2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்

சென்ற 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 10 லட்சமாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 42% கூடுதலாகும்.

மலிவான விலையில் கம்ப்யூட்டர் சாதனங்களும், குறைவான கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு திட்டங்களும் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்த கூடுதலைத் தந்துள்ளன.

நகரங்களில் ஆங்கிலம் பயன்படுத்தத் தெரிந்த ஐந்து பேரில் நான்கு பேர் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வு 19 ஆயிரம் வீடுகள், 68 ஆயிரம் தனி நபர்கள் மற்றும் 500 இன்டர்நெட் மையங்களில் எடுக்கப்பட்டது.

இன்டர்நெட் வளர்ச்சியில் ரூ.20,000 அளவில் கிடைக்கக் கூடிய நெட்புக் கம்ப்யூட்டர்கள் பெரிய அளவில் பங்கேற்றதாகவும் தெரியப்பட்டுள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல்., மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் நெட்புக் கம்ப்யூட்டர்களை தயாரித்து வழங்கி வருகின்றன.

இந்த ஆண்டு 3 லட்சத்து 25 ஆயிரம் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009–10ல் கம்ப்யூட்டர் விற்பனை 73 லட்சமாக உள்ளது. இன்டர்நெட் வளர்ச்சி யினால்,சொந்த இடங்களில் தங்களின் கம்ப்யூட்டர் வழியாகவே இன்டர்நெட் பயன்பாட்டினை அனைவரும் மேற்கொள்வதால், இன்டர்நெட் மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

2006 ஆம் ஆண்டில் 2,35,000 ஆக இருந்த இன்டர்நெட் மையங்களின் எண்ணிக்கை, 2009ல் 1,80,000 ஆகக் குறைந்துள்ளது. இன்டர்நெட் மையங்களின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள், கட்டணச் சலுகை ஆகியன குறித்து அரசு தீவிரமாக சிந்தித்தால், இந்த மையங்கள் நன்றாகச் செயல்பட வாய்ப்புகள் உள்ளன.


டெஸ்க்டாப் கிளீன் அப்

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் அனைவருக்கும் ஓர் அனுபவம் அடிக்கடி ஏற்பட்டிருக்கும். நாம் நம் இஷ்டப்படி பல புரோகிராம்களின் ஐகான்களையும், பைல்களுக்கான ஐகான்களையும் டெஸ்க்டாப்பில் வைத்திருப்போம்.

ஆரம்பத்தில் சிலவற்றை அடிக்கடி பயன்படுத்துவோம். பின் அவற்றைப் பயன்படுத்த சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம். அல்லது அதே ஐகான்களை குயிக் லாஞ்ச் பாரில் வைத்து, அவற்றில் சிங்கிள் கிளிக் மூலம் புரோகிராம்களை இயக்கி இருப்போம்.

இதனால் வெகுநாள் பயன்படுத்தாமல் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் இருக்கின்றனவே. அவற்றை நீக்கி கிளீன் செய்திடலாமா (There are unused Icons on your Desktop) என்ற ஒரு அறிவிப்பு திடீரென ஒரு சிறிய மஞ்சள் பலூனுடன் காட்டப்படும்.

சில நேரங்களில் இந்த அறிவிப்புக்கு நாம் உடன்பட்டாலும், பலர் என்னுடைய டெஸ்க்டாப் எப்படி இருந்தால் என்ன? இந்த அறிவிப்பெல்லாம் எதற்கு? என்று எண்ணுவார்கள். இவர்கள் அவ்வாறு விரும்பினால், அதற்கேற்றபடி செட் செய்திடலாம். இந்த அறிவிப்பினை தோன்றவிடாமல் செய்திடலாம்.

டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் டெஸ்க்டாப் டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின் Customize Desktop Button என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர் கிடைக்கும் விண்டோவில் General டேப் தேர்ந்தெடுத்தால், கீழாக Desktop Cleanup என்ற பிரிவினைப் பார்க்கலாம். இதில் Run Desktop Cleanup Wizard every 60 days என்ற வரியில் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் நினைவூட்டும் பாப் அப் அறிவிப்புகள் வராது.


மீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற

நாம் பயன்படுத்தும் பைல்களின் பார்மட்டினை மாற்றுவதற்கான தேவை நமக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இமேஜ் பைல் ஒன்றினை பி.எம்.பி. பார்மட்டில் வைத்திருப்போம்.

அதன் அளவு பெரிதாக இருப்பதால் ஜேபெக் போன்ற சிறிய அளவிலான பார்மட்டிற்கு மாற்றிக் கொண்டு செல்ல விரும்புவோம். அல்லது நமக்குக் கிடைத்த பார்மட்டில் பைலைத் திறக்க நம்மிடம் சாப்ட்வேர் இருக்காது. குறிப்பாக ஆடியோ, வீடியோ பைல்களில் இந்த பிரச்னையை அடிக்கடி நாம் சந்திப்போம்.

இமேஜ் பைல் மாற்றத்திற்கு சில இமேஜ் சாப்ட்வேர் தொகுப்புகள் உதவினாலும், வேறு சில பார்மட் மாற்றத்திற்கான சாப்ட்வேர்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. ஆனால் இணையத்தில் பல தளங்கள் இவற்றிற்கு உதவத் தயாராய் இருக்கின்றன.

இதற்கென எந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் டவுண்லோட் செய்திட வேண்டியதில்லை. குறிப்பிட்ட தளம் சென்று பார்மட் மாற்ற வேண்டிய பைலை அப்லோட் செய்து, அதனை எந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும்.

பைல் குறிப்பிட்ட பார்மட்டில் மாற்றப்பட்டு, நம் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். அல்லது அந்த தளத்தில் வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளுக்குள் சென்று எடுத்துக் கொள்ளலாம்.

இமேஜ் பைல் மட்டுமின்றி, சில டாகுமெண்ட்களையும் நாம் அதன் பார்மட்டிலிருந்து வேறு பார்மட்டிற்கு மாற்ற எண்ணுவோம். அதற்கான தளங்களும் இணையத்தில் உள்ளன. அந்த தளங்களை இங்கு காணலாம்.


1. யு கன்வெர்ட் இட் (You Convert it):

ஆன்லைனில் கிடைக்கும் பார்மட் மாற்றத்திற்கான டூல்களை இயக்கும் தளங்களில், இது மிகவும் திறன் கொண்ட ஒன்றாகும். டாகுமெண்ட், இமேஜ், வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இந்த தளத்தில் சென்று மாற்றலாம்.

இதன் இணைய முகவரிhttp://www.youconvertit.com/. இந்த தளம் சென்று உங்கள் இமெயில் முகவரி சார்ந்த தகவல்களைக் கொடுத்து, மாற்ற வேண்டிய பைல் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இடம், மாற்றப்பட வேண்டிய பார்மட் வகை ஆகியவற்றைக் கொடுத்துவிட்டால், மாற்றப்பட்ட பைலை எங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற லிங்க் உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஏழு நாட்களுக்கு அந்த லிங்க்கில் பைல் கிடைக்கும். அதன் பின் நீக்கப்படும். நான் ஒரு டெக்ஸ்ட் பைலை டாகுமெண்ட் பைலாக மாற்றினேன். மிகச் சிறப்பான முறையில் மாற்றப்பட்டுக் கிடைத்தது. மிக வேகமாகவும், சிறப்பாகவும் பைல் ஒன்றின் பார்மட் மாற்றப்பட வேண்டும் என்றால், இந்த தளம் ஓர் அருமையான இடம் ஆகும்.


2. ஸம்ஸார் (Zamzar):

ஆன்லைனில் உள்ள பைல் பார்மட் மாற்றும் தளம் இது. டாகுமெண்ட், இமேஜ், ஆடியோ, மீடியா பைல் மட்டுமின்றி, பைல் ஆர்க்கிவ்களையும் மாற்றித் தருகிறது இந்த தளம்.

எனவே கம்ப்ரஸ் செய்யப்பட்ட ஸிப் அல்லது ஆர் ஏ ஆர் ஸிப் பைல் உங்களுக்குக் கிடைத்து, அதனை அன்ஸிப் செய்திட உங்களிடம் சாப்ட்வேர் இல்லை என்றால், இந்த தளத்திற்கு அனுப்பி, விரித்து பைல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் 100 எம்பிக்கு மேல் அளவுள்ள பைல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இந்த தளம் சென்று, முதலில் மாற்றப்பட வேண்டிய பைல் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் இடத்தினைச் சுட்டிக் காட்டவும். பின் எந்த பார்மட்டுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். பின் எந்த இமெயில் முகவரிக்கு மாற்றப்பட்ட பைல் அனுப்பப்பட வேண்டும் என்பதனையும் என்டர் செய்திடவும்.

பின் கன்வர்ட் செய்வதற்கான பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே பைல் மாற்றப்பட்டு, இமெயில் முகவரிக்கு அதற்கான லிங்க் அனுப்பப்படும். இந்த தளத்தில் மாற்றப்பட்ட பைல் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும். எனவே உடனே டவுண்லோட் செய்திடுவது நல்லது.

இந்த தளத்தைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை மாற்றும்படி அனுப்பலாம். ஆனால் அனைத்து பைல்களும் ஒரே வகையான பார்மட்டில் இருக்க வேண்டும்; ஒரே வகையான பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டும். எனவே மொத்தமாக பைல்களின் பார்மட்டை
மாற்ற இது ஒரு சிறந்த தளமாகும். தளத்தின் முகவரி www.zamzar.com3. மீடியா கன்வர்டர் (Media Converter):


ஆடியோ, வீடியோ மற்றும் ஆபீஸ் டாகுமெண்ட்களை இந்த தளத்தில் மாற்றலாம். 100 எம்பி அளவிற்குள்ளாக ஒரு பைலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிட வேண்டும்.


மேலும் கூடுதலாக வேறு விருப்பம் இருந்தால் குறிப்பிடலாம். பைல் அப்லோட் செய்யப்பட்டு, மாற்றப்பட்ட பைல் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கான லிங்க் தரப்படும். உடனடியாக பைல் மாற்றப்பட்டு, லிங்க் தரப்படுவதால், உடனடியாக அதனை டவுண்லோட் செய்வது அவசியமாகும். இந்த தளத்தின் முகவரி:http://www.mediaconverter.org


வெப்சைட் பி.டி.எப். பைலாக

பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா?

ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது.

இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும்.

அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.

மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1


பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2

மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3

பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4

இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.

உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திடhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட் செலக்ட் செய்திடப் பல வழிகள் உள்ளன. பொதுவாக நாம் மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட் தொடக்கத்தில் வைத்துப் பின் ஷிப்ட் கீ அழுத்தியவாறே, டெக்ஸ்ட் முடிவு வரை இழுத்து தேர்ந்தெடுப்போம்.

இதுவே பல பக்கங்களுக்கு நீண்டால் என்ன செய்வது? கஷ்டம் தான்; இடையே எங்காவது மவுஸ் கர்சர் விடுபட்டாலோ அல்லது ஷிப்ட் கீ விடுபட்டாலோ, சிரமம் தான். ஆனால் இந்த சிரமத்தைத் தவிர்க்கும் வழியும் உள்ளது.

அடுத்த முறை எத்தனை பக்கங்களுக்கு டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.

முதலில் எங்கு டெக்ஸ்ட் தொடங்குகிறதோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் சற்று கீழாகக் கர்சரை இழுக்கவும். தொடக்க நிலையில் உள்ள சில வரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

பின் கர்சரை விடுவித்து எந்த இடம் வரை டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அந்த பக்கத்திற்குச் செல்லவும். அங்கு சென்று தேர்ந்தெடுக்கப்படும் டெக்ஸ்ட் முடியும் இடத்தில் கர்சரை வைத்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு கர்சரை வைத்திடவும்.

ஆஹா! டெக்ஸ்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாயினும், தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.


திரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திர நாயகன் எம்.ஜி.ஆர்.

தனது படங்களில் தான் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றால் அதை பார்த்து ரசிகர்கள் கெட்டு விடுவார்கள் எனக் கருதி, அதுபோன்ற காட்சிகளை தவிர்த்து ரசிகர்கள் நலனில் அக்கறையுடன் சினிமா வாழ்க்கையை நகர்த்திய அவர், அரசியலிலும் கால் பதித்து வெற்றிகளை குவித்தார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை, புதுப்பொலிவுடன் தொகுத்து `நாயகன்' என்ற பெயரில் வழங்கி வருகிறது, ஜீ தமிழ் தொலைக்காட்சி.

வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, மக்கள் திலகமாக நடிப்பை தொடர்ந்து, அரசியல் தலைவராக மக்களிடம் நிலைத்த எம்.ஜி.ஆரின் வரலாறு பற்றியது. சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர்.

அதை தொடர்ந்து சந்தித்த பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்? அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் எப்படி கிடைத்தன? எந்த திரைப் படத்தில் புகழ் பெற்றார்? எந்தெந்த படங்கள் வெற்றி ‌பெற்றன? போன்ற பல சுவாரசிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது இந்த நிகழ்ச்சி. ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆர்., நடித்த படங்களின் அபூர்வ ஸ்டில்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது ஹைலைட்.


எல்.ஜி.தரும் ஜி.டபிள்யூ 525

விசாலமான குவெர்ட்டி கீ போர்டு, 2.8 அங்குல முழு டச் ஸ்கிரீன் ஆகியவற்றுடன் எளிமையாக டெக்ஸ்ட்டிங் செய்திட எல்.ஜி.யின் ஜி. டபிள்யூ 525 உதவுதால், இதனை உங்கள் நண்பர்களுடன் சேர்த்து வைக்கும் தோழன் என்று கூறுவது மிகையாகாது.


உங்களுடைய சமுதாய வாழ்வை இனிமையாக்க இது ஒரு பயனுள்ள சாதனம் என்று இந்த போன் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போன், விற்பனைக்கு வெளியாகி ஆறு மாதங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. 106.5 x 53 x 15.9 மிமீ என்ற பரிமாணங்களில் 125.5 கிராம் எடையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

1,000 முகவரிகள் கொண்ட இதன் அட்ரஸ் புக்குடன், போட்டோ மூலம் அழைப்பு கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் மெமரி 40 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத், யு.எஸ்.பி. போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. 3.15 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ செயல்படும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. DOC, XLS, PPT, PDFமுதலிய பைல்களைப் படிக்க டாகுமென்ட் வியூவர் தரப்பட்டுள்ளது.MP3/MP4/AAC/AAC+/EAAC+/WMA ஆகிய பார்மட்களை இயக்கும் மல்ட்டிமீடியா வசதி கொண்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் ஆகியவை தரப்பட்டுள்ளன. வாய்ஸ் மெமோ, போட்டோ/வீடியோ எடிட்டர், ஆர்கனைசர் ஆகியவை இதன் வழக்கமான கூடுதல் சிறப்புகளாகும். இதில் தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம்.

பேட்டரி திறன் 500 மணி நேரம் வரை இருக்கும். இதன் குறியீட்டு விலை ரூ. 11,058 ஆகும்.'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்

உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக, இரு ஆண்டுகளுக்கு முன், அரசின் '108' இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.அரசு உத்தரவுப்படி இறந்தவரை இந்த ஆம்புலன்சில் கொண்டு செல்ல இயலாது.

'108'க்கு போன் செய்தால், அழைப்பு சென்னை மையத்திற்கு செல்லும். அங்குள்ளவர்கள், வேண்டிய விபரங்களை பெற்று, அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்வர். அதேசமயம், 'ஆம்புலன்ஸ் தாமதமாக வருகிறது' என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.


''இதற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதில் உள்ள குழப்பம்தான் காரணம்'' என்கிறார் இச்சேவையை பராமரிக்கும் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் மதுரை மேலாளர் தணிகைவேல் முருகன்.

அவர் கூறியதாவது:


'108'க்கு போன் செய்யும் போது, மறுமுனையில் 'அழைப்பிற்கான காரணம் என்ன, எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், முகவரி, எளிதில் அறியும்படியான இடத்தின் அடையாளம் என்ன' என்பது குறித்து கேட்பர். இந்த விபரங்களை தெளிவாக தெரிவிப்பதோடு, மொபைல் போன் எண்ணையும் கொடுத்தால், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும்.


சம்பவ இடத்திற்கு வரும்போது, 'எந்த வழியில் செல்வது' என்ற குழப்பம் ஏற்பட்டால், தகவல் தெரிவித்தவரின் மொபைல் போனுக்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்பு கொள்வார். மேலும், சாலை விபத்து என்றால், 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்பது குறித்தும் கேட்பர். காரணம், அதிகம் பேர் என்றால், அருகில் உள்ள ஆம்புலன்ஸ்களை அனுப்புவர்.


இதுபோன்ற காரணங்களாலும், போக்குவரத்து நெரிசலாலும் ஆம்புலன்ஸ் வந்துசேருவதில் தாமதம் ஏற்படலாம் என்றார்


விண்டோஸ் 7 புது போல்டர்

விண்டோஸ் 7 பெற்று அதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா! புதிய போல்டர்களை உருவாக்கி அவற்றில் பைல்களை இட்டு நிரப்பிக் கொண்டிருக் கிறீர்களா?

எப்படி புதிய போல்டர்களை உருவாக்கினீர்கள்? குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ (New) கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டினீர்களா!

இனிமேல் அதெல்லாம் வேண்டாம். எங்கு புதிய போல்டர் உருவாக்கப்பட வேண்டுமோ, அங்கு செல்லவும்.

பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்ட வேண்டுவதுதான் உங்களின் வேலை.

இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் பிலும் போல்டரை உருவாக்கலாம்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes