அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை

மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அந்தளவிற்கு சுலபமாக்கிவிட்டது 

இன்றைய நவீன விஞ்ஞானம். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். கனமான பொருட்களை தூக்குகின்றனர், கனரக தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.

அமெரிக்காவின் சான்டீகோ நகரில் க்ரையோகார் (Cryocor) என்ற மருத்துவ நிறுவனம் க்ரையோபிளாட்டர் என்ற ஒரு நூதனக் கருவியை கண்டுபிடித்துள்ளது. இக்கருவியின் மூலம் சீரற்ற இதய துடிப்பு மற்றும் இதயத்தில் ஏற்படும் அரித்மியா (Arrhythmia) என்றழைக்கப்படும் குருதி ஊட்டக்குறை நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்நோய்க்குளாகியிருக்கின்றனர். க்ரையோகார் நிறுவனம் 2007-ல் இக்கருவியின் சோதனைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத்திற்கு இதன் விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். அரித்மியா என்றழைக்கப்படும் இந்த குருதி ஊட்டக்குறை இதயத்தில் இரத்தம் உறைந்துவிடுவதாகும். இதன் காரணமாக இதய தாக்கம் (Heart Stroke) ஏற்பட வாய்ப்புள்ளது. க்ரையோகார் தொழில்நுட்பம் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்டு 2002லிருந்து செயல்முறையில் உள்ளது. 800 நோயாளிகள் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். 

குருதி ஊட்டக்குறை அல்லது சீரற்ற இதயத்துடிப்பு இவைகளினால் இதய தசைகள் பாதிப்படைந்து விடுகின்றன. இதனால் இதய தாக்கம் (Heart Stroke) ஏற்படுகிறது. இதயத்தின் துடிப்பு இதயத்தினுடைய மின் தூண்டுதல் முறைகளினால்  ஏற்படுகிறது. இதனால் இதயத் தமனி, இதய அறை, தசைகளில் சுருங்கி விரியும் தன்மை ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கும், இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் சீரான இரத்த வினியோகம் நடைபெறுகிறது. குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது இந்த இதயத்தின் மின் தூண்டுதல் முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது சீரற்று இயங்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் இரத்தம் உறைய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு தற்பொழுது மருந்துகள், அறுவை சிகிச்சைகள், ரேடியோ அலை இவைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரேடியோ அலை  முறையினால் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் அகற்றப்படுகிறது. 

அறுவை சிகிச்சை முறை மற்றும் ரேடியோ அலை சிகிச்சை முறைகளுக்கு சில சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மயக்கமருந்து (குளோரோபார்ம்), மார்பகத்தை அறுவை சிகிச்சைக்காக திறக்க வேண்டிய சிக்கலான நிலைகள் ஏற்படுகிறது. மருந்துகளை உபயோகிப்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் க்ரையோகார் முறையில் விஞ்ஞானிகள் பல்வேறு நூதன முறைகளை உபயோகப்படுத்தியுள்ளனர். 

க்ரையோப்ளேட்டர் கருவியின் மூலம் நூதன சிகிச்சை முறையில் வளைந்து செல்லக்கூடிய குழலை (Flexible Tube) உட்செலுத்தி இதயம் குருதி ஊட்டக் குறை பாதித்த திசுவை -90 டிகிரிக்கு கீழ் குளிர்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த திசு அழிக்கப்படுகிறது. இதனால் இதய அறைகளில் சீரான நிலை ஏற்படுகிறது. 

"இம்முறைக்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை வலி போன்ற உபாதைகளும் ஏற்படுவதில்லை'' என்று சான்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இதய நோய் பிரிவு தலைவர் டாக்டர் கிரேக் ப்ளெட் கூறுகிறார்.

பாதகத்தையும் சாதகமாக்கும் வல்லமை படைத்த விஞ்ஞானம் நாளுக்கு நாள் புரட்சியை செய்துகொண்டு தான் இருக்கிறது. மிகப்பெரிய கருவிகளை நாள் கணக்கில் பதட்டத்துடன் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகளையெல்லாம் சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கும் அளவிற்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதயத்திற்கு இதமான சிகிச்சை தரும் விஞ்ஞானத்திற்கு நமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்போம்!


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes