பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்


இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். 

இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது. 

லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும். 

இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 

வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு உருவாக்கப்பட்டவை. 

நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. 

இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. 

ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது. 

இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. 

நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார். 

இந்த திட்டத்தின் செயல்பாட்டினை சோதனை செய்திட, உலகின் பல இடங்களில் இருந்து, தன்னார்வ இணையப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வீடுகளில், பாஸ்கட் பால் அளவிலான, சிகப்பு ரிசீவர்கள் பொருத்தப்பட்டன. பயனாளர்களுக்குத் திட்டத்தின் முழு விபரமும் வழங்கப்படவில்லை. இணைய இணைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களே திரட்டப்பட்டன.

இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.

இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை. 

பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது. 

கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். 

நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்.


பட்ஜெட் விலை ஸ்பைஸ் மொபைல் எம் 5396


இரண்டு அலைவரிசைகளில் இயங்கினாலும், இரண்டு சிம்களுடன் இயங்கும் ஸ்பைஸ் மொபைல் எம் 5396, பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தேடுபவர்களின் முதல் தேர்வாக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இது தரும் கூடுதல் வசதிகளே ஆகும். 

பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைலில், எண், எழுத்துக்கள் அடங்கிய கீ போர்டு தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல எல்.சி.டி. திரை கிடைக்கிறது. 

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி போர்ட் ஆகியவை நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. 

இதன் 1.3 எம்பி திறன் கொண்ட கேமராவில், வீடியோ திறனும் உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதி இதன் சிறப்பாகும். எப்.எம். ரேடியோ மற்றும் எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. டார்ச் லைட் மற்றும் இந்தி மொழி சப்போர்ட் கிடைக்கிறது. 

இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் மூலம் தொடர்ந்து 6 மணி நேரம் பேச முடியும். மின் சக்தி 168 மணி நேரம் தங்குகிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 1,699.


விண்டோஸ் 8 - சில குறிப்புகள்போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம். 

இந்த அப்ளிகேஷன் சில அடிப்படையான வேலைகளை மட்டுமே மேற்கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இந்த அப்ளிகேஷனைத் திறந்து, நாம் காட்ட விரும்பும் போட்டோ பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் அதனை நம் விருப்பப்படி காட்டுகிறோம்.

இதற்கும் மேலாக போட்டோக்களின் மீது வேலைகளை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் இலவச அப்ளிகேஷன் புரோகிராமாக Windows Photo Gallery என ஒன்றைத் தந்துள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நாம் பல இலக்குகளுடன் கையாளலாம். 

இதனைப் பெற, மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று Windows Photo Gallery என டைப் செய்து தேடவும். இந்த சாப்ட்வேர் தொகுப்பு, Windows Essentials 2012 என்ற கூட்டுத் தொகுப்பில் ஒரு புரோகிராம் ஆகும். நம் பட பைல்களைத் பெற்று மற்றும் அனுப்பும் வேலையை இந்த சாப்ட்வேர் தானாகவே மேற்கொள்ளும் வகையில் அமைத்திடலாம். 

நம் டிஜிட்டல் கேமரா குறித்த சில தகவல்களைத் தந்து இதனை செட் செய்திட வேண்டும். போட்டோக்களை அவை எடுக்கப்பட்ட நாள், பைல் அளவு, கேமரா மற்றும் பல பண்பு வகைகளின் அடிப்படையில் பிரித்து அமைக்கலாம். மேலும் ஒவ்வொரு பைலுக்கும், நாம் விரும்பும் தகவல்களை இணைக்கலாம். 

தலைப்பு கொடுக்கலாம்; அவற்றை அடையாளம் காணும் சொற்களைத் (tags) தரலாம். இவ்வாறு தகவல்களை இணைத்துவிட்ட பின்னர், அவற்றை வகைப்படுத்தித் தேடுவது எளிதாகிவிடும். 

இதே சாப்ட்வேர் தொகுப்பு மூலம் படங்களின் அளவை மாற்றலாம். டிஜிட்டல் கேமராக்களில் படங்களை எடுக்கையில் கண்களில் அமையும் சிகப்பு புள்ளிகளை நீக்கலாம். படங்களில் சில டச் அப் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகைகளில், நம் படங்களை நாம் கையாள ஒரு எளிதான சாப்ட்வேர் தொகுப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Photo Gallery நமக்குக் கிடைத்துள்ளது.


லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்க: 

விண்டோஸ் 8 அதன் லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடக்கமே மிக அழகாக நம்மைக் கவர்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்திட வேண்டும் என நமக்கு எதுவும் தெரியாமல் அதனையே பார்க்கிறோம். 

என்ன செய்யலாம்? ஸ்பேஸ் பாரினைத் தட்டுங்கள்; மவுஸ் வீலைச் சற்று சுழற்றுங்கள் அல்லது டச் ஸ்கிரீன் என்றால், கீழிருந்து மேலாக விரலால் ஸ்வைப் செய்திடுங்கள். இந்த வேலைகளை மேற்கொண்டால், நமக்கு வழக்கம் போலக் காட்டப்படும் லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். 

இங்கு நீங்கள் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திடுகையில் அமைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை அமைத்து, கம்ப்யூட்டரில் உங்கள் பணியைத் தொடங்குங்கள்.


20 நொடியில் மொபைல் ரீசார்ஜ்
அண்மையில் இன்டெல் நிறுவனம், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கியபோது, ஒருவரின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இன்றைய சூழ்நிலையில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களை, அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாவதால், நம் வேலை நேரம் பாதிக்கப்படுகிறது. 

இதனைப் பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு, 18 வயதே நிரம்பிய, கலிபோர்னியாவில் லின்புரூக் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஈஷா கரே என்னும் மாணவி, புதிய கண்டுபிடிப்பாக சாதனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன் உட்பட, எந்த டிஜிட்டல் சாதனத்தையும் 20 நொடிகளில் சார்ஜ் செய்துவிடலாம். 

ஒரு சிறிய சூப்பர் கெபாசிட்டர் ஒன்றை இவர் வடிவமைத்துள்ளார். இதனை செல் போன் பேட்டரி ஒன்றின் உள்ளாக பதித்துவிடலாம். இதன் மூலம், மிக மிக வேகமாக, மின் சக்தி பேட்டரிக்குச் செல்கிறது. இதனால் 20 முதல் 30 நொடிகளில், பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது. 

வழக்கமாக ரீ சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகள், ஏறத்தாழ ஆயிரம் முறை ரீசார்ஜ் செய்தவுடன் தங்களின் திறனை இழந்துவிடுகின்றன. ஆனால், ஈஷா கரே வடிவமைத்துள்ள கெபாசிட்டர், பத்தாயிரம் முறைக்கும் மேலாக, சார்ஜ் செய்வதனை அனுமதிக்கிறது. 

ஈஷா கரே சிறப்பு அனுமதி பெற்று, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின், கெமிஸ்ட்ரி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி சோதனைச் சாலையில் இந்த ஆய்வினை மேற்கொண்டார். இவர் வடிவமைத்துள்ள இந்த சாதனம், நெகிழ்வாக இருப்பதனால், சுருட்டி எடுத்துச் செல்லவும் வழி தருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இன்டெல் நிறுவனம், இரண்டு இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு விருதினை வழங்கி உயர் நிலை ஆய்வுக்கு வழி அமைக்கிறது. அந்த வகையில், ஈஷா கரே 50 ஆயிரம் டாலர் பரிசாகப் பெறுகிறார். அத்துடன் ஹார்வேர்ட் பல்கலையில் தன் ஆய்வினைத் தொடர இருக்கிறார்.

நம் வாழ்க்கை முறையை மாற்ற இருக்கும் இது போன்ற கண்டுபிடிப்புகள், தகவல் தொழில் நுட்பத்தின் சரித்திரத்தில் நிச்சயம் இடம் பெறும்.


நோக்கியா லூமியா 920 விலை குறைப்பு


நோக்கியா நிறுவனம் தன் பெருமைக்குரிய தயாரிப்பு என்று எண்ணிய லூமியா 920 மொபைல் போன், தொடக்கத்திலிருந்து ரூ. 36 ஆயிரம் முதல் ரூ. 38 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

மற்ற லூமியா மாடல்கள் விலை குறைக்கப்பட்ட போது, இந்த போனின் விலை குறைக்கப்படவில்லை. 

ஆனால், மொபைல் சந்தையில், எச்.டி.சி. ஒன், சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆகியன நோக்கியா லூமியா 920 விலைக்குப் போட்டியாக விலையிடப்பட்டதால், வேறு வழியின்றி, நோக்கியா இந்தியா நிறுவனமும், இதன் விலையை ரூ.32,639 எனக் குறைத்து தன் இணைய தளத்தில் அறிவித்துள்ளது. 

மற்ற இடங்களில், வேறு விற்பனை நிலையங்களில், இன்னும் சற்று குறைவாகக் கிடைக்கலாம்.

8.7 மெகா பிக்ஸெல் பியூர் வியூ கேமரா, வயர்லெஸ் சார்ஜர் என்ற புதிய நவீன வசதிகளுடன் இந்த போன் இனி வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கலாம்.


Fn key மற்றும் Function Keys


என்ன வேடிக்கை? இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும். 

நோட்புக் கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஒரு வகையான சிறப்பு செயல்பாடுகளைத் தரும் கீ தான் Fn key (FuNction key) கீ. வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் கீ போர்டில் மேலாகத் தரப்பட்டுள்ளவை Function Keys (typically F1 F12 on a regular desktop keyboard) ஆகும். 

Fn key என்பது ஒருவகையான வரையறை செய்திடும் மாடிபையர் கீ ஆகும். இது கீ போர்ட் செயல்பாட்டில், இரண்டாம் நிலை செயல்பாட்டினைத் தரும். நோட்புக் கம்ப்யூட்டரில், கீ போர்டில் மேலாக, சில அடையாளக் குறியீடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம். 

இவை சிஸ்டம் செயல்பாடுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, 1 key + FN என்ற கீகள் மானிட்டர் டிஸ்பிளே ஒளியினைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 

வை–பி இயக்கத்தினை தொடங்கவும், நிறுத்தி வைக்கவும் 5 key + FN கீகள் பயன்படுத்தப்படுகின்றன.

Function Keys என்பவை F1 முதல் F12 வரை தரப்பட்டுள்ளன. இவை ஹார்ட்வேர் கீகளாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அல்லது அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், வரையறை செய்யப்பட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. 

எடுத்துக்காட்டாக, F1 ஹெல்ப் பக்கங்களைக் காட்டும். F5 இயக்கத்தினை ரெப்ரெஷ் செய்திடும். 

இந்த பங்சன் கீகளை மற்ற ஆல்ட், கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளுடன் இணைத்து வேறு சில செயல்பாடுகள் மேற்கொள்ள பயன்படுத்தலாம்.


சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ்


சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இது அதன் மூல மொபைல் போனைக் காட்டிலும் சற்று கரடு முரடான தோற்றத்துடன் உள்ளது. தூசு எதனையும் உள்ளே விடாது. அது மட்டுமின்றி, மூன்று அடி ஆழ நீரில், 30 நிமிடங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். 

நீர் உள்ளே புகாது. இதன் மூலம் நீருக்கடியில் போட்டோ எடுப்பவர்களுக்கு இந்த மாடல் சாம்சங் போன், ஒரு கூடுதல் வசதி அளிப்பதாகவே உள்ளது. சில மாற்றங்களும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

5 அங்குல சூப்பர் AMOLED Plus டிஸ்பிளேக்குப் பதிலாக, எச்.டி. டி.எப்.டி., எல்.சி.டி. பேனல் தரப்பட்டுள்ளது. ஆனால், அதே குவாட் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. 

ராம் 2 ஜிபி, 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஏர் ஜெஸ்ச்சர் போன்ற எஸ் 4 வசதிகள் அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. இது வெளியாகும் நாள் மற்றும் விலை குறித்த தகவல்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.


கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்


இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். 

மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. 

முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். 

1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

2. Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

3. /<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும். 

4. k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.

5. j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.

6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.

7. p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.

8. o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும். 

9. u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

10. e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.

11. s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.

12. !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.

13. r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.

14. a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்.

15. f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும். 

16. <Esc>: ர்சர் ஏதேனும் இன்புட் பீல்டில் இருந்தால், அதிலிருந்து அதனை வெளியே கொண்டு வரும்.

17. <Ctrl> + s: ஒரு மெசேஜ் கம்போஸ் செய்கையில் அப்போதைய டெக்ஸ்ட்டை ஒரு ட்ராப்ட்டாக சேவ் செய்திடும். இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்துகையில், கர்சர் மெசேஜ் விண்டோவினுள் இருக்க வேண்டும். மெசேஜ் அமைக்கும் கட்டம் To, CC, BCC, அல்லது Subject ஆகிய பீல்டுகளில் ஒன்றில் இருக்க வேண்டும். 

18. # (Delete): குறிப்பிட்டவையை அழிக்கும். 

19. l (label): லேபிள் கான்வெர்சேஷன் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.

20. v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.

21. <Shift> + i: மெசேஜ் ஒன்றை படித்ததாக (Read) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.

22. <Shift> + u: மெசேஜ் ஒன்றை படிக்காததாக (Unread) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.

23. [: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல

24. ]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல

25. z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.

26. <Shift> + n: புதிய மெசேஜ் வந்திருந்தால் உங்கள் கான்வெர்சேஷனை அப்டேட் செய்திடும்.

27. q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.

28. y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால், ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.

29. (.) :புள்ளி அடையாளம்: ‘More Actions’ ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும். 30. ?:கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.


இந்தியாவில் அமேசான் இந்தியா வர்த்தக தளம்


இணைய தளம் வழி சில்லரை வர்த்தகத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வரும் அமேஸான் டாட் காம், இந்தியாவில் தன் பிரிவினைத் தொடங்கி உள்ளது (https://www.amazon.in/). 

தொடக்கத்தில் 70 லட்சம் நூல்கள், 12 ஆயிரம் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விற்பனைக்கு இருந்தன. தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள், கேமராக்கள் அடுத்து வர இருக்கின்றன.

ஏற்கனவே, இணையதளம் வழி வர்த்தகத்தில் இயங்கி வரும் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு இது அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வரும் Flipkart, Snapdeal (இபே நிறுவனம் இதில் அதிக முதலீடு செய்துள்ளது), Jabong and Indiatimes Shopping போன்ற தளங்கள், சரியான செயல்முறை இன்றி தயங்கி வருகின்றன. 

சென்ற சில வாரங்களாகத் தங்கள் செலவினத்தைக் கட்டுப்படுத்த, Flipkart மற்றும் Jabong ஆகிய இரு தளங்களின் நிறுவனங்களும், தங்களின் ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. அமேஸான் இந்தியா ப்ளிப் கார்ட் நிறுவனத்திற்குத் தான் அதிக சவாலைத் தரும். 

தற்போது இணையவெளி வழியாக, அதிக நூல்களை விற்பனை செய்வது ப்ளிப் கார்ட் நிறுவனம் மட்டுமே. அமேஸான் இந்தியா, அதிக எண்ணிக்கையில் நூல்கள், குறைந்த விலை மற்றும் உடனடி டெலிவரி என்ற வகையில், மேலாதிக்கம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. 

இந்திய அரசின் சட்டவிதிகள், வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முழுமையாக முதலீடு செய்து, இணையதளம் வழியாக, சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை. எனவே, அமேஸான் டாட் காம் தான் எதனையும் கொள்முதல் செய்வதோ, விற்பனை செய்வதோ இல்லை என்கிற ரீதியில் தந்திரத்தைக் கையாள்கிறது. 

பொருட்களை, தன் இணையதளத்தில் பதிந்து, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே விற்பனை செய்வதாகக் காட் டுகிறது. ஏற்கனவே பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுக் காட்டும் என்ற வர்த்தக இணைய தளத்தினை அமேஸான் டாட் காம் நடத்தி வருகிறது. அதுவும் புதிய வர்த்தக தளத்துடன் இயங்கும்.

இ–காமர்ஸ் எனப்படும், இணைய வர்த்தகத்தில் அமேஸான் இந்தியா டாட் காம், நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இன்டர்நெட் பயன்படுத்துவோர் ஏறத்தாழ 15 கோடியாக இந்தியாவில் உள்ளனர். ஆனால், இணைய தளச் சில்லரை வர்த்தகத்தைப் பயன்படுத்துவோர் மிக மிகக் குறைவே. 

எனவே, அமேஸான் இந்தியா, தன் வர்த்தக வழிகள் மூலமாக நிச்சயம் வெற்றி பெறும். குறிப்பாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இளைஞர்களை அமேஸான் இந்தியா இலக்கு வைத்துள்ளது. அமேஸான் இந்தியா, இந்திய இணைய வெளியில் பெரிய அளவில் நூல்களை விற்பனை செய்திடும் தளத்தினை முதன்மையாக அமைக்க இலக்கு வைக்கிறது. 

ஆனால், நூல்களை வாங்குவதில், இந்திய மக்களுக்கு ஆர்வமில்லை என்பதனையும் அமேஸான் உணர்ந் துள்ளது. மற்ற ஒன்பது நாடுகளில் நூல்கள் விற்பனை மூலமே அமேஸான் அதிக வருமானம் ஈட்டி வருகிறது. ஆனால், இந்தியாவில் அது நடக்காது என்றே அனைவரும் கருதுகின்றனர்.

சென்ற 2013 இறுதியில், இணைய தள வர்த்தகம் ரூ. 8,400 கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது 100 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமேஸான் இந்தியாவின் பங்கு அதிக அளவில் இருக்கும். கீழே தரப்பட்டுள்ள இதன் சிறப்பம்சங்கள் இதற்கு நிச்சயம் துணையாக இருக்கும். 

உலக அளவில் 20 கோடி வாடிக்கையாளர்களை அமேஸான் கொண்டுள்ளது. இதன் தளங்களில், தங்கள் பொருட்களை விற்பனை செய்திடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லட்சம். உலக அளவில் இதன் மொத்த வருமானம் 6,100 கோடி டாலர். இதன் வர்த்தகப் பங்கு 40 சதவீதம். தற்போது 10 நாடுகளில் இதன் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. 178 நாடுகளில் இதன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொத்த வர்த்தகமும் 30 பிரிவுகளில் பட்டியலிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் கீழ்க்காணும் பொருட்களில் இப்போது இணைய தள வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

விமானப் பயணச் சீட்டு, ட்ரெயின் பயணச் சீட்டு பதிவு, சுற்றுலா மற்றும் விடுதி பதிவு செய்தல், திருமண வரன் பார்த்தல், வேலைக்குப் பதிந்து வைத்தல், ஆடைகள், சார்ந்த சாதனங்கள், ஷூக்கள் விற்பனை, கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், கடிகாரங்கள், அழகு சாதனப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கான டிக்கட் பதிவு, நூல்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், பெண்களுக்கான உடல் நலம் பராமரிக்கும் சாதனங்கள், குழந்தைகளுக்கான சிறிய அளவிலான ஆடைகள் மற்றும் சார்ந்த சாதனங்கள்.

வரும் காலங்களில் நுகர்@வாருக்கான அனைத்துப் பொருட்களும் இணைய தளங்கள் மூலம் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.


சாம்சங் காலக்ஸி மினி எஸ் 4 வெளியாகிறது

சாம்சங் நிறுவனத்தின் நவீன காலக்ஸி எஸ் 4 மொபைல் போனை ஆசையுடன் பார்த்து, பின் விலை அதிகம் என்பதால், விட்டுவிட்டுச் சென்றவர்களுக்காக, சாம்சங் நிறுவனம் அதன் மினி மாடல் ஒன்றை வெளியிடுகிறது. 

இதன் அம்சங்களாவன: 4.3 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே திரை (960 × 540 பிக்ஸெல்கள்) 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம், டூயல் சிம் (விருப்பத்தின் பேரில்) 8 எம்.பி. பின்புறக் கேமரா, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்து 1.9 எம்.பி. முன்புறக் கேமரா, தடிமன் 8.94 மிமீ, எடை 107 கிராம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1.5 ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜி, 3ஜி, வை–பி, புளுடூத் 4.0, என்.எப்.சி. 1900 mAh திறன் கொண்ட பேட்டரி வழக்கம் போல ஒயிட் ப்ராஸ்ட் மற்றும் ப்ளாக் மிஸ்ட் வண்ணங்களில் இவை கிடைக்கும். 

வரும் ஜூன் 20ல் லண்டனில் நடைபெற இருக்கும் விழாவில் மேலும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்


நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். 

சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம். 

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.


1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): 

இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.


2. ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor):

கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது. 

ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம். 

எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது. 

டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.


3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): 

பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம். 

மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம்.

 அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம். இவை போன்ற டூல்ஸ்களுடன், கீழ்க்கண்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

1. Task Scheduler

காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும். 


2. Event Viewer: 

சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.


3. Shared Folders: 

உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.


4. Device Manager: 

உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம். 


5. Disk Management: 

டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.


6. Services: 

விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.


4. User Accounts: 

விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும். 


5. Disk Cleanup: 

மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும். 

PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது. 

நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம். 


6. ரிஜிஸ்ட்ரி எடிட்டர்: 

நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.


7. எம்.எஸ். கான்பிக்: 

மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.


8. System Information: 

இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வாடிக்கையாளர்கள் வளைத்த விண்டோஸ் 8.1


விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். 

விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் பின்னர், அவற்றை மீண்டும் தரும் சிந்தனைப் போக்கினைக் கடைப்பிடித்தது. இறுதியில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களுக்கேற்ப விண்டோஸ் 8 வளைக்கப்பட்டு, தற்போது விண்டோஸ் 8.1 பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதியதாக வந்துள்ள சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

ஸ்டார்ட் பட்டன் மட்டுமின்றி, இன்னும் பல சிறப்பம்சங்களும், இந்த மேம்பாட்டுப் பதிப்பில் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் பட்டன் தான் திரும்ப கிடைத்துள்ளது. 

ஸ்டார்ட் மெனு அல்ல. பல அப்ளிகேஷன்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் தருவதற்காக, புதியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்பட்டுள்ளது. திரையில் காட்டப்படும் கீ போர்டில், புதியதாகச் சில மாற்றங்கள் கிடைத்துள்ளன. பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் உள்ளன.

தற்போது முழுத் திரையுடன் கூடிய ஒரு இமேஜாகக் கிடைக்கும் லாக் ஸ்கிரீன், இனி க்ளவ்ட் இணைந்த போட்டோ பிரேமாகத் தோற்றமளிக்கும். இப்போதைய ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் வசத்திற்கு மாற்றலாம். இதில் புதியதாக இரண்டு டைல்ஸ் (ஆக மொத்தம் நான்கு) கிடைக்கின்றன. இவற்றின் மூலம் All Apps திரையினைப் பயன்படுத்தலாம். 

மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட விண்டோஸ் 8 சாதனங்களை, ஸ்டார்ட் லே அவுட் மற்றும் பதியப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் வலம் வரலாம்.

இதில் Metrostyle PC Settings மிக அழகாகவும் நேர்த்தியாகவும் விரிவாக்கம் பெற்றுள்ளது. முன்பு டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலில் கிடைத்த அனைத்து வசதிகளும், விண்டோஸ் அமைப்பு முறைகளும், வழிகளும் கிடைக்கின்றன. 
விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முன்பு Search charm கிளிக் செய்தவுடன், எவ்வாறெல்லாம் தேடலாம் என்ற விருப்பமுறைகள் பட்டியலிடப்படும். ஒரு நேரத்தில், ஒரே ஒரு விருப்பமுறையினை இயக்கிப் பார்க்கலாம். இப்போது, இதற்குப் பதிலாக, ஒரே ஒரு சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. தரப்படும் தேடல் முடிவுகள் பட்டியலில், அப்ளிகேஷன்கள், பைல்கள், செட்டிங்ஸ் அமைப்புகள், இணையத்திலிருந்து தகவல், விக்கிபீடியா போன்ற தளத்தகவல்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.

திரையில் காட்டப்படும் தொடுதிரை கீ போர்டில் கிடைக்கும் autosuggest வசதி சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய அசைவுகளை ஏற்றுக் கொள்ளும் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. கீ போர்ட் லே அவுட் மாற்றாமலேயே, எண்களையும், அடையாளக் குறியீடுகளையும் (symbols) இடுகை செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து, பதிந்த புரோகிராம்கள், தாமாக அப்டேட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தின், பின்புலச் செயல்பாடாக சிஸ்டம் பைல்களுக்கு இந்த வசதி இருந்து வந்தது. தற்போது, விண்டோஸ் ஸ்டோர் புரோகிராம்களுக்கும் இது தரப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாமாக இதனை மேற்கொள்ள வேண்டியதிருந்தது.

உங்கள் திரையின் ரெசல்யூசனுக்கேற்றபடி, திரையில் நான்கு விண்டோஸ் அப்ளிகேஷன்களைக் கட்டம் கட்டி இயக்கலாம். அதே போல, தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இயக்கமும் நீடிக்கிறது. திறக்கப்பட்ட ஒவ்வொரு அப்ளிகேஷன் காட்டப்படும் இடத்தினைச் சுருக்கி வைக்கலாம். ஒரே அப்ளி கேஷனை, இரண்டு நிலைகளில், இரண்டு விண்டோக்களில் இயக்கலாம்.

இதுவரை விண்டோஸ் 8 இயக்கத்தில், பயனாளர்கள், தங்களை அறியாமலேயே, டைல்ஸ்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். இது சற்று எரிச்சலைக் கொடுத்தது. இனி, விண்டோஸ் 8.1 பதிப்பில், டைல்ஸ் மீது விரல் அல்லது மவுஸ் கர்சர் அழுத்தி, இழுக்க வேண்டும். அல்லது, டெஸ்க்டாப் வழக்கப்படி, ஐகான் அல்லது டைல் மீது ரைட் கிளிக் செய்து, விருப்பப்படும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவினை இணைத்துச் செயல்படுத்தி மேம்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு கூறாகவே தந்துள்ளனர். ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லாமல், நேரடியாகவே டெஸ்க்டாப்பில் இயக்கத்தினைத் தொடங்கும் வழி தரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் வகையில், இயற்கையான ஒரு மாற்றமாக இது தரப்படுகிறது. 

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பட்டனை அப்படியே தராமல், இப்போது அதே லைவ் டைல்ஸ் இடைமுகத்தில் சிஸ்டம் தொடங்குகிறது. ஆனால், பயனாளர்கள், “All Apps” வியூ கிடைக்கும் வகையில், ஒரு பட்டனை செட் செய்திடலாம். இங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் ஐகான்களை, அகரவரிசைப்படியோ, பதிவு செய்யப்பட்ட நாட்களின் வரிசைப்படியோ, அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் அடிப்படையிலோ, புரோகிராம் வகைகளின் படியோ அமைத்துக் கொள்ளலாம். 

டெஸ்க்டாப் அல்லது ஆல் அப்ளிகேஷன்ஸ் என்ற இரு வகைகளில் எது வேண்டும் என பயனாளர்களே தீர்மானித்து இயக்கத்தைத் தொடங்கலாம். டெஸ்க்டாப்பின் முக்கிய அம்சமான, பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பல மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. 

இந்த மேம்படுத்தல்களுடன் கூடிய பதிப்பு 8.1 மக்களுக்கு ஜூன் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதனால், விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், பழைய பயன்பாட்டின் அடிப்படையில் இணைக்கப்பட்ட புதிய மற்றங்களினால் கவரப்பட்டு, விண்டோஸ் 8க்கு மாறுவார்களா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


குழந்தைகளுக்கான இணையத் தேடல் இஞ்சின் Kidrexஉங்கள் குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? 

அண்மையில், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய தேடுதல் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் இணைய முகவரி http://www.kidrex.org/. இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம். 

இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது. 

குழந்தைகள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. இதில் உள்ள Parents பிரிவில் நாம் இத்தளத்தின் இயங்கு தன்மை குறித்து அறியலாம். 

மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பல குறிப்புகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தினை ஹோம் பேஜாக மாற்றுவதற்கும் வழி தரப்பட்டுள்ளது. 

இதில் தந்துள்ள குறிப்புகள் மற்றும் வழி காட்டுதல்களைப் பின்பற்றி செட் செய்துவிட்டால், உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினைப் பயன்படுத்தி, அவர்கள் தேடலை மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.

மற்ற பிற தேடுதலுக்கான தளங்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக வைத்துள்ளது. 

எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் dinosaurs குறித்து அறிய, அந்த சொல்லை, இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டியவுடன், குழந்தைகளை மனதில் கொண்டு டினோசார் குறித்து தகவல்களைத் தரும் தளங்களின் பட்டியல் மட்டுமே காட்டப்படும். 

இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.


யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை


பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம். 

ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம். 

இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம். 

(இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.) 
இதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும். 

தேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.

1. மேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும். 

2. பின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

3. அடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.

4. diskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம்.

5. அடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும். 

6. இந்தக் கட்டளையின் விளைவாகக் காட்டப்படும் தகவல்களிலிருந்து, நமக்குத் தேவைப்படும் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் 8 ஜிபி ப்ளஷ் ட்ரைவ் பயன்படுத்தியதால், 7399 எம்பி என்ற டிஸ்க்கினைத் தேர்ந்தெடுத்தேன்.(இங்கு சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறுதலாக, பெர்சனல் கம்ப்யூட்டரின் ட்ரைவினைத் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் உள்ள டேட்டா அழிவதுடன், விபரீதமான விளைவுகளும் ஏற்படலாம்.)

7. அடுத்து select volume என்ற கட்டளையைத் தரவும். இந்தக் கட்டளையினை, ட்ரைவ் ஒன்றின் எண் பெயரோடு தர வேண்டும். கட்டளைக்கான முடிவுகளில், முதல் காலத்தில் காட்டப்படும் எண் இதுதான். சரியான எண்ணைத் தரவும். இப்போது நாம் சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து விட்டதால், Clean கட்டளையினைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை, அந்த ட்ரைவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிடும். நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன் ஸ்ட்ரக்சர் (Partition Structure) அமைக்க ஏதுவாக, ட்ரைவினை வடிவமைக்கும்.

8. அடுத்து நாம் முதன்மைப் பிரிவினை (Primary Partition) அமைக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து பூட் டிஸ்க்குகளிலும், முதன்மை பார்ட்டிஷன் இருக்க வேண்டும். create partition primary என்ற கட்டளையைத் தரவும். 

9. ஒரு பூட் டிஸ்க்கின் இதயம் என அதன் பூட் செக்டாரைக் (Boot Sector) கூறலாம். இந்த பூட் செக்டார், ட்ரைவின் பிரைமரி பார்ட்டிஷனில் தான் எழுதப்பட வேண்டும் என்பதால், அது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். active என்ற கட்டளை கொடுத்து, பார்ட்டிஷன் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டவும்.

10. அடுத்து நாம் குறிப்பிட்ட டிஸ்க்கினை பார்மட் (Format) செய்தாக வேண்டும். விண்டோஸ் தற்போது NTFS என்ற வகை டிஸ்க் பார்ட்டிஷனை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. எனவே format fs=NTFS என்ற கட்டளையைக் கொடுக்கவும். பார்மட் செயல்பாடு முடிந்தவுடன், கமாண்ட் விண்டோவினை மூடவும்.

11. அடுத்து மிக முக்கியமான செயல்பாட்டிற்குச் செல்லப் போகிறோம். ஏற்கனவே எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐ.எஸ்.ஓ. பைலின் Boot போல்டருக்குச் செல்லவும். அடுத்து காலியாக உள்ள இடத்தில், shift+right கிளிக் செய்து, Open command window here என்று இருப்பதில் அடுத்து கிளிக் செய்திடவும். 

12. அடுத்து கமாண்ட் விண்டோவில், bootsect.exe/nt60 என்ற கட்டளையைச் சரியான ட்ரைவ் எழுத்துடன் அமைக்கவும். அதாவது, யு.எஸ்.பி. ட்ரைவ் காட்டப்படும் ட்ரைவ் எழுத்து. என்னுடைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. ட்ரைவ் J: ஆகக் காட்டப்படுவதால், நான் அந்த எழுத்தினையே இணைத்தேன். நீங்கள், உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற எழுத்தினை இணைத்து அமைக்கவும்.

13. அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், எந்த ட்ரைவில் ஐ.எஸ்.ஓ. பைல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பதியப்பட்டதோ, அந்த ட்ரைவில் உள்ள ரூட் (root) போல்டருக்குச் செல்லவும். இங்கு boot, efi, sources, support, upgrade என்பன போன்ற போல்டர்கள் இருக்கும். இங்கு தான் bootmgr, autorun.inf ஆகிய பைல்களும் இருக்கும். இந்த போல்டர் மற்றும் பைல்கள் அனைத்தையும் காப்பி செய்து, பூட் யு.எஸ்.பி. ட்ரைவில் பதியவும். 

அவ்வளவுதான்! இப்போது உங்களிடம் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திடும் வகையிலான யு.எஸ்.பி. ட்ரைவ் தயாராகி உள்ளது. இதனை சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ள படி நிலைகளின் படி சரியாகச் செயல்பட்டு, இந்த பூட்டபிள் டிஸ்க்கினைத் தயார் செய்திட வேண்டும்.


மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட


இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள். 

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை. 

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள். 

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது. 

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.


1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள். 

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது. 

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும். 

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது. 


2. மால்வேர் தான் என் உறுதி செய்திடும் வழிகள்: 

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும். 

அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும். 

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது. 


3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்: 

வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும். 

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும். 


4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை: 

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக: 

சேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது. 

இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும். 

அப்போது, கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன், அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும். 

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில், மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால், சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.) பின்னர், பிட் டிபண்டர் (Bitdefender http://www.bitdefender.com/scanner/online/free.html) போன்ற,நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும். 

மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் (http://www.eset.com/us/onlinescanner) பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது. 

ஸ்கேன் தொடங்கும் முன்னர், பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும். 

இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே செயல்படும் புரோகிராம் அல்ல. இதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து, ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம். 

இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன், Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும். 


7. இன்னொரு ஸ்கேனிங்: 

முதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை. 


8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்: 

கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும். 

அடுத்து, அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம். 

எதனைப் பதிவு செய்தாலும், தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன், தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால், அனைத்திற்கும் தீர்வு உண்டு.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes