'நாசா' விஞ்ஞானி கைது

அமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக நாசா விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணியாற்றியவர் விஞ்ஞானி ஸ்டீவர்ட் நொசெட்டே. அமெரிக்க வெள்ளை மாளிகை, எரிசக்தி துறை உள்ளிட்டவற்றிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

இவர், கடந்த வாரம் அமெரிக்க உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர், இஸ்ரேலுக்கு அமெரிக்க விண்வெளித் துறை ரகசியங்களை பத்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை விற்க முயற்சித்ததாக அவர் மீது அமெரிக்க உளவுத் துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது


மிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.


நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 327 அடி உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன.


இதற்கு "எரிஸ்-1 எக்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக இயங்கினால், "ஸ்பேஸ் டாக்சி சர்வீஸ்'ஆக செயல்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். 2,225 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ராக்கெட்டின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது.


பின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அட்லாண்டிக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது.கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாப் கபன்னா கூறுகையில், "இதை என்னால் நம்ப முடியவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் அற்புதமான நேரம். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வடிந்தது' என்றார்.எரிஸ் ராக்கெட் பரிசோதனை மேலாளர் பாப் எஸ் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததை விட, பரிசோதனை ஓட்டம் அதிகம் வெற்றிகரமாக முடிந்தது. இது மிகப்பெரிய வெற்றி' என்றார்.


ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம்

ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.

இந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் "நிச்சி இன்' புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம்செல் மூலம், "அப்லஸ்ட்டிக் அனிமியா' மற்றும் "தலசிமியா' போன்ற ரத்தப் புற்றுநோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார்.


அவர் மேலும் பேசுகையில், "இந்திய - ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பான, "(இஈ34+)செல்ஸ்' மற்றும் "போன் மாரோ'விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் முறை ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும். இந்த கண்டுபிடிப்பில் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை' என்றார்


காணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்

திருடிய பணத்தில் ஒருபங்கை, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத் திய திருடனை காட்டிக்கொடுத்து விட்டார் கடவுள். என்னது, கடவுள் காட்டிக் கொடுத்தாரா என்று நீங்கள் சந்தேகிக்க வேண்டாம்; உண்மையில் நடந்த சம் பவம் இது.


பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரை சேர்ந்தவன் ஹித்தேஷ் சர்மா; கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து ஸ்டேட் பாங்க் கிளையில் பல லட்சம் கொள்ளையடித்தான். கொள்ளை அடித்த பணத்தில் 10 சதவீத தொகையை உள்ளூர் காளி கோவிலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.


அதன்படி, வங்கியில் கொள்ளையடித்த பணத்தில், மூன்றரை லட்சத்தை காளி கோவில் உண்டியலில் செலுத்த சர்மா முடிவு செய்தான். அதன்படி, சர்மா வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்து கொண்டு, பணத்துடன் கோவிலுக்கு சென்றான்; அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணத்தை போட்டான்.


பணக் கட்டுகளை உண்டியலில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டான்; கட்டுக்களை போடுவதை பார்த்த மற்ற பக்தர்கள் வியப்படைந்தனர். இவனது பெருந்தன்மையை புகழ்ந்து பூசாரிகள் மந்திரங்கள் ஓதினர்.


இந்த புகழ் மழையில் நனைந்த சர்மா, உண்டியல் இருந்த அறையில் மேலே சுழன்று கொண்டிருந்த சி.சி.டி.வி.,கேமராவை கவனிக்கவில்லை. காணிக்கை செலுத்தும் போது அவன் பல கோணங்களில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டான்.


கேமரா பதிவுகளை இன்னொரு அறையில் இருந்து கண்காணித்து வந்த போலீசார் உடனே உஷாராயினர். அவனை பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்து சிறையில் அடைத்தனர். அவனிடம் விசாரணை செய்ததை அடுத்து, மற்ற ஆறு பேரையும் கைது செய்தனர்.


வீடியோ கேமரா ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். காணிக்கை பணத்தை திருப்பி ஒப்படைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது


தமிழகத்தில் 'சிக்-குன் குனியா'

தமிழகத்தில் சிக்-குன் குனியா நோய் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், இயக்குனர் இளங்கோ ஆகியோர் உறுதி செய்தனர். மதுரையில் நேற்று அவர்கள் கூறியதாவது:


இந்த காலநிலையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தற்போது பரவும் வைரஸ் காய்ச்சலை சிக்-குன் குனியா என்று நினைக்கின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.


இந்தாண்டு சிக்-குன் குனியா தடுப்பு நடவடிக்கைக்காக 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 களப்பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன.


இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவாகும். கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணியவும்; கால் வெளியே தெரியக்கூடாது. காய்ச்சல் வந்தால் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


அதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்

இந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்கள் வர இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

முதலாவதாக எந்த சர்வீஸ் புரவைடர் கொடுத்த எண்ணையும் இன்னொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வசதி விரைவில் வர இருக்கிறது.

தங்கள் எண் பலருக்குத் தெரிந்து, தம்மை அடையாளம் காட்டும் எண்ணாக இருப்பதாலேயே, நம்மில் பலரும் மொபைல் சர்வீஸ் மோசமாக இருந்தாலும், வேறு எண்ணுக்கு மாறாமலேயே இருக்கிறோம். இந்த வசதி வந்துவிட்டால், அதற்கு எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், பலர் தங்கள் மொபைல் சேவை நிறுவனத்தினை மாற்றிக் கொள்வார்கள்.

எனவே அடுத்து வரும் மாதங்களில், இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிவதைக் காட்டிலும், இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் தான் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.


இரண்டாவதாக, இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். நம்பர் மாற்றி வரும் வாடிக்கை யாளர்கள் கணக்குகளை அப்டேட் செய்வது மட்டுமின்றி, விரைவில் வர இருக்கும் 3ஜி சேவை சார்ந்தும் இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் மாறுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

அல்லது இந்த இரண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பில்லிங் சிஸ்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். ஏனென்றால் 3ஜி சேவைக்கென புதிய கட்டண விகிதங்களை, ஏற்கனவே உள்ள மற்ற கட்டண விகிதங்களுடன் அமல்படுத்த வேண்டியதிருக்கும்.

மேலும் பில்களின் அமைப்பிலிருந்து தான் இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் மொபைல் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் தான் புதிய திட்டங்களை வடிவமைத்துத் தர முடியும். எனவே புதிய வகை பில்லிங் சிஸ்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

மொபைல் சேவை நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் சேவைகளைப் புதிய திட்டங்களின் அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். நீண்ட காலம் வாடிக்கையாளர்களைத் தங்களிடம் வைத்திருக்க இலவச மொபைல்களைத் தரலாம். இதனாலும் பில்லிங் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.3ஜி வருவதால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தலாம். 2ஜி சேவையில் இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. ஆனால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தும் வகையில் இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப் படவில்லை.

இதற்குத் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் அடிப்படைக் கட்டமைப்பினை நன்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்கள் மற்றும் 2ஜி அலைவரிசைக்கு இது இணைவாக இருக்காது.

3ஜி மற்றும் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வந்த பின்னர், கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் பில்லிங் இருப்பதே சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் இருக்கும் என்பதால், மொபைல் சேவை நிறுவனங்கள் அனைத்துமே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

அத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்களு டன் தக்க வைத்திட பெரும் முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.


உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்

நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார்.

நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?

அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம்.

கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும்.

இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்


கோவையில் கொடூர வதந்தி; மக்கள் பெரும் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விபத்தில், எல்.கே.ஜி., குழந்தைகள் 30 பேர் இறந்து விட்டதாக, பரப்பப்பட்ட வதந்தியால், பொது மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மொபைல்போன் சந்தாதாரர் பலருக்கு, வந்த எஸ்.எம்.எஸ்.,சில், "கோவில்பட்டி பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்தில், கே.ஆர்.பள்ளியைச் சேர்ந்த, 30 எல்.கே.ஜி., மாணவர்கள் இறந்து விட்டனர்; 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்; அவர்களுக்காக மன்றாடவும்' என, ஆங்கிலத்தில் தகவல் இருந்தது.இந்த தகவலை உறுதிப்படுத்தாமலே பலர், தங்களது நண்பர்களுக்கு அனுப்பி, இரவு 8.00 முதல் 9.00 மணிக்குள், பல ஆயிரம் மொபைல் சந்தாதாரர்களை சென்றடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், அந்தப் பகுதியில் உள்ள தங்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம், இத்தகவலைப் பற்றி, விவரம் கேட்டனர்.


"டிவி'யிலும், இணைய தளங்களிலும், "பிளாஷ் நியூஸ்'லும் தகவல் வராத காரணத்தால், பத்திரிகை அலுவலகங்களை துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.


போலீஸ் அதிகாரிகளும், அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நீண்ட நேர விசாரணைக்குப்பின், "அப்படி ஒரு விபத்து நடக்கவே இல்லை' என்று தெரியவந்தது; ஆனாலும், எஸ்.எம்.எஸ்., பரிமாற்றம் நின்றபாடில்லை. இப்படி ஒரு வதந்தி, எங்கிருந்து, எதற்காக கிளப்பி விடப்பட்டது என்று, மெசேஜ் அனுப்பிய நண்பர்களில் ஆரம்பித்து, ஒவ்வொருவராகப் பின் தொடர்ந்து பார்த்தபோது, பலருக்கு அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து, இந்த எஸ்.எம்.எஸ்., வந்திருப்பது தெரியவந்தது. மதப் பிரசாரம் செய்யும் ஓர் அமைப்பில் இருந்து, இந்த மெசேஜ் வந்ததாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள இந்த சபைக்கு, சென்று விவரம் கேட்டபோது, அவர்களுக்கும் வேறு எங்கிருந்தோ தகவல் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்கிருந்து முதன் முதலாக இந்த, "மெசேஜ்' கிளம்பியது என்பதை, யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.


எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய வித்தியாசத்தைக் கண்டறிவதெப்படி?

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..

இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே "Y" என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..

உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்

அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"Y") எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"M") எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"D") எனவும் வழங்குங்கள்.

இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும்.
உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"Y") எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"YM") என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"MD") எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.

இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது ...வருடங்கள் ... , மாதங்கள் ...., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.

அதற்கு வேறொரு செல்லில் ="இன்று உன் வயது " & TEXT(B5, "0") & " வருடங்கள் ," & TEXT(B6, "0") & " மாதம் ," & TEXT(B7, "0") & " நாட்கள்." என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும்.


ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை

ரகசிய குறியீடு இல்லாமல் ஏற்றுமதியாகி வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வகை செல்போன்களில்,'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.

இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்


இளம் வயதில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை

இளம் வயதில், கம்ப்யூட்டர் துறையில் பொதுவாக யாரும் எண்ணிப் பார்க்க முடியாத பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த கார்னிகா யஷ்வந்த். பள்ளியில் பயிலும் போதே கம்ப்யூட்டர் துறையின் தொழில் நுட்பங்கள் இவரை ஈர்க்கத் தொடங்கியது.

சிறுவயதிலேயே தானாகவே அவற்றைக் கற்றுக் கொண்ட இவர், தனது 15 ஆம் வயதிலேயே அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் ஆன்லைன் வழியில் தகவல் தொழில் நுட்ப பயிற்சியில் சேர்ந்து தேர்வெழுதி பட்டம் பெற்றார்.

தகவல் தொழில் நுட்பத்தில் அசோசியேட் ஆப் சயின்ஸ் என்னும் இந்த பட்டம் வெஸ்ட் புரூக் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் என்னும் கல்வி நிலையம் வழங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்தோ பிரிட்டிஷ் அகடமியில் எம்.எஸ். ஆபீஸ் முதலாக ஜாவா, ஏ.எஸ்.பி., சிவில் ட்ராப்ட் மேன்ஷிப் எனப் பல பிரிவுகளில் சான்றிதழ் பெற்றுள்ளார்.

டேட்டா பேஸ் பிரிவில் ஆரக் கிள், எஸ்.க்யூ.எல். ஜாவா மற்றும் சி ப்ளஸ் ப்ளஸ் ஆகியவற்றிலும் பல சான்றிதழ் களுக்குத் தகுதி அடைந்துள்ளார். அனி மேஷன் துறையில் இன்று பிரபலமாக உள்ள பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் தானாக திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

முப்பரிமாண கேம்ஸ்களை உருவாக்குவதில் தன் வல்லமையை நிரூபித்துள்ளார். இவற்றைக் கற்றுக் கொண்டதுடன் மட்டு மின்றி, கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ருத்ரா ஆட்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங் களில் தலைமைப் பொறுப்பில் பணியாற் றியுள்ளார்.

படித்ததோடு நில்லாமல் இ.என்.எஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கி வெப் டிசைன், வெப் டெவலப்மெண்ட், இன்டர்நெட்டில் விளம்பரம் செய்வது, பொருள்களை ஆன்லைனில் மார்க்கட்டிங் செய்வது ஆகிய முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இயக்கி வருகிறார்.

பல முன்னணி நிறுவனங்கள் இவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவற்றில் இஸ்கான், ஐ.பி.எம். பயோ கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத் தக்கன. இளம் வயது என்றாலும் அறிவிலும் அனுபவத்திலும் வயது கூடிய பலருக்கு இணையாகப் பல கருத்தரங்களில் பங்கு கொண்டு சிறப்பாக பங்களித்துள்ளார். இவரை பல சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்துள்ளன.

தகவல் தொழில் நுட்பம் மட்டுமின்றி கலை மற்றும் மானிடவியல் குறித்து பல கவிதைகளை ஆங்கிலத்தில், எழுதி உள்ளார். கவிதைகள் அனைத்தும் இந்த உலகின் இன்றைய நிலை குறித்து, இவர் கொண்டுள்ள அன்பையும் ஆதங்கத்தினையும் காட்டுகின்றன.


என் அன்பான கடவுளே...


இந்த உலகத்தை தூக்கி நிறுத்த


எனக்கு


மன உறுதியையும் சக்தியையும் கொடு.


இந்த உலகத்தைப் பாருங்கள்;


இப்போது கூட தாமதமில்லை;


இன்று, இல்லை நாளை இந்த உலகம்


நம் கைகளை விட்டுப் போய்விடும்.


அதனால் இன்றே உறுதி எடுப்போம்;


நான் மட்டுமல்ல நாம் அனைவரும்


இந்த உலகைத் தூக்கி நிறுத்துவோம்.


வளரும் உலகின் வளத்தை உயர்த்தி அமைதியைக் காக்க இவரைப் போல திறமை கொண்ட பல இளைஞர்கள் இருந்தால் போதும்.


ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம்.


ரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது


பயர்பாக்ஸ் டவுண்லோட் மேனேஜர்

இணையத்தில் இருந்து நமக்குத் தேவையான புரோகிராம்கள் மற்றும் படங்களை நாம் பிரவுசர்கள் தரும் வசதி மூலம் டவுண்லோட் செய்கிறோம். பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் டவுண்லோட் வசதி சிறப்பாகவே உள்ளது.

இருந்தாலும் டவுண்லோட் செய்வதில் நமக்கு வேகம் உட்பட பல வசதிகள் கிடைக்கும் வகையில் பல டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று DownThemAll என்னும் புரோகிராம் ஆகும்.

இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதன் வேக மும், டவுண்லோட் செய்யப் பட வேண்டிய புரோகிராம் களை வரிசையாக வைத்து இறக்கும் லாவகமும், இடை யே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் டவுண்லோட் செய்திடும் வகையும் மிகவும் சிறப்பாக உள்ளது.


இந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இது வழக்கத்தைக் காட்டிலும் 400% வேகத்தில் பைல்களை டவுண்லோட் செய்திடும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு வேகம் உள்ளதா என்று அறிய முடியவில்லை என்றாலும், வேகம் அதி வேகம் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த புரோகிராமில் தரப்பட்டிருக்கும் இன்னொரு ஆப்ஷன் மிகச் சிறப்பாக உள்ளது. ஓர் இணையப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு லிங்க் அல்லது இமேஜ் ஆகியவற்றையும் இதன் மூலம் டவுண்லோட் செய்திட முடியும். அதனால் தான் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்கிறது. பின் பில்டர்கள் மூலம் நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம். எந்த பைல்கள் என்பதற்கு செக் பாக்ஸ் களைக் கொடுத்து ஆப்ஷன் கேட்கிறது.

இதிலேயே டவுண்லோட் செய்வதற்கான புரோகிராம் மற்றும் படங் களுக்கு புதுப் பெயர் கொடுக் கலாம்; எந்த டைரக்டரியில் பதிய வேண்டும் என்பதனை உறுதி செய்திடலாம்; சப்டைரக்டரிகளை உருவாக்கலாம்;

மேலும் இது போல பல வேலைகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இந்த பைல்களை குறிப்பிட்ட டைரக்டரிகளில் டவுண்லோட் செய்திடக் கட்டளை கொடுத்து விட்டு நகர்ந்து விடலாம். கம்ப்யூட்டர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை.


பயர்பாக்ஸ் பிரவுசருக்கு இது ஓர் அருமையான தோழனாக இயங்குகிறது. மிகப் பெரிய அளவிலான பைல்களை டவுண்லோட் செய்வதற்கு இது சிறந்த துணையாக உள்ளது.

இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1.1.4 னைப் பெற http://www.techspot. com/downloads/4871downthemall.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இது பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான பயர்பாக்ஸ் 3.5 உடன் இணைந்து செயலாற்றுகிறது


காசாக ஒரு பிளாஷ் டிரைவ்

எத்தனையோ உருவங்களில் பிளாஷ் டிரைவ்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அண்மையில் பிரான்ஸைச் சேர்ந்த லா சீ (LaCie) என்ற நிறுவனம், முற்றிலும் புதிய வகையில் பிளாஷ் டிரைவ் ஒன்றை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது.

இது ஒரு நாணய உருவத்தில் உள்ளது. அதனாலேயே இந்த டிரைவிற்கு CurrenKey என்று பெயரிடப்பட்டுள்ளது. வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாணயம் போல இது உள்ளது. இதன் ஒரு புறத்தில் 4எஆ என அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறத்தில் யு.எஸ்.பி. இலச்சினை தரப்பட்டுள்ளது.

இது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேக்கிங் அமைப்பும் புதுமையாக உள்ளது. பேக்கிங் என்று இல்லாமல் ஒளி ஊடுறுவும் அட்டையில் வைக்கப்பட்டு தரப்படுகிறது. இதற்கான சிடி எதுவும் தரப்படவில்லை. அதனால் இதற்கான டிரைவர் புரோகிராமினை இதன் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.

இந்த பிளாஷ் டிரைவினை5.5 Designers என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை எளிதாக உங்கள் பாக்கெட்டில் ஒரு நாணயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல, எடுத்துச் செல்லலாம். இதன் விட்ட அளவு 36 மிமீ. இதன் தடிமன் 9 மிமீ. நாணய வடிவில் இருப்பதால் பக்கத்து யு.எஸ்.பி. போர்ட்டில் வேறு சாதனம் ஏதேனும் செருகப்பட்டிருந்தால், இதனை இணைப்பது கடினமே.

இதன் யு.எஸ்.பி. ப்ளக் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில் இந்த ப்ளக்கினை இழுத்துச் செருக வேண்டியுள்ளது. இதன் செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. எழுதும் மற்றும் படிக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது.

குறைவான எடையில், சிறிய அளவில் இருப்பதால், எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிரைவ்களில் இது அதிக வசதி கொண்டதாக உள்ளது.இதனுடைய தனித்தோற்றம் விற்பனைக்கு ஊன்றுகோலாகவும், ஸ்டைலாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட இந்த பிளாஷ் டிரைவ் ரூ. 1,200 ஆகும். ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது.


மற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், புதுமையை விரும்புபவர்களுக்கும், வித்தியாசமான சாதனங்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஓர் அருமையான சாதனமாகும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes