பேஸ்புக் களப் பதிவு நீக்கம்

வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். 

பதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.


நீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். 

அதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தலாம்.

உங்களுடைய பக்கத்தில் பதியப்பட்டுள்ள கருத்துக்களை நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், அதனை மறைத்தும் வைக்கலாம். இதே போல, யாருடைய குறிப்பிட்ட பதிவை மறைக்க விரும்புகிறீர்களோ, அதில் சென்று, வலது மேல் பக்கம் கர்சரை நகர்த்திப் பார்க்கவும். 

கிடைக்கும் மெனுவினைக் கிளிக் செய்து, பதிவை மறைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபரின் அனைத்து பதிவுகளையும் நீக்குவதற்கும் ஆப்ஷன் தரப்படும்.

உங்களுடைய டைம் லைனில், யாராவது ஒன்றைப் போஸ்ட் செய்து, அதனை நீக்க விரும்பினாலும், நீக்குவதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதே போல அம்புக் குறி மீது கிளிக் செய்து ஆப்ஷன்களைப் பார்க்கவும். 

குறிப்பிட்ட பதிவை நீக்கலாம். உங்களை டேக் (tag) செய்திருந்தால், அதிலிருந்தும் இதே போல உங்களை விலக்கிக் கொள்ளலாம். 

உங்களைச் சாராதது அல்லது பொருந்தாதது என்று கருதும் பதிவுகள், உங்கள் டைம் லைனில், மற்றவர்களிடமிருந்து அதிகம் பெற்றால், அது குறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு முறையிடலாம்.


நோக்கியா 515

நோக்கியாவின் இரண்டு சிம் போன்களில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா 515 சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. 

இரண்டு சிம் இயக்க போன்களைத் தாமதமாகவே தயாரித்த நோக்கியா நிறுவனம், தற்போது இந்த வரிசையில் பல போன்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். 

இதன் பரிமாணம் 114 x 48 x 11 மிமீ. எடை 101.1 கிராம். பார் டைப் வடிவிலான இதில் வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 

இதன் டச் ஸ்கிரீன் திரையில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

இதன் மைக்ரோ எஸ்.டி. போர்ட்டில் கார்ட் மூலம் 32 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் திறனை உயர்த்தலாம். இதன் முகவரி ஏட்டில், 1000 முகவரிகள் வரை பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகியவை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி திறனை அளிக்கின்றன. 


எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 5 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இது முகம் அறிந்து படம் எடுக்கும் திறன் கொண்டது. 

இரண்டாவது கேமரா தரப்படவில்லை. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, பதிவு செய்யப்படும் வசதியுடன் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளும் உள்ளன. 

இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. 912 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் 18 நிமிடங்கள் பேசும் திறனைத் தருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.10,299 மட்டுமே.


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம். 

பலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.


பைல் ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது, சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது. 

இதனால் என்ன என்கிறீர்களா? இதனால் தான் நமக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. பைல் ஒன்றை ""சேவ்'' அல்லது ""சேவ் அஸ்'' கொடுக்கையில், கிடைக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். 

இங்கு அப்போது காட்டப்படும் போல்டரில் உள்ள பைல்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பிரிக்கப்பட வேண்டும், அல்லது குழுவாக அமைக்க வேண்டும் என்பதனைத் தீர்மானித்து மேற்கொள்ளலாம். 

இந்த டயலாக் பாக்ஸில் "New” என்பதனைக் கூடத் தேர்ந்தெடுத்து, புதிய பைல் ஒன்றைத் திறக்கலாம். 

அதே போல, பைல் ஒன்றை சேவ் செய்கையில், திருத்தங்களுக்கு முந்தைய பதிப்பினையும், திருத்தங்களுடன் கூடிய பதிப்பினையும் தனித்தனியே சேவ் செய்திட விரும்பலாம். இதனை ஒரே முயற்சியில் அமைக்கலாம். 

சேவ் டயலாக் பாக்ஸில் இருக்கையிலேயே, பார்க்க விரும்பும் பைலில் ரைட் கிளிக் செய்து, "Open” தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பைல் புதிய விண்டோவில் திறக்கப்படும். 

இப்போது எந்த பைலையும் பிரிண்ட் செய்திடலாம், வேறு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம், நீக்கலாம் மற்றும் வேறு போல்டர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் அதே "Save” டயலாக் பாக்ஸில் இருந்தபடி மேற்கொள்ளலாம்.


மைக்ரோமேக்ஸ் A74 கேன்வாஸ்


அண்மையில் வெளியான ஆண்ட்ராய்ட் போன்களில், மைக்ரோமேக்ஸ் ஏ 74 கேன்வாஸ் பன் என்ற மொபைல் போன், பலரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399 எனக் குறிக்கப்பட்டுள்ளது. 

இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 

இதன் பரிமாணம் 133 து 67 து 10.10 மிமீ . இதன் திரை மல்ட்டி டச் இயக்கம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் ஸ்டோரேஜ் திறனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 

ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத் ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதன் கேமரா, ஆட்டோ போகஸ் வசதியுடன், 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. 

இதனை இயக்கும் ப்ராசசர், டூயல் கோர் திறனுடன் 1,300 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. 

இதில் இருவகை(கிராவிட்டி, ப்ராக்ஸிமிட்டி) சென்சார்கள் இயங்குகின்றன. எம்.பி.3 பிளேயர், கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், வேர்ல்ட் கிளாக், காலண்டர் மற்றும் அலார்ம் போன்ற வசதிகளும் உள்ளன. 

இதில் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன் கிடைக்கிறது. மின்சக்தி 155 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம்.


டாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை


தன் ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனம், எல்லையற்ற இசையினை (Endless Music) அளிக்கிறது. 

Hungama Mobile என்ற நிறுவனத்துடன் இணைந்த இந்த மதிப்பு கூட்டு சேவை வழங்கப்படுகிறது. 

இந்த சேவை கேட்டு பதிந்து கொள்பவர்கள், தேர்ந்தெடுக்கப்படும் கட்டண சேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு பாடல்களைக் கேட்டு மகிழலாம். 

இதற்கு எந்த தனி சாப்ட்வேர் அப்ளிகேஷனும் தேவையில்லாததால், சாதாரண தொடக்க நிலை போன் வைத்துள்ளவர்களும், இந்த சேவையினைப் பெற்று பயன்படுத்தலாம். 

எந்த பாடலாவது, மனதைக் கவர்ந்தால், அதனைத் தங்கள் காலர் ட்யூனாக அமைத்துக் கொள்ளும் வசதியும் தரப்படுகிறது. ஆனால், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். 

இது மூன்று நிலைகளில் கிடைக்கிறது. 300 நிமிடங்களுக்கானது ஆர்.சி.46, 600 நிமிடங்களுக்கு ஆர்.சி. 92 மற்றும் 1,000 நிமிடங்களுக்கு ஆர்.சி.131. முதல் இரண்டும் ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவது திட்டத்திற்கு, இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது.

59090 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்து, இந்த சேவையினைப் பெறலாம். செலுத்தப்படும் கட்டணம், கால அவகாசம் முடிந்த பின்னர் அல்லது குறிப்பிட்ட நிமிடங்கள், பாடல்களைக் கேட்டு முடித்த பின்னர் காலாவதியாகிவிடும்.

தற்போதைக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என டாட்டா டொகோமோ அறிவித்துள்ளது.


மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 

சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர். 

என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர், பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. 

உலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இங்கு காணலாம். 

1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.

1974 - ஐ.பி.எம். நிறுவனம் எஸ்.க்யூ.எல். தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது. டொனால்ட் சேம்பர்லின் மற்றும் ரேய்மண்ட் பாய்ஸ் இதனைக் கொண்டு வந்தனர்.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1979 - வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது. 

1984 - மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு, வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.

1985 - விண்டோஸ் 1.0. வெளியானது. 

1986 - இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வரராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார். 

1989 - மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது. 

1990 - NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.

1992 - விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர். 

1993 - மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.

1993 - விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.

1993 - விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. 

1995 - பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.

1995 - மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.

1995 - விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டது. 

1997 - விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.

1998 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது. 

1998 - ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது. 

2000 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது. 

2000 - எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டிருந்தது. 

2000 - நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது. 

2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன. 

2002 - மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது. 

2002 - டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது.இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது. 

2002 - விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.

2003 - டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் 2003 மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது. 

2003 - விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.

2003 - எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

2003 - மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது. 

2003 - விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.

2003 - மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன. 

2006 - 64 பிட் சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.

2006 - டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.

2006 - புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.

2007 - ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச் சர்வர் 2007 வெளியானது. 

2007 - மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 வெளியானது.

2008 - விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

2009 - விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

2009 - ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.

2010 - டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது. 

2010 - ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது. 

2010 - ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது. 

2010 - மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.

2012 - விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

2012 - டாட் நெட் 4.5 சோதனையில் இருந்தது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.

2012 - புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேடிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சரித்திரத்தில் முற்றிலுமான ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது.

2012 - சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.

2013 - இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியானது. தொடர்ந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் விண்டோஸ் 8.1 வெளியானது.


கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. 

இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. 

நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம். 


ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன?

டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ் (Under Voltage) ஆகும். 

அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர்.

வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, சற்று காலத்திற்கு, குறுகிய நேரத்திற்குக் குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள். இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். 

சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.


பவர் கண்டிஷனிங்: 

மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. 

Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. 

அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர். 


கூகுள் விதித்த தடை

என்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது. 

கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது. 


இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது. 

இந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும். 

பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன. 

இது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.


கூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது. 

அவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


எப்போதும் புதிய பிரவுசர் ஒன்று பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கூகுள் அதற்கும், அதற்கு முந்தைய பதிப்பிற்கு மட்டுமே தன் ஆதரவினை வழங்கும். தன் அப்ளிகேஷன்களின் இயக்கத்தினை அதற்கு முந்தைய பிரவுசரில் இயக்கவிடாது. 

ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ,7 மற்றும் 8, ஆகியவை கூகுள் நிறுவனத்தால் தள்ளிவைக்கப்பட்டன. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 விண்@டாஸ் எக்ஸ்பியில் இயங்காது. எனவே, எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தினை முற்றிலும் பல வழிகளில் முடக்கவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கூகுள் எப்போதும், அண்மைக் காலத்தில் வெளியான பிரவுசர் மற்றும் அதற்கு முந்தைய பிரவுசர்களைப் பயன்படுத்தியே தன் அப்ளிகேஷன்களை இயக்க வேண்டும் என விரும்பும். அதற்கேற்ற வகையில், தன் அப்ளிகேஷன்களை மாற்றி அமைத்திருக்கும். எனவே தான் இந்த அறிவிப்பு.

இதில் என்ன வேடிக்கை என்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான சப்போர்ட்டினை வரும் 2020 ஆம் ஆண்டு வரை தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கினால் மட்டுமே, இதன் சப்போர்ட் கிடைக்கும். 

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், வேறு ஒரு பிரவுசருக்கு, பயர்பாக்ஸ், கூகுளின் குரோம், ஆப்பரா ஆகியவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொண்டு, கூகுள் தரும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். 


உங்கள் வசதிப்படி விண்டோஸ் 7

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம். 
அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.ஸ்டார்ட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க: 

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். 

இவை தேவைப்படாதவர்கள், "இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.

ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது. 

விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும்.விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். 

இதில் "Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். "All Programs” என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் "Games” என்ற போல்டருக்குச் செல்லவும். 

அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Cut” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.


விண்டோஸ் 7 யூசர் படம் மாற்ற: 

விண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் உள்ள பயனாளர்களின் அக்கவுண்ட் காட்டப்பட்டு அவர்களுக்கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் போட்டோக்களை இணைத்திருப்பார்கள். சிலர் எதுவும் இல்லாமல் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த வேறு படங்களை அமைத்திருப்பார்கள்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் சற்று நேரம் இயங்கினால், இதில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அறியலாம். அதில் ஒன்று, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கான அக்கவுண்ட்டில் காட்டப்படும் படங்களை மாற்றுவது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.

ஸ்டார்ட் மெனு சென்று, சர்ச் பீல்டில் கிளிக் செய்து அதில் "User Accounts” என டைப் செய்து என்டர் தட்டவும். இந்த தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும் பட்டியலில், "Manage another account” என ஒரு லிங்க் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். 

இப்போது புதிய டயலாக் திரை காட்டப்படும். இது கண்ட்ரோல் பேனலில் எழுந்து வரும். இதில் எந்த யூசர் அக்கவுண்ட்டிற்கு படத்தினை மாற்ற வேண்டுமோ, அந்த அக்கவுண்ட்டில் டபுள் கிளிக் செய்திடவும். அடுத்து, அக்கவுண்ட் எடிட் செய்வதற்கான வழி காட்டப்படும். 

இதில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இன்னொரு புதிய டயலாக் திரை காட்டப்படும். இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும் மாறா நிலையில் உள்ள படங்கள் காட்டப்படும். இதிலிருந்து ஒரு படத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது பிரவுஸ் செய்து நீங்கள் விரும்பும் படத்தினை, அது வைக்கப்பட்டுள்ள போல்டரிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

இனி மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கினால், மாற்றப்பட்ட படம் அதற்கான யூசர் அக்கவுண்ட்டுடன் காட்டப்படும்.

உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் மட்டுமின்றி, பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? 

சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழிகளைத் தருகிறது. கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால், குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே, மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால், இதனைச் செயல்படுத்த முடியாது.)

விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு "gpedit.msc” என டைப் செய்திடவும். பின்னர் "Enter” அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் "Administrative Templates” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் "System” என்ற போல்டரில் கிளிக் செய்திடவும். 

இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில், கீழாகச் சென்று "Run only specified Windows applications” என்பதனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Enabled” என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள "Show” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது "Show” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து, பின்னர் "OK” பட்டனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக, ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும். பாதுகாப்பினை நாடும் உங்கள் விருப்பமும் நிறைவேறும்.


தோற்றமும் வண்ணமும் மாற்ற: 

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மாற்றலாம் என்பதைக் காணலாம். குறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திடும் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.

விண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். 

இனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங் களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும். 

இதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்றவற்றிற்கான வசதிகளைக் காணலாம். 

இவற்றை மாற்றிய பின்னர், advanced என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எழுத்து வகை, ஐகான் அளவு, ஐகான் வடிவம் ஆகியவற்றை மாற்றுவதற்கான லிங்க்ஸ் கிடைக்கும். அனைத்தையும் விருப்பம் போல் மாற்றிவிட்டு, save changes என்பதில் கிளிக் செய்து வெளியேறினால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அமல்படுத்தப் பட்டிருப்பதனைக் காணலாம்.


ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்

திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். 

வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். 

இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 1. தேவையான ஒளி உணர்வலை (ambient light sensor):

டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. 

டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.


2. அருகமைவு உணர்வலை (Proximity sensor): 

இந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. காதருகே கொண்டு சென்றவுடன், திரைக் காட்சி அணைக்கப்படுகிறது. அத்துடன், தேவையற்ற திரைத்தொடுதல்களை உணரா வண்ணம் செயல்படுகிறது. 

உங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்தும் செயல்படும். இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன. 

ஐபோனைப் பொறுத்தவரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, தொடு உணர்ச்சியினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல்பாட்டினையும் முடக்குகிறது.


3. புவி இட நிறுத்தல் (GPSGlobal Positioning System): 

தொடக்கத்தில், இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1980க்கும் பின்னர், பொதுமக்களுக்கும் தரப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது. 

இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான சாட்டலைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து "Assisted GPS” என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது. 

நேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. ஐபோன் 3ஜி, 3ஜிஎஸ், 4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 4 எஸ், GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. 


4. அக்ஸிலரோமீட்டர் (accelerometer): 

ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. 

எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.


5. காம்பஸ் (Compass): 

அடிப்படையில் காம்பஸ் என்பது, புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட் போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது.

மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுவதனைக் காணலாம். 

இவை இன்னும் தொடர்ந்து ஆய்வில் மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் பயன் தரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. 

பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. 

அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன. 

முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது. 

நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.


இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.

1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். 

2. "Settings” திரை காட்டப்படுகையில், "General” என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.

3.இங்கு கீழாகச் சென்று, "Complete contacts for autocomplete” என்று இருப்பதனைக் காணவும். 

அங்குள்ள "I'll add contacts myself” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

தொடர்ந்து "Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.


விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11

சென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

விரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்தும் பயனாளர் எண்ணிக்கை வேகமாக உயரும். முன்பு பதிப்பு 9 க்குப் பதிலாக, பதிப்பு 10 வெளியான போது, பயனாளர் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்தது.


இம்முறை தானாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படுவதால், நிச்சயம் பயனாளர்கள் தாங்களாகவே, பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். 

ஆனால், சில நிறுவனங்கள், தாங்கள் தங்களுக்கென வடிவமைத்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிப்பு 11ல் இயங்குமா என்ற சந்தேகத்தினைக் கொண்டுள்ளனர். 

அவர்கள், தாமாக அப்டேட் செய்து, பயனாளர்களைக் கட்டாயமாக பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தூண்டும் நடவடிக்கையை வெறுக்கின்றனர். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ,http://www.microsoft.com/enus/download/details.aspx?id=40902 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.


நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. 


மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்க@ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். 

பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசியபடியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்க விடப்பட்டனர். 

ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது. 

இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. 

இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. 

உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்து வதைத் தவிர்ப்போம்.


இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா


இந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. 

சென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது. 

இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும். 

கடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. 

பி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.


அச்சுறுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்


நம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது. 

இருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. 

இதனை ஒரு பயனாளராக நான் மட்டும் சொல்லவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனை ஒத்துக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், எந்த நேரத்தில் என்ன விளைவினைத் தருமோ என்ற தயக்கத்துடன் தான் நாம் அவற்றை இயக்குகிறோம். 

இதனால் தான், தன் விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட் வேறு எந்த பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிக்கவில்லை. 

இதனைப் பயன்படுத்துவோர் எந்த மால்வேர் கலந்த புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் பதிக்க முடியாது. டெக்ஸ்க்டாப்பில், குப்பைகளாக, பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் ஐகான்களை அடுக்க முடியாது. 

அதனாலேயே, விண்டோஸ் ஆர்.டி. இயக்கம், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்குவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.


1. மால்வேர் வருகை குறையவே இல்லை: 

மால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களில் கை தேர்ந்தவர்களை அணுக முடியாது. அதற்கான பாதுகாப்பு அரணை அவர்கள் தங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துவிடுகின்றனர். 

ஆனால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. இன்றைய நிலையில், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட துணைப்பெயர்களுடனான பைல்கள் அபாய விளைவினை ஏற்படுத்தும் குறியீடுகளைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

மேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் பிறவற்றிலும், மால்வேர் புரோகிராம்கள் நுழையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாம் எழுதலாம், பேசலாம். 

ஆனால், இன்றைய நிலையில், இந்த சாதனங்களில், மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து பாதக விளைவினை ஏற்படுத்துகின்றன என்பது, எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகளாகத்தான் தென்படுகின்றன.

தன் மாறா நிலையில், மேக் கம்ப்யூட்டர்கள், தான் அறிந்து ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் பைல்களை இயக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல, ஆண்ட்ராய்ட் பதியப்பட்டு இயங்கும் சாதனங்களிலும், அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் பயனாளர்கள் கொண்டுள்ள சாதனங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் இயங்குகின்றன. 

கூகுள், இதற்கென, ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனங்களுக்கென, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இவை பழைய ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பு முதல் கிடைக்கின்றன. எனவே, விண்டோஸ் சிஸ்டங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் எளிதாக இயங்குகின்றன என்பதே உண்மை.


2. தயாரிப்பாளரின் புரோகிராம்கள்: 

விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பான தெனத் தாங்கள் நினைக்கும் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் பதிந்தே விற்பனை செய்கின்றன. இவற்றை Bloatware என அழைக்கின்றனர். 

ஒரு மேக் கம்ப்யூட்டர், குரோம் புக், ஐ பேட், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி., லினக்ஸ் லேப்டாப், ஏன் விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் சர்பேஸ் டேப்ளட் பிசியைக் கூட இயக்கத் தொடங்குங்கள். நீங்கள் பெறும் அனுபவம், புதிய ஒன்றாக இருக்கும். 

நீங்கள் விரும்பிய புரோகிராம்களே அங்கு அமையும். ஆனால், விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எனில், தொடக்கமே ஒரு குழப்பமாய் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் பதித்த பல தேவையற்ற புரோகிராம்களை நீக்க வேண்டியதிருக்கும். உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களைத் தேடிப்பிடித்து பதிய வேண்டியதிருக்கும். 


3. எது பாதுகாப்பானது? 

விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் புரோகிராம்களில், உங்கள் தேவைக்கான புரோகிராம்களை, பிரவுசரின் தேடல் டூல் மூலம் தேடிப் பெறலாம். உங்கள் தேவைக்கான புரோகிராம்கள், குறைந்தது பத்துக்கும் மேலாக இருக்கும். 

ஆனால், எது பாதுகாப்பானது என்று நீங்கள் சரியாக உணர முடியாது. பாதுகாப்பான புரோகிராம் என உறுதியாக முடிவு செய்து, அதனை டவுண்லோட் செய்திடச் சென்றாலும், அருகே காணப்படும் விளம்பரங்களில் காட்டப்படும் புரோகிராம்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நம் மனம் எண்ணும். 

பல வேளைகளில் இந்தத் தூண்டுதலுக்கு அடிமையாகி, நாம் வம்பை விலைக்கு வாங்குகிறோம். ஆனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், அந்த சிஸ்டம் ஏற்கனவே சோதனை செய்து, பாதுகாப்பானது எனச் சான்றளித்த புரோகிராம்களை மட்டுமே பதிந்து இயக்க முடியும்.


4. உடன் வரும் தொல்லைகள்: சரியான, பாதுகாப்பான, சான்றளிக்கப்பட்ட புரோகிராம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் கம்ப்யூட்டரில் பதிந்தாலும், அதனைப் பதிகையில், பல தொல்லை தரும் அப்ளிகேஷன்களும், நாம் அறியாமலேயே பதியப்படும். 

விளம்பரங்கள் (adware), பிரவுசருக்கான தேடல் டூல் பார்கள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சர்ச் இஞ்சினை மாற்றும் டூல்கள், பிரவுசரின் தலைப்புப் பக்கத்தை மாற்றும் டூல்கள் என இவை பலவகைப்படும். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துகையில், இவை நம் கவனத்திற்கு வந்து, நமக்குத் தீராத தொல்லையையும், கவலையையும் கொடுக்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில புரோகிராம்களை நிறுவுகையில் கூட இது போல நடக்கிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கான ஸ்கைப் புரோகிராமினை நிறுவுகையில், அது நம் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றும். பிங் தேடுதளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திடும். ஹோம் பேஜினை மாற்றி அமைக்கும். 

மைக்ரோசாப்ட் நிறுவனமே, இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகையில், மற்ற புரோகிராம்களைத் தரும் பிற நிறுவனங்கள், இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில் வியப்பே இல்லை.


உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்

இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. 

புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. 

இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 


சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. 

ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். 

ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது. 

இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.

கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. 

கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

* புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.

* சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.

* வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.

மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.


கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். 

ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.1. கூகுள் ரீடர் (Google Reader RSS reader): 

சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. 

இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். 

சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். 

ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.
2. ஐகூகுள் (iGoogle): 

இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. 

குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது. 

எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது. 
3. லேட்டிட்யூட் (Latitude): 

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. 

மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது. 

ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.
4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time): 

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். 

கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது. 
5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER): 

கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள். 

இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.
6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT): 

இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.
7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY): 

ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.
8. கூகுள் சிங்க் (GOOGLE SYNC (Consumer version): 

இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது. 

ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். 

மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes