கூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.

தொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து வருகிறது.

அறிமுகப்படுத்தப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் இணையதளமான நெட்மார்க்கட் ஷேர் (http://www.netmarketshare.com/ ?source=NASite) அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குரோம் வளர்ந்து வருவதனை உறுதி செய்துள்ளன.


கடந்த ஓராண்டில், குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில் நுட்ப தளங்களில், இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.

மற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில் நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.

குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் களாகும். மொஸில்லா பயர்பாக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர், தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.

தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.

அடுத்தபடியாக பாதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.

மேலும் கூகுள் திட்டமிட்டே பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆதரவை விலக்கி வருகிறது. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் (http://www.google.com/support/toolbar/bin/answer.py?answer= 1342452&topic=15356%29), பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பாக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்பு களில் இயங்காது என அறிவித் துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.

தற்போது பயர்பாக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பயர்பாக்ஸ் 6, ஆகஸ்ட் மத்தியிலும், அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர், பயர்பாக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்பாக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர், புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக் காட்டாக, பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால், புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை, கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு, மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு, தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

இதற்கு முன்னர், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால், மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர் களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.

இவை பயர்பாக்ஸ் பிரவுசர் கட்டமைப் பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க, சில மாற்றங் களையும் வசதிகளையும் பயர்பாக்ஸ் தராவிட்டால், அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.


பைலின் துணைப் பெயர் காட்டப்பட

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது.

எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது.

எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது.

இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும்.

இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.


ஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்

அநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அதிக மெயில் தங்கும் வசதி மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங்குவதால், ஜிமெயில் நம் டிஜிட்டல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.

ஜிமெயில் இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள் காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ஐம்பதாகப் பெற்றுப் பார்க்கலாம்.

முதல் தோற்றத்திலேயே கூடுதலாகக் காட்டும் படியும் ஜிமெயிலில் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செயல்படவும்.
பிரவுசரை இயக்கி ஜிமெயில் தளம் செல்லவும். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Mail Settings என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு ஜெனரல் டேப்பிற்கு அருகே மேலாக, Maximum Page Size என்பதைப் பார்க்கலாம். இங்கு Show X conversations per page என்ற இடத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடவும்.

வழக்கமாக இதில் 25 என இருக்கும். இதனை 50 அல்லது 100 என மாற்றி அமைக்கவும். பின்னர், பக்கத்தின் கீழாகச் சென்று Save changes என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் இன்னும் சற்று நீளமாக மாறியிருப்பதனைக் காணலாம். உங்களுக்கு வந்த படித்த, படிக்காத இமெயில்களை அங்கு சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் இப்போது காணலாம்.


பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்

நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா! இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா? இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா? முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா? உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன் புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம்.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டா விட்டாலும், மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
மற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே, பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால், இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை, பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.

ஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்பு களையும் இயக்கிப் பார்த்து, அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.

இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில், எளிதாகக் கம்ப்யூட்டரிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.


1. கூகுள் ஷார்ட்கட்ஸ் (googleshortcuts): என்ன தான் பயர்பாக்ஸ் பிரவுசரை (குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும், நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.

அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி, கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக, ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.

இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில், கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon/googleshortcutsallgooglese/

2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மானிட்டரில் வலுக் கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால், சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.

அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3.லாஸ்ட் பாஸ் (Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல பாஸ்வேர்ட் மேனேஜராக மட்டுமின்றி, பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தும், ஆன்லைனில் தனி ஒரு "வாணலியில்' பாதுகாக்கப்படுகிறது. இதனால், அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப் படலாம்.

இதனால், நாம் ஏதேனும் ஓர் இடத்தில் பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திட வேண்டியதில்லை; அல்லது ஒரே பாஸ்வேர்டைத் திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஆன்லைனில் பாதுகாக்கப்படும் நம் பாஸ்வேர்டை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.

இதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதே போல இன்னொரு பாஸ்வேர்ட் மேனேஜர் Roboform என்ற ஆட் ஆன் புரோகிராம் ஆகும். ஆனால் இது பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 5ல் செயல்பட மறுக்கிறது.

4. கூலிரிஸ் (Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும், போட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரி மாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது. http://www.cooliris.com/desktop/ என்ற முகவரி யில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.

இந்த ஆட் ஆன் புரோகிராம், யு-ட்யூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற போட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால், இது பழைய கம்ப்யூட்டர்களில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டரில் சிறப்பாக இயங்குகிறது.

5.ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட் (Asteroids Bookmarklet): இதன் செயல்பாடு குறித்து படித்துவிட்டு, என்ன நேரத்தை வீணடிக் கும் வகையில் தகவல்களை இவர் தருகிறாரே என்று கோபப்பட வேண்டாம். இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.

ஸ்பேஸ் பாரினைத் தட்டினால், லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம். இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://erkie.github.com/
உங்களுக்கு விண்கோளாக மாறிய இணையதளம் ஒரிஜினலாக வேண்டும் என்றால், ரெப்ரெஷ் பட்டனை அழுத்திப் பழையபடி இணைய தளத்தினைக் காணலாம்.


கூகுள் முக்கிய அறிவிப்பு

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.

http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.
இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது.
தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன?

கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.
இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது.

இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது.

ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.


40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ் மொபைல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 40 மாடல்களை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது.

2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 மாடல்களையும், முதல்கட்டமாக அடுத்த காலாண்டு இறுதிக்குள் 4 மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மேக்ஸ் குழும தலைவரும், மேலாண்மை இயக்குனருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.5000 முதல் ரூ.8000 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ் மொபைல் நிறுவனம் இதுவரை 15 மாடல்களை அறிமுகம் செய்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


விலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்

பிரபல டெக்கான் கிரானிகிள் நிறுவனம் தனது ஐ.பி.எல்., டுவென்டி-20 அணியான டெக்கான் சார்ஜர்சை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆஸி.,யின் பெர்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விகாஸ் ராம்பால் மற்றும் இந்தியாவின் அதானி குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டெக்கான் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு இதில் பாதியளவு தொகை கொடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் விலைக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலேசிய ஆயில் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனமும், டெக்கான் சார்ஜசை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து டெக்கான் நிர்வாகிகள் யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை.


புரோகிராம் விண்டோ அளவு

ஒவ்வொரு புரோகிராமிற்கும் அதற்கான விண்டோ எப்படி அமைய வேண்டும் என்பதனை நம் விருப்பத்திற்கேற்ப செட் செய்திடும் வசதியினை விண்டோஸ் நமக்குத் தந்துள்ளது.

இதனால், ஒரு விண்டோவினைப் பார்த்த வகையில், அதில் எந்த புரோகிராம் இயங்குகிறது என்பதனை நம்மால் உணர முடியும். இதனை விரிவாக இங்கு காணலாம்.

விண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப் படும் அளவு, மேக்ஸிமைஸ்/ மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.

அவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.

இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி, அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.


புதிய மொபைல் போன்கள்

மொபைல் போன் சந்தையில் நாள் தோறும் பல போன்கள் அறிமுகமானாலும், சில போன்கள் அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன. குறிப்பாக பெரிய நிறுவனங் களின் பட்ஜெட் போன்கள் இந்த வகையில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப் படுகின்றன.


1. நோக்கியா எக்ஸ்1-01: ஆச்சரியப் படத்தக்க வகையில் ரூ.2,000 க்கும் குறைவான விலையில், நோக்கியா நிறுவனம், இரண்டு சிம் இயக்கத்தில் அடிப்படை வசதிகளுடன் இந்த போனைக் கொண்டு வந்துள்ளது.

இது ஒரு கேண்டி பார் டைப் போன். 1.8 அங்குல அகலத்தில் டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடிய திரை, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி 3 மியூசிக் பிளேயர் இதன் சிறப்பு வசதிகளாகும். இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
போட்டோ, வீடியோ வசதிகள் இதில் தரப்படவில்லை. இதன் அதிக பட்ச விலை ரூ.1,779. சிகப்பு, டார்க் கிரே, கடல் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது.

2.நோக்கியா இ 6:

பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நோக்கியா இ6 மொபைல் போனை , மக்கள் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டது. பதிவுகள் குவியத் தொடங் கியதாக, நோக்கியா அறிவித்து, போனையும் சந்தையில் வெளி யிட்டுள்ளது.

ஒரு சிம் இயக்கம் கொண்ட இந்த 3ஜி போன் இதன் கேமராவிற்குப் பெயர் பெற்றது. டூயல் எல்.இ.டி. பிளாஷ், 8 மெகா பிக்ஸெல் திறன், 720 பி எச்.டி. வீடியோ திறன் மற்றும் டிஜிட்டல் ஸூம் வசதியுடன் இது இயங்குகிறது. முன்புறமும் ஒரு கேமரா 3ஜி வீடியோ அழைப்பு களுக்குத் தரப்பட்டுள்ளது. டிவியில் போனை இணைத்துக் காண டிவி அவுட்புட் வசதி உள்ளது.
இதன் மெமரி 8 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் டைப் இமெயில் ஆகியன தொடர்புகளை எளிதாக்குகின்றன. ஸ்டீரியோ எப்.எம் ரேடியோ, எம்பி3 பிளேயர் இயங்குகின்றன.
ஜி.பி.எஸ்., வை-பி மற்றும் புளுடூத் நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. தற்போது அதிகம் பேசப்படும் சிம்பியன் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் போனை இயக்குவதனை மிக எளிதாக மாற்றியுள்ளது. 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில், ஏ.ஆர்.எம். 11 ப்ராசசர் இயங்குகிறது. அக்ஸிலரோமீட்டர், டச் சென்சார் இயக்கங்களும் இதில் உள்ளன. கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,019.

3. எச்.டி.சி. ஏ510 வைல்ட் பயர் எஸ் : ஆண்ட்ராய்ட் 2.3.3. இயக்கத்தில் சற்று மேம்படுத்தப்பட்ட 3.2 அங்குல வண்ண டச் ஸ்கிரீன் திரையுடன் இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் பதியப்பட்டுள்ள மற்றும் தற்காலிக நினைவகம் ஒவ்வொன்றும் 512 எம்பி அளவில் உள்ளன.

மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். பார் டைப் வடிவில் உள்ள இந்த போன் ஒரு சிம்மினை மட்டுமே இயக்குகிறது. இதில் ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூமுடன் கூடிய இதன் திறன் 5 மெகா பிக்ஸெல். வீடியோ இயக்கமும் மேற்கொள்ளப் படுகிறது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், புஷ் மெயில் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ உள்ளன.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி (டேட்டா மட்டும்), புளுடூத், வை-பி ஆகியவை கிடைக்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை 600 மெகா ஹெர்ட்ஸ் சிப் இயக்குகிறது. ஜி.பி.எஸ். வசதியும் உள்ளது. கருப்பு, சில்வர் மற்றும் பிரவுண் வண்ணங்களில் பார் டைப் போனாக இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,462.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட்கட் கீகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக் கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு தரப்படுகின்றன.

Ctrl + +(plus sign) – இணையப் பக்கத்தை ஸூம் செய்திட

Ctrl + – (minus sign) – ஸூம் செய்த இணையப் பக்கத்தை, முந்தைய நிலைக்குக் கொண்டு வர

Ctrl + O – இணையப் பக்கத்தினைத் திறக்க

Ctrl + S – இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேவ் செய்திட

Ctrl + Shift + Tab – பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல

Ctrl + Tab – பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல

Ctrl + T – புதிய பிரவுசர் டேப் திறக்க

Ctrl + w – அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட

Ctrl + K – அப்போதைய பிரவுசர் டேப்பினை காப்பி செய்து திறந்திட

Ctrl + N – புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க

Ctrl + J – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டவுண்லோட் மேனேஜரைத் திறந்திட

Ctrl + L –புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க

Ctrl + B – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை
ஒழுங்குபடுத்த

Ctrl + D – இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட; அல்லது இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் பேவரிட்ஸ் பட்டியலில் சேர்த்திட ..


விண்டோஸ் டாஸ்க்பார்

டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Taskbar” என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

Autohide the taskbar – இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால், டாஸ்க் பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது. தவறுதலாக, நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க் பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க் பாரை லாக் செய்துவிட்டால் வராது.
Use small icons – உங்கள் டெஸ்க்டாப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா! அப்படியானால், இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால், டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மானிட்டருக்குக் கீழாக இருக்கும்.

டாஸ்க் பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால், சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல, டாஸ்க் பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்துவிட்டால், உடனே டாஸ்க் பார் மறைந்துவிடும்.
உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக் கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் டாஸ்க் பாரினை, மானிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க் பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று, விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.


வைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்


கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன.

ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை.

பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.


rundll32.exe பைலின் வேலையும் பயனும்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது.

இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம்.

ராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.

கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது.

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும்.

இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.


நிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.

சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது.

இதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம்.

நிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம். இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும்.

ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம்.

இணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து, ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
உலக அளவில், அலுவலகப் பணி களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 ஜெயிக்கிறது. சோதனை செய்து பார்க்க ஒரு .docx பைலை, என் கம்ப்யூட்ட ரிலிருந்து கூகுள் டாக்ஸ் மற்றும் வேர்ட் வெப் அப்ளிகேஷனுக்கு அனுப்பினோம்.

இரண்டிலும் பைலைத் திறந்து படிக்க முடிந்தது. பைலில் போல்டு, இடாலிக்ஸ், அடிக்கோடு என சில பார்மட்டிங் செயல்களை மேற் கொண்டோம். மீண்டும் பைலை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்தோம். வேர்ட் 2010ல் அனைத்து மாற்றங்களுடன் பைல் சரியாக இருந்தது. ஆனால் கூகுள் டாக்ஸ் பைல், வேறு பாண்ட், வேறு லைன் ஸ்பேசிங் எனப் பல வேறுபாடான பார்மட்டிங் செயல்களுடன் காட்சி அளித்தது.

ஆபீஸ் 365 இயக்கத்தில், இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஆடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில், மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள், ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவன சர்வரில், கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி, எத்தனை இமெயில் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொன்றுக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான, கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ÷ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும், அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத் தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.


ஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1

சென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=9D2E12828B69418BAFA09F61239EC8BE என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

64 பிட் சிஸ்டத்திற்கான தொகுப்பினைப் பெறhttp://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=E9F3C2D0C3214910A4CEB2F294B42D65 என்ற முகவரிக்குச் செல்லவும்.

இந்த சர்வீஸ் பேக் புரோகிராம் மூலமாக சில முக்கிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதுவரை வெளியான அப்டேட் அனைத்தும் மொத்தமாக இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. நிலையாக நின்று இயங்கும் திறன், பாதுகாப்பு, இயக்க திறன் ஆகியவை கூட்டப்பட்டுள்ளன.

அனைத்து ஆபீஸ் புரோகிராம்களும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் புரோகிராமான ஆபீஸ் 365 உடன் இணைந்து செயல்படத் தேவையான மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கின்றன. அத்துடன் விண்டோஸ் லைவ் ட்ரைவ் மற்றும் ஒன் நோட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தேவையான மாற்றங்கள் இதில் தரப்பட்டுள்ளன.

ஆபீஸ் தொகுப்பின் ஒவ்வொரு புரோகிராமிலும் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள் குறித்து இங்கே சுருக்கமாகக் காணலாம்.
1. எக்ஸெல் 2010: முந்தைய பதிப்பு களில் உருவாக்கப்பட்டுள்ள ஒர்க் புக்குகளைக் கையாளும்போது பார்மட் மற்றும் பிற கட்டமைப்புகளை, அவற்றிற் குப் பாதகமின்றிக் கையாளுவதற்குத் தேவையான கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பானிஷ், டச், டர்க்கிஷ் போன்ற சில ஐரோப்பிய மொழிகளை, இதில் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. பவர்பாய்ண்ட் 2010: இத்தொகுப் பில் உள்ள Use Presenter View அதன் மாறா நிலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முதல் மானிட்டரில் பிரசன்டேஷன் தொகுப்பில் உள்ள நோட்ஸ்களும், துணை மானிட்டரில் பிரசன்டேஷன் ஸ்லைடுகளும் காட்டப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
3. வேர்ட் 2010: இத்தொகுப்பில் Display Map பதிந்து காட்டப்படுகையில், அது சரியாக இப்போது காட்டப்படுகிறது. பாராகிராப் கட்டமைப்பினைச் சரி செய்கையில், ஒரு பாராவின் இன்டென்ட் திருத்தங்களின் போது, இன்னொரு பாராவின் இன்டென்ட் முன்பு மாற்றப் பட்டது. இந்த குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
4. அவுட்லுக் 2010: இந்த தொகுப்பும் ஆபீஸ் 365 தொகுப்புடன் இணைக்கப் படுகிறது. இதனையே மெயில்கள் அனுப்ப, மாறா நிலைத் தொகுப்பாக செட் செய்யப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
5. ஒன் நோட் 2010: விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவில் உள்ள ஒன் நோட் நோட்புக்குகளுடன், ஒன் நோட்புக் 2010 சரியாக ஒருங்கிணைந்து, இணக்கமாகச் செயல்படக் கூடிய வகையில் எஸ்.பி.1 தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. தேடல் முடிவுகளில் உள்ளாக, தேடப்படும் தகவல் ஹைலைட் செய்யப்படுவது இதன் சிறப்பாகும்.
6. அக்செஸ் 2010: அப்ளிகேஷன் பார்ட் காலரியில், சமுதாய தளங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைக்கக் கூடிய வசதியினை சர்வீஸ் பேக் 1 தருகிறது.எக்ஸெல் ஒர்க் புக்கிற்கு ஒரு அக்செஸ் பைலை எக்ஸ்போர்ட் செய்கை யில் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப் பட்டுள்ளது.
மேலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் ஆபீஸ் 2010 ஒரிஜினல் தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால் மட்டுமே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து, இணைக்க முடியும். உங்கள் ஆபீஸ் 2010 தொகுப்பு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் உங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் 1 மூலம் உதவும்.


மைக்ரோமேக்ஸ் க்யூ 80

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது. அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் கவனத்தைக் கவர்கிறது இந்த மொபைல்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய முயற்சியில் உருவான ezmail என்னும் புஷ்மெயில் வசதியை இதில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இன்னொரு அம்சம், இதில் தரப்பட்டுள்ள யமஹா ஆம்பிளிபயர் ஆகும்.

இதன் 1200 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.

2.4 அங்குல வண்ணத்திரை, 3ஜி வசதி, வை-பி இணைப்பு, புளுடூத், 3 எம்பி திறன் கொண்ட, ஸ்மைல் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுக்கும் கேமரா, இரண்டாவதாக 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வீடியோ அழைப்புகளுக்கான கேமரா, எப்.எம். ரேடியோ, 8 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தக் கூடிய வசதி என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இது உள்ளது.

இதன் ஆடியோ MIDI, MP3 பார்மட்டு களையும், வீடியோ 3GP, MP4 பார்மட்டு களையும் சப்போர்ட் செய்கின்றன. குவெர்ட்டி கீ போர்டுடன், நேவிகேஷனுக்கு ஆப்டிகல் ட்ரேக் பேட் தரப் பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களில் Opera Mini, Snaptu, Newshunt, Facebook, Nimbuzz ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேற்படி வசதிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த போன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes