இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட


சந்தேகப்படும்படியான இணைய தளங்களுக்குச் செல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும். 

உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கவும், பிரவுசரின் செயல் திறன் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளவும் சுத்தப்படுத்துதல் முக்கியமாகும். இங்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் சுத்தம் செய்வதற்கென கிடைக்கும் சில புரோகிராம்கள் குறித்து பார்க்கலாம்.


1. சிகிளீனர்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமின்றி, அனைத்து பிரவுசரின் தேவையற்ற பைல்களை நீக்கிடும் பிரபலமான புரோகிராம் சிகிளீனர். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்வது, புரோகிராம்களை கம்ப்யூட்டரின் பதிவிலிருந்து முழுமையாக நீக்க்குவது போன்ற செயல்களையும் இது மேற்கொள்ளும். 

இலவசமாக இணையத்தில் இது கிடைக்கிறது. கிடைக்கும் தள முகவரி : http://download.cnet.com/CCleaner/ 300018512_410315544.html?tag=main;pop
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது நாம் குறிப்பிடும் குக்கி பைல்களை மட்டுமே நீக்கும். அந்த ஆப்ஷனை நமக்குத் தருகிறது. 


2. ப்ரீ இன்டர்நெட் எரேசர் (Free Internet Eraser):

விண்டோஸ் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் ஏற்படுத்தும் நம் இணைய தடங்களை, முழுமையாக நீக்கும் புரோகிராம் இது. பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக இன்டர்நெட் பைல்கள், குக்கிகள் போன்றவற்றை இது நீக்குகிறது. 

இதன் ஒரு சிறப்பம்சம், இதன் செயல்பாட்டினைக் கால வரையறையுடன் செட் செய்திடலாம். அழிக்கப்பட்ட பைல்களை முழுமையாகக் கம்ப்யூட்டர் சிஸ்டத்திடம் இருந்து நீக்க வேண்டுமெனில், கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

மற்றபடி, அனைத்து வகையான பாதுகாப்பான செயல்களை மேற்கொள்ள இந்த புரோகிராம் போதும். இலவசமாக இதனைப் பெற, http://download.cnet.com /FreeInternetEraser/ 30002144_410262217.html? tag=mncol;9 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 


3. சிஸ்டம் அண்ட் இன்டர்நெட் வாஷர் ப்ரோ (System and Internet Washer Pro):

இன்டர்நெட் பிரவுசர் ஏற்படுத்தும் வெப் பிரவுசர் ஹிஸ்டரி, பிரவுசர் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள் மற்றும்குக்கீஸ் புரோகிராம்களை மிக எளிதாக நீக்கும் புரோகிராம். இதில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான கிளீனர் தொகுப்பும் உள்ளது. ஒரு பாப் அப் பிளாக்கரும் தரப்பட்டுள்ளது. 

இந்த ஒவ்வொரு வசதிக்கான செயல்பாடும் தனித்தனி டேப்களில் காட்டப்படுகிறது. இதன் மூலம் நாம் எவற்றை நீக்க விரும்புகிறோமோ, அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கலாம். இதன் இன்னொரு சிறப்பு, இதில் உள்ள டிஸ்க் டேப். இதனைத் தொடுவதன் மூலம், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அழிக்கப்பட்ட பைல்கள், நிரந்தரமாக நீக்கப்படுகின்றன. 

இந்த புரோகிராமைப் பொறுத்த வரை உள்ள சிக்கல் என்னவென்றால், இதனைப் பெற 34.95 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், 15 நாட்களுக்கு தொடக்கத்தில் இலவசமாகச் செயல்படுத்திக் கொள்ளலாம். 

இதனைப் பெறவும், மேலதிகத் தகவல் பெறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரி: http://download.cnet.com/SystemInternetWasherPro/300012512_410148124.html?tag=mncol;9 Free Internet Explorer


4. ரியல் டைம் குக்கி அண்ட் கேஷ் கிளீனர் (RealTime Cookie and Cache Cleaner):

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம்களில் இது சற்று வித்தியாசமானது. நீங்கள் இன்டர்நெட் பிரவுசர் வழியாக பிரவுஸ் செய்திடும் போதே, அதில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கவும் செய்திடலாம். இதனால், பிரவுசிங் வேகம் மற்றும் செயல் திறன் பாதிக்கப்படாது. 

இதனைப் பெற http://download.cnet.com/RealTimeCookieCacheCleaner/300012512_410042769.html?tag=mncol;6 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனை 9.95 டாலர் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். இருப்பினும் இலவசமாக 30 நாட்கள் பயன்படுத்திப் பார்க்க அனுமதிக்கப்படுகிறோம். 


5. ட்ரேக்ஸ் எரேசர் ப்ரோ (Tracks Eraser Pro):

சில அடிப்படை கிளீனிங் வேலைகளுக்கும் மேலாக, மேலும் சில செயல்பாடுகளை இந்த புரோகிராம் மேற்கொள்கிறது. இது பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சில பிரவுசர்களிலும் செயல்படுகிறது. பைல்களை நீக்கும் முன், சோதனையாகச் சிலவற்றை நீங்கள் நீக்கிப் பார்க்கலாம். 

இதில் பைல் ஷ்ரெடர் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு பைலையும் அதன் மிச்சம் மீதி இல்லாமல், சுத்தமாக நீக்கிவிடலாம். 

அதைக் காட்டிலும் இன்னும் ஒரு சிறப்பம்சம் இதில் தரப்பட்டுள்ள பாஸ் கீ (boss key). இதனைப் பெற 29.95 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இருப்பினும் 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். 

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://download.cnet.com/TracksEraserPro/30002144_ 410074643.html?tag=mncol;10


ஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்


ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. 

வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.

இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. 

எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. 

ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். 

Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. 

நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. 

இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.


நோக்கியா லூமியா 620


ஒருவழியாக, நோக்கியா நிறுவனம், தன் லூமியா வரிசையில் வடிவமைத்த நோக்கியா 620 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலை விலையில், விண்டோஸ் 8 போனாக வெளிவந்துள்ள இந்த மொபைல் போன், சியான், பச்சை மற்றும் மெஜந்தா வண்ணங்களில் கிடைக்கிறது. 

இன்னும் சில மாதங்களில், மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவரும் எனத் தெரிகிறது. வர்த்தக இணைய தளங்களில் ஒரு வாரத்தில் இந்த போன் டெலிவரி செய்யப்படும் எனவும் காட்டப்பட்டுள்ளது. 

இந்த சிறிய விண்டோ போன் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதன் திரை 3.8 அங்குல அகலத்தில் உள்ளது. இதன் ரெசல்யூசன் 800x480 பிக்ஸெல்களாகும். 

இதன் அமைப்பு இரண்டு அடுக்குகளாக அழகாக அமைந்துள்ளது. இதன் ப்ராசசர் ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4. ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதனை அதிகப்படுத்தலாம். 

5 எம்பி திறனுடன் கூடிய ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ திறனுடன் இயங்குகிறது. என்.எப்.சி., 3ஜி, புளுடூத் மற்றும் பைல் ட்ரான்ஸ்பர் வசதிகள் உள்ளன. விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்குகிறது.

இதன் இன்னொரு சிறப்பம்சம், இதில் உள்ள முன்புற கேமரா. இந்த வரிசையில் இதற்கு முன் வந்த மொபைல் போன்களில் ஒரு கேமரா மட்டுமே தரப்பட்டுள்ளது.

மத்திய விலையில், ஒரு முழுமையான விண்டோஸ் ஸ்மார்ட் போனாக நோக்கியா லூமியா 620 வந்துள்ளது. இது மொபைல் விற்பனைச் சந்தையில் என்ன தாக்கத்தினை ஏற்படுத்தப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

ஐடியா செல்லுலர் நிறுவனம், ஸீல் (Zeal) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது. 

சிறிய நகரங்களில் உள்ள 3ஜி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப் பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இதில் செயல்படுகிறது. 

இதில் 3 எம்பி திறன் கொண்ட, நிலைத்த போகஸ் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 256 எம்பி ராம், 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 4 ஜிபி மெமரி கார்ட், புளுடூத், வை-பி ஆகியவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.5,390.


எதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்


டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன. 

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? 

பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். 

கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.


1. லேப்டாப்:

லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அண்மைக் காலங்களில், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களின் செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. 

லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கிடையே, இயக்க முறை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இணைவாய் இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் 8 இதற்கு முதல் பாலத்தை அமைத்துள்ளது. எதிர்காலம் இனி டேப்ளட் பிசிக்களுடையதாய் இருக்கும். 

13 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசிக்கள் இந்த பணியை மேற்கொள்ளும். செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் திறன் கூடிய பிளாஷ் ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன. பற்றாக் குறைக்கு ஈடு கொடுக்க க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறை கை கொடுக்கிறது. 

இதற்கான இணைய இணைப்பு வேகமும் முறைகளும், எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் அமைந்து வருகின்றன. கூகுள் ஒரு நகரம் முழுமையும் தற்போது உள்ள இணைய வேகத்தினைக் காட்டிலும் 400 மடங்கு வேகத்தில் இணைய இணைப்பு தந்து, இந்த தொழில் நுட்பம் சாத்தியமே என்று காட்டியுள்ளது. 

வீட்டில் ஒரு டெஸ்க் டாப் பெர்சனல் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு, அதனைச் சார்ந்த அனைவரும் கையடக்க டேப்ளட் பிசிக்களைத் தூக்கிச் சென்று, பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பு பெற்று தங்கள் பணியை முடிக்க இயலும்.


2. டேப்ளட் பிசி:

இந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே. இந்த ஆண்டில், 16 கோடியே 59 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்படும் (2012ல் இது 11.71 கோடி) என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 

இது 2016ல், 26 கோடியே 14 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராசசர் வரிசையிலும், ஏ.ஆர்.எம். ப்ராசசர் இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் இவற்றின் சிறப்பான செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு டேப்ளட் பிசிக்கள் சந்தையில், விண்டோஸ் 8 இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்கள் தங்கள் சிறப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 


3. ஸ்மார்ட் போன்:

அதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம், மொபைல் ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டு வருகிறது. இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பட்டியல் இடலாம். முதலாவதாக, வயர்லெஸ் சார்ஜிங். எந்தவித இணைப்பும் இல்லாமல், இந்த போன்களை சார்ஜ் செய்திடலாம். 

HTC Droid DNA மற்றும் Nokia Lumia 920 ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகத் தற்போது உள்ளன. அடுத்து, குவாட் கோர் ப்ராசசர்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது பெருகும். ஸ்மார்ட் போன்களில், அதிவேக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், கூடுதல் வேகத்தில் விளையாட வேண்டிய கேம்ஸ்களுக்கு இணையாக இயங்கவும், ஹை டெபனிஷன் வீடியோ படங்களைப் பார்ப்பதற்கும் இவை பெரும் அளவில் உதவிடும். 

அடுத்து, மொபைல் போன்களின் திரைகளைக் குறிப்பிடலாம். 5 அங்குல திரை என்பது இன்றைய நடைமுறையாகி வருகிறது. இன்னும் இதில் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இதன் பயன்பாட்டினை அதிகப்படுத்தும். முக்கிய செயல்பாடாக, அடுத்து, நாம் பார்க்க வேண்டியது அண்மைக் கள தகவல் தொடர்பு (NFC–Nearfield communication) தொழில் நுட்பம். 

2012ல் வெளியான இந்த தொழில் நுட்பம், சென்ற ஆண்டில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த ஆண்டில் இது பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். என்.எப்.சி. தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன்களைப் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பலருக்குப் புரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டில், இது பரவலாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 


4. டிவிக்கள்:

இந்த ஆண்டில் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அளவில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் திரைக் காட்சிகளின் பரிமாணங்களில் மாற்றம் நிச்சயம் இருக்கும். 

அல்ட்ரா ஹை டெபனிஷன் காட்சித் தோற்றம் கிடைக்கும் வகையில் ரெசல்யூசன் மிக மிக அதிகமாக இருக்கும். பல டிவி தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அல்ட்ரா ஹை டெபனிஷன் திரை கொண்ட டிவிக்களை வெளியிட உள்ளன. 

டிவியின் அடிப்படையில் மானிட்டர் திரைகள், அல்ட்ரா ஹை டெபனிஷன் மட்டும் இல்லாமல், குறைவான மின் சக்தியில் இயங்குபவையாகவும், குறைவான தடிமன் உள்ளவையாகவும் இருக்கும். திரைகள் வரிசையில், தொடு உணர் திரைகள் இனி அதிகம் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 8 இதனை ஜன ரஞ்சகமாக்கிவிட்டதால், இனி இத்தகைய திரைகளே, சந்தையில் அடிப்படை திரைகளாக இருக்கும்.


5. ஸ்டோரேஜ் டிஸ்க்:

இந்த ஆண்டில் ஹார்ட் ட்ரைவின் விலை தொடர்ந்து குறையாமலே இருக்கும். தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. ஆனால், சாலிட் ஸ்டேட் டிஸ்க் தயாரிப்பு நிச்சயம் அதிகமாகும். 

இதன் விலை குறையும். டிஜிட்டல் சந்தையில் இன்னும் பல சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். 

பிரிண்டர்களில் மூன்று டைமன்ஷன் பிரிண்டிங், ரௌட்டர் இயக்கத்தில் கூடுதல் வேகம், நாம் பேசுவதைப் புரிந்து கொண்டு செயலாற்றும் டிவி, கம்ப்யூட்டர் செயல்பாடுகளையும் ஏற்று காட்டும் தடிமன் குறைவான திரைகள் எனப் பலவற்றைக் கூறலாம். 

இவை இந்த ஆண்டு வெளிவரும்போது அவை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கு காணலாம்.


வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்


தன் வாடிக்கையாளர்களின் அடங்காத கோபத்தினைப் பார்த்த பின்னர்,மைக்ரோசாப்ட் தன் கொள்கையை அண்மையில் மாற்றிக் கொண்டது. 

ஆபீஸ் 2013 தொகுப்பினை வாங்கியவர்கள், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே அதனை இன்ஸ்டால் செய்திட முடியும். 

அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் இயக்க முடியாத நிலைக்குப் பழுதாகிப் போனால், ஆபீஸ் தொகுப்பினை வேறு ஒரு கம்ப்யூட்டரில் நீங்கள் இன்ஸ்டால் செய்திட முடியாது. 

மைக்ரோசாப்ட் இத்தகைய ஒரு திட்டத்தினை அறிவிக்க, அதன் வர்த்தக ரீதியான காரணம் ஒன்று இருந்தது. ஆபீஸ் தொகுப்பினை சந்தா (subscription) கட்டியும் பயன்படுத்தலாம். 

இந்த வகையில் ஆண்டு ஒன்றுக்கு 99 டாலர் செலுத்தினால் போதும். ஆபீஸ் 2013 தொகுப்பு, அது தரும் வசதிகளுக்கேற்ப, 140 டாலர் முதல் 400 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 

எனவே, தனக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில், மொத்தமாகச் செலுத்தி வாங்குபவர்கள், சந்தா கட்டிப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் இத்தகைய விதியை ஏற்படுத்தியது. 

ஆனால், எம்.எஸ். ஆபீஸ் உரிமம், ஒரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே செல்லுபடியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது வாடிக்கையாளர்களை கோபம் கொள்ளச் செய்தது. பல நாடுகளிலிருந்து கண்டனக் கணைகள் பறந்தன. 

இந்த எதிர்பாராத கோபத்தினைப் பார்த்ததும், மைக்ரோசாப்ட் தன் கொள்கை முடிவினை மாற்றிக் கொண்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட முடிவின்படி, ஒரு கம்ப்யூட்டருக்கு வாங்கப்பட்ட உரிமத்தினை, இன்னொருவரின் சம்மதத்துடன் அவரின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஆனால், ஒரு நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்களின் கம்ப்யூட்டர் இயங்க மறுத்தாலோ, அல்லது நீங்கள் புதிய கம்ப்யூட்டருக்கு மாறினாலோ, இந்த சலுகை வழங்கப்படுகிறது. 

இதுவும் 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தான் அனுமதிக்கப்படும். ஆனால், ஹார்ட்வேர் பிரச்னையினால், மாறுதல் வேண்டி இருந்தால், இந்த 90 நாள் காலவரையறை தளர்த்தப்படும். 

இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


காலக்ஸி S3 மினி மொபைல் போன்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் காலக்ஸி எஸ் 4 மினி மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 

ஆப்பிள் நிறுவனத்திந் ஐ போன் 5 மொபைல் போனுக்குப் போட்டியாக இதனைக் களம் இறக்கியுள்ளது. 

இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் ஹை டெபனிஷன் டச் ஸ்கிரீனாக உள்ளது. இதன் டிஸ்பிளே தன்மை 800 து 480 பிக்ஸெல் கொண்டது. கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் உடையது. 

இதன் டூயல் கோர் சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் விலையை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. வர்த்தக ரீதியாகக் கடைகளில் கிடைக்கும் நாளையும் தெரியப்படுத்தவில்லை. 

இதன் திரை, ஐபோன் 5 அளவிற்கு இருந்தாலும், மற்ற தொழில் நுட்பத் திறன்கள் குறைப்பு, இதனை ஐ போன் அளவிற்கு உயர்த்துமா என்பதை வாடிக்கையாளர்களே சொல்வார்கள்.


சோனியின் புதிய Experia Z


ஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் சூடு பிடிப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் இதில் தங்கள் பங்கினைப் பெற புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

அந்த வகையில், சென்ற வாரம் சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38,990. 

இதில் தூசு மற்றும் தண்ணீர் உள்ளே செல்ல முடியாது என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 13 மெகா பிக்ஸெல் சைபர் ஷாட் கேமரா, கூடுதல் வேகத்தில் இயங்கும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 2 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், இதனை 48 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும். 

இதில் நிறைய சின்னஞ்சிறு அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை நம் விருப்பப்படி திரை மீது அடுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த நிதி ஆண்டிற்குள்ளாக, ரூ.3,500 கோடிக்கு தன் எக்ஸ்பீரியா மொபைல் போன்களை விற்பனை செய்திட சோனி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

விற்பனை நடைமுறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளது. தன் தனி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்துகிறது.


பவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க


பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். 

இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. 

இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும், சிறிய அளவிலாவது அது மாறுதலாகக் காட்சி அளிக்கும். ஆனால், சில வழிகளை மேற்கொண்டால், ஆப்ஜெக்டுகள் அனைத்தும் நாம் விரும்பிய வழிகளில், கோணங்களில் அவை அமையும். அவற்றை இங்கு காண்போம். 

1. மாறுதலான வகையில் தோற்றமளிக்க விரும்பும் ஆப்ஜெக்டை முதலில் தேர்ந்தெடுக் கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில் ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந் தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும்.

2. இன்னொரு வழியும் உண்டு. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஆப்ஜெக்டைக் குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைக்கும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.

3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் Size group –ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், குடித்ஞு மீது கிளிக் செய்திடவும். 

இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும். இந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே - மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். 

இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும். (சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா!). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, Ctrl+Z கீகளை எப்போதும் அழுத்தலாம். 

4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Size group–ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் Close என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும்.


ரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்

இரண்டு சிம் இயக்கத்தில் சிறப்பாக இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் சாம்சங் இ 2202. 

இதன் அதிக பட்ச விலை ரூ. 2,170. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மொபைல் போனின் பரிமாணம் 46x110.7x14.27 மிமீ. பார் டைப் வடிவில் அமைந்துள்ள இந்த போன் கைக்கு அடக்கமாய், பயன்படுத்த எளிதான, அனைத்து அடிப்படை வசதிகளையும் தருகிறது. 

இதன் வண்ணத் திரையின் அகலம் 1.8 அங்குலம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி., 0.3 எம்பி திறனுடன் கூடிய விஜிஏ கேமரா, வீடியோ இயக்கத்தினையும் தருகிறது. 

எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், ஆப்பரா மினி பிரவுசர் இயக்கம், எம்பி 3 மியூசிக் பிளேயர் ஆகிய வசதிகளும் உள்ளன. 11 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. 1,000 mAh திறன் கொண்ட பேட்டரி மின்சக்தியினை வழங்குகிறது.


ரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்


கூடுதல் வேகத்தில் செயல்படக்கூடிய 4ஜி அலைவரிசையினை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வர, சாம்சங் நிறுவனத்தின், எல்.டி.இ. தொழில் நுட்பத்தினை, ரிலையன்ஸ் வாங்குகிறது. 

அத்துடன், ரூ.5,500 விலையில் தொடக்க நிலை 4ஜி மொபைல் போன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவும் சாம்சங் ஒத்துக் கொண்டுள்ளது. 

இந்த மொபைல் போன்கள், ரிலையன்ஸ் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களில் மட்டுமே செயல்படும். இந்த திட்டங்களையும் தொடக்க நிலையில் ரூ.100க்கு வழங்க ரிலையன்ஸ் திட்டமிடுகிறது. 

தற்போது இதே விலையில் 3ஜி மொபைல் போன் சந்தையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தினால், சாம்சங் நிறுவனம் இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் வலுவாகக் கால் ஊன்றும் வாய்ப்புகள் பெருகும். மொபைல் போன் விற்பனையைப் பொறுத்தவரை, இந்தியா, உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இங்கு தன் பங்கினை அதிகப்படுத்துவதன் மூலம், அமெரிக்க மக்களிடம் ஆப்பிள் நிறுவனப் போன்களுக்கு எதிராகத் தன் போன்களை நிறுத்த முடியும் என சாம்சங் திட்டமிடுகிறது. 

4ஜி அலைக்கற்றை வரிசையில், மொபைல் போன் தொடர்புகளை ரிலையன்ஸ் வழங்க இருப்பதை, மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். 

குறைந்த விலையிலான மொபைல் போனுடனும், குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவையுடனும், 4ஜி அறிமுகப்படுத்தும் நிலையில், இதன் தாக்கம் நம் மக்களிடையே அதிகமாக இருக்கும். 

மற்ற மொபைல் போன் சேவை நிறுவனங்கள் இதற்கு ஈடாக ஏதேனும் செய்திட வேண்டும். இல்லையேல் அவர்கள் மொபைல் சேவை சந்தையில் தங்கள் பங்கினை இழக்க வேண்டியதிருக்கும்.


விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்


புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். 

அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 


1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்:

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 

ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.

D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.

E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.

F: தேடல் விண்டோ காட்டப்படும்.

G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.

L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.

M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.

R: ரன் விண்டோவினை இயக்கும்.

T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.

U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.

TAB: முப்பரிமாணக் காட்சி

Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.


2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. 

Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப்புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். 

இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.


3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்:

நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். 

கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.


4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்:

விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்த தனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். 

இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். 

இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகி ராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 


5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager):

இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். 

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம். 


6. புதிய செயல்முறையில் வேர்ட் பேட்:

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட் பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம்களை எழுதுகையில் இயக்குகிறோம். 

ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட் டுள்ளது. 

இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.


7. டெஸ்க்டாப் ஒழுங்கமைப்பு:

ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.


8. சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட:

கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. 

அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.

இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத் தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.


9. பிரச்னைகளைக் கண்டறிய:

சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். 

அங்கு System and Security என்பதன் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.


விண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்


விண்டோஸ் 7 சிஸ்டம், பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன இடைஞ்சல்களை இது தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம். 

இவை நம் பணிக்கு கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன. இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கு காணலாம். 


1. அழிக்கவா வேண்டாமா?

எந்த ஒரு பைலை நாம் அழிக்க முற்பட்டாலும், அதனை அழிக்கவா? வேண்டாமா? என்ற கேள்வியினை விண்டோஸ் 7 கேட்கிறது. நாம் அடிக்கடி பைல்களை நீக்கும் பணியை மேற்கொள்வதாக இருந்தால், இது குறுக்கீடாகத்தான் இருக்கும். 

இது தேவையே இல்லை. ஏனென்றால், தெரியாமல் நாம் ஒரு பைலை நீக்கிவிட்டாலும், அதனை ரீ சைக்கிள் பின்னிலிருந்து அல்லது விண்டோஸ் எக்ஸ் புளோரர் பிரிவில் அன் டூ செயல்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த கேள்வியினை விண்டோஸ் தராமல் இருக்க, ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Display delete confirmation என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.


2. கேப்ஸ் லாக் கீ:

நமக்கு கேப்ஸ் லாக் கீ தேவையா? எத்தனை பேர் இதனை அடிக்கடி பயன்படுத்துகிறோம். தொடர்ந்து பெரிய எழுத்துக்களில் யாரும் டைப் செய்யப் போவதில்லை. ஓரிரு எழுத்துக்களை பெரிய எழுத்தாக டைப் செய்திட ஷிப்ட் கீ அழுத்தி பெறுகிறோம். 

கேப்ஸ் லாக் கீயினை , நம்மை அறியாமல் அழுத்தி அது இடைஞ்சல் தரும் ஒன்றாகவே நமக்குக் காட்சி அளிக்கிறது. இது அழுத்தப்படுவதையும், செயலுக்கு வருவதனையும் நிறுத்தலாம். 

disable_caps_ lock.reg file என்ற பைலை http://clicks.aweber.om/y/ct/?l=5GGRE&m=IsYk1pJpHuUKNK&b=g3Urkd2hC6UiLgO_fcxysw என்ற தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடவும். 

இந்த பைலில் டபுள் கிளிக் செய்துவிட்டால், இது இயங்கி, கேப்ஸ் லாக் கீ செயல்படுவதனை நிறுத்திவிடும். இதனால், எந்த பாதிப்பும் இருக்காது. இதற்குப் பின்னர், கேப்ஸ் லாக் கீயினை நீங்கள் அழுத்தினால், ஒன்றும் நிகழாது.


3. விண்டோஸ் அப்டேட்:

விண்டோஸ் இயக்கத்திற்கான அப்டேட் பைல்கள் தானாக உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் ஆனவுடன், ஓவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, தரவிறக்கம் செய்யப்பட்ட அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவா எனக் கேட்டு ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். 

போனஸாக நான் இன்ஸ்டால் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம் என்றும் ஒரு டிப்ஸ் தரப்படும். அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கினால் தான் இவை செயல்பாட்டிற்கு வரும், இயக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். 

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் பதில் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் இந்த பாப் அப் விண்டோ கிடைக்கும். இது நமக்கு நல்லது என்றாலும், நம் தொடர் பணியில் இது ஒரு குறுக்கீடுதான். எனவே இதனை நம் வசதிப்படி அமைக்க விரும்புவோம். அதாவது, எப்போது நமக்கு ரீஸ்டார்ட் செய்வதில் பிரச்னை இல்லை என்று எண்ணுகிறோமோ, அப்போது டவுண்லோட் செய்து கொள்ள விண்டோஸ் சிஸ்டத்திற்கு நாம் சொல்கிற வகையில் செட் செய்து கொள்ளலாம்.

இதற்கு Windows Update control panel திறக்கவும். இடது பக்கமாக உள்ள Change settings என்பதனை அடுத்து பெறவும். இங்கு அதற்கான மாற்றங்களை மேற்கொள்ளவும். “Download updates but let me choose whether to install them” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 


4. விண்டோஸ் சத்தம்:

மாறா நிலையில், விண்டோஸ் இயங்கத் தொடங்கியதில் இருந்து, செயல்படும் போதும் மற்றும் முடிக்கும் போதும் பலவகையான ஒலிகளை ஏற்படுத்தும். ஒரு சிலர், இதனை மிகவும் ரசிப்பார்கள். சிலரோ, இவற்றை ஒரு தொல்லையாகவே எடுத்துக் கொள்வார்கள். 

இவர்கள், மிக அமைதியான சூழ்நிலையிலேயே தங்கள் பணியைத் தொடர விரும்பு வார்கள். மற்றவர்களுக்கும் இந்த ஒலிகள் தொல்லையாக இருக்கக் கூடாது என விரும்புவார்கள். இந்த ஒலியை நிறுத்தலாம். உங்கள் சிஸ்டம் ட்ரேயில் உள்ள ஸ்பீக்கர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். 

கிடைக்கும் மெனுவில் Sounds என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Sound Scheme boxல் No Sounds என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பிரிவில், விண்டோஸ் இயக்க பணிகள் ஒவ்வொன்றுக்குமாக, ஒலி கிடைப்பதனை நிறுத்தலாம். நாம் விரும்பும் பணிக்கு மட்டுமான ஒலி மட்டும் கிடைக்கும்படி அமைக்கலாம்.


5. ஆக்ஷன் சென்டர் மெசேஜ்:

நம் கம்ப்யூட்டர் சிஸ்டம், சில குறைபாடான அமைப்பில் இருந்தால், விண்டோஸ் அதனைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கை வழங்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இல்லை என்றால், விண்டோஸ் பேக் அப் வேலையைச் செயல் படுத்தவில்லை என்றால் இது போன்ற செய்திகள் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். 

இவற்றை நிறுத்த எண்ணினால், சிஸ்டம் ட்ரேயில் உள்ள ப்ளாக் ஐகானில் (flag icon) கிளிக் செய்து, பின்னர் Open Action Center என்பதில் கிளிக் செய்து ஆக்ஷன் சென்டரைத் திறக்கவும். அடுத்துள்ள சைட் பாரில், Change Action Center settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த மாதிரியான செயல்பாட்டிற்கு இந்த எச்சரிக்கை செய்தி காட்டப்படக் கூடாது என விரும்புகிறீர்களோ, அவற்றை முடக்கிவைக்கலாம்.


6. ஸ்டிக்கி கீகள்:

ஒரு சிலருக்கு ஸ்டிக்கி கீகள் செயல்பாடு தேவைப்படும். ஆனால், பலர் அதனை விரும்புவதில்லை. இடது புறமாக இருக்கும் ஷிப்ட் கீயை ஐந்து முறை அழுத்தினால், உடனே ஸ்டிக்கி கீ செயல்பாடு கிடைக்கும். Go to the Ease of Access Center என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து “Turn on Sticky Keys when SHIFT is pressed five times” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். என் சிஸ்டத்தில் ஸ்டிக்கி கீ செயல்பாடே இல்லையே என்று எண்ணு கிறீர்களா? அப்படியானால், இது ஏற்கனவே முடக்கப்பட்டிருக்கும். கவலையை விடுங்கள்.


7. பில்டர் கீகள்:

ஸ்டிக்கி கீகள் போலவே, பில்டர் கீகளும் செயல்படுகின்றன. வலது புறம் உள்ள ஷிப்ட் கீயை சில நொடிகள் அழுத்தினால், இவற்றிற்கான மெனு கிடைக்கும். மேலே காட்டியது போலவே இவற்றையும் செயல்படாமல் வைக்கலாம்.


விண்டோஸ் 8 தயக்கம் ஏன்?


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகியும், அனைவரும் எதிர்பார்த்த அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிலும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் மிகவும் குறைவான வேகத்திலேயே இந்த ஓ.எஸ். உள்ளது என்பது தெளிவாகி வருகிறது. 

இது குறித்து நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடம் உள்ள இந்த மனப் பாங்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்தில், விண்டோஸ் 8 புதியதாக 0.4 சதவீத இடமே அதிகமாகப் பிடித்துள்ளது. 2.26 சதவீதத்திலிருந்து 2.67% ஆக உயர்ந்துள்ளது. விண்டோஸ் 7 வெளியான போது நான்கு மாதத்தில் 9% இடத்தைப் பிடித்திருந்தது. 

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் மக்கள் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை மாற்றிக் கொள்கிறார்கள் என்ற பொதுவாகச் சொல்லப்படும். அவ்வாறெனில், விண்டோஸ் 8 க்கான மாற்றம் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடிக்கவில்லை என்றே தெரிய வருகிறது. 

சென்ற பிப்ரவரி மாதக் கணக்கீட்டின்படி, விண்டோஸ் 7 - 44.55%, விண்டோஸ் எக்ஸ்பி - 38.99%, விஸ்டா - 5.17%, விண்டோஸ் 8 - 2.67%, மேக் ஓ.எஸ். மற்றும் பிற மீத பங்கினையும் கொண்டுள்ளன. 

மேற்கு நாடுகளில் பல வகைகளில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சலுகை விலையில் தரப்பட்டும், மைக் ரோசாப்ட் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தங்கள் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ள முன்வர வில்லை. எனவே ஏதேனும் புதியதொரு விற்பனை நடவடிக்கையை மைக்ரோசாப்ட் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்டோஸ் ஸ்டோரில் தற்போது 44, 650 அப்ளிகேஷன்கள் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,000 அப்ளிகேஷன்கள் புதியதாக இடம் பெற்றன. இதே போல ஜனவரியிலும் 4,000 அப்ளிகேஷன்களே புதியதாக விண்டோஸ் ஸ்டோருக்கு வந்தன. 

இவற்றில் பெரும்பாலானவை, அதிகப் பயனில்லாத அப்ளிகேஷன்களாகவும் உள்ளன. இந்த வேகத்தில் சென்றால், 2014 ஆம் ஆண்டுக்குள், அப்ளிகேஷன்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என்பது கனவாகவே இருந்திடும். 

விண்டோஸ் போன் பிரிவிலும் இதே மந்தநிலையே ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி பிரிவுகளில், விண்டோஸ் 8 பயன்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இடம் பிடிக்கவில்லை. 

மைக்ரோசாப்ட் இதனை நன்கு உணர்ந்துள்ளது. இருப்பினும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதால், மாறிக் கொள்ளும் மக்கள், விண்டோஸ் 8க்கு மாற்றிக் கொள்வார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.


மைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சாதன் நிஞ்சா மொபைல் போன் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ89 என்னும் மொபைல் போனை வெளியிட்டுள்ளது. 

இது இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். வர்த்தக விற்பனைக்கான இணைய தளங்களிலும், போன் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது. 

இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 3.97 அங்குல அகலத்தில் இந்த போனில் தரப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட் ராய்ட் 4.0 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். 

டூயல் கோர் 1 GHz Mediatek MT6577 ப்ராசசர் போனை இயக்குகிறது. போகஸ் நிலைப்படுத்தப் பட்ட 3 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. இதில் வீடியோ இயக்கமும் உண்டு. 

512 எம்.பி. ராம் நினைவகம், 4ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டு இதில் பயனாளருக்கென 2.07 ஜிபி தரப்பட்டுள்ளது. 

இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 3ஜி, புளுடூத் 2.1, வை-பி, ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப் பிற்கு உதவுகின்றன. 

3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்கு கிறது. பேட்டரியின் திறன் 1,450mAh ஆக உள்ளது.


ஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி


எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் தொகுதியில் மட்டும் நமக்கு தானாக சில சொற்களை அமைக்கும் வசதி (autocomplete) தானாக எழுத்துப் பிழை திருத்தும் வசதி, சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே முழுச் சொல் பெறும் வசதி போன்றவை கிடைக்கின்றன. 

இவற்றை ஆபீஸ் தொகுப்பில் உள்ள மற்ற அனைத்து புரோகிராம்களிலும் (Excel, Powerpoint, Outlook, Access, Publisher etc.) கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனப் பல வேளைகளில் எண்ணி இருப்போம். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் PhraseExpress.

இந்த புரோகிராம் மூலம், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல சொற்கள் அடங்கிய தொகுதிகளுக்குச் சுருக்கு எழுத்துக்களை அமைக்கலாம். இதன் மூலம் நாம் முழுமையாக டைப் செய்திடுவதற்கான நேரம் மிச்சமாகிறது. வேலைப் பளுவும் குறைகிறது. ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் நாம் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சொல் தொகுதிகளை உணர்ந்து கொண்டு, நாம் இவற்றை டைப் செய்திடத் தொடங்கியவுடன், தானாகவே முழுமையான சொற்களை அமைத்துத் தருகிறது.

இந்த புரோகிராமில் இயக்குவதற்காக, எழுத்துப் பிழைகள் ஏற்படக்கூடிய 8,200 சொற்கள் பட்டியலிடப்பட்டு கிடைக்கின்றன. ஆறு மொழிகளுக்கான பட்டியல் கிடைக்கிறது. அந்த மொழிகள் தேவைப்படுவோர், அவற்றை தரவிறக்கம் செய்து இந்த புரோகிராமில் இணைத்துக் கொள்ளலாம். 

www.phraseexpress.com என்ற முகவரியில் இலவசமாகக் கிடைக்கும் இதனைத் தரவிறக்கம் செய்து, .exe பைலை டபுள் கிளிக் செய்து தொடங்கலாம். இதனை செட் செய்திடுகையில் Do you want to use PhraseExpress in a network என்ற வரிக்கு முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பதிப்பு கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும்.

ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் இன்ஸ்டால் செய்தவுடன், அதற்கான ஐகானைத் திரையில் காணலாம். இதில் லெப்ட் கிளிக் செய்து, முதலில் Direct access to settings என்பதையும், பின்னர் Enable PhraseExpress என்பதையும் கிளிக் செய்து இயக்க வேண்டும். 

புதிய சொற்களை இணைக்க New Phrase என்பதில் கிளிக் செய்து இணைக்கலாம். எடுத்துக் காட்டாக, நீளமான உங்கள் நிறுவனப் பெயரினை Description edit பாக்ஸில் அமைத்து, அதற்கான சுருக்கு எழுத்துக்களை வலது பக்க பிரிவில் அமைக்க வேண்டும். 

இந்த சுருக்கு எழுத்துக்களை, எந்த ஆபீஸ் தொகுப்பில் அமைத்தாலும், நீங்கள் அமைத்த முழு நீள சொல் தொகுதி தானாகக் கிடைக்கும். இதே நீளமான சொல் தொகுதி கீகளின் அடிப்படையில் வேண்டும் என்றால், (எடுத்துக்காட்டாக Alt+K போல) Hotkey பிரிவில் அமைக்க வேண்டும்.

இந்த வகையில் அமைக்கப்பட்ட சுருக்கு எழுத்துக்களுக்கான விரி சொல் தொகுதிகள், ஒரு குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் எனில், அந்த புரோகிராம்களை மட்டும் தேர்ந்தெடுத்து செட் செய்திடலாம். 

இந்த சொல் தொகுதிகள் அனைத்தையும் ஒரு போல்டரை உருவாக்கி அதில் அமைக்கலாம். அதற்கு New Folder என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பின்னர், இதற்கான பெயர் ஒன்றை, திரையின் வலது பக்கம் கிடைக்கும் Description edit box இல் அமைக்க வேண்டும். இதில் நாம் அமைக்கும் சொல் தொகுதிகளை இழுத்து விடலாம்.

ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் புரோகிராமில், தானாக திருத்தம் அமைக்கப்படும் (AutoCorrect list) சொற்கள் பட்டியல் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் தவறுதலாக “abondon” என டைப் செய்தால், அந்த சொல் தானாகவே “abandon” எனத் திருத்தம் செய்யப்படும். 

இதில் நாமாகவும், நாம் பயன்படுத்தும் சில சொற்களையும், அதனை டைப் செய்திடுகையில் ஏற்படக் கூடிய பிழைகளையும் அமைக்கலாம். Autotext edit boxல் தவறு ஏற்படக் கூடிய ஸ்பெல்லிங் கொடுத்து சொற்களையும், Phrase content boxல் சரியான சொல்லையும் அமைக்க வேண்டும். 

ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் புரோகிராமினை, எடுத்துச் சென்று பயன்படுத்தும் புரோகிராமாக வும் பயன்படுத்தலாம். இதற்கு, போர்ட்டபிள் வகை புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்கான பைலுக்கு, கம்ப்யூட்டரில் ஒரு ஷார்ட் கட் உருவாக்கலாம். பைலை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்துப் பயன்படுத்தலாம். 

இவ்வாறு யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்துப் பயன்படுத்துகையில், ட்ரைவை வெளியே எடுக்கும் முன்னர், ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் புரோகிராமில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். அதே போல, வேர்ட் புரோகிராமில் இணைத்துத் தரப்படும் MS Word AutoCorrect புரோகிராமினைச் செயல்படாமல், முடக்கி வைக்க வேண்டும். 

இல்லை எனில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறுக்கும் இரு சரியான சொற்கள் அமைக்கப்படும். எனவே, வேர்டில் MS Word AutoCorrect பிரிவில் உள்ள அனைத்து சொற்களையும், அதற்கான திருத்தங்களையும் ப்ரேஸ் எக்ஸ்பிரஸ் பட்டியலுக்குக் கொண்டு வந்து, வேர்ட் புரோகிராமில் உள்ள MS Word AutoCorrect புரோகிராமினை முழுமையாக முடக்கிவிடலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா?


இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? 

கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம். 

ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கம்ப்யூட்டருக்கு மாறி இருக்க வேண்டும். 

பண அடிப்படையில் பார்த்தால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். 

இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே. மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும். 

மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனை யும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும். 

பழைய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது. உங்கள் நிறுவனத் தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த, உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து, நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள். 

பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.

இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை, நல்ல முறையில் பராமரித்தால், நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள். 

அந்தக் கார் அதிக மக்கள் சாலையில் செல்லாதபோது, அதிக வாகனங்கள் இயங்காதபோது, அப்போதிருந்த சூழ்நிலையில் உருவாக்கப் பட்டிருக்கும். புதிய கார்கள், அதன் பின்னர் எழுந்த தேவைகளின் அடிப்படையில், பழைய கார்களினால் ஏற்பட்ட தவறுகளின் அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும். 

புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப் பதால், இதுவரை எண்ணிப் பார்க்காத வசதிகள் கிடைக்கும். பழைய காரை இன்னும் ஓட்டினால், இதனை எல்லாம் இழப்பதுடன், பாதுகாப்பும் இல்லாமல் அல்லவா இருப்பீர்கள். எரிபொருளும் அல்லவா அதிகம் செலவாகும். 

அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கம்ப்யூட்டரின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப, எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. இப்போது அது இயங்கவே முடியாது என கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.

எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள். 

http://www.microsoft.com/enus/download/details.aspx?id=7352 என்ற முகவரி யில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். "சரி வராது' என்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில், அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள். 

சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல், அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை. புதிய பதிப்பிற்கு மாறினால், கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன. 

யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது, ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

எக்ஸ்பி சிஸ்டம், கம்ப்யூட்டரை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், இப்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும். 

பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது. 

விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். 

எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை சிஸ்டங்களுக்கு மாறவும். கம்ப்யூட்டரையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes