விண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்


விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குவிந்துள்ளன. 

சென்ற அக்டோபர் 13ல், இவற்றின் எண்ணிக்கை 1,21,183 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 1,491 அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன. 

இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் புரோகிராம்கள் உள்ளன. 

கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்களில், Angry Birds Star Wars, Rayman Jungle Run, மற்றும் Fruit Ninja ஆகியவை இருந்தன.

மைக்ரோசாப்ட் தந்துள்ள மேப் அப்ளிகேஷன் புரோகிராமில், முக்கியமான அப்டேட் மேற்கொள்ளப்பட்டது. 

இதில் தற்போது Bing Smart Search செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களாக, Bing Travel and Bing Weather ஆகியவை தரப்பட்டுள்ளன.

யாஹூ நிறுவனம், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான யாஹூ மெயில் அப்ளிகேஷனை அப்டேட் செய்து நவீன வசதிகளைத் தந்துள்ளது. 

புதிய விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், முற்றிலும் புதிய பெயிண்ட் (Paint) அப்ளிகேஷன் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் தந்துள்ளது. 

இலவசமாக அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து அப்ளிகேஷன் புரோகிராம்களாகக் கீழ்க்கண்டவை இடம் பிடித்துள்ளன - Netflix, Reaper, Microsoft Solitaire Collection, Google Search மற்றும் Where's My Water 2.


கம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன?


கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். 

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. 

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: 

இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். 

அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. 

அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். 

கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.


2. புளூ ஸ்கிரீன் ஆட் டெத்: 

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. 

நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது. 

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம். 

நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். 

அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.


3. கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது: 

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? 

அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும். 

பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.

1. ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம். 

2. சி.பி.யு..: சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும். 

3. ராம் நினைவகம்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.

4. கிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.

5. சிறிய மின்விசிறிகள்: கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம். 

6. மதர்போர்ட்: மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

7. மின்சக்தி புழக்கம்: மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கான பிற காரணங்கள் சாப்ட்வேர் புரோகிராம்களால் ஏற்படுபவையாக இருக்கலாம். மேலே சொன்ன அனைத்து வகை அறிகுறிகளும், சாப்ட்வேர் பிரச்னைகளாலும் ஏற்படலாம். 

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்த மால்வேர் புரோகிராம்கள், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் நுழைந்து, மொத்த இயக்கத்தினையும் நிறுத்தலாம்.


மொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்

இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. 

யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.


அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.
1.நோமோ போபியா (Nomophobia): 

நோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது. 

இந்த சொல் "nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம். ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.

மிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, ""அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும். 

பல தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.


2. ஸ்மார்ட் போன் அடிமை: 

நோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது. 

திருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார். 

எந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப் புலப்படவில்லை.
3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்: 

அமெரிக்காவில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர். 

நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது. 

இப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.
4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை: 

மேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது. 

நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.

இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும். 

படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.
5. ஆமைக் கழுத்து நோய்: 

ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது. 

இது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.
6. வெட்டிப் பந்தா மேடை: 

சமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில், மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றனர். 

சமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக்கின்றனர்.
7. தன் காதல் மனக் கோளாறு: 

சமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர். இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. ""இதோ ! என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது. 

மேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை. 

இவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.


HTC.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை

ஸ்மார்ட் போன் சந்தையில், அதிக ஆரவாரமின்றி இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய டிசையர் 500 என்னும் மொபைல் போனை ரூ.21,490 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 

4.3 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர், 4.1.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா, 1.6 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகளாகும். 

இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் உண்டு. 

1 ஜி.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை மைக்ரோ எஸ்.டி. கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையும் இதன் செயல் திறனை அதிகப்படுத்துகின்றன.


பேட் செக்டார்களும் பாதுகாக்கும் வழிகளும்

ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது. 
இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது. 

பேட் செக்டார் என்பது, நாம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் காந்த சக்தியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ்களிலும் ஏற்படலாம்; தற்போது பழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ்களிலும் உருவாகலாம்.

பழுதான பகுதிகள் என இவற்றை அழைக்கலாம். இவை இரண்டு வகைப்படும். முதலாவது, சாதனப் பாதிப்பு வழியாக ஏற்படுவது. இரண்டாவது சாப்ட்வேர் புரோகிராம்களினால் ஏற்படுவது. இரண்டாவது வகையினைச் சரி செய்திடலாம். 

ஆனால், முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனைச் சுற்றி வேலி போன்ற டிஜிட்டல் தடையை அமைத்து, பயன்படுத்துவதிலிருந்து ஒதுக்கி வைக்கலாம்.

பேட் செக்டார் வகைகள்: இரண்டு வகையான பேட் செக்டார்கள் உள்ளன. இவற்றை "physical” and “logical” bad sectors என அழைக்கின்றனர். அல்லது சிலர் “hard” and “soft” எனவும் அழைக்கின்றனர்.

இவற்றில் முதலாவது வகையானது, (physical — or hard — bad sector) நேரடியான பாதிப்பில் ஏற்படுவது. ஹார்ட் ட்ரைவின் எழுதும் முனை, அந்தப் பகுதியில் தொட்டு பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம். சிறு தூசி அந்த இடத்தில் அமர்ந்து, இடத்தைப் பாழாக்கி இருக்கலாம். 

சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில், குறிப்பிட்ட செல் பயன்படுத்தும் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்திட முடியாது. 

இன்னொரு வகையான logical — or soft — bad sector என்பது, குறிப்பிட்ட அந்த பகுதி செயல்படாமல் இருப்பது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அந்தப் பகுதியில் உள்ள டேட்டாவினைப் படிக்க முயன்று, பின் பழுதினை நீக்கும் தன் குறியீடுகள் அதனுடன் ஒத்துப் போகாமல் இருப்பதனைக் கண்டறிந்து, அங்கு ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்து உணர்த்துவதாகும். 

இந்த பகுதி பேட் செக்டார் எனக் குறிக்கப்படும். இதனை, அந்தப் பகுதியில் zeros எழுதுவதன் மூலம் சரி செய்துவிடலாம். முன்பு இதனை குறுகிய அளவில் (lowlevel format) பார்மட் செய்து சரி செய்து வந்தனர். விண்டோஸ் சிஸ்டம் கொண்டிருக்கும் Disk Check டூல், இத்தகைய பழுதுகளை சரி செய்திடலாம்.


சாம்சங் ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனம் தன் அண்மைக் கால வெளியீடான, சாம்சங் காலக்ஸி மினி எஸ்4 மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவற்றின் விலையைக் குறைத்துள்ளது. 

சென்ற பிப்ரவரியில், முதல் முறையாக சாம்சங் எஸ்3 விலை குறைக்கப்பட்டது. 

முதலில் சென்ற 2012, மே மாதம் விற்பனைக்கு அறிமுகமான போது, இதன் விலை ரூ. 43,180 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.24,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதன் 32 ஜிபி மாடல் போனுக்கு விலை குறைக்கப்படவில்லை. காலக்ஸி எஸ்4 மினி மொபைல் போனின் விலை ரூ. 22,080 ஆக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 


காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வெளியான பின்னரும், சாம்சங் நிறுவனம் தொடர்ந்து, காலக்ஸி எஸ்3 போனைத் தயாரித்து வருகிறது. 

ஏற்கனவே, சென்ற ஆகஸ்ட் மாதம், சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி மெகா 5.8, காலக்ஸி கோர் மற்றும் காலக்ஸி எஸ் டூயோஸ் ஆகிய போன்களின் விலையைக் குறைத்தது நினை விருக்கலாம். 

விழாக் காலத்திற்கென இந்த விலைக் குறைப்பு இருக்கலாம்.


நோக்கியாவின் குறைந்த விலை மொபைல்கள்நோக்கியா நிறுவனம் தன்னுடைய இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களாக, நோக்கியா 107 மற்றும் 108 ஆகியவற்றை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

1.8 அங்குல அகல டி.எப்.டி. திரை, ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ இவற்றில் தரப்பட்டுள்ளன. 

நோக்கியா 108ல், வி.ஜி.ஏ. கேமரா வீடியோ பதியும் திறனுடன் தரப்பட்டுள்ளது. 

புளுடூத் 3.0 இயங்குகிறது. நோக்கியா 107 போனில் 1020 mAh திறன் கொண்ட பேட்டரியும், நோக்கியா 108ல் 950 mAh திறன் கொண்ட பேட்டரியும் தரப்பட்டுள்ளன. 

இவை இரண்டிலும், இரண்டு மினி சிம் கார்டுகளை இணைத்து இயக்கலாம் என்பது சிறப்பு. 

இரண்டிலும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைத்து, நோக்கியா 107ல், 16 ஜிபி வரையும், நோக்கியா 108ல் 32 ஜிபி வரையும் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்தலாம்.


இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்?

சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் இறந்த பின்னர், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பாதுகாத்து இயக்குவதற்கு, கூகுள் தரும் வழிகளைக் கண்டோம். அதே போல பேஸ்புக் அக்கவுண்ட்டினையும், தொடர்ந்து உயிர்ப்பில் வைக்க வழிகள் உண்டா? 

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் அக்கவுண்ட்டிற்கு என்ன நேரிடுகிறது? 

பொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.


பேஸ்புக், அக்கவுண்ட் ஒன்றை, அதற்கானவரின் மரணத்திற்குப் பின்னால், நினைவாக வைத்திருக்க வழி தருகிறது. இதனை memorialized அக்கவுண்ட் என அழைக்கிறது.இந்த வகை அக்கவுண்ட் வழக்கமான அக்கவுண்ட் போஸ்டிங்கிலிருந்து வேறுபட்டது. 

இந்த அக்கவுண்ட்டில் யாரும் லாக் இன் செய்திட முடியாது. புதியதாக எந்த ஒரு நண்பரின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த அக்கவுண்ட்டில், அதனை உருவாக்கியவரின் தனிப்பட்ட செட்டிங்ஸ் பாதுகாக்கப்படும். 

எனவே, இறந்தவரின் அக்கவுண்ட்டிற்கு, அவருடைய நண்பர்கள், டைம்லைனில், தகவல்களைப் பதியலாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அதில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பிரைவேட் மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். 

இறந்தவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அப்படியே வைக்கப்படும். நண்பர்கள் அவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம். போட்டோக்கள், ஸ்டேட்ட்ஸ் அப்டேட் தகவல்கள், லிங்க்ஸ், வீடியோஸ் இன்னும் பிற நண்பர்களின் பார்வைக்கு எப்போதும் கிடைக்கும். 

இருப்பினும், நண்பர்களுக்கு சிறப்பு நிகழ்விற்கான நினைவுக் குறிப்புகள் கிடைக்காது. நீங்கள் அறிந்த நண்பர்கள் என்ற பட்டியலில், இறந்தவரின் பெயர் இருக்காது. 

அக்கவுண்ட் ஒன்றை நினைவக அக்கவுண்ட்டாக அமைக்க,https://www.facebook.com/help/contact/30559 3649477238 என்ற முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை, இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் நிரப்பி அனுப்பவும்.

இதில் கேட்டுள்ள இறப்பு சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டியதிருக்கும். இல்லை எனில், நம் மக்கள் உயிரோடு இருக்கிறவர்களின் நெருங்கிய உறவினர் என பொய்யாக, விண்ணப்பத்தினை அனுப்பிவிடுவார்கள் இல்லையா!


ஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்

சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர், ஏதேனும் ஒரு மால்வேர் வைரஸ் புரோகிராமினால், பாதிக்கப்பட்டதாக, காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

காஸ்பெர்ஸ்கியின் சோதனைச்சாலையில், 2 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 308 மால்வேர் புரோகிராம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 33.8 சதவீத இணைய பயனாளர்கள், இவற்றால் பாதிக்கப்பட்டனர். 


இந்த வைரஸ் புரோகிராம்கள் அனைத்துமே, பயனாளர்களின் செயல்பாட்டினாலேயே, அவர்களின் கம்ப்யூட்டர்களில் பரவின. 

இவற்றைப் பரப்பிய டிஜிட்டல் குற்றவாளிகள், ஒரு நல்ல புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி, இவற்றை பரப்பியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தவகை புரோகிராம்கள், பெரும்பாலும் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. 

இந்த புரோகிராம்கள் பரவியதால், உலக அளவில், இணையத்தைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் ஆபத்தினைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 16 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. 

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், 52 சதவீதம் பேர், யு.எஸ்.பி., சி.டி., மற்றும் பிற ஆப் லைன் பயன்பாட்டின் மூலமாகவும், மால்வேர் புரோகிராம்களைப் பெற்றனர்.

இந்த டிஜிட்டல் குற்றவாளிகள், மால்வேர் புரோகிராம்களைப் பரப்புவதற்குப் புதிய பல வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்து வருவதாலேயே, இவை அதிக அளவில் பரவி வருகின்றன.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரிப்பதில், முன்னணியில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின், கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாலை வெளியிட்டவை ஆகும்.


சாம்சங் காலக்ஸி ஸ்டோர் ப்ரோ


தொடர்ந்து பல மாடல்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், அண்மையில், ஜி.டி.எஸ் 7262 என்ற எண்ணில், சாம்சங் காலக்ஸி ஸ்டார் ப்ரோ என்ற மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் கெபாசிடிவ் டச் திரை 4 அங்குல அகலம் கொண்டது. இந்த போனை இயக்கும் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ 5 ப்ராசசர் ஆகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன்.

இதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியது. 

இந்த போனின் தடிமன் 10.6 மிமீ. எடை 121 கிராம். 512 எம்பி ராம் நினைவகம், 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம் தரப்பட்டுள்ளது. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி எட்ஜ் தொழில் நுட்பம், வை-பி, புளுடூத் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. வெள்ளை நிறத்தில் வரும் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 6,989.


விண்டோஸ் 8.1 புதுமைகள்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8.1 இன்ஸ்டலேஷனை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு விண்டோஸ் லைவ் (Windows Live) அக்கவுண்ட் ஒன்று தேவைப்படும்.

2. தேடல் ஒருங்கிணைப்பு: விண்டோஸ் 8.1.ல் தேடுகையில், முடிவுகள், உங்கள் கம்ப்யூட்டர், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இணையத்திலிருந்து தரப்படும். 

3. பொதுவான, அடிப்படையான விண்டோஸ் 8 அப்ளிகேஷன்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு 8.1லும் தரப்பட்டுள்ளன. மெயில், போட்டோ, தொடர்புகள், காலண்டர் என இவை அடங்கும்.

4. க்ளவ்ட் ஸ்டோரேஜ்: நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில், ஸ்கை ட்ரைவில் பதியப்பட்டு பாதுகாக்கப்படும். இதுவரை சி (C:) ட்ரைவ் மட்டுமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது. நீங்கள் விரும்பினால், வேறு ஒரு ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ளலாம். 

5. விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்படுகிறது.

6. ஏற்கனவே நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன் அதன் இடத்தில் புதியதாக, Fresh Paint என்னும் மேம்படுத்தப்பட்ட, புதிய பெயிண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது.

7. ஒருங்கிணைந்த தேடல்களோடு, இந்த சிஸ்டத்தில், பல பிங் (Bing) அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. அவை - Bing Sports, Bing Travel, and Bing Health & Fitness.

8. விண்டோஸ் ஸ்டோர், தற்போது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் அப்ளிகேஷன்களைத் தேடிப் பெறுவது மிக எளிதாக உள்ளது.

9. விண்டோஸ் 8.1.ல் அனைத்து விண்டோஸ் 7 அப்ளிகேஷன் புரோகிராம்களும் இணைவாக இயங்கும்.


சலுகை விலையில் பிளாக்பெரி போன்


பண்டிகைக் காலம் வர இருப்பதால், பல மொபைல் நிறுவனங்கள், இனி, தங்கள் மொபைல் போன்களின் விலையில் தள்ளுபடி செய்து அறிவிப்பு வழங்குவார்கள். 

அந்த வகையில் பிளாக் பெரி இஸட் 10 (BlackBerry Z10 smartphone) ஸ்மார்ட் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைப் பண்டிகை காலம் வரை ரூ.29,990க்கு வாங்கிக் கொள்ளலாம். 

இந்தியாவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, பிளாக் பெரி, இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாகி சுனில் லால்வானி தெரிவித்துள்ளார். 

புதிய வகையில் மொபைல் தொழில் நுட்பத்தினை, இந்த மொபைல் போன் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஸ்மார்ட் போனில், 1.5கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 16 ஜி.பி. இதனை மெமரி கார்ட் ஸ்லாட் பயன்படுத்தி, 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். துல்லியமான, தெளிவான டிஸ்பிளே தரும் வகையில் இதன் தொழில் நுட்பம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் தரப்பட்டுள்ள micro HDMI போர்ட் வசதி, போனைப் பயன்படுத்தி, பிரசண்டேஷன் கொடுக்க வழி செய்கிறது. என்.எப்.சி. என்ற தொழில் நுட்பம், அதி நவீன சென்சார் இயக்கத்தினைத் தந்து, மொபைல் போன் வழி பணம் செலுத்தும் வசதியைத் தருகிறது.


வி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சிறப்பு வசதிகள்


வீடியோ பைல்களை இயக்க, நம்மில் பலரும் வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராம், வீடியோ பைல்களை மட்டும் இயக்கும் ஒரு புரோகிராம் அல்ல. 

இதற்கு மட்டுமே நீங்கள் வி.எல்.சி.மீடியா பிளேயரை இயக்குவதாக இருந்தால், அதன் திறனில் பத்தில் ஒரு பங்கினையே, நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். 

நீங்கள் இதனை விண்டோஸ், மேக் அல்லதுலினக்ஸ் என எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், வீடியோ பைல்களை மட்டும் இதன் மூலம் இயக்குகிறீர்கள் என்றால், அதன் முழு பயன்பாட்டினை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றே பொருள். இதன் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய மற்ற செயல்பாடுகளையும் வசதிகளையும் இங்கு காணலாம்.


1. மீடியா பைல்களின் பார்மர் மாற்ற: 

வி.எல்.சி. பிளேயர் மூலம் மீடியா பைல்களின் பார்மட்களை எளிதாக மாற்றலாம். இதன் மூலம் வீடியோ பைல் ஒன்றை, மொபைல் சாதனங்களுக்கான வகையில் மாற்றம் செய்திடலாம். 

அல்லது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில், குறிப்பிட்ட மீடியா பைல் இருக்கும் பார்மட்டினை இயக்கும் வசதி இல்லை என்றால், அந்த சாதனம் எந்த பார்மட்டை இயக்கும் திறன் கொண்டதோ, அந்த பார்மட்டிற்கு மாற்றிவிடலாம். இவ்வாறு பார்மட் மாற்றப்பட்ட பைலினைத் தனியே சேவ் செய்துவிடலாம். 

இதனை மேற்கொள்ள, மீடியா மெனுவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Convert/Save பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், எந்த பார்மட்டில் வீடீயோ பைல் மாற்றப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதற்கு Edit Selected Profile என்ற பட்டனைப் பயன்படுத்தி, வீடியோ கட்டமைப்பின் (video encoding) பார்மட்டினை அமைக்கவும்.


2. மீடியா ஸ்ட்ரீமிங்: 

வி.எல்.சி. பிளேயர் மூலம், நம் கம்ப்யூட்டரில், இணைய தளத்திலிருந்து அல்லது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டரி லிருந்து, வீடியோ பைல்களை ஸ்ட்ரீமிங் எனப்படும் தொடர்ந்து பெறும் செயல்பாட்டினை மேற்கொள்ள முடியும். 

இதனை மேற்கொள்ள, Media மெனுவில், Stream என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் வி.எல்.சி. பிளேயர் புரோகிராம், மீடியா சர்வராக மாற்றப்படுகிறது. 

இதனால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர் அல்லது உலகில் இணைய இணைப்பில் உள்ள எந்த கம்ப்யூட்டரும், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைப்பை ஏற்படுத்தி, வீடியோ பைல்களை ஸ்ட்ரீம் செய்து பயன்படுத்திக் கொண்டு பார்க்கலாம்.


3. டெஸ்க்டாப்பினை பதிவு செய்திட: 

வி.எல்.சி. பிளேயர், உங்கள் டெஸ்க்டாப்பினை, ஓர் உள்ளீடு செய்திடும் சாதனமாகப் பயன்படுத்த உதவிடும். அதாவது, Convert/Save என்ற வசதியைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள வீடியோவினை சேவ் செய்திடலாம். 

வி.எல்.சி. பிளேயரை, ஸ்கிரீன் கேப்சர் சாப்ட்வேர் போன்று மாற்றலாம். இதனை Stream வசதியுடன் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள பைலை, தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதுவும் இல்லாமல், நெட்வொர்க் அல்லது இணையத்தில் ஒளி பரப்ப முடியும்.


4. வீடியோ பைல் கட்டுப்படுத்தல்: 

பிரவுசரிலிருந்து கொண்டு, வீடியோ பைல் ஒன்று இயக்கப்படுவதனைக் கட்டுப்படுத்தலாம். வி.எல்.சி. புரோகிராமில், எச்.டி.டி.பி. சர்வர் ஒன்று இணைந்தே அமைக்கப்பட்டுள்ளது. இதனை செட் செய்துவிட்டு, அதன் பின்னர், இந்த வி.எல்.சி. கிளையண்ட் புரோகிராமினை, பிரவுசர் ஒன்றிலிருந்து கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். 

அது மட்டுமின்றி, மீடியா மையமாக இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை, வெப் பிரவுசர் மூலமாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஆடியோ அல்லது வீடியோ பைல்களை வரிசைப் படுத்தலாம். அவை இயக்கப்படுவதனை நெறிப்படுத்தலாம். 

இதனை ஸ்மார்ட் போன் ஒன்றுடன் இணைத்துப் பயன்படுத்தி, வி.எல்.சி. பிளேயரின் இயக்கத்தினையும் கட்டுப்படுத்தலாம். மொபைல் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயருக்கான ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்கென பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.


5. யு.ட்யூப் வீடியோ பார்க்க: 

உங்கள் வெப் பிரவுசருக்கு வெளியே, யு ட்யூப் வீடியோவினைப் பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறீர்களா? யு ட்யூப் தளம் சென்று, விரும்பும் வீடியோ உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். பின் அதன் இணைய தள முகவரியினை காப்பி செய்திடவும். 

இனி, வி.எல்.சி. பிளேயரில், Media மெனுவில் கிளிக் செய்திடவும். அடுத்து, Open Network Stream என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில், காப்பி செய்த குறிப்பிட்ட வீடியோ இணைய தள முகவரியினை ஒட்டவும். 

வி.எல்.சி. பிளேயர், குறிப்பிட்ட வீடியோவினை யு ட்யூப்பிலிருந்து லோட் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில், வி.எல்.சி. விண்டோ ஒன்றைத் திறந்து இயக்கிக் காட்டும். வீடியோ இயக்கப்படுகையில், Tools மெனு கிளிக் செய்து, Codec Information தேர்ந்தெடுக்கவும். 

இங்கு Location boxல், அந்த MP4 வீடியோவின் முழு இணைய முகவரியும் காட்டப்படும். இதனை காப்பி செய்து, ஏதேனும் ஒரு டவுண்லோட் மேனேஜரில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது வெப் பிரவுசரில் பேஸ்ட் செய்திடலாம். இவ்வாறு செய்து, அந்த யு ட்யூப் வீடியோவினை, உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.


6. இணைய ரேடியோ கேட்கலாம்: 

முன்பு, விண் ஆம்ப் மூலம் இணைய ரேடியோ நிலைய ஒலிபரப்பினைக் கேட்டு வந்தோம். வி.எல்.சி. பிளேயரில், இணைய ரேடியோ ஸ்டேஷன்களின் பட்டியலைப் பெறலாம். 

இதற்கு playlist திறந்து, அங்கு Icecast Radio Directory என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களுக்குப் பிரியமான இசை அல்லது ரேடியோ ஸ்டேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டைரக்டரியில் இல்லாத இணைய ரேடியோ நிலையங்களையும் வி.எல்.சி. பிளேயரில் தேர்ந்தெடுக்கலாம். 

இந்த ரேடியோ இணைய தளங்களில், பொதுவாக, "listen” என்ற லிங்க்கினைக் காணலாம். இதில் கிளிக் செய்து, வி.எல்.சி. பிளேயரில், ஒலி பரப்பினைக் கேட்கலாம்.

மேலே சுட்டிக் காட்டியது மட்டுமின்றி, இன்னும் பல புதிய ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை, வி.எல்.சி. பிளேயர் கொண்டுள்ளது. பயன்படுத்தி மகிழவும்.


கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்


பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; 

குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. 

சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. 

உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை. 

பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், ""என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்'' என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.

இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது. 

நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.

உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது. 

தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது. 

ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.

பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது. 

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது. 

மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.


ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. 

நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். 

ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம். 

கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை 

1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)

2) நினைவக (Memory) மேலாண்மை

3) பணி (Task) மேலாண்மை

4) பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது. 

பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.


ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. 


1. சாம்சங் காலக்ஸி பேம் (Samsung Galaxy Fame): 

3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.


2. எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 - 2 டூயல் (LG Optimus L4 II Dual): 

இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3,8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.


3. நோக்கியா லூமியா 520 (Nokia Lumia 520): 

இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.


4. பானாசோனிக் டி11 (Panasonic T11): 

நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.


5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பன் ஏ76 (Micromax Canvas Fun A76): 

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.


மின் அஞ்சல் சர்வர் வகைகள்


உங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம். 


1. பி.ஓ.பி.3 (POP3 ): 

இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும். 

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும். 

அப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மின் அஞ்சல் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம். 


2. ஐமேப் (IMAP): 

Internet Message Access Protocol என இதனை விரித்துக் கூறலாம். இந்த வகை அஞ்சல்களைக் கொண்டிருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள அஞ்சல்களை, இணைய இணைப்பில் அந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, படிக்கலாம், பதில் அளிக்கலாம் மற்றும் நீக்கலாம். 

நீங்கள் நீக்கும் வரை, அந்த சர்வரில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தாங்கும் வரை, இந்த மெயில்கள் அங்கேயே தங்கும். அந்த சர்வரிலேயே அவை இருப்பதால், இணைய இணைப்பு உள்ள எந்தக் கம்ப்யூட்டர் வழியாகவும், இந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, இவற்றை எந்த நேரத்திலும் படிக்கலாம். நீக்கவும் செய்திடலாம். இப்போது, பெரும்பாலான மக்கள் இந்த வகை மெயில் சேவையினையே விரும்புகின்றனர். 


3. எஸ்.டி.எம்.பி.

Simple Mail Transfer Protocol என இதனை அழைக்கின்றனர். இந்த சர்வரிலிருந்து, நீங்கள், அனுப்பும் மெயில்களையே கையாள முடியும். இதனை POP3 அல்லது IMAP சர்வருடன் இதனைப் பயன்படுத்தலாம். 

எனவே, நீங்கள் அஞ்சல் அனுப்ப முயற்சிக்கையில், STMP உடன் தொடர்பு படுத்தி, பிழைச் செய்தி வந்தால், அது வெளியே செல்லும் மெயில் குறித்ததாகத்தான் இருக்கும்.


இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்


சோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது. 

தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். சிம் இயக்கத்தினைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரியான அம்சங்களையே இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் திரை 4 அங்குல அகலம் கொண்டு, 800 x 480 பிக்ஸெல்கள் கொண்ட காட்சித் தோற்றத்தினைத் தருகிறது. இந்த திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திறன் கொண்டது. 

இவற்றில், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் எம்.எஸ்.எம். 8227 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.

பின்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த, வீடியோ பதியும் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமராவும், முன்புறமாக, வீடியோ அழைப்புகளுக்கென, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. 

இவற்றின் தடிமன் 9.3 மிமீ. எடை 115 கிராம். எப்.எம். ரேடியோ கீஈகு தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, DLNA, A2DP இணைந்த புளுடூத் 4, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. 

இதன் பேட்டரி 1750 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.


விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்


விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். 

இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: 


தேடல்

Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. 
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.


சார்ம்ஸ் மெனு

Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.


ஸ்விட்ச் மெனு

Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.


பேனர்கள்

Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க. 
Win + H - ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.


அப்ளிகேஷன் பார்

Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.


ஸ்கிரீன் ஷாட்

Win + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது. 

இன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes