அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்

மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. 

இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. 

“Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் குறித்து, மைக்ரோசாப்ட் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அவற்றை இங்கு காணலாம்.


4கே வீடியோ பதிவு (4K Video Recording): 

விண்டோஸ் 10 கேமரா அப்ளிகேஷன், 4கே வீடியோ பதிவிற்கான முழு சப்போர்ட்டுடன் கிடைக்கும். வீடியோ பதியப்படுகையிலேயே, ஸூம் செய்வதற்கான வசதி, ப்ளாஷ் இயக்கத்தினைத் தனியே கட்டுப்படுத்தும் வசதி, வீடியோ எச்.டி.ஆர். (High dynamic range) தொழில் நுட்பம் மற்றும் இது சார்ந்த தொழில் நுட்ப வசதிகள் ஆகியன தரப்படுகின்றன.


வை பி டைரக்ட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் 2: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் வை பி டைரக்ட் தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள், வை பி நெட்வொர்க்கில் இணையாமலேயே, தங்களுக்குள் வை பி இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். வை பி ஹாட் ஸ்பாட் வசதியின் மூலம், பயனாளர்கள் ஒரு இணைப்பினை, பலர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


புளுடூத் அம்சங்கள்: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான ஆடியோ மேம்பாட்டிற்கான அம்சங்கள், அதன் புளுடூத் டூலில் தரப்படுகின்றன. Wideband speech எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், எச்.டி. வாய்ஸ் தன்மை கிடைக்கும். A2DP மூலம், ஸ்டீரியோ ஆடியோ தன்மை வெளியாகும்.


எச்.சி.இ. சப்போர்ட் இணைந்த என்.எப்.சி.: 

தற்போது அண்மைக் களத் தகவல் தொடர்பு என அழைக்கப்படும் என்.எப்.சி. அனைத்து மொபைல் போன்களிலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் இதனை இன்னும் எளிமையாகவும் நவீனமாகவும் அமைக்கிறது. 

இதுவரை மொபைல் சேவை வழங்கும் சிம் கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியே, என்.எப்.சி. இணைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், எச்.சி.இ, (Host card emulation) எனப்படும் சாப்ட்வேர் கட்டமைப்பில், சாப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தி பலவகை கார்ட்களின் எலக்ட்ரானிக் அடையாளங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.


ஸ்மார்ட் டயல்: 

இதுவரை மொபைல் போன்களில் பயன்படுத்தப்படாத ஒரு ஸ்மார்ட் டயல் வசதி, விண்டோஸ் 10ல் அறிமுகமாகிறது. இதில் “Yellow Books” என்று ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், மற்றவர்களின் தொடர்பு விபரங்களைத் தேடி அறியலாம்.


பேட்டரி பாதுகாப்பு: 

பேட்டரியின் திறன் செலவாவதைப் பயனாளரே கட்டுப் படுத்தும் வகையில், Battery Saver என்னும் டூல் தரப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.


யு.எஸ்.பி. டூயல் ரோல் மற்றும் சி வகை இணைப்பு: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான யு.எஸ்.பி. வழி இணைப்பு சாதனங்களை இணைத்திட சப்போர்ட் தரப்பட்டுள்ளது. கீ போர்ட், மவுஸ் மற்றும் பெரிய அளவிலான ஸ்டோரேஜ் சாதனங்களை இணைக்கலாம்.


செயல்பாடு கண்காணிப்பு (activity tracking): 

மொபைல் போன் வைத்திருப்பவர் நடக்கிறாரா, ஓடுகிறரா அல்லது நீச்சல் அடிக்கிறாரா என்பதைக் கண்காணிக்க ஒரு டூல் தரப்படுகிறது. இதனை Activity Tracking Tool என அழைக்கலாம்.


புதிய சென்சார்கள்: 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில், பலவகையான சென்சார்கள் உள்ளன. இவை பல்வேறு சூழ்நிலைகளை உணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்படுகின்றன. 

பாரோமீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அல்டிமீட்டர், பெடோ மீட்டர், பயோ மெட்ரிக் சென்சார், இதயத் துடிப்பு, கேஸ் லீக்கேஜ், சீதோஷ்ணநிலை அளந்து கூறும் சென்சார்கள் எனப் பல உள்ளன. விண்டோஸ் இயக்கத்தில் இன்னும் பல சென்சார்கள் தரப்படுகின்றன. 

காற்றில் உள்ள ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை அறியும் சென்சார்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

நிச்சயமாக, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய கட்டமைப்புடன் வர இருப்பதை மேலே கூறியவை காட்டுகின்றன. இன்னும் கூட நவீன தொழில் நுட்ப வசதிகள் சில, சிஸ்டம் வெளி வரும்போது கிடைக்கலாம்.


ஸியோமி ரெட் மி 2 (Xiomi Redmi 2) இந்தியாவில் அறிமுகம்

தான் ஏற்கனவே உறுதி அளித்தபடி, ஸியோமி நிறுவனம் தன் ரெட்மி 2 ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 6,999. 

இதன் திரை 4.7 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் திறன் கொண்ட டிஸ்பிளேயுடன் உள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 410 குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. 

இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டும் 4ஜி இணைப்பை சப்போர்ட் செய்கின்றன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 

அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2200 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஸியோமி ரெட் மி 2 ஸ்மார்ட் போன் ஐந்து வண்ணங்களில் வெளிவந்துள்ளது. தற்போது ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன், மார்ச் 24 முதல், விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்தியாவில், பெருமளவில் அதிகரித்து வருகிறது. 

பல நிறுவனங்கள் போட்டி போட்டு அனைத்து பிரிவினரும் வாங்கும் வகையில் இந்த வகை ஸ்மார்ட் போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். 

மேலும், தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. 

இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் தொடர்ந்து வருகின்றன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. 

அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைக்கும் போன்களில், கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

இதனாலேயே இந்த போன் பயன்பாட்டின் பலவகை அம்சங்களின் இயக்கங்கள் குறித்து வாசகர்கள் பல கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து பலர் முழுமையாக அறியாமல் இருப்பது தான். எனவே, ஏற்கனவே வெளியான சில தகவல் குறிப்புகள் இங்கு விரிவாகத் தரப்படுகின்றன.


நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: 

நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். 

இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்பட்த் தேவை இல்லை.


அழைப்பில் வேறுபாடு: 

உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். 

இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன. 

உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா? அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம். முகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.


மெசேஜ் அனுப்பும் வசதி: 

உங்கள் போனைப் பொறுத்து இது Messages அல்லது Messaging என அழைக்கப்படும். நவீன போன்களில், Hangouts அப்ளிகேஷனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் கையாளலாம். மெசேஜிங் ஐகான அழுத்திக் கிடைக்கும் திரையில், ஒரு + ஐகான் கிடைக்கும். 

இதனை அழுத்தினால், புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ் ஒன்றை அனுப்ப அதனைப் பெறுபவர் (recipient) குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.


பேஸ்புக் தகவல்களை சிலருக்கு மட்டும் மறைக்க

நம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, பேஸ்புக் சமூக இணையதளம் சிறந்த ஒரு மேடையாக நமக்குக் கிடைத்துள்ளது. 

சில நேரங்களில், முக்கியமான தகவல் ஒன்றைப் பதிவிட விரும்புவோம். ஆனால், அந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம் நண்பர்கள் பார்க்கக் கூடாது என எண்ணுவோம். 

ஏற்கனவே, நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு நம் நிலைத் தகவல் சென்றுவிடும். அதெப்படி ஒரு சிலருக்கு மட்டும் அதனை மறைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? ஆம், பேஸ்புக் தளத்தில் அதற்கான வசதி உள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தும் வழிகளைப் பார்க்கலாம்.

முதலில், பேஸ்புக் அக்கவுண்ட்டில், பிரவுசர் ஒன்றின் மூலம் நுழையவும். உங்கள் பக்கத்திற்குச் செல்லவும். தகவல் பதியத் தரப்படும் ஸ்டேட்டஸ் பாக்ஸில், உங்கள் தகவலைப் பதியவும். இனி “Post” பட்டனுக்கு இடதுபுறமாக உள்ள “Friends” பட்டனில் கிளிக் செய்திடவும். 

இதன் பின்னர் “More Options” என்பதில் கிளிக் செய்திடவும். போஸ்ட் பட்டனுக்கு இடது புறம் இது இருக்கும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் “Custom”என்பதில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து “Custom Privacy” டயலாக் பாக்ஸ் காட்டப்படும். 

இதில் உள்ள “Don't share this with என்ற பிரிவில், “These people or lists” என்ற பாக்ஸில், எந்த நண்பர்கள் இந்த தகவலைப் பார்க்கக் கூடாதோ, அவர்கள் பெயரைக் கிளிக் செய்திடவும். நீங்கள் டைப் செய்திடத் தொடங்கியவுடன், அந்த எழுத்து கொண்ட உங்கள் நண்பர்கள் பெயர் காட்டப்படும். 

இந்த பட்டியலில் இருந்து, நீங்கள் எண்ணும் நண்பர்களின் பெயர்களைத் தேர்வு செய்திடலாம். இந்த பெயர்கள் “These people or lists” என்ற பிரிவில் காட்டப்படும்.

இதே போல, உங்கள் நண்பர்களில் யார் மட்டும் பார்க்கலாமோ, அவர்கள் பெயரை மட்டும் இணைக்கலாம். மாறா நிலையில், உங்கள் நண்பர்கள் அனைவரின் பெயர்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த தகவல் எனில், “Friends” பாக்ஸில் “X” என்பதில் கிளிக் செய்து, அவர் பெயரை நீக்குங்கள். 

பின்னர், அந்த குறிப்பிட்ட நபரை “Share this with” என்ற பிரிவில் “Share this with” என்ற பாக்ஸில் சேர்த்துவிடுங்கள். மேலே “Don't share this with” என்ற பிரிவில் பெயர்களை அளித்தது போல இதில் செயல்படவும். முடித்தவுடன் “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும். 

இனி, உங்களுடைய தகவல் கட்டத்திற்குத் திரும்பவும். உங்களுடைய குறிப்பிட்ட தகவலை யார் எல்லாம் பார்ப்பார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள, உங்கள் மவுஸை “Custom” என்ற பட்டன் மீது சற்று நகர்த்தவும். அங்கு எழும்பி வரும் கட்டத்தில், இதனைப் பார்க்கப் போகிறவர்கள் பெயர்கள் காட்டப்படும். 

இந்த பட்டன் தான், நாம் தொடக்கத்தில் “Friends” எனக் குறிப்பிட்ட பட்டன். நீங்கள் மாற்றங்களை மேற்கொண்டதால், அதன் பெயர் மாறியுள்ளது. இனி “Post” என்பதில் கிளிக் செய்து, உங்கள் தகவலை, நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் மட்டும் பார்க்கும் வகையில் போஸ்ட் செய்திடவும். 

மேலே கொடுத்துள்ள செட்டிங்ஸ் அமைப்பை, இனி பதிவு செய்திட இருக்கும் அனைத்துத் தகவல்களுக்கும் பயன்படுத்தலாம். நண்பர் ஒருவரை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்க (“unfriend”) உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். 

ஆனால், அவர் உங்கள் பதிவுகளைக் காணக் கூடாது என எண்ணினால், உங்களுடைய பேஸ்புக் பக்கத்தில், மேலாக உள்ள நீல நிற கட்டத்தின் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். அங்கு “Settings” என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். 

நீங்கள் ஏதேனும் தகவலை எழுதிக் கொண்டிருந்தால், Click “Leave This Page” to go to the “Settings” page என்று ஒரு மெசேஜ் காட்டப்படும். எழுதப்படும் தகவல் இல்லாமல் போய்விடுமே என்ற கவலை இல்லாமல், கிளிக் செய்து பக்கத்தை விட்டு நகர்ந்து செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். 

வேலை முடிந்த பிறகு திரும்பினால், உங்கள் பக்கத்தில் நீங்கள் பாதியில் விட்டுச் சென்ற தகவல், நீங்கள் தொடர்வதற்காகக் காத்திருக்கும். “Settings” பக்கத்தில், இடதுபுறம் காட்டப்படும் ஆப்ஷன்களில், “Privacy” என்பதில் கிளிக் செய்திடவும். “Privacy Settings and Tools” என்ற திரை காட்டப்படும். “Who can see my stuff?” என்ற பிரிவில், “Who can see future posts?” என்பதற்கு வலது புறம் உள்ள “Edit” என்பதில் கிளிக் செய்திடவும். இன்னும் பல ஆப்ஷன்களைக் காட்டும் வகையில், இந்தப் பிரிவு விரிவடையும். 

இங்கு “Custom” பட்டன் அருகே உங்கள் மவுஸ் செல்லும்போதெல்லாம், நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் காட்டப்படும். இங்கு காட்டப்படும் விருப்பங்களிலிருந்து (options) தேர்ந்தெடுக்க “Custom” பட்டனில் கிளிக் செய்திடவும். “Custom Privacy” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களைத் தேர்ந்தெடுத்து, “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும். 

இந்த செட்டிங்ஸ், இனி எதிர்காலத்தில் நீங்கள் இடப் போகும் அனைத்து தகவல்களுக்கும் பொருந்தும். நீங்கள் மறுபடியும் “Privacy Settings and Tools” திரைக்கு வந்தவுடன், “Remember” என்ற பாக்ஸில், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், நீங்கள் போஸ்ட் செய்த இடத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே என்றும், அவை உங்களால் அப்டேட் செய்யப்பட்டுள்ளன என்றும் காட்டப்படும்.


வெளியானது ஆப்பிள் வாட்ச்சென்ற செப்டம்பர் மாதம், ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் என்ற வரிசையில், டிஜிட்டல் ஸ்மார்ட் “கடிகாரங்களை” வெளியிட இருப்பதாக அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று அவை குறித்த முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் அலுவலகத்தில், அழைக்கப்பட்ட பல நூறு பேர்களின் முன்னால், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், இந்த ஸ்மார்ட் கடிகாரங்களை வெளியிட்டு உரையாற்றினார். ஸ்போர்ட்ஸ், ஸ்டீல் மற்றும் வாட்ச் எடிஷன் என மூன்று வகைகளில், இருவேறு அளவுகளில் இவை கிடைக்கும். 

இவற்றின் தொடக்க விலை 349 டாலராகவும், 18 காரட் தங்க முலாம் பூசப்பட்ட உரையுடன் கூடிய, ஆப்பிள் வாட்ச் எடிஷன் என்ற ஸ்மார்ட் வாட்ச் 10,000 டாலருக்கும் மேலாகவும் விலை இருக்கும் எனவும் அறிவித்தார். இதுவே, சிகப்பு பக்கிள் கொண்ட வாட்ச் எடிஷன் ஆக இருந்தால், விலை 17 ஆயிரம் டாலர். 

வரும் ஏப்ரல் 24 முதல், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கிடைக்கும். பின்னர், மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் வாட்ச் என்பது, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனமாகும். இது ஒரு ஸ்மார்ட் வாட்ச். முன்பு, ஆப்பிள் நிறுவனம் ஐபாட் நானோவுடன் இணைந்து செயல்படும் வகையில் கைகளில் அணியக் கூடிய சாதனத்தினைத் தயாரித்து வழங்கியது. 

இப்போது வந்திருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அதைப் போன்றது அல்ல. இது முற்றிலும் புதிய கட்டமைப்பில் உருவானதாகும். இது தன்னுடைய அப்ளிகேஷன்களைத் தானே இயக்கி செயல்படும். ஐபோன்களுடன் தொடர்பு கொண்டு இயங்கும் இயக்கத்தினையும் கொண்டிருக்கும்.

இவை குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். 

அலுமினியம் கேஸ் அமைந்த ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், சில்வர் மற்றும் கிரே வண்ணங்களில் வெளிவருகிறது. உயர் ரக பிளாஸ்டிக்கிலான சுற்று வளை, கரங்களைப் பிடித்தவாறு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 38 மிமீ அளவிலான வாட்ச் 349 டாலர். 42 மிமீ அளவிலானது 399 டாலர். 

ஸ்டீல் வெளித்தகடு மூடி கொண்ட ஆப்பிள் வாட்ச் 389 மற்றும் 1,049 டாலர் என அளவிற்கேற்ற வகையில் விலையிடப்பட்டுள்ளன. 18 காரட் தங்க முலாம் பூச்சு தகடு கொண்ட ஆப்பிள் வாட்ச் தொடக்க விலை 10,000 டாலர். அளவு அதிகரிக்கையில் விலையும் அதிகரிக்கிறது. 

ஏப்ரல் 10 முதல், அனைத்து மாடல் ஆப்பிள் வாட்ச்களுக்கும், வாங்குவதற்கான முன் பதிவினை மேற்கொள்ளலாம். ஏப்ரல் 24 முதல் ஆப்பிள் வாட்ச் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படும்.

பெரும்பாலான நாடுகளில் இவை விற்பனக்கு வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் இயக்க, ஐபோன் 5, ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் அல்லது ஐபோன் 6 ப்ளஸ் தேவை. இவற்றில் ஐ.ஓ.எஸ். 8.2 அல்லது பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். 

ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 8.2 சிஸ்டம் ஆப்பிள் வாட்ச் அப்ளிகேஷனை உங்கள் ஐபோனுடன் இணைக்கிறது. வாட்ச் இயங்கத் தேவையான அப்ளிகேஷன்களை, ஐ போன் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், வாட்சில் காட்டப்படும் அறிவிப்புகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. 

இந்த கடிகாரம், நாம் வைத்து இயக்கும் ஐபோனுடன் வை பி அல்லது புளுடூத் மூலம் இணைந்து இயங்குகிறது. புளுடூத் கதிர்களின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் எங்கு வைத்து வேண்டுமானாலும் இயக்கலாம். 


மைக்ரோசாப்ட் தரும் மடிக்கக் கூடிய கீ போர்ட்

தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். 

முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. 

ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம்.

இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை. 

இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும். 

ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதிந்து, விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பினை சோதித்து வருகின்றனர். இவர்கள், ஏறத்தாழ 9 லட்சம் பதிவுகளை பின்னூட்டமாக அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கார்டனா டூல், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படும். இந்த அறிவிப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் வெளியிட்டார்.

மொபைல் போனுக்கான விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதுதான் இந்த முறையில் முதலாவதாக வெளியிடப்பட்ட தொகுப்பு என்றும், இது இன்னும் உருவாக்க வளர்ச்சியில் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் கம்ப்யூட்டர்

சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. 

தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது. 

இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் மின் சக்தி தரக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கூறலாம். 

இன்டெல் கோர் எம் ப்ராசசர் மற்றும் பேட்டரியால், குறைந்த தடிமனில் கம்ப்யூட்டர் அமைந்துள்ளது. இந்த ப்ராசசர், உள்ளாக வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி தேவையை நீக்குகிறது. 

எனவே கம்ப்யூட்டரின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டரில் தான், ஆப்பிள் முதல் முறையாக, யு.எஸ்.பி. /சி போர்ட்டினைத் தந்துள்ளது. இது பவர், விடியோ அவுட்புட் மற்றும் டேட்டா ஆகிய அனைத்திற்கும் ஒன்றாக, ரிவர்ஸ் அமைப்பில் உள்ளது.

இந்த மேக் புக் கம்ப்யூட்டர் மூன்று வண்ணங்களில், சில்வர், கிரே மற்றும் தங்க நிற வண்ணங்களில், வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இந்த தங்க நிற கம்ப்யூட்டர், இதே நிறத்தில் ஏற்கனவே வெளியான ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றுடன் இணையாகக் காட்சி அளிக்கும் வகையில் அமைகிறது. கம்ப்யூட்டர் மூடியைத் திறந்தவுடன், அது அமைக்கப்பட்டிருக்கும் உறை, மனங்கவரும் தோற்றத்தில் உள்ளது. 

11 அங்குல மேக் புக் ஏர் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்று சிறியது போலக் காட்சி அளிக்கிறது. இதன் திரை இரண்டு மூலைகளையும் தொட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ கம்ப்யூட்டரில் உள்ள ரெடினா திரை போன்று காட்சி அளிக்கிறது. 

திரை அமைப்பு விகிதம் 16:10 ஆகவும், ரெசல்யூசன் 2,304 x 1440 ஆகவும் உள்ளது. இதனால், திரையில் கிடைக்கும் காட்சி மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் அமைகிறது. அதில் உள்ளவற்றைப் படிப்பதுவும் எளிதாகிறது. 

இதில் அமைக்கப்பட்டுள்ள புதிய கீ போர்ட், மேக் புக் ஏர் கம்ப்யூட்டரின் கீ போர்டைக் காட்டிலும், தடிமன் குறைவாக உள்ளது. 

இதில் தரப்பட்டுள்ள போர்ஸ் டச் (Force Touch) ட்ரேக் பேட், தொட்டு இழுத்தவுடன் உடனடியாக வேலை செய்கிறது. கிளிக் செய்து கிடைக்கும் பலன் தெரிகிறது. வழக்கமான மல்ட்டி டச் செயல்பாடு இதில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்று விரல்கள் தொடு அமைப்பு விசை இதில் கிடைக்கிறது.

இந்த ட்ரேக் பேடில், போர்ஸ் டச் (Force Touch) என்ற விசை அமைப்பு புதியதாகத் தரப்பட்டுள்ளது. தேவைப்பட்டது கிளிக் ஆகிவிட்டது என்ற கணம் வரை சற்று அழுத்திச் செயல்படுத்தலாம். 

இது ஏறத்தாழ மவுஸ் ரைட் கிளிக் போலச் செயல்படுகிறது. இந்த Force Touch வசதி, ரெடினா டிஸ்பிளே கொண்ட மேக்புக் ப்ரோ 13 அங்குல கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பிள் வாட்சிலும் தரப்பட்டுள்ளது.

இந்தக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. சி வகை போர்ட் தரப்பட்டுள்ளது. இதுவே பவர் சார்ஜிங் மற்றும் ஹெட்செட் இணைக்கப் பயன்படுத்தலாம். வழக்கமான யு.எஸ்.பி. போர்ட் தரப்படவில்லை. 

இதனால், Display Port, HDMI, USB 2.0/3.0, மற்றும் VGA ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனி அடாப்டர்களை வைத்து இயக்க வேண்டியதிருக்கும். கம்ப்யூட்டருடன் USB- C சார்ஜர் வழங்கப்படுகிறது. இது மற்ற சாதனங்களுடன், தனியே ஒரு அடாப்டர் இல்லாமல் செயல்படாது. 

802.11ac and Bluetooth 4.0 ஆகியன கம்ப்யூட்டரிலேயே தரப்பட்டுள்ளதால், வை பி இணைப்பு குறித்து தனியே இணைப்பு வேண்டும் என கவலைப் பட வேண்டியதில்லை. சிஸ்டத்தின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், எங்கும் எடுத்துச் செல்வது எளிதாகிறது. 

ஏப்ரல் 24 அன்று வாடிக்கையாளர்களுக்கு இந்த லேப்டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும்போது, அது ஒரு புதிய கண்டுபிடிப்பு போன்ற அனுபவத்தினைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

256 ஜி.பி. அளவிலான கம்ப்யூட்டர் 1299 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு அதிக ஸ்டோரேஜ் மற்றும் சற்று கூடுதலான வேகத்தில் இயங்கும் ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டர் 1,599 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் ராம் மெமரி 8 ஜி.பி. இதனை உயர்த்த முடியாது. 


வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு

உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. 

நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. 

இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். 

ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன. 

இதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://web.whatsapp.com/. 


கிராஷ் ஆகும் செய்திகள்: 

யாராவது ஒருவர், உங்களுக்கு 7 எம்.பி. அளவிலான மெசேஜ் ஒன்றை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பினால், உங்கள் அக்கவுண்ட் க்ராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த செய்தியைப் பெற்ற பின்னர், எப்போது வாட்ஸ் அப் சென்றாலும், அது க்ராஷ் ஆனது. 

இது பரவலான பின்னர், தற்போது 2 எம்.பி. அளவில் செய்தி அனுப்பினாலும் க்ராஷ் ஆனது தெரியவந்தது. இந்த செய்தியில், சில ஸ்பெஷல் கேரக்டர்கள் இருந்தன. மெசேஜ் பேக் அப் ஆனாலும், அந்த குறிப்பிட்ட செய்தி வந்த உரையாடலை மீண்டும் சென்று பார்த்தால், அது கிராஷ் ஆனது. 

இது அந்த மெசேஜ் அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும் மட்டுமின்றி, இவர்களில் யாரவது ஒருவர், குரூப் ஒன்றில் சேர்ந்திருந்தால், அந்த குழுவின் நடவடிக்கைகளும் கிராஷ் ஆகும். இது தனிப்பட்ட நபருக்குப் பெரிய இழப்பினைத் தராது. இதுவே, நிறுவனங்களுக்கானது எனில், ஈடுகட்ட முடியாத இழப்பினைத் தரும். இந்த பிரச்னைக்கான தீர்வினை இன்னும் யாரும் தரவில்லை. 

விரைவில் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் பொறியாளர்கள், தீர்வினைக் கண்டு தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கிராஷ் ஆகும் பிரச்னை, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் வாட்ஸ் அப் செயலியில் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற இயக்க முறைகளில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஏற்படவில்லை.


மீறப்படும் ப்ரைவசி செட்டிங்ஸ்: 

அண்மைக் காலத்தில், வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

மைக்கேல் என்பவர், வாட்ஸ் அப் நாம் எண்ணுகிறபடி, அதிக பாதுகாப்பு கொண்ட செயலி அல்ல என்று கூறியுள்ளார். WhatsSpy Public என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம், அடுத்தவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ் மாற்றங்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போட்டோ, அதன் மாற்றம் ஆகியன குறித்து உடனுடக்குடன் அறியலாம் எனத் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியின் மூலம், மற்றவர்களின் செட்டிங்ஸ் அமைப்பினையும் மாற்ற முடியும். துரதிருஷ்டவசமாக, இதற்கு எதிராக நாம் எதுவும் செய்திட முடியாது. வாட்ஸ் அப் நிறுவன வல்லுநர்களே, இதற்கான பாதுகாப்பு பைலை வழங்கிட வேண்டும்.


மற்ற பயனாளர்களை வேவு பார்ப்பது: 

வாட்ஸ் அப் அண்மையில், அதன் செயலியில் இடப்படும் செய்திகளை, தகவல்களை, அனுப்பப்பட்ட இடத்திலிருந்து, அது பெறப்படும் இடம் வரையிலும், பாதுகாப்பான முறையில் சுருக்கி அனுப்பி, இறுதி நிலையில் விரித்துக் காணும் வகையில் அமைத்திருந்தது. 

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், நம் உரையாடல்களை இன்னொருவர் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்மைப் பயமுறுத்துகிறது. mSpy என்ற ஒரு சாப்ட்வேர் புரோகிராம், ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புகள், பிரவுசிங் தளங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து, இந்த சாப்ட்வேர் நிறுவியவருக்கு அனுப்புகிறது. 

இந்த ஸ்பை வேர் செயலியை, உங்கள் போனில் சில நொடிகளில் பதித்துவிடலாம் என்பதால், அது உங்கள் போனில் வருவது உங்களுக்குத் தெரியாமலே போகலாம்.

இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராம்களை, நம் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்தால், கண்டறிந்து நீக்கிவிடலாம். 

வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா? நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறதா? வேண்டாம். அவ்வாறு நீக்க வேண்டாம். 

இன்றைக்கு இணைய உலகில், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப உதவும் செயலிகளில், அதிக அளவு எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது வாட்ஸ் அப் புரோகிராம் தான். எனவே, இதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படவும்.


கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி

உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பு, அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியானது. 

தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பினை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் அப்படியே செயல்பட்டாலும், அவ்வசதியினை அனைவருக்கும் கொண்டு செல்வதில்லை என்றும் கூகுள் குற்றம் சாட்டி வருகிறது. 

இதனால், தான் விரும்பும் வகையில், மக்களுக்குப் புதிய வசதிகளைக் கொண்டு செல்ல இயலவில்லை எனக் குற்றம் சாட்டும் கூகுள், உலகின் பல இடங்களில், அநேக மக்கள் இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளனர் என்றும் வருத்தப்படுகிறது. இந்நிலையைப் போக்க, கூகுள், தானே களத்தில் இறங்கி, தன் வலிமையைக் காட்ட திட்டத்தினை அறிவித்துள்ளது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் அனுமதி பெற்ற இடங்களில், மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி, மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை வழங்கி வருகின்றன. 

இந்தியாவில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்களும், ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களும் இது போல் இயங்கி வருகின்றன. இதே போல, உலகளாவிய அளவில், கூகுள் மொபைல் நெட்வொர்க் ஒன்றை அமைக்கத் திட்டமிடுகிறது. 

இதற்கென உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்குகிறது. இது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் இணைந்ததாக இருக்கும். இதனால், மொபைல் போன் ஒன்றில் அழைப்பு ஏற்படுத்துகையில், அது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் வழிகளில் மாறி மாறிச் சென்று, விரைவாக இணைப்பை ஏற்படுத்தும்.

இதற்கான முன்னோட்ட அறிவிப்பினை, அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கு மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை சூசகமாக அறிவித்தார். 

அமெரிக்காவில் கூட, இணைய வேகமும் இணைப்பும், ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியே உள்ளது. இதனால், அதிக மக்களை கூகுள் தன் சேவைகள் மூலம் அடைய இயலவில்லை. 

தான் அமைக்க இருக்கும் மொபைல் நெட்வொர்க் மூலம், சிறப்பான, விரைவான சேவையை வழங்க முடியும் என மக்களுக்குக் காட்ட கூகுள் விரும்புகிறது. இதன் மூலம், தற்போது இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. 

எப்படி நெக்சஸ் போன் மூலம், மொபைல் போன் பயன்பாட்டினைச் செம்மையாக்க முடியும் என்று கூகுள் காட்டியதோ, அதே போல, தன் மொபைல் நெட்வொர்க் மூலம், சேவைகளைச் சிறப்பாக வழங்க முடியும் என கூகுள் காட்டும் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

தங்கள் முயற்சி, ஏற்கனவே இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல என்றும் உறுதியாக அவர் தெரிவித்துள்ளார். 

முன்னோட்டமாக, கூகுள், அமெரிக்காவில் தன் நெட்வொர்க்கினை அமைக்கிறது. இதற்கென, சிறிய அளவில் இயங்கும் ஸ்பிரிண்ட் மற்றும் டி மொபைல் நிறுவனங்களூடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. 

இது குறித்து, அமெரிக்காவில் பெரிய அளவில் இயங்கி வரும் வெரிஸான் (Verizon, ) நிறுவனம், கூகுளின் இந்த தன்னிட்சையான போக்கு, சிறிய அளவில் செயல்பட்டு வரும் மொபைல் நிறுவனங்களைப் பாதிக்கும் என்றும், அதனால், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாமல் போய்விடும் என்று கருத்து தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கூகுள் ஏற்படுத்த இருக்கும் மொபைல் நெட்வொர்க், உலகளாவிய அளவில் அமைக்கப்படும்போது, அதில் இணையும் வாடிக்கையாளர்கள், உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள முடியும். 

இப்போது போல, வெளிநாடு செல்கையில், தனியாகக் கட்டணம் செலுத்தி அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தியோ, ரோமிங் சார்ஜ் செலுத்தியோ தொடர்பு கொள்ள வேண்டியதிருக்காது. இணைப்பும் வேகமாகவும், எளிதாகவும், தெளிவாகவும் கிடைக்கும்.


சாம்சங் கேலக்ஸி ஏ7 (Samsung Galaxy A7) இந்தியாவில் அறிமுகம்

அனைத்தும் முழுமையாக மெட்டல் வெளிப்பாகத்துடன் வடிவமைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில் அறிமுகமானது. 

சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ, வர்த்தக இணைய தளத்தில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 

5.5. அங்குல அளவிலான Super AMOLED டிஸ்பிளே காட்டும் முழுமையான ஹை டெபனிஷன் காட்சி கொண்ட (1920 x 1080 பிக்ஸெல்கள்) திரை, குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் 615 ஆக்டா கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சிஸ்டம், சாம்சங் நிறுவனத்தின் யூசர் இன்டர்பேஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. 

இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 64 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். 

இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். தேவை இல்லை எனில், இரண்டாவதாக உள்ள இடத்தை மைக்ரோ எஸ்.டி. கார்ட் இயக்க பயன்படுத்தலாம். 

இந்த போனின் பரிமாணம் 151 x 76.2 x 6.3 மிமீ. எடை 141 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. /3ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதில் தரப்பட்டுள்ள பேட்டரியின் திறன் 2,600 mAh. மூன்று வகையான வண்ணங்களில் வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.30,499.


மைக்ரோசாப்ட் தரும் 100 ஜிபி இலவச இடம்

சென்ற வாரம்,மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில், புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியது. 

ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிங் தேடல் சாதனம் பயன்படுத்தினால், ஒன் ட்ரைவில் பைல் பதியும் இடத்தின் அளவை 100 ஜி.பி. ஆக உயர்த்தியது. 

ஒன் ட்ரைவ் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும், மைக்ரோசாப்ட் 10 ஜி.பி. அளவில் இலவச இடம் அளிக்கிறது. 

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோருக்கு, ஒன் ட்ரைவ் பயன்பாடு, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்ததாகவே கிடைக்கிறது. 

இது, விண்டோஸ் 10 மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது பிங் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், இலவசமாக 100 ஜி.பி. இடம் தருவதனை அறிவித்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டது போல, இந்த திட்டம், முதலில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அப்போது, அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள், சற்று சுற்று வழியை மேற்கொண்டு இந்த சலுகையினைப் பெற்றார்கள். 

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சலுகையினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. 

மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், https://login.live.com/oauth20_authorize.srf?client_id=000000004C12B387&scope=wl.signin%20wl.basic%20wl.emails%20wl.skydrive%20wl.onedrive_provision_quota&response_type=code&redirect_uri=https://preview.onedrive.com/callback.aspx என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அங்கு தங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் குறித்த லாக் இன் தகவல்களை அளிக்க வேண்டும். இதன் மூலம் சைன் இன் செய்த பின்னர், அவருக்குத் தானாக, 100 ஜி.பி. ஒன் ட்ரைவ் ஸ்டோரேஜ் இடம், இரண்டாண்டுகளுக்கு அளிக்கப்படும்.

மைக்ரோசாப்ட், தன் ஒன் ட்ரைவில் இடத்தை நான்கு வகைகளில் அளித்து வருகிறது. முதல் 15 ஜி.பி. முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது. 100 ஜி.பி. இடம் வேண்டும் எனில், மாதந்தோறும் 1.99 டாலர் அளிக்க வேண்டும். 

200 ஜி.பி. இடத்திற்கு 3.99 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு டெரா பைட் தேவைப்படுவோர், ஆபீஸ் 365 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால், மாதம் 6.99 டாலர் செலுத்த வேண்டும். 

இப்போது பிங் தேடல் சாதனப் பயன்பாடு ஊக்குவிக்கும் திட்டத்தில், அவர்களுக்கு 100 ஜி.பி. இலவச இடம் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுவதால், இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர்கள், மேலே குறிப்பிட்ட கட்டணத்திட்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்!


கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்

பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். 

சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். 

அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். 

வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென வைரஸ் புரோகிராம்கள் தாக்கும் நிலை வராது. இதற்கு ஒரு முறை தேடி அறிய அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 10 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாமே. 

இதற்கு, வைரஸ் புரோகிராம்கள் எங்கெல்லாம் தங்கி இயங்கும் குணம் கொண்டவையாக உள்ளன என்று அறிந்திருப்பது நல்லது. அந்த இடங்களை இங்கு காணலாம்.


1.ஆட்/ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs): 

சிறிதும் தேவைப்படாத புரோகிராம்கள் என்று ஒரு வகை உள்ளன. இவற்றை PUPs அல்லது Potentially Unwanted Programs என அழைப்பார்கள். இந்த புரோகிராம்கள், வழக்கமான பயனுள்ள புரோகிராம்களுடன் தொற்றிக் கொண்டு நம் கம்ப்யூட்டர்களை வந்தடையும். 

இதற்குக் காரணம், நாம் தரவிறக்கம் செய்திடும் புரோகிராம்களை, அதற்கான நிறுவன இணைய தளத்திலிருந்து இல்லாமல், வேறு ஒரு இணைய தளத்திலிருந்து, அதே புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திருப்போம். 

அப்போது உடன் ஒட்டிக் கொண்டு சில புரோகிராம்கள் தரப்படும். இந்த புரோகிராமினை உடன் இணைத்து அனுப்ப, சில வேளைகளில், மூல புரோகிராம்களை வடிவமைத்தவர்கள் அனுமதி அளித்திருப்பார்கள். 

அவர்களுக்கு இணைக்கப்படும் புரோகிராம்கள் குறித்தும் அவை தரக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் அறியாமல் இருப்பார்கள். இவற்றைக் கண்டுபிடித்து நீக்கிவிடலாம். 

இதற்கு Start மெனுவிலிருந்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Add/Remove Programs அல்லது Programs தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப மாறுபடும். இந்த இரண்டும் இல்லை என்றால், Programs and Features என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

இப்போது அண்மைக் காலத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைப் பட்டியலிடும். இந்த பட்டியலைப் பார்த்து, நமக்குத் தெரியாமல், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட, தேவையற்ற புரோகிராம்களை நீக்கவும். 


2. பிரவுசர்களைச் சோதனை செய்க: 

நம்மை அறியாமல் நாம் தவறான ஒரு லிங்க்கில் கிளிக் செய்திடுவதும், அறியாத சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுவதும், கெடுதல் விளைவிக்கும் பிரவுசர் ஆட் ஆன் புரோகிராம்களையும், ப்ளக் இன் புரோகிராம்களையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிய வைக்கும். 

இவை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தனிப்பட்ட தகவல்களைத் திருடும்; மற்றும் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே, உங்கள் பிரவுசரில் உள்ள ஆட் ஆன் புரோகிராம்கள் அனைத்தையும் அவை சரியானவை தானா? நீங்கள் அறிந்துதான் அவை உள்ளே பதியப்பட்டனவா என ஆய்வு செய்திடவும். 

தேவையற்றவற்றை உடனடியாக நீக்கவும். இவற்றைச் சில வேளைகளில் ஆட் / ரிமூவ் புரோகிராம்ஸ் பக்கம் வழியாக நீக்க வேண்டியதிருக்கும். பிரவுசர்களில் இவற்றை நீக்கும் வழிகளைப் பார்க்கலாம்.


குரோம்: பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்கவும். அதில் முகவரி கட்டத்தில் chrome://extensions என டைப் செய்து எண்டர் தட்டவும். தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, ட்ராஷ் ஐகானில் கிளிக் செய்திடவும். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறக்கவும். வலது மேல் மூலையில் உள்ள கியர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இனி Manage Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இக்கு தேவைப்படாத ஆட் ஆன் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Disable அல்லது Remove என்பதில் கிளிக் செய்திடவும். 

பயர்பாக்ஸ் பிரவுசரில், இதே போல பக்கம் ஒன்றைத் திறந்து about:addons என அட்ரஸ் பாரில் டைப் செய்து எண்டர் தட்டவும். தேவையற்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து Remove என்பதில் கிளிக் செய்தால், அவை அன் இன்ஸ்டால் செய்யப்படும்.


ஏ.சி.டி. பைபர் நெட் தரும் அதிவேக இணைய இணைப்பு

நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம். 

பீம் டெலி நிறுவனம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது. 

இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது.

மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது. 

விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது. 
ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது. 
தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது. 

இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes