பேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்


சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். 

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. 

இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. 

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது. 

தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.


உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற


கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். 

இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com.

இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். 

தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 

உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 

கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.


தேடுதலில் சில கூகுள் வழிகள்


கூகுள் தேடுதளம் தரும் நவீன வசதிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவ்வளவாகப் பலரும் அறியாத அல்லது அடிக்கடி பயன்படுத்தாத சில தேடுதல் வழிகளும், அவற்றை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு காணலாம். 


1.கூகுள் குரூப்ஸ் தளங்களிலிருந்து வரையறைகளுடன் தேடல்

author: குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து ஒரு மின் அஞ்சல் குழுவில் உள்ள தகவல்கள் அடங்கிய செய்திகளைப் பெற – fried chicken author:lakshmi 

author:manjula (லஷ்மி மஞ்சுளா என்பவர் எழுதிய fried chicken குறித்த கட்டுரைகள்)

group: குறிப்பிட்ட நியூஸ் குரூப்பில் இருந்து குரூப் மெசேஜ் பெற – kalki novels 

group:tamilnovels.books (கல்கியின் நாவல்கள் குறித்து tamilnovels.books என்ற குரூப்பில் இருந்து தகவல்கள் பெற) 

insubject:சப்ஜெக்ட் லைன் கட்டத்தில் குறிப்பிட்ட பொருள் குறித்து எழுதப்பட்ட அஞ்சல் செய்திகளைப் பெற – insubject:"koodangulam" (சப்ஜெக்ட் கட்டத்தில் கூடங்குளம் என்ற சொல் கொண்ட மின் அஞ்சல்களைப் பெற) 

location: குறிப்பிட்ட இடம் சார்ந்த தளங்களிலிருந்து செய்தி மற்றும் தகவல்கள் பெற – சர்ச் பாக்ஸில் Obama location: தடு (ஒபாமா குறித்த பிரிட்டிஷ் செய்தி தகவல்களைப் பெற)

source:குறிப்பிட்ட மூல தரவுகளிலிருந்து, தேடும் தகவல் குறித்த செய்திகளைப் பெற – peace source:washington_post அமைதி குறித்த கட்டுரைகளை washington_post என்ற அமெரிக்க செய்தித்தாள் தரவுக் கோப்பிலிருந்து பெற


2. சில அடிப்படை தேடல்களின் எடுத்துக் காட்டுகள்:

முதலில் தேடல் சொற்களும், அடுத்து அவை எந்த பக்கங்களைக் காட்டும் எனவும் தரப்பட்டுள்ளது.

malware and taiwan malware மற்றும் taiwan ஆகிய சொற்கள் கொண்ட இணையப் பக்கங்கள். 

recycled plastic OR iron: மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது இரும்பு குறித்த தகவல்கள்

"I have a dream" மிகச் சரியாக I have a dream என டெக்ஸ்ட் கொண்ட இணையப் பக்கங்களின் பட்டியல்.

salsa dance salsa என்ற சொல், ஆனால், அவற்றில் dance என்ற சொல் இல்லாத இணையப் பக்கங்கள். 

castle ~glossary : castle என்ற சொல் உள்ள சொல் களஞ்சியம், அகராதி, சொல் கூறு மற்றும் பிற தகவல்கள் உள்ள இணையப் பக்கம் அறிய.

define:imbroglio: இணையப் பக்கங்களிலிருந்து imbroglio என்ற சொல் குறித்த விளக்கங்கள். 


கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய


நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். 

அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். 

உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. 

இந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது. 

ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம். 

ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும். 

இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம். இதனைப் பெறhttp://download.cnet.com/WinDirStat/30002248_410614593.html?tag=dropDownForm;productListing என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


வெளியானது நோக்கியா ஆஷா 501


உலக அளவில் புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வெளியிடப்படுகையில், முன்னணி நிறுவனங்கள், அமெரிக்கா, தைவான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களையே தேர்ந்தெடுப்பார்கள். 

ஆனால், நோக்கியா நிறுவனம், தன் ஆஷா 501 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இந்தியாவின் தலைநகரைத் தேர்ந்தெடுத்து சென்ற வாரம், டில்லியில், அதனை ஒரு விழாவாக நடத்தியது.

இந்த போனை வடிவமைக்க இந்தியா தான் அடிப்படையாக இருந்தது என்று இவ்விழாவில் நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஈலாப் தெரிவித்தார். மொபைல் போன் பயன்பாட்டில் பல மாடல்களை உருவாக்க இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களே அடிப்படையாக அமைந்துள்ளன என்றும் கூறினார்.

"ஆஷா' என்ற இந்தி சொல்லுக்கு நம்பிக்கை என்று பொருள். சரிந்து வரும் தன் விற்பனைச் சந்தைப் பங்கினை, ஆஷா வரிசை போன்கள் வழியாகக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் நோக்கியா இறங்கியுள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில், இரண்டு கோடி போன்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என இவ்விழாவில் தெரிவிக்கப்பட்டது. 

அடிப்படை வசதிகள் கொண்ட போனிலிருந்து, அடுத்த நிலையில், இன்டர்நெட் உட்பட சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் தற்போது நாடுகின்றனர். ஸ்மார்ட் போன் வகைகளை அறிமுகப்படுத்த தவறியதால் தான், நோக்கியா தன் 14 ஆண்டுகால முதல் இடத்தினை சாம்சங் வசம் இழந்தது. இதனை இலக்காகக் கொண்டே, சாம்சங் தன் ரெக்ஸ் வரிசை போன்களை அண்மையில் வெளியிட்டு வெற்றியும் பெற்றது.

அதே போல, நோக்கியாவும் தன் ஆஷா வரிசை போன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய போனில், டச் ஸ்கிரீன் இயக்கமும், பிரபலமான சமூக வலைத் தளங்களுக்கான அப்ளிகேஷன்களும் தரப்பட்டுள்ளன. இது ஒரு 2ஜி போன். வை-பி இயக்கம் கிடைக்கிறது. 

இரண்டு சிம்களை இயக்குகிறது. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர் இதில் பதியப்பட்டுள்ளது. 4 ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி தரப்படுகிறது. இதன் சிப் செட் இயக்க வேகம் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்திற்கும் சற்று குறைவாகவே இருக்கும். இதன் கேமரா 3.2 எம்பி திறன் கொண்டதாக உள்ளது. இந்த போனின் விலை ரூ.5,300 என்ற அளவில் அமையும். 

இந்த மொபைல் போனின் சிறப்பு இதன் பேட்டரி. 48 நாட்களுக்கு இதில் சேமிக்கப்படும் மின்சக்தி தங்குகிறது. இதனைப் பயன்படுத்தி 17 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். மின் இணைப்பு அடிக்கடி பெறமுடியாமல் இருக்கும் இந்திய மக்களுக்கு இது ஒரு சிறப்பு வசதி எனக் கொள்ளலாம். 

ஜூன் மாதம் முதல் இது கடைகளில் கிடைக்கும். 90 நாடுகளில், 60 மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்த போன் விற்பனை செய்யப்படும்.


பி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா?


இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். 

இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது. மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? சற்று விரிவாக இங்கு பார்க்கலாம்.

முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கம்ப்யூட்டரைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என, இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம். 

கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல. 

ஸ்கிரிப்ட், பதிக்கப்பட்ட இமேஜ் மற்றும் சில கேள்விக்குரியவைகளும் இதில் அடங்கியுள்ளன. பி.டி.எப். பைல் வடிவத்தில் பல குழப்பமான படிமங்களில் விஷயங்கள் அடுக்கப்பட்டு கிடைக்கின்றன. இப்படி அடைக்கப்படும் பல விஷயங்கள், வைரஸ்களை அனுப்பும் ஹேக்கர்களுக்கு, விஷமத்தனமான செயல்பாடுகளை மேற்கொள்ள இடம் அளிக்கின்றன. இவற்றில் எவை ஹேக்கர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைக்கின்றன என்று பார்க்கலாம்.


1. ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script):

பி.டி.எப். பைல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இடம் பெறலாம். இந்த மொழியைத்தான் வெப் பிரவுசர்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, அடோப் ரீடர் வழியாக, ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் விஷமத்தன வேலைகளை மேற்கொள்கின்றனர். 

மேலும், அடோப் ரீடர், அடோப் தொகுப்பிற்கான ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்டைப் பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பாற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


2. பதிக்கப்பட்ட ப்ளாஷ் (Embedded Flash)

பி.டி.எப். பைல்களில், பதிக்கப்பட்ட ப்ளாஷ் விஷயங்கள் இடம் பெறலாம். 2012 ஏப்ரல் வரை, அடோப் அதனுடைய ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வந்தது. பொதுவாக ப்ளாஷ் பிளேயரில் காணப்படும் பிழைகள் அப்படியே இங்கும் இருப்பதால், ஹேக்கர்கள் இதனையும் பயன்படுத்துகின்றனர். 

தற்போது, பி.டி.எப். ரீடர்கள், பைலில் உள்ள ப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தாமல், கம்ப்யூட்டர்களில் உள்ள ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வருகின்றன.


3. நேரடியான செயல்பாடு:

பி.டி.எப். பைல்களில், ஏதேனும் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள கட்டளை இருந்தால், வாடிக்கையாளருக்கு ஒரு பாப் அப் விண்டோவில் தகவல் தந்துவிட்டு, முந்தைய அடோப் பி.டி.எப். ரீடர் உடனடியாக அதனை இயக்கும் வகையில் செயல்படும். இப்போதைய அடோப் ரீடரில், பி.டி.எப். பைல்கள் இயக்கக் கூடாத இ.எக்ஸ்.இ. பைல்கள் பட்டியல் ஒன்று இணைக்கப்பட்டு, அவை நேரடியாக இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.


4. உள்ளாக ஒரு பி.டி.எப். (GoToE):

பி.டி.எப். பைல்களுக்குள்ளாக ஒரு பி.டி.எப். பைல் இருக்கலாம். இது சுருக்கப்பட்டு பதிக்கப்பட்டிருக்கும். ஹேக்கர்கள், இந்த உள்ளாகப் பதிக்கப்பட்ட பி.டி.எப். பைல்களில் தங்கள் வைரஸ் குறியீடுகளைப் பதிந்து வைக்கலாம். ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள், உள்ளாக உள்ள பி.டி.எப். பைல்களைப் படிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


5. மீடியா கண்ட்ரோல்கள்:

ப்ளாஷ் மட்டுமின்றி, பி.டி.எப். பைல்களில், மீடியா பிளேயர், ரியல் பிளேயர் மற்றும் குயிக் டைம் மீடியா ஆகியவையும் பதிக்கப்பட்டிருக்கலாம். இந்த பிளேயர்களில் உள்ள குறைகளும், ஹேக்கர்கள் பயன்படுத்த இடம் தருகின்றன. 

மேலே சொல்லப்பட்ட குறைகள் இருந்தாலும், இப்போது அடோப் ரீடர், பல நிலைகளில் பாதுகாப்பினை அமைத்து வடிவமைக்கப் பட்டுள்ளது. பி.டி.எப். பைல்கள், பாதுகாப்பு வளையத்திற்குள்ளாகவே இயக்கப்படுகின்றன. இவை, கம்ப்யூட்டரின் சில பிரிவுகளை மட்டுமே தொடர்பு கொள்கின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. எனவே அஞ்சத் தேவையில்லை என அடோப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு மாறாக, பல தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடர்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை, அனைத்து இயக்க வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. எனவே, தேவை யில்லாமல், பிழை உள்ளவற்றைத் திறந்து வைரஸ்களை அனுமதிப்பதில்லை.

இருப்பினும், பி.டி.எப். பைல்கள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.


அதிகம், ஆனா அதிகம் இல்லை


இந்த தலைப்பைப் பார்த்தவுடன், ""வரும், ஆனா வராது'' என்ற காமெடி டயலாக் நினைவிற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த தலைப்பு ஒரு கவலை கொள்ளத்தக்க நிகழ்வு சார்ந்ததாகும். 

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. 

ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும். 

இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. 

அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.

தற்போது, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2012 இறுதியில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் புழக்கத்தில், இணையப் பயன்பாட்டில் இருந்தன. 

2016ல், இது 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4ஜி அலைவரிசை இணைப்பு தருவதற்கு, அடிப்படைக் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கப்பட்டு வருவதால், இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம். 

உலக அளவில், 270 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். உலக மக்கள் தொகையுடன் இதனைக் கணக்கிடு கையில், இது 39 சதவீதம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது 11 சதவீதமாக மட்டுமே இருப்பது கவலைக்குரியது.

இந்த வகையில், சீன மக்களில், 40 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே, பன்னாட்டளவில், அதிக பயன் பாட்டு விகிதம் ஆகும். அங்கு 51 கோடியே 10 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். அமெரிக்காவில் 24 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை அடுத்து, அதிகமாக இணையம் பயன்படுத்துவோர் வாழும் நாடு ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக இணையப் பயன்பாடு உள்ள நாடு எது என்று பார்க்கையில், ஐரோப்பா மொத்தமாக 75 சதவீத பயன்பாட்டுடன் முதல் இடத்தைப் பெறுகிறது. அடுத்து அமெரிக்கா 61 சதவீதப் பயன்பாட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

உலக அளவில் ஆண்களே அதிகம் (41%) இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் 37% பேர். உலக ஜனத்தொகையில் இது 103 கோடி பெண்கள் மற்றும் 105 கோடி ஆண்கள் எனக் கணக்காகிறது.


சாம்சங் கேலக்ஸி ப்ளேம்


தொடர்ந்து ஸ்மார்ட் போன் வரிசையில், தன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி ப்ளேம், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

எஸ் 6812 காலக்ஸி பிளேம் எனப் பெயரிட்டுள்ள இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 113.2 x 61.6 x 11.6 மிமீ. எடை 120.6 கிராம்.

பார் டைப் வடிவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.5 அங்குல அளவில், இதன் திரை அமைந்துள்ளது. மல்ட்டி டச் வசதி இதில் உண்டு. 

வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதன் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். .

இந்த 3ஜி போனில், நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன.

இந்த போனில் உள்ள கேமரா 5 எம்பி திறன் கொண்டது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் உள்ளது. ஜியோ டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடக்ஷன் ஆகிய வசதிகள் இதில் அடங்கியுள்ளன. இரண்டாவதாக, வீடியோ அழைப்புகளுக்கென ஒரு கேமராவும் தரப்பட்டுள்ளது. 

இதில் உள்ள எப்.எம். ரேடியோவில் பதிந்து கொள்ளும் வசதி உண்டு. இதன் சிபியு 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது. அக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி மற்றும் காம்பஸ் சென்சார்கள் உள்ளன. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட்மெசஞ்சர், ஆர்.எஸ்.எஸ். ஆகியவையும் தரப்பட்டுள்ளன. 

கூகுள் பிளே ஸ்டோருக்கான இணைப்பு கிடைக்கிறது. டாகுமெண்ட் வியூவர், இமேஜ் மற்றும் வீடியோ எடிட்டர், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், ஜி டாக், வாய்ஸ் மெமோ மற்றும் டயல் ஆகிய வசதிகளும் உள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது. 

தொடர்ந்து 420 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. எட்டு மணி 40 நிமிட நேரம் பேசும் திறன் கிடைக்கிறது.இதன் கதிர் வீச்சு 1.46 டபிள்யூ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.10,999.


MS Office முக்கிய ஷார்ட்கட் கீகள்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.


வேர்ட் தொகுப்பு:

Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.

Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. 

Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது. 

Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.


எக்ஸெல் தொகுப்பு:

Shift + F11: அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது. 

Alt + Shift + F1: மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.


அவுட்லுக்:

Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை அழிக்கிறது. 

Ctrl + F: தேர்ந்தெடுத்த மெசேஜை பார்வேர்ட் செய்கிறது. 

Ctrl + Alt + F: தேர்ந்தெடுத்த மெசேஜை ஒரு அட்டாச்மெண்ட் ஆக அனுப்புகிறது.

Ctrl + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதில் அனுப்புகிறது.

Ctrl + Shift + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதிலை அனைவருக்கும் அனுப்புகிறது.


மாதத் தவணையில் நோக்கியா போன்கள்


மொபைல் போன் விற்பனைச் சந்தையில், தன் இடத்தைத் தக்க வைக்க, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

அந்த வகையில், விண்டோஸ் போன் 8 சிஸ்டம் இயங்கும் லூமியா வரிசை போன்களுக்கு புதிய சலுகை விற்பனை திட்டம் ஒன்றை சென்ற வாரம் சென்னையில் அறிவித்துள்ளது. 

லூமியா 920, லூமியா 720, லூமியா 620 மற்றும் லூமியா 520 போன்கள் உட்பட, புதிய லூமியா வரிசை போன்கள் அனைத்தும் இந்த வகையில் பெற்றுக் கொள்ளலாம். 

இவற்றின் தொடக்க விலை ரூ.10,499. இவற்றை, மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான வட்டி எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் பெற, விண்ணப்ப பரிசீலனைக் கட்டணமும் இல்லை. 

இந்த திட்டம், இந்தியாவில் 12 நகரங்களில், நோக்கியாவின் 200 விற்பனை மையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதத் தவணைகளில், இந்த போன்களுக்கான விலையைச் செலுத்தலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., சிட்டி வங்கி உட்பட பல வங்கிகளின் மூலமாக தவணைப் பணத்தினைச் செலுத்தலாம். 

இவற்றிற்கு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலமாக, இன்ஷூரன்ஸ் வசதியும் தரப்படுகிறது. பிரிமியமாக ரூ.50 அல்லது போனின் விலையில் 1.25 சதவீதம், இதில் எது குறைவோ அது வசூலிக்கப்படும். 

நோக்கியா லூமியா 920 போன் வாங்குபவர்களுக்கு, ரூ. 3,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜிங் பிளேட் ஒன்று இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை மே 15 வரை மட்டுமே தரப்படுகிறது.


பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை


பன்னாடெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை இந்த அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளது. 

பன்னாடெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில், 24 சதவீத கம்ப்யூட்டர்கள், அப்டேட் செய்யப்படாத ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு, ஆபத்தான சூழ்நிலையில் இயங்கி வருகின்றன. 

இவை மற்றவற்றைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிக ஆபத்துக்களை வரவேற்கும் தன்மையுடையன.

இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 30 சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன. எகிப்தில் 40%, அமெரிக்காவில் 26%, கனடாவில் 23%, பிரிட்டனில் 21% மற்றும் ரஷ்யாவில் 29 சதவீதம் என இந்த அறிக்கை, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டியுள்ளது.

சில போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. கம்ப்யூட்டர்களை முழுமையாக இலவசமாக ஸ்கேன் செய்து தருவதாக, விளம்பரம் செய்திடும் இவை, ஸ்கேன் செய்த பின்னர், அதிக வைரஸ் இருப்பதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு தர பணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றன. 

பணம் செலுத்த மறுத்தால், நம் கம்ப்யூட்டர்களின் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று, நம்மைப் பயமுறுத்துகின்றன. இந்த வகையில் சென்ற ஆண்டு, என்னும் போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று, 30 லட்சம் கம்ப்யூட்டர்களில் புகுந்து ஆட்டிப் படைத்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பணம் செலுத்தி வாங்க இயலாதவர்களுக்கு, Microsoft Security Essentials என்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இலவசமாக வழங்கி வருவதனையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. 

பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது. 

இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. 

கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது. 

தான் தங்கிய கம்ப்யூட்டரில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. 

இதன் மூலம், கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. 

இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.

1. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.

2. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது. 

3. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும். 

4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. 

5. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், இவற்றை அப்டேட் செய்வதனை ஒத்தி போடக் கூடாது.


விண்டோஸ் சந்திக்கும் வேகத்தடைகள்


விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். 

அதற்கு முன்னர் இருந்த, டாஸ் இயக்க முறை, ஒரு வேளையில், ஒரு செயலை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற வகையில் செயல்பட்டது. கிராபிகல் இடைமுகத்தின் உதவியுடன் இந்த பல்முனை செயல்பாடு சாத்தியமாயிற்று. 

எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது. அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது. 

இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது. 

இந்த சாதனங்கள் விலக்கப்படும்போது, பயன்படுத்த முடியாத பல பைல்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விட்டுச் செல்லப்படுகின்றன. இப்படியே பல பைல்கள் தொடர்ந்து தங்குவதால், காலப் போக்கில் புரோகிராம்களும் சாதனங்களும் செயல்படுவதற்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. 

இதனால், விண்டோஸ் சிஸ்டத்தின் செயல்வேகம் மந்தப்படுத்தப் படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால், டேட்டாவினை ஸ்டோர் செய்வதிலும், பைல்களை நீக்குவதிலும் நாம் சில வழிமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.


1. டிஸ்க் இடம் சிதறல்:

டிஸ்க்கில் பைல் ஒன்று எழுதப்படுகையில், அதன் முன்போ, பின்புறமோ இடம் விடப்படாமல், தொடர்ந்து எழுதப்படுகிறது. அது நீக்கப்படுகையில், முதல் நிலையில், அந்த பைல் அழிக்கப்படாமல், அந்த இடத்தில் வேறு பைலை எழுதிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தரப்படுகிறது. 

வேறு ஒரு பைலை அதில் எழுதுகையில், பைலுக்கான இடம் போதுமானதாக இல்லை என்றால், மீதப் பைல் வேறு ஒரு இடத்தில் எழுதப்படுகிறது. பைலின் ஒரு பகுதி வேறு இடத்தில் இருப்பதனை, முதல் பகுதியின் இறுதியில் எழுதி வைக்கப்படுகிறது. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டம், இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வினைக் கண்டது. 

தொடர்ந்து இடம் இருந்தால், அந்த இடத்திலேயே எழுதும் வகையில் இந்த சிஸ்டம் அமைக்கப்பட்டது. இருப்பினும், பலவகை பார்மட்களிலும், அளவுகளிலும் பைல்கள் உருவானதால், இந்தப் பிரச்னை தொடர்கிறது. ஒரு பைல் பல இடங்களில் எழுதப்படுவதால், பைல் படிக்கப்படும்போது, அதிக நேரத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டம் எடுத்துக் கொள்கிறது. 

நூல் ஒன்றில், கட்டுரை ஒன்று அதன் பல இடங்களில், தொடர்ச்சி, தொடர்ச்சி என அச்சிட்டிருந்தால், நமக்குப் படிக்க சிரமமாக இருக்கும் இல்லையா! அது போல் தான் இதுவும். (மேலும் தகவல்கள் அறிய பார்க்க: More information on disk fragmentation can be found in this excellent article from the MSDN Blog: Disk Defragmentation – Background and Engineering the Windows 7 Improvements)


2. சாப்ட்வேர் இயக்கமும் ராம் மெமரியும்:

ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இயக்கப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள், அமர்ந்து செயல்படும் இடமே ராம் மெமரி. இவற்றிற்கு அதிக இடம் தேவைப்படுகையில், இதன் இட அளவு மிகவும் குறைவாக இருப்பதே, பிரச்னைக்கு இடமாக அமைகிறது. 

சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றுக்கு, அதிக இடம் தேவைப்படுகையில், இதனை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் உள்ளதா என ஸ்கேன் செய்து, இல்லாத நிலையில், அந்த புரோகிராமினை ஸ்வாப் பைல் என்ற முறையில் ஹார்ட் டிஸ்க்கில் இயக்குவதற்காகப் பதிகிறது. 

இது போல வெளியில் புரோகிராம்கள் எழுதப்படுவதனால், விண்டோஸ் அதிக நேரம் எடுத்து செயல்படத் தொடங்குகிறது. இது செயல் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. 


3. சிஸ்டம் ட்ரைவில் இடப்பற்றாக்குறை:

தற்காலிக டேட்டாவினை ஸ்டோர் செய்திட, விண்டோஸ் இயக்கத்திற்கு ஹார்ட் ட்ரைவில் இடம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைக்காத போது, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஒன்றுமே செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.


4. மால்வேர்:

Malicious Software என்பதன் சுருக்கமே மால்வேர் (Malware) ஆகும். வைரஸ், அட்வேர் அல்லது வோர்ம் என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களே மால்வேர் எனப்படும். இவை, நம் அனுமதியின்றி கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு, சிஸ்டத்தின் திறனைத் திருடிக் கொள்ளும். மற்ற சாப்ட்வேர் போலவே இவையும் இயங்குவதால், சிஸ்டத்தின் செயல்திறன் மட்டுப்படுத்தப்படும்; சில வேளைகளில் முடக்கப்படும்.


5. ஹார்ட்வேர் பிரச்னைகள்:

ஹார்ட்வேர் சாதனங்களினால், கிடைக்கும் பிரச்னைகளை இன்னதென நாம் உடனே அறியமுடியாது. ஹார்ட்வேரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது பல பிரிவுகளை இயக்கும் ட்ரைவர் புரோகிராம்களுக்கிடையே ஒத்திசைவு இல்லாத நிலை ஏற்படலாம். இவை ஏற்படும் என முன் கூட்டியே அறிய முடியாது. அறிந்து கொள்வதும் மிகக் கடினம். இவற்றிற்குக் காரணமான இரண்டினை இங்கு பார்க்கலாம்.


6. அதிக வெப்பம்:

சி.பி.யு, பவர் சப்ளை மற்றும் கிராபிக்ஸ் கார்ட்களை, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, கம்ப்யூட்டரில் சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை செயல்படாத நிலையில், உள்ளே உருவாகும் வெப்பம், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கும்.


7. கிராபிக்ஸ் கார்ட்:

கிராபிக்ஸ் கார்ட் தனக்கான மெமரியை, ராம் மெமரியுடன் பகிர்ந்து கொள்ளும். எனவே, கிராபிக்ஸ் கார்டின் முழு திறனும் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை இயக்குகையில், ராம் மெமரி பாதிக்கப்பட்டு, செயல்வேகம் தடை படுகிறது. இதற்குத் தீர்வாக, தனக்கென மெமரி கொண்டுள்ள, கிராபிக்ஸ் கார்டினை இணைப்பதே சிறந்தது.

மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகள் தவிர, சிறிய அளவில் வேறு சிலவற்றாலும் பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் வேகம் தடை படலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்தால், பல தடைகளை நாம் வெற்றி கொள்ளலாம் என்பது உறுதி. இவற்றை வெற்றி கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்பதனை அடுத்த வாரங்களில் பார்க்கலாம்.


எல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. 

நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 

இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்பி ராம், 4 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். 

நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி.கேமரா இயங்குகிறது. 

வீடியோ பதிவு நல்ல வேகத்தில் கிடைக்கிறது. டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 5 சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் சிப்செட் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார் உள்ளன. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1.2. ஜெல்லி பீன் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ்மெயில், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், டாகுமெண்ட் எடிட்டர், ஜி.பி.எஸ். ஆகியனவும் உள்ளன. 

ஆர்கனைசர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகிய விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2460mAh திறன் கொண்டதாக உள்ளது.


மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91

சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499. 

இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம் தரப்பட்டுள்ளது. டி.எப்.டி. எல்.சி.டி திரையாக இது தரப்பட்டுள்ளது. 

ஒரு கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) சிஸ்டம் செயல்படுகிறது. 5 எம்.பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், முன்புறமாக 0.3 எம்பி திறன் கொண்ட போன் வீடியோ அழைப்புகளுக்காகவும் தரப்பட்டுள்ளன. 

நெட் வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ் தொழில் நுட்பங்கள் இயக்கத்தில் உள்ளன. ராம் மெமரி 512 எம்பி ஆகவும், ஸ்டோரேஜ் 4 ஜிபி ஆகவும் தரப்பட்டுள்ளது. 

ஸ்டோரேஜ் மெமரியினை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நம் மியூசிக் ஆர்வத்திற்கு உதவுகின்றன. 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி கிடைக்கிறது.


20 ஆண்டைக் கடந்த மொசைக் பிரவுசர்

இன்றைக்கு இணையம், அதனைக் கொண்டு வந்து தரும் பிரவுசர் எல்லாம், நாம் எப்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை போல ஆகிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னால், “WEB” என்ப தெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது. 

பின்னர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர். 

இதுதான் கிராபிகல் முறையில் நமக்குக் கிடைத்த முதல் பிரவுசர். இதன் பின்னரே, இதனைப் பின்பற்றி மற்ற பிரவுசர்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது நீங்கள் எந்த சாதனத்தையும் ஒரு நிமிடம் இயக்கினால் போதும். இணையத்தில் நீங்கள் இருப்பீர்கள். 


மொசைக் பிரவுசர் வருவதற்கு முன்னால், இணையம் உங்களுக்குக் கிடைக்க பெரும்பாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அப்போது கேரக்டர் அடிப்படையிலான இன்டர்பேஸ் புரோகிராம் மூலம் தான், நமக்கு இணையம் கிடைத்து வந்தது. 

மொசைக் தொடங்கிய பிரவுசர் வரிசை, இன்று நன்றாக வளர்ந்து, பலத்த போட்டியுடன், நீயா? நானா? என்ற வகையில் கம்ப்யூட்டர் பயனாளர்களைப் பிடிக்க தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு இயங்கி வருகின்றன. தொடக்க காலத்தில் வந்த பிரவுசர்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

மொசைக் பிரவுசரை உருவாக்கியவர்கள் மார்க் ஆண்ட்ரீசென் மற்றும் எர்க் பினா (Marc Andreessen and Eric Bina) ஆவார்கள். ஆனால், முதன் முதலில் உருவான பிரவுசர் Mosaic அல்ல. அதற்கு முன்னால், ஒரு பிரவுசர் யூனிக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் இயக்கத்தில் முதல் பிரவுசராக செல்லோ (Cello) வெளியானது. பின்னரே மொசைக் வெளியானது.

மொசைக் பிரவுசர் அவ்வளவு எளிய நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை. 1990 வரை இதனைப் பயன்படுத்துவது, ஏதோ மேஜிக் போல இருக்கும். அப்போதிருந்த விண்டோஸ் இயக்கமும், இன்டர்நெட் வழிமுறையான டி.சி.பி/ஐ.பி இயக்கத்தினை அவ்வளவாக சப்போர்ட் செய்திடவில்லை. 

விண்டோஸ் 95 சிஸ்டம் தான், இணைய வழிமுறைக்கேற்ற பயன்படுத்துவதற்கு எளிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளியானது. இன்டர்நெட் பக்கம் மக்களின் விருப்பம் செல்வதனை அறிந்த, மொசைக் பிரவுசர் தயாரித்த இருவரும், இதன் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டு, பிரவுசர் ஒன்றை உருவாக்கினார்கள். 

அப்போது கிடைத்ததுதான் Netscape. மைக்ரோசாப்ட் நிறுவனமும், மக்களின் இணைய ஆர்வத் தினைத் தாமதாமாகவே புரிந்து கொண்டது. மொசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் முதல் பதிப்பினை, ஆகஸ்ட் 1995 மாதம், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தந்தது. ஆனால், இன்றும் வெளியாகும் அனைத்து பிரவுசர்களிலும் மொசைக் பிரவுசரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள், 1991 வரை இன்டநெட் நமக்கு கேரக்டர் அடிப்படை யிலேயே கிடைத்து வந்தது. இன்றைய இன்டர்நெட் என்பது அப்போது கற்பனை யாகக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. 1993 வரை, தொழில் நுட்ப வல்லுநர்களான சிலரே இன்டர்நெட் பெற்று பயன்படுத்த முடிந்தது. 

பின்னரே, வேர்ல்ட் வைட் வெப் World Wide Web (WEB) என அழைக்கப்படும் வெப் உலகம் நம்மை அழைத்தது. இதன் காரண கர்த்தா டிம் பெர்னர்ஸ் லீ. அவருக்கு நாம் வணக்கம் கூறுவோம்.குழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்

குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது. 

ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம். 

இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் என ஒரு பட்டியல் தரப்படுகிறது. இதோ அது:

A :APPLE

B: BLUETOOTH

C: CHAT

D: DOWNLOAD

E: EMAIL

F: FACEBOOK

G: GOOGLE

H: HP

I : IPHONE

J : JAVA

K: KINGSTON

L :LAPTOP

M: MESSENGER

N : NERO

O : ORKUT

P : PICASSA

Q : QUICK

R: RAM

S: Software

T: Terabyte

U: Unicode

V: Visual Basic

W: Web 

http://cstechnologynews.blogspot.com/2011/10/alphabettaughttokidsnowdays.html என்ற தளத்தில் இது தரப்பட்டுள்ளது. அதில் சார்ட் ஆகவும் இந்த பட்டியல் தரப்பட்டுள்ளது. இதனை பிரிண்ட் எடுத்து உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தலாம்.


ஆண்ட்ராய்ட் போன் எச்சரிக்கை


நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொள்கிறீர்களா? சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். 

BadNews என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் (சாம்சங் காலக்ஸி அல்லது எல்.ஜி. அல்லது எச்.டி.சி போன்றவை) அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டுள்ளது. 

இதனால், நாம் மொபைல் சேவை நிறுவனத்தில் கட்டி வைத்துள்ள பணம் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த BadNews மால்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்துள்ளதாகத் தெரிகிறது. 

எந்த அப்ளிகேஷன் புரோகிராம் வழியாக இந்த மால்வேர் போனுக்குள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புரோகிராம், போன் செயல்படுவதைக் கெடுப்பதில்லை. 

எல்லாவகையான புரோகிராம்களுடனும் இந்த மால்வேர் செல்வதாக லுக் அவுட் என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் குறித்த புரோகிராம் ஒன்றுடன் இந்த மால்வேர் சென்றுள்ளதை, இந்நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது. 

இன்னொரு நிறுவனம், இந்த BadNews மால்வேர் “Savage Knife” என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் பேட் நியூஸ் மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். எனவே, அங்குள்ள நண்பர்கள் வழியாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பெற்றவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும். 

மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இங்கு வர எத்தனை நாள் எடுக்கும்? ஒரே நாளில் கூட வரலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, கவனத்துடன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அல்லது இந்த மால்வேர் புரோகிராமினைக் கட்டுப்படுத்தும் புரோகிராம் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.


கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்


எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். 

எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.


2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.


3. கூகுள் திங்க் (Google Think) கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். 

இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர். 


4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator): பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். 

இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.


5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.


6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer): தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். 

ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.


7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google): தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.


8. பில்ட் வித் குரோம் (Build with chrome):ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது. 


9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project): இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.


10. கூகுள் ஸ்காலர் (Google Scholar): இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.


11. கூகுள் மார்ஸ் (Google Mars): அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes