வேர்டில் கோடுகளுக்கான எண்கள்

வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க முடியும். அவ்வாறு அமைக்காவிட்டாலும், வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக் கீழாகக் காட்டும்.

பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை.

எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது.

டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.Enter Line Number என்பதில், செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர், அந்த வரிக்குச் செல்லும்.

இதில் இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம்.

எடுத்துக் காட்டாக, கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Enter Line Number என்பதில், +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக் செய்திடவும்.

கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7 வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம்.


வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.

அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.

Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.


இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும்.

குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள்.

USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.நன்றி : தமிழ் கம்ப்யூட்டர்


இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்றுமுதல் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தங்கள் நிறுவன தயாரிப்புகள் பயன்பாட்டில் இருந்தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக, இன்று இந்தியச்சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது.

6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்திருப்பதாகவும், வை பை வசதியுடன் கூடிய 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 3ஜி சேவையுடன் கூடிய ஐபாட்கள் அறிமுகம் செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வை பை தொழில்நுட்பத்துடன் 16 ஜிபி மெமரி கொண்ட ஐபாட் ரூ. 27,900க்கும், 64 ஜிபி ஐபாட் ரூ. 44,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில், 5 புதிய டேப்லெட்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதனையும் தாங்கும் மொபைல்

நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி நீந்துகையில் மொபைல் போன் பயன்படுத்த முடியுமா? அப்படி ஒரு போன் பிரிட்டனில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ட்ரேட்ஸ்மேன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில் எப்.எம். ரேடியோ, புளுடூத் மற்றும் டார்ச் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

நீரில் மட்டுமின்றி, ஒரு ட்ரக்கில் கட்டி, சாலையில் 120 கிமீ தூரம் இழுக்கப்பட்டுச் சென்ற பின்னரும் இது சிறப்பாக இயங்குகிறது.

இரண்டுடன் கற்குப்பைக்குக் கீழே வைத்து எடுத்த பின்னரும், சிறப்பாக இயங்குகிறது.

இதன் விலை 70 பவுண்ட். நீச்சல் வீரர்கள், மலை ஏறுபவர்கள் ஆகியோருக்கு இந்த போன் மிகவும் உதவியாக இருக்கும்.


2011- நிறுவனங்கள் தரப்போவது என்ன ?

புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர்.

நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.


ஆப்பிள்:

2010 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, புத்தம் புதிய மல்ட்டி டச் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தி, பல லட்சக் கணக்கில் அதனை விற்று சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம். இனி அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது இந்த நிறுவனத்திற்கு அவசியமாகிறது.

மேலும் இதே டேப்ளட் பிசி சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வந்து மொய்க்க இருப்பதால், போட்டியும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஐ-பேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பை புதிய வசதிகளுடன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது.

தன் ஐ-போனை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து விற்பனைக்குக் கொண்டு வரலாம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தன் புதிய மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் லயன் (Lion) என்ற பெயரில் கொண்டு வரும். இதனால் மேக் கம்ப்யூட்டரின் விலை அதிகமாகும். இதில் ஐ-பேடில் உள்ள சில வசதிகளை இணைக்க ஆப்பிள் முயற்சித்து வருகிறது.

அடுத்து ஆப்பிள் இன்னும் வலுவாக ஊன்றாத இரு பிரிவுகளில், இந்த ஆண்டில் செயல்படும் எனத் தெரிகிறது. அவை - கிளவ்ட் கம்ப்யூட்டிங் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங். இவற்றை அடுத்து வெளி நாடுகளில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் டிவியை, இன்னும் மலிவான விலையில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்ல, ஆப்பிள் முயற்சிக்கும்.


கூகுள்:

தேடல் பிரிவில் தனக்கு நிகர் இல்லை என இயங்கும் கூகுள், தற்போது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினுக்குத் தன் வாடிக்கையாளர்கள் சென்றுவிடாமல் இருக்க, பல புதிய வசதிகளைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய வெற்றியை அடைந்தாலும், ஐபோன் சாப்ட்வேர் போல நகாசு வேலைகளைத் தருவதாய் இல்லை. டேப்ளட் பிசிக்கான ஆண்ட்ராய்ட் பதிப்பு ஐ-பேட் சாதனத்திற்குச் சவால் விடுவதாய் அமையலாம்.

2011ல் கூகுள், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் தன் நிலையை உறுதிப்படுத்தலாம். கிளவ்ட் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு பிரவுசராக வலுப்பெறலாம்.

பயனாளர்கள் இதன் மூலம் இணைய சர்வரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவார்கள். தங்கள் பைல்களைக் கூட, கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்தில் சர்வரில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம் உதவிடும் வகையில், கூகுள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.

இதே போல இதுவரை தீவிரமாக இறங்காத, சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவிலும், கூகுள் இந்த ஆண்டில் தடம் பதிக்கலாம். கூகுள் டிவியிலும் கவனத்தைச் செலுத்தி, இன்டர்நெட்டினை, டிவியில் நம் வீட்டு ஹாலுக்குக் கொண்டு வரலாம்.


மைக்ரோசாப்ட்:

சாப்ட்வேர் பிரிவில் சக்கரவர்த்தியாகத் திகழும் மைக்ரோசாப்ட், இன்னும் வாடிக்கையாளர் களை எல்லாப் பிரிவுகளிலும் தன் வசம் வைத்துள்ளது. விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இரண்டு பிரிவுகளில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி, மற்ற நிறுவனங்களிடமிருந்து சவால்களை எதிர் கொண்டுள்ளது.

விண்டோஸ் போன் 7 சிறப்பான சிஸ்டமாக இருந்தாலும், போட்டியைச் சமாளிக்கும் அளவிற்கு விரிவாக இல்லை.


பேஸ்புக் மற்றும் ட்விட்டர்:

சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவில் இந்த இரட்டையர்கள், 2010 ஆம் ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தினைப் பெற்றனர். இந்த ஆண்டிலும் சவால்களைச் சந்தித்துப் பல புதிய பரிமாணங்களைத் தங்கள் சேவையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.


பயர்பாக்ஸ் எழுத்துருவை மாற்ற

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான்.

தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கு வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது.

ஏன், அளவை மாற்றுவது கூடச் சற்று கடினமான செயலாகும். பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதற்கென அமைக்கப்பட்ட ஆட் ஆன் எனப்படும் கூட்டுத் தொகுப்புகள் ஏராளம்.

அத்தகைய தொகுப்பு ஒன்று, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடைமுகத்தில் நமக்குப் பிடித்த எழுத்து வகையினை அமைக்க உதவிடுகிறது. எழுத்துவகையினை மாற்றாவிட்டாலும், அதன் அளவைப் பெரிதாக்கவும் உதவுகிறது.

இதனால், சற்று பார்வைத் திறன் குறைவு உள்ளவர்கள், பலனடையலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer.

இதன் தளம்(https://addons.mozilla.org/enUS/firefox/addon/162063/)சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் (பயர்பாக்ஸ் பதிப்பு 4) ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது.

இதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம்.

இந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது.

எழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக் களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை.

இந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம்.

தண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla.org/enUS/thunderbird/addon/ 162063/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது.

அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.

இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும்.

பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும்.

இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.


மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது.

இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர்.

அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது.

பிரவுசர்கள் கம்ப்யூட்டர் தரும் மெமரியினைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது.

பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.


சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட்

சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர்.


இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் "பிரன்ட் லைன்' கிளப்பில், அதன் உரிமையாளரும், "விக்கிலீக்ஸ்' பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.


விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.

குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.

உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.

இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.


1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.

8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.

நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.


சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.

அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.

இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.

ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.


புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.

பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை.

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன.

மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.

கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம்.

அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம்.

உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.


பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5

குவெர்ட்டி வகை கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட நோக்கியா இ-5, விற்பனைக்கு வெளியானது முதல், மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது. இதற்குக் காரணம் பயன்படுத்த மிக எளிதாக இருப்பதுவே எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கீ பேட் சற்று பெரியதாகத் தரப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பாரைத் தொட்டால், எல்.இ.டி. விளக்கு ஒளிவிடுகிறது. இதனையே கேமராவிற்கும் பயன்படுத்தலாம். 3.2 அங்குல திரை இதில் தரப்பட்டுள்ளது. போனின் சார்ஜ் செய்திடும் போர்ட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்கெட் ஆகிய அனைத்தும் மேலாகத் தரப்பட்டுள்ளது.

இதன் ஹோம் ஸ்கிரீன் மட்டும் வேறுபட்டு படுக்கை வசமாகக் காட்சி அளிக்கிறது. ஷார்ட்கட் கீகளாகப் படத்தை வைத்து இயக்கும் கூடுதல் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மியூசிக் பிளேயர் மிகவும் துல்லிதமான ஒலியை ரம்மியமாகக் கேட்கும் வகையில் அளிக்கிறது.

இதற்கு அதன் 8 பேண்ட் கிராபிக் ஈக்குவலைசர் உதவிடுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி சேவையில் இன்டர்நெட் ரேடியோ கிடைக்கின்றன. MPEG4, 3GP மற்றும் WMVபார்மட்களில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளேயிங் உள்ளது.

A2DP இணைந்த புளுடூத், 3ஜி, எட்ஜ் மற்றும் வை-பி தொழில் நுட்பம் நெட்வொர்க்கிங் இணைப்புகளுக்குக் கை கொடுக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள பிரவுசர்,சற்று மெதுவாகச் செயல்பட்டாலும், நன்றாக உதவுகிறது.

இதில் இலவசமாகத் தரப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ், ஜி.பி.எஸ். வசதியுடன் இணைந்து நன்றாகச் செயல்படுகிறது. இதே போல பி.டி.எப். மற்றும் ஸிப் ரீடர், ஆக்டிவ் நோட்ஸ் ஆகிய அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது.

ஆனால் சற்று வித்தியாசமாக, செட் செய்யப்பட்டு இதன் போகஸ் உள்ளது. இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நொடிக்கு 15 பிரேம் வேகத்தில் வீடியோ இயங்குகிறது. போனின் பேட்டரி நல்ல திறனுடன் இயங்குகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால், வழக்கமான பயன்பாட்டில் இரண்டரை நாள் தாங்குகிறது. மெயில் பார்ப்பதற்காக, எந்நேரமும் இயங்கினாலும், இரண்டு நாட்கள் வரை பவர் கிடைக்கிறது. இதில் பேட்டரி சேவர் மோட் இருப்பது ஒரு கூடுதல் வசதியாகும். இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 11,000.


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

இதுவரை தயாரித்து வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன் மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது.

இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல் அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது.

இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே இயங்கு கின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின் வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.


புதிய இன்டர்பேஸ்:

இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு, பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன.

வலது மேல் பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள், மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும் இருக்கின்றன.

இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன. முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது. இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது.

இந்த பிரவுசரில் எச்சரிக்கை மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன. இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும் டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும்.

இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது.

மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் (Pinned Shortcuts). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம்.

இதற்கான டேப்பினை இழுத்து டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல, கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக எடுத்துத் தரப்படுகின்றன.

இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது.

விண்டோஸ் விஸ்டாவுடன் அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர் குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு 9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம் தெரியவருகிறது.

எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க் பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட் பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன.


பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும் சோதனைத் தொகுப்பு தான்.

மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : : http://windows.microsoft.com/enUS/internetexplorer/download/ie9/worldwide . இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.


பேஸ்புக் தகவல் தரவிறக்கம்

நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது.

பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர்.

இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்.

உள்ளே நுழைந்த பின்னர்,Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர்Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்துLearn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும்.

நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும்.

இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.


அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்

ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.

அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.

இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.


இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :

ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.


ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:

ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.


காருக்கான பிளாக் பாக்ஸ்:

தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.


ஜிபிஎஸ் ஜாம்மர்:

உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.


மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:

வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.

ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes