பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா?

இரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது. 

இது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான். எடுத்துக் காட்டாக, ஒருவர் தன்னைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டிய எண், ஒருவருக்குத் தேவையான மருந்தின் பெயர் ஆகியவற்றைத் தந்திருந்தால், எந்த இடத்திலும், பேஸ்புக் மெசஞ்சரில் லாக் இன் செய்து அவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், பழைய செய்திகளை அறிய, அதனைக் கொடுத்தவரும் இணையத்தில், பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும். 

நீங்கள் பேஸ்புக் வழியாக அதில் இணைத்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினால், நீங்கள் மொபைல் போனில் கட்டாயம் புதிதாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 

இது என்ன பெரிய நிபந்தனை? நல்லதுதானே என நீங்கள் எண்ணலாம். ஆனால், இதனை இன்ஸ்டால் செய்கையில் நாம் எதற்கெல்லாம் ஒத்துக் கொள்கிறோம் எனப் பார்க்க வேண்டும். இவை நம் சுதந்திரத்தினைப் பறிப்பதுடன், நமக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கூறியுள்ளார். அவை இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. நம் நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவதற்கு நாம் பேஸ்புக் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, பேஸ்புக் இன்டர்நெட் அல்லது மொபைல் போன் நிறுவன சேவையின் தன்மையினை மாற்றலாம். உங்களுக்கு அறிவிக்கப்படாமலேயே, உங்கள் போனில் உள்ள வசதிகளை, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள். 

2. போன் அழைப்பு எண்களும், எஸ்.எம்.எஸ். செய்தியும்: பேஸ்புக் நினைத்தால், அது உங்கள் நண்பர்களின் போன்களுக்கு, நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரில், எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பலாம். இதில் உள்ள பிரச்னை உங்களுக்குத் தெரிகிறதா? உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார்? நீங்கள் அறியாத ஒருவருக்கு, உங்கள் போனில், நீங்கள் விரும்பாத செயல்களை மேற்கொள்ள அனுமதி கொடுப்பது போலாகும் இது. 

3. ஆடியோவைப் பதிவு செய்வதும், படங்கள் மற்றும் விடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் எடுப்பது: இது மிக மோசமானது. பேஸ்புக் நிறுவனத்தினர், எந்த நேரத்திலும் உங்கள் போனில் நுழைந்து, நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். உங்கள் போனில் உள்ள லென்ஸ் வழியாக உங்களைக் கண்காணிக்கலாம்.


பேஸ்புக் வாங்கிய புதிய நிறுவனம்

இணையத்தில் பாதுகாப்பு வழங்கும் பணிகளில் இயங்கி வரும் பிரைவேட் கோர் (PrivateCore) நிறுவனத்தை, சமூக இணைய தளமான பேஸ்புக் வாங்கியுள்ளது. 

சென்ற மாதம், அமெரிக்க உளவு அலுவலகம், பேஸ்புக் சர்வர்களை ஊடுறுவியதாகவும், அப்போது பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் தனி நபர் தகவல்களை, உளவு அமைப்பு எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியானது. 

இதனால், கலக்கமுற்ற பேஸ்புக் நிறுவனம், தன் சர்வர்களைப் பாதுகாக்க, இவ்வகையில் பாதுகாப்பு வழங்கி வரும் பிரைவேட் கோர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. 

என்ன பணம் கொடுத்து வாங்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியே அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரைவேட் கோர் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தொழில் நுட்பத்தினை தன் தளங்களில் பயன்படுத்த இருப்பதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. 

இந்த தொழில் நுட்பத்தின் மூலம், மால்வேர் தொகுப்புகள் ஊடுறுவலைத் தடுக்க முடியும். 

மேலும், பேஸ்புக் அனுமதிக்காத புரோகிராம்கள் எதுவும் அணுக இயலாத வகையில் இது செயல்படும். தன் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டதனை, பிரைவேட் கோர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.


விண்டோஸ் 9 சில கசிந்த தகவல்கள்

விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன. 

விண்டோஸ் 8, தொழில் நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை. 

தோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட முடிவெடுத்துள்ளது. 

Threshold என்ற குறியீட்டுப் பெயருடன், விண்டோஸ் 9 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக Charms Bar நீக்கப்படும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் Start menu தரப்பட உள்ளது. 

விண்டோஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன், மெட்ரோ அப்ளிகேஷன்களும் டெஸ்க்டாப்பில் காட்டப்படும். இரண்டும் இயங்கும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களின் மிகப் பிரியமான இயக்க முறைமையாக இது இருக்கும் என தெரிகிறது. 

ஆனால், சார்ம்ஸ் பார் இயக்கம், டேப்ளட் பி.சி.க்களில் விரும்பப்ப் படுவதால், அதற்கான இயக்கத்தில் சார்ம்ஸ் பார் தொடரும். எனவே, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 9, மக்களின் விருப்பங்களுக்கேற்ப செயல்படும் ஒரு சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்டோஸ் 9 சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அம்சங்களைக் காட்டிலும், விண்டோஸ்7 அம்சங்கள் அதிகம் கொண்டதாக அமையலாம். 

புதிய முயற்சியாக, விண்டோஸ் 9 சிஸ்டத்தில், விர்ச்சுவல் டெஸ்க்டாப் (virtual desktop) அமைத்து இயக்குவதற்கான வசதிகள் தரப்பட இருக்கின்றன. தற்சமயம், மேக் ஓ.எஸ். மற்றும் உபுண்டு இயக்கங்களில் இந்த வசதி கிடைக்கிறது. 

விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம், நாம் வெவ்வேறு வகையிலான டெஸ்க்டாப்களை உருவாக்கலாம். இவை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம். இரண்டிலும் மாறி மாறி இயங்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு டெஸ்க்டாப்பில் உங்கள் நிறுவனப் பணிகளுக்கான அப்ளிகேஷன்களை வைத்து இயக்கலாம். 

இன்னொன்றில், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கானதாக அமைத்துக் கொள்ளலாம். 

இதிலிருந்து, டேப்ளட் பி.சி.க்களில் நன்றாக இயங்கிய சிஸ்டத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் விரும்பி இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் எண்ணி, விண்டோஸ் 8 கொண்டு வந்த்து தவறு என அது உணர்ந்து, தற்போது நிலைமையை மாற்றி, புதிய விண்டோஸ் 9 சிஸ்டத்தில் கொண்டு வரத் திட்டமிடுவது தெரிகிறது. 

விரைவில் விண்டோஸ் 9 இயக்கத்தின் சோதனை பதிப்பு வெளியிடப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்

தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. 

இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. 

இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை போன்களில் கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து அறியாமல் இருப்பதுவும் தான். இங்கு அவற்றின் சில முக்கிய வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.

நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். 

இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவை இல்லை.

உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது. 

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன. 

உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா? அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம். 

முகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.


அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்

இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. 

இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.

பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும். 

இந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.


1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator): 

நீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை. 

ஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை. 

இதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/


2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்: 

இந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது. 

பைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. 

பிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம். 

மேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.maxthon.com/ 


3. ஆப்பரா பிரவுசர் (Opera): 

மேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. 

தேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது. 

இதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. 

பயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் இணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/ 


4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser): 

இணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. 

நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது.


5. டார் பிரவுசர் (Tor browser): 

மேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன. 

இதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர். 

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும். 

இருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மைக்ரோசாப்ட் கைவிடும் நோக்கியா மொபைல் போன்கள்

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் அதன் செயல்பாட்டில் பலத்த மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. 

ஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் மாடல் போன்களைத் தொடர்ந்து தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. 

தற்போது, நோக்கியா ஆஷா மற்றும் எஸ்40 மாடல் போன்களைத் தயாரிப்பதனையும் படிப்படியாகக் கைவிட முடிவு செய்துள்ளது. 

விண்டோஸ் இயக்க மொபைல் போன்களில் மட்டும் தன் முழுக் கவனத்தையும் மேற்கொள்ள இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக, இந்தப் பிரிவில் செயல்படும் நிபுணர்கள் கூறி உள்ளனர். 

சென்ற ஜூலை 17ல், 18 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இதில் 12,500 பேர், நோக்கியா நிறுவனத்தை வாங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தவர்களாவர். 

இவர்களில் பலர் தயாரிப்பு பிரிவில், குறிப்பாக நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களாவார்கள்.

இனி, ஆஷா, எஸ்40 அல்லது நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன்களுக்குப் புதியதாக எந்தவித சிறப்பு வசதிகளும் தரப்படப் போவதில்லை. வரும் 18 மாதங்களில், படிப்படியாக இந்த மாடல் போன்கள் அனைத்தும் கைவிடப்படும். 

மொபைல் போன் சந்தையிலும் தன் வலுவான தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் ஆஷா மற்றும் எஸ்40 போன்களைப் பயன்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

விண்டோஸ் இயக்கம் கொண்ட தொடக்க நிலை மற்றும் உயர்நிலை போன்களில் மட்டுமே இனி மைக்ரோசாப்ட் தன் கவனத்தைச் செலவிடும்.


ஓராண்டு இலவச இன்டர்நெட்

இந்தியாவில் குறைந்த விலையில், அரசுக்காக டேப்ளட் பி.சி.க்களை டேட்டாவிண்ட் (DataWind) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. 

இதன் டேப்ளட் பி.சி.க்கள் Ubislate என அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தற்போது வாங்குவோருகு ஓராண்டு இலவச இன்டர்நெட் இணைப்பினை இலவசமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்குகிறது. 

UbiSlate 7Cz and UbiSlate 3G7 ஆகிய டேப்ளட் பி.சி.க்களை வாங்குவோருக்கு மட்டும் இந்த சலுகை. 

இதுவரை வர்த்தக இணைய தளங்கள் வழியாகவும், டி.வி. ஹோம் ஷாப்பிங் மூலமாகவும் டேட்டாவிண்ட் நிறுவனத்தின் சாதனங்கள் கிடைத்து வந்தன. 

இனி, 500 யுனிவர்சல் மொபைல் போன் விற்பனை மையங்களிலும் இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.


வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்

உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. 

படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.

நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது. 

எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை. 

எனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.

இப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. 

இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. 

இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். 


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes