இன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)

பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் அவர்களின் மகன் கவின் மிட்டல் நிர்வகிக்கும் ஹைக் மெசஞ்சர் நிறுவனம், இணைய வழியில் தொலைபேசி இணைப்பினைத் தர முயற்சிகளை எடுத்து வருகிறது. 

அண்மையில், ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் இணைப்பினைக் கொண்டவர்களுக்கு, அதிக கட்டணத்தில் இணைய வழி தொலைபேசி தொடர்பினைத் தர திட்டத்தினை அறிவித்தது. 

பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிடைத்ததால், உடனே அதனைக் கைவிட்டது. இந்நிலையில், கவின் மிட்டல் நிறுவனம், இலவச குரல் அழைப்பு தொடர்பினை வழங்கி வரும் 'Zip Phone' என்னும் நிறுவனத்தை வாங்கியது. 

இதன் மூலம், இணையவழி தொலைபேசி அழைப்பினை வழங்கும் வசதியைத் தர இருக்கிறது. ஸ்கைப், வைபர் மற்றும் லைன் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த வசதியைத் தந்து வருகின்றன. 

இது போல இணைய வழி தொலைபேசி இணைப்புகளை கட்டணம் பெற்றோ, இலவசமாகவோ வழங்கினால், அதனை நேரடியாக இணைய இணைப்பு இல்லாமல், வழங்கும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, இணைய வழி அழைப்பு வசதி தருவதை முறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்பட்டு வருகிறது.

அதனால் தான், ஏர்டெல் கட்டணத்தின் அடிப்படையில் அழைப்பு வசதிகளை வழங்க முன்வந்த போது, மற்ற தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே ஏர்டெல் தன் திட்டத்தினைத் திரும்பப் பெற்றது. எந்த வழியில் இருந்தாலும், இறுதி முடிவு வாடிக்கையாளர்கள் கைகளில் தான் உள்ளது. 

ஹைக் மெசஞ்சர் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் தன் சேவையைத் தொடங்கியது. இது மொபைல் இணைய கூட்டமைப்பாக, பார்தி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் கார்ப்பரேசன் நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவானது. 

மற்ற இன்ஸ்டண்ட் மெசஞ்சர் நிறுவனங்களைப் போல, ஹைக் நிறுவனமும் இதில் பன்னாட்டளவில் சிறப்பாக இயங்கி வரும் வாட்ஸ் அப் நிறுவனத்துடன் இந்த பிரிவில் போட்டியிடுகிறது.

ஸிப் போன் நிறுவனம் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தின் மூலம், இலவச இணைய இணைப்பு வழி தொலைபேசி அழைப்புகளை வழங்க கவின் மிட்டல் திட்டமிடுகிறார். இது வெற்றி பெறும் பட்சத்தில், மற்ற நிறுவனங்களும் இதே முறையினைப் பின்பற்றித் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் திட்டத்தில் இறங்கலாம்.


குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்

கூகுள் மேப், அண்மையில் தன் வழிகாட்டுதலில், குரல் வழி வழிகாட்டுதலை, இந்தியாவில் உள்ள 20 நகரங்களுக்கு நீட்டித்துள்ளது. 

ஒவ்வொரு தெருவழியாகவும் செல்ல நமக்கு, இந்திய ஆங்கில உச்சரிப்பில் வழி காட்டல் தரப்படும். 

இதனை அண்மையில் சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் வரை தெளிவாக வழி காட்டியது. 

“இங்கு தெரியும் மாரியம்மன் கோவில் செல்லாமல், உடன் இடது பக்கம் திரும்பினால், உங்கள் வீட்டை அடையலாம்” என்று தெளிவான ஆங்கிலத்தில் உச்சரித்தது. 

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயமுத்தூர் நகரங்களில் இந்த வசதி மொபைல் போன்களில் தரப்படுகிறது. 

கூகுள் மேப்ஸ் தளத்தின் மூலம் இந்த வசதியைத் தந்து, கூகுள் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கையடக்க நண்பனாக இயங்குகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், இந்த நகரங்களில் இது நிச்சயம் உதவியாக இருக்கும். 

இந்த வழி காட்டல் இந்தி மொழியிலும் தரப்படுவதாக, கூகுள் தன் வலைமனையில் அறிவித்துள்ளது. சென்ற ஜூலையில் தான், கூகுள் மேப்ஸ் இந்தி மொழிக்கான சப்போர்ட் தருவதாக அறிவித்து, நவம்பரில் இருந்து, இயக்கத்திற்குக் கொண்டு வந்தது.


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்

சென்ற ஜனவரி 13 முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை பெருமையாகக் கொண்டிருந்த, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான முதன்மை உதவிகளை நிறுத்திக் கொண்டது. அதாவது, இயக்க முறைமையில், இனி புதிய வசதிகள் தரப்பட மாட்டாது. 

இருப்பதையும், திருத்தி அமைக்காது. இத்தகைய சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. அன்று முதல் விண்டோஸ் 7 வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் காணப்படும் குறைகள் தீர்ப்பதற்கான உதவி தரப்பட மாட்டாது. 

இத்தகைய வசதிகளுக்குத் துணையாய் இயங்குவதை, மைக்ரோசாப்ட் "Mainstream support" என அழைக்கிறது. இந்த சப்போர்ட் தரப்படும் கால கட்டத்தில், மைக்ரோசாப்ட், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத பிற பணிகளுக்கான உதவியைத் தொடர்ந்து வழங்கும். 

அதே போல தொலைபேசி வழியாகவும், வாடிக்கையாளர்கள் உதவியைப் பெறலாம். இந்த காலம் முடிந்த பின்னர், இவை வழங்கப்பட மாட்டாது.

இதனால், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இனி தரவிறக்கம் செய்திடக் கிடைக்காது என எண்ண வேண்டாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டவர்களிடம் கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல்வேறு வகைகளில் தங்களுக்குப் பிடித்ததைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 புரபஷனல் எடிஷன் வாங்கியவர்கள், அதனைப் பிடிக்காமல், விண்டோஸ் 7க்கு மாற விரும்பினால், மாறிக் கொள்ளலாம்.

ஆனால், இந்த சிஸ்டம் பாதுகாப்பாக இயங்குவதற்கான செக்யூரிட்டி அப்டேட் பைல்கள் தொடர்ந்து வழங்கப்படும். இது வரும் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 14 வரை வழங்கப்படும். எனவே, விண்டோஸ் 7 தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பவர்கள், பாதுகாப்பு குறித்து அஞ்ச வேண்டியதில்லை. 

விண்டோஸ் 7, சென்ற 2009 ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், பெரும் பங்கினைக் கொண்ட சிஸ்டமாக தொடர்ந்து இயங்கியது. வெளியான ஆறு மாதங்களில், 10 கோடி உரிமங்கள் விற்பனையை மேற்கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது விளங்கியது. இன்று வரை, மிக அதிக வேகத்தில் விற்பனையான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது முதல் இடத்தைக் கொண்டுள்ளது. 

இதற்கு முந்தைய சிஸ்டங்களுக்கும், இதே போல தன்னுடைய முதன்மை உதவிகளை ஒரு நாளிலும், பிற பாதுகாப்பு மேம்படுத்தும் பைல்களை இன்னொரு நாளிலும் மைக்ரோசாப்ட் நிறுத்தியது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இறுதியாக சர்வீஸ் பேக் 3 வழங்கப்பட்டது. 

அதற்கான முதன்மை உதவிகள், 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 அன்று நிறுத்தப்பட்டது. மற்ற உதவிகள், 2014, ஏப்ரல் 8ல் நிறுத்தப்பட்டது. விண்டோஸ் விஸ்டாவிற்கு இறுதியாக சர்வீஸ் பேக் 2 வழங்கப்பட்டது. முதன்மை உதவிகள் 2012ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 அன்று நிறுத்தப்பட்டன. 

முழுமையான அனைத்து உதவிகளும், வரும் 2017, ஏப்ரல் 11 அன்று நிறுத்தப்படும். விண்டோஸ் 7க்கான ஒரு சர்வீஸ் பேக் வழங்கப்பட்டது. அதன் பின்னர், 2015, ஜனவரி 13ல், முதன்மை உதவிகள் நிறுத்தப்பட்டன. அனைத்து உதவிகளும், 2020, ஜனவரி 14 அன்று நிறுத்தப்படும். 

விண்டோஸ் 8க்கான மேம்படுத்தப்பட்ட பைல் விண்டோஸ் 8.1 ஆக வழங்கப்பட்டது. இதற்கான முதன்மை உதவிகள், வரும் 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 9ல் நிறுத்தப்படும். பிற உதவிகள், வரும் 2023 ஆம் ஆண்டு, ஜனவரி 10ல் நிறுத்தப்படும்.

விண்டோஸ் 7 வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து விண்டோஸ் 8 அறிமுகமானது. அதன் புதிய வகை யூசர் இன் டர்பேஸ் சிறப்புக்காகவே, அனைவராலும் விரும்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதுவே, வாடிக்கையாளர்கள் அதனை ஒதுக்கக் காரணமாக அமைந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்துடனேயே இயங்க முடிவுச் செய்தனர். விஸ்டாவினைக் காட்டிலும், நிலையாகவும் பாதுகாப்பாகவும் இயங்கும் சிஸ்டமாக விண்டோஸ் 7 சிஸ்டத்தை மதித்தனர். 

இந்த ஆண்டின் பிற்பகுதியில், விண்டோஸ் 10 வருகையில், விண்டோஸ் 7 வாடிக்கையாளர்களில் பலர், இதற்கு மாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். Net Applications என்னும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுக்கின்படி, உலக அளவில், விண்டோஸ் 7 இன்னும் 50%க்கும் மேலானவர்களால் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.


விண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்

மைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. அத்துடன் தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன், இன்னொரு பிரவுசரும் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது முற்றிலும் புதியதாகத் தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். புதியதாக வடிவமைக்கப்பட்டு தரப்படும் பிரவுசரர் Spartan என்ற குறியீட்டுப் பெயரினைத் தற்போது கொண்டுள்ளது. 

இது வழக்கமான பிரவுசரின் மேம்பாடடைந்த பதிப்பாக இல்லாமல், முற்றிலும் புதியதான தோற்றமும் பயன்பாடும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரவுசர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் தோற்றத்திற்கு இணையான தோற்றத்தினைக் கொண்டிருக்கும். எக்ஸ்டன்ஷன்கள் எனப்படும் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளும், இதில் வழக்கமான சக்ரா ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் (Chakra JavaScript engine) பயன்படுத்தப்படும். 

இதனுடன் Trident rendering engine இணைந்து செயல்படும். எப்படி விண்டோஸ் 10, விண்டோஸ் 9 என்ற தொடர் எண்ணைக் கொண்டிராமல் அறிமுகமாகிறதோ, அதே போல, வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தொடர் பதிப்பு 12 ஆக இல்லாமல், முற்றிலும் புதியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள், வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து இது வழங்கப்படும். இதில் மொபைல் சாதனங்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11ம், ஸ்பார்டன் எனத் தற்போது அழைக்கப்படும் பிரவுசரும் என இரண்டும் இடம் பெறும்.

தற்போது தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைக் காட்டிலும், இதன் வசதிகள் 300 மடங்கு அதிகமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். பிரவுசர் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் ஆச்சரியம் கலந்த அனுபவத்துடன் ஸ்பார்டன் பிரவுசர் தரும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, இதன் கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் மூலம், போட்டியில் இருக்கும் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் வாடிக்கையாளர்களால், அதிகம் விரும்பப்படும் என்று தெரிகிறது. 

பல மேம்பாட்டு வசதிகளுக்கான தூண்டுதல்கள், கூகுள் நவ் போன்ற அப்ளிகேஷனிலிருந்து மைக்ரோசாப்ட் எடுத்திருக்கலாம். தற்போது பிங் தேடல் சாதனத்தில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து தேடல் வகைகளையும், ஸ்பார்டன் பிரவுசரிலும் மேற்கொள்ளலாம். 

இதில் தரப்பட இருக்கும் இன்னொரு முக்கிய டூல் Cortana அசிஸ்டண்ட் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த டூல் மூலம், பிரவுசரில் குரல் வழியிலும் தேடலாம். 

வர இருக்கும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 மற்றும் அதனுடன் தரப்பட இருக்கும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகிய இரண்டிலும், பயனாளர்கள், குரல் வழியிலும் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். 

Cortana அசிஸ்டண்ட் என்னும் டூல் இவை இரண்டிலும் இணைக்கப்படலாம் என்று தெரிகிறது. இது குரோம் சிஸ்டத்தில் செயல்படும் "OK Google" என்பதனைப் போல், அல்லது கூடுதல் வசதிகளுடன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. 


ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் மெமரி

வாரத்திற்கு ஒரு புதிய மொபைல் ஸ்மார்ட் போன் மாடல் வெளியாகி வருகிறது. இவற்றின் சிறப்புகளில் ஒன்றாக, ஸ்டோரேஜ் எனப்படும் தேக்கக் கூடிய மெமரி பேசப்படுகிறது. 

ஒரே போன் மாடலில், 16, 32, 64 ஜி.பி. என இதன் தேக்க மெமரியின் அடிப்படையில், மாடல் எண்களும், விலையும் அறிவிக்கப் படுகின்றன. 

ஆனால், உண்மையிலேயே இந்த ஸ்மார்ட் போன்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் எடுத்துக் கொண்ட தேக்க மெமரி போக, நமக்கு பயன்பாட்டிற்கு எவ்வளவு மெமரி தரப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக, குறிப்பிடப்பட்ட அளவு கிடைக்காது. 

ஆனால், எவ்வளவு கிடைக்கிறது என்று யாரும் கவலைப்படுவதில்லை. அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். அவருடைய குற்றச்சாட்டின்படி, ஐ.ஓ.எஸ்.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்,தேக்க மெமரியில் 23%க்கு மேல் எடுத்துக் கொள்கிறதாம். 

இதே சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 லிருந்து அப்கிரேட் செய்யப்பட்டால், மேலும் 1.3 ஜி.பி. இடம் கேட்கிறதாம். இந்த வழக்கின் அடிப்படையில், மொபைல் போன் சந்தையில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் சிலவற்றை ஆய்வு செய்ததில், இவற்றின் உண்மை நிலை தெரிய வந்தது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்த கேள்விக்கு நாம் எளிதாக விடை பெற இயலாது. ஏனென்றால், நாம் இதில் சிம் கார்டினை நுழைத்தவுடன், நமக்கு மொபைல் தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனங்களும், இதில் குறிப்பிட்ட அளவினைப் பயன்படுத்தி, தங்கள் இயக்கம் சார்ந்த சில அப்ளிகேஷனைப் பதிகின்றன.

முன்னணியில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், ஆப்பிள் ஐபோன் 5சி மாடல் தான் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது. கொடுக்கப்படும் 16 ஜி.பி. இடத்தில், 12.6 ஜி.பி. சிஸ்டம் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் எடுத்துக் கொள்கின்றன. அடுத்து கூகுள் நெக்சஸ் 5 மாடல் தனக்கென எடுத்துக் கொள்ளும் இடம் அதிகம். மூன்றாவதாக, ஐபோன் 5 எஸ் இடம் பிடிக்கிறது. இது எடுத்துக் கொள்ளும் இடம் 12.2 ஜி.பி.

இந்த வகையில், மிகக் குறைவான இடம் எடுத்துக் கொள்ளும் மொபைல் போன் சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ்4. இது 16 ஜி.பி. இடத்தில், 8.56 ஜி.பி. எடுத்துக் கொள்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் தந்துள்ள தகவல்படி, ஐபோன் 6 ப்ளஸ் 12.7 ஜி.பி. இடத்தை மட்டுமே விட்டு வைத்துள்ளது. ஐபோன் 6, 13 ஜி.பி. இடத்தை நாம் பயன்படுத்தத் தருகிறது. 

இதற்கெல்லாம் காரணம், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமின்றி, நிறுவனங்கள் தாமாக பதிந்து தரும் சில அப்ளிகேஷன் புரோகிராம்களும் தான். இத்தகைய புரோகிராம்களுடன், ஸ்கின் என சில தரப்பட்டு அவையும் அதிக இடம் எடுத்துக் கொள்கின்றன. 

இது போல சில ஆடம்பரங்களும் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இடத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் வரிசையில் இறுதியாக உள்ள சாம்சங் காலக்ஸி எஸ்4 மாடலில் தான், அதிக ஆடம்பர அப்ளிகேஷன்கள் உள்ளன.

இதில் நமக்கு ஏமாற்றம் தருவது, மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்க போர்ட் இல்லாமல் வரும் போன் மாடல்கள் தான். இதில் ஆப்பிள் நிறுவன போன்கள் குறிப்பிடத்தக்கவை.


100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்

இன்னும் ஓராண்டு காலத்தில் தன் இணையதளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இதனைக் கையகப்படுத்தியபோது, இந்த எண்ணிக்கையைத்தான் தன் இலக்காக அறிவித்திருந்தது. 

1600 கோடி டாலர் கொடுத்து, மொபைல் சாதனங்களில், உடனடி செய்திகளை அனுப்புவதில் முதல் இடத்தில் இருந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியபோது, பேஸ்புக் இதனை அடையவேண்டிய இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. அது நிச்சயமாக ஈடேறும் வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.

எஸ்.எம்.எஸ். வழிமுறையைக் காட்டிலும் அதிகச் செலவின்றி, ஏன் ஏறத்தாழ எதுவும் இன்றி, செய்திகளை அனுப்ப மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் இதனையே நாடுகின்றனர். 

இதனால் தான், இந்தியா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளில், எஸ்.எம்.எஸ். பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. 

வாட்ஸ் அப் வழியாக, தினந்தோறும் 3,000 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜான் கெளம் அறிவித்துள்ளார். 

பேஸ்புக் இந்நிறுவனத்தை வாங்கிய பின்னர், வாட்ஸ் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 2108 கோடி டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. நிறுவனம் கை மாறிய போது, வாட்ஸ் அப் கொண்டிருந்த பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 45 கோடியாக மட்டுமே இருந்தது. 

இவர்களில் 70% பேர் மட்டுமே தினந்தோறும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர், மாதந்தோறும் 2.5 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். சென்ற ஏப்ரல் 22 அன்று, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது. 

பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது. 2013 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 40 கோடியானது. இந்த வேகத்தில் சென்றால், இன்னும் ஓராண்டில் இது 100 கோடியை நிச்சயம் எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

இப்போதும், வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனத்தின் கண்காணிப்பில், தனி ஒரு பிரிவாகத்தான் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை இவை ஒவ்வொன்றும் எப்படி கையாள்கின்றன என்று அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரிவு ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


மொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்

மொபைல் போன் திரையின் மீதாக, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அமைப்பதனை, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல வழக்கமாகக் கொண்டுள்ளன. 

சென்ற நவம்பரில், கொரில்லா கிளாஸ் 4 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சாம்சங் ஆல்பா மற்றும் சாம்சங் காலக்ஸி நோட் 4 சாதனங்களில், சாம்சங் பயன்படுத்தியுள்ளது. 

இதனைத் தயாரித்து வழங்கும் கார்னிங் நிறுவனத்தின், காப்புரிமை பெற்ற வழிகளில் இது தயாரிக்கப்படுகிறது. 

இதனால், குறைந்த தடிமன், மிகத்துல்லியமான ஒளிக்காட்சி, நீண்ட நாள் தொடர்ந்து செயல்படும் திறன் ஆகிய பண்புகளைத் தர முடியும். 

மேலும், கூர்மையான பரப்புகளை இது சந்திக்கையில், அவற்றைத் தாங்கும் திறனும், எந்தவிதக் கீறலும் ஏற்படாத தன்மையும் கொரில்லா கிளாஸ் 4 கொண்டுள்ளது. இதன் தடிமன் 2 மிமீ முதல் 4 மிமீ வரை உள்ளது. 

இதனை அறிமுகப்படுத்திய விழாவில், கார்னிங் டெக்னாலஜிஸ் தலைவர், “ மொபைல் போன் விற்பனை மற்றும் பயன்பாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில், கொரில்லா கிளாஸ் 4 அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகச் சிறந்த எலக்ட்ரானிக் பொருள் ஒன்றை மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.


இணையத்தின் வரலாறு

நீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும். 

பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது? எப்படி வளர்ந்தது? என்று யாராவது வீடியோ காட்சியாகக் காட்டினால், அதனை இணையத்தில் பதிந்து வைத்தால், எப்போது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் வந்தது. 

இந்த எண்ணத்துடன் இணையத்தில் தேடியபோது, இணையத்தின் கதை என்ற தலைப்பிலேயே (Story of the Web) ஒரு தளம் இருப்பது தெரிய வந்தது. இந்த தளத்தின் முகவரி http://storyoftheweb.org.uk/

”இப்படி எல்லாம் செய்திட முடியும் என்று எண்ணியது கூட இல்லையே” என்று முதலில் இணையத்தைப் பார்த்தவர்கள் சொல்லி இருப்பார்கள். இப்போதோ, ”இணையம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்பவர்களே அதிகம். 

ஏன், அப்படிச் சொன்னால்தான், நம்மை இப்போதைய உலகின் மனிதர்களாக நம்மை மதிக்கிறார்கள். 18 கோடிக்கு மேலான இணைய தளங்கள் இன்று உள்ளன. தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இந்த இணைய தளம் காட்டுகிறது.

இதில் நுழைந்தவுடன், இதனைக் காண இரு வழிகள் இருந்தன. இதில் உள்ள Auto Play என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது தானாகவே, படிப்படியாகப் படங்களுடன், இணையத்தின் வளர்ச்சியை, அதன் சிறப்பான பயணத்தினைக் காட்டுகிறது. 

இன்னொரு வழியாக, நீங்களே உங்களின் கட்டுப்பாட்டில் இதனை இயக்கிக் காணலாம். நான் ஆட்டோ ப்ளே இயக்கினேன். 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் படங்கள், ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தும் அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. 

நாம் இணையம் பயன்படுத்தத் தொடங்கிய அந்த நாட்களை நாம் எண்ணி அசைபோடும் வகையில், பல காட்சிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.


தொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்

இன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. 

ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம்.

 இந்த கேள்விக்குப் பதில், நாம் எப்படி நவீன தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்படுகிறோம் என்பதனை அறிந்து, அந்த பாதிப்புகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதற்கான வழி முறைகளைக் காண்பதில் தான் உள்ளது. இங்கு அப்படிப்பட்ட பாதிப்புகள் எவை என்பதனையும், அவற்றிலிருந்து விடுபட நாம் என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் காணலாம்.


விடுபடும் நிலை நோய்க்குறிகள்: 

எந்த ஒரு பழக்கப்பட்ட நிலையிலிருந்தும் நாம் விடுபடுகையில், அதற்கான உடல் மற்றும் மனநிலை பாதிப்புகள் நிச்சயம் நம்மிடம் ஏற்படும். தொடர்ந்து புகையிலை பழக்கம், தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்களிடம், சில நாட்கள் அவற்றை அறவே பயன்படுத்தாமல் இருக்கும் நிலைக்குக் கொண்டு சென்றால், அவர்கள் உடல்நிலையில் பதற்றம் ஏற்படும். மனநிலையில் ஏற்படும் தாக்கத்தால், மேலும் உடல்நலம் சீர்கெடும். 

இதனை ஆங்கிலத்தில் Withdrawal syndrome எனக் குறிப்பிடுவார்கள். நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் இப்படித்தான் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2012 ஆம் ஆண்டில், இது குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொலைபேசி பயன்படுத்தும் 100 பேர்களிடமிருந்து அவை பறிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தாமல், பார்க்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் 66 பேர்களின் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆனார்கள். இது அவர்களின் உடல்நிலையையும் பாதித்தது. இதே போன்ற ஆய்வு ஒன்றை Swansea மற்றும் Milan பல்கலைக் கழகங்கள், இணையம் பயன்படுத்துபவர்களிடம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. 

போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானவர்களை, அதிலிருந்து தடுத்தால், என்ன விளைவுகள் ஏற்படுமோ, அந்த விளைவுகளை அவர்களிடம் காண முடிந்தது.


தூக்கமின்மை தரும் பாதிப்பு: 

முறையாகத் தூங்கும் நேரத்தினை அமைத்து வாழ்வதை நம் மருத்துவர்கள் அனைவரும் நமக்கு பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகவும் அவசியம். 

நம் பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றையினால், நம் தூக்கநிலை மாறுதலுக்குள்ளாகிறது. 

அளவுக்கதிகமாக, தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது, குறிப்பாக உறங்கச் செல்லும் முன் பயன்படுத்துவது, நம் உறக்க காலத்தினைப் பின்பற்றுவதனை வெகுவாகப் பாதிக்கிறது. எனவே, உறங்கச் செல்லும் முன்னர், இவற்றைப் பயன்படுத்துவதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.


இணையத் தேடல் பைத்தியங்கள்: 

இணையம் பயன்படுத்துபவர்களிடம் வெகு வேகமாகப் பரவி வரும் நோய் இது. அன்றாட வாழ்க்கையில் எப்போதும் எதையாவது இணையத்தில் தேடுவதும், இணையத்தில், குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில், அன்றைய பொழுதில் பதியப்பட்டுள்ளவற்றை அறியத் துடிப்பதும், நம்மில் பலரிடையே பரவி வரும் மனநிலையாகும். 

இதுவும் ஒரு வகை நோய் என்கிறது மருத்துவ உலகம். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ”இணையவெளிப் பைத்தியங்கள்” (Cyberchondriacs) என அழைக்கின்றனர். இவர்கள் ஒருவகை மன உந்துதலுக்கு (anxiety) ஆளாகின்றனர். 

இது மன அழுத்தத்தினை அதிகரித்து, அந்நிலை உடல்நலத்தைப் பாதிக்கிறது. அது மட்டுமின்றி, தங்களின் பாதிப்பு நிலையினை இணையம் மூலமாக அறிய முடியும் என இவர்கள் நம்புகின்றனர். அதற்கான தீர்வையும் இணையத்திலேயே தேடிப் பிடிக்கின்றனர். 

இணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திடும் இந்த செயல், இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் வைக்கிறது.


மத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்

தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களைப் பரப்பியதற்காக, மத்திய அரசு 32 இணைய தளங்கள் இயக்கத்தினை முடக்கி வைத்துள்ளது. 

இவற்றில் GitHub, Internet Archive, Pastebin, மற்றும் Vimeo ஆகியவை அடங்கும். இவற்றை இந்தியாவில் இயங்கும் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. இவற்றை முடக்குவதற்கான ஆணை சென்ற டிசம்பர் 17ல் வெளியிடப்பட்டது. 

தகவல் தொடர்பு சட்டம், 2000ன் பிரிவு 69 ஏ அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. தடை செய்யப்பட்ட 32 தளங்களின் பெயர்கள் பின்வருமாறு: 

justpaste,it, 
hastebin.com, 
codepad.org, 
pastie.org, 
pastee.org, 
paste2.org, 
slexy.org, 
paste4btc.com, 
0bin.net, 
heypasteit.com, 
sourceforge.net/projects/phorkie, 
atnsoft.com/textpaster, 
archive.org, 
hpage.com, 
ipage.com, 
webs.com, 
weebly.com, 
000webhost.com, 
freehosting.com, 
vimeo.com, 
dailymotion.com, 
pastebin.com, 
gist.github.com, 
ipaste.eu, 
thesnippetapp.com, 
snipt.net, 
tny.cz (Tinypaste), 
github.com (gist-it), 
snipplr.com, 

termbin.com, 
snippetsource.net, 
cryptbin.com.

இவற்றில் GitHub என்ற தளத்தை முடக்கியது பலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனென்றால், இந்தியாவில் சாப்ட்வேர் புரோகிராம் வடிவமைப்பவர்கள், இந்த தளத்தை அதிகம் பயன்படுத்தி, பயன்பெற்று வந்தனர். 

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளைத் தடுப்பதே இந்த ஆணையின் முதன்மை நோக்கம் என அரசு அறிவித்துள்ளது.

Vimeo தள நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தாங்கள் தீவிரவாத கருத்துகளை உடனே நீக்கிவிட்டதாகவும், ஆனாலும், அரசு தடை செய்துவிட்டது என்று கூறியுள்ளது. தங்களிடம் இது குறித்து முன் கூட்டியே அறிவிக்கவில்லை என்றும் குறை தெரிவித்துள்ளது.


ஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்

மைக்ரோசாப்ட் தற்போது வடிவமைத்து வரும் ஸ்பார்டன் பிரவுசர் குறித்து மேலும் பல தகவல்கள் கசிந்துள்ளன. 

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வர இருக்கும் இந்த புதிய பிரவுசர், “ஸ்பார்டன்” என்ற குறியீட்டு பெயரைக் கொண்டுள்ளது. 

இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் மேம்பாட்டு தொகுப்பாக இருக்காது. முற்றிலும் புதிய ஒன்றாக வடிவமைக்கப்படும்.

வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்படாமல், Chakra JavaScript engine and Trident rendering engine கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. 

சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள், வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து இது வழங்கப்படும். இதில் மொபைல் சாதனங்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் போல, மிகக் குறைந்த இடத்தையே ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும். எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை சப்போர்ட் செய்திடும். ஆனால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இது இயங்குமா என தெரியவில்லை. 

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் வழங்கப்படும். இன்னும் பல வசதிகள் குறித்து ஜனவரி 21ல், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 வெளியிடுகையில் அறிவிக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


ஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் போன்

டைசன் (Tizen) அடிப்படையில் இயங்கும், சாம்சங் நிறுவனத்தின் Z1 ஸ்மார்ட் போன் வரும் ஜனவரியில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

தென் கொரியாவின் பத்திரிக்கைக் குறிப்பு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுவது வெகு நாட்களாகத் தள்ளிப் போடப்பட்டு வந்தது என்றும், தற்போது ஜனவரி 18ல் இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல், ஸ்மார்ட் போன்களின் வரிசையில், தொடக்க நிலை போனாக அமையும். விலை ரூ.5,400 என்ற அளவில் இருக்கலாம். வர்த்தக இணைய தளங்கள் வழியாகவும், மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் இவற்றை வாங்கலாம். 

இதன் சிறப்பம்சங்களாக கீழே குறிப்பிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை 4 அங்குல அளவில் TFT LCD டிஸ்பிளேயுடன் அமையும். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் டூயல் கோர் ப்ராசசர் இயங்கும். 

Spreadtrum SC7727S ப்ராசசர் இதில் இணைக்கப்படும். இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஆக இருக்கும். இதன் பின்புறக் கேமரா 3.2 எம்.பி. திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறன் கொண்டதாகவும் தரப்படும்.

இது இரண்டு சிம்களை இயக்கும் வகையில் இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. 3ஜி மற்றும் வைபி இணைப்புகள் கிடைக்கும். 

சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் (TouchWiz) இடைமுகம் இதில் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதில் பிரைவேட் மோட் மற்றும் பவர் சேவிங் மோட் போன்ற சில வசதிகள் தரப்படலாம். 


2014ல் கூகுள் கடந்த பாதை

வழக்கம் போல், கூகுள் நிறுவனத்திற்கு, சென்ற 2014 ஆம் ஆண்டு பல வெற்றிகளையும் சறுக்கல்களையும் கொண்டதாக இருந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

2014ன் பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் கான்சஸ் நகரத்தில் அறிமுகப்படுத்திய, தன்னுடைய கூகுள் பைபர் (Google Fiber) இணைய இணைப்பினை மேலும் சில மெட்ரோ நகரங்களில் விரிவு படுத்தியது. இதனை அனைவரும் வரவேற்றனர். மொத்தம் 34 நகரங்களில் இது தற்போது இயங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கில், தன் புதிய சாதனம் அல்லது வசதியினை கூகுள் அறிமுகப்படுத்தும். 

அந்த வகையில், 2014ல், ஆண்ட்ராய்ட் பதிப்பு 5னை, லாலிபாப் என்ற பெயரில் காட்டியது. ஆனால், மொபைல் போனுக்கான இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், அக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஆண்டில், பொதுமக்களின் எதிர்ப்பினை கூகுள் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றது. ஜிமெயில் பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர் ஒருவர், குழந்தைகளின் பாலியல் படங்களைக் கையாள்கிறார் என்று குற்றம் சாட்டி, காவல்துறைக்கு அவரை அடையாளம் காட்டியது. அவர்களும் நடவடிக்கை எடுத்தனர். 

ஆனால், பொதுமக்கள் இது தங்கள் சொந்த தனிப்பட்ட நடவடிக்கைகளில், ஜிமெயில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்கள். இது பெரும் அளவில், பன்னாட்டளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. 

கூகுள் நிறுவனத்தின் பல ஆண்டுகள் முயற்சியின் பயனாக, ஓட்டுநர் தேவைப்படாத கார், இந்த ஆண்டில் வெளியானது. டிசம்பர் மாதம் இதனை இயக்கிக் காட்டியது.

கூகுள் வெளியிட்ட, குறைவான தடிமன் கொண்ட குரோம்புக் லேப்டாப் கம்ப்யூட்டர் அதற்கு ஒரு சிறப்பான இடத்தைக் கொடுத்தது. குறிப்பாக கல்விப் பிரிவில் இதன் பயன்பாடு அதிகரித்து, தனிப் புகழைத் தந்தது.


பேஸ்புக் மூடப்படும் வதந்தி

சென்ற வாரம் முழுவதும், சமூக இணைய தளங்களில், பேஸ்புக் தளம் ஒரு வாரம், பராமரிப்பிற்காக மூடப்படும் என்றும், பேஸ்புக் நிறுவனத்தால், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க இயலாததால், நிரந்தரமாக மூடப்படும் என்றும் பல வதந்திகள் உலா வந்தன. 

இது குறித்து பேஸ்புக் நிறுவன இயக்குநர் லாரி யு குறிப்பிடுகையில், தயவு செய்து எங்களின் எதிர்காலத் திட்டப்பணிகளில் நன்றாகச் செயல்பட விடுங்கள். 

இது போன்ற ஆதாரமற்ற பொய்களைப் பரப்பி, எங்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்ற வாரம் 5,000 கோடி டாலர் மூலதன நிதியாக, பேஸ்புக் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், நிறுவனம் மூடப்படும் என்பது முட்டாள்தனமான கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பூமியின் மீது ஒரு கிரகம் மோதி பூமி அழியப் போகிறது, ஒபாமாவின் மனைவி இன்னொரு குழந்தைக்குத் தாயாகப் போகிறார், போன்ற பல பொய்யான கற்பனை செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சில இணைய தளங்களின் விளையாட்டு இது என்றும் கூறியுள்ளார்.


கம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்

புதிய கம்ப்யூட்டர் ஒன்று வீட்டிற்கு வந்துவிட்டது. சில டிஜிட்டல் சாதனங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றுமே எழுதப்படாத புதிய பேப்பராகத்தான் அது உங்களை அடையும். 

ஆனால், உங்கள் வீட்டு பட்ஜெட்டை நிர்வகிப்பது முதல், கேன்சர் நோயைக் குணப்படுத்துவது வரை, அதனால் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வியப்பாக உள்ளதல்லவா? 

எந்த கம்ப்யூட்டருக்கும், என்ன பயன்பாட்டினை நீங்கள் மேற்கொண்டாலும், அதில் சில புரோகிராம்கள் இருப்பது அவசியத் தேவையாகும். அவற்றை இங்கு காணலாம்.


பிரவுசர்: 

வரிந்து கட்டிக் கொண்டு, சாப்ட்வேர் புரோகிராம்களைக் கம்ப்யூட்டருக்குள் புகுத்துவதற்குள், முதலில் உங்கள் பிரவுசரைத் தீர்மானியுங்கள். விண்டோஸ் சிஸ்டத்துடன், மாறா நிலையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரப்பட்டிருக்கும். 

ஆனால், ஏற்கனவே நீங்கள் வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பழகி இருந்தால், இது விருப்பமில்லாத ஒன்றாக, வேறு ஒருவரின் ஆடையை உடுத்தியது போல இருக்கும். 

எனவே, உங்களுக்குத் தேவையான பிரவுசரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். அனைத்து பிரவுசர்களும் இலவசமாகவே கிடைக்கின்றன என்பதுவும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.


நினைட் (Ninite): 

புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதனை ”நினைட்” இணைய தளம் மிக மிக எளிதாக்குகிறது. இதன் இணைய தளம் செல்லவும். (https://ninite.com/) அங்கு உங்களுக்கு எந்த சாப்ட்வேர் தொகுப்பு வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். 

அதன் முகப்பு பக்கத்தில், நமக்கு வேண்டிய, தேவையான பல புரோகிராம்கள் வகை வாரியாக அடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து, Get Installer என்பதில் கிளிக் செய்தால், அதற்கான இன்ஸ்டாலர் புரோகிராம், ஒரு சிறிய .exe பைலாகத் தரப்படும். 

இந்த புரோகிராம் மூலம், நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து புரோகிராம்களும் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே, நமக்குத் தேவையில்லாத புரோகிராம்கள் குறுக்கிட்டால், அவற்றை நினைட் புறந்தள்ளிவிடும். இன்ஸ்டால் செய்வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மிகவும் பயனுள்ள, ஆச்சரியப்பட வைத்திடும் தளம் நினைட்.


ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ்: 

உங்கள் கம்ப்யூட்டரை நிச்சயம் இணையத்துடன் இணைத்தே பயன்படுத்துவீர்கள். எனவே, வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் கம்ப்யூட்டர் ஆளாகும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. 

இணையத்துடன் இணையவில்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்தும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் மூலமும் வைரஸ்கள் வரலாம். எனவே, ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும். பலரும் பரிந்துரைத்தபடி, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை நிறுவலாம். 

இதில் secure shredder, Do Not Track பாதுகாப்பு, தானாக குறிப்பிட்ட நாளில் ஸ்கேன் செய்வதனை அமைக்கும் வசதி ஆகியவை கூடுதல் வசதிகளாகக் கிடைக்கின்றன. 

இந்த தொகுப்பு இல்லாமல், அவாஸ்ட் (Avast) தொகுப்பினையும் நிறுவலாம். நினைட் தளத்தில் இவை இரண்டுமே கிடைக்கிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட தொகுப்பாக உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், அதில் உள்ள Windows Defender ஆண்ட்டி வைரஸ் தொகுப்பே போதுமானது. மாறா நிலையில் இது தரப்படுகிறது.


மால்வேர் பைட்ஸ் (Malwarebytes Anti-Malware Free): 

ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பாகச் செயல்பட்டாலும், புதியதாக வைரஸ் ஒன்று வருகையில், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் பயனளிக்காது. 

இவற்றை “zero day” threats என அழைக்கின்றனர். அண்மைக் காலங்களில், இது போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுக்குச் சவால் விடும் வகையில் பல மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவுகின்றன. 

இத்தகைய புரோகிராம்களைத் தடுக்க Malwarebytes Anti-Malware Free நமக்கு உதவுகிறது. இதனை முழுமையான ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகப் பயன்படுத்த இயலாது. வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் செயல்படாமல் உள்ள நிலைகளில் இது உதவிடும்.


எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 G)

இந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. 

சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் சிறப்பம்சங்கள்: 

5 அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் HD IPS டிஸ்பிளே தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core MediaTek MT6592 ப்ராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். எச்.டி.சி.நிறுவனத்தின் Sense 6 UI இடைமுகம் இதில் அனைத்திற்கும் மேலாக இயங்குகிறது. அதே போல, HTC EYE என்ற டூல் வசதியுடன், இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் செயல்படுகிறது. 

இதன் முன்புறக் கேமரா, பி.எஸ்.ஐ. சென்சாருடன் 5 மெகா பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் உள்ளது. 2100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் 4ஜி அலைவரிசைக்கான சப்போர்ட் தரப்படவில்லை. 

இதன் பரிமாணம் 150.1 x 72.7 x 9.6 மிமீ. எடை 160 கிராம். மார்பிள் வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சந்தை விற்பனை விலை ரூ. 15,423 ஆக உள்ளது. 


நோக்கியா லூமியா 638 (Nokia Lumia 638)

டிசம்பர் இரண்டாவது வாரத்தில், நோக்கியாவின் லூமியா 638 மாடல் மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 

அனைவரும் வாங்கும் வகையில், நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4ஜி மொபைல் இதுவாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.8,299. சீனாவில், சென்ற ஜூன் மாதமே இது அறிமுகமானது. 

இதில் 4.5 அங்குல அளவிலான FWVGA திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 400 ப்ராசசர் இயங்குகிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. ஆட்டோ போகஸ் திறனுடன் கூடிய 5 எம்.பி. கேமரா பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதில் ப்ளாஷ் இல்லை. 

முன்புறமாக இயங்கும் கேமராவும் இல்லை. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் இயங்குகிறது. இதன் ஸ்டோரேஜ் 8 ஜி.பி. இதில் ஒரு மைக்ரோ சிம் மட்டுமே இயக்க முடியும். 

இதன் பரிமாணம் 129.5×66.7×9.2 மிமீ. எடை 134 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1830 mAh திறன் கொண்டதாக உள்ளது. 

இந்தியாவிற்கான TD-LTE Band 40 அலைவரிசையினை இது சப்போர்ட் செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் ஏர்டெல் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. 

இதனை அறிமுகப்படுத்திய விழாவில் பேசிய இந்நிறுவன இயக்குநர் ரகுவேஷ், நோக்கியாவின் லூமியா போன்கள் எப்போதும் நவீன வசதிகளையும், புதிய அனுபவத்தினையும் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தந்துள்ளன என்றும், அந்த வகையில் இந்த போன், 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டில், புதிய அனுபவத்தினைத் தரும் என்றும் குறிப்பிட்டார். 

மக்கள் அனைவரும் வாங்கக் கூடிய வகையில் ஸ்மார்ட் போன்களைத் தருவதே நோக்கியாவின் இலக்கு என்றும், அந்த வகையில், இந்த மாடல் குறிப்பிட்ட இடத்தினை வாடிக்கையாளர்களிடம் பெறும் என்றும் தெரிவித்தார். 

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் அதிகபட்ச விலை ரூ. 8,299. அமேஸான் இணைய வர்த்தக தளத்தில், டிசம்பர் 17 முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. 

மைக்ரோசாப்ட் விற்பனை மையங்களிலும் இதனை வாங்கலாம். ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் வாங்குவோருக்கு, முதல் 2 மாதங்களுக்கு 4ஜி இணைப்பில், 5 ஜி.பி. இலவச டேட்டா பயன்படுத்தும் வசதி தரப்படுகிறது. 2015 மார்ச் 1 வரை இந்த சலுகை கிடைக்கும்.


2015ல் மொபைல் விளம்பரம்

இந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம். 

டிஜிட்டல் விளம்பரச் சந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது. 

மொபைல் சாதனங்களில் விளம்பரங்கள் குறித்து எரிக்சன் நுகர்வோர் அறிக்கை, விளம்பரப் பிரிவில் ஏற்பட்டு வரும் அபார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து பெற்ற தகவல்களை அளிக்கிறது. 

ஆசிய கண்டத்தில், மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாவது இந்தியாவில் தான். விளம்பரதாரர்கள், இந்த போன்களில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுகள் மற்றும் பொதுவான மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தங்கள் பார்வையைத் தீவிரமாகச் செலுத்தி வருகின்றனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திரை என்பது, மொபைல் போனின் திரைதான் என்று வரையறை செய்திடும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது. சராசரியாக 5 அங்குல திரையே பல பயனாளர்கள் விரும்பிப் பயன்படுத்துகின்றனர். 

இது விளம்பரம் செய்பவர்களுக்கு சவால் தருவதாக அமைகிறது. இந்நிலையில் வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் போன் விளம்பரங்கள் எப்படி வளர்ச்சி பெறும் என்பதைக் காணலாம்.

1. டிஜிட்டல் சாதனங்கள் குறித்த ஆய்வு தகவல் கட்டுரைகளின் இடத்தில், அந்த சாதனத்தை எப்படி வாங்கலாம், எந்த தளம் மூலம் வாங்கலாம் என்பதே முதன்மை தேவையாக இருக்கும்.

2. மொபைல் பக்கங்களைக் காட்டிலும், மொபைல் அப்ளிகேஷன்களையே மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.

3. தற்போது பரவலாகக் காட்டப்படும் பேனர் விளம்பரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பயனாளர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் விளம்பரங்கள் இருக்கும். 

சாதாரணமான மொபைல் விளம்பரப் பக்கங்களுக்குப் பதிலாக, அப்ளிகேஷன் வழியாகச் சென்று, அல்லது அப்ளிகேஷன்கள் இயக்கும் விளம்பரங்கள் இடம் பெறும். அல்லது விளம்பரதாரருடன் இலவசமாக தொலைபேசியில் பேசித் தகவல் பெறும் வகையில், தனிப்பட்ட டயலர் கட்டங்களுடன் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டு இடம் பெறும்.

4. பயனாளர் ஒருவர் தகவல் தேடும் போது, அவரின் தேடல், நேரம் மற்றும் அவரின் வயதுக்கேற்ற வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்கள் ஒரே பொருள் குறித்து கிடைக்கும்.

5. கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற தேடல் சாதனங்கள் வழியாக விளம்பரங்கள் கிடைப்பது அதிகரிக்கும். 

6. இப்போதே, மொபைல் போன்களில் விளம்பரங்களுக்கான புரோகிராம் செய்வது, சிறந்த திறமையாக மதிக்கப்படுகிறது. இதன் தேவை இன்னும் அதிகமாகும்.

ஒவ்வொரு ஆண்டும், மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனை 230% அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் பேர், டேட்டா இணைப்புகளைப் புதியதாக பெற்று வருகின்றனர். 

இதனால், வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் வழி இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்துபவர் எண்ணிக்கை 15 கோடியாக உயரும். 

இது, மொபைல் விளம்பரதாரர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு நல்லதொரு சந்தையைத் தரும். இனி, மொபைல் விளம்பரங்கள், எந்த வகை விளம்பரமும் அமைத்துக் கொள்ளும் வகையில், மொபைல் விளம்பரத்திற்கான வாடைகை சுவர்கள், பயனாளர் பணம் செலுத்தும் வழிகள் மற்றும் பதிவுகள் பெறும் சேவை என விளம்பர சந்தை விரிவடையும்.


2015ல் மைக்ரோசாப்ட்

வரும் 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சவால் நிறைந்ததாக இருக்கும். விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட நற்பெயர் இழப்பினை, விண்டோஸ் 10 மூலம் சரி செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் உள்ளது. 

ஆனால், நிச்சயம் மைக்ரோசாப்ட் இந்த சவாலைச் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டும்.

சென்ற 2009 ஆம் ஆண்டில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதே போல, மைக்ரோசாப்ட் இழந்த பெயரை ஈட்டுத் தந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் வேறு விற்பனைச் சந்தையில் இருந்து வந்தாலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் முக்கிய இடம் கொண்டுள்ளது. 

பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், சர்வர்களிலும் இயங்கும் விண்டோஸ் சிஸ்டம், வருமானத்தை அள்ளித் தந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், மைக்ரோசாப்ட் இதனைத் தேய்ந்த நிலைக்குச் செல்லவிடாது. 

வரும் ஆண்டில், வர இருக்கும் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல வகைக் கட்டமைப்புகளில் செயல்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும். போன், டேப்ளட் பி.சி., பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் எக்ஸ்பாக்ஸ் உட்பட அனைத்திலும் இணைந்து இயங்கக் கூடியதாக இருக்கப் போகிறது. 

ஆனால், இதைத்தான், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 வெளியீட்டின் போதும் அறிவித்தது. மேலும், நம் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான நம் மதிப்பினைக் குறைத்து, க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறைக்கு, கம்ப்யூட்டரை இணைத்தது. அதே போல, மொபைல், டேப்ளட் பி.சி. ஆகியவற்றையும் கொண்டு வந்தது. 

ஆனால், சரிந்த விண்டோஸ் 8 விற்பனை, இதில் மக்களுக்கு விருப்பம் இல்லை என்று காட்டியது. அவர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களையே அதிகம் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். எனவே, க்ளவ்ட் முக்கியத்துவம் அவர்களிடம் எடுபடவில்லை. இந்த இழப்பினைத்தான், விண்டோஸ் 10 ஈடுகட்ட வேண்டும். 

ஆனால், தற்போது, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுடன் கலந்தே, முக்கியமாக நிறுவனங்களாக இயங்கும் வாடிக்கையாளர்களுடன் கலந்தே, விண்டோஸ் 10 ஐ வடிவமைத்து வெளியிடுகிறது. 

அவர்களிடமிருந்து பெரும் அளவில் பின்னூட்டங்களை, சோதனை பதிப்பின் அடிப்படையில் பெற்றுள்ளது. இது விண்டோஸ் 8 வெளியீட்டின் போது, மைக்ரோசாப்ட் மேற்கொண்ட அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது. 

அடுத்ததாக, மைக்ரோசாப்ட் தன் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் வலுவாக மாற்றியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாதபடி பார்த்துக் கொண்டுள்ளது. அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கத்திற்கேற்ற வகையில், இதனையும் வடிவமைக்கிறது. 

விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப் பட்ட போது, ஒன் ட்ரைவ் (அப்போது ஸ்கை ட்ரைவ்) பயனாளர்கள் விருப்பத்துடன் பயன்படுத்தும் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஆக அது இல்லை. 

ஆனால், இப்போது மைக்ரோசாப்ட் வழங்கும் பல சாதனங்கள், மொபைல் உட்பட, க்ளவ்ட் ஸ்டோரோஜை மிகச் சரியாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes