மரபணு சிகிச்சை

"நான் ராஜபரம்பரையிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!'' இவையெல்லாம் சினிமா வசனங்களில் பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய தொடர்பு உண்டு. "அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்''. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது ஜீன் எனப்படும் மரபணுதான். 

ஒருவருடைய மரபுப் பண்புகளை அப்படியே அவரது வாரிசுகளுக்கு இந்த "ஜீன்'' கடத்துகிறது. சிலபேர் இடதுகை பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அப்படியே அவருடைய பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் இருக்கும். சிரிப்பது, கோபமடைவது, வெட்கப்படுவது. நடை உடை பாவனைகள் இப்படி ஒவ்வொரு பழக்கங்களையும் தன் பெற்றோர் அல்லது மூதாதையர் செய்வதுபோன்றே செய்வார்கள். 

இதற்கெல்லாம் "ஜீன்'' என்னும் மரபணு இந்தப் பண்புகளை கடத்தும் பணியைச் செய்து வருகிறது. இப்பொழுது "ஜீன் தெரபி''  என்றழைக்கப்படும் ஒரு நூதன முறையினால் ஒருவருடைய மரபணுவை மற்றவருக்கு மாற்றுவதன் மூலமோ அல்லது ஒருவருடைய மரபணுவை கூட்டுதல் குறைத்தல் செய்வதன் மூலம் அவர்களுடைய செயலாற்றலில் மாற்றம் கொண்டு வரலாம் என்று ஆராய்ந்து வருகிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சமீப காலமாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து மூலம் விளையாட்டில் வெற்றிபெற்ற சம்பவங்களில் சர்ச்சை எழுந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய செயல்திறனை அதிகப்படுத்துவதற்காக எல்லா வகையான முறைகளையும் கையாண்டுள்ளார்கள். அடுத்தக் கட்டமாக தற்பொழுது அவர்களுடைய விளையாட்டிற்கு தகுந்த மரபணு மாற்றி முறையை அணுகி வருகின்றனர். 


ஊக்க மருந்துகளை விட இது மிகவும் நவீன முறையாக உள்ளது. National Strength and Conditioning Association இயக்குனர் மைக் பார்னேஸ் கூறுகையில், "இந்த மரபணு மாற்றி முறை தீங்கு விளைவிக்காத எல்லா வகையான உள்ளாற்றல்களைக் கொண்ட இயக்க ஊக்கியாக செயல்படுகிறது.

ஒரு விளையாட்டு வீரரின் உடலில் மரபணுவை நேரடியாக திசுவில் செலுத்தி அவருடைய டி.என்.ஏ ல் கலந்துவிட செய்வதுதான். இதன்மூலம் உடலில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள் தூண்டப்படுவது அல்லது தடுக்கப்படுவதன் மூலம் ஆற்றல் அதிகரிப்பு, தசை வளர்ச்சியில் முன்னேற்றம், ஒரு புத்துணர்வு ஆகியவற்றை பெறமுடிகிறது. 

"ஒரு விளையாட்டு வீரரின் அவரது விளையாட்டின் தன்மைக்கு ஏற்றாற்போல் தசையில் ஊசி மூலம் நேரடியாக வைரஸ் செலுத்துவதன் மூலம் புதிய மரபணு செலுத்தப்படுகிறது'' என்று வாஷிங்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையத்தின் மேலாளர் திரு. செரிகாவா கூறுகிறார்.

மரபணு சிகிச்சையில் மிகவும் கைதேர்ந்தவர் மற்றும் சிறந்த வல்லுனர் ப்ரைட்மேன். இவர் கலிபோர்னியா சான் டீகோ பல்கலைக் கழகத்தின் இயக்குனர் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு கழகத்தின் ஆலோசகரும் ஆவார். 

இவர் கடந்த 30 வருடங்களாக இந்த மரபணு மாற்றியைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். மரபுப் பண்பை கூட்டுவது மற்றும் குறைப்பதன் மூலம் பார்கின்ஸன் நோய் எனப்படும் நரம்பின் மத்தியப் பிரதேசத்தின் ஏற்படும் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ஆர்த்திரிட்டிஸ்  என்றழைக்கப்படும் மூட்டு அழற்சி மற்றும் சில நோய்களையும் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

சாதாரணமாக புதிய மரபணுவை ஆபத்து விளைவிக்காத வைரஸை செலுத்துவதின் மூலம் இந்த யுத்தி பயன்படுத் தப்படுகிறது. ப்ரைட்மேன் கூறுகையில் "சரக்குகளை சுமந்து செல்லும் வாகனத்தைப் போல என்கிறார்''. 


மரபணு மாற்றி சிகிச்சை மூலம் பரம்பரை நோய்க்கு முற்றுப்புள்ளி

மரபணு தெரபி மூலம் பரம்பரை பரம்பரையாக வரும் சில நோய்களை புதிய மரபணுவை திசுவில் செலுத்துவதன் மூலம் அந்நோய்க்கு முடிவு கட்டிவிடலாம். உதாரணமாக சர்க்கரை வியாதி குறிப்பிடத்தக்கது. நோயாளியின் உடலில் சில மரபணுக்கள் சேதமடைந்திருப்பது அல்லது குறிப்பிட்ட ஹார்மோன் அல்லது புரோட்டீனை உருவாக்குவதற்கு தூண்டப்படும் மரபணு இருக்காது. மரபணு சிகிச்சை மூலம் சேதமடைந்த திசுவை அகற்றிவிட்டு அல்லது தேவையான புரோட்டீன் அல்லது ஹார்மோனை உருவாக்கும் மரபணுவை செலுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி இம்முறை மிகவும் எளிதானது என்கின்றனர். அதாவது ஒரு பயிற்சி பெற்ற உயிரியல் துறை மாணவரோ அல்லது விளையாட்டு பயிற்சியாளரோ இந்த மரபணு மாற்றி முறையை செயல்படுத்தலாம்.

"இதற்காக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். மேலும் இதற்காக பல உபகரணங்களும் தேவைப்படுகிறது. இதற்குத் தேவைப்படுகின்ற உபகரணங்கள் சரிவர இருந்தால் மரபணு மாற்றி சிகிச்சை சுலபமாக இருக்கும்'' என்கிறார் திரு.செரிகாவா. இந்த செலவு வகைகள் காலப்போக்கில் குறைந்துவிடும்.

ப்ரைட்மேன் குறிப்பிடுகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள் 15 குழந்தைகளுக்கு இந்த மரபணுவை ஏற்றியதின் மூலம் இக்குழந்தைகள் இந்த சக்தியை திரும்பப் பெற்றனர்.

இப்படி பல குறைபாடுகளை சரிசெய்ய நிவாரணங்களை மருத்துவ விஞ்ஞானத்தால் செய்யமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வளவோ ரண வேதனைகள் நோய்களால் ஏற்படுகின்றன. ஆனால் இயற்கை மனிதன் பல வழிகளில் போராடி வெற்றி பெறுகிறான். 

இன்று நம்மை ஆட்டிப் படைக்கும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு எல்லாம் இதுபோன்ற அமைப்புகளில் நிவாரணம் வரலாம். இன்றைய ஆட்கொள்ளி நோய்கள் பல சரிசெய்யப்படலாம் வரும் காலங்களில்! அதே சமயத்தில் புதுப்புது அச்சமூட்டி எச்சரிக்கும் ஆட்கொள்ளி நோய்களும் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவைகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெறும் ஆற்றல் நம் அறிவியலுக்கு உண்டு.

அதிசயம் தொடரும்

எம்.ஜே. எம்.இக்பால், துபாய். 


மரபணு மாற்றி மூலம் பரம்பரை வியாதியை குணப்படுத்துவதை விளக்கும் படம்.

1. பாதிக்கப்பட்ட செல் நோயாளியின் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

2. ஆய்வுக்கூடத்தில் வைரஸின் தன்மை மாற்றம் செய்யப்படுகிறது. 

3. தேவைப்படுகிற மரபணு வைரஸில் செலுத்தப்படுகிறது

4. மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் செல்லில் செலுத்தப்படுகிறது.

5. இதனால் நோயாளியின் மரபணுவில் மாற்றம் ஏற்படுகிறது.

6. மாற்றம் செய்யப்பட்ட செல் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

7. மரபணு மாற்றப்பட்ட செல் நோயாளிக்குத் தேவையான ஹார்மோன் அல்லது புரோட்டீனை உருவாக்குகிறது. 
 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes