புதிய சகாப்தத்தினை நோக்கி ஆண்ட்ராய்ட் லாலிபாப்

சென்ற ஜூன் மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர்களின் கருத்தரங்கில், அடுத்து வெளியிடப்பட இருக்கும், தன் ஆண்ட்ராய்ட் எல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, கூகுள் கோடி காட்டியது. 

சென்ற வாரத்தில், லாலிபாப் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 5.0 னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டிற்குப் பின்னர், இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. 

இந்த சிஸ்டத்தின் இயக்கம் முழுவதும், முற்றிலும் புத்தம் புதிய கட்டமைப்பு காட்டப்படுகிறது. லாலிபாப் கட்டமைப்பில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும், கிட் கேட் அமைப்பில் உள்ளனவற்றைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் இயங்குகின்றன. அப்ளிகேஷன்களைத் தொடங்குகையில் இந்த வேகத்தினை நன்கு உணரலாம். 

நோட்டிபிகேஷன்கள் தரப்படுவது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகளை எடுத்துச் செயல்படுத்துவதில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்னும் சில கூடுதல் வசதிகளும் தரப்பட்டுள்ளன.


புதிய தோற்றம்: 

லாலிபாப் சிஸ்டத்தின் இயக்கத்தைப் பார்த்தவுடன் நம்மை ஈர்க்கும் ஒரு மாற்றம் அதன் கட்டமைப்பில் தான். கூகுள் இதனை Material Design என்றழைக்கிறது. மிகவும் பளிச் என்ற ஆழமான வண்ணங்கள் கண்களுக்கு இதமாக உள்ளன. 

இவற்றினால் ஏற்படும் நிழல் தோற்றங்கள், குறைந்த அளவிலான தோற்றத்தினைக் கொடுக்கின்றன. டெக்ஸ்ட்டுடன் அதிக அளவில் வெள்ளை இடம், குறிப்பாக டெக்ஸ்ட்டைச் சுற்றி தரப்பட்டுள்ளது. 

திரையுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, நகரும் காட்சிகள் தோன்றி பரவசப்படுத்துகின்றன. வண்ணங்கள் குமிழ்களாகத் தோன்றி மறைகின்றன. கடந்த சில ஆண்டுகளில், கூகுள் தந்திருக்கும் அருமையான மாற்றங்களில் ஒன்றாக இது உள்ளது.

இந்த புதிய இடைமுகத்தில் (interface), தொடர்புகளுக்கான படங்கள் சற்றுப் பெரிதாகக் காட்டப்படுகின்றன. தொடர்பு கொள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கையில், காண்டாக்ட் கார்ட் என ஒன்று மேலெழுகிறது. இதன் வண்ணம், எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அறிவிப்புகள் (Notifications): 

லாலிபாப், நோட்டிபிகேஷன் வகையில் புதிய அமைப்பினைத் தருகிறது. நோட்டிபிகேஷன் கார்ட், லாக் ஸ்கிரீனின் நடுவே காட்டப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் மோட்டோ அலர்ட்ஸ் வகைகளில் தரப்படுவது போல் உள்ளது. 

ஒவ்வொரு அறிவிப்பும் ஒரு கார்ட் வழி தரப்படுகிறது. இதன் கீழ் விரி மெனுவினைப் பார்க்கும் போதும், அதே கார்ட் அமைப்பு காட்டப்படுகிறது. கூகுள் தான் வழங்கும் நோட்டிபிகேஷன்களை, தன் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளது. 

அத்துடன், நாம் விரும்பும் வகையில் இந்த நோட்டிபிகேஷன் அறிவிப்புகளைச் சற்று மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கையில், இந்த அறிவிப்பு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அதனை அமைக்கலாம். 

அதே வேளையில், அந்த அறிவிப்பில், எந்த அளவில் தகவல்கள் இருக்க வேண்டும் என்பதனையும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக, அஞ்சல் குறித்த அறிவிப்பில், அஞ்சல் 'சப்ஜெக்ட் லைன்' தேவையில்லை என நினைத்தால், கூகுள் மெயில் சென்று அமைத்திடலாம். 


புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தன் ஐபேட் வரிசையில் புதிய சாதனங்களைச் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியது. இவை iPad Air 2 மற்றும் iPad mini 3 எனப் பெயரிட்டு கிடைக்கின்றன. 

தன் ஐபோன்களின் திரையில் பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், ஐபேட் சாதனங்களின் வடிவமைப்பில் சொல்லப்படும் வகையில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. 

இவற்றின் அறிமுக விழா கூட மிக அமைதியாகவே, அதிக விளம்பரம் இன்றி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவற்றின் செயல் திறனில், பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.


ஐபேட் ஏர் 2: 

ஏற்கனவே வெளியான iPad Air இடத்தில் இது வெளியாகியுள்ளது. வழக்கம் போல சில்வர் பூச்சிலான வெள்ளை மற்றும் கிரே கலந்த கருப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது. 

இவற்றுடன், ஐபோன் போல, தங்க நிறத்திலும் இது வெளி வருகிறது. இந்த மாடல், 16, 64 மற்றும் 128 ஜி.பி. கொள்ளளவுகளில் கிடைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 32 ஜி.பி. மாடல் ஐபேடினை தவிர்த்துவிட்டது. 

அந்த அளவில் வெளியிட்டால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதனை மட்டுமே வாங்கிட விரும்புவார்கள் என்று கருதி, ஆப்பிள் இதனைத் தவிர்த்துவிட்டது.

வை- பி இணைப்பு மட்டும் கொண்டதன் விலை 499 டாலர் முதல் 699 டாலர் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வை பி மற்றும் எல்.டி.இ. இணைப்பு கொண்ட மாடல் விலை 629 முதல் 829 டாலராக குறிக்கப்பட்டுள்ளது. இனி இவற்றின் தொழில் நுட்ப சிறப்புகளைக் காணலாம்.

1. டச் ஐ.டி.( Touch ID): ஐபோன் 5 எஸ், ஐபோன் 6 மற்றும் ப்ளஸ் மொபைல் போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள, தொடு உணர் அடையாள அனுமதி, இந்த ஐபேட்களில் தரப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட்களில் இல்லாத இந்த வசதி, நிச்சயம் புதிய மாடலை உயர்ந்ததாகக் காட்டும்.

2. ப்ராசசர்: இதில் A8X processor with M8 motion coprocessor இணைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐபேட் ஏர் சாதனத்தில் இருந்ததனைக் காட்டிலும் திறன் கூடியதாகும்.

3. டிஸ்பிளே: இரண்டு சாதனங்களிலும், காட்சித் திரை 2048 x 1536 பிக்ஸெல்களுடன் 9.7 அங்குல அளவில் அமைந்துள்ளன. ஆனால், தற்போது முழுமையாக லேமினேட் செய்யப்பட்டு, ஒளி பிரதிபலிக்காத பூச்சும் தரப்பட்டுள்ளது. இதனால், ஓரளவிற்கு நேரடி வெளிச்சம் உள்ள இடங்களிலும் சிரமம் இல்லாமல் திரைக் காட்சியைக் காணலாம்.

4. அளவு/எடை: ஐபேட் ஏர் சாதனத்தின் அமைப்பு, முந்தையதைப் போலவே 9.4 x 6.6 அங்குல அளவில் உள்ளது. ஆனால், இதன் தடிமன் 0.05 அங்குலம் குறைவாக, 0.24 அங்குல அளவில் உள்ளது. எடையும் ஓரளவிற்குக் குறைவாக உள்ளது. 

5. கேமரா: குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் மேம்பாடும் மாற்றமும் கொண்டதாக இதன் கேமரா உள்ளது. ஐபேட் ஏர் 2 சாதனத்தில், ஐபோன் 6ல் உள்ள அதே 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 

இதற்கு முன், இதன் முன்னோடி ஐபேடில், 5 மெகா பிக்ஸெல் கேமரா இடம் பெற்றது. புதிய கேமரா, Burst mode மற்றும் slow motion வசதிகளைக் கொண்டுள்ளது. முன்புறமாகத் தரப்பட்டுள்ள கேமராவில் எந்தவித மாற்றமும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும் வசதிகளும் இல்லை.

6. சென்சார்: முந்தைய ஐபேட்களில் தரப்பட்ட Three-axis gyro, accelerometer மற்றும் ambient light sensor ஆகியவற்றுடன், பாரோமீட்டர் மற்றும் டச் ஐ.டி. வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மற்றவை எதுவும், பேட்டரி உட்பட, மாற்றத்திற்கு உள்ளாகவில்லை.


ஐபேட் மினி 3: 

ரெடினா டிஸ்பிளே கொண்ட ஐபேட் மினி மற்றும் ஐபேட் மினி என இரண்டு பெயர்களில், முன்பு ஐபேட் மினி தரப்பட்டது. இப்போது ஐபேட் மினி 3 அறிமுகமாகியுள்ளது. ரெடினா டிஸ்பிளேயுடன் கூடிய ஐபேட், இப்போது ஐபேட் 2 என அழைக்கப்படுகிறது. புதிய ஐபேட் மினி 3யுடன், பழைய இரு சாதனங்களும் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகின்றன.

ஐபேட் மினி 3ல் புதியதாகச் சொல்லத்தக்க மாற்றங்கள் எதுவுமில்லை. தங்க வண்ணத்தில் புதிய மாடல் ஒன்று கிடைக்கிறது. மற்றும் டச் ஐ.டி. இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முந்தைய ஐபேட் சாதனங்கள் போல, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. ஐபேட் ஏர் 2 போல, 16,64 மற்றும் 128 ஜி.பி. அளவுகளில் ஐபேட் மினி 3 கிடைக்கிறது. 

விலை: ஐபேட் மினி 3 விலை 399 முதல் 599 டாலர் என்ற அளவில், மாடல்களுக்கேற்ற வகையில் விலையிடப்பட்டுள்ளது. வை பி / எல்.இ.டி. வசதிகள் கொண்ட ஐபேட் மினி ஏர் 3 529 முதல் 729 டாலர் விலையில் உள்ளது. ஆனால், முந்தைய ஐபேட் மினி 2, 32 ஜி.பி. திறன் கொண்டது 349 டாலர் என விலையிடப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு லாபமே.


LG நிறுவனத்தின் G3 ஸ்டைலஸ் போன்

ன்னுடைய ஜி3 ஸ்டைலஸ் மொபைல் ஸ்மார்ட் போனை, அண்மையில் எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் qHD டிஸ்பிளே தரும் 5.5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. 

இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. 

எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இதில் இயங்குகின்றன. 

இதில் ரப்பர்டியம் ஸ்டைலஸ் பேனா ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புதிய இயக்கும் அனுபவம் கிடைக்கிறது. 

இதன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மாடல் போன் மட்டும் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாகத் தரப்படுகிறது. 

”நல்ல டிஸ்பிளே, நவீன வடிவமைப்பு மற்றும் தரத்தக்க விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜி3 ஸ்டைலஸ் மொபைல் ஏற்றதாக இருக்கும்” என இதனை அறிமுகப்படுத்துகையில் எல்.ஜி. நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அலுவலர் அமித் குஜ்ரால் தெரிவித்தார். 

இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், இனி வரும் மாடல்கள், பின்பற்றும் மாடல் போனாக ஜி3 ஸ்டைலஸ் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதன் மற்ற சிறப்பம்சங்கள்: ஒரு ஜி.பி. ராம் நினைவகம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் வழியாக மெமரி அதிகப்படுத்தும் வகையில் 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி. 

இதன் பரிமாணம் 149.3 x 75.9 x 10.2 மிமீ. எடை 163 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கும் எல்.ஜி. ஜி3 ஸ்டைலஸ் ஸ்மார்ட் போனின் அதிகபட்ச விலை ரூ.21,500 எனத் தரப்பட்டுள்ளது.


சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்

சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. 

அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. 

எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், போக்குவரத்திற்கான வழிகாட்டுதல்களை இந்த மேப் காட்டுகிறது. 

விண்டோஸ் போனில் கிடைக்கும், போன் இயங்கும் இடம் சார்ந்த அனைத்து வழி காட்டுதல்களும் இதில் கிடைக்கின்றன. 

இதன் சிறப்பு அம்சங்கள்: இணைய இணைப்பின்றி, கார் ஓட்டும் போதும், நடந்து செல்லும் போதும், குரல் மூலம் வழி காட்டுதல், நூறு நாடுகளில் வழி காட்டும் வகையிலான வரைபடங்களை தரவிறக்கம் செய்து, அமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் 46 நாடுகளில், 766 நகரங்களில், பொதுத்துறை வாகனங்கள் செல்லும் வழி மற்றும் திசை காட்டும் வரைபடம் ஆகியவை ஆகும். 

ஆண்ட்ராய்ட் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாம்சங் மொபைல் ஸ்மார்ட் போன்களில், இதனைப் பதிந்து இயக்கலாம். இது இலவசமாகக் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.samsungapps.com/appquery/appDetail.as?appId=com.here.app.maps


நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போன்

மைக்ரோசாப்ட், அக்டோபர் முதல் வாரத்தில், முன்பு அறிவித்தபடி, தன் நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 

இது செல்பி வசதியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் திரை 4.7 அங்குலத்தில் OLED டிஸ்பிளேயுடன் அமைந்துள்ளது. 

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. லூமியா டெனிம் அப்டேட் கொண்ட விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. 

இதன் முன்புறக் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் focal length 24 மிமீ. இதனால், தானாகவே போட்டோ எடுக்கும் செல்பி வசதி, கூடுதல் திறனுடன் இயங்குகிறது. பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து 6.7 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்குகிறது.

இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் ராம் நினைவகத் திறன் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,200 mAh திறன் கொண்டது. 

நல்ல பச்சை, ஆரஞ்ச், கருப்பு கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போன், இந்தியாவில் ரூ.15,299 என விலையிடப்பட்டு அறிமுகமாகியுள்ளது. 

இதனை வாங்குவோருக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் ஒரு டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பின் தொடர்ந்து பயன்படுத்த மாதந்தோறும் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன. 

இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம். 

லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்டு கொண்டே இருக்கும். Dynamic என்ற வகையில் அமைந்தவை. உங்கள் இடத்திற்கேற்ற, அந்த நேரத்தைய செய்திகளை, தகவல்களை இவை தந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டரைக் கூட பின் செய்து வைக்கலாம். 

ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கம், வழக்கம் போல விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தது போல் தரப்பட்டுள்ளது. எனவே, வழக்கம் போல, இதில் கிடைக்கும் தேடல் கட்டத்தைப் பயன்படுத்தி, நீங்கள் பெற விரும்பும் பைல் அல்லது அப்ளிகேஷனைப் பெறலாம். 

அத்துடன், அண்மையில் நீங்கள் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியலையும் இதில் பெறலாம். இதில் All Apps மெனுவும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியலையும் பெற்று, நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த அனைத்து புரோகிராம் பட்டியலுடன், நெட்டு வாக்கில் செயல்படும் ஸ்குரோல் பார் தரப்பட்டுள்ளது. எனவே, கூடுதலான புரோகிராம்களை அடுக்காகப் பெற்று குழப்பமடைய வேண்டியதில்லை. 

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் மேற்கொண்டது போல, புரோகிராம்களுக்காக பிரவுஸ் செய்திடாமல், இந்த தேடல் கட்டத்தின் வழியாக, எளிதாக அவற்றைப் பெறலாம்.

ஸ்டார்ட் மெனுவினை மிக அதிகமாகப் பயன்படுத்தி, அதனையே சார்ந்து பலர் இருந்ததனை மைக்ரோசாப்ட் உணர்ந்து கொண்டு, இப்போது பழைய முறைப்படி செயல்படும் ஸ்டார்ட் மெனுவினைத் தந்துள்ளது. 

குறிப்பாக நிறுவன திட்டங்களை மேற்கொண்டவர்கள், ஸ்டார்ட் மெனுவினை அதிகம் சார்ந்திருந்தனர். இதனை மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டதன் அடையாளமே, இப்போதைய ஸ்டார்ட் மெனு ஆகும். 

ஆனால், அதனுடன் புதிய யூசர் இண்டர்பேஸ் இணைந்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை, புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த விடுக்கும் அழைப்பாகும். நிச்சயம் பயனாளர்கள், புதிய வகை இடைமுகத்திற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.


அக்டோபருக்குள் 69 நாடுகளில் ஐபோன் 6

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் ப்ளஸ் மொபைல் போன்கள், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், 69 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் 115 நாடுகளில் இவை விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியா உட்பட சென்ற வாரம், இவை 36 நாடுகளில் விற்பனைக்கு வந்தன. 

முதலில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் அறிமுகமாகி, பெரிய அளவில் மக்களிடையே, இந்த போன்கள் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. 

சென்ற வாரம் சீனா மற்றும் இந்தியாவில் வெளியாகின. ஆப்பிள், தன் போன்களுக்கு நல்ல விற்பனைச் சந்தையை, அமெரிக்கா தவிர்த்து வெளிநாடுகளில் தான் உருவாக்க முடியும் என்று முடிவு செய்து இந்த தீவிர முடிவுகளை எடுத்துள்ளது. 

பெரிய அளவிலான திரை, மேம்படுத்தப்பட்ட செயல் திறன் கொண்ட கேமரா மற்றும் மொபைல் வழி பொருள்கள் வாங்குவதற்கான பணம் செலுத்தல் போன்ற வசதிகளால், இந்த இரு போன்களும் மக்களிடையே நல்ல பெயரைப் பெற்று வருவதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. 

அக்டோபர் 17ல் சீனா, இந்தியா மற்றும் மொனோகோ நாடுகளில் இவை அறிமுகமாயின. 

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23, 24, 30 மற்றும் 31 தேதிகளில், உலகின் பல நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்

தேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது. 

இது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது. 

இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

இதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய செட்டிங்ஸ் அனைத்தையும் இது மாற்றி அமைக்கும். 

இது நம்முடைய விருப்பத்தின் பேரில் தான் நடைபெறும். குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், அதில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், இதனைப் பயன்படுத்தலாம். 

வேறு ஏதேனும் புரோகிராம்கள், குரோம் பிரவுசரை அனுமதியின்றி பயன்படுத்தினால், அந்த புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.


விண்டோஸ் 10 - ஸ்டார்ட் மெனு மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன்

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு இல்லாததுதான், ஒரு பெரிய குறையாக விண்டோஸ் வாடிக்கையாளர்கள் உணர்ந்தனர். 

உலகெங்கும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. தற்போது, விண்டோஸ் 10ல் இரண்டும் வழங்கப்படுகிறது. 

டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு, மீண்டும் முழு செயல்பாட்டுடன் தரப்பட்டுள்ளது.

வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், சிஸ்டம் ஸ்டார்ட் மெனுவுடன் பூட் ஆகித் தொடங்கும். 

இதிலிருந்து, டெஸ்க்டாப் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெற ஆப்ஷன் கிடைக்கும்.

டேப்ளட் பி.சி. போன்ற சாதனங்களில், மாறா நிலையில் விண்டோஸ் 10, ஸ்டார்ட் ஸ்கிரீன் உடன் தொடங்கும். 

இதிலிருந்து, ஸ்டார்ட் மெனு செல்லும் ஆப்ஷன் கொண்ட விண்டோ, முன்பு போல ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் கிடைக்கும். 

இவற்றில் எந்த பிரிவிற்கு மாறினாலும், அடுத்து விண்டோஸ் பூட் செய்யப்படுகையில், ஏற்கனவே மாறா நிலையில் அமைக்கப்பட்ட ஸ்டார்ட் மெனு அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீன் உடன் தான், விண்டோஸ் 10 திறக்கப்படும்.


மொபைல் சாதனங்களில் தடம் அமையாத இணையம்

நாம் இணையத்தில் பார்த்துச் செல்லும் தளங்கள் குறித்த தகவல்கள், நாம் பயன்படுத்தும் பிரவுசர் தொகுப்புகளால் பதியப்படுகின்றன. 

இது குறித்து முன்பு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிரவுசர்கள், இந்த தடங்கள் எதுவும் இல்லாத தனிநபர் பயன்பாட்டினைக் (Private browsing) கொண்டு வந்தன. 

இந்த வகையில் இணையத்தில் உலா வருகையில், நாம் பார்த்த தளங்கள், தரவிறக்கம் செய்த கோப்புகள் குறித்த குக்கி பைல்கள் எதுவும் உருவாக்கப்படாமல் இருக்கும்.

பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த ஏற்பாட்டினை பிரவுசர்கள் தந்துள்ளன. அப்படியானால், மொபைல் சாதனங்களில், நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இந்த வசதி கிடையாதா? என்ற கேள்வி நம் மனதில் எழும். 

மொபைல் சாதனங்களிலும், இந்த பிரைவேட் பிரவுசிங் வசதி சில பிரவுசர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்களில் இந்த வசதி எப்படி நமக்குத் தரப்பட்டுள்ளது என்று இங்கு காணலாம்.

ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இயங்கும் கூகுள் குரோம், பயர்பாக்ஸ் மற்றும் டால்பின் பிரவுசர்களில் இந்த பிரைவேட் பிரவுசிங் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

அத்துடன், மொபைல் சாதனங்களில், பிரைவேட் பிரவுசிங் வழிகளுக்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் டால்பின் ஸீரோ மற்றும் இன்பிரவுசர்களில் (Dolphin Zero மற்றும் InBrowser) இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.


கூகுள் குரோம்: 

கூகுள் குரோம் பிரவுசரில், தடம் அறியா இணையப் பயன்பாட்டிற்கு “Incognito” நிலையில் ஒரு டேப் திறக்கப்பட வேண்டும். இதற்கு, நெட்டு வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள் அமைந்துள்ள மெனு பட்டனைத் தொடவும்.

கீழாக விரியும் பட்டியலில், “New incognito tab” என்னும் இடத்தில் தொட்டால், இந்த தடம் அறியாப் பயன்பாட்டிற்கான டேப் திறக்கப்படும். ஏற்கனவே திறக்கப்பட்ட டேப்களுக்குப் பதிலாக, புதிய Incognito டேப் திறக்கப்படும். கூடுதலாக ஐகான் ஒன்று கிடைக்கும். பிரவுசர் விண்டோவின் இடது மேல்புற மூலையில், ரகசிய போலீஸ் போன்ற தோற்றம் கொண்டவரின் படம் கொண்ட ஐகான் இருக்கும். 

குறிப்பு: இன்னொரு incognito டேப் திறக்கப்பட வேண்டும் எனில், அப்போதைய டேப்பிற்கு வலதுபுறம் உள்ள சிறிய டேப்பினைத் தொடவும். இந்த தனி காப்பு நிலையில் இருந்து விலகி வழக்கமான நிலைக்கு மாற, அனைத்து incognito டேப்களையும் மூடவும். மீண்டும் வழக்கமான நிலையில் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த இணையதளங்களுக்கான டேப்கள் காட்டப்படும்.


பயர்பாக்ஸ்: 

இதில் தனி நிலையில் இணைய உலா வர, Private tab ஒன்று திறக்கப்பட வேண்டும். பிரவுசர் விண்டோவின் வலது மூலையில், உள்ள மெனு பட்டனில் (நெட்டு வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள்) தொடவும். பின்னர் கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “New Private Tab” என்பதைத் தொடவும். 

ஒரு புதிய “Private Browsing” காட்டப்படும். ஏற்கனவே திறந்து பயன்பாட்டில் இருந்த வழக்கமான டேப்கள் இருக்காது. தொடர்ந்து தனி நிலை Private tab திறக்க வேண்டும் என விரும்பினாலோ அல்லது டேப்களை மூட வேண்டும் என விரும்பினாலோ, இடது மேல் மூலையில் உள்ள டேப் ஐகானைத் தொடவும்.

இப்போது பிரவுசரின் இடது புறம் ஒரு பிரிவு திறக்கப்படும். இதில் பிரைவேட் பிரவுசிங் நிலையில் திறக்கப்பட்ட டேப்கள் சிறிய அளவில் காட்டப்படும். இந்த பிரிவின் மேலாக, மூன்று ஐகான்கள் இருப்பதனைக் காணலாம். 

தனி நிலையில் இருக்கையில், மூடப்பட்ட ஐகான்கள் கீழாக கோடு தரப்பட்டிருக்கும். தனி நிலை டேப்களை மூடாமல், வழக்கமான இணைய உலா நிலைக்குச் செல்ல விரும்பினால், இடது பிரிவில் மேலாக உள்ள ஐகான்களில், இடது மூலையில் உள்ள ஐகானைத் தொடவும்.

தனி நபர் நிலையில் மேலும் ஒரு டேப் திறக்கப்பட விரும்பினால், இடது பிரிவில், கீழாக உள்ள கூட்டல் (plus sign) அடையாளத்தைத் தொடவும். இங்கு உள்ள சிறிய ஐகான் மறைக்கப்பட்ட நிலையில் காட்டப்படும். இது நீங்கள் தனி நிலையில் பிரவுசரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. 

குறிப்பு: தனிநிலையில் கண்டு கொண்டிருக்கும் தளங்களுக்கான அனைத்து டேப்களையும் நீங்கள் மூடிவிட்டால், நீங்கள் தானாகவே, பழைய, வழக்கமான பிரவுசிங் டேப்களுக்கு திரும்புவீர்கள்.


டால்பின் ஸீரோ (Dolphin Zero): 

இது டால்பின் பிரவுசரின் இன்னொரு வகையான பதிப்பு. பிரைவேட் பிரவுசிங் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கானது. இதில் மேற்கொள்ளப்படும் அனைத்து இணைய தேடல்களும், பிரைவேட் பிரவுசிங் வகையிலேயே இருக்கும். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடி, இன்ஸ்டால் பட்டனில் அழுத்தி, மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும்.

இது இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், இந்த டால்பின் ஸீரோ பிரவுசரைத் திறக்கவும். திறந்தவுடன், இந்த பிரவுசர், ஏற்கனவே பிரவுசரால் நீக்கப்பட்டது குறித்துக் கூறும். இந்த பிரவுசர் விண்டோவின் மேலாக உள்ள இதன் அட்ரஸ் பாரில், இணைய முகவரி ஒன்றை அமைத்து இயக்கவும். 

குறிப்பு: டால்பின் ஸீரோ பிரவுசரில், ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களை ஒரே நேரத்தில் திறக்க முடியாது. பிரவுசிங் முடித்த பிறகு, பிரவுசர் விண்டோவிற்குக் கீழாக உள்ள மெனு பட்டனைத் தொட்டு, கிடைக்கும் மெனுவில் “Exit” என்பதனைத் தொடவும். 

பிரவுசர் மூடப்படுவதற்கு முன்னால், பேப்பர் ஒன்று சுக்கு நூறாகக் கிழிக்கப்படும் நகரும் படக் காட்சி ஒன்று காட்டப்படும். உங்களின் இணைய தேடல் குறித்த அனைத்து தடயங்களும், மொத்தமாக நீக்கப்படுவதற்கான அறிகுறி இது.


இன்பிரவுசர் (InBrowser): 

டால்பின் ஸீரோ பிரவுசரைப் போலவே, பிரைவேட் பிரவுசிங் மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுக்கும் பிரவுசர் இது. ஆனால், இதில் ஒன்றுக்கு மேலாக டேப்களைத் திறந்து, ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைக் காணலாம். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் பிளே ஸ்டோரில், தேடி இதனை இன்ஸ்டால் செய்திடவும்.

இன்ஸ்டால் செய்த பின்னர், இதனை முதன் முதலில் திறக்கும்போது Changelog காட்டப்படும். “Back to InBrowser Startpage” என்பதனைத் தொட்டு, இதன் மாறா நிலையில் உள்ள தேடல் பக்கத்தினைக் காணவும். தொடக்க நிலையின் தேடல் பக்கம் காட்டப்படும். 

நீங்கள் இணையத்தில் எதனையேனும் தேடிப் பெற விரும்பினால், அதற்கான சொற்களை இதில் இடவும். அல்லது இணையப் பக்கத்திற்குச் செல்ல திட்டமிட்டால், பிரவுசரின் மேலாக உள்ள அட்ரஸ் பாரில், அதற்கான முகவரியினை அமைக்கவும். 

இன்னொரு டேப்பினைத் திறக்க எண்ணினால், பிரவுசர் விண்டோவில் வலது மேல் பக்க மூலையில் உள்ள மெனு பட்டனைத் தொடவும். அருகே கிடைக்கும் டயலாக் பாக்ஸில் கீழாகக் கிடைக்கும் “New Tab” என்பதில் தொடவும். மீண்டும் பிரவுசர் விண்டோவிற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். புதிய டேப் ஒன்று, தேடல் பக்கத்தில் காட்டப்படும்.

டேப்களுக்கு இடையே செல்ல வேண்டும் என்றால், மீண்டும் வலது மேல் பக்கம் உள்ள மெனு பட்டனைத் தொடவும். இப்போது எந்த இணைய தளம் செல்ல வேண்டுமோ, அதற்கான டேப்பினைத் தொடவும்.

குறிப்பு: டேப்களுக்கு இடையே மாறி மாறிச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால், “Back” பட்டனைத் தொடக் கூடாது. நம் மொபைல் போனில் உள்ள “Back” பட்டனையும் தொடக் கூடாது. எந்த இணைய தளம் மீண்டும் செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அது உள்ள டேப்பினைத் தொட்டே, அந்த இணைய தளம் செல்ல வேண்டும். 

இப்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர்களுக்கும், மொபைல் சாதனங்களில் இயங்கும் பிரவுசர்களுக்கும், தன் ரகசிய நிலை இணைய உலா மேற்கொள்வதில் இருக்கின்ற வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனி, தயக்கமின்றி, மொபைல் சாதனங்களிலும் தன் ரகசிய நிலையில் இணைய உலா செல்ல விரும்பினால், எளிதாகச் செல்ல உங்களால் முடியும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes