ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு

இக்காலத்தில், எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். 

இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். 

எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன. நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, 

கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.


ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.
பைல் கண்காணிப்பு: 

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். 

இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection.

நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. 

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது. ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். 

இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை “heuristic” checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.

இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். 

அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும். 

எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும்.

இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.


உருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114


முதன் முதலாக, உருது மொழிக்கான கீ போர்டுடன் மொபைல் போன் ஒன்றை, நோக்கியா 114 என்ற பெயரில், நோக்கியா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

நோக்கியா 114 முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட போன் என்றாலும், தற்போது உருது மொழி சப்போர்ட்டுடன் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,579.

நோக்கியா 11 இந்திய மொழிகளுக்குத் தன் மொபைல் போன்களில் சப்போர்ட் தருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜ்ராத்தி,வங்காளம், ஒரியா, அஸாமீஸ், பஞ்சாபி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளுக்கான சப்போர்ட் 2008 ஆம் ஆண்டு முதல் கிடைத்து வருகிறது. 

இதற்கென, தன் ஆஷா வரிசை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த, அக்ஸார் (Akshar) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது. 

இந்த போனில் 1.8 அங்குல திரை, டி9 கீ போர்ட், விஜிஏ கேமரா, இரண்டு சிம் பயன்பாடு, மெமரி கார்ட் ஸ்லாட் ஆகியவை உள்ளன. 32 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்தும் வசதி உள்ளது. 

இதன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 10.5 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. அண்மையில், டில்லியில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டார்.


பிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்சென்ற செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், பிளாக் பெரி நிறுவனம் தன் பிளாக்பெரி 9720 மாடல் மொபைல் போனை இந்தியாவில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன். QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 

806 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டு, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் தடிமன் 12 மிமீ. எடை 120 கிராம். 

பல பார்மட்களில் ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்கலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம்.ரேடியோ, 512 எம்பி ராம் மெமரி, அதே அளவில் ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். 

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிளாக் பெரி மாடல் போனின் அதிக பட்ச விலையாக ரூ. 15,990 எனக் குறிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்


விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம். 

ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl + Shift + Esc கீகளை அழுத்தவும். உடன், கிடைக்கும் விண்டோவில், மாறா நிலையில், புதிய Process tab அழுத்தப்பட்டு கிடைக்கும். 

இந்த டேப்பில் புரோகிராமின் பெயர், அது சி.பி.யுவில் பயன்படுத்தும் திறன், பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் மெமரி பயன்பாடு, டிஸ்க்கில் பயன்பாட்டிற்கான இடம் மற்றும் நெட்வொர்க் பயன்பாடு ஆகிய தகவல்கள் காட்டப்படுகின்றன. 

இங்கு காட்டப்படும் அப்ளிகேஷன்கள் அல்லது பேக் கிரவுண்ட் செயல்பாடு என, எதன் மீது வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, பின்னர், details மீது கிளிக் செய்து, விபரங்களைக் காணலாம். இதன் மூலம், விண்டோஸ் 7 சிஸ்டம் காட்டும் வழக்கமான தகவல்கள் இங்கு கிடைக்கும். 

இந்த புதிய காட்சியில், நமக்கு புரோகிராம்கள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி, சிஸ்டம் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கும் அல்லது முடக்கும் விஷயங்கள் என்ன என்பதனையும் காணலாம்.

நம் கம்ப்யூட்டரின் செயல் திறனைக் கண்காணிக்க, performance டேப் மிக அழகான ஒரு இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. சி.பி.யு. பயன்பாடு, கம்ப்யூட்டர் ப்ராசசரின் எந்த வகைத் திறனை எல்லாம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என வரை படம் மூலமாகவே காட்டுகிறது. 

திரையின் இடது பக்கத்தில், மெமரி பயன்பாடு, டிஸ்க் அணுக்கம், நெட்வொர்க் அணுக்கம் மற்றும் வை-பி செயல்பாடு ஆகியவை குறித்த தகவல்கள் காட்டப்படுகின்றன. ப்ராசசரின் அப்போதைய செயல்பாடு வேகம் குறித்தும், விரிவான தகவல்கள் கிடைக்கின்றன.

டாஸ்க் மானேஜரின் app history டேப், விண்டோஸ் 8 ஸ்டோரின் அப்ளிகேஷன்களை மட்டும் காட்டுகிறது. ப்ராசசர் நேரம், நெட்வொர்க் பயன்பாடு, டைல் அப்டேட் பயன்பாடு ஆகியவையும் இதில் காட்டப்படுகின்றன. 

நெட்வொர்க் பயன்பாட்டில், 2ஜி, 3ஜி அல்லது 4ஜி பயன்பாடு இருப்பின், அதன் மீட்டரையும் இது காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசி வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் உதவியானதாகும். 

இதன் மூலம், எவை எல்லாம், எதிர்மறையாக செயல்பாட்டினைத் தடுக்கின்றன என்று அறியலாம். மிக அதிகமாக அப்டேட் கொண்டவற்றை இதில் அறிந்து, தேவை இல்லை எனில், புரோகிராமினயே, அன் இன்ஸ்டால் செய்திடும் முடிவை எடுக்கலாம்.

இறுதியாக, டாஸ்க் மானேஜர் தரும் மிகச் சிறப்பான ஒரு வசதியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். டாஸ்க் மானேஜரில், மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது எனக் கூறலாம். அது புதியதாகத் தரப்பட்டிருக்கும் ஸ்டார்ட் அப் (Startup) டேப். இந்த டேப் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, தொடங்கப்படும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பைல்களையும் இது காட்டுகிறது. 

பொதுவாக ஸ்டார்ட் அப் புரோகிராம்களாக, ஹெல்ப்பர் டூல் பார்கள், புரோகிராம் அப்டேட்டர்கள், ட்ரே அப்ளிகேஷன்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சாதனங்களுக்கான பயனுள்ள சில அம்சங்கள் ஆகியவை வழக்கமாகக் காட்டப்படும். 

இந்த டேப்பில், அப்ளிகேஷன் பெயர், அதனைப் பதிப்பித்தவர் பெயர், அது இயக்கப்பட்டுள்ளதா, இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதா, கம்ப்யூட்டர் தொடக்க வேகத்தில், இதன் பங்கு என்ன என்பது போன்ற தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷன்களில் எதில் வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கலாம், அல்லது முடக்கி வைக்கலாம். 

பைல் ஒன்றைத் திறந்து அதன் அம்சங்களைக் காணலாம். அல்லது அது குறித்து இணையம் தரும் தகவல்களைத் தேடிப் பெறலாம். இதன் மூலம் அந்த பைல் அல்லது அப்ளிகேஷன் எதற்காக என்பதனையும் அறியலாம். 

இந்த ஒரு பயன்பாட்டு வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், ட்ரேயில் உள்ள பயனற்ற அப்ளிகேஷன்களை நீக்கலாம். இதன் மூலம் எந்த அப்ளிகேஷன், விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது, அல்லது தொடங்குவதனைத் தாமதப்படுத்துகிறது என அறியலாம். 

முன்பு தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் மூலமே, இத்தகைய தகவல்களை, ரெஜிஸ்ட்ரி வரை சென்று அறிய முடிந்தது. தற்போது எந்த சிரமமுமின்றி, விண்டோஸ் 8 டாஸ்க் மானேஜர் தருகிறது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மற்ற பயன்பாடுகள் எப்படியோ, அதன் டாஸ்க் மானேஜர் மிகச் சிறப்பான முறையில், கூடுதல் வசதிகள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.


விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?


விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. 

பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மட்டுமல்ல. அனைத்து சிஸ்டங்களும், இது போல்தான் முடக்கப்பட்டன என்று கூறுகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் மி ஆகியவற்றின் வாழ்நாளும் இதே போல முடிவுக்கு வந்தன. 

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விஸ்டாவின் இயக்க வாழ்வு, வரும் ஏப்ரல் 11,2017ல் முடிவடையும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகாப்பு முறை ஜனவரி 14,2020 ஆம் ஆண்டில் முடிந்துவிடும். 

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அதன் வாழ்நாள் சப்போர்ட் பலமுறை நீட்டிக்கப்பட்டது. மற்ற சிஸ்டங்களை நடத்தியது போல, எக்ஸ்பியையும் நடத்த முற்பட்டிருந்தால், சில ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான சப்போர்ட் வாபஸ் பெற்றிருக்கப்பட வேண்டும். 

உற்றுக் கவனித்தால், ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படும். விண்டோஸ் எக்ஸ்பி 2001 ஆம் ஆண்டு வெளியானது. 2010ல் எக்ஸ்பி பதிந்து இயக்கப்பட்டகம்ப்யூட்டர்கள் மிகப் பழமையாக இயங்கின. ஆனால், எக்ஸ்பி வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த, விண்டோஸ் விஸ்டா, 2011 வரையே பாதுகாப்பில் இருந்தது. 

விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி 13 வயதாகி விட்டது. இளஞ்சிறுவர்கள் மாதிரி, இன்றைய (டிஜிட்டல்) உலகை, எக்ஸ்பியால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. மிகப் பெரிய அளவில், பல மாற்றங்களுடன் சர்வீஸ் பேக் 3 வந்தாலும், எக்ஸ்பியால், புதிய டிஜிட்டல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை. 

விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிகளைக் கூட எக்ஸ்பியால், பின்பற்ற இயலவில்லை. தற்போது ஹார்ட்வேர் பிரிவில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களுடன் இணைந்து செயல்பட எக்ஸ்பி சிஸ்டத்தால் இயலவில்லை.

மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, இதற்கென புரோகிராம்களை உருவாக்கியுள்ள சில தர்ட் பார்ட்டி நிறுவனங்களும், தொடர்ந்து எக்ஸ்பியில் அவை இயங்குகையில் பாதுகாப்பு அளிக்க இயலவில்லை. 

ஒவ்வொரு விண்டோஸ் சிஸ்டம் புதிய பதிப்பு வெளியாகும் போதும், இந்த நிறுவனங்கள், அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்து தங்கள் புரோகிராம்களை அப்டேட் செய்கின்றனர். அந்நிலையில், எக்ஸ்பிக்கு வெளியான புரோகிராம்களையும் தொடர்ந்து பராமரிப்பது வீணான செயல் என்று எண்ணுகின்றனர்.

எக்ஸ்பி தொடர்வது இன்டர்நெட்டையும் பாதிக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மற்றும் 8 பதிப்புகள் மட்டுமே, எக்ஸ்பியுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த பிரவுசர்கள் எல்லாம், மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பின் தங்கியவை ஆகும். இதனால், தற்போதைய பிரவுசர்களுக்காக எனத் தனியே கூடுதலாக, வெப்சைட்கள் தயார் செய்திட வேண்டியுள்ளது.

ஆனால்,எக்ஸ்பி சிஸ்டத்தை விடுத்து, விண்டோஸ் 2007 அல்லது விண்டோஸ் 8 க்கு மாற இருப்பவர்களுக்குக் கூடுதல் செலவு ஆகலாம். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, துணை சாதனங்களையும் மாற்ற வேண்டியதிருக்கும். ஆனால், வேறு வழியில்லை. 

இன்னொரு சிக்கலும் உள்ளது. விண்டோஸ் 7 ஓரளவிற்கு, விண்டோஸ் எக்ஸ்பியின் தன்மையைக் கொண்டு இயங்குகிறது. இதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், மிக அதிக அளவில் புதுமையைச் சந்திக்கவில்லை. மாற்றத்திற்குத் தங்களை எளிதில் பழகிக் கொண்டனர். 

ஆனால், விண்டோஸ் 8க்கு மாறுபவர்களுக்கு எல்லாமே மிகப் புதியதொரு அனுபவத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இவர்கள், சற்று நேரம் ஒதுக்கிச் சிலவற்றைப் புதியதாகக் கற்றே ஆக வேண்டும். புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. 

அவர்கள் இதனை இயக்கிப் பார்க்கும் போது, புதிய மாற்றங்களையும், அவை நம்மிடம் எதிர்பார்க்கும் திறனையும் உணரலாம். அடுத்து விண்டோஸ் 8.1 வருகையில், அதில் சில பழைய விண்டோஸ் அம்சங்களைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவது பற்றிய குறிப்பு களையும் சேர்க்கலாம்.

எனவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடுத்து எப்போது அதனை முடித்து வேறு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறலாம் என்பதனைத் திட்டமிட வேண்டும்.


விண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்


இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இணைய தளங்களில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும், ரயில்வே டிக்கட் புக்கிங் தளம், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை வடிவமைத்துத் தந்துள்ளது. தற்போது இயங்கும் ஆன்லைன் தளத்துடன், புதிய தளமும் இயங்கும். 

சராசரியாக, நாளொன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் இணையம் வழியாகப் பதிவு செய்யப்படுகின்றன. சென்ற செப்டம்பர் 2 அன்று, மொத்தம் 5 லட்சத்து 72 ஆயிரம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர், சென்ற ஆகஸ்ட் 12 அன்று, பதிவு செய்யப்பட்ட, 5 லட்சத்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையே முதல் இடத்தில் இருந்தது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும், புதிய தளக் கட்டமைப்பினால், டிக்கட் பதிவு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ஒரு கோடியே 35 லட்சம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டன. சராசரியாக நாளொன்றுக்கும் 4.34 லட்சம் டிக்கட்கள் வாங்கப்பட்டன. 

சென்ற ஆண்டில், இதே மாத காலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை, ஒரு கோடியே 23 லட்சமாகும். ஓராண்டில் இந்த வகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.


விண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர். 

விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. 1. கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்: 

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம். 

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 
ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.
U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.
TAB : முப்பரிமாணக் காட்சி
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.


2. ஹெல்ப் அண்ட் சப்போர்ட்: 

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். 

விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. 

இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.


3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்: 

நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். 

கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும். இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.


4. அப்ளிகேஷன் அன் இன்ஸ்டால்: 

விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். 

இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.


5.கிரடென்ஷியல் மேனேஜர்: (Credential Manager): 

இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். 

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம். 


லூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்


மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியதனால், அதன் முதல் முயற்சி, விண்டோஸ் ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் போன் சந்தையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதிலேயே அமையும். 

அந்த வகையில், 2014 ஆம் ஆண்டில், தற்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு சந்தைக்கு வந்து கொண்டிருக்கும், லூமியா போன்களின் விலை, இந்தியா உட்பட, பல நாடுகளில் விலை குறைக்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

87 கோடி பேர் மொபைல் பயனாளர்களாக உள்ள இந்தியாவில், 8.7 கோடி பேர் மட்டுமே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனையை உயர்த்தி, அதில் பெரும்பான்மையான பங்கினைக் கொள்ள, மைக்ரோசாப்ட் விலை குறைப்பு முயற்சியை எடுக்கலாம். விலை குறைப்பு ரூ.2,000 முதல் ரூ.2,800 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் களான, கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் விலையில் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியதிருக்கும். கொரியாவின் சாம்சங் நிறுவனமும், இதில் சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தொடக்கவிலை ரூ.5,000, இந்திய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விலை ரூ. 3,500 மற்றும் நோக்கியாவின் விலை ரூ. 9,000 ஆக உள்ளது. எனவே, நோக்கியா சாதனங்களின் விலை, வேண்டும் என்றே குறைக்கப்படுகையில், மற்ற நிறுவனங்கள் பெரிய போட்டியைச் சந்திக்க வேண்டும்.

நோக்கியாவின் லூமியா போன்கள் தற்போது 12 மாடல்களில், பல்வேறு நிலைகளில் வெளியாகி விற்பனையாகின்றன. அதிக விலையாக ரூ.33,000 என்ற விலையில் ஒரு மாடல் விற்பனையாகிறது. 

இத்தகைய ஸ்மார்ட் போன்கள், உலகின் மற்ற நாடுகளில் அதிகம் விற்பனையான போது, இந்தியாவில், இந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் விற்பனை அவ்வளவாக எடுபடவில்லை. இதனால் தான், மொத்த மொபைல் விற்பனையில் தான் கொண்டிருந்த முதல் இடத்தை, நோக்கியா 2013 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில், சாம்சங் நிறுவனத்திற்கு தர வேண்டியதாகிவிட்டது. 

மொத்த போன் சந்தையில், 70% விற்பனை மேற்கொண்டு இருந்த நோக்கியா, 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 27% என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியாவில், பயனாளர்களிடையே அதிகம் விரும்பப்பட்ட இரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் குறித்து, நோக்கியா கண்டு கொள்ளாததும் ஒரு காரணமாகும். 

மைக்ரோசாப்ட், ஸ்மார்ட் போன் விற்பனையில் மட்டுமே தன் முழு முயற்சிகளை எடுக்கும் எனத் தெரிகிறது. சில குறிப்பிட்ட வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் மொபைல் போன்களின் விற்பனைச் சந்தையிலிருந்து, மைக்ரோசாப்ட் விலகி இருக்க எண்ணலாம். 

பீச்சர் போன் என அழைக்கப்படும் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட போன் சந்தையில் தான், நோக்கியா நல்ல இடத்தைக்கொண்டுள்ளது. ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாடு வளர்ந்து வருவதால், மைக்ரோசாப்ட் அதில் தன் ஈடுபாட்டினைக் காட்டாது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அதிவேகமாக வளரும், ஆனால் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தை, தொடர்ந்து சூடு பிடிக்கும் என சில கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

இது குறித்து ஆய்வு நடத்திய மெக்கின்ஸே அமைப்பு, இனி அடுத்து வரும் 20 கோடி இணையப் பயனாளர்கள், தங்களின் இணையத் தொடர்புக்கு, ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துவார்கள் என்று அறிவித்துள்ளது. 

இந்தியா மட்டுமின்றி, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் நாடுகளிலும் இதே நிலை உருவாகி வருவதாக, மெக்கின்ஸே குறிப்பிட்டுள்ளது. சென்னையில் உள்ள நோக்கியாவின் தொழிற்சாலையில், ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழைத் தாங்கி வந்த போன்கள்


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரு மொபைல் போன்களிலும் முதல் முறையாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டில், இது தமிழுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பாகும். 

இதுவரை நமக்குக் கிடைத்த ஸ்மார்ட் போன்களில், ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில் தான், கீ போர்டுடன் கூடிய தமிழ் தளம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சேர்த்து கிடைத்துள்ளது. 

இதன் மூலம் நாம் தமிழ் கீ போர்டினை நேரடியாகப் பயன்படுத்த முடியும். இதுவரை செல்லினம் என்னும் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்கி, அதன் வழி தமிழைப் பயன்படுத்தினோம். 

மொபைல் சாதனங்களில், தமிழில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான கம்ப்யூட்டர் கட்டமைப்பினைத் தருவதில், முத்து நெடுமாறன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். 

முதன் முதலில் இதனை வடிவமைத்தவரும் இவரே. ஐ.ஓ.எஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களும் அவர் வடிவமைத்தவையே. இப்போது ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், அந்த எழுத்துக்களில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான உள்ளீடு அமைப்பினையும் அவரே வழங்கியுள்ளார். 

இந்த இரு போன்களிலும், தமிழ் 99 மற்றும் அஞ்சல் கீ போர்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து, நாம் தமிழ் டெக்ஸ்ட்டை உள்ளீடு செய்திடலாம். 

இனி, இந்த முறையில், ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபேட், ஐபாட் ஆகிய சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்தலாம். இதற்கு முன்னர், தமிழுக்கென உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்து, பதித்து, பின்னர் அவற்றை இயக்கி நாம் தமிழை உள்ளீடு செய்திட முடியும். 

தற்போது போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இவை தரப்பட்டுள்ளன. எனவே, நேரடியாகவே தமிழைப் பயன்படுத்தலாம். 

இந்த சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர் போன்ற சமூக இணைய தளங்களில், நேரடியாகவே தமிழை உள்ளிடலாம். இந்த சாதனங்கள் மூலம், தேடல் வேலையில் ஈடுபடுகையில், தமிழிலேயே டெக்ஸ்ட் அமைத்துத் தேடலாம்.


குறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்கார்பன் நிறுவனம், அண்மையில் குறைந்த விலையில் ஏ-8 என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சஹோலிக் (Saholic) வர்த்தக இணைய தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 

முன்புறமாக வீடியோ அழைப்புகளுக்கு 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. 

இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. 

இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், ஜி.பி.எஸ்., 512 எம். பி. ராம் மெமரி, 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள். 

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,189.


நீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்


ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. 

நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது.

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ் புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை. 

இது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டு அனுபவத்தின் மையப் பகுதியாகவே இது இயங்குகிறது. இத்தகைய இணைப்பு நமக்குச் சொல்வது என்ன? இது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், ஸ்கை ட்ரைவ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை, நாம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திடுகையிலேயே உணரலாம். 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் தனி விருப்பங்களைஅமைக்கையிலேயே, “SkyDrive is your cloud storage” என்ற செய்தி நமக்குத் தரப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கு ஸ்கை ட்ரைவ் தேவையா என்றெல்லாம் கேட்கப்படுவதில்லை. 

ஸ்கைட்ரைவ் புரோகிராம் சிஸ்டத்தில் உள்ளது. உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன் இயக்கத்தின் மாறா நிலைகளை மாற்றி அமைக்கலாம். ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அதனை அழிக்க முடியாது. அதன் இயக்கத்தினை நிறுத்த முடியாது.

முதலாவதாக, ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே, ஸ்கைட்ரைவிற்கான டைலைக் காணலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், அதற்கான டைலை மறைத்து வைக்கலாம். 

அடுத்து பைல் எக்ஸ்புளோரரில் ஸ்கை ட்ரைவ் பிரிவு கிடைக்கும். இதனை நீங்கள் மறைத்து வைக்க முடியும். நீங்கள் இதனைப் பார்க்கவோ, அல்லது பயன்படுத்தவோ விரும்பவில்லை என்றால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் டிற்குப் பதிலாக, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தலாம். 

நீங்கள் யூசர் போல்டருக்குச் சென்றால், (“C:\Users\Your User Name”) அங்கே, மாறா நிலையில் யூசர் போல்டர்களில் ஒன்றாக, Sky Driveஅமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். ஆனால், லோக்கல் யூசர் அக்கவுண்ட் பயன்படுத்துகையில், ஸ்கை ட்ரைவ் போல்டர் கிடைக்காது. 

இவற்றுடன், ஸ்கை ட்ரைவ் பெர்சனல் கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் அமைப்பில், தனக்கென ஒரு பிரிவினைக் கொண்டிருப்பதனைக் காணலாம். எனவே, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, ஸ்கை ட்ரைவினை நீக்க முடியாது. இதனை அன் இன்ஸ்டால் செய்திடவும் முடியாது. 

அன் இன்ஸ்டால் ஆப்ஷன் இல்லாமல் தரப்படும் ஒரே அப்ளிகேஷன் ஸ்கை ட்ரைவ் அப்ளிகேஷன் தான். எனவே, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஸ்கை ட்ரைவ் போல்டர், உங்கள் யூசர் ப்ரபைலில் காணப்படும். பயன்படுத்தாவிட்டாலும் அதன் ஒருங்கிணைக்கும் (synchronization service) சேவையும் எப்போதும் கிடைக்கும் வகையில் தயாராக இருக்கும். 

விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவின் சில மாறா நிலை அமைப்புகளை மட்டுமே மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம். 

வேர்ட், வேர்ட்பேட் அல்லது டாகுமெண்ட் தயாரிக்கப்படும் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தால், அது ஸ்கை ட்ரைவின் துணை போல்டராக உள்ள Documents என்பதில் சேவ் செய்யப்படும். முந்தைய விண்டோஸ் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், இதில் ஒரு முக்கிய மாற்றம் உள்ளது. 

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவை மாறா நிலையில், Documents லைப்ரேரியில் சேவ் செய்யப்படும். விண்டோஸ் 8.1 சிஸ்டம் சேவ் செய்திடும் இடம் பிடிக்கவில்லை என்றால், அதனை விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் சேவ் செய்திடும் Documents லைப்ரேரிக்கு மாற்றிக் கொள்ளலாம். 

உங்களுடைய போல்டரில் காணப்படும் போட்டோக்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவிற்குத் தானாக அப்லோட் செய்யப்படும். இந்த போல்டர் Pictures லைப்ரேரியில் இருக்கும். 

உங்கள் கம்ப்யூட்டரின் கேமரா அப்ளிகேஷன் இங்குதான் அனைத்து போட்டோக்களையும் சேவ் செய்திடும். பின்னர், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், இவை ஸ்கை ட்ரைவிற்கு அனுப்பப் படுகின்றன. இதனையும் நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8.1, பைல்களை ஸ்கை ட்ரைவ் மூலம் ஒருங்கிணைத்து க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்வது நமக்கு நல்லதுதான். பைல்களை எங்கிருந்தும் பெறலாம்; மேலும் அவை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். 

ஆனால், சிலர், மைக்ரோசாப்ட் நம் மீது திணிக்கும் நடைமுறையாக இதனைக் கருதுகின்றனர். இதனால், பிரச்னை வரலாம் என எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு பயனாளரும் இது குறித்து தங்களின் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு உகந்தபடி செயல்படலாம்.


மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்


இந்திய மொபைல் போன் தயாரிப்பாளரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் தயாரிப்புகளிலேயே, மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கேன்வாஸ் டூடில் 2 (Canvas Doodle 2 ) என அழைக்கப்படும் இந்த போன் தான், இந்நிறுவனத்திலிருந்து அதிக விலையிடப்பட்டு வந்திருக்கும் போன் ஆகும். இதில் 5.7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. 

சாம்சங் காலக்ஸி நோட் 3 போனிலும் இதே அளவில் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Snapdeal வர்த்தக இணைய தளத்தில், தற்போதைக்கு இந்த போன் விற்பனைக்கு உள்ளது. 

இதன் விலை ரூ.19,900. இதற்கான விளம்பரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பேஸ்புக் தளத்தில், உங்கள் கற்பனை இதைக் காட்டிலும் பெரியதாக இருக்குமா? என்று கேட்டிருந்தது.

இதன் திரை டிஸ்பிளே ரெசல்யூசன் 1280 x 720 என உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராச்சர், இந்த போனில் செயல்படுகிறது. 

இதன் ராம் மெமரி 1 ஜிபி ஆகவும்,ஸ்டோரேஜ் மெமரி 12 ஜிபிஆகவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனை இயக்குகிறது. 

12 எம்.பி. திறன் கொண்ட, டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 8 மணி நேரம் பேச மின்சக்தியினை அளிக்கிறது. 

இந்த ஆண்டில், 30 ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. 

இதன் கேன்வாஸ் எச்.டி.மற்றும் கேன்வாஸ் 4 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.


ஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்


1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.

4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.

5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள். 

6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது. 

7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.

8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.

இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.

ஆப்பிள் தந்துள்ள இந்த இரண்டு மாடல்களில், மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களில் காணப்படும் சில வசதிகள் இல்லை. அவை:

1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.

2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.

3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.

4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.

மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.


ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்


1.ப்ராசசர்: 

ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.


2. விரல் ரேகை: 

டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. 

பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.


3. பேட்டரி

தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.


4. கேமரா: 

இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. 

தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.


5. இயக்கும் சிப்: 

இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.


6. இலவச அப்ளிகேஷன்கள்: 

இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன. 


7. வடிவமைப்பு: 

இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.


8. திரை: 

மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 


9. சிம்: 

இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.


10. மொழிகள்: 

இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 


இணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்


இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. 

இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள். 

Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க 
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க 
Ctrl + U – அடிக்கோடிட 
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க 
Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க 
Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற 
Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக 
Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க 
Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட 
Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட 
Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட


பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்: 

Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க 
Alt+2 –உங்களுடைய புரபைல் கிடைக்க 
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்) 
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட் 
Alt+7 – பிரைவசி செட் செய்வது 
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம் 
Alt+0 – உதவி மையம் 


யு–ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Spacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த 
Left Arrow – ரீவைண்ட் செய்திட 
Right Arrow –இயக்கிய முன் பக்கம் செல்ல 
Up Arrow – ஒலி அளவை அதிகரிக்க 
Down Arrow – ஒலி அளவைக் குறைக்க 
F key – முழுத் திரையில் காண 
Esc key – முழுத்திரையிலிருந்து விலக


கை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பிவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விட்டுவிடுங்கள்; 2014 ஏப்ரல் முதல், அது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் விடுத்த எச்சரிக்கை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில் 33.7 சதவீதமாகக் குறைந்தது. ஒரே மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும். ஜூலையில் மொத்த விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு 40.6 சதவீதமாக இருந்தது. 

எக்ஸ்பியின் இடத்தில், கடந்த ஓராண்டாக இயங்கி வரும் விண்டோஸ் 8 மற்றும் நான்கு ஆண்டுகளாகச் சந்தையில் இயங்கும் விண்டோஸ் 7 ஆகியவை இடம் பிடித்துள்ளன. சென்ற மாதத்தில், விண்டோஸ் 7, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 50 சதவீத இடத்தையும், விண்டோஸ் 8, 8.4 சதவீத இடத்தையும் பிடித்தன. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மங்களம் பாடச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர், இதற்கான சப்போர்ட் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அறிவித்து வந்தது. ஆனால்,இப்போதுதான், அந்த அறிவிப்புக்கு மக்கள் செவி சாய்க்கத் தொடங்கி உள்ளனர். 

என்னதான், மைக்ரோசாப்ட் பயமுறுத்தி வந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி, உலகில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். 

ஆனால், சென்ற மாத நிலையைப் பார்க்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர், எக்ஸ்பியின் பயன்பாடு 23% முதல் 28% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், உலக அளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு, சென்ற மாதத்தில், பத்தில் ஒரு பங்கு குறைந்து, மொத்தத்தில் 91.2% ஆக இருந்தது. லினக்ஸ் 1.5% ஆக உயர்ந்தது. ஆப்பிள் ஓ.எஸ். 7.3% ஆக உயர்ந்தது. 

மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 சிஸ்டம் 50% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன. விஸ்டா 4.5% ஆகக் குறைந்துள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு, ஆகஸ்ட்டில் திடீரென அதிகரித்து, 8.4% இடத்தைப் பிடித்துள்ளது. 

விண்டோஸ் எக்ஸ்பிக்கான, இறுதி பேட்ச் பைல், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ல் வெளியிடப்படும். அதன் பின்னர், மைக்ரோசாப்ட், எக்ஸ்பி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. 

எனவே, எக்ஸ்பி சிஸ்டத்தைக் கை கழுவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்

வளரும் நாடுகளில் உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆகியவற்றால், நடப்பு 2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. 

இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.


பயனாளர்களில் பலருக்கு, ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறி உள்ளது. 2017 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மொபைல் போன்கள் என்றால், அவை ஸ்மார்ட் போன்களாக மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கும். 2013ல் இதுவரை விற்பனையான ஸ்மார்ட் போன்களில், 75.3% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் சென்றுள்ளன. இவற்றில் முதல் இடம் பிடித்துள்ள நிறுவனம் சாம்சங். இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்., 16.9% இடத்தைப் பிடித்துள்ளன. விண்டோஸ் 3.9%, பிளாக்பெரி 2.7% பங்கினைக் கொண்டுள்ளன. 


மைக்ரோசாப்ட், நோக்கியாவின் சாதனங்கள் பிரிவினை முழுமை யாக காப்புரிமை உட்பட வாங்கியுள்ளதால், அடுத்த ஆண்டில், இந்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 

அதே போல, ஆப்பிள் நிறுவனம், சீனாவினைத் திடீரென அன்போடு பார்க்கத் தொடங்கியுள்ளதால், அதன் பங்கும் அடுத்த ஆண்டு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நோக்கியாவின் சாதனைகள்


1871 - டயர், பூட் மற்றும் கேபிள்களைத் தயாரித்தது.

1987 - முதல் மொபைல் போன் மொபிரா சிட்டிமேன் வெளியானது எடை 1 கிலோ.

1992 - முதல் டிஜிட்டல் ஜி.எஸ்.எம். போன் நோக்கியா 1011 வெளியானது. 

2003 - பேசிக் 1100 என்ற மொபைல் போனை வெளியிட்டது. 25 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டன. நோக்கியா அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த மொபைல் இதுதான். மக்களிடையே அதிகம் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனம் என்ற பெயரினைப் பெற்றது.

2011 - தன் சிம்பியன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கி, விண்டோஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 

2013 - இறுதியாக 41 மெகா பிக்ஸெல் திறனுடன், நோக்கியா லூமியா 1020 என்ற போனை வெளியிட்டது. 


நோக்கியா தொடாத நபரே இல்லை

கடந்த 15 ஆண்டுகளாக, நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அதில் நோக்கியா போன் ஒன்று இருக்கும். 2000 ஆம் ஆண்டில் நோக்கியா போன் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அது நிச்சயம் நோக்கியா 5110 என்ற மாடலாகத்தான் இருந்திருக்கும். 

இதே போல புகழ் பெற்ற நோக்கியாவின் போன்கள் 8210, 3210 மற்றும் 3310 ஆகியவை ஆகும். 2003ல் வந்த நோக்கியா 1100 மாடல், அதிக விற்பனையை மேற்கொண்டு, சரித்திரத்தில் இடம் பெற்றது.


ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை

சாம்சங் - 10 கோடியே 75 லட்சம் - 24.7%

நோக்கியா - 6 கோடியே 9 லட்சம் - 14%

ஆப்பிள் - 3 கோடியே 19 லட்சம் - 7.3%

எல்.ஜி. - 1 கோடியே 70 லட்சம் - 3.9%

இஸட். டி.இ. - 1 கோடியே 52 லட்சம் - 3.5%

மற்ற நிறுவனங்கள் - 20 கோடியே 23 லட்சம் - 46.5%


148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்


மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. 

தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.

சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. 

பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.

கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர். 

பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. 

மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 

முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. 

ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.

நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. 

அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.

பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes