அறிமுகமானது சாம்சங் காலக்ஸி கிராண்ட்


சாம்சங் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் வரிசையில், சென்ற வாரம், டில்லியில் காலக்ஸி கிராண்ட் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

மிகப் பெரிய அளவில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. கேமரா, வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா தரப்பட்டுள்ளன. 

காலக்ஸி எஸ்3, நோட் 2 ஆகியவற்றில் தரப்பட்ட மல்ட்டி விண்டோ, ஆல் ஷேர் பிளே, பாப் அப் வீடியோ, போன்ற சாப்ட்வேர் அம்சங்களும் இதில் காணப்படுகின்றன.

இதன் இரண்டு சிம் இயக்கமும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது. இதில் ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருக்கையில், இன்னொரு சிம்மிற்கு அழைப்பு வந்தால், அது உடனே முதல் சிம்மிற்கு பார்வேர்ட் செய்யப்படும். 

புளுடூத் 4.0, 3ஜி, வைபி, 8 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், நினைவகத்தினை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இதன் மற்ற தொழில் நுட்ப அம்சங்கள். வழக்கமான எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. 

இதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.21,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் வழியாக வாங்கினால், முதல் இரண்டு மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. 

சாம்சங் நிறுவனம் இந்த போனுக்கு பிளிப் கவர் ஒன்றினையும் வழங்குகிறது.


விண்டோஸ் 7 - ஷார்ட் கட் வழிகள்


கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 

Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.

D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.

E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப் படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.

F: தேடல் விண்டோ காட்டப்படும்.

G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.

L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.

M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.

R: ரன் விண்டோவினை இயக்கும்.

T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.

U: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.

TAB: முப்பரிமாணக் காட்சி

Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.


மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 

சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு பலரும் மாறி வருகின்றனர். 

என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர் பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. 

உலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இங்கு காணலாம். 

1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.

1974: ஐ.பி.எம். நிறுவனம் எஸ்.க்யூ.எல். தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது. டொனால்ட் சேம்பர்லின் மற்றும் ரேய்மண்ட் பாய்ஸ் இதனைக் கொண்டு வந்தனர்.

1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1979: வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது. 

1984: மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.

1985: விண்டோஸ் 1.0. வெளியானது. 

1986: இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார். 

1989: மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது. 

1990: NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.

1992: விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர். 

1993: மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.

1993: விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.

1993: விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. 

1995: பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.

1995: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.

1995: விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டது.

1997: விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.

1998: மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது. 

1998: ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது.

2000: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது. 

2000: எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டிருந்தது. 

2000: நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது. 

2001: விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன. 

2002: மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது. 

2002: டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது. இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது. 

2002: விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.

2003: டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் 2003 மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது. 

2003: விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.

2003: எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது.

2003: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது. 

2003: விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.

2003: மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன. 

2006: 64 பிட் சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.

2006: டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.

2006: புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.

2007: ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச்சர்வர் 2007 வெளியானது.

2007: மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 வெளியானது.

2008: விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

2009: விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

2009: ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.

2010: டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது. 

2010: ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது. 

2010: ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது. 

2010: மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.

2012: விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

2012: டாட் நெட் 4.5 சோதனையில் உள்ளது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.

2012: புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது.

2012: சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.

2013: இந்த ஆண்டில், விண்டோஸ் 8 ப்ரோ மற்றும் இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியாக உள்ளது.


இந்தியாவில் நோக்கியா 920 மற்றும் 820 லூமியா


வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, நோக்கியாவின் லூமியா 920 மொபைல் ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது குறித்த தகவல்கள், சென்ற செப்டம்பரில் தரப்பட்டன. 4.5 அங்குல அகலத் திரை (1280 x 768 பிக்ஸெல்கள்) ப்யூர் மோஷன் எச்.டி. தொழில் நுட்பம், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் எஸ் 4 ப்ராசசர் ஆகியன உள்ளன. போனின் மிகச் சிறந்த அம்சமாக, இதன் விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கூறலாம். 

இதன் கேமரா, ப்யூர் வியூ தொழில் நுட்பத்தில், 8.7 எம்பி திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி.பிளாஷ், முழு எச்.டி. திறனில் வீடியோ பதிவு வசதியுடன் உள்ளது. முன்புறமாக, இன்னொரு கேமரா, 1.2 எம்பி திறனுடன், வீடியோ அழைப்பிற்கெனத் தரப்பட்டுள்ளது. 

நெட்வொர்க் இணைப்பிற்கென, 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 3.1, GPS / aGPS, NFC ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இதன் ராம் மெமரி 1 ஜிபி. உள் நினைவகம் 32 ஜிபி. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச இந்திய விற்பனை விலை ரூ. 38,199.


இந்த மொபைல் போனுடன், நோக்கியா நிறுவனம் லூமியா 820 மொபைல் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்தியது. 4.3 அங்குல அகலத் திரை ( 800 x 480 பிக்ஸெல்கள்) ஓ.எல்.இ.டி. கிளியர் பிளாக் டிஸ்பிளே திறன் கொண்டதாக உள்ளது. 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் எஸ் 4 ப்ராசசர் இதனை இயக்குகிறது. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. 

இந்த போனின் கேமரா, 8 எம்பி திறனுடன், ஆட்டோ போகஸ் தொழில் நுட்பம் மற்றும் கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் கொண்டுள்ளது. இதனுடன் டூயல் எல்.இ.டி.பிளாஷ் இயங்குகிறது. வீடியோவினை முழு எச்.டி. திறனுடன் பதிந்து கொள்கிறது. முன்புறமாக, ஒரு விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளது. 

3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 3.1, GPS / aGPS and NFC ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதனுடைய ராம் நினைவகம் 1 ஜிபி. உள் நினைவகம் 8 ஜிபி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத்தின் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதன் பேட்டரி 1,650 ட்அட திறன் கொண்டது.இந்தியாவில் இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 27,559. ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.


மீண்டும் ஜாவா எச்சரிக்கை
இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும். 

அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் பிளக் இன் புரோகிராம்கள் உருவாக்க, ஜாவா பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

முழுமையாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா புரோகிராம் இயக்கத்தில் கூட இந்த பிழை உள்ளதாகவும், இதனால், ஜாவா பயன்பாடு என்பதே தயக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடாக இருப்பதாகவும் பலர் கூறி உள்ளனர். 

இந்த பிழையான குறியீட்டினைப் பயன்படுத்தி, ஒருவரின் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, கம்ப்யூட்டர் பயனாளரை ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வருமாறு ஆசை காட்ட வேண்டும். 

அந்த இணைய தளத்திற்கான லிங்க் கிளிக் செய்யப்பட்ட பின்னர், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்று, பயனாளரின் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. 

இதன் மூலம் குறிப்பிட்ட கம்ப்யூட்டர், அதற்கு உரிமையான பயனாளரின் கட்டுப்பாட்டில் இருந்து, ஹேக்கரின் கைக்கு மாறுகிறது. எனவே, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், தங்கள் மின் அஞ்சலுக்கு வரும் செய்திகளில், ஏதேனும் இணையதளத்திற்குச் செல்லுமாறு லிங்க் கொடுக்கப்பட்டால், அதனை அறவே தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அப்படியே மிகவும் தெரிந்த நபரிடமிருந்து வந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து அது போன்ற லிங்க் குறியிடப்பட்டு கிடைத்தாலும், அவரை எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டு, அது போல ஒரு மெயிலை அனுப்பி உள்ளாரா என்று அறிந்த பின்னர், லிங்க்கில் கிளிக் செய்வது நல்லது. இமெயில் மட்டுமின்றி, இன்ஸ்டண்ட் மெசேஜ்களில் இது போன்ற லிங்க் கிடைத்தாலும் அதில் கிளிக் செய்திட வேண்டாம். 

ஜாவா சாப்ட்வேர் வழங்கும் ஆரக்கிள் நிறுவனம், இந்த பிழையைச் சரி செய்திடுவதற்கான புரோகிராம் அல்லது பேட்ச் பைல் எதனையும் வழங்கவில்லை. 

எனவே, பலரும் ஜாவா இயக்கத்தின் செயல்பாட்டினை முடக்கி வைக்கும் வழிகளை அறிந்து, ஜாவா செயல்பாடு இல்லாமல் செய்கின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், பிரவுசரைத் திறந்து டூல்ஸ் மெனு செல்லவும். 

அங்கு ‘Manage Plugins’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், ‘All items’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ஜாவா ப்ளக் இன் புரோகிராமின் இயக்கத்தை நிறுத்த வழியை அமைக்கவும்.

மற்ற பிரவுசர்களில் இதனை மேற்கொள்ள,http://nakedsecurity.sophos.com/2012/08/30/how-turn-off-java-browser/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.


ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன்


ஆப்பிள் நிறுவனமாவது, விலை மலிவாக போன் தருவதாவது? என்ன ஜோக்கா? என்று நம் மனதில் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணத் தோன்றும். 

ஆனால், நமக்குக் கிடைக்க இருக்கும் தகவல்கள் இது உண்மையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளன என உறுதிப்படுத்துகின்றன.

இன்று, மொபைல் போன் சந்தையில் மிகக் குறைவான விற்பனைப் பங்கினையே ஆப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டுமே இதன் விற்பனை ஓங்கியுள்ளது. 

மற்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனப் போன்களின் பங்கு மிக மிகக் குறைவே. எனவே, வளர்ந்து வரும் நாடுகளில், தன் போன்களை விற்பனை செய்திட, ஆப்பிள் நிறுவனம், குறைந்த விலையில் ஐ போன்களைத் தயாரித்து விற்பனை செய்திடத் திட்டமிடுகிறது.

2013 ஆம் ஆண்டு முடிவிற்குள் வர இருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 100 டாலரிலிருந்து 149 டாலருக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தி போன்களை வெளியிடும் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்புள்ளது. தற்போது 75% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும், 15% ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டமும் பயன்படுத்தப்படுகிறது. 

புதிய விலை குறைவான போனை சீனாவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிடுகிறது. ஐபோன் 5 எஸ் வெளியான வாரத்தில், சீனாவில் விற்பனை ஒரே வாரத்தில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது.

பொதுவாக, தன் புதிய போன்களை அறிமுகப்படுத்துகையில், தன் பழைய மாடல் போன்களின் விலையைக் குறைத்து, தன் போன்களின் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நடவடிக்கை எடுக்கும். 

ஆனால், இது சரியாகச் செயல்படாததால், ஆப்பிள் புதிய, விலை குறைவான ஐபோன்களை வெளியிட திட்டமிடுகிறது. 

வர இருக்கும் புதிய, விலை குறைந்த போனில், அதன் டிஜிட்டல் பகுதிகள் குறைவான விலையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். தற்போதைய மாடல்களைக் காட்டிலும் சிறியதாக இருக்கலாம்.

இதே நேரத்தில் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் இசைவாக இயங்கும் வகையில் மொபைல் போன் ஒன்றைத் தயாரிக்கவும் ஆப்பிள் திட்டமிடுகிறது. 

இதுவரை உலக அளவில், 27 கோடி ஐ போன்களை ஆப்பிள் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 8,050 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த வருமானம், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50% ஆக இருந்தது.


விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. 

இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும். 

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த டூல்ஸ் “backup” போன்ற சொற்களை சர்ச் பாக்ஸில் போட்டு தேடினாலும் கிடைக்காது. 

இவற்றைப் பெற, விண்டோஸ் கீயினை அழுத்தவும். பின்னர் “backup” என்பதற்குத் தேடவும். பின்னர், Settings category தேர்ந்தெடுத்து, Save backup copies of your files with File History என்ற விண்டோவினைத் திறக்கவும். இந்த File History விண்டோவில், கீழ் இடது மூலையில், Windows 7 File Recovery என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

இங்கு பழைய விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் “Windows 7 File Recovery.” என்ற பெயரில் இருப்பதனைக் காணலாம். இதனை இயக்கினால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் செயல்பட்டது போலவே இதுவும் செயல்படுவதனைக் காணலாம். 

ஆனால், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் என இரண்டினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது, என விண்டோஸ் 8 சிஸ்டம் கூறுகிறது. எனவே, விண்டோஸ் 7 அடிப்படையில் பேக் அப் காலத்தினை செட் செய்திருந்தால், விண்டோஸ் 8 தரும் File History கிடைக்காது. 

இந்த விண்டோவினை உடனடியாகப் பெறுவதற்கு இன்னொரு வழியும் உள்ளது. recovery எனச் சொல்லிட்டு தேடினால், Windows 7 File Recovery கிடைக்கும். 

1.முழு சிஸ்டம் பேக் அப் ஆக:

விண்டோஸ் 8 பேக் அப் டூல்ஸ் போல இல்லாமல், விண்டோஸ் 7 பைல் ரெகவரி டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் ஒன்றை பேக் அப் செய்திடலாம். சிஸ்டம் இமேஜ் என்பது, நம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் காப்பி ஆகும். 

இந்த இமேஜை மீட்டு செயல்படுத்தினால், அனைத்து பைல்களும் நமக்குக் கிடைக்கும். பைல்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள் மற்றும் செட்டிங்ஸ் அமைப்புகளும் மீளப் பெறலாம். 

சிஸ்டம் இமேஜ் பேக் அப் செய்திட, சைட் பாரில் உள்ள Create a system image option என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இமேஜை ஹார்ட் டிஸ்க்கில் பதியலாம்; அல்லது பல டிவிடிக்களில் பதியுமாறு கட்டளை கொடுக்கலாம். 

நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், பிற கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அல்லது இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் என எதிலும் பதியலாம். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் இமேஜ் என்பதால், இது சற்று பெரியதாகவே இருக்கும்.

2. பேக் அப் இமேஜ் ரெஸ்டோர் செய்திட:

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் ஒரு இமேஜாகப் பேக் அப் செய்திட்ட பின், என்றாவது ஒரு நாள், அவற்றை விரித்துப் பைல்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும். இதற்கு PC settings ஸ்கிரீனைத் திறக்கவும். அடுத்து Windows Key+C அழுத்தவும். 

Settings கிளிக் செய்து, அதில், Change PC settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General category என்பதைனைத் தேர்ந்தெடுத்து, கீழாக Advanced startup என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். 

இப்போது கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க, இந்த மெனுவில், Restart now என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது Advanced options என்ற திரை காட்டப்படும். இதில் Troubleshoot > Advanced Options > System Image Recovery எனச் செல்லவும். இங்கு சிஸ்டம் இமேஜ் கிடைக்கும். 

இதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை ரெஸ்டோர் செய்திட இயலும். விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திட பல முறை முயற்சித்தும் இயலவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் தானாக அட்வான்ஸ்டு ஸ்டார்ட் அப் ஆப்ஷன்ஸ் என்னும் வழிமுறைக்குச் செல்லும். 

அல்லது பூட் செய்திடுகையில், ஷிப்ட் கீயினை அழுத்தியவாறு இருப்பதன் மூலம் பூட் செய்திடலாம். இல்லை எனில், விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் டிஸ்க் அல்லது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பூட் செய்து, பின்னர் பேக் அப் செய்த பைல்களைப் பெறலாம். 

3. பேக் அப் காலம் செட் செய்திட: நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் பைல் ஹிஸ்டரி வழி பேக் அப் விரும்பாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் அப் வழிகளை விரும்பினால், Windows 7 File Recovery விண்டோவில், Set up backup லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் 7 சிஸ்டம் பாணியில், சிஸ்டம் ஷெட்யூல் செட் செய்திடலாம். 

விண்டோஸ் 8 பைல் ஹிஸ்டரி பேக் அப் டூலில் சில வரையறைகள் உள்ளன. இந்த வழியின் மூலம், சிஸ்டம் லைப்ரரீஸ் பிரிவில் உள்ள பைல்களை மட்டுமே பேக் அப் செய்திட முடியும். எனவே, இதனைத் தவிர்த்து வேறு போல்டரில் உள்ள பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் எனில், அவற்றை லைப்ரரீஸ் பிரிவில் சேர்க்க வேண்டும். 

ஆனால், விண்டோஸ் 7 டூல்ஸ், முழுக் கம்ப்யூட்டருக்குமான பைல்களை இமேஜ் பைலாகத் தருவதால், இதுவே எளிய வழியாகவும், அனைவரும் விரும்பும் சாதனமாகவும் உள்ளது.


மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு


அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். 

இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.

இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர் தொகுப்பினை, மொபைல் போனில் பதித்துவிட்டால், அந்த மொபைல் போனை வைத்திருப்பவரை, இன்டர்நெட் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்று கண்டறிந்து கொள்ளலாம். 

இந்த போனை வைத்திருப்பவருக்கு ஆபத்து நிகழ இருந்தாலோ, அல்லது அசாதரணமான சூழ்நிலை, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, இதில் குறியிடப்படும் எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தி உதவி பெறலாம். எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தியவுடன், அந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் ஏற்கனவே பதிந்து வைத்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தியும், மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பப்படும். 

சாப்ட்வேர் மூலம் அவர் இருக்கும் இடம் அறியவருவதால், உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு ஆட்களை அனுப்பி உதவ முடியும். 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, பல சமூக நற்பணிகளில் ஈடுபடும், லோகலெக்ஸ் (Lokalex) என்னும் அமைப்பின் சார்பாக இந்த மென்பொருள் மொபைல் போன்களுக்கு (www.lokalex.com) இலவசமாகவே வழங்கப் படுகிறது. 

தற்போது இந்த அவசரகால உதவி தரும் மென்பொருள், ஜாவா இயங்கும் அனைத்து மொபைல் போன்களில் செயல்படும். இன்டர்நெட் அல்லது ஜி.பி.எஸ். வசதிகள் இல்லை என்றாலும், இதனைப் பதிந்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களில், இன்டர்நெட் இணைப்பை இயக்கிய பின்னர், இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம், அவசர காலத்தில், போன் இருக்குமிடம், இந்த மென்பொருள் தொடர்புகொள்ளும் சர்வருக்கு தகவல்களாகச் செல்லும். 

இந்த மென்பொருளை மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாட்டலைட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவசர காலத்தில் அந்நிறுவனங்களின் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உதவி அளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சாப்ட்வேர் தொகுப்பினை, மொபைல் போன்களில் பதிவதும் இயக்குவதும் மிக எளிதாகும். www.safetrac.inஎன்ற இணைய தளம் சென்று, முதலில் பயனாளர் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சரியான தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு, அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு, எப்படி இந்த மென்பொருளைப் பதிவு செய்து கொள்வது என்ற தகவல்கள் அனுப்பப்படும். 

ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இந்த மென்பொருள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. https://play.google.com/store/apps/details?id=com.src.safetrac என்ற முகவரிக்குச் செல்லவும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் www.safetrac.in இணையதளத்தில், கேள்வி பதில் பகுதியில் விளக்கம் பெறலாம். அல்லது contact_safetrac@kritilabs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சந்தேகங்களை அனுப்பி தெளிவு பெறலாம். 

இந்த மென்பொருள் இயக்கப்படும் போதுதான், மொபைல் போனை வைத்திருப்பவரின் இடம் எங்குள்ளது என அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பயனாளர் ஏற்கனவே யாருடைய எண்களுக்கு அனுமதி அளித்துள்ளாரோ, அவர்கள் மட்டுமே இந்த இடம் குறித்து அறியும் பணியை மேற்கொள்ள முடியும். எனவே, இதில் தனி மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் எதுவும் மீறப்பட மாட்டாது.

வரும் காலத்தில், எமர்ஜென்ஸி பட்டன் அழுத்தப்படுகையில், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்புதல், பயனாளர் குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பற்றது என எண்ணினால், அதனை www.safecity.in என்னும் இணைய தளத்தில் பதிந்து வைத்தல், குறிப்பிட்ட இடம் செல்கையிலும், கால நேரத்திலும், மொபைல் போனிலிருந்து அழைப்பு வரும்போதும் தானாக இந்த சேப்ட்ராக் மென்பொருளை இயக்கும் வகையில் அமைத்தல், முன்பே செட் செய்யப்பட்ட மூன்றாவது நபர் மூலமாக, பயனாளரின் மொபைலில் உள்ள எமர்ஜென்ஸி பட்டனை இயக்குதல் போன்றவற்றை இந்த மென்பொருளில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை இந்த மென் பொருளை வடிவமைத்தவரும், லோக்கலெக்ஸ் சமூக உதவி மையத்தின் இயக்குநருமான ராஜாராம் தெரிவித்தார்.

லோக்கலெக்ஸ் சமூக உதவி மையம், மலைவாழ் மக்களுக்கு சுகாதரமான கழிப்பிட வசதி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வழிகளைக் கற்றுத் தருதல், இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற உதவிகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


விண்டோஸ் 8-ல் POP மெயில் கிடைக்குமா?


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் மெயில் புரோகிராம், பி.ஓ.பி. மெயில் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்வதில்லை. 

ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த இடத்திலும், எந்த சாதனத்தின் மூலமும் (பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்ளட் பிசி) மெயில்களைக் கையாளும் வசதியைத் தர இலக்கு கொண்டு தயாரிக்கப்பட்டது. 

அப்படியானால், விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?

இதனை அறிந்து கொள்ளும் முன், பி.ஓ.பி. மெயில் என்பது என்ன என்று பார்க்கலாம். இன்டர்நெட் இரண்டு வகையான மெயில் வழிமுறையைப் பின்பற்றுகிறது. இதில் பழமை யானதுதான் பி.ஓ.பி. மெயில் Post Office Protocol (POP) வழிமுறை. புதிய முறையானது ஐ.எம்.ஏ.பி, Internet Messaging Access Protocol (IMAP) என்ற ஐமேப் வழிமுறை. 

பி.ஓ.பி. வழிமுறையில், மெயில்கள், நம் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம் வழியாக, கம்ப்யூட்டரில் இறங்குகின்றன. பொதுவாக, கம்ப்யூட்டருக்கு வந்த பின்னர், அவை ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சர்வரிலிருந்து நீக்கப்படும். 

நாமாக, இருக்கட்டும் என அதனை வடிவமைத்திருந்தால், அவை அங்கேயே பெட்டி கொள்ளும் வரை இருக்கும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் பல கம்ப்யூட்டர் மூலம் மெயில் பார்ப்பதாக இருந்தால், மெயில்கள் இந்த கம்ப்யூட்டரில் சிதறிக் கிடக்க ஆரம்பிக்கும். நமக்கு அனைத்தும் ஒரே வகையில் கிடைக்காது.

IMAP வழி முறை ஒரு சிறந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. நம் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், மற்றும் பிற மெயில் பாக்ஸ்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மாற்றம் இல்லாமல் இருக்கும். எந்த சாதனத்தின் வழி பார்த்தாலும், இவை இடம் மாறாது. 

இதனாலேயே, விண்டோஸ் 8 சிஸ்டம் பி.ஓ.பி. வழிமுறையை சப்போர்ட் செய்வதில்லை. இந்த புதிய சிஸ்டம், மொபைல் சாதனங்கள் மூலமும் இயங்கி மெயில்களைப் பார்க்க வசதி தருவதால், பி.ஓ.பி. இல்லாமல், ஐமேப் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. 

ஆனால், எனக்கு பி.ஓ.பி. வழிமுறைதான் வேண்டும் என்று விரும்புகிற கம்ப்யூட்டர் பயனாளர்கள் என்ன செய்திட வேண்டும்? இந்தக் கேள்விக்கு முதல் பதில் என்ன தெரியுமா? விண்டோஸ் 8 அப்படித்தான். ஏற்றுக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான். 

ஆனால், இது தீர்வு இல்லையே. விண்டோஸ் 8 தரும் மெயில் கிளையண்ட், பி.ஓ.பி. வழிமுறைய சப்போர்ட் செய்திடவில்லை எனில், அதனை ஏற்றுக் கொண்டு இயங்கும் ஒரு மெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் மெயில் (விண்டோஸ் எசன்ஷியல்ஸ் தொகுப்பின் ஒரு இலவச புரோகிராம் Windows Mail) பயன்படுத்தலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த டாட் நெட் பிரேம் ஒர்க் (.NET Framework 3.5) தேவை. விண்டோஸ் 8 இதன் பதிப்பு 4.5 ஐக் கொண்டுள்ளது. 

விண்டோஸ் எசன்ஷியல்ஸ் பதிந்து கொள்ளும் முன்பு, இதனைப் பதிந்து கொள்ளலாம். 

விண்டோஸ் 8 இன்டர்பேஸில், control என டைப் செய்து, கண்ட்ரோல் பேனல் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வழக்கமான விண்டோஸ் இன்டர்பேஸ் கிடைக்கும். இதில் கண்ட்ரோல் பேனல் செல்வீர்கள். இங்கு features என டைப் செய்து, Turn Windows features on or off என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி கிடைக்கும் டயலாக் பாக்ஸில், NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். தொடர்ந்து சென்று மெயில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திடவும். 

பின்னர் மற்ற விண்டோஸ் எசன்ஷியல்ஸ் அப்ளிகேஷன்களை, உங்களுக்குத் தேவைப்பட்டால், இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


நிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்


மொபைல் மற்றும் மெமரி சிப்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 830 கோடி டாலர் லாபமாகப் பெற்றதாக அறிவித்துள்ளது. 

பன்னாட்டளவில், ஒரு நிமிடத்தில் 500 மொபைல் போன்கள் என்ற அளவில் விற்பனை மேற்கொண்டு வருகிறது.

சென்ற ஆண்டில், இதன் போட்டி நிறுவனமான ஆப்பிள் ஒரே ஒரு ஸ்மார்ட் போனை மட்டுமே அறிமுகப்படுத்தியது, சாம்சங், அந்த அந்த நாடுகளின் மக்கள் விருப்பத்திற்கேற்ப, ஸ்மார்ட் போன் வரிசையில் 37 மாடல்களை அறிமுகப்படுத்தியது. 

இதே ஸ்மார்ட் போன் வரிசையில், தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. 18, நோக்கியா 9 மற்றும் எல்.ஜி. 24 மாடல் போன்களை அறிமுகம் செய்தன.


83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது


இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். 

இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. 

இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அழிந்து போன மொபைல் டேட்டா திரும்ப பெற


இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. 

போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா? 

சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை. 

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. 

இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும். 

இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது. 

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.


கூகுள் தந்த ஈஸ்டர் எக்ஸ்


மென்பொருள் தயாரிக்கும் வல்லுநர்கள், தங்களின் படைப்புகளில், வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் விளைவுகளையும், காட்சித் தோற்றத்தையும் ஏற்படுத்தும் சில குறியீடுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். 

இதனை ஈஸ்டர் எக்ஸ் (Easter Eggs) என அழைக்கின்றனர். இது சாதாரண பயனாளர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. ஆனால், தெரிந்து பயன்படுத்தினால், வேடிக்கையை ரசிக்கலாம். 

இந்த வகையில் கூகுள் தன் அனைத்து படைப்புகளிலும், கூகுள் தேடல் சாதனம், மெயில், டூடில், குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அனைத்திலும் இது போன்ற ஈஸ்டர் எக்ஸ் என்னும் வேடிக்கை தரும் குறியீடுகளை அமைத்துள்ளது. சென்ற ஆண்டிலும் இது போல பல அமைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

1. “zerg rush”:

சென்ற ஏப்ரலில் இது வெளியானது. கூகுள் தேடல் கட்டத்தில், “zerg rush” என டைப் செய்து பாருங்கள். தேடல் முடிவுகள் காட்டப்படும். ஆனால், அவற்றையும் மீறி, சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில், கூகுள் என்ற சொல்லின் ‘o’ எழுத்து அலைகள் வரிசையாகத் தோற்றமளிக்கும். 

இந்த எழுத்துக்கள் தேடல் முடிவுகள் காட்டும் வரிகளைப் படிப்படியாக அழிக்கும். இறுதியின் அனைத்தையும் அழித்த பின்னர், இவை மேலே நீந்தி வந்து அனைத்து ‘o’ எழுத்துக்களும் சேர்ந்து “GG” (“good game”), என்னும் அடையாளத்தினை ஏற்படுத்தும். 

StarCraft என்னும் விளையாட்டில் இது போல ஏற்படுவது உண்டு. அதனைப் போல இதுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் முடிவில், உங்களுக்கான தேடல் முடிவுகள் மீண்டும் கிடைக்கும்.

2. எண்களில் வேடிக்கை:

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், எண்கள், வழக்கம் போல 10ன் அடிப்படையிலும், பைனரி, ஆக்டல் மற்றும் ஹெக்ஸாடெசிமல் (“binary,” “hexadecimal,” or “octal”) அடிப்படையிலும் புழக்கத்தில் உள்ளன. நாம் படிக்க எப்போதும் 10ன் அடிப்படையில் தான் எண்கள் காட்டப்படும். 

ஒரு சிலர் பைனரி அல்லது ஹெக்ஸா டெசிமல் வகையில் எண்களைக் காண விரும்புவார்கள். கூகுள் தேடல் கட்டத்தில் தேடுதலுக்கான சொற்களைக் கொடுத்தால், இத்தனை இடங்களில் இதற்கான இணைத் தகவல்கள் உள்ளன என்று காட்டப்படும். 

இதில், தேடல் கட்டத்தில், என ஏதேனும் ஒன்றை டைப் செய்து, தேடினால், அதற்கேற்ற வகையில் எண்கள் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, “hexadecimal” என டைப் செய்தால், கூகுள் “About 0x19a7620 results (0.27 seconds)” எனக் காட்டும். தேடிக் கிடைக்கும் இணைகளுக்கு ஏற்றார் போல் இந்த எண் மாறும்.

4. மொபைல் ஓ.எஸ்:

கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திலும் இந்த ஈஸ்டர் எக்ஸ் என்னும் வேடிக்கை விளையாட்டு தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 4.1 (ஜெல்லி பீன்) இந்த வகையில் வேடிக்கையான ஒன்றைக் கொண்டுள்ளது. 

இதனைக் கண்டு மகிழ, உங்கள் ஆண்ட்ராய்ட் 4.1 போனில், போன் செட்டிங்ஸ் தேர்ந்தெடுத்து, “About phone” என்பதற்குச் செல்லவும். இந்த மெனுவில் “Android version” என்பதனைப் பலமுறை தட்டிடுக. உடன், பெரிய ஜெல்லி பீன் ஒன்று காட்டப்படும். 

இதில் ஆண்ட்ராய்ட் ஆன்டென்னா மற்றும் சிரிக்கும் முகம் ஒன்றும் காட்டப்படும். இதனைத் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருந்தால், ஒரு சிறிய கேம் காட்டப்படும். 

இங்கு ஜெல்லி பீன்ஸ்கள் மிதந்து கொண்டிருக்கும். திரையெங்கும் நகர்ந்து, ஊர்ந்து, பறந்து செல்லும் இவற்றை நம் விரல்களால் திரையை அழுத்தி ஓரங்களுக்குக் கொண்டு சென்று வெளியே தள்ளலாம்.


ஆப்பிள் ஸ்டோர் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்கு


ஏழு லட்சத்து 70 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிந்துள்ள பயனாளர்கள் 50 கோடி, இதுவரை 4 ஆயிரம் கோடி டவுண்லோட், 2012ல் மட்டும் 2 ஆயிரம் கோடி டவுண்லோட் என, உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்காக, ஆப்பிள் ஸ்டோர் இன்று உருவெடுத்துள்ளது.

2008ல் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் கடையிலிருந்து பெறப்பட்ட புரோகிராம்களின் எண்ணிக்கை அனைவரையும் வியக்க வைக்கிறது. 

ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை உருவாக்கும் சாப்ட்வேர் வல்லுநர்களுக்கும் இது வருமானத்தைத் தந்து வருகிறது. இதுவரை 700 கோடி டாலர் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் ஸ்டோரின் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் தான் மிக வேகமாக இருந்துள்ளது. இந்த வேகம் இந்த ஆண்டில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் டிசம்பருக்குள், 100 கோடி மொபைல் புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்படும் என இதனை ஆய்வு செய்திட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.


2012ல் மொபைல் உலகம்


சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன. ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின. 

ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின. 

மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உறுதியான விற்பனைச் சந்தையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வுகளுக்கான கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.

1. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை முழுமையாக வென்ற ஆண்ட்ராய்ட்:

ஸ்மார்ட் போன் இயக்கத்தில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலையான இடம் பிடிக்கும் என்ற சந்தேகம், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த சந்தேகங்களை உடைத்தெறிந்து, ஆண்ட்ராய்ட் தன்னை முதல் இடத்தில் மட்டுமில்லாமல், பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இடம் பிடித்தது. 

2012 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலக அளவில் 75% ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டமே இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு பெரிய அளவில் இருந்தாலும், உலக நாடுகளை மொத்தமாகப் பார்க்கையில், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கொண்ட போன்கள் 14.9 சதவிகிதமே இருந்தன.

2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மிக வேகமாக முன்னேறி, ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பிடித்தது. பன்னாட்டளவில், ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உள்ளது சீனாவில்தான். 78 கோடியே 60 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் இங்கு பயன்படுத்தப் படுகின்றன. அமெரிக்காவில் மட்டும்தான் ஆப்பிள் இதற்குச் சரியான போட்டியை இன்னும் தந்து கொண்டுள்ளது. 

2. விண்டோஸ் மொபைல்:

மைக்ரோசாப்ட், மொபைல் உலகிலும் தன் பங்கினைப் பெரிய அளவில் பெற்றிட திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை பெற முடியாமல் போனதை, விண்டோஸ் போன் 8 பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது. 

விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவம்பரில் வெளியானது. கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கான விண்டோஸ் 8 வெளியாகி சில நாட்களில் இது வெளியானது. என்றாவது ஒரு நாள், மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைந்த சிஸ்டமாக உருவாகும். 

எச்.டி.சி., நோக்கியா, சாம்சங் ஆகியவை விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்களை உருவாக்கித் தருவதால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தினை மைக்ரோசாப்ட் விரைவில் பிடிக்க இயலும்.

3. நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்:

ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங், தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில் சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.


கூகுள் தர இருக்கும் சூப்பர் போன்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போட்டிக்கு இழுக்கும் வேலையில் கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியுள்ளது. 

இதன் முதல் படியாக, சூப்பர் ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைக்கும் முயற்சிகளில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1,250 கோடி கொடுத்து கூகுள் வாங்கிய மோட்டாரோலா நிறுவனத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட் போனில், தற்போது சாத்தியமாகக் கூடிய அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, கூடுதல் வசதிகள் தரப்படும். தற்போதைய போன்களில் உள்ள கலர் கட்டமைப்பில் உள்ள எண்ணிக்கயைப் பெரும் அளவில் உயர்த்தப்படும். 

போனின் ஹார்ட்வேர் எளிதில் உடைந்து போகாத அளவிற்கு கடினமாக அமைக்கப்படும். வழக்கமான காட்சிகளுடன், பனாரமிக் வியூ என்று சொல்லக் கூடிய, பரந்துவிரிந்த காட்சி எடுக்கக் கூடிய கேமரா ஒன்று இணைக்கப்படும். 

இவற்றுடன் அதிக நாட்கள் தொடர்ந்து மின்சக்தி தரக்கூடிய திறனுடன் பேட்டரி வழங்கப்படும்.

இந்த போன் நிச்சயமாய் 2013 ஆம் ஆண்டில் விற்பனக்கு அறிமுகப்படுத்தப்படலாம். 

இத்துடன் எக்ஸ் டேப்ளட் என்ற பெயரில் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றையும், இந்த இரு நிறுவனங்கள் வடிவமைக்க இருக்கின்றன.

இந்த தகவல்கள் குறித்து, மோட்டாரோலா தலைமை நிர்வாகியிடம் கேட்ட போது, குறிப்பாக இவை என்று குறிப்பிடாமல், அண்மையில், பொறியாளர் குழு ஒன்றை அதிக முதலீட்டில் அமைத்து, புழக்கத்தில் இல்லாத வகையில் தொழில் நுட்பம் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.


விண்டோஸ் 7 செயல் குறிப்புகள்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கினாலும், தொடு திரை இல்லாத விண்டோஸ் 8 வேண்டாம் எனப் பலர் எண்ணுகின்றனர். 

இன்னும் பலர், நாம் முழுமையாகப் பயன்படுத்தாத விண்டோஸ் 7 சிஸ்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று அதன் வசதிகளைக் குறித்து டிப்ஸ்களைக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில செயல் குறிப்புகளும், வசதிகள் குறித்த விளக்கங்களும் இங்கு தரப்படுகின்றன. 

1. சிஸ்டத்தின் நிலை என்ன?:

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த நிலையில் உள்ளது என்று அறிய நாம் விரும்புவோம். விண்டோஸ் 7 இதற்கான வழி ஒன்றைக் கொண்டுள்ளது. 

சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், பயன்படுத்தப்படும் திறன், பிரச்னைகள் இருப்பின், அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். 

இதனை கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து கூடுதலாக அறிந்தவர்களுக்கு அனுப்பி தீர்வுகளை எளிதாகப் பெறலாம்.

2. தேவையற்றவற்றை நீக்க:

விண்டோஸ் 7 நமக்குக் கொடுக்கப்படும்போது, சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே கிடைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போதே, இவையும் இயங்கி இயக்க நிலையில் இருக்குமாறு செய்திருப்பார்கள். 

எ.கா.: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள்.

இவற்றில் பல நமக்குத் தேவையில்லை என நீங்கள் எண்ணலாம். அப்படியானால், ஏன் இவற்றை வைத்துக் கொண்டு, ராம் நினைவகத்தின் செயல்பாட்டின் திறனை இழக்க வேண்டும். 

நீக்கிவிடலாமே! அதற்கான வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கிறது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். 

இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 

3. புதிய வடிவமைப்பில் வேர்ட் பேட்:

டெக்ஸ்ட் அமைத்தல் மற்றும் எடிட்டிங் பணிகளுக்கு பெரும்பாலும், நாம் எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் பயன்படுத்துகிறோம். சிஸ்டத்துடன் வரும் நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் ஆகியவற்றைத் திறப்பது கூட இல்லை. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இவற்றில் அவ்வளாக புதிய கூடுதல் வசதிகளைத் தர எண்ணியதில்லை. 

ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வேர்ட் பேட், பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf)பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். 

இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.

4. உதவியும் குறிப்புகளும் :

கம்ப்யூட்டரில் எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், அதற்கான உதவி செயல் குறிப்புகள் தரப்படுவதுண்டு. எப்1 கீ அழுத்தினால், அவை கிடைக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். இதனை ஹெல்ப் என்ற டேப்பில் கிளிக் செய்வதன் மூலம் பெறலாம். 

இது முற்றிலும் புதிய வகையில் விண்டோஸ் 7 சிஸ்டம் தருகிறது. இதனைத் திறந்தவுடன் கிடைக்கும் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், AND என்று பெயரிடப்பட்ட பட்டன். 

விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள AND பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப்புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். 

இதில் தான் மைக்ரோசாப்ட் AND a Person for Helpஎன்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் மிக அருமையாக உதவி பெறலாம்.

5. ஐகான்களை ஒழுங்குபடுத்த :

திரையெங்கும் பல பைல்கள், போல்டர்கள், ஷார்ட்கட்கள் எனப் பலவாறாக வைத்து, குப்பையாக ஐகான்களை சிலர் வைத்திருப்பார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தும் வழி அறியாமலும் பலர், திரையைக் குழப்பமான வகையில் அமைத்திருப்பார்கள். 

இதற்கு நாம் சிரமப்படவே வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, வழக்கம் போல விண்டோ சிஸ்டத்தில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.

6. பாஸ்வேர்ட் பாதுகாப்பு (Credential Manager):

விண்டோஸ் 7 சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க தேடல் பிரிவில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். 

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம். 

7. சிஸ்டம் பழுது பார்க்க:

விண்டோஸ் சரியாக இயங்கும் வரை நாம் மகிழ்ச்சியாக இருப்போம். கிராஷ் ஆகி காலை வாரி விடுகையில், பலருக்கு போன் போட்டு அட்வைஸ் கேட்போம். அவர்களோ நம்மிடம் “ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி” உள்ளதா? என்று கேட்பார்கள். 

நாம் பதிலுக்கு அந்த பதட்டத்திலும் “அப்படீன்னா என்ன?” என்று கேட்போம். ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று நாம் அறிந்து வைத்துக் கொள்வதில்லை. சரி, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். 

விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும். 

இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத்தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.

8. பிரச்னைகள் எங்கே எப்படி?:

சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. 

அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes