குரோம் பிரவுசர் ட்ரிக்ஸ்


சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. 

லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:

மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். 

இதன் செட்டிங்ஸ் மாற்ற ஆல்ட்+எப் அல்லது ஆல்ட் +இ (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம். 

Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.

Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.

Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது. 

Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது. தேடலுக்கான சொல்லை அமைத்து என்டர் தட்டினால் போதும். 

Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது. 

Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.

Ctrl+Sht+N இன் காக்னிடோ எனப்படும், செயல்பாடுகளைப் பின்தொடராத தனி நபர் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கிறது.

Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது. இப்படியே இறுதியாக மூடப்பட்ட பத்து டேப்களை, அவற்றில் இயங்கிய இணையதளங்களுடன் திறக்கலாம்.

இவை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இது போல இன்னும் நிறைய பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம். Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 


2. செயல் தளங்கள் செல்ல குறுக்கு வழி:

குரோம் பிரவுசர் அட்ரஸ் பார் வழியாகவே, சில செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய தளங்களை நமக்குக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம். chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும். 

இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும். ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும். இந்தச் சொற்களை புக்மார்க் ஆக சேவ் செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்து பெறலாம்.


3. புதிய டேப் தரும் வசதிகள்:

குரோம் பிரவுசரில், புதிய டேப் மற்ற பிரவுசர்கள் தராத சில வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய டேப் பக்கத்தினை Ctrl+T அழுத்தியோ அல்லது குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடனேயோ பெறலாம். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள், அப்போது மூடப்பட்ட தளங்கள், வெப் ஸ்டோர் என அனைத்தும் காட்டப்படுகின்றன. இவற்றில் தேவை யானதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம். 


4. பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர்:

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இருப்பதைப் போல, குரோம் பிரவுசர் தன் செயல் பாட்டினைக் கண்காணிக்க, தனியே ஒரு டாஸ்க் மானேஜரைக் கொண்டுள்ளது. இதனை, Shift+Esc கீகளை அழுத்திப் பெறலாம். 

இதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்படுகிறது, சி.பி.யு.நிலை, இணையத்திலிருந்து பெறப்பட்ட பைட்ஸ், அனுப்பப்பட்ட பைட்ஸ் அளவு, டேப்ஸ், அப்ளிகேஷன்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பிரவுசர் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகையில், சிக்கல் எங்கு என அறிந்து தீர்ப்பது எளிதாக இருக்கும். 


5. தடயம் அறியா இணைய உலா:

குரோம் பிரவுசர் இன் காக்னிடோ என்ற வகை பிரவுசிங் வசதியினைத் தருகிறது. இதனை இயக்கி, இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அவை குறித்த தகவல்களை குரோம் பிரவுசர் குறித்து வைக்காது. நாம் தேடும் தளங்களை, அதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். Ctrl+Shift+N அழுத்தி இந்த வகை பிரவுசிங் செயல் பாட்டினை மேற்கொள்ளலாம். 


6. ஆம்னிபாக்ஸ் தேடல்:

குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரை, தேடல் கட்டமாகப் பயன்படுத்தி, நாம் இணையத் தேடலை மேற்கொள்ளலாம். இதனால், தேடல் வேகம் அதிகரிக்கிறது. தேடும்போது இந்தக் கட்டத்தினை ஆம்னிபாக்ஸ் (Omnibox) என குரோம் அழைக்கிறது.


7. டேப்களை மாற்றி அமைக்க:

குரோம் பிரவுசரின் டேப்கள் நிலையானது அல்ல. நம் வசதிப்படி அவற்றின் இடத்தை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் சில தின இதழ்களின் டேப்களை அடுத்தடுத்து அமைத்துப் பார்க்க விரும்பினால், அவற்றை இழுத்து வரிசையாக அமைத்துக் கொள்ளலாம். டேப்கள் அதிகம் இடம் எடுத்துக் கொள்ளாத வகையில் அட்ரஸ் பாருக்குக் கீழாக பின் அப் செய்தும் வைக்கலாம்.


8. தானாகத் தளங்கள் திறக்கப்பட:

குறிப்பிட்ட இணைய தளங்களை, பிரவுசர் திறந்தவுடன் திறந்து பயன்படுத்துபவரா நீங்கள்? அவ்வாறெனில், பிரவுசர் திறக்கும் போதே, இவையும் திறக்கும் வகையில் செட் செய்திடலாம். இதற்கு, Alt +F/Alt+E அழுத்தி செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். இங்குள்ள On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து Set Pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் இங்கு அமைத்திடும் தளங்கள் அனைத்தும், பிரவுசர் திறக்கப்படுகையில் திறக்கப்படும். அதேபோல, எந்த இணையதளம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிரவுசர் மூடப்பட்டதோ, அதே இணையதளத்துடன் மீண்டும் பிரவுசரைத் திறக்கும் வகையிலும் செட் செய்திடலாம். செட்டிங்ஸ் பிரிவில், Continue Where I Left Off என்பதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்தால் போதும். 

9. பின் தொடராதே:

அண்மையில் வந்துள்ள குரோம் பிரவுசர் 23 பதிப்பில், நாம் காணும் இணைய தளம் குறித்த தகவல்களை பிரவுசர் தொடராமல் இருக்கும்படி செய்திட வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதி Do Not Track என, அல்லது சுருக்கமாக DNT என அழைக்கப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும், குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு நேரத்தை மிச்சப் படுத்துவதுடன், இணைய உலாவினை எளிதாகவும், மனம் விரும்பும் வகையிலும் அமைத்திடும்.


ஸ்மார்ட் போனை விண்ணில் ஏவிய இந்தியா

உலகிலேயே முதன் முறையாக, ஸ்மார்ட் போனை விண்ணுக்கு கொண்டு சென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா பி.எஸ்.எல்.வி. சி 20 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. 

இதில் இந்திய பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சரல் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிற்குச் சொந்தமான ஸ்டிரான்ட் 1 செயற்கைக்கோள் மூலம் ஸ்மார்ட் போன் ஒன்று விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

பல்வேறு ஆராய்ச்சி ஆப்ஸ்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் போன், விண்வெளியில் நிலவும் சூழ்நிலை குறித்த தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10


விண்டோஸ் 8 சிஸ்டம் வெளியானபோது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இணைந்து வெளியானது. விண்டோஸ் 8, பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அதிரடியாக மாற்றங்களை ஏற்படுத்தியது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில்இயங்கவில்லை. 

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த திட்டமிட்டு காய்களை நகர்த்தினாலும், பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்கள், தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே செயல்பட்டு வருவதால், மைக்ரோசாப்ட் தன் முடிவை மாற்றிக் கொண்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை அண்மையில், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய பதிப்பு முடிவானதாக இல்லாமல், சோதனை முறையில் விண்டோஸ் 7 பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை விண்டோஸ் எக்ஸ்பி,விஸ்டா ஆகியவற்றில் இயக்க முடியாது. 

விண்டோஸ் 7, 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 67 கோடி உரிமங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த அளவு விற்பனையை விண்டோஸ் 8 எட்டவேண்டுமானால், இன்னும் இரண்டு ஆண்டுகள் (2014) ஆகலாம். தற்போது விண்டோஸ் 8 பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களில் இந்த பிரவுசர் பதிக்கப்பட்டுத் தரப்படுகிறது. 

மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள், இதனைத் தனியே டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இந்த பிரவுசர் ஐ.இ. 10, இணைய தளங்களை அணுகுவதிலும், தரவிறக்கம் செய்வதையும் கூடுதல் வேகத்தில் மேற்கொள்ளும் என்றாலும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 ஐ, டேப்ளட் கம்ப்யூட்டர்கள் மற்றும் தொடுதிரை கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை இலக்காகக் கொண்டே வடிவமைத்தது. 

இணைய தள வடிவமைப்பாளர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை டவுண்லோட் செய்து, அதில் இயங்கும் விதம் குறித்து அறிந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரிவிப்பார்கள். 

அவற்றின் அடிப்படையில் பிரவுசரின் திறன் கூட்டப்படும். இந்த தகவல்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் திறனை அதிகப்படுத்தவும் உதவும் என மைக்ரோசாப்ட் பிரவுசர் பிரிவின் தலைவர் காவின் தெரிவித்துள்ளார்.


புளூடூத் பெயர் வரக் காரணம்

900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். 

தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். 

இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். 

இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். 

மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விநாடி வினா
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர் இன்றும் பெரும் பான்மையான இணைய வாடிக்கை யாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

வெகுகாலமாகப் புழக்கத்தில் இருந்த நெட்ஸ்கேப் பிரவுசரை ஒதுக்கிவிட்ட காலத்திலிருந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து பிரவுசர் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வந்துள்ளது. 

எளிதில் வைரஸ்கள் தாக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், புதிய பதிப்பிற்கு மாறியே ஆக வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டாலும், இன்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனாலேயே பலர் இதன் தொடர்ந்த அபிமானிகளாக இருந்து வருகின்றனர். இதோ இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் உள்ள அன்பான தொடர்பினைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு விநாடி வினா.


1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 1.0 எப்போது, எவ்வகையில் வெளியானது?

அ) விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தும் புரோகிராமாக.

ஆ) இரண்டு 3.5 அங்குல பிளாப்பிகளில் பதியப்பட்டு விற்பனை செய்யப்படும் புரோகிராமாக.

இ) விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் மைக்ரோசாப்ட் ப்ளஸ் ஜம்ப் ஸ்டார்ட் கிட் உடன் இணைந்து.

ஈ) மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இமெயில் புரோகிராமுடன் இணைந்து.


2. எப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், இலவசமாக, அதாவது விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைத்து தரப்பட்டது?

அ) ஐ.இ. 2 விண்95 உடன் இணைந்து

ஆ) ஐ.இ. 2 விண் 95 ஓ.எஸ்.ஆர். 1 உடன்

இ) ஐ.இ.3 விண் 95 ஓ.எஸ்.ஆர்.2 உடன்

ஈ) ஐ.இ.4 விண் 95 ஓ.எஸ்.ஆர்.4 உடன்


3. விண்டோஸ் 98 இரண்டாம் பதிப்புடன் தரப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் தரப்பட்டது?

அ) ஆப்பிள் மேக் இன் டோஷ்

ஆ) மேக் இன்டோஷ் மற்றும் சோலாரிஸ்

இ) மேக் இன்டோஷ், சோலாரிஸ் மற்றும் எச்.பி. யு.எக்ஸ்

ஈ) மேக் இன்டோஷ், சோலாரிஸ் மற்றும் எச்.பி. யு.எக்ஸ் மற்றும் பாம் ஓ.எஸ்.


4. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் எந்த 
பதிப்புகள் இயங்கும்?

அ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5,6,7,8 மற்றும் 9

ஆ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5,6,7மற்றும் 8

இ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6,7மற்றும் 8

ஈ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6,மற்றும் 7


5. விண்டோஸ் 7, இன்டர்நெட் எக்ஸ் புளோரரின் எந்த பதிப்பினை இணைந்து தருகிறது ?

அ) ஐ.இ. 8

ஆ) ஐ.இ. 9

இ) ஐ.இ. 10

ஈ) மேலே காட்டப்பட்டவற்றுள் எதுவும் இல்லை.


6. இன் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் வழங்கப்பட்டது. இதனை இயக்குகையில், கீழ்க்காணும் எந்த செயல் அமலாகும்?

அ) நீங்கள் காணும் இணைய தளங்களிலிருந்து, உங்கள் ஐ.பி. முகவரியை மறைக்கிறது.

ஆ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியைப் பதிவு செய்து கொள்வதனைத் தடுக்கிறது.

இ) குக்கீஸ் புரோகிராம்களைத் தடுக்கிறது

ஈ) மேலே சொல்லப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கிறது.


7. ஒரு நிலையில், விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, அதனை நீக்கும் வசதியும் தரப்பட்டது. அது எந்த பதிப்பு?

அ) விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.

ஆ) விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.

இ) விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8

ஈ) விண்டோஸ் 8


8. எத்தனை இணைய தளங்களை ஒரே நேரத்தில், மெட்ரோ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் திறக்கலாம்?

அ) 6

ஆ) 10

இ) 12

ஈ) கம்ப்யூட்டரின் மெமரியைப் பொறுத்தது.


9. மெட்ரோ இ.எ.10ல், பேவரிட் லிஸ்ட்டை எப்படிக் கொண்டு வருவீர்கள்?

அ) மேலிருந்து அல்லது கீழிருந்து ஸ்வைப் செய்து

ஆ) மேலிருந்து அல்லது கீழிருந்து ஸ்வைப் செய்து அல்லது இணைய தளத்தில் ரைட் கிளிக் செய்து

இ)ஸ்வைப் செய்து அல்லது ரைட் கிளிக் செய்து, பின்னர் அட்ரஸ் பாரில் டேப் அல்லது கிளிக் செய்து

ஈ) கீழிருந்து ஸ்வைப் செய்து, பின்னர் நிறுத்தி, அதன் பின் மீண்டும் கீழாக ஸ்வைப் செய்து.


10) மெட்ரோ இ.எ.10ல், ஓர் இணைய தளத்தினை எப்படி பேவரிட் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்?

அ) உங்களால் முடியாது.

ஆ)மேலிருந்து கீழாக ஸ்வைப் செய்து அல்லது இணைய தளத்தில் ரைட் கிளிக் செய்து, அதன் பின்னர் ரெஞ்ச் ஐகான் மீது கிளிக் செய்து, ஆட் டு பேவரிட்ஸ் தேர்ந்தெடுத்து. 

இ)சார்ம்ஸ் பார் கொண்டு வந்து, அதில் ஆட் டு பேவரிட்ஸ் மூலம்.

ஈ)கண்களை மூடி எது செய்தாலும், பேவரிட்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும்.
விடைகள்:
1. இ) 2. ஆ) 3. இ) 4. இ) 5. அ) 6. ஆ). 7. இ). 8. ஆ) 9. இ) 10. ஆ).


அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்


உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. 

அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். 

இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 

20.Amazon.com:

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

19. Sina.com.cn:

மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

18. WordPress.com:

17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன் 
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது. 

17. Apple.com:

ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம். 

16. Sohu.com :

சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 

15. Bing.com:

மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

14. Twitter.com:

ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம். 

13.Taobao.com:

20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது. 

12. Ask.com:

21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது. 

11. Blogger.com:

மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

10. MSN.com:

மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.

9. Baidu.com:

வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

8. Micorosoft.com:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

7. QQ,com:

சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. Live.com:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம். 

5. Wikipedia.org:

46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர். 

4. Yahoo.com:

இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம். 

3. Youtube.com:

பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம். 

2. Google.com:

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

1. Facebook.com:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.


2013ல் இந்திய இணையம்


இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. 

இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக் காணலாம்.

ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 57.5 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், 27.5 கோடி பேருடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், இந்தியாவில் இணையப் பயனாளர்கள் 12%. சீனாவில் இது 43% ஆகவும், அமெரிக்காவில் 80% ஆகவும் உள்ளது. குறைவாக உள்ளதாலேயே, இந்தியாவில் வரும் ஆண்டுகளில், மிக வேகமான அளவில் வளர்ச்சி வீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் விரிவடைந்து வருகின்றன. இணைய வழி வர்த்தகம், இணையத்தில் விளம்பரம், சமூக ஊடக வளர்ச்சி, தேடல், இணைய வெளி தகவல்கள், இணைய வழி வர்த்தக சேவை மற்றும் சார்ந்த நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் இந்த வளர்ச்சியைக் காணலாம். குறிப்பிட்டு சில தளங்களில் 2013 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட இருக்கிற வளர்ச்சி குறித்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

1. பயனாளர்கள் 15% கூடுதல்:

நடப்பு நிதியாண்டில், மேலும் 3 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார் கள். மொத்த இணையப் பயனாளர் எண்ணிக்கை 18 கோடியாக உயரும். அதாவது, இந்திய ஜனத்தொகையில் இது 20% ஆக இருக்கும்.

2. இணைய நேரம் அதிகரிக்கும்:

இணையத்தில், இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 13 மணி நேரம் செலவிடுகிறார். இது இனி 16 வாரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரம் பெரும்பாலும், இணைய வர்த்தகம், சமூக தளங்கள், போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு, இணையப் பயன்பாடுகள், வங்கி மற்றும் பிற நிதி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படும்.

3. மொபைல் இணையப் பயன்பாடு:

மொபைல் வழி இணையப் பயனாளர் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 10 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சமாக உள்ளது. உயர்வு 6% லிருந்து 10% வரை இருக்கலாம்.

4. பெண்கள் மற்றும் வீட்டில் அதிகப் பயன்பாடு:

இதுவரை இணையப் பயன்பாடு, ஆண்களே அதிகம் மேற்கொள்வதாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் அதிகம் பெண்களை இணையத்தில் எதிர்பார்க்கலாம். அதே போல கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் இணையம், இனி வீடுகளிலிருந்தும் அதிகம் பயன்படுத்தப்படும். இதற்குக் காரணம், குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த இணையம், இனி, பொதுமக்கள் சாதனமாக மாற இருக்கிறது. 

5. இணைய வழி வர்த்தக வருமானம் உயரும்:

இணைய வழியில் கிடைக்கும் வர்த்தக வருமானம் 2012 ஆம் ஆண்டில், 55 கோடி டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 90 கோடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

6. வளரும் நகரங்களில் இனி வளரும்:

தற்போது குறிப்பிட்ட சில பெரிய நகரங்களில் மட்டுமே அதிகம் காணப்படும் இணைய வர்த்தகம் (45% முதல் 65% வரை ), இனி வளரும் நகரங்களிலும் அதிகம் இருக்கும். இந்தியாவின் முதல் 40 நகரங்களை அடுத்து உள்ள நகரங்களே இவை.

7. இணைய விளம்பரம் அதிகரிக்கும்:

இந்திய இணையத்தில் வளர்ச்சி காண இருக்கும் துணைத் தொழில் பிரிவுகளில், இணைய விளம்பரம் முதல் இடம் பெறும். 2012ல், இந்த வகை வருமானம் 30 கோடி டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில், இது இரு மடங்காக உயர்ந்து 60 கோடி டாலராக வளரும்.

8. இணைய நிறுவனங்களுக்கு மூலதன நிதி:

புதிய பிரிவுகளில், பல இணைய சேவை நிறுவனங்கள் தோன்றி வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவற்றிற்கான மூலதன நிதி கிடைப்பது கடினமாகவே உள்ளது. இந்த ஆண்டில் இது சிறிது எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

இணையப் பயன்பாடும் வர்த்தகமும் அதிகரித்து வருவதால், இப்பிரிவில் ஈடுபட்டு வரும் இணைய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படலாம். 

அதே போல, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, புனே என்று சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் செயல்படாமல், அடுத்த நிலை நகரங்கலில் இவை தொடங்கப்பட்டு செயல்படலாம்.


குறைவான விலையில் விண்டோஸ் 8 PC


தொடுதிரை இயக்கம் தான், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரபலப்படுத்தி, புதுமையானதாகக் காட்டி வருகிறது. ஆனால், இதனாலேயே விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் களின் விலை, மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. 

இந்நிலையில், ஏசர் நிறுவனம் தன் ஆஸ்பயர் வி5 (Aspire V5), லேப்டாப் கம்ப்யூட்டரை ரூ. 34,550 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவில், விலை குறைந்த விண்டோஸ் 8 லேப்டாப் என்ற பெயரைப் பெற்றுள்ளது. 

இதுவரை அசூஸ் நிறுவன லேப்டாப் கம்ப்யூட்டர், ரூ.39,990 என்று விலையிட்டு குறைந்த விலை நோட்புக் என்ற பெயரினைப் பெற்று வந்தது. தற்போது இந்த இடத்தில், ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பயர் 5 இடம் பெற்றுள்ளது. 

இதன் திரை அகலம் 14 மற்றும் 15.6 அங்குலமாக உள்ளது. தொடக்க நிலை நோட்புக் கம்ப்யூட்டர்களில், பென்டியம் டூயல் கோர் ப்ராசசர்கள் அமைக்கப்படுகின்றன. 

இதனைத் தொடர்ந்து, இன்டெல் கோர் ஐ3 மற்றும் ஐ5 சிப்களுடனும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியா கின்றன.இதன் தடிமன் 20மிமீ. எடை 2 கிலோ. இவை வழக்கமான லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் 10% குறைவாக தடிமன் மற்றும் எடை கொண்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் சிறப்பு இவை கொண்டுள்ள தொடுதிரை இயக்கம் கொள்ளும் ஸ்கிரீனில் உள்ளது. 

டச் ஸ்கிரீன் இயக்கம் என்பதாலேயே, விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து தள்ளிப் போனவர்கள், குறைந்த விலையில் இது கிடைப்பதனால், இந்த தொழில் நுட்பத்திற்கு மாறிக் கொள்வார்கள், என்று ஏசர் நிறுவன தலைமை விற்பனை அதிகாரி ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 

ஏசர் நிறுவன விண்டோஸ் 8 இயக்க லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ. 34,550 லிருந்து ரூ. 47,500 வரை விலையிடப்பட்டு மார்க்கட்டில் கிடைக்கின்றன.


உயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்


ஸ்மார்ட் போன்களில், அதிக எண்ணிக்கை யில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் உயர்ந்துள்ளது. விண்டோஸ் தன் நிலையில் இருந்து சரிந்துள்ளது. 

ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட காம் டாட் ஸ்கோர் நிறுவனம் இதனைக் கண்டறிந் துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன. 

இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம், 36.3% கொண்டுள்ளது. பிளாக் பெரி மூன்றாவது இடத்தையும், விண்டோஸ் போன் நான்காவது இடத்தையும் கொண்டுள்ளன. 

விண்டோஸ், முன்பு இருந்த பங்கில், 0.7 % குறைந்து, 2.9 % மட்டுமே கொண்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது? விண்டோஸ் போன் 8, சர்பேஸ் சாதனங்கள் என மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த போது, விண்டோஸ் போன் சிஸ்டம், ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் இடம் பிடிக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில் நோக்கியாவின் லூமியா வரிசை போன்கள் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் வெளிவந்தன. ஆனால் அது நடக்கவில்லை. 

இந்த மந்த நிலைக்குக் காரணம் கூகுள் தான். விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்களைத் தயாரித்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்து, விண்டோஸ் போன் 8 பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை எனவும் அறிவித்தது. 

இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் போன் 8 சிஸ்டம், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங் களைக் காட்டிலும் திறன் கொண்டது என மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை, செல்லவில்லை. 

எனவே ஆண்ட்ராய்ட் போன் சிஸ்டத்திற்கான போட்டியில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்.6 ஆகியவையே முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கின்றன.


உங்களுக்கு எத்தனை வீடியோ வெப்சைட்கள் தெரியும்?

வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.

நாங்கள் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளோம். 

இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.

நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.

1. YouTube
 Alexa Rank -3.

================

2.Netflix
Alexa Rank -100

=================

3.Hulu

Alexa Rank -171

==========

4.DailyMotion
Alexa Rank - 101

===============

5.MetaCafe
6.Myspace Video
7.Yahoo Screen
8.Vimeo
9.Break
10.Tv.com


மொபைல் போன் டிப்ஸ்


மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. 

இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. 

* ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 

* உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.

*திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. 

எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். 

* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். 

சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.


டேப்ளட் விற்பனையில் யார் முதல் இடம்?


சந்தேகம் இல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் தான், உலக அளவில், விற்பனையில் முதலிடம் கொண்டுள்ளது. 

சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2 கோடியே 29 லட்சம் ஐபேட் சாதனங்களை விற்பனை செய்துள்ளது ஆப்பிள். இதன் ஐபேட் மினி சாதனத்திற்குக் கிடைத்த வரவேற்பு இதில் தெரிந்தது. 

2011 ஆம் ஆண்டு இதே கால் ஆண்டில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 48.1% கூடுதலாக ஆப்பிள் விற்பனை செய்துள்ளது. 

மொத்த டேப்ளட் விற்பனையில், ஆப்பிள் டேப்ளட் விற்பனை, டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 43.6% ஆக இருந்தது. ஆனால், இதே காலத்தில் சென்ற ஆண்டில் 46.4% ஆகவும், 2010ல் 51.7% ஆகவும் இருந்தது.

இது, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் கொண்ட டேப்ளட் விற்பனை ஊடுறுவலையே காட்டுகிறது. இதே காலத்தில், சாம்சங் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் கொண்ட 80 லட்சம் டேப்ளட்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தினைப் பிடித்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 263% கூடுதலாகும். டேப்ளட் விற்பனைச் சந்தையில், சாம்சங் நிறுவனத்தின் பங்கு 7.3% லிருந்து, 15.1% ஆக உயர்ந்தது.

இந்த இரண்டு நிறுவனங்களை அடுத்து, அமேஸான் மற்றும் அசூஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த சந்தையில், சென்ற அக்டோபரில், மைக்ரோசாப்ட், தன்னுடைய சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட்டுடன் நுழைந்தது. 

விற்பனை செய்த டேப்ளட்களின் எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் கீழாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளட் விலை சற்று அதிகமாகவே இருப்பதால், சந்தையில் அதிக அளவு விற்பனையை எட்ட முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மைக்ரோமேக்ஸ் ஏ65 ஸ்மார்ட்டி 4.3

இன்னும் ஒரு மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு விற்பனைக்கான இணைய தளங்களில் கிடைக்கிறது. 

இது 4.3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரை கொண்ட ஸ்மார்ட் போன். இதன் SC6820 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3. 

இதன் பின்புறம் 2 எம்.பி. கேமரா, முன்புறம் விஜிஏ கேமரா என இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டுள்ளது. 

ஆனால், இதில் 3ஜி சப்போர்ட் இல்லை. இரண்டு சிம் பயன்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், வை–பி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 512 எம்பி ராம், 190 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி உள்ளன. 

இதன் பேட்டரி 1,350 mAh திறன் கொண்டது. இதன் விலை ரூ. 4,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 5


வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய ஐபோன் சில வாரங்களுக்கு முன் வெளியானது. முற்றிலுமாக அதிக மாற்றங்கள் எதுவுமின்றி, ஒரு சில நகாசு வேலைகளுடனும் வசதி களுடன் இந்த ஐபோன் 5 வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.59.500 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வந்த ஐபோன்களைக் காட்டிலும் இதன் தடிமன் மேலும் குறைவாக (7.6 மிமீ) உள்ளது. எடை 112 கிராம். இதன் டிஸ்பிளே திரையும் சற்றே கூடுதலாக 4 அங்குல அகலத்தில் உள்ளது. 

ரெடினா டிஸ்பிளே 640 x 1136 பிக்ஸெல்களுடன் உள்ளது. oleophobic என்று அழைக்கப்படுகின்ற பூச்சு உள்ளதால், கைரேகைகள் இதில் படியாது. மொத்தத்தில், இது ஐபோன் 4 மற்றும் 4 எஸ் போலத்தான் தோற்றமளிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற் குரிய தோற்றம் மற்றும் வடிவமைப்பு சற்றும் மாறாமல் உள்ளது.

இதிலும் நானோ சிம் எனப்படும் மினி சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே தங்களிடம் உள்ள வழக்கமான சிம்மினை, கூடுமானவரை அதனை வழங்கிய நிறுவனத் திடம் கொடுத்து, சிறிய சிம்மாக மாற்றிப் பெறுவது நல்லது. 

ரூ.50 முதல் ரூ.100 வரை பெற்றுக் கொண்டு இதனை மாற்றித் தருகிறார்கள். ஐபோன் 5ல், ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ.ஓ.எஸ். 6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. 

இதில் தரப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ6 (A6) சிப், டூயல் கோர் வகையைச் சார்ந்தது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஐபோன் 4 எஸ் வகை சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதனால், ஐபோன் 5 முந்தைய போன்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் இயங்கினாலும், இதனைப் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலரே இதனை உணர முடிகிறது.

இதன் சிறப்பம்சங்கள்: 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளில் இயங்கும். இதன் பரிமாணம் 123.8 x 58.6 x 7.6 மிமீ. எல்.இ.டி. பேக் லைட் எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், மல்ட்டி டச், கார்னிங் கொரில்லா கிளாஸ், லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 16/32/64 ஜிபி கொள்ளளவு, 1 ஜிபி ராம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்பம், வைபி ஹாட் ஸ்பாட், A2DP இணைந்த புளுடூத், யு.எஸ்.பி., 8 எம்.பி திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட பின்புற கேமரா, எச்.டி. வீடியோ மற்றும் இமேஜ் ரெகார்டிங், டச் போகஸ், ஜியோ டேக்கிங், முகம் அறிந்து படம் எடுக்கும் வசதி, 1.2 எம்பி திறனுடன் கூடிய முன்புற கேமரா, ஐ.ஓ.எஸ்.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆப்பிள் ஏ 6 சிப்செட், டூயல் கோர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் சிரி வாய்ஸ் கட்டளை ஆகிய தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.

கூடுதல் இயக்க வசதிகள்: ஐக்ளவுட் சேவை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஒருங்கிணைப்பு, டி.வி. அவுட்புட் இணைப்பு, மேப்ஸ், ஐ புக் பி.டி.எப். ரீடர், ஆடியோ வீடியோ பிளேயர் மற்றும் எடிட்டர், ஆர்கனைசர், டாகுமெண்ட் வியூவர், இமேஜ் வியூவர் மற்றும் எடிட்டர், வாய்ஸ் மெமோ, டயல் கட்டளை ஆகியவற்றைக் கூடுதல் வசதிகளாக கூறலாம். எடுக்க இயலாத 1440 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 8 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. 40 மணி நேரம் இசையினைத் தொடர்ந்து கேட்க இயலும். இதன் கதிர்வீச்சு 0.95 W/kg என்ற அளவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அறிவிக்கப்பட்ட சில்லரை விலை 64 ஜிபி ரூ. 59,500, 32 ஜிபி ரூ. 52,500, 16 ஜிபி ரூ. 45,500. இந்த விலை டீலர்களுக்குள் மாறுபடலாம். உடன் தரப்படும் இலவச உபரி சாதனங்களும் வேறுபடலாம்.


மொபைல் போன் பேட்டரி பராமரிப்பும் பாதுகாக்கும் வழிகளும்


மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.

* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.

* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.

* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

* ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும்.

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும். 

* தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

* சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு கூடுகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.

* எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது. 

* பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.


அதிகரிக்கும் மொபைல் போன் வைரஸ்


மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது. 

இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன. 

எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. 

தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. 

மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2013ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும். 

எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது. 

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது. 

புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார். 

ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes