விண்டோஸ் 10 சிஸ்டம் தருவதில் புதிய திட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் புதிய விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்னும் அதிகமான எண்ணிக்கையில், மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின், விண்டோஸ் மற்றும் சாதனங்கள் பிரிவின் செயல் துணைத் தலைவர் டெர்ரி மையர்சன், இது குறித்து தன் வலைமனைப் பதிவில் (http://blogs.windows.com/windowsexperience/2015/10/29/making-it-easier-to-upgrade-to-windows-10/) பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெறுவதற்கான நடைமுறைக்கான நிலைகள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன. இதுவரை, விண்டோஸ் 10 க்கு மேம்படுத்துகையில், பயனாளர்கள் எதிர் நோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் இந்த நிலைகள் இருக்கும்.

ஜூலை 29 அன்று, விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்திட அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு முன்பாகவே, முன்பதிவு செய்திட வழி தரப்பட்டது. 11 கோடி பேர் இது போல முன்பதிவு செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றதாக, சென்ற மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. 

இப்போது, முன்னதாகவே முன்பதிவு செய்து, விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. மைக்ரோசாப்ட் தன் புதிய சிஸ்டத்தை மக்களிடம் தள்ளிவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறது. 

அனைத்து விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு, விரைவில், இது ஒரு பயனாளர் 'விருப்ப மேம்படுத்துதலாக' இருக்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், விண்டோஸ் 'பரிந்துரைக்கப்படும் மேம்படுத்தலாக' காட்டப்படும். 

யாரெல்லாம், தங்கள் கம்ப்யூட்டரில் தானாக மேம்படுத்துதலை அமைத்து வைத்திருக்கிறார்களோ, அவர்களின் கம்ப்யூட்டரில் இந்த பரிந்துரைக்கப்படும் மேம்படுத்துதல், தானாக பதியப்படும் வகையில் அமைக்கப்படும். இருப்பினும், பயனாளர்கள் விருப்பத்துடன் அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொள்ளும் போதுதான் தானாக அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். 

பயனாளர்கள், அதன்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேற்கொண்ட பின்னர், அது குறித்து கவலைப்பட்டால், சிரமமாக உள்ளது என்று எண்ணினால், 31 நாட்களுக்குள்ளாக, பழைய விண்டோஸ் தொகுப்பிற்கு அவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை மாற்றிக் கொள்ளலாம். 

இதனை மையர்சன் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில், கம்ப்யூட்டரில், பழைய விண்டோஸ் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் அனைத்தும் சேவ் செய்து வைக்கப்படும். பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் இந்த வசதி தரப்படும். 

மீண்டும் பழைய சிஸ்டத்திற்கு வர, Settings > Update and Security> Recovery > Uninstall Windows 10 எனச் சென்று இயக்கினால் போதும். “எங்களுடைய நோக்கமெல்லாம், நீங்கள் விண்டோஸ் 10க்கு மாறுவது ஓர் ஆச்சரியமாக உங்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான்” என்றும் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களாகவே, பல பயனாளர்கள், தாங்கள் விரும்பாமலேயே, மைக்ரோசாப்ட் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதித்திடுமோ என்று கவலைப்பட்டனர். முன்பதிவு செய்து ஆவலோடு காத்திருந்தவர்கள் கூட, மைக்ரோசாப்ட் தானாக, அப்டேட் பைல்களை இறக்குவது குறித்து கவலை அடைந்து, தங்கள் முன்பதிவை ரத்து செய்தனர்.

இப்போதும் கூட, பயனாளர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிப்பதை எளிதாக்கும் வகையில், சில பைல்களை, பயனாளர்களின் கம்ப்யூட்டர்களுக்குத் தாங்களாகவே அனுப்பும் திட்டத்தினைக் கைவிடவில்லை. இது இன்னும் தொடரும் என்று மையர்சன் அறிவித்துள்ளார். ஆனால், பயனாளர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

அடுத்த மாதம் முதல், விண்டோஸ் பயனாளர்களுக்கு, தற்போது விண்டோஸ் 10க்காக, மைக்ரோசாப்ட் அனுப்பும் பைல்கள் எத்தகையவை என்று விளக்கமாகக் கூறும். இந்த விளக்க உரை, டெவலப்பர்கள், பயனாளர்கள், அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் என அவர்களின் பயன்பாட்டிற்கேற்ப மாறுபடும்.

பயனாளர்கள் எப்போது விண்டோஸ் சிஸ்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான நிலையில், பல்வேறு ஆப்ஷன்கள் தரப்படுவார்கள். மேம்பாட்டிற்கான பைல்கள் இறக்கிவைக்கப்பட்டாலும், என்று அவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்பது, 

பயனாளர்களின் விருப்பமாக மட்டுமே இருக்கும் என்று மையர்சன் தெரிவித்துள்ளார்.

தங்கள் கம்ப்யூட்டர்களில் பைரசி மூலம், நகல் கோப்புகளைப் பதிந்து விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தி வருபவர்களுக்கும், இலவசமாக விண்டோஸ் 10 வழங்கப்படும். ஆனால், அவர்கள் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்குவதற்கான “செயல்பாட்டிற்கான குறியீட்டினைப்” (Activation Code) பெற வேண்டும். இதனையும் அதிகார பூர்வ கோப்புகளையும் பெறுவதற்கான வழிகள் தற்போது எளிமைப்படுத்தப்படும்.

புதியதாக, டேப்ளட் பி.சி. போன்ற நிலையையும் இணைத்து விண்டோஸ் 10 வெளியானாலும், அதில் புதியதாகப் பல அம்சங்களும் வசதிகளும் தரப்படுகின்றன. மெயில், மியூசிக், விடியோ, காலண்டர் என இன்னும் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. 

கார்டனா என்னும் பெர்சனல் அசிஸ்டண்ட், விண்டோஸ் போன் சிஸ்டம் உட்பட அனைத்திலும் இடம் பெற்றுள்ளது. புதிய வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் எட்ஜ் பிரவுசர் இதன் புதிய சிறப்புகளில் ஒன்றாகும்.


ஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (iTunes App Store) அண்மையில், 256 அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது. 

இவை வாடிக்கையாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை (ஆப்பிள் ஐ.டி. சாதனங்களின் தனி அடையாள எண்கள் போன்றவை) அணுகித் தன் பயன்பாட்டிற்கென சேமித்து வைத்தது தெரிய வந்தது. 

இதனால், அந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் தன் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கிவிட்டது. 

இந்த அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் சீன நாட்டு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, ஆப்பிள் அனுமதியுடன் அதன் ஸ்டோரில் அமைக்கப்பட்டவையாகும். ஏறத்தாழ, 10 லட்சம் பேர்கள் வரை இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலும் மால்வேர் புரோகிராம்கள் பரவிட வாய்ப்புகள் இருந்ததனால், ஆப்பிள் இந்த முடிவை எடுத்தது.


பேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்

பேஸ்புக் நிறுவனம் பன்னாட்டளவில், 18 நாடுகளில், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. 

Internet.org என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும், ஒரு மொபைல் சேவை நிறுவனத்துடன் இணைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணைப்பினைத் தருவதாக அறிவித்தது. 

இந்தியாவில், இதற்கென ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலவச திட்டம், சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. 

ஆனால், இது அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்ற எதிர்ப்புக் குரல் பெரிய அளவில் எழுப்பப்பட்டது. 

இதனை, Free Basics என்ற பெயரில் மாற்றம் செய்து சென்ற அக்டோபர் 19ல், பேஸ்புக் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்ற பெயரில் உள்ள இணையதளத்தினையும், அதே பெயரில் பேஸ்புக் தரும் அப்ளிகேஷனையும் பிரித்துக் காட்டுவதே ஆகும் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது. 

இருப்பினும், இந்த திட்டம் இந்தியாவில் பலத்த எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தில் இணைந்த பல நிறுவனங்கள், அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, தனியே அதே போன்ற திட்டங்களை அறிவித்தன. 

பேஸ்புக், இந்த திட்டத்தின் வழியாக, எந்த அடிப்படையில் இலவசமாகத் தரும் இணையதளங்களை அறிவிக்கிறது என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் எழும்பியது. 

மொபைல் சேவை நிறுவனங்களுடன், பேஸ்புக் சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தீவிரமாகி, சென்ற மே மாதம், 70 குழுக்கள் இணைந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். 

அதில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டம், அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற கொள்கைக்கு எதிரானது என்று கூறி, பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தன் வலைமனை ஒன்றில் தன் விளக்கத்தினை 7 நிமிடங்கள் ஓடும் விடியோ காட்சி மூலம் (http://www.wired.com/2015/05/internetorgexpandsnetneutrality/) மார்க் அளித்தார். எந்த மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த திட்டம் கட்டுப்படுத்தாது என்றும், அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இலவசமாக அளிப்பது நடைமுறையில் சிரமம் என்றும் கூறினார். 

எந்த வழியிலும் இணையத்தை அணுக இயலாத மக்களுக்கு, இந்த திட்டம், பொருளாதார ரீதியில் இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் பங்கு பெறாத ஓர் இணையம் எப்படி அனைவருக்கும் சமமான இணையமாக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதே வேளையில், மக்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவன நிர்வாகிகள் சில புதிய வழிமுறைகளை அறிவித்தனர். இந்த திட்டத்தில் எந்த ஒரு நிறுவனத்தையும் விலக்கி வைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தனர். 

அதன் பின்னர், Free Basics திட்டத்தில் 60 புதிய சேவை வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனாளர்கள், இவற்றில் எந்த சேவைகள் தங்களுக்கு வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளில், வேலை வாய்ப்பு விளம்பரங்கள், உடல் நலம் பேணுதல், விக்கிபீடியா தளங்கள் போன்றவை உள்ளன. 

இத்துடன், இணையத்தில் பாதுகாப்பும், தனிநபர் தகவல்களின் தனித்தன்மை காப்பற்றப்படுவதும் இருமுறை உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, இணைய இணைப்பின்போது, பாதுகாப்பான வழிமுறைகள் பல அடுக்குகளாக இயங்கும் என்று மார்க் உறுதி அளித்தார். 

“Free Basics” என்பது இணையத்திற்கு வழி நடத்தும் ஓர் அப்ளிகேஷனே தவிர, அது மட்டுமே இணையம் அல்ல என்று அறிவித்தார். இணைய இணைப்பு என்பது, அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை உரிமை என்றும், அதனை உறுதிப்படுத்த பேஸ்புக் முயற்சி செய்கிறது என, அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களிடமும் எடுத்துரைத்து வருகிறார். தன் அலுவலக வளாகத்திற்கு வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாய்த் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் சாதனங்களைச் சென்ற செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6ல், அறிமுகப்படுத்தியுள்ளது. 

முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'சர்பேஸ் புக்' (Surface Book) என்னும் மடிக் கணினியை வெளியிட்டது. மடிக்கணினிகளில் மிகச் சிறந்த உச்சத்தை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது. 

அதுதான் 'சர்பேஸ் புக்', என இதனை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் பனோஸ் பனாய் (Panos Panay) குறிப்பிட்டார்.


சர்பேஸ் புக் மடிக்கணினி: 

இதுவே எங்கள் முதல் மடிக் கணினி. ஆனால் இதுவரை இயங்கிய மடிக்கணினிகள் அனைத்தின் அம்சங்களையும் மாற்றி அமைக்கப்பட்ட மடிக்கணினி. புதியதாக நாங்கள் ஒரு மடிக்கணினியைக் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார்.

இது மடிக்கணினி மட்டுமல்ல. இதன் திரைப் பாகத்தைத் தனியே கழட்டி ஒரு குறுங்கணினியாகவும் (“டேப்ளட் பி.சி.”) பயன்படுத்தலாம். கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியவுடன், திரைப் பகுதி தானாகக் கழண்டு தனியே கிடைக்கிறது. 

எனவே இது ”ஒன்றில் இரண்டு” என அழைக்கப்படும் ஒரு சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் திரை 13.1 அங்குல அளவில் அமைந்துள்ளது. இது சற்று மாறுதலான அளவு தான். 

வழக்கமாக நாம் பார்த்த மடிக்கணினி திரைகளைக் காட்டிலும் சற்று உயரம் கூடுதலாக இருக்கும். இந்த திரைப் பகுதியை எந்தக் கோணத்திலும் வைத்துக் காணலாம். சற்று உயர்த்திப் பிடிக்கலாம். இதற்கு வழி வகுக்கும் வகையில், மைக்ரோசாப்ட் "dynamic fulcrum hinge, என்ற ஒரு சுழல் மையப் பிணைப்பினைப் பயன்படுத்தியுள்ளது. 

இதன் ஒளிப்புள்ளி என அழைக்கப்படும் 'பிக்ஸெல்' திறன் 3000 x 2000 ஆக உள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 267 பிக்ஸெல்கள். மொத்தம் 60 லட்சம் பிக்ஸெல்கள். இதனைத் தொட்டும் இயக்கலாம். 'ஸ்டைலஸ்' பேனாவும் பயன்படுத்தலாம். 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும், காட்சி மிகத் தெளிவாக உள்ளது. திரையைத் தனியாகக் கழட்டி குறுங்கணினியாகப் பார்க்கையில், அதன் தடிமன் 7.7. மிமீ ஆக அமைகிறது. எடை 725 கிராம். மொத்த மடிக்கணினியின் தடிமன் 28.8 மிமீ. எடை 1.587 கிலோ. 

இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் சி.பி.யு. ஐ5 வகையைச் சேர்ந்தது. இதன் தற்காலிகச் செயல் (ராம்) நினைவகத்தினை 16 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஹார்ட் டிஸ்க் எஸ்.எஸ்.டி. வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஒரு டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம். பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கேமராவும் உள்ளன. இதன் கீ போர்டில், விசைகள், பின்புறமாக ஒளியூட்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. 

கீழாக அமைக்கப்படும் சுட்டு தளம் (Track Pad) கண்ணாடியால் காக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயமாக மவுஸ் பயன்பாட்டினை விரும்ப மாட்டார்கள் என்று மைக்ரோசாப்ட் அடித்துச் சொல்கிறது. விரல்ரேகை உணர்ந்து இயக்கவும் இதில் வசதி உள்ளது. 

இரண்டு யு.எஸ்.பி.3 போர்ட்கள் தரப்பட்டுள்ளன. முழு அளவிலான, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. “ஹலோ” என்று சொன்னால், நம் முகத்தினை அடையாளம் கண்டு இயங்க, கேமராவும் கிடைக்கிறது.

இதன் பேட்டரியின் திறன் தொடர்ந்து 12 மணி நேரம் கணினியை இயக்க மின்சக்தியினைத் தருகிறது.

இந்த 'சர்பேஸ் புக்' (Surface Book) வரும் அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேவைப்படுபவர்கள், முன்பதிவினை அக்டோபர் 7 முதல் மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றின் விலை தான் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், கண்களில் நீர் வரவழைப்பதாகவும் உள்ளது. 

தொடக்க நிலை சர்பேஸ் புக் கணினியின் (Core i5, 8GB RAM, and a 128GB PCIe SSD) விலை அமெரிக்க டாலர் 1,499. இதில் கிராபிக்ஸ் செயலி தனியாக இருக்காது. கிராபிக்ஸ் செயலி தனியாகவும், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. யும் கொண்டதன் விலை 1,899 டாலர். உயர்நிலையில், Core i7 with 16GB RAM and a 512GB SSD கொண்ட கணினி 2,699 டாலர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அழகான தோற்றம் மற்றும் பிரித்தெடுத்த நிலையில் செயல்பாடு போன்றவற்றைக் காண https://www.youtube.com/watch?t=1&v=XVfOe5mFbAE என்ற காணொளியைக் காணவும்.

“விண்டோஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் முதலில் இதனைத் தங்கள் தேவை என உணர்ந்தனர். பின்னர், அதுவே தங்கள் தேர்வு என அறிந்தனர்; இப்போது அதுவே தாங்கள் நேசிக்கும் விண்டோஸ் என உணர்கின்றனர்” என சத்ய நாதெல்லா, இந்த காட்சி அரங்கில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்து அறிவித்தார்.


பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. 

இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. 01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும். 

மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1500 ஐத் தொடர்பு கொண்டு அறியலாம். வேறு நெட்வொர்க் தொலைபேசிகளிலிருந்து தொடர்பு கொள்வோர் 18003451500 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

மஹாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலைச் சுற்றி, இலவச வை பி இணைய இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதத்தில், 3 நாட்கள், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள், இலவசமாக இணைய இணைப்பினை, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெற்றுப் பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு மேலாகவும், இணைய இணைப்பு தேவைப்படுவோர், அதற்கான கூப்பன்களை, கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தலாம்.

இதற்கிடையே, சென்னையில், பத்து தொலைபேசி நிலையங்கள் சார்ந்த தரைவழி தொலைபேசிகள், அடுத்த மேம்படுத்த நிலை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுவிட்டன என்றும், இதன் மூலம், மிகச் சிறப்பான இணைப்பினை, இந்த தொலைபேசி சந்தாதாரர்கள் (55,204) பெறுவார்கள் என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

அடுத்தபடியாக, மேலும் 40 நிலையங்களில் இந்த மேம்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதன் மூலம் 1,75,000 சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜிமெயில் - வியக்கத்தக்க வேலைப்பாடுகள்

உலகில் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டு இயங்கும் அஞ்சல் சேவையில், ஜிமெயில் முதலிடத்தைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 

எனவே, இதனை மேம்படுத்தும், இதன் வசதிகளை அதிகப்படுத்தும் வழிகளை, நிச்சயம் அனைவரும் விரும்புவார்கள். இங்கு தரப்பட்டுள்ள பல வசதிகள், ஜிமெயில் பயனாளர்கள் இதுவரை அறியாத, ஆனால், அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளாகும். 

இங்கு அவற்றின் பயன்பாடு, பயன்படுத்தும் விதம் குறித்து காணலாம். இவை அனைத்தும் கூகுள் நிறுவனத்தால் தரப்படவில்லை. இணையத்தில் இது போன்ற டூல்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தன்மைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. 

இவற்றின் மூலம், உங்களுடைய மின் அஞ்சல் கடிதங்களை யார் பின் தொடர்ந்து கண்காணிக்கின்றனர் என அறியலாம். உங்களுக்கு அஞ்சல் அனுப்பியவர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். நமக்குச் சேதம் விளைவிக்க வந்திருக்கும் அஞ்சல்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.


1. Sortd:: 

இது ஒரு அருமையான தோற்றம் தரும் "ஸ்கின்” எனலாம். நம்முடைய இன்பாக்ஸை, நம் விருப்பத்திற்கேற்றபடி பிரிவுகளாக மாற்றி அமைக்கலாம். எந்த வேளையிலும், இந்த பிரிவுகளின் பெயர்களை மாற்றிக் கொள்ளலாம். 

நமக்குத் தேவையான பிரிவுகளை எப்போதும் கூடுதலாக அமைத்துக் கொள்ளலாம். இவற்றின் வரிசையையும், நம் விருப்பப்படி மாற்றியும் அமைக்கலாம். பிரிவுகளை அமைத்துவிட்டு, அஞ்சல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை மிக எளிதாக, இழுத்து வந்து, இந்த பிரிவுகளில் விட்டுவிடலாம். 


2. Ugly Email: 

நீங்கள் மின் அஞ்சல் ஒன்றைத் திறந்து படிக்கும் நேரம், எதில் நீங்கள் கிளிக் செய்கிறீர்கள், எங்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை எல்லாம் கண்டறிய பல டூல்கள் இணையத்தில் உள்ளன. 

அப்படியானால், அப்படி ஒரு டூல் பயன்படுத்தப்படுகிறதா என நாம் அறிந்து கொள்ளவும் ஒன்று இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இந்த Ugly Email என்னும் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் செயலி. இதனை, பிரவுசருடன் இணைத்துவிட்டால், உங்கள் மின் அஞ்சல்கள் வேவு பார்க்கப்படுவதனைக் கண்டு கொள்ளலாம். 

நீங்கள் எதனையும் கிளிக் செய்திடும் முன்னாலேயே, இந்த எக்ஸ்டன்ஷன் தன் வேலயைத் தொடங்கிவிடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்த உடனேயே, உங்களுடைய இன் பாக்ஸில் உள்ள அஞ்சல்களில், எவை எல்லாம் கண்காணிக்கப்படுகின்றனவோ, அவற்றுக்கு அருகே, சிறிய கண் அடையாளம் ஒன்று காட்டப்படும்.


3. Full Contact: 

குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் இது. உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புபவர்களின் சமூக நிலை, பணி நிலை போன்றவற்றை இது காட்டும். அவர்களின் ட்வீட்ஸ், இன்ஸ்டகிராம் போட்டோ, பேஸ்புக் அப்டேட் ஆகியவற்றை, இதன் மூலம் படித்தறியலாம். 

அத்துடன், அவர்களின் நிறுவனங்கள், அவை அமைந்துள்ள இடம், பணியாளர் எண்ணிக்கை அளவு போன்றவற்றையும் அறியலாம். இது கூகுள் காலண்டர் செயலியுடன் இணைந்து செயல்படும். ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் சந்திப்பு ஒன்றுக்கென நீங்கள் செல்வதாக இருந்தால், அங்கு செல்லும் முன், அந்த நிறுவனம் குறித்து அனைத்தையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


4. Mixmax :

மிக்ஸ்மேக்ஸ் எனப்படும் இந்த குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம், நல்ல பயனுள்ள விஷயங்களைக் கொண்டுள்ளது. மின் அஞ்சல்களிலிருந்தே, நம் சந்திப்புகளை அமைத்துக் கொள்ளலாம். 

உங்கள் அஞ்சல்கள் ஏற்கனவே படிக்கப்பட்டுள்ளனவா என்றும் அறியலாம். அப்படி யாரேனும் படித்திருந்தால், அவர்களின் அஞ்சல்களை, அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் காணலாம். பிற்பாடு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கும் அஞ்சல்களை, அந்த குறியீட்டுடன் அமைத்து வைக்கலாம். ஒரே கிளிக் மூலம், மின் அஞ்சல்களுக்கான டெம்ப்ளேட்டுகளை அமைக்கலாம்.


5.Mailburn: 

இது ஐபோனுக்கான ஓர் அப்ளிகேஷன். இது, உண்மையான மக்கள் அனுப்பும் ஜிமெயில்களை அடையாளம் கண்டு அறிவிக்கிறது. அதாவது, நியூஸ்லெட்டர் போன்றவற்றை உங்கள் கம்ப்யூட்டரில், ஒதுக்கிக் காணலாம். அதாவது, அவசரத்தில், இவற்றை ஒதுக்கி, முக்கியமானவர்களிடமிருந்து வந்துள்ள அஞ்சல்களை அடையாளம் கண்டு படிக்க உதவுகிறது.


6. Unsubscriber: 

ஐபோனில், ஜிமெயில் பயன்பாட்டிற்கான அப்ளிகேஷன். இதனைப் பயன்படுத்தி, நாம் ஏற்கனவே, பதிந்து பெற்று வரும் குழுக்களிலிருந்து, நம்மைக் கழட்டிக் கொள்ள உதவும். பொதுவாக, சில தளங்களிலிருந்து தகவல்களைக் கொண்ட மின் அஞ்சல்களைப் பெற, நாம் அவற்றின் சந்தாதாரராகப் பதிந்து கொள்வோம். 

அவை தேவை இல்லை என்றால், இவை அனுப்பும், அஞ்சல்களிலேயே, அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள லிங்க் வசதி இருக்கும். ஆனால், சிலவற்றில் அந்த வசதி இருக்காது. நம் கழுத்தில் ஏறிய வேதாளமாகத் தொடர்ந்து அஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கும். அத்தகைய அஞ்சல் பதிவுகளிலிருந்து நம்மை விடுவிக்க இந்த அப்ளிகேசன் உதவுகிறது.


7. MailTrack.io: 

இது ஒரு குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன். இதனைப் பயன்படுத்தி, நம் இமெயில் எப்போது அனுப்பப்பட்டது (ஒரு டிக் அடையாளம்), எப்போது பெற்றவரால் திறக்கப்பட்டது (இரண்டு டிக் அடையாளம்) எனக் கண்டு கொள்ளலாம். 

இது மட்டுமின்றி, பலருக்கு ஓர் அஞ்சலை அனுப்புகையில், அவர்கள் ஒவ்வொருவரும் எப்போது திறந்தனர் என்பதையும், தனித்தனியே தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், அஞ்சலைப் பெற்றவர் எப்போது திறக்கிறாரோ, அதே கணத்தில், பாப் அப் விண்டோ மூலமும் தெரிந்து கொள்ளலாம். 


8. Snapmail: 

இதுவும் ஒரு குரோம் எக்ஸ்டன்ஷன் செயலிதான். இதனை அமைத்துவிட்டால், நம்முடைய ஜிமெயிலில் உள்ள "ண்ஞுணஞீ" பட்டன் அருகே, இன்னொரு பட்டனையும் இணைத்துவிடும். இதனைப் பயன்படுத்தி, தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில் மெசேஜ் அனுப்ப முடியும். இந்த பட்டன், உங்கள் மெசேஜைச் சுருக்கி, அதனைப் பெறுபவருக்கு, அதைத் திறந்து படிக்க, லிங்க் ஒன்றை அனுப்புகிறது. 

அஞ்சலைப் பெறுபவர், அந்த லிங்க்கில் கிளிக் செய்து, திறந்தவுடன், அந்த மெசேஜ் 60 விநாடிகளில் தன்னை அழித்துக் கொள்ளும் என்று அவருக்குத் தெரிவிக்கிறது. பின்னர், தன்னை அழித்துக் கொள்கிறது. தற்போதைக்கு இந்த ஸ்நாப்மெயில், டெக்ஸ்ட்டை மட்டுமே இவ்வாறு அழிக்கிறது.


9.Gmail Offline: 

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பயன்படுத்த இந்த புரோகிராம் வசதி அளிக்கிறது. இதன் மூலம், நீங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சலை, இணைய இணைப்பிற்கான செலவின்றி தயாரிக்க முடிகிறது. பின்னர், இணைய இணைப்பினை ஏற்படுத்தி, இவ்வாறு தயாரித்த அஞ்சல்கள் அனைத்தையும், மொத்தமாக அனுப்பிக் கொள்ளலாம். 


10.Giphy 

மிகப் பிரபலமான எஐஊ தேடல் நிறுவனம் தயாரித்து அளிக்கும் குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம். இதன் எஐஊ தேடல் திறனை, நேரடியாக, உங்கள் ஜிமெயில் செயல்பாட்டில் இணைத்து தருகிறது. 

இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன், ஒரு சிறிய வானவில் போன்ற எடிணீடதூ ஐகான் காட்டப்படுகிறது. இதன் மூலம், உங்கள் அஞ்சல்களில், உங்களுக்குப் பிடித்த ஐகான்களை இணைக்க இயலும்.


11. Dropbox for Gmail: 

ஜிமெயிலின் "Compose" பட்டன் அருகே ஈணூணிணீஞணிது பட்டன் ஒன்றை, இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அமைக்கிறது. இதன் மூலம் ஒரு மின் அஞ்சலில், Dropbox லிங்க்கினை இணைக்க முடிகிறது. இதனால், உங்கள் இன்பாக்ஸில் பெரிய பைல்களை இணைத்து, அதற்கான இடத்தை வீணாக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. 


12.Boomerang: 

இது ஒரு ப்ளக் இன் புரோகிராம். இதனை குரோம், பயர்பாக்ஸ் அல்லது சபாரி பிரவுசர்களில் பயன்படுத்தலாம். இது பல சின்ன சின்ன வசதிகளை, அஞ்சல் அனுப்புவதில் தருகிறது. மிக முக்கியமான வசதி, அஞ்சல்களைத் தயாரித்து வைத்து, பின் ஒரு நாளில் அனுப்பும் வசதியாகும்.


13.Find Big Mail 

உங்கள் ஜிமெயில் தளத்தின் இடம் ஏறத்தாழ நிறைந்துவிட்டது என்ற செய்தி உங்களுக்கு வரலாம். பெரும்பாலும், மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைப்பாகக் கொண்டு வந்த அஞ்சல்களே இதற்குக் காரணமாக இருக்கலாம். 

இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம், உங்கள் ஜிமெயில் தளத்தினை ஸ்கேன் செய்து, உங்கள் இன் பாக்ஸில் இருக்கும் மிகப் பெரிய பைல்களைக் கண்டறிந்து காட்டும். அவற்றை உடனடியாக அழிக்கவும் உதவும். இதன் மூலம், உங்கள் இன்பாக்ஸில், காலி இடத்தை எண்ணியவுடன் அதிகப்படுத்தலாம்.

மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்களை, கூகுளின் தேடல் உதவி கொண்டு தேடிப் பார்த்து, தகுந்த, பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இன்னும் இது போன்ற சில நகாசு வேலைகளை நமக்காக மேற்கொள்ளக் கூடிய ஆட் ஆன் புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிப் பார்த்து பயன்படுத்தலாம். ஆனால், தேவைப்படாதவற்றைப் பதிவது தவறாகும். அது தேவையற்ற சில தொல்லைகளைத் தரலாம்.


எல்.ஜி. (LG) கிளாஸ் 4 ஸ்மார்ட் போன்

முழுவதும் உலோகத்தாலான உறைகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, எல்.ஜி. நிறுவனம், பல ஊகமான தகவல்களை அடுத்து வெளியிட்டுள்ளது. இதன் பெயர் LG Class. 

இதன் 5 அங்குல அளவிலான எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1280× 720 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது. வளைவான ஓரங்கள் இருப்பதால், முப்பரிமாண விளைவினை காட்சித் தோற்றத்தில் காண முடிகிறது. 

இதனை இயக்கும் ப்ராசசர், குவாட் கோர் ஸ்நாப்ட்ரேகன் 64 பிட் ப்ராசசர் (Snapdragon 410 (MSM8916)) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாய், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

முன்புறக் கேமராவின் திறன் 8 எம்.பி. திறனுடையது. இந்த கேமராவில் Gesture Interval Shot, Beauty Shot போன்ற சில சிறப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. 

இதில் 2GB LPDDR3 ராம் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 2 டெரா பைட் வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். 

ஒரு வாட் திறனுடைய லவுட் ஸ்பீக்கர் துல்லியமான ஒலியைத் தருகிறது. இந்த போனின் தடிமன் 7.4 மிமீ. எடை 147 கிராம். பரிமாணம் 142 x 71.8 x 7.4 மிமீ. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இதில் தரப்பட்டுள்ளன. 

உலோக உறைகள் இருந்தாலும், எடை குறைவாகவே உள்ளது இதன் சிறப்பு. பவர் பட்டன் மற்றும் ஒலி அளவுக் கட்டுப்பாட்டிற்கான பட்டன்கள், போனின் பின்புறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் உள்ளாக இணைக்கப்பட்ட பேட்டரி 2,050mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்த குறிப்பினை எழுதும் வரை இதன் விலை அறிவிக்கப்படவில்லை. உத்தேசமாக ரூ. 22,475 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய கூகுள் பிளே ஸ்டோரில் தள்ளுபடி விலை

கூகுள் பிளே ஸ்டோர் இந்தியா, முதல் முறையாக, தான் வழங்கும் அப்ளிகேஷன்களின் விலையை மிகக் குறைத்துள்ளது. 

அப்ளிகேஷன்களின் தொடக்க விலை ரூ.10 மட்டுமே. இந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தாலும், அதுதான் உண்மை. 

Facetune, Age of Zombies போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள், Fruit Ninja போன்ற கேம்ஸ் ஆகியவை ரூ.10க்குக் கிடைக்கின்றன. Talking Tom சார்ந்த பொருட்கள் ரூ.20க்குக் கிடைக்கின்றன. 

இதுவரை கூடுதலான விலையில் தரப்பட்டுள்ள பல அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும் மிகக் குறைந்த விலையில் தரப்படுவதால், மக்கள் அதிகமான எண்ணிக்கையில் இவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்துவார்கள் என கூகுள் பிளே ஸ்டோர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்

சென்ற செப்டம்பர் 9 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், 7,000 பேர் அமரக் கூடிய Bill Graham Civic Auditorium அரங்கத்தில், தான் நடத்திய விழாவில், ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களையும், அறிமுகமாக இருக்கும் அதன் புதிய தொழில் நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 

முப்பரிமாண தொடுதல் கொண்ட புதிய ஐபோன் முதல், செறிவான திறன் கொண்ட புதிய ஐ பேட் சாதனம், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ், ஆப்பிள் வாட்ச் என இன்னும் பல புதிய அதிசயங்கள் அங்கு காட்டப்பட்டன. அவை குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்: ''நமக்குப் பழகிய தோற்றத்தை இந்த போன்கள் கொண்டிருந்தாலும், நாங்கள், இவற்றின் அனைத்து அம்சங்களையும் மாற்றி விட்டோம்” என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி, டிம் குக் கூறினார். 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை இதுவரை நாம் பயன்படுத்தி வந்த முறையில், தற்போது புதிய மாற்றம் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. அது, முப்பரிமாண தொடுதல் கொண்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ். 

இது, இந்த இரண்டு போன்களிலும், தகவல்களைத் தருவதில் ஒரு புதிய பரிமாணத்தைத் தர இருக்கிறது. போனின் திரை, வெவ்வேறு வகையான தொடுதல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.

எடுத்துக்காட்டாக, போன் திரையில் சற்று கூடுதலாக அழுத்தத்தினைத் தந்தால், ஓர் அப்ளிகேஷனில் போட்டோ ஒன்று காட்டப்படும். இன்னொன்றில் பைல் ஒன்று இன்னொரு அப்ளிகேஷன் வழியே திறக்கப்படும். டாகுமெண்ட் ஐகானில் சற்று அதிகமாக அழுத்தினால், அதன் முன் காட்சி காட்டப்படும். மின் அஞ்சலில் உள்ள முகவரியில் அழுத்தினால், மேப் ஒன்று திறக்கப்படும். 

ஆனால், அதற்காக, இந்த போன்களின் திரை அளவு பெரிதாக்கப்படவில்லை. சென்ற ஆண்டு, எந்த அளவில், இவற்றின் திரை இருந்தனவோ, அதே அளவில் தான் இப்போதும் இவை உள்ளன.

இந்த இரண்டு போன்களிலும் இன்னொரு முக்கிய அம்சம், இதில் தரப்பட்டுள்ள கேமராக்களாகும். ஐபோன் 4 எஸ் போனில், 8 எம்.பி. கேமரா சென்சார் கொடுத்து, அதனையே தொடர்ந்து தந்தது ஆப்பிள். தற்போது இதன் மெகா பிக்ஸெல் திறன் உயர்த்தப்படுள்ளது. 

இந்த இரண்டு போன்களிலும் 12 எம்.பி. பின்புறக் கேமராவும், 5 எம்.பி. முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் போகஸ் பிக்ஸெல்களின் எண்ணிக்கை 50% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ போகஸ் மிக வேகமாக இயங்கும். 

இந்த கூடுதல் அம்சங்களினால், இதுவரை இல்லாத வகையில், ஆப்பிள் போன்கள் மிகத் துல்லியமாக போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும். ஆப்பிள் போன்களுக்கே உரிய பனாரமிக் ஷாட் என அழைக்கப்படும் “அகன்ற காட்சி” புகைப்படங்கள், 63 மெகா பிக்ஸெல் ரெசல்யூசனில் கிடைக்கும். வீடியோஸ் 4கே தன்மையில் கிடைக்கும். 

செல்பி கேமராவும், இம்முறை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில், இது 1.2 எம்.பி. திறனுடன் இருந்தது. இம்முறை, இது 5 எம்.பி. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவில் எல்.இ.டி. ப்ளாஷ் இல்லை. 

இருப்பினும், Retina Flash என்னும் தொழில் நுட்பத்தினை, ஆப்பிள் இந்த போன்களில் தந்துள்ளது. இந்த தொழில் நுட்பம், திரையின் ஒளிப் பொலிவினை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இது பின்புறம் உள்ள கேமராவின் டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் திறனுக்கு இணையானது என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. 

இந்த கேமராக்களில், Live Photos என்னும் புதிய தொழில் நுட்பத்தினையும், ஆப்பிள் இந்த கேமராக்களில் தந்துள்ளது. போட்டோ ஒன்றைக் கிளிக் செய்வதற்கு முன்னும், பின்னும் 1.5 விநாடி விடியோ காட்சியினையும் பதிவு செய்கிறது. எடுத்த போட்டோவினை, மீண்டும் பார்க்கையில், போட்டோவிற்கு முன்னும் பின்னும், இந்த நொடிப்பொழுது விடியோ காட்டப்படுகிறது. 

அப்ளிகேஷன்களை இயக்கும் ப்ராசசர் சக்தி, இப்போது 70% அதிகரிக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை உணர்ந்து செயல்படும் செயலி, இரண்டு மடங்கு கூடுதலான வேகத்தில் இயங்குகிறது. 

போன்களில், புதியதாக இளஞ்சிகப்பு கலந்த தங்க வண்ண போன் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது. இது ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போனில் மட்டும் வழங்கப்படுகிறது. வழக்கம் போல, இவை இரண்டும் ஸ்டாண்டர்ட் சில்வர், கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன.

வடிவத்தில், முன்பு வந்த போன்கள் போல இருந்தாலும், இவற்றில் சற்று பலமான கெட்டிப் பொருளால், (aircraft-grade 7000 aluminium alloy) மேலே உள்ள ஷெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அடர்த்தியில் குறைவாகவும், எடையில் சிறிதளவாகவும் இருந்தாலும், கடினமான பொருளாக இருந்து போனைக் காத்து நிற்கும். அதே போல, திரை மேல் உள்ள கண்ணாடியும் கடினமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. 

ப்ராசசர், விரல் ரேகை உணர் செயலாக்கம், 4ஜி நெட்வொர்க் செயல்பாடு, வை பி செயல்பாடு என அனைத்து செயலிகளும் இரு மடங்கு கூடுதலாகத் திறன் கொண்டு செயல்படுகின்றன.

அமெரிக்காவில், வழக்கமாக, ஏதேனும் மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையுடன் தான் மொபைல் போன்களை வாங்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாத மொபைல் போன்கள் ஒரு சில மாடல்களில் மட்டுமே தரப்படும். இம்முறை இந்த இரண்டு போன்களும், கட்டுப்பாடு இல்லாத நிலையிலும் விற்பனைக்கு வருகின்றன. 

ஐபோன் 6 எஸ் 16 ஜி.பி. 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. முறையே டாலர் 649, 749 மறும் 849 என்ற விலையில் கிடைக்கின்றன. இதே போல ஐபோன் 6 எஸ் ப்ளஸ், இதே ஸ்டோரேஜ் அளவிற்கு முறையே, 749, 849 மற்றும் 949 டாலர் என்ற விலையில் கிடைக்கும். 

இந்தியாவில் இந்த போன்களின் விலையினைச் சில வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 64 ஜி.பி. விலை ரூ. 63,988. ஐபோன் 6 ப்ளஸ் 16 ஜி.பி. ரூ. 50,746. ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 16 ஜி.பி. ரூ. 71,500.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில், இந்த போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ல் தொடங்கியது. 

இவை கடைகளில் செப்டம்பர் 25 முதல் கிடைக்கத் தொடங்கும். இந்த புதிய மாடல்கள், இந்தியாவிற்கு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 


கூகுளின் புதிய இலச்சினை

கூகுள் தன் நிறுவனங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்திற்கும் முதன்மையானதாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த மாற்றத்தின் போது கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். 

இப்போது, கூகுள் நிறுவனப் பிரிவின் இலச்சினை மாற்றப்பட்டு புதிய இலச்சினை ஒன்று வெளியாகியுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட இலச்சினையிலும் அதே நீலம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் உள்ளன. இந்த நிறங்கள், கூகுள் நிறுவனத்தின் கடந்த 17 ஆண்டுகள் வரலாற்றில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவையாகும்.

ஒரு காலத்தில், கூகுள் தேடல் சாதனமாகப் புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருந்த நிலையில், அதனைப் பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமே பெற்று வந்தோம். தற்போது, கூகுள் தளத்தினைப் பல சாதனங்கள் வழியாக, பல இயக்க முறைமைகள் வழியாகப் பெற்று வருகிறோம். 

ஒரே நாளில், பலவகை சாதனங்கள் மூலம் ஒருவர் கூகுள் தளத்திற்கு செல்வதையும் பார்க்கலாம். டேப்ளட் பி.சி.,மொபைல் போன்கள் மட்டுமின்றி, இப்போது தொலைக் காட்சிப் பெட்டி, கை கடிகாரங்கள், ஏன் கார் டேஷ் போர்ட் வழியாகக் கூட, கூகுள் தளத்தினைக் காண்கிறோம். இவை அனைத்திலும் தரப்படும் சேவைகள், ஒரே நிறுவனத்தினிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தைக் காட்ட, கூகுள் தனது இலச்சினையை மாற்றியுள்ளது.

எனவே, சிறிய திரைகளில் கூட, கூகுள் நமக்காகச் செயல்படும் தருணத்தை நன்கு காட்ட, இந்த இலச்சினை மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தன் வலைமனைச் செய்தியில் அறிவித்துள்ளது.

மொபைல்போன் போன்ற சிறிய சாதனங்களில், புதிய இலச்சினையில், எழுத்து 'G' பெரிய (Capital) எழுத்தாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு வெள்ளை வண்ணத்தில், சிறிய (lower case letter) எழுத்தாக இருந்தது. கூகுள் நிறுவனத்தின் வேறு சேவைகள் தரப்படுகையிலும், நம் ஒலி வழி கட்டளைக்குக் கூகுள் செயல்படும்போதும், இந்த எழுத்தினைச் சுற்றி சிறிய அளவில் வண்ணப் புள்ளிகள் சுழன்று வருவதனைக் காணலாம். இதுவும் புதிய மாற்றமே.

முதன் முதலில், 1977ஆம் ஆண்டில், கூகுள், இலச்சினை ஒன்றைத் தனக்கென வெளிக் காட்டியது. அது அப்போதைய வேர்ட் ஆர்ட் என்னும் டூல் மூலம் உருவானது போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இது செப்டம்பர் 1998 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் 1998 முதல் மே, 1999 வரை இருந்த இலச்சினையில், ஆச்சரியக்குறி ஒன்று இறுதியில் இருந்தது. 

பின்னர் பத்தாண்டுகளுக்கு, முப்பரிமாண அடிப்படையில் அமைக்கப்பட்டு, மே 31, 1999 முதல், மே 5, 2010 வரை பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வந்த இலச்சினையில், எழுத்துகள் எளிமையாக்கப்பட்டு, ஒரு 'O' மட்டும் ஆரஞ்சு வண்ணத்தில் அமைந்திருந்தது. இது மே 6, 2010 முதல் செப்டம்பர் 18, 2013 வரை இருந்தது. 

இறுதியாக தற்போது விலக்கப்பட்ட இலச்சினை செப்டம்பர் 19, 2013 முதல், செப்டம்பர் 1, 2015 வரை இருந்தது. இப்போது காட்டப்படும் இலச்சினை செப்டம்பர் 2, 2015 முதல் இருந்து வருகிறது. கூகுளின் இலச்சினை சில சோக நிகழ்வுகளைக் காட்டுகையில், வண்ணங்களில் இல்லாமல், அந்த நிகழ்வுகள் நடந்த நாட்டினைச் சுற்றிக் காட்டப்பட்டு வந்தது. 

முதன் முதலாக,போலந்து நாட்டில் நடைபெற்ற விமான விபத்தின் போது கூகுள் போலந்து என்ற பிரிவின் லோகோ, எந்த வண்ணத்திலும் இல்லாமல் இருந்தது. இந்த விபத்தில், போலந்து நாட்டின் அதிபர் மரணமடைந்தார். அடுத்து சீனாவில் நடந்த பூகம்பத்தில் பலர் இறந்த போது இதே போலக் காட்டப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டின் சில விசேஷ தினங்களில், தன் மாறா நிலையில் உள்ள இலச்சினையை மாற்றி, கூகுள் டூடில் என அவ்வப்போது அந்த தினங்களின் நிகழ்வுகளுக்கேற்ப சிறிய அனிமேஷன் படங்களாகக் காட்டப்படுவதனையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.


மைக்ரோசாப்ட் மூடிய விண்டோஸ் போன் 8.1 செயலிகள்தன்னுடைய விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் (Windows App Store) இதுவரை தரப்படும் சில விண்டோஸ் மொபைல் சார்ந்த செயலிகளை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளது. 

லூமியா போன்களில் கேமரா சார்ந்த செயலிகள் இவை. இந்த செயலிகள் விண்டோஸ் போன் 8.1 சிஸ்டத்தில் செயல்படுபவை. 

லூமியா ஸ்டோரி டெல்லர் (Lumia Storyteller), லூமியா பீமர் (Lumia Beamer), போட்டோ பீமர் (Photobeamer) மற்றும் லூமியா ரிபோகஸ் (Lumia Refocus) ஆகிய செயலிகள் வரும் அக்டோபர் 30க்குப் பின், விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்காது. 

ஏற்கனவே, இவற்றைப் பெற்று பதிந்து இயக்குபவர்களுக்கும், இது குறித்த எந்த சப்போர்ட் பைலும் வழங்கப்பட மாட்டாது. இவை அப்டேட் செய்யப்படவும் மாட்டாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், மொபைல் போன்களில் இயங்கிக் கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் இவற்றை நீக்காது. 

“மிகச் சிறந்த வகையில் செயல்படும் செயலிகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை நாங்கள் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். 

அதன்படி, இந்த செயலிகளுக்குப் பதிலாக விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தினையும், அதில் இயங்கும் இந்த பதிலி செயலிகளையும் தருகிறோம்” என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

லூமியாவில் இயங்கும் செயலிகள் பல விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்

மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். 

உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். 

அந்த வளாகம் தொடர்ந்து கட்டப்பட்டு, தற்போது அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2016 ஆண்டு முடிவதற்குள் அல்லது 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த அலுவலகம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வளாகத்தினை விண்வெளி ஓட வளாகம் (ஸ்பேஸ் ஷிப்) என்றே அனைவரும் அழைக்கின்றனர். இதன் தோற்றம் அந்த வகையில் அமைந்துள்ளது. 

இது 176 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. அலுவலக வளாகம் 28 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது. ஒரே கட்டடத்தில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் 13,000 பேர் பணியாற்றுவார்கள். சுற்றி வந்தால், இது ஒரு மைல் தூரத்திற்கும் சற்று அதிகமாகவே இருக்கும்.

வட்ட வடிவ வளாகமாக அமைக்கப்படும் இந்த கட்டடம் நான்கு மாடிகளால் ஆனது. இதன் இரு பக்க சுவர்களும் கெட்டியான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணி புரிபவர்கள், இரண்டு பக்கமும் உள்ள இயற்கைச் சூழலைக் கண்டவாறே பணியாற்றலாம். 

கண்ணாடிகளால் ஆன மாடிப் படிக்கட்டுகளை அமைக்கும் சீலே (Seele) நிறுவனத்தின் கட்டட பொறியாளர் பீட்டர் ஆர்பர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இந்த கட்டடத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை வரிசைப்படுத்தினால், ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான Foster+Partners இந்த வளாகத்தினைக் கட்டித் தரும் பொறுப்பினை ஏற்றுள்ளது. உலகின் மிகச் சிறந்த, பல பெரிய கட்டடங்களைக் கட்டிய அனுபவம் கொண்டது இந்த நிறுவனம். இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. 

மிகப் பெரிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே உணவு நிலையங்களும், நடைவெளிகளும், நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய உணவகம், அங்குள்ள பரந்த புல்வெளியை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் பரப்பளவு மட்டும் 21,468 சதுர அடியாகும். Caffè Macs என அழைக்கப்படும் இந்த உணவகம், ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே. இரண்டு மாடிகளில் இது அமைகிறது. பொது மக்கள், இந்த வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இதன் ஊழியர்களும், ஆய்வாளர்களும் கலந்தாலோசிக்கும் வகையில், பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புல்வெளியின் கீழாக, பூமிக்கு அடியில் கார்களை நிறுத்துமிடம் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,200 கார்களை நிறுத்தலாம்.இதனால், கார்கள் நிறுத்தப்பட்டு அவை வளாகத்தின் அழகான தோற்றத்தைக் குறைக்கும் நிலையே ஏற்படாது. வளாகத்தைச் சுற்றி 7,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு இந்த வளாகம் ஒரு மிகப் பெரிய பூங்காவாக இருக்கும். மொத்தப் பரப்பளவில், 80% இடம் 'பசுமை வளாகம்' ஆக அமையும். 

இந்த வளாகம் அமைய இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி 500 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஆடம்பரம் என ஆப்பிள் நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தனி இருப்பு நிதியில் 1% என்பது நூறு கோடி டாலர் ஆகும். இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இங்கு அமையும் உடற்பயிற்சி மையம் 7.5 கோடி டாலர் செலவில் அமைக்கப்படுகிறது. இதனை சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 20 ஆயிரம் ஆப்பிள் நிறுவனத்தினர் பயன்படுத்தலாம். 

வளாகத்தைச் சுற்றி சுற்றி, நடை பயிற்சி மற்றும் ஓடும் பயிற்சி மேற்கொள்ள பல மைல்கள் அளவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திற்குள்ளாக ஊழியர்கள் சென்று வருவதற்கெனத் தனியே 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும்.

இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், குபர்டீனோ நகரில் உள்ள தற்போதைய ஆப்பிள் நிறுவன வளாகம் அப்படியே இருக்கும். 

இடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மியூசியம் ஒன்று அமைக்கப்படும் என சிலர் தவறாகக் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு 'ஆப்பிள் மனித இனத்தின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தான் பாடுபடும்; கடந்த காலத்தைக் கொண்டாடாது' எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர் ஒருங்கே அமர்ந்து காணக் கூடிய அரங்கம் ஒன்று, பூமிக்கடியில் எழுப்பப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் சோதனைக் கூடங்கள் பல லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் யாருக்கும் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இதன் திட்டம் குறித்துப் பேசுகையில், இதனை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: https://www.youtube.com/watch?v=oPzVsrgaxmc) தன் பெற்றோர்கள் இருவரும், புகை பிடிக்கும் பழக்கத்தால், நுரையீரல் புற்று நோயால் இறந்ததாகவும், அதனால், புகை பிடிப்பது மனிதனுக்கு ஆகாது எனவும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இங்கு ஏறத்தாழ 7 லட்சம் சதுர அடி அளவில் சூரிய வெப்பத்திலிருந்து மின் சக்தியை உருவாக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகம் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியினை இந்த பேனல்கள் தரும்.

பல புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விடியோ தயாரிப்பாளர்கள், ஆளில்லா சிறிய விமானத்தினை அனுப்பி, இந்த வளாகம் கட்டப்படுகையில், அதன் பல நிலைகளை போட்டோவாக எடுத்து, விடியோ படங்களாக யு ட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

மாதிரிக்கு ஒன்று https://www.youtube.com/watch?v=mj8cI4G5_PQ என்ற தளத்தில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகப் பிரம்மிப்பாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புகழை அதன் சாதனங்கள், மனித இனச் சரித்திரத்தில் பதித்தாலும், இந்த வளாகம் கூடுதலாகப் புகழை இணைக்கும் என்பதில் ஐயமில்லை.


விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண் 8 சறுக்கல்கள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், தன் தொடு உணர் திரை தொழில் நுட்பத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. 

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கமும் வெகு சிறப்பாக இருந்தது. புதிய வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம், டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் கிடைத்து பலர் மகிழ்ச்சியுடன் மாறிக் கொண்டனர். 

ஆனால், சில பழகிப்போன விஷயங்கள் இல்லாதது மக்களுக்கு எரிச்சலைத் தந்தது. அவை அவர்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மிகவும் ஊறிப்போன வசதிகளாக இருந்தமையால், விண்டோஸ் 8 சிஸ்டம் முழுமையும் மக்களால் ஒதுக்கப்பட்டது. 

மாறியவர்கள் வேறு வழியில்லாமல், தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். அவர்களின் பிரச்னைகளை அறிந்த மைக்ரோசாப்ட் தன் தவறுகளை உணர்ந்து, புதியதாக அறிமுகமான விண்டோஸ் 10 சிஸ்டத்தில், அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டது. 

எப்படியும், தன் பயனாளர்களைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து அம்சங்களையும் அலசி, பல வழிகளில் இந்த இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வடிவமைத்து அளித்துள்ளது. 

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துபவராக இருந்து, விண்டோஸ் 10க்கு மாறலாமா வேண்டாமா என மதில்மேல் பூனையாக உள்ளீர்களா? இதோ, விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண்டோஸ் 8 உறுத்தல்களையும், அவற்றின் இடத்தில் இடம் பெற்றுள்ள விண்டோஸ் 10 அம்சங்களையும் இங்கு பார்க்கலாம்.

ஸ்டார்ட் ஸ்கிரீன் இடத்தில் ஸ்டார்ட் மெனு: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மிக மோசமாகப் பயனாளர்களை எரிச்சல் அடைய வைத்தது, சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், நேராக அதன் Start ஸ்கிரீன் திறக்கப்பட்டு நமக்குக் காட்சி அளித்ததுதான். 

உங்களிடம் டேப்ளட் பி.சி. அல்லது மொபைல் போன் இருந்தால், இது சரியானது என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், பாரம்பரியமாக நாம் பயன்படுத்திப் பழகிப் போன, கீ போர்ட் மற்றும் மவுஸ் இணைத்துச் செயல்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இந்த ஸ்கிரீன் தோற்றம் அந்நியமாக இருந்தது. 

நம் கைகளைக் கட்டிப் போட்டது போல உணர்வு ஏற்பட்டது. ஏன் என்றால், வழக்கமாக நாம் பயன்படுத்திய ஸ்டார்ட் மெனு அதில் இல்லை. மைக்ரோசாப்ட் இதனை அடுத்து வந்த விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் ஒரு மாதிரியாகச் சரிப்படுத்தியது. 

அப்போது கூட ஸ்டார்ட் மெனு தராமல், ஸ்டார்ட் பட்டனைத் தந்தது. முழு மெனு தரப்படவில்லை. இதனை மக்கள் விரும்பவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்குத் தெரிய வர, விண்டோஸ் 10ல், ஸ்டார்ட் மெனுவினை இணைத்துவிட்டனர். அத்துடன், விண்டோஸ் 8ல் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட செயலிகளுக்கான மற்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் டைல்ஸ் கட்டங்களும் தரப்பட்டுள்ளன.

சார்ம்ஸ் பார் (Charms Bar) இடத்தில் ஆக் ஷன் செண்டர் (Action Center): விண்டோஸ் 8 வெளியானபோது, அதனை வடிவமைத்தவர்கள் தாங்கள் தரும் மிக அருமையான வசதி என்று சார்ம்ஸ் பார் வசதியைக் குறிப்பிட்டனர். இது தொடு உணர் திரை உள்ள சிஸ்டங்களுக்குத் தான் சரியானதாக இருந்தது. 

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்தவர்கள், இதனை அவ்வளவாகப் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், நாம் எதிர்பாராத நேரத்தில், இந்த சார்ம்ஸ் பார் தானாக எழுந்து வந்து இம்சை தருவதாகவே பயனாளர்கள் உணர்ந்தனர். 

எனவே, இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நீக்கப்பட்டுவிட்டது. அதனிடத்தில் Action Center தரப்பட்டுள்ளது. இங்கு இமெயில், ட்விட்டர், சிஸ்டம் குறித்த அறிவிப்புகள் மற்றும் பிற அப்ளிகேஷன் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. இதனை நாம் வேண்டும் என்றால் பார்க்கவும், விரும்பாத நேரத்தில் அழுத்தி வைக்கவும் கீ தரப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இடத்தில் எட்ஜ் பிரவுசர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இரண்டு பதிப்புகளுக்குப் பதிலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10ல், எட்ஜ் பிரவுசரைத் தந்துள்ளது. விண்டோஸ் 8ல் இருந்த ஒரு இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு தொடு உணர் திரைகளுக்கானது. இன்னொன்று, வழக்கமான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கானது. ஆனால், இந்த இரு பதிப்புகளின் செயல்பாடு வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருந்து இயங்கியது. 

நாம் இணைய தளத்திற்கான முகவரி லிங்க்கைக் கிளிக் செய்தால், எந்த பதிப்பு அதனை நமக்குத் தரப்போகிறது என்பது தெரியாது. இந்தக் குழப்பமும், பிரவுசர்களும் இருந்த இடத்தில், முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும் எட்ஜ் பிரவுசர் தரப்பட்டுள்ளது. பழைய தொழில் நுட்பத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. 

எட்ஜ் பிரவுசர் நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி செயல்படுகிறது. மிக வேகமாகவும் இயங்குகிறது. 


4ஜி அதிவேக சேவை - போட்டியிடும் நிறுவனங்கள்

அதிவேகமாக இணையத்தைத் தரும் 4ஜி தொழில் நுட்ப சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்த சேவையைத் தரும் முன்னர், முந்திக் கொண்டு தர, ஏர்டெல் முயற்சித்து வருகிறது. 

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டேட்டா சேவை தற்போது 20 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பருக்குள் இது 44 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. மற்ற சில நகரங்களில், சோதனை முயற்சியில் உள்ளது. 

இப்போது இயக்கத்தில் உள்ள நகரங்களில் உள்ள பயனாளர்கள் தரும் பின்னூட்டத்தின் அடிப்படையில், மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற நகரங்களில் இந்த சேவையை வழங்க இருக்கிறது. 

இந்த அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம், தற்போது 3ஜி சேவைக்கு வாங்கப்படுவதைப் போலவே இருக்கும். 

1 ஜி.பி.டேட்டா ரூ.250, 2 ஜி.பி. டேட்டா ரூ.450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்டோஸ் 10ல் விலக்கப்பட்ட அம்சங்கள்

வரும் ஜூலை 29ல் கிடைக்க இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பலரும் ஆவலுடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம்.

1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். மைக்ரோசாப்ட் தன் வலைமனையில் (http://www.microsoft.com/en-us/windows/windows-10-specifications) இதனை அறிவித்துள்ளது. 

விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் அல்ட்டிமேட், விண்டோஸ் 8 ப்ரோ, விண்டோஸ் 8.1 ப்ரோ ஆகிய சிஸ்டம் தொகுப்புகளிலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொண்டால், அவற்றில், விண்டோஸ் மீடியா சென்டர் இருக்காது. அப்டேட் செய்யப்படுகையில் இந்த அப்ளிகேஷன் நீக்கப்படும்.

2. டிவிடி இயக்கும் செயலி: விண்டோஸ் மீடியா சென்டர் வழியாக, டிவிடிக்களை இயக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். மீடியா சென்டர் நீக்கப்படுவதால், டிவிடிக்களை இயக்க தனியான ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும்.

3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் நாம் இயக்கிக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

4. விண்டோஸ் 10 ஹோம் பதிப்பினைக் கொன்டிருப்பவர்களின் கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் பைல்கள் தாமாகவே பதியப்படும். விண்டோஸ் 10 ப்ரோ மற்றும் என்டர்பிரைஸ் ஆகிய தொகுப்புகள் வைத்திருப்போர் மட்டும் அப்டேட் பைல்கள் தங்களுக்குத் தேவை இல்லை என்று கருதினால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும்படி அமைக்க வசதி தரப்பட்டுள்ளது.

5. பிரபல விளையாட்டுகள்: சாலிடெர், மைன்ஸ்வீப்பர் மற்றும் ஹார்ட்ஸ் ஆகிய விளையாட்டுகள், விண்டோஸ் 7 தொகுப்பு வரை தரப்பட்டு வந்தன. விண்டோஸ் 10 சிஸ்டம் இதன் மீது அப்டேட் செய்யப்படுகையில், இவை நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக, “Microsoft Solitaire Collection” மற்றும் “Microsoft Minesweeper” என்ற பெயரில் இந்த விளையாட்டுகள் நிறுவப்படும்.

6. விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ்: இந்த செயலி உங்கள் சிஸ்டத்தில் பதியப்பட்டிருந்தால், ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் நீக்கப்படும். இதற்குப் பதிலாக, க்ளவ்ட் ஸ்டோரேஜ் வகைப் பதிப்பு ஒன்று நிறுவப்படும்.

மேலே சொல்லப்பட்டவை நீக்கப்பட்டாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் தர இருக்கும் புதிய வசதிகள் பல, இந்தக் குறையினை நீக்கிவிடும். புதிய எட்ஜ் பிரவுசர், புதிய இணைந்த கேண்டி க்ரஷ் கேம், விண்டோஸ் போன் மேப் அப்ளிகேஷன் எனப் பலவற்றை இந்த வகையில் குறிப்பிடலாம்.


பெருகிவரும் இந்திய இணையம் குறித்து கவலை

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருவதன் மூலம், இணையத்தை அணுகித் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 

இது குறித்து, அனைத்து நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது அமெரிக்க அரசு தான்.

மிக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் இந்தியாவில் பெருகி வருவதனால், ஆன் லைன் தகவல் திருட்டும் அதிகமாகும் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள், அண்மையில் அளித்துள்ள அறிக்கையில் (Special 301 Report for 2015) இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் முடிவிற்குள்ளாக, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில், 21 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது கடந்த ஆறு மாதங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வளர்ச்சி 23% ஆக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் இறுதியில், 37 கோடியாக உயர்ந்து, உலகில் இரண்டாவது நாடாக அமையும் என்று தெரிகிறது. 

இந்த அபரிதமான வளர்ச்சியை எதிர்பார்த்து, இந்திய அரசு, தன் சட்டதிட்டத்தில், இணையத் தகவல் திருட்டைத் தடுப்பதற்குண்டான, பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும், சட்டப் பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றை அமல்படுத்தும் வழிகளையும், அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. 

இணையத்தில் தகவல் திருட்டுகளைக் கண்டறியும் எக்ஸிபியோ (Excipio) என்னும் நிறுவனம், அண்மையில், கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்கக் கூடிய சில திரைப்படங்களை, அதிக அளவில் திருட்டுத் தனமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ததில், இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளது. 

வின் டீசல், என்னும் நடிகர் நடித்த ப்யூரியஸ் 7 (Furious 7) என்னும் திரைப்படத்தினை, சட்டத்திற்குப் புறம்பாக, சென்ற ஏப்ரல் வரை, இந்தியாவில் 5 லட்சத்து 78 ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உள்ளன.

இது போன்ற திருட்டுத்தனமான தரவிறக்கச் செயல்களுக்குத் துணை போகும் Extratorrent.cc என்னும் இணைய தளம், இந்தியாவில் மிகவும் பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளன. பலரும் இதனைப் பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

துரதிருஷ்டவசமாக, இந்த இணைய தளம் உக்ரைன் நாட்டில் உள்ள சர்வரில் இயங்குகிறது. இந்த தளத்தில், 14 லட்சம் திருட்டு பைல்கள், திருடப்படுவதற்கென்றே உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஆயிரம் கோடி பேர் இதிலிருந்து பைல்களைத் திருட்டுத்தனமாகப் பைல்களைத் தரவிறக்கம் செய்கின்றனர்.

இது போன்ற இணையத் திருட்டுக்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இணையப் பயனாளர்கள் உயர்ந்து வரும் பொழுது, மோசமான விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். இதனையே அமெரிக்க அரசு விரும்புகிறது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes