விண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். 

இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். 

இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: 

தேடல்:

Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. 
Win + . (முற்றுப் புள்ளி): அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.


சார்ம்ஸ் மெனு:

Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.


ஸ்விட்ச் மெனு:

Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.


பேனல்கள்:

Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H - ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.


அப்ளிகேஷன் பார்:

Win + Z - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.


ஸ்கிரீன் ஷாட்:

Win + Print Scrn - & இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்ட ரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.

இன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.


விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் இல்லை

மொஸில்லா நிறுவனம் விண்டோஸ் 8ல் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கும் திட்டத்தினைக் கை விட்டது. 

தொடு உணர் திரை மற்றும் மவுஸ் இயக்கங்களில் இயங்கக் கூடிய இரு வகை செயல்பாட்டினை ஒருங்கே கொண்ட பிரவுசரினைத் தயாரிக்கும் இலக்குடன், இத்திட்டத்தினைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளாக மொஸில்லா உழைத்தது. 

ஆனால், முயற்சியில் வெற்றி அடைய முடியாமல், அதனை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பயர்பாக்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஜொனாதன் நைட்டிங்கேல் குறிப்பிடுகையில் ""எங்களுடைய பொறியாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். 

ஆனால், வடிவமைப்பு தொடர்ந்து கவனம் தேவைப்படுவதாகவும், விரிவாக்கம் தேவைப்படுவதாகவும் இருந்ததால், அதனைக் கைவிட வேண்டியதாயிற்று'' என்றார்.

2012ன் பிற்பகுதியில், மொஸில்லா, விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் திட்டத்தினைத் தொடங்கிய போது, பிரவுசர் உலகில் இது ஒரு பெரிய போட்டிக்கான தளமாக அமைவதாக இருந்தது. இதில் செயல்படுகையில் தான், விண்டோஸ் என்பது மிகப் பெரிய இயக்க முறைமையினைக் கொண்டதாக உணர முடிந்தது. 

மைக்ரோசாப்ட் எந்த அளவிற்கு இதில் கடுமையாக உழைத்துள்ளது என்பதனையும் அறிய முடிந்தது. தொடக்கத்தில், இதில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என உணர்ந்தோம். பின்னர், மெட்ரோவின் கட்டமைப்பினை அறிந்து அதற்குள் சென்ற போது, பணியாற்றி வெற்றி காணலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

பின்னர், அதன் சோதனைத் தொகுப்பினை வழங்கியபோது, அந்த தொகுப்பினை ஆயிரம் வாடிக்கையாளர்கள் கூடப் பயன்படுத்தவில்லை என உணர்ந்தோம். 

இதற்கு முன்னர் மொஸில்லா எப்போது பயர்பாக்ஸ் பிரவுசரின் சோதனைப் பதிப்புகளை வெளியிட்ட போதும், ஏறத்தாழ பத்து லட்சம் பேர் அவற்றைப் பயன்படுத்தி, பயனுள்ள பின்னூட்டங்களைத் தந்து வந்தனர். 

எனவே, குறைவான பின்னூட்டங்கள் அடிப்படையில், முழுமையான இயக்கத்தினைத் தரும் பிரவுசரினைத் தரக் கூடாது என்ற முடிவில் இதனை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தி பயர்பாக்ஸ் பிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. தொடு உணர் திரையில் இயங்கும் பிரவுசர் எனில், இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 மட்டுமே செயல்பாட்டிற்குக் கிடைக்கும் என்றாகிவிட்டது.


நோக்கியாவின் எக்ஸ் வரிசை போன்கள்

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. 

இந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது. 

எனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம். 

ஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.

நோக்கியா எக்ஸ் ப்ளஸ்: 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 3 எம்.பி. கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.

நோக்கியா எக்ஸ்.எல்: 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 5 எம்.பி. கேமரா, 2 எம்.பி. வெப் கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி


இந்தியாவிற்கான கூகுள் திட்டங்கள்

இணையத்தோடு எங்கும் நிறைந்த ஒன்றாக, கூகுள் செயல்பட்டு வருகிறது. ""இதன் முழுப் பயனை இந்திய மக்கள் அனுபவித்துப் பயன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என தங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

அதிக எண்ணிக்கையில், தொடர்பில் உள்ள மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை இந்தியா கொண்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் போன் முதல் இணையதளங்கள் வரை எங்கும் தன் செயல்பாட்டினை விரித்துக் கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் வெளியில், கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மையில் இவர் உரையாற்றினார்.


1. இணைய இணைப்பில் இன்னும் பலர்: 

மொபைல் போன் வழி இணைய இணைப்பினை மேற்கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெனப் பயன்படும் ஸ்மார்ட் போன்கள் இந்த ஆண்டில் 7 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அடுத்தபடியாக, டேப்ளட் பி.சி.க்களின் பயன்பாட்டினை மக்களிடம் அதிகரிக்கச் செய்திட வேண்டும். 2014ல் இது ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ரூ.10,000 க்கும் குறைவான விலையில் டேப்ளட் பி.சி.க்கள் கிடைக்கும். அதே போல ஸ்மார்ட் போன்களும், அனைவரும் வாங்கும் விலையில் விற்பனைக்கு வரும்.

அடுத்ததாக, இந்தியர்களின் சராசரி வருமானத்தினைக் கணக்கிடுகையில், பிராட்பேண்ட் இணைப்பு, அதிக செலவிடும் இனமாகவே உள்ளது. இதனைக் குறைத்திட கூகுள் நடவடிக்கை எடுக்க உள்ளது. கூடுதலான மக்களை இணைய இணைப்பில், குறிப்பாக, பெண்களைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பெண்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்காக இந்த ஆண்டு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


2. இணையத்தில் இந்தியப் பதிவுகள் தேவை: 

வளமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியையும், கலை மற்றும் பண்பாட்டு வளத்தினையும், சரித்திரத்தினையும் கொண்டது இந்தியா. ஆனால், அவை குறித்த இணையப் பதிவுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. 

இதற்கு உதவிட கூகுள் Google Art Project என்ற திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. ASI என்னும் அமைப்புடன் சேர்ந்து, தாஜ்மஹால் போன்ற, இந்திய நினைவுச் சின்னங்களை டிஜிட்டல் உலகில் உருவாக்கும் திட்டமும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது கல்வி கற்கும் சிறுவர்களிடம் அவர்களின் கற்றலில் உறுதுணையாக இருக்கும்.

கூகுள், தற்போது இந்திய மொழிகளுக்கான கீ போர்ட் அமைப்பினை எளிதாக்குவதில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.இந்திய மொழிகளுக்கான உச்சரிப்பினைப் புரிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றும் சாதனங்களையும் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாநில மொழிகளில் எழுத்து வகைகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதுவரை பொழுதுபோக்கு தொடர்பான பதிவுகளே, இந்திய இணையத்தில் அதிகம் இருந்த நிலை மாறி வருகிறது. பயனுள்ள தகவல்கள் பதிவது அதிகரித்து வருகிறது. 


3. இணையத்தில் இந்திய வர்த்தக நிறுவனங்கள்: 

இந்தியாவில், இணையத்தில் பதிவு செய்யும் தகுதி கொண்ட பல கோடி வர்த்தக நிறுவனங்கள் இயங்கிய போதும், ஏறத்தாழ ஒரு லட்சம் நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கென ஓர் இணையதளத்தினை அமைத்துள்ளன. கூகுள் இதற்கென ஒரு திட்டத்தினைக் கொண்டுவந்தது. 

தொடக்கத்தில் இலவசமாகவும், பின்னர் கட்டணம் செலுத்தியும் வர்த்தக நிறுவனங்கள் தங்களை இணைய தளத்தில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.இதன் வழியாகத் தற்போது மேலும் 3 லட்சம் வர்த்தக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.


4. மேலே தரப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளும், இந்தியாவை முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற கூகுள் கொண்டுள்ளவையாக உள்ளன. ஒரு கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையை, பத்து கோடியாக உயர்த்த, முன்பு பத்து ஆண்டுகள் ஆயின. 

மூன்று ஆண்டுகளில் இது 20 கோடி ஆயிற்றும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதனை 30 கோடியாக உயர்த்த கூகுள் உறுதி கொண்டுள்ளது. இது 50 அல்லது 60 கோடியாக உயரும்போது தான், இந்தியா இணையம் வழியாக முழுப் பயனையும் பெறும். 

இந்த முயற்சிகளில் ஒன்று பெண்களைத் தனிக் கவனத்துடன் இணையத்தில் கொண்டுவருவதாகும். இது இந்தியாவில் தான் முதன் முதலில் செயல்படுத்தப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்

சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். 

இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.

முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். 

ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது. 

அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது.

இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது.

1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது. 

ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும்.

1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது.

பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. 

ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.

இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 

இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர். 

இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது. 

இன்று இணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்.


அபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் பல ஆண்டுகள் முடிவெடுத்து, தற்போது அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது.

பல கணக்கெடுக்கின்படி, ஏறத்தாழ 48.8 கோடி கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பியில் இயங்குவதாக தெரிகிறது. மிகச் சரியாக எத்தனை கம்ப்யூட்டர்கள் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமே சொல்ல முடியும். 

இது ஒரு பெரிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், அனைத்து நாடுகளிலும் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில், இவை ஏறத்தாழ 30 சதவீதம் மட்டுமே என Net Applications என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

அப்படியானால், இவ்வளவு எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களையா, வைரஸ்களை பரப்பும் ஹேக்கர்களின் பசிக்கு இரையாக்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது என்று பலரும் எண்ணத் தொடங்கி உள்ளனர்.

இவற்றில் 70 சதவீத கம்ப்யூட்டர்கள் சீனாவில் உள்ளன. இந்த நாட்டில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்திப் பெறாமல், நகலெடுத்துப் பதிந்து இயக்குபவர்களே அதிகம். இவர்கள் ஏற்கனவே மைக்ரோசாப்ட் வழங்கிய பாதுகாப்பு பைல்களுக்கு அப்டேட் செய்திடாமலேயே இன்னும் எக்ஸ்பியை அதன் பழைய வடிவத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர். 

சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், மைக்ரோசாப்ட் மட்டுமே அதிக காலம் தன் அப்ளிகேஷன்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இயங்கி வருகிறது. எனவே, மைக்ரோசாப்ட் இத்தகைய எச்சரிக்கை வழங்குகையில், அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு இயங்குவது நம் கடமையாகிறது.

இருப்பினும் பலர் என்ன தான் நடக்கும், பார்ப்போமே? என்ற எண்ணத்தில் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து வருகின்றனர். அப்படி முடிவெடுத்து தொடர்ந்து இயக்கப் போகிறவர்கள் என்ன செய்திட வேண்டும்? 

இவர்கள் இன்னும் காத்திருக்காமல், கூடிய விரைவில் எக்ஸ்பியை நிறுத்தி, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற வேண்டும். மாறும் வரை பல பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ள வேண்டும். 

இவர்களுக்காகவே எப்-செக்யூர் என்னும் நிறுவனம் சில பயனுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பெற http://www.fsecure.com/static/doc/labs_global/Research/Threat_Report_H2_2013.pdf என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைக் காணவும். அவற்றைச் சுருக்கமாக இங்கு காணலாம்.


1. அடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் மைக்ரோசாப்ட் வெளியிட இருக்கும் அப்டேட் உட்பட அனைத்து அப்டேட்களையும் மேற்கொண்டு, எக்ஸ்பி சிஸ்டத்தினை அதன் இறுதி நாள் அன்று அப்டேட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை, மாறா நிலையில் உங்கள் பிரவுசராக வைத்திருந்தால், உடனடியாக அதனை நீக்கி, அதற்குப் பதிலாக, கூகுள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரை அமைத்து இயக்கவும்.

3. மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003க்கும் சப்போர்ட் பைல்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அதனையோ, அல்லது அதற்குப் பின்னர் வந்த ஆபீஸ் தொகுப்பினையோ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனடியாக அவற்றையும் அப்டேட் செய்திடவும். 

4. பயன்படுத்தாத எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அழித்துவிடவும். குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியுடன் இணைந்து கொடுக்கப்பட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் நீக்கிவிடவும்.

5. ஜாவா உங்களுக்குக் கட்டாயம் தேவை என்றால் மட்டுமே, கம்ப்யூட்டரில் வைத்திருக்கவும். இல்லை எனில், உடனே நீக்கிவிடவும்.

6. ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் இணைந்த அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். இவை இரண்டும் தேவை.

7. முடிந்தால், இணைய இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை நீக்கிவிடவும். பயன்படுத்துவதாக இருந்தால், நல்ல பயர்வால் ஒன்றை அமைக்கவும்.

8. பாதுகாப்பு எதற்கு தேவை? என அலட்சியமாக இருக்க வேண்டாம். வைரஸ் பாதித்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.

9. எப்போதும் உங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களுக்கு பேக் அப் தினந்தோறும் எடுத்து வைக்கவும்.

10. எக்ஸ்பியை விடுத்து, அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்வதான திட்டத்தினை வரையறை செய்து, தயாராக வைக்கவும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மைக்ரோசாப்ட் http://www.microsoft.com/windows/enus/xp/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் தந்துள்ள வழிமுறைகளைப் படித்து அதன்படி செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.


கூகுள் தளத்தில் துல்லியமான தேடல்கள்

இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. 

இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். 

ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும். 

எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது. 

1. + கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும். 

2. @ சமூக நிலை குறித்த டேக் (Social tags) ஆகப் பொருள் உண்டு. 

3. & சார்ந்த கருத்துக்களை கூகுள் தேடும் 

4. % சதவீத அளவில் மதிப்பினைத் தர கூகுள் முயற்சிக்கும். 

5. $ இது விலையைக் குறிக்கும். 

6. # இதுவும் சார்ந்த தலைப்புகளில் தகவலைத் தேடித் தரும். 

இன்னும் சில தேடல் குறிப்புகளைத் தருகிறேன்.

நீங்கள் தேடும் தகவல்கள், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டுமே எடுத்துத் தரப்பட வேண்டும் எனக் கருதினால், அதனை வரையறை செய்து கூகுள் தேடல் கட்டத்தில் அமைக்கலாம். 

இதற்கு தேடல் சொற்களுடன் ”site:” என்ற சொல்லை (மேற்கோள் குறிகள் இல்லாமல்) அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அன்னை தெரசா குறித்து, விக்கிபீடியா தளத்தில் உள்ள தகவல்கள் மட்டும் வேண்டும் என்றால், mother teresa site:wikipedia.com எனக் கொடுக்க வேண்டும். 

கோலன் குறியீட்டினை அடுத்து ஸ்பேஸ் விடக் கூடாது. இதற்கு மாறாக, குறிப்பிட்ட ஒரு தளம் தவிர மற்ற தளங்களிலிருந்து தகவல் வேண்டுமாயின் mother teresa site:wikipedia.com எனத் தர வேண்டும். இப்போது விக்கி பீடியா இல்லாமல், மற்ற அனைத்து தளங்களிலிருந்தும் தகவல்கள் தரப்படும்.

ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் தந்த சில தகவல்களையும் தருகிறேன். கூகுள் தேடல் தளத்தினை கால்குலேட்டராகவும், அளவின் அலகுகளை மாற்றும் ஒரு சாதனமாகவும் மற்றும் ஒரு அகராதியாகவும் பயன்படுத் தலாம். 

எந்தக் கணக்கினையும், அது அறிவியல் அடிப்படையிலான சயிண்டிபிக் கால்கு லேஷனாக (equation) இருந்தாலும் இதில் அமைத்து விடை பெறலாம். சாதாரண கூட்டல், கழித்தல் கணக்குகளையும் மேற்கொள்ளலாம். அதே போல அலகு அளவினை (length, speed, and mass) வேறு ஒரு வகைக்கு மாற்றி தருவதற்கும் இதனைப் பயன் படுத்தலாம்.

மேலே தரப்பட்டுள்ள வழிகளால், நம் தேடல்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அமைத்து, நேரம் வீணாகமல் துல்லியமான முடிவுகளைப் பெற கூகுள் தளத்தினை நாம் பயன்படுத்த முடிகிறது.

அதே போல தகவல்களை நாம் பெறுகையில், எப்போதும் முதல் சில தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே காண்பதனை நாம் பழக்கத்தில் கொண்டுள்ளோம். அவ்வாறின்றி, சில பக்கங்கள் தாண்டிச் சென்று, அதில் காட்டப்பட்டுள்ள தளங்கள் குறித்தும் அறிந்து, தேடிப்பெறலாம்.


மூடப்பட்ட பேஸ்புக் இமெயில்

பெரும்பாலான பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் ஒரு மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது என்பதே தெரியாது. அண்மைக் காலம் வரை அது இயங்கி வந்தது. 

ஆனால், தற்போது அது மூடப்பட்டுவிட்டது. காரணம்? யாரும் அதனைப் பயன்படுத்தாததே அதற்குக் காரணம். 

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பேஸ்புக் மின்னஞ்சல் சேவை குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போதிருந்த நிலையில் யாரும் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. 

இப்போதுதான் அது மூடப்படுகிறது என்ற செய்தி நம் பேஸ்புக் தளத்தில் கிடைக்கும்போதுதான், அப்படி ஒன்று இருந்ததா எனப் பலரும் கேட்கத் தொடங்கினார்கள்.

இந்த மின் அஞ்சல் தளத்தில் மெசேஜ், சேட் மற்றும் மின் அஞ்சல் என அனைத்தும் இணைந்தே இருந்தன. இதிலிருந்து பேஸ்புக் பயன்படுத்தாதவர்களுக்கும் மெயில் அனுப்பும் வசதி இருந்தது. 

இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்களின் பதிவுசெய்யப்பட்ட பெயருடன் username@facebook.com என மின்னஞ்சல் முகவரி தரப்பட்டது. 

இதன் வழி அனுப்பப்படும் மின் அஞ்சல்கள், பெறுபவரின் இன் பாக்ஸில் இப்படித்தான் காட்டப்பட்டு வந்தது. 

இது அவ்வளவாகப் பயன்படுத்தப் படாததால், தற்போது முடிக்கப்பட்டுவிட்டது.


மேக் கம்ப்யூட்டரில் இல்லை என்பதால் விண்டோஸ் வாங்கு

மைக்ரோசாப்ட் அண்மைக் காலமாக, புதுவித விளம்பரம் ஒன்றை வழங்கி வருகிறது. 

விளம்பரம் என அழைக்கும் இதில், தன்னுடைய விண்டோஸ் 8க்கான பிரச்சாரத்தை தருகிறது. இதில் வரும் ஒருவர், ""நான் மேக் கம்ப்யூட்டர்தான் வாங்கப் போனேன். 

ஆனால், அதில் இன்னும் டச் ஸ்கிரீன் இல்லாததால், விண்டோஸ் வாங்கினேன்'' என்று கூறுவதாக உள்ளது. 

இது விளம்பரம் என்றாலும் உண்மையும் கூட. இன்னும் எந்த மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர் சாதனத்திலும் (iMac and the Mac Book) டச் ஸ்கிரீன் இல்லை. 

ஆனால், அதே நேரத்தில், விண்டோஸ் இயங்கும் பெரும்பான்மையான சாதனங்களில், டச் ஸ்கிரீன் உள்ளது. 

ஆப்பிள் நிறுவனமும், இதுவரை, தன் சாதனங்களில் டச் ஸ்கிரீன் அறிமுகமாவதைப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

ஆனால், லேப்டாப் பயன்படுத்துபவர்கள், முதலில் அதன் செயல்திறன், அடுத்து அதன் பேட்டரி ஆகியவற்றிற்குப் பின்னரே, டச் ஸ்கிரீன் குறித்துப் பேசுகின்றனர். 

இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. இருப்பினும் மைக்ரோசாப்ட் ஏன் இது போல விளம்பரம் தருகிறது? என நீங்கள் எண்ணலாம். 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கமே இதுதான். மிகச் சிறிய அம்சம் ஒன்றை எடுத்து, அதனைப் பூதாகரமாகப் பெரிதாக்கிக் காட்டுவதே இதன் வழக்கம். அந்த வகையில் இந்த விளம்பரம் வந்துள்ளது.


விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி

இந்தியாவில் நிறுவனங்கள், குறிப்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். 

மைக்ரோசாப்ட், எக்ஸ்பிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவினை வரும் ஏப்ரல் 8 அன்று முடிவிற்குக் கொண்டு வருகிறது. 

இதன் பின்னரும், இந்நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்த முடிவு செய்தால், அதற்காக ஆண்டுக்கு ரூ.1,190 கோடி செலவு செய்திட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

இந்தியாவில், பெரிய நிறுவனங்களில், ஏறத்தாழ 40 லட்சம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பி சிஸ்டத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றில் 84 சதவீத கம்ப்யூட்டர்கள், எக்ஸ்பியிலிருந்து வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிவிட்டன. 

மற்றவர்களில் பெரும்பாலானவை பொதுத் துறை நிறுவனங்களாக உள்ளன. 

மேலும் 6 சதவீத நிறுவனங்கள் எக்ஸ்பியிலிருந்து வரும் நாட்களில் மாறிக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன உயர் அதிகாரி கோயல் தெரிவித்துள்ளார்.


சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ

சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது. 

இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901.

5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும். 

இதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும். 0.3 எம்பி முன்புறக் கேமரா ஒன்றும் உள்ளது. 

இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 

இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ மற்றும் பாப் அப் பிளே வசதியும் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. 

இதன் ஸ்டோரேஜ் 8 ஜிபி / 16ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதில் 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறதுகிடைக்கிறது


யாஹூ எச்சரிக்கை

யாஹூ தளத்தில் மின் அஞ்சல் வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, யாஹூ நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

சில வாரங்களுக்கு முன்னால், யாஹூ தளத்தை ஊடுறுவும் முயற்சிகள், சில ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததால், தொடர்ந்து அவர்கள் முயற்சிப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு, யாஹூ கேட்டுக் கொண்டுள்ளது.


சாம்சங் காலக்ஸி எஸ் 4 விலை குறைப்பு

இந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. 

காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம். 

சாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. 

இப்போது ஏற்பட்டுள்ள விலைகுறைப்பினைப் பார்த்தால், காலக்ஸி எஸ்5, காலக்ஸி எஸ் 4 அறிமுக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

காலக்ஸி எஸ் 4 மொபைலில், 5 அங்குல திரை Super AMOLED டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்டில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன கிடைக்கின்றன. 

மேலும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. 

முன் பக்கமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளது. 

இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதில் உள்ள பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.


பிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்

க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. 

அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.


நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது. 

ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது. 

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம். 

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும். 

இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு. 

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.


தடுமாறிய ஜிமெயில்

சென்ற பிப்ரவரி 25 அன்று, ஜிமெயில் தளத்தில் அஞ்சல்கள் செல்வது அதிக தாமதத்துடன் நடந்தது. 

ஏறத்தாழ 5 மணி நேரம் கழித்தே, அனுப்பப்பட்ட அஞ்சல்கள் சென்றன. பிரச்னை ஏற்பட்டதற்கு, இதன் கட்டமைப்பில் ஏற்பட்ட சிறிய பிழையே என கூகுள் அறிவித்தது. 

அது சரி செய்யப்பட்டதாகவும், எஞ்சியிருக்கின்ற அஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால், கூகுள் டாக்ஸ் பிரிவிலும் செயலற்ற தன்மை காணப்பட்டது. 

ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் மற்றும் என்னவிதமான பிரச்னை ஏற்பட்டது எனத் தெளிவாகத் தெரிவிக்க கூகுள் மறுத்துவிட்டது.


அவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்

நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை. 
ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். 

இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும். 

எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும். 

இன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. 

எனவே, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தக் கூடாது, சிலவகை இணைப்பினைத் தடை செய்திட வேண்டும் என முயற்சிக்கும் அரசுகளுக்கு இந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். அடிப்படை மனித உரிமை இது போன்ற அரசு அமைப்புகளால் மீறப்படுகின்றன என்று கருதுகின்றனர்.

எனவே, இந்த குழுவினர், பல நூற்றுக் கணக்கான அளவில் சிறிய சாட்டலைட்களை உலகெங்கும் பறக்கவிட இருக்கின்றனர். 

இவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, எவரும் இணைப்பு பெற்று, இணையத் தகவல்களைப் பெறலாம். இந்த சாட்டலைட்களுக்குத் தகவல்களை அனுப்ப தரையில் இயங்கும் நூற்றுக் கணக்கான மையங்கள் அமைக்கப்படும்.

MDIF அமைப்பைப் பொறுத்தவரை, இந்த உலகில் இன்னும் 40 சதவீதம் பேர், இணைய இணைப்பினைப் பெற முடியாமலே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் வட கொரியா போல தடை போடும் அரசுகள் மட்டும் அல்ல; உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குவதில் ஏற்படும் பெருத்த செலவும் ஒரு காரணமாகும்.

அவுட்டர் நெட் (Outernet) மூலம் சைபீரியா அல்லது மேற்கு அமெரிக்காவில் உள்ள தொலை தூர தீவுகளில், கிராமங்களில் வாழும் மக்கள், நியூயார்க், டில்லி, டோக்கியோவில் வாழும் மக்களைப் போலவே, இணைய இணைப்பினைப் பெற்று, தகவல்களை அடைய முடியும். அனைவருக்கும் இந்த உரிமை சமமாய் கிடைக்கும். 

கீழே தரையில் இயங்கும் நிலையங்களில் இருந்து தகவல்கள் சிறிய சாட்டலைட்களுக்கு அனுப்பப்படும். இந்த சாட்டலைட்கள், பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பினையும், அதன் வழி தகவல்களையும் தரும்.

இந்த கட்டமைப்பினை அமைக்க 3 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. MDIF அமைப்பு இதற்கான நிதியைத் திரட்டி வருகிறது.போதுமான நிதி கிடைத்தவுடன், அவுட்டர்நெட் திட்டம் அமைக்கப்படும்.


தொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. 

இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது. 

இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு.

இதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்?

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள்,ஒரு நிறுவனத்திடன் வரக் காரணம், ஸ்மார்ட்போன்களும் இணையமும் இணைந்ததுதான். 

போன்கள் போன்களாகவும், கம்ப்யூட்டர்கள் டெஸ்க்டாப்புடன் இணைந்ததாகவும், தனித்தனியே இருக்கையில், தொலை தொடர்பு விரிவாக இல்லை. ஸ்கைப் மற்றும் மொபைல் போன்களில் கிடைக்கும் தொலை தொடர்பு வசதிகளில் பெருத்த இடைவெளி இருந்தது. 

ஸ்மார்ட் போன்கள் வரத் தொடங்கிய போது, இணைய கட்டணம் (அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில்) மிக அதிகமாக இருந்தது. எனவே, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருந்தது. 

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த வேறுபாடு களையப்பட்டு, இரண்டும் இணைவாக இணைந்து புரட்சியை ஏற்படுத்தின. இதில், தற்போது ஏற்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைப்பு சரியான தருணத்தில் உருவாகி, பேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் இடத்தைத் தந்துள்ளது.


ஆண்ட்ராய்ட் - குரோம் இயக்க முறைமைகள்

கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரண்டு வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம். 

ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம்.


ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும். 

இது மொபைல் போன் இயங்குவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம், மிடில்வேர் எனப்படும் அப்ளிகேஷனைத் தொடர்பு படுத்தும் சாப்ட்வேர் மற்றும் முக்கிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்கள் அடங்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். 

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள், இணையத்தில் கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது. 

தொடக்கத்தில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, 2003ல் தொடங்கப்பட்ட Android OS Inc என்ற நிறுவனம் உருவாக்கியது. ஆனால், 2005 ஆம் ஆண்டில், கூகுள் இதனை வாங்கியது. 

தொடர்ந்து அதன் பல்வேறு பதிப்புகளை உணவுப் பொருட்களின் பெயர்களோடு, ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் வெளியிட்டது. தற்போது அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டது ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆகும்.

டேப்ளட் போன்ற சாதனங்களிலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 3.0 (Honeycomb), டேப்ளட் பி.சி.க்கள் இயக்கத்திற்கு மட்டும் என உருவாக்கப்பட்டதாகும். 

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது லினக்ஸ் அடிப்படையில் உருவானது. இணைய அப்ளிகேஷன்களுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதாகும். UBUNTU என அழைக்கப்படும் இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பினை ஒட்டி குரோம் ஓ.எஸ். அமைக்கப்பட்டது. 

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழக்கமான அப்ளிகேஷன்கள் எதுவும் இருக்காது. இணைய அப்ளிகேஷன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, இதனை இன்ஸ்டால் செய்திடவோ அல்லது அப்டேட் செய்திடவோ தேவை இல்லை. 

இணைய அப்ளிகேஷன்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து, அவை சிஸ்டத்தின் இயற்கையான அப்ளிகேஷன்களாக காட்டப்படும். எளிமை, பாதுகாப்பு மற்றும் வேகம் தான், குரோம் சிஸ்டத்தின் அடிப்படை சிறப்பம்சங்களாகும்.


அசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்
அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகிய தளங்கள் கோலோச்சி இருந்தன. 

ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும், கூகுள் முன் சுருண்டு விழுந்தன. இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட், தன் பிங் தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக ஊன்றியது.

பணம் தேடும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம். 

அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முற்பட்டனர். கூகுள் மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன.

இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் எந்நேரமும் சிதறிக் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கியது. 

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல; இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான கூகுள் சர்ச், அடுத்ததாக ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவையே நம் கண்களின் முன்னே விரிகின்றன. ஆனால், கூகுள் தன் சேவை வர்த்தகத்தில் 160க்கும் மேற்பட்ட சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

இதன் குரோம் பிரவுசர் இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதாகும்.

கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே. இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. 

இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம். அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.

இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால்,வேறு பலரோ, கூகுள் தரும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை வரவேற்கின்றனர். 

குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன. 

ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே பதிந்து வைக்கிறது. 

ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் பதிந்தே வைக்கின்றன. கூகுள் மட்டும் இதில் தனியொரு நிறுவனமாக இல்லை. எனவே, வேறு வழியின்றி இதனை அனுமதிக்கலாம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. ஆனால், அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்ததனால், லேப்டாப், டேப்ளட் எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்தன. 

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்பினால், லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்தன. 

இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் (பழ நெடுங்காலமாக உள்ள நூல்கள் உட்பட) தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.

ஒரே ஒரு நிறுவனத்திடம், மனித இனம் கண்டறிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டு, அதிலிருந்து வரும் நல்லது மற்றும் அல்லாதது ஆகிய இரண்டையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது இந்த உலகை ஒரு திறந்த வெளியாக, யார் வேண்டுமானாலும், எந்த ஒரு வளத்தையும் அணுகிக் கொள்ள முடியும் என்ற நிலையில் வைக்கலாமா? இதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும்.


ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை
ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. 

இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். 

ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற வேண்டியதுதான். 

அது சரி, ஏன் ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன்களில் மட்டுமே இது கிடைக்கும் என விசாரித்த போது, இந்த போன்கள் மட்டுமே, 4ஜி தொழில் நுட்ப வசதியினைப் பெறும் வகையிலான கட்டமைப்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

Huawei Ascend P1 மாடல் போனிலும் இந்த வசதி உள்ளது. மற்ற போன்களில் இது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தாலும், மொபைல் சாதனங்களுக்கு இந்த சேவை இப்போதுதான் வழங்கப்படுகிறது. 

4ஜி சார்ந்தும் சில திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. ஆர்வம் உள்ளவர்கள், அந்த நிறுவனத்தை அணுகலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes