற்றிக் கூறுகையில், 2008ல் தொடங்கப்பட்டுள்ள, ஆப்பிள் ஸ்டோரில் பதியப்பட்டுக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்காக, இதுவரை 650 கோடி டாலர் அளித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

ஆனால், தற்போது தன் நெக்சஸ் வரிசை ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் கூகுள் காட்டும் வேகம், நிச்சயம் அதனை முன்னுக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.


பட்ஜெட் ஆண்ட்ராய்ட் போன்கள்


ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன்களை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால், இந்திய மொபைல் போன் நிறுவனங்கள், மக்கள் விருப்ப நிலை அறிந்து பல பட்ஜெட் போன்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றில் இரண்டை இங்கு காணலாம். 

இன்டெக்ஸ் அகுவா 3.2:

இன்டெக்ஸ் அகுவா 3.2 என்ற பெயரில், இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,790 விலையில், பட்ஜெட் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். 

2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இதில் 3.2 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் தொடு திரை உள்ளது. அறிமுகச் சலுகையாக ரூ.700 மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. 

இதில் ஆண்ட்ராய்ட் 2.3. 5 சிஸ்டம் தரப்படுகிறது. இதன் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் செயல்படுகிறது. 

கேம்ஸ் மற்றும் Fruit Ninja, Nimbuzz, Gmail, YouTube, IRCTC போன்ற அப்ளிகேஷன்கள் இதில் பதிந்து தரப்படுகின்றன. வைபி மற்றும் புளுடூத் மூலம் மற்ற சாதனங்களிலிருந்து டேட்டா மற்றும் பைல்களை காப்பி செய்திடும் வசதி உள்ளது. 

இதில் தரப்பட்டுள்ள 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. 180 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. சில்வர், புளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

லாவா ஐரிஸ் என் 350:

பட்ஜெட் விலையில் நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஆண்ட்ராய்ட் 2.3 போன் லாவா ஐரிஸ் என் 350. இதன் இயங்கும் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். 3.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் தொடு வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 2.0 எம்பி திறன் கொண்டது. 

முன்புறமாக வீடீயோ அழைப்புகளுக்கு 0.3 எம்பி கேமரா இணைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 

இதன் சிபியு வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். வைபி, புளுடூத் 3.0 மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதில் தரப்படும் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரெட். ஓரியன்டேஷன் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், பதிவு செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. 

இதன் பரிமாணம் 4.5x2.3x0.5 அங்குலம். எடை 115 கிராம். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1300mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,500 என்றாலும், Snapdeal.com இணைய தளத்தில் ரூ.4,500 என விலையிடப்பட்டுள்ளது. 

இந்த விலையில் உள்ள மற்ற மொபைல் போன்களுடன் ஒப்பிடுகையில், இதன் செயல் திறன், அகலத்திரை மற்றும் சில வசதிகளுக்காக இதனை வாங்கலாம்.


ஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8


விண்டோஸ் 8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. 

வெளியான நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். 

இவை தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிபிட்டார். 

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் 8 ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுத டெவலப்பர்களை திருப்தி படுத்துவதில் தான் வெற்றி பெற்றதாகவும் கூறியுள்ளார். 

நெட்பிக்ஸ், ஹூலு, எவர்நோட் மற்றும் இபே ஆகியவை ஏற்கனவே பல அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஓராண்டுக்குள், 40 கோடி புதிய சாதனங்களில், விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

விண்டோஸ் 7, 2009 ஆம் ஆண்டில் வெளியான பின்னர், 70 கோடி பதிப்புகள் விற்பனையாயின. 

விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்குவதால், ஓரான்டில் 40 கோடி என்பது, நடக்கக் கூடியதாகவே உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை


நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 

லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் (Android 1.0):

அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில் இயங்கியது. 

இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள். சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ச் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை. செப்டம்பர் 2008ல் இது வெளியானது. 

கப் கேக்ஸ் அவே (Cupcakes away 1.5):

நல்ல விருந்திற்குப் பின்னர் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக் கூட்டை டெசர்ட் (Dessert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல் வெளியானது. 

டோனட் (Donut 1.6):

திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் திறன், வைபி இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது. செப்டம்பர் 2009ல் இது புழக்கத்திற்கு அறிமுகமானது.

எக்ளெர் (Eclair 12.0/2.1):

தன் ஆண்ட்ராய்ட் வரிசையின் அடுத்த சிஸ்டத்தில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டதால், இந்த பதிப்பின் எண் 2க்குச் சென்றது. டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில் அக்டோபர் 2009ல் இது வெளியானது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது.

ப்ரையோ (Fryo 2.2):

இந்த பதிப்பு மே, 2010ல் வெளியானது. இதன் பல முக்கிய அம்சங்களில், பிளாஷ் சப்போர்ட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் வைபி ஹாட் ஸ்பாட் சப்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம். பல செயல் இயக்கங்களின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டது. 

ஜிஞ்சர் ப்ரெட் (Gingerbread2.3):

டிசம்பர், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டமாக இருந்தது. அண்மைக் கள தகவல் தொடர்பு(near field communication) இணைக்கப்பட்டது. இப்போது கூட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பெருவாரியான சாதனங்களில், ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் தான் இயங்குகிறது. 

ஹணி கோம்ப் (Honeycomb3.0):

இதனை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு என்று முழுமையாகக் கூற முடியாது. ஆனால் சிஸ்டத்தினை டேப்ளட் பிசியில் இயங்கும் வகையில் மாற்றி அளித்தது கூகுள். இதன் ஹோலோ (“Holo”) யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது. இதுதான் இன்றும் ஆண்ட்ராய்ட் பதிப்பின் அடிப்படை தொடக்கமாக இருந்து வருகிறது. இந்த பதிப்பு, 2011ல் பிப்ரவரியில் வெளியானது.

ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0):

அக்டோபர், 2011ல் வெளியான இந்த சிஸ்டம், கூகுள் டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டின் இயக்கங்களை ஒருமுகப்படுத்தியது. இன்டர்பேஸ் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது. பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 1080p video recording, face unlock, மற்றும் Chrome browser ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

ஜெல்லி பீன் (Jelly Bean4.1):

சென்ற சில மாதங்களுக்கு முன் வந்த ஜெல்லி பீன், கூகுள் பயனாளர்களின் பயன்பாட்டினை மட்டுமே, தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதனை நிலைநாட்டியது. 

Project Butter என்ற பெயரில், சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது. குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் “cards” என்பவை இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டன. 

கீ லைம் பை (Key Lime Pie (?)):

விரைவில் வெளியிடப்பட இருப்பதாக, பெரிய அளவில் பேசப்படும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் 4.2 பதிப்பு. இது முந்தையவற்றின் மேம்பாட்டு பதிப்பாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய பதிப்பாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் அனைவரும், இது நிச்சயம் முற்றிலும் புதிய பதிப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.


மைக்ரோமேக்ஸ் ஏ 110 சூப்பர் போன் கேன்வாஸ் 2


தன் ஏ 100 சூப்பர்போனில் சில கூடுதல் மாற்றங்களை ஏற்படுத்தி, ஏ110 சூப்பர் போன் கேன்வாஸ் 2 மொபைல் போனை, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தற்போது Saholic இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது. அடுத்த வாரம் கடைகளில் கிடைக்க இருக்கிறது. 

இது இரண்டு சிம்களை இயக்கும் 3ஜி போன். இரண்டுக்கும் ஸ்டேண்ட் பை இயக்கம் கிடைக்கிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் (ஆண்ட்ராய்ட் 4.0.4). 

இதனை 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் இயக்குகிறது. இதன் திரை 5 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 

இதன் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதிகளுடன் 8 எம்பி திறன் கொண்டுள்ளது.

 இன்னொரு கேமரா 0.3 எம்பி திறனுடன் முன்புறமாக உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டுடன், 32 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்தலாம். 

நெட்வொர்க் இணைப்பிற்கு, புளுடூத் 3.0., வைபி, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 

எப்.எம். ரேடியோ இயங்குகிறது. பேட்டரியின் திறன் 2000mAh. தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம். 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 180 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999.


ஐ பால் வழங்கும் டூயல் சிம் டேப்ளட் பிசி


ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், இரண்டு சிம்களை இயக்கும் வகையில் டேப்ளட் பிசி ஒன்றை ஐபால் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த வகையில் இதுவே இந்தியாவின் முதல் டேப்ளட் பிசி எனவும் அறிவித்துள்ளது. Slide 3G 7334 என இதனை அழைக்கிறது. இதன் விலை ரூ.10,999. 

இதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லேட் பிசியாக இதுவே முதலில் வெளி வந்துள்ளது என ஐபால் அறிவித்தாலும், இதற்கு முன்னர் ஸ்வைப் டெலிகாம் நிறுவனம், இதே போல டூயல் சிம் ஸ்லேட் டேப்ளட் பிசி ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் இல்லை.

இதில் 7 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் இயக்கத்தினை சப்போர்ட் செய்கிறது. இதில் Cortex A9 1GHz என்ற ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. 

இரண்டு சிம்களும் 3ஜி இயக்கத்தை மேற்கொள்ள முடியும். இதன் இன் பில்ட் நினைவகம் 8 ஜிபி. இதில் பின்புறமாக, 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், பின்புறம் வீடியோ அழைப்பிற்கென ஒரு விஜிஏ கேமராவும் தரப்பட்டுள்ளன. 

உடன் WhatsApp, Facebook, Nimbuzz, Zomato, IBNLive, Moneycontrol, மற்றும் CricketNext ஆகிய அப்ளிகேஷன்கள் பதிந்து தரப்படுகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு இதில் Bluetooth, WIFI, HDMI மற்றும் MicroUSB ஆகியவை இயங்குகின்றன.


ஸ்கைப் இயக்க தனிக் கணக்கு தேவையில்லை


இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம். 

இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை. 

பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது. 

இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது. இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது. 

இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது. 

அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. 

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.

மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.


மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க


மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.

* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும். 

*மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. 

*குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.

* இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.

*இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம். 

* பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும். 

*உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும். 

*உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.

*குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது. 

அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.


கட்டணம் செலுத்தி வீடியோ - யு-டியூப்


கூகுள் தன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, கட்டணம் செலுத்தி வீடியோவினைத் தன் தளத்தில் பார்க்கும் வசதியினைத் தர இருக்கிறது. 

இதனால், திரைப்படங்கள் நகலெடுக்கப்பட்டு பார்க்கப்படும் தீமை ஒழியும் என கூகுள் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணச் சேவையினை கூகுள் படிப்படியாக சில நாடுகளில் வழங்கி வருகிறது. 

கடந்த ஆறு மாதங்களில், ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பானில் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டது. 

இந்த சேவையில், பல நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படும். 

இந்தியாவில் ஏற்கனவே கூகுளின் கூட்டாளியாக இயங்கும் ஈராஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கூகுள் தளத்தில் தன் படங்களை வைத்துள்ளது. 

இந்த சேவை தொடங்கப்பட்டவுடன், இன்னும் பல நிறுவனங்களுடன் கூகுளுடன் இணைய ஆர்வம் கொள்ளும். தற்போதைக்கு இந்த கட்டணத்தை வசூல் செய்வதில் மட்டுமே சில சிக்கல்கள் இருப்பதாகவும், விரைவில் அவை தீர்க்கப்பட்டு சேவை தொடங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. 

பல நிகழ்ச்சிகளின் வீடியோவினைக் கேட்டுப் பெற்று பார்க்கும் பழக்கம் வெளிநாடுகளில் மக்களிடையே பல ஆண்டுகளாக உள்ளது. பலரும் படங்களைப் பார்க்க இந்த வழியினையே விரும்பி, பார்த்து மகிழ்கின்றனர். 

இங்கு அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், இப்பழக்கத்தினை மக்கள் ஆர்வமாக மேற்கொள்ளத் தொடங்குவார்கள் என கூகுள் நிறுவன ஆசிய பசிபிக் பிரிவின் இயக்குநர் கௌதம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்?


மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் உதவியை நிறுத்தப்போவதாக காலக்கெடு கொடுத்து அறிவித்த பின்னர், விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போல அறிவிப்பு அடுத்தடுத்த விண்டோஸ் பதிப்புகளுக்கும் வருமா என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். 

குறிப்பாக, இப்போது பரவலாகப் பரவி வரும் விண்டோஸ் 7 பயனாளர்கள், தங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் இது போல சப்போர்ட் நிறுத்தப்படுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இது குறித்து மைக்ரோசாப்ட் ஏற்கனவே அறிவித்துவிட்டது. விண்டோஸ் 7 தொகுப்பிற்கான முதன்மையான, முழுமையான சப்போர்ட், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் நிலை சப்போர்ட் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 14 வரை மட்டுமே கிடைக்கும். 

முழுமையான சப்போர்ட் என்பது, பாதுகாப்பு மற்றும் சிஸ்ட வசதிகள் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாதுகாப்பில் சிக்கல்கள் ஏற்படுகையில், அவற்றிற்கான பேட்ச் பைல்களும், சிஸ்டம் வசதிகள் மேம்பாடு மற்றும் பிற புரோகிராம்களுடன் இணைந்த செயல்பாடு ஆகியவற்றிற்கான அப்டேட் பைல்களும் தரப்படும்.

இரண்டாம் நிலை உதவி என்பது அடிப்படை செயல்பாடு மட்டுமே கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு தொடர்பான பேட்ச் பைல்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் பாதுகாப்பு தொடர்பு இல்லாத சிக்கல்கள் மற்றும் வசதிகளுக்கான பைல்கள், கட்டணம் செலுத்தினாலே தரப்படும். 

சிஸ்டத்தில் புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் எக்ஸ்பிக்கான முதன்மை மற்றும் முழுமையான உதவி, 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 அன்று முடிந்தது. விஸ்டாவிற்கான உதவி 2012, ஏப்ரல் 12 அன்று முடிந்தது. 

எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கு, இரண்டாம் நிலை சப்போர்ட் முடிவடையும் நாட்களை, உங்களுக்கு நினைவூட்டவா! எக்ஸ்பி சப்போர்ட் 2014, ஏப்ரல் 8ல் முடிகிறது. விஸ்டாவிற்கான சப்போர்ட், ஏப்ரல் 11, 2017ல் முடிகிறது.


விண்டோஸ் 8 சில சிறப்புகள்


புதிய முறையில் இயங்கி, எதிர்பாராத வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, இதுவரை சந்திக்காத அல்லது பழக்கத்தில் உள்ளவற்றில், வேறுபாடான சிறப்புகள் என்ன?

குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக் கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் ஆகியன விடுத்து, மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.

1. உடன் இணைந்து வரும் ஆண்ட்டி வைரஸ்:

விண் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது. Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது. நாம் இதற்கென தனியாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று வாங்கி, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

2. பேட்டரி பேக் அப், ஸ்பீட் பூட் அப்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மிக வேகமாக பூட் ஆகும்படி அமைக்கப்பட்டுள்ளன. மற்ற எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் இதனுடன் ஒப்பிட்டு இந்த வேகத்தினைத் தெரிந்து கொள்ளலாம். 

மேலும், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, உடன் இயங்கும் ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலை, நாம் டாஸ்க் மேனேஜர் திறந்து சரி செய்திடலாம். அதே போல, கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியைப் பல வழிகளில் செட் செய்து, தேவையற்ற நிலையில், மின்சக்தியைக் குறைக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனால், லேப்டாப் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களில், டேப்ளட் பிசிக்களில், மின்சக்தி பயன்பாடு சிக்கனமாகிறது.

3.எளிதான விண்டோஸ் 8 அப்டேட்:

சிஸ்டத்தின் இயக்க பைல்கள் அப்டேட் செய்யப்படுகையில், தானாகவும், எளிதாகவும் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படி தானாக, சிஸ்டம் அப்டேட் பைல்களை மேம்படுத்திக் கொள்கிறதோ, அதே போல, மேம்படுத்திக் கொள்ளலாம். 

டேப்ளட் பிசிக்களை, வைபி இணைப்பு கிடைக்கும் இடங்களில் இயங்கி, இந்த அப்டேட் செயல்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் மட்டுமின்றி, அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான பைல்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. மேலும், புதிய வசதிகள் தரும் வகையில் பைல்கள் வெளியிடப்பட்டாலும், அவையும் சிஸ்டத்தில் தானாகப் பதியப் படுகின்றன.

4. விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:

விண்டோஸ் 8 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், மற்ற மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இயங்குகின்றன. கம்ப்யூட்டர் ஒன்றில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. 

தொடக்கத்திலேயே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், 11 அப்ளிகேஷன் புரோகிராம்களை மொத்தமாக ஒரு கூட்டு புரோகிராம் போலத் தந்துள்ளது. இவற்றின் மூலம் சமுதாய தளங்கள், மேப்கள், மெயில் அப்ளிகேஷன்,செய்தி தகவல்கள் வசதி மற்றும் பல வசதிகள் மொத்தமாகக் கிடைக்கின்றன.

இந்த வகையில் விண்டோஸ் 8 சிஸ்டம் ஒன்றுதான், கம்ப்யூட்டர்களிலும், மொபைல் சாதனங்களிலும் ஒரே மாதிரியாக இயங்கும் தன்மை கொண்ட சிஸ்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

5. பெர்சனல் கம்ப்யூட்டரில் மொபைல் கேம்ஸ்:

மொபைல் போன்கள் வந்த பின்னர், கேம்ஸ் விளையாடுவோர், கம்ப்யூட்டர்களை அவ்வளவாக நாடுவதில்லை. கையடக்க சாதனத்தில், அனைத்து வசதிகளோடும் விளையாடும் சுகத்தினை அனுபவித்து வருகின்றனர். அதனாலேயே, கேம்ஸ் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், மொபைல் போன்களில் இயங்கும் வகையிலேயே கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்து வருகின்றனர். 

ஆனால், விண்டோஸ் 8 மூலம், அந்த மொபைல் சாதனத்தில் இயங்கும் கேம்ஸ் அனைத்தும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பிசிக்கள் அல்லது அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களில் கிடைக்கின்றன. 

6. விண்டோஸ் 8 சார்ம்ஸ்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்குகையில் , நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ட்யூன் அப் விஷயங்களை (search, share, start, devices, and PC settings) சார்ம்ஸ் பார் என்னும் பகுதியில் வைத்து இயக்கலாம். 

ஒரே ஒரு தொடல் மூலம் இவை உங்களுக்கு இயங்கி உங்கள் கட்டளைக்காகக் காத்து நிற்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷன் அல்லது புரோகிராமினை இயக்கிக் கொண்டிருந்தாலும், இந்த செட்டிங்ஸ் நுட்பங்கள் அனைத்தையும், ஒரே ஒரு தொடல் மூலம் இயக்கலாம். 

7. பைல் எக்ஸ்புளோரர்:

முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், இதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைத்து வந்தோம். இதில் தற்போது ஒரு ரிப்பன் இணைக்கப்பட்டுள்ளது. பைல்கள் குறித்த தகவல் பக்கத்தில், பைல்களைப் பற்றிய கூடுதல் புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன. 

ஒரு பைலை மாற்றிக் கொண்டிருக்கையில், அதனைச் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கலாம். பைலை காப்பி செய்கையில் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்னைக்கும் தீர்வு தயாராகத் தரப்படுகிறது. இதுவரை நாம் பைல்களைக் கையாண்ட வழிகளுக்கும் மேலாகப் பல வசதிகள் இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன. 

8. புதிய மீட்பு (recovery) வழிகள்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய மீட்பு வழிகள் தரப்பட்டுள்ளன. அவை Refresh மற்றும் Reset ஆகும். சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, சற்று முடக்கப்படுகையில், ‘Refresh’ அனைத்து விண்டோஸ் பைல்களையும், அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கிறது. 

அதே நேரத்தில், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அப்படியே இருந்த நிலையில் வைக்கிறது. ஆனால், ‘Reset’ கம்ப்யூட்டரை அதன் பேக்டரி நிலைக்குக் கொண்டு செல்கிறது. 

அதாவது புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலைக்கு மாற்றி அமைக்கிறது. மீண்டும் விண்டோஸ் 8 சிஸ்டம் ரீஇன்ஸ்டால் என்ற முறையில் அமைக்க, உங்களுக்கு மீடியா சிஸ்டம் டிஸ்க் தேவையில்லை. 

விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் பல புதிய வசதிகளை, இயக்கத்தினைத் தருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் அனுபவத்தினை முற்றிலும் புதிய முறையில் மாற்றித் தர வேண்டும் என்ற நோக்குடன் மைக்ரோசாப்ட் இயங்கி, இந்த சிஸ்டம் மூலமாக வெற்றியும் பெற்றுள்ளது. இன்னும் பல வசதிகள், புதிய தகவல்கள் குறித்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes