இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்


மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது. இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.
 
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 

குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். 

விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 

பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ் (Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக காஸ்பெர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றை ஒன்று அழிக்கவிடாமல் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளதால், இரண்டையும் தயாரித்த குழுக்கள் ஒருவருக்கொருவர் ஒரே தீய நோக்கத்துடன் இந்த வைரஸ்களைத் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீ போன் வைரஸ் பல பெயர்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. 

அவை (Kaspersky), W32/Autorun.worm.aaeh!gen (McAfee), W32/VobFusBX (Sophos), Trojan horse ( Symantec), TrojanFBZZ! 41E0B7088DD9 (McAfee), Trojan. Win32.SelfDel.aqhh (Kaspersky), Trojan. Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), BeeboneFMQ! 039FA2520D97 (McAfee), W32.Changeup! gen40 (Symantec) and Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky).

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.


அமெரிக்காவினை முந்தியது இந்தியா

உலகில் விற்பனைச் சந்தை குறித்து கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வு நடத்தி வரும் இப்ஸாஸ் (IPSOS) என்னும் நிறுவனம், ஸ்மார்ட் போன் வழியே இணையத்தைப் பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, இதே வகையில் இயங்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என அறிவித்துள்ளது. 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில், 36 சதவீதம் பேர், 18 முதல் 29 வயதினராக இருக்கின்றனர். சமூக தளங்கள் இளைஞர்களின் வாழ்வில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. 

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்தும் 11 கோடி பேர்களில், 6 கோடியே 20 லட்சம் பேர், பேஸ்புக் தளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.


2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை


சாம்சங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, அதன் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன் விற்பனை , இதுவரை 2 கோடியை எட்டியுள்ளது. இது அறிமுகமாகி இரண்டு மாதத்தில் ஏற்பட்டுள்ள விற்பனையாகும். 

இது உண்மையானால், இதன் முன்னோடியான சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் விற்பனையைக் காட்டிலும், இதன் விற்பனை 1.7 பங்கு வேகமாகும். 

இப்படியே இதன் விற்பனை தொடருமானால், சாம்சங் நிறுவனத்தின் மிகப் பிரபலமான ஸ்மார்ட் போனாக, காலக்ஸி எஸ்4 பெயர் எடுக்கும். 

இந்தியாவில், குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போனைக் கொடுத்து, சாம்சங் எஸ் 4 வாங்குவோருக்கு, அதன் விலையில் ரூ.5,000 தள்ளுபடி தரப்படுகிறது. 

எந்த எந்த ஸ்மார்ட் போன் என, டீலரிடம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன், ரூ.2,499 மதிப்புள்ள, ஸ்மார்ட் எஸ் வியூ கவர் இலவசமாகத் தரப்படுகிறது. வோடபோன் நிறுவனம், சலுகையாகச் சில சேவைத் திட்டங்களை, எஸ்4 வாங்குவோருக்கு வழங்குகிறது.


விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்


விண்டோஸ் எக்ஸ்பிக்கு பாதுகாப்பு நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதனாலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பழகுவதற்குச் சிரமமாக இருக்கும் என்ற தகவலின் அடிப்படையிலும், பலர் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். 

புதிய கம்ப்யூட்டர் வாங்கும் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 8 தவிர்த்து, விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

வழக்கமான விண்டோஸ் சிஸ்டம் தந்து வந்த வசதிகளோடு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முதன்மையான, அடிக்கடி நாம் பயன்படுத்தக் கூடிய சில வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


1. பின் அப் (Pin Up): 

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.

2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும். 

3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம். 

4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்துவிடுவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். 

முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை, இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.

5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.

6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம். 

விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டு முழுமையாக இந்த சிஸ்டம் தரும் பயன்களை அனுபவிக்கலாம்.


பிரவுசர் சந்தையில் கூகுள் குரோம் முதலிடம்


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது. 

தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் பிரவுசர் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

அதுவும் மிக அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்த முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, குரோம் உலகாளவிய அளவில், 43 சதவீத இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. 

ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவீத வாடிக்கையாளர்களையே, தன்னிடத்தில் வைத்துள்ளது. பயர்பாக்ஸ், ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில், சபாரி மற்றும் ஆப்பரா உள்ளன. 

குரோம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஸ்டேட் கவுண்ட்டர் கண்டறிந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கலாம். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தரும் பிரவுசரை அதிகம் பயன்படுத்துவோர் வர்த்தக நிறுவனங்களே. 

வார இறுதி நாட்களில் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவாகவே தான் இருக்கும். இவர்களும், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எனச் சென்றால், மைக்ரோசாப்ட் பிரவுசரின் பயனுறைநாள் எண்ணப்படும் காலம் விரைவில் வரும். 

குரோம் பிரவுசர் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தது எவ்வாறு என அறிய சிலருக்கு ஆவலாக இருக்கலாம். மைக்ரோசாப்ட் இந்த பிரிவில், யாரும் போட்டிக்கு வர முடியாத நிலையில் இருந்து வந்தது. 

சற்று வேகமும், நான் எண்ணுகிறபடி வளைக்கக் கூடிய யூசர் இண்டர்பேஸ் அமைந்த பிரவுசரை மக்கள் தேடிய போது, பயர்பாக்ஸ் கிடைத்தது. ஆனால், குரோம் வந்த பின்னர், அதுவும் மாறியது. 

மொபைல் சாதனங்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்புடன் கிடைக்கப்பெற்ற குரோம் பிரவுசரை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியதால், குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்தது. 

இதனுடன் வேகம், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தரப்படும் வசதிகள், குரோம் பிரவுசருக்கு இந்த இடத்தைக் கொடுத்துள்ளன.


ரூ.4599க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

பிளை நிறுவனம், Fly F351 என்ற பெயரில், தொடக்கநிலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை, ரூ.4,599 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

3.5 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரட் சிஸ்டம், 3 எம்.பி. பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. முன்புறக் கேமரா, இரண்டு சிம், நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் தொழில் நுட்பம், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2ஜி, வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி., 256 எம்.பி. ராம் மெமரி, 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 1200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியன இந்த மாடல் போனின் சிறப்பு அம்சங்களாகும். 

கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.4,599 எனக் குறிக்கப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், F40, F51, F45s மற்றும் F8s என்ற ஸ்மார்ட் போன் மாடல்களை பிளை அறிமுகப்படுத்தியிருந்தது. இவற்றின் விலை ரூ. 4,500 முதல் ரூ. 13,499 வரை குறிக்கப்பட்டிருந்தன.


பேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி


பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். 

நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். 

இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். 

சிலர் தேவையற்ற வகையில் அரசியல் தகவல்களையும், பெண்களின் படங்களையும் இடுவார்கள். இவர் களை உடனே நம் நண்பன் என்ற நிலையிலிருந்து நீக்கவே விரும்புவோம். இதற்கு என்ன செய்யலாம்?

பேஸ்புக் சென்று, குறிப்பிட்ட அந்த நபரின் டைம்லைன் செல்லுங்கள். அந்த நபருக்கான லிங்க்கில் கிளிக் செய்தால் போதும். 

உங்களுக்கு அவர் குறித்த தளம் கிடைக்கும். இந்த டைம் லைன் பாக்ஸின் மேலாக Friends என ஒரு லிங்க் கிடைக்கும். 

இதில் கிளிக் செய்தால் கிடைக்கு மெனுவில், Unfriend என்பதில் கிளிக் செய்திடவும். 

இதனைச் செய்தால், அவரின் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். மீண்டும் அவருக்கு நண்பன் ஆக விரும்பினால், மீண்டும் ஒரு new friend request கொடுக்க வேண்டும்.


41 மெகா பிக்ஸெல் திறனுடன் நோக்கியா லூமியா 1020


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியாவின் லூமியா 1020 மொபைல் போனுக்கு ஒரு சான்றிதழ் அளிப்பதாக இருந்தால், மூன்றே சொற்களில் தந்துவிடலாம். அவை: 41 மெகா பிக்ஸெல் கேமரா.

இந்த மொபைல் போன் வெளியிடப்படும் வரை இந்த தகவல் வெளியே வராமலும், உறுதிப்படுத்தப்படாமலும் இருந்தது. 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு அனைத்து நாடுகளிலும் வந்துள்ளது. இந்த விண்டோஸ் போன் 8, அமெரிக்காவில், ஜூலை 16 முதல், முன் பதிவினைப் பெற்று வருகிறது. 

ஏ.டி. அண்ட் டி நிறுவனத்திடம் மட்டுமே மொபைல் சேவை பெறுபவர்களுக்கு, அமெரிக்காவில் இந்த போன் வழங்கப்படுகிறது. இரண்டாண்டு கட்டாய சேவையுடன், 300 டாலருக்கு முன் விற்பனைப் பதிவு நடைபெற்றது. ஜூலை 26ல் இந்த போன் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

இந்த போனைப் பற்றிப் பேசுபவர்கள் அனைவருமே, இதன் மெகா மெகா கேமராவினைப் பற்றியே பேசுகிறார்கள். மிகு திறன் கொண்ட பெரிய சென்சார், நோக்கியாவின் பியூர்வியூ இமேஜ் ப்ராசசிங் சாப்ட்வேர் ஆகியவை இதன் தனிச் சிறப்பாகக் கருதப்படுகின்றன. 

இவற்றுடன் ஆறு லென்ஸ் கொண்ட கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ், அகலக் கோண வாக்கில் படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளது. கூடுதல் ரெசல்யூசன் பயன்படுத்தப்படுகிறது. பெரிய ஸெனான் ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கேமராவில், எடுக்கப்படும் வீடியோ, 1080 பி எச்.டி. திறனுடன், நொடிக்கு 30 பிரேம் எடுக்கும் திறன் கொண்டுள்ளது.


ஆண்ட்ராய்ட் விட்ஜெட்கள்


கைகளில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது முதல் இடத்தில் உள்ளது. 

பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. 

நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனம் எதனையும் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலும், இது குறித்து அறிந்திருப்பது நல்லதே. ஏனென்றால், என்றாவது ஒரு நாள், கூடிய விரைவிலேயே ஆண்ட்ராய்ட் கொண்டுள்ள சாதனம் ஒன்றினை உங்களுக்கென நீங்கள் இயக்கும் நாள் வரலாம்.

ஆண்ட்ராய்ட் திரையில், புரோகிராம் ஐகான்களாகக் காட்டப்படுகின்றவையே விட்ஜெட் ஆகும். ஆனால், பெர்சனல் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. 

விட்ஜெட் கொண்டுள்ள புரோகிராம், அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொண்டு, விட்ஜெட்டில் அதனைக் காட்டும். எடுத்துக் காட்டாக, காலண்டர் கொண்டுள்ள ஒரு விட்ஜெட், வரப்போதும் நிகழ்வுகள் குறித்து உங்களுக்குக் காட்டும். 

அப்போதைய நேரத்தைக் காட்டும் கடிகாரமும் ஒரு விட்ஜெட் தான். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிலேயே இடம் பெற்றவையாக சில விட்ஜெட்டுகள் உள்ளன. சில கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட புரோகிராம்களின் பிரதிநிதியாகவும் உள்ளன. 

உங்களுடைய சாதனத்தில், எந்த புரோகிராம்களின் சார்பாக இந்த விட்ஜெட்கள் இடம் பெற்றுள்ளன என்று பார்க்க ஆசையா! உங்கள் சாதனத்தில், ஹோம் திரைக்குச் செல்லவும் அங்கு அப்ளிகேஷன் லிஸ்ட் ஐகானைத் தட்டவும். 

இந்த ஐகான் நான்கு சிறிய சதுரக் கட்டங்கள், நான்கு வரிசையாகவோ, இரண்டு வரிசையில், வரிசைக்கு மூன்று சதுரங்களாகவோ அமைக்கப்பட்டிருக்கலாம். இதனை டேப் செய்தால் கிடைக்கும் திரையில், மேலாக இரண்டு டேப்கள் இருப்பதைக் காணலாம். 

ஒன்று அப்ளிகேஷனுக்காகவும் (Apps) இன்னொன்று விட்ஜெட்டுகளுக்காகவும் (Widgets) இருக்கும். இதில் விட்ஜெட் டேப்பினைத் தட்டித் திறந்தால், உங்கள் சாதனத்தில் பதியப்பட்டுள்ள சாதனங்களுக்கான விட்ஜெட்டுகள் அகர வரிசைப்படி காட்டப்படுவதனைப் பார்க்கலாம். 

நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால், அவற்றிற்கான விட்ஜெட்டுகள் இங்கு இடம் பெறும். இந்த திரையில், இடது வலதாக விரலால் தேய்த்திடும் போது, அனைத்து விட்ஜெட்களையும் காணலாம். 

விட்ஜெட் ஒன்றினை, உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஹோம் திரையில் அமைக்க வேண்டும் எனில், விட்ஜெட் ஐகானின் மீது அழுத்தியவாறு சில நொடிகள் இருக்கவும். அந்த விட்ஜெட் பாப் அவுட் ஆகி, உங்களுடைய ஹோம் திரை காட்சி அளிக்கும். 

இந்த திரையில், மேலாக ஒரு கட்டம் கோட்டினால் அமைக்கப்பட்டு காட்சி அளிக்கும். இந்தக் கட்டத்தினுள்ளாக, நீங்கள் ஹோம் ஸ்கிரீனில் அமைக்க விரும்பும் ஐகான் எங்கு பொருந்தும் எனக் காட்டப்படும். 

தொடர்ந்து அந்த விட்ஜெட்டினைப் பிடித்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, காட்டப்படும் இடத்தில் அமைக்கலாம். விட்ஜெட்கள் வழக்கமான ஐகான்களைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருப்பதால், மற்ற புரோகிராம் ஐகான்கள், சற்று நகர்ந்து இந்த விட்ஜெட் ஐகானுக்கு, ஹோம் ஸ்கிரீனில் இடம் கொடுக்கும். 

உங்களுடைய ஹோம் ஸ்கிரீனில், ஏற்கனவே அதிகமான எண்ணிக்கையில் ஐகான்கள் இடம் பெற்று, புதிய விட்ஜெட்டுக்கு இடம் இல்லை எனில், இதற்கென நீங்கள் முயற்சிக்கையில், ஓர் எச்சரிக்கை செய்தி காட்டப்படும். 

இந்த வேளையில், அடுத்த ஹோம் ஸ்கிரீனுக்கு நீங்கள் விட்ஜெட்டினைக் கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். இதற்கு அந்த விட்ஜெட்டினை அழுத்திப் பிடித்தவாறு, வலது அல்லது இடது ஓரத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டியதிருக்கும். 

அல்லது, ஏற்கனவே உள்ள ஐகான்களை, அதன் மீது சற்று நேரம் அழுத்தியவாறு இருக்க வேண்டும். பின்னர், அதனை X அல்லது Remove என்று திரை மேலாக உள்ள இடத்திற்கு இழுத்துச் சென்று விட்டுவிட வேண்டும்.


தகவல் தொழில் நுட்ப சொற்களும் விளக்கமும்


சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம்மால் வெளிப்படுத்த முடியாது. 

ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன்மையும், சாதனங்களின் செயல்பாடுகளுமே அவற்றின் தன்மையை முழுமையாக விளக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன. 


Failover

பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.


MMC Multimedia Card: 

பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.


Back up Domain Controller: 

விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. 

அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும். 


RAID Redundant Array of Independent Disks: 

ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.


Downtime: 

ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.


Backup Rotation: 

பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. 


(DES) Data Encryption Standard: 

மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.


Cryptography: 

தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.


Blowfish Encryption

ஒரு சீரான என்கிரிப்ஷன் வழிமுறை. இதனைத் தற்போது பயன்படுத்தும் (DES) என்கிரிப்ஷன் முறைக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். அதைக் காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. என்கிரிப்ட் செய்ததைப் பெறுவதற்கான கீயும் மிகவும் ரகசியத் தன்மை உள்ளதாக அமைகிறது. 


Mirror Site: 

ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப்சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்துகின்றனர்.


Event Handler: 

ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.


ஜிமெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப


மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். 

ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா! போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப விரும்புபவர்கள், அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர். 

அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. பல வாசகர்கள் இது குறித்து விளக்கங்கள் கேட்டு கடிதம் எழுதி உள்ளனர். ஜிமெயில் அஞ்சலில் படம் ஒன்றை ஒட்டி அனுப்பும் வழி முறைகளை இங்கு காணலாம். 

ஜிமெயில் தளத்தைத் திறந்து, Gmail Labs செல்லவும். (இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால், ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) 

இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும். இதில் “Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் “Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அப்படியே கீழாகச் சென்று, “Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும். 

இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து, அவற்றை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். 

போட்டோ குறித்த குறிப்புகளைக் கீழாக எழுதலாம். இவ்வாறு போட்டோவினை இணைக்கையில் கூகுள் Remember: Using others’ images on the web without their permission may be bad manners, or worse, copyright infringement” என ஓர் எச்சரிக்கை தரும். 

ஏனென்றால், போட்டோ மற்றும் படங்களின் உரிமையாளரின் அனுமதி இன்றி, அவற்றை உங்கள் மெயிலில் பயன்படுத்துவது தவறாகும்.

நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன், ஜிமெயில் அதனை நீங்கள் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டிவிடும். 

இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம். அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


ஆப்பிள் நிறுவனம் தரும் புதுமை


அண்மையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதுமையான கம்ப்யூட்டர் துணை சாதனத்திற்கு காப்புரிமை கோரியுள்ளது. 

இது வர்த்தக ரீதியாக வெளியாகும் பட்சத்தில், கம்ப்யூட்டர் மற்றும் பயன்பாட்டில், இன்னும் ஒரு கூடுதல் வசதி கிடைக்கும். 

இந்த புதிய வடிவமைப்பில், இரு வேறு வகையான துணை சாதனங்கள், ஒரே போர்ட்டில் இணைந்து செயல்பட முடியும். ''Combined Input Port'' என இதனை ஆப்பிள் அழைக்கிறது. 

இரண்டு வகையான கனெக்டர்கள் கொண்டுள்ள, இரு வகையான போர்ட்களை ஒரே இடத்தில் அமைப்பது சிரமம். 

இதில் வெற்றி கண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். யு.எஸ்.பி. சாதனம் ஒன்றையும், மெமரி கார்டினையும் இணைக்கும் வகையில் ஒரே போர்ட்டினை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. 

தற்போதைக்கு இந்த இருவகை சாதன இணைப்பு என்றாலும், தொடர்ந்து வெவ்வேறு இணைவிக்கும் இடங்கள், ஒன்றாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. 

இதன் மூலம் நோட்புக் கம்ப்யூட்டர்கள் இன்னும் சிறிதாகவும், தடிமன் குறைவாகவும் அமையலாம்.


விண்டோஸ் 8 - சில குறிப்புகள்டச் கீ போர்ட்: மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். 

எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். 

இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை நீக்கிவிடலாம். மாற்றத்தினை ஏற்படுத்த Win + I > Change PC Settings > General and customise the keyboard எனச் சென்று, தேவையான செட்டிங்ஸ் அமைக்கவும்.


ஹைபர்னேட்/ஸ்லீப்: கம்ப்யூட்டரை நாம் இயக்காமல் வைத்திருக்க விரும்பினால், அதனை Hibernate அல்லது Sleep மோடில் அமைத்து வந்தோம். ஷட் டவுண் டயலாக் பாக்ஸில் இது கிடைக்கும். விண்டோஸ் 8 ஷட் டவுண் டயலாக் பாக்ஸில் இதனை நாம் காண முடியாது. 

ஆனால், இது உங்களுக்குத் தேவை எனில், இவற்றைக் கொண்டு வரலாம். இதற்கென, Control Panel Power Options (powercfg.cpl) புரோகிராமினை இயக்கவும். இதன் இடது பிரிவில், ‘Choose what the power buttons do’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

இங்கு ‘Change settings that are currently unavailable’ என்று ஒரு லிங்க் கிடைத்தால், அதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம், உங்கள் கம்ப்யூட்டர் Hibernate மற்றும் Sleep ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறதா எனக் கண்டறிந்து, அவற்றைக் காட்டும். 

இவற்றில் எதனை எல்லாம் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அவற்றின் செக் பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தி, மாற்றங்களை சேவ் செய்து வெளியேறவும். இனி, ஷட் டவுண் டயலாக் பாக்ஸில், இந்த ஆப்ஷன்கள் காட்டப்படும்.இரண்டு அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயக்கப்படும் அப்ளிகேஷன்களை “immersive” அப்ளிகேஷன் என அழைக்கின்றனர். மானிட்டரின் திரை முழுவதும் காட்டப்படும் விதத்தினையே இது குறிக்கிறது. 

ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷனத் திரையில் பார்க்கவும் வழி உள்ளது. திரையின் இடது புறமாக ஸ்வைப் செய்தால், இறுதியாக நீங்கள் பயன்படுத்திய அப்ளிகேஷன், சிறிய தம்ப்நெயில் போலக் காட்சி அளிக்கும். 

நடப்பில் இயக்கப்படும் அப்ளிகேஷன் திரையின் மற்ற இடத்தை எடுத்துக் கொள்ளும். இந்த அப்ளிகேஷன்களை மாற்றி மாற்றி ஸ்வாப் செய்து முழுத் திரைக்குக் கொண்டு வந்து இயக்கத்தினைப் பெறலாம்.


விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11


விரைவில் வெளியாக இருக்கும், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இயங்கும் வகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியானபோது, முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசர் வெளியாகவில்லை. விண்டோஸ் 8ல் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது. 

பின்னர், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பினைக் கண்ட, மைக்ரோசாப்ட், விண்டோஸ்7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 ஐ வெளியிட்டது. 

விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளாமலேயே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பதிப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்கு மகிழ்ச்சியான தகவலாக அமையும். 

விண்டோஸ் 8.1 பொதுமக்களுக்கு வெளியிடப்படும் போதுதான், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 உடன் வெளியாகும். இருப்பினும் இதன் சோதனைப் பதிப்பைத் தற்போது, மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஐந்து வயதை எட்டிய ஆப்பிள் ஸ்டோர்


2008 ஆம் ஆண்டு இணைய வெளியில், ஆப்பிள் சாதனங்களுக்கான புரோகிராம்களை பதிந்து வாடிக்கை யாளர்களுக்கு, இலவசமாகவும், கட்டணம் பெற்றும் தர தொடங்கிய ஆப்பிள் ஸ்டோர், தன் ஐந்தாவது ஆண்டினைத் தற்போது எட்டியுள்ளது. 

ஸ்மார்ட் போன், அழைப்புகளை ஏற்படுத்தவும், பெறவும், மின் அஞ்சல்களை அனுப்பிப் பெறவும், இணையத்தை உலா வர வும் மட்டும் பயன்படும் ஒரு சாதனம் என்ற நிலையை, இந்த ஆப்பிள் ஸ்டோர் மாற்றியது. 

குறிப்பாக, மொபைல் சாதனங்களுக்கான அப்ளிகேஷன்களை விற்பனை செய்திடும் ஒரு சந்தை என்ற செயலாக்கத்தை, ஆப்பிள் ஸ்டோர் தான் முதலில் ஏற்படுத்தியது. 

அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைவருக்கும் உரியதே என்ற கோட்பாட்டுடன், அனைத்தையும் ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து புதிய பாதையை உருவாக்கியது ஆப்பிள் ஸ்டோர். ""இதனைப் போல, இதற்கு முன் எதுவும் இருந்ததில்லை; 

அடிப்படையில் இது டிஜிட்டல் உலகை மாற்றியது'' என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். இதன் பின்னர் வந்த ""கூகுள் பிளே'' ஸ்டோர், பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் எண்ணிக்கையில், மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், முக்கிய அதிகப் பயனுள்ள பல அப்ளிகேஷன்களுக்கு, ஆப்பிள் ஸ்டோர் பெயர் பெற்று விளங்குகிறது. 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிறிய மற்றும் பெரிய அப்ளிகேஷன்களை மக்களுக்குச் சீராகவும், எளிதாகவும் வழங்குகிற முறையிலேயே, இது வெற்றி அடைய முடியும். 

ஆப்பிள் ஸ்டோரில் தற்சமயம் ஒன்பது லட்சம் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்டோரிலிருந்து 5 ஆயிரம் கோடி முறை புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 

புரோகிராம்களை டெவலப் செய்தவர் களுக்கு, ஆப்பிள் நிறுவனம் ஓராயிரம் கோடி டாலர் வழங்கியுள்ளது. ஒவ்வொரு புரோகிராமின் விற்பனைத் தொகையிலும், ஆப்பிள் 30 சதவீதப் பணத்தை எடுத்துக் கொண்டாலும், இதற்கென புரோகிராம் டெவலப் செய்வது லாபம் தரும் முயற்சியே என்று பல டெவலப்பர்கள் கூறி உள்ளனர். 

அமெரிக்க நாட்டில், இன்னும் ஐ போன் விற்பனையும் பயன்பாடுமே, முதல் இடத்தில் உள்ளன. இதற்கு ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் எண்ணற்ற புரோகிராம்களும் காரணமாகும்.


நோக்கியாவின் 3ஜி போன்கள்


நோக்கியா, புதியதாக, மூன்று போன்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இவை அனைத்தும் 3ஜி தொடக்க நிலை விலை கொண்டுள்ள போன்களாகும். நோக்கியா 207, 208 மற்றும் 208 டூயல் சிம் என இவை பெயரிடப்பட்டுள்ளன. 

இவை அனைத்திலும் 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. நோக்கியா சிரீஸ் 40 எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 

Facebook, Twitter மற்றும் Whats App ஆகியவற்றிற்கு நேரடி லிங்க் கொண்டுள்ளன. அனைத்து போன்களிலும் மைக்ரோ சிம் கார்ட்களைப் பயன்படுத்தலாம். 3G, GPRS/EDGE ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதில் சார்ஜ் செய்வதற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போன்களின் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தலாம்.

நோக்கியா 208 மற்றும் 208 டூயல் சிம் ஆகிய இரண்டிலும் 1.3 பின்புறக் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். வரும் அக்டோபரில் இவை விற்பனைக்கு வரும். இவற்றின் விலை ரூ.4,000 என்ற அளவில் இருக்கலாம்.


கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?


உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 

அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.

சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக்கையில், முதலில் திரையில் தோன்றும் கட்டத்தில், இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்படும். 

நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில், அந்தக் கம்ப்யூட்டரில் நுழையவில்லை என்றால், அந்த புரோகிராமினைத் திறக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் உங்களுக்கு அனுமதி கிடைக்காது. பைல்களை அழிக்க முற்படுகையிலும், புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையிலும் இதே போல அனுமதி மறுக்கப்படும்.

அனுமதி மறுக்கப்படும் இந்த புரோகிராம்களை இயக்குவதற்கும், புதிய சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதற்கும், உங்களைப் பற்றிய குறிப்பு தொகுதியை (profile), ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் தொகுதியாக மாற்ற வேண்டும். 

உங்களால், அட்மினிஸ்ட்ரேட்டருக்கான சலுகைகளைப் பெறும் வகையில் நீங்கள் லாக் இன் செய்யவில்லை என்றால், முதலில் ஸ்டார்ட் மெனு திறக்கவும். பின்னர், “Shut Down” என்ற பட்டன் அருகே உள்ள, அம்புக்குறி ஐகானில் கிளிக் செய்திடவும். 

பின்னர், “Switch User” என்பதனைத் தேர்ந்தெடுத்து, எந்த வித profileல் நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனையும் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பிரிவை அணுக, மீண்டும் ஸ்டார்ட் மெனு திரும்பி, கண்ட்ரோல் பேனல் பட்டனை அழுத்தவும்.

கண்ட்ரோல் பேனல் மெனுவில், பச்சை நிறத்தில் உள்ள “User Accounts and Family Safety ,""தலைப்பில் கிளிக் செய்திடவும். இது விண்டோவில், மேல் வலது மூலையில் இருக்கும். 

இதில் “User Accounts” என்பதில் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் பெறவும். அடுத்து நீல வண்ணத்தில் தரப்பட்டிருக்கும் “Change Your Account Type,” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இது “Make Changes To Your User Account” என்பதன் கீழாகக் கிடைக்கும். 

இனி உங்கள் profile ஐ அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்ற, “Administrator” என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் விண்டோவின் கீழாக உள்ள “Change Account Type” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

சில வேளைகளில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நுழைவதனாலேயே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பைல்களையும் அணுக முடியாது. 

சில புரோகிராம்களை இயக்கும் முன், அதனை அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க விரும்புவதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இந்த ஆப்ஷனைக் கேட்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், சில செக்யூரிட்டி புரோகிராம்கள் இந்த சோதனையை நடத்தும். 

ஏதேனும் சில புரோகிராம்கள், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக லாக் இன் ஆன பின்னரும், அதன் முழு வசதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், அதன் டெஸ்க்டாப் ஐகானில், ரைட் கிளிக் செய்து, Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துப் பின் இயக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டிற்கு சிஸ்டம் பைல்களை மாற்றும் அனுமதி தரப்படுவதால், நம் அன்றாட பணிகளுக்கு, மைக்ரோசாப்ட், ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது. 

இதனால் சில வசதிக் குறைவுகள் ஏற்பட்டாலும், ஸ்பைவேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டரில் தங்கள் ஆளுமையை ஏற்படுத்துவது சிரமமாக மாறும். ஏன், முடியாமலே போகலாம்.


விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்
விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. 

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. 

இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.


1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: 

முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. 

இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. 

இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.


2. அப்ளிகேஷன்கள்: 

அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.


3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: 

விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. 

எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்.


4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: 

விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: 

ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.


6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: 

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.


7. பைல் எக்ஸ்புளோரர்: 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.


8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: 

விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.


9. எங்கும் எதையும் தேடலாம்: 

விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்.


10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: 

புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். 

இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். 

இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.


இந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன்


கூகுள் நிறுவனம், பலூன் திட்டம் என்ற பெயரில், இணைய இணைப்பு தர ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றின் மூலம், கேபிள்கள் இணைக்க முடியாமல், இன்டர்நெட் வசதி கிடைக்காமல் இருக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் இணைய இணைப்பு தரும் சாத்தியக் கூறுகளை சோதனை செய்வது குறித்து சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தோம். 

இணைய இணைப்புக் கிடைக்காமல் இருக்கும் இந்தியக் கிராமங்களிலும் இந்த வசதியைத் தருவது குறித்து, கூகுள் நிறுவனம் சிந்தித்து வருவதாக, கூகுள் விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குநர் டாட் ரோ தெரிவித்துள்ளார். 

இன்டர்நெட் பலூன்கள் குறித்து, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து தகவல்கள் கேட்டு கடிதங்கள் வந்துள்ளதாகவும், இவை இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் உற்சாகம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, எந்த அளவிற்கு இணைய வசதியை மக்களுக்குக் கொண்டு செல்கிறதோ, அந்த அளவிற்கு அந்நிறுவனம் லாபம் பெறும். 

எனவே, விண்ணில் பறந்தவாறே செயல்படக் கூடிய பலூன்களில், இன்டர்நெட் இணைப்பு தரும் சோதனையை கூகுள் மேற்கொண்டுள்ளது. இந்த பலூன்கள் தற்போதைய 3ஜி டேட்டா பரிமாற்ற வேகத்தில் இணைய இணைப்பினைத் தரும். 

இந்த இணைய பலூன்கள், பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டு செயல்படும். அல்லது வர்த்தக ரீதியாகப் பறக்கும் விமானங்கள் செல்லும் உயரத்தைக் காட்டிலும் இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும். 

இங்கு வீடுகளின் வெளியே கூரைகளில் ரிசீவர்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமாக இணைய இணைப்பு கிடைக்கும். 

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருவதால், நிச்சயம் கூகுள் இந்த புதிய முயற்சியை, இந்தியாவிலும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.


ஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி


மாணவர்களுக்கு டேப்ளட் பிசி வழங்கும் அரசின் குறைந்த விலை டேப்ளட் பிசி திட்டத்தில் உருவான ஆகாஷ் டேப்ளட் பிசியில், இனி அழைப்பு வசதியும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டேப்ளட் பிசியில் போன் அழைப்பிற்கான ட்ரைவர் புரோகிராம் பதியப்படும். போன் அழைப்பிற்கான சாதனம் வெளியாக இணைக்கப்பட்டு, அழைப்புகளை ஏற்படுத்தலாம். இதே போல, 2ஜி, 3ஜி அல்லது 4ஜி டேட்டா பரிமாற்றத்திற்கும் வெளி இணைப்பு சாதனம் தரப்படும். 

இப்போது தகவல் தொலை தொடர்பு துறை அமைச்சராகச் செயல்படும், கபில்சிபல், மனிதவளத்துறை அமைச்சராகச் செயல்பட்ட போது, உருவான அவரின் திட்டமே ஆகாஷ் டேப்ளட் பிசி. மலிவான விலையில், இணைய இணைப்பினைப் பெறும் வசதியை மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற இலக்குடன் ஆகாஷ் டேப்ளட் பிசி உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

முதன் முதலில், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் இந்த டேப்ளட் பிசி வெளியானது. முதலில் வெளியான டேப்ளட் பிசி, சில அடிப்படை கம்ப்யூட்டிங் வசதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 

பின்னர், படிப்படியாகக் கூடுதல் வசதிகள் தரப்பட்டன. தொடக்கத்திலேயே, அரசுக்கு ஒரு டேப்ளட் பிசியை உருவாக்க ரூ.2,276 செலவானது. கூடுதல் வசதிகளைத் தந்த போதும், அரசு இதன் விலையை அதிகப்படுத்தாமல் இருந்தது. 

இப்போது இன்னும் அதிகமான வசதிகள் தரப்படுவதை ஒட்டி, விலையில் மாற்றம் இருக்குமா என்பதனை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

புதிய டேப்ளட் பிசியில் புளுடூத் வசதி உள்ளாக அமைத்தவாறு வழங்கப்படும். இந்த வசதி ஏற்கனவே வந்த மாடல்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்
இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இன்னும் பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா எட்டியுள்ளது. 

அண்மையில் டாட்டா கன்சல்டன்சி சேவை (டி.சி.எஸ்.) நிறுவனம், 17 ஆயிரம் மாணவர்களுக்கும் மேலானவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுக@ள இங்கு தரப்படுகின்றன. இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில், நான்கில் ஒருவர், தங்கள் மொபைல் போன்களில், இன்டர்நெட் பிரவுஸ் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 1 முதல் 2 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். 72 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 

ஆனால், சிறிய நகரங்களில், இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதால், அங்கு வசிக்கும் மாணவர்கள், இன்னும் இன்டர்நெட் மையங்களிலேயே இணையத் தேடலை மேற்கொள்கின்றனர். 

சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வி கற்றுத் தரும் முறையினை, டிஜிட்டல் மயமாக மாற்றினாலும், 83 சதவீத மாணவர்கள் இணைய உலாவிற்கு வீடு அல்லது இன் டர்நெட் மையங்களையே விரும்புகின்றனர். 

இது இன்டர்நெட், மொபைல் மற்றும் சமுதாய இணைய தளங்களின் காலமாக மாறிவிட்டது. மாணவர்கள் உட்பட, பலரும் மக்களைச் சந்திக்கும் இடமாக, சமுதாய இணைய தளங்கள் மாறி வருகின்றன. 

ஒவ்வொரு சமுதாய இணைய தளமும் அதன் தன்மைக்கேற்ப, தன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 83.38 சதவீத மாணவர்கள் பேஸ்புக் இணைய தளத்தில் தங்களைப் பதிந்துள்ளனர். 

இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற சமூக இணைய தளங்களான ட்விட்டர், லிங்க்டு இன் மற்றும் ஆர்குட் போன்றவை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. இருப்பினும் லிங்க்டு இன் போன்ற தளங்கள், மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கையில், மெட்ரோ மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களின் மன நிலையையும் விரும்பும் விஷயங்களையும் அறிய முடிகிறது.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களையே தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள, 73.68 சதவீத இந்திய மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது மின் அஞ்சல் பயன்பாடு, இதனால் தொடர்ந்து குறைந்து வருகின்றது. 

பத்தில் நான்கு மாணவர்கள் இணையம் வழி பொருட்கள் வாங்குவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரெடிட் கார்ட் மட்டுமின்றி, டெபிட் கார்ட், நெட் பேங்கிங், பொருள் வழங்கும்போது பணம் எனப் பல வசதிகளை ஆன்லைன் ஷாப்பிங் மையங்கள் அளிப்பதால், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 

ஆனால், இந்திய மாணவர்களிடையே எந்த எந்த பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கும் பழக்கம் உள்ளது என்பதனைப் பார்க்கையில், அது இடத்திற்கேற்ற வகையில் வேறுபடுகிறது. மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவது திரைப்படங்களுக்கான அனுமதிச் சீட்டுகளே. 61.71 சதவீத இந்திய இணைய மாணவர்கள், திரைப்பட டிக்கட்களை இணையம் வழியாகவே வாங்குகின்றனர். 

இதில் என்ன வேடிக்கை என்றால், மெட்ரோ நகர மாணவர்களைக் காட்டிலும், சிறிய நகரங்களில் வாழும் மாணவர்களே, அதிகம் டிக்கட்களைப் பெறுகின்றனர். அடுத்ததாக, இணையத்தில் மாணவர்கள் அதிகம் வாங்குவது டிவிடி/ நூல்கள் மற்றும் மியுசிக் சாதனங்களே. இதனை அடுத்து வருவது விமான மற்றும் ட்ரெயின் டிக்கட்களாகும். 

இந்திய மாணவர்கள் இணையத்தில் அதிகம் மேற்கொள்ளும் செயல்பாடு எது? 74 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 62.35 சதவீத மாணவர்கள் இணையம் வழி அரட்டை, வலைமனை வழி தகவல் பரிமாற்றம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். 

49.10 சதவீத மாணவர்கள் மின் அஞ்சலுக்கும், 45.47 சதவீத மாணவர்கள் இசை சார்ந்த கோப்புகளை டவுண்லோட் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம், டி.சி.எஸ். ஜென் ஒய் சர்வே 2012 என்ற தலைப்பில், இந்தியாவின் 12 நகரங்களில், 17,478 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்விலிருந்து அறியப்பட்ட தகவல்களாகும். 

இந்த ஆய்வு, ஆகஸ்ட் 2012 முதல், டிசம்பர் 2012 வரை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1660 பள்ளிகளில் படிக்கும் 12 முதல் 18 வயதான மாணவர்களும் கலந்து கொண்டனர்.


மைக்ரோமேக்ஸ் ஏ 111 கேன்வாஸ் டூடில்


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. 

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் 4 ஜிபி. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளது. 

எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் இயங்குகிறது. வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்குக் கிடைக்கின்றன. 8 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமராவும். 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இயங்குகின்றன. 

வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுத்தல் ஆகிய வசதிகள் கொண்டதாக கேமரா அமைக்கப்பட்டுள்ளது. எப்.எம்.ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன. 

இதன் சி.பி.யு.வில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. 

எம்பி3,எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 220 மணி நேரம் மின் சக்தி தக்க வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6.5 மணி நேரம் இதன் மூலம் பேசலாம்.

இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes