இணைய வெளியில் பைல் சேமிக்க

ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு வழியில் அவை கெட்டுப் போய் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.

நம் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில், பைல்களைக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால், நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால், நாம் எதிர்பாராத ஒரு நாளில், அதன் இயக்கம் முடங்கிப் போய் பைல்களை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது.

என்ன செய்தாலும் பைல்கள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.


இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் பைல்களை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் பைல்களைச் சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது.

இந்த வகையில் சி.எக்ஸ் (cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி:http://www/cx.com. இந்த தளம் சென்று, நம் மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின், இந்த தளத்தில் லாக் இன் செய்து, நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் பைல்களை, நம் கம்ப்யூட்டரிலிருந்து அப்லோட் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை பைல்களை அப்லோட் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.

இந்த தளத்தில், எந்த ஒரு வகை கம்ப்யூட்டரிலிருந்தும் பைல்களை அப்லோட் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும், இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் அப்லோட் மற்றும் டவுண்லோட் பணிகளை மேற்கொள்ள லாம்.

இதனால், நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் இடத்தில் இருந்து பைல்களைக் கையாளலாம்.

பின்னர், இதனை மீண்டும் நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால், தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது.

எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் இந்த பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.


புதிய மாடலுடன் ஐ-போன் ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் , ஐ-போன்-5 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

உயர் தொழில்நுடபத்துடன் ‌கூடிய கேமிராவுடன், அகன்ற அளவிலான ஸ்கிரீன் கொண்டதாக இந்த ஐ-போன்கள் இருக்கும் என இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி டிம்கூக் ‌கூறினார்.

இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் அக்.4-ம் தேதி அறிமுகவிழா துவங்கிறது என கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு பின் தற்போது ஐ-போன்கள் துறையி்ல் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவது குறி்ப்பிடத்தக்கது.


கூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்

கூகுள் குழுமத்திலிருந்து வந்ததனால் மட்டுமே, ஜிமெயில் அதிக வசதிகளைக் கொண்டிருப் பதில்லை. ஜிமெயில் இயக்கத்திற்கு தனியாகச் செயல்படும் புரோகிராமர்கள் பலரும், பல வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தந்துள்ளனர்.

இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை, நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.


1. ஆயத்த பதில்கள் (Canned Responses):

இதனைப் படிக்கையில், ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில், அல்லது மின்னஞ்சல் பார்க்க இயலாத நாட்களில், நமக்கு வரும் அஞ்சல் களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும்.

இது அதுமட்டுமல்ல; வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.
2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget):

இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.
3. கூகுள் முன் நினைவூட்டி (Google Docs Widget):

உங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து, உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப் பட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தில், அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால், நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.
4. அஞ்சலில் இடம் காட்டும் மேப் (Google Maps preview):

உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.
5. படங்களை இணைக்க (Inserting Images):

இந்த வசதி குறித்து சென்ற வாரம் கம்ப்யூட்டர் மலரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அஞ்சல் செய்தியிலேயே போட்டோ மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.
6. படித்ததாகக் குறித்துக் கொள் (Mark as Read message):

நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள், படிக் காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே, இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.
7. அஞ்சல் முன் தோற்றம் (Message Sneak Peek):

இந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தி யினைத் திறக்காமலேயே, அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.
8. மவுஸ் வழி உலா (Mouse Gestures):

மவுஸைப் பிடித்தவாறே, அதனை அசைத்து, மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே, இடது பக்கம் மவுஸை நகர்த்தினால், முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள். வலது பக்கம் நகர்த்தினால், அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால், இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.
9. அனுப்பியவரின் நேரங்காட்டி (Sender’s Time Zone):

மின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா? அந்த நேரத்தில், அவர் நாட்டில், அவர் ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.
10. அனுப்பியதை நிறுத்து (Undo Send):

அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகள் எனில், அது அனுப்பப் படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.


சின்னச்சின்ன தொழில்நுட்ப செய்திகள்

AGPS – Assisted Global Positioning System: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட் டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம்.

இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த AGPS உதவி இல்லாமல் டேட்டா பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும்.

அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.


ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் பைல் அழிக்க

ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.

நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது.

எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.

குவிந்திருக்கும் பைல்களில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது, எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறியமுடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில், பைல்களை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில், இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் WinDirStat.

இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், அது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர், நம் டிஸ்க்கில் எத்தகைய பைல்கள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு, அவை கலந்த சதுரங்களால் காட்டப் படுகின்றன.

இந்த வண்ண சதுரங்களும், பைலின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாம் எந்த பைல்களை அழிக்கலாம் என முடிவு செய்து, நீக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு வகை பைல்களை நீக்கலாம். எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட பைல்களிலிருந்து, பைல்களைப் பெற்ற பின்னரும், ஸிப் பைல்களை நாம் கம்ப்யூட்டரில் வைத்திருப்போம்.

இவற்றை மொத்தமாக நீக்கலாம். இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை பைல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில பைல்களை நீக்கலாம்.

இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.

WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர், எந்த ட்ரைவ் குறித்த பைல் தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர, புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன், ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும்.

இதன் முதல் பாதியில், பைல்களும் போல்டர்களும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப் படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது பைலைக் கிளிக் செய்தால், அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய பைல்களை, அதாவது, டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் பைல்களை, அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது. முதலாவதாக, (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று, பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக, நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கம்ப்யூட்ட ரிலிருந்து அடியோடு நீக்குவது.

இந்த முறையில் தேவையற்ற, அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பைல்களை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி, டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே, ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல், அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும்.

ஏனென்றால், ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும், அந்த பைலின் சில அம்சங்கள், நம் கம்ப்யூட்டரில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.


கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த

இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம்.

இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.


1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக:

புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு, ஸ்பேம் எனப்படும் இமெயில்களை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பலாம்;

உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தவாறே, தொடர்ந்து பரவ அடுத்த கம்ப்யூட்டர்களைத் தேடலாம்; நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல், தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு.

இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.

2. வீடியோ கார்டை மேம்படுத்துக:

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட், தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால், நிச்சயம் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகம் குறையும். குறிப்பாக, கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும்; அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.

3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை:

பல வேலைகளில், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே. ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.

4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்:

ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டரின் சி.பி.யு. விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப் பட்டு, குளிர்வாக இல்லை என்றால், சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம். அதே போல, டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள் (Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும்.

அதே போல, ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம் கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும். சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.

5. பிரவுசரை மாற்றுக:

பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால், இன்னொரு பிரவுசரை இயக்கி, அப்போது கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில், குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன் படுத்தாதவர்கள், பயன்படுத்திப் பார்க்கலாம்.

6. குப்பையை அகற்றுக:

கம்ப்யூட்டரில் குப்பை போல புரோகிராம்களையும் பைல் களையும் குவித்து வைப்பது, கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினைக் குறைக்கும். உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கம்ப்யூட்டரில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில, கம்ப்யூட்டர் இயங்கும்போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும்.

விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு பைல்கள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

7. டிபிராக் செய்தல்:

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக் (Defrag) செய்தல் (சிதறிய நிலையில் பதியப் பட்டுள்ள பைல்களை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட, விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி, அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன.

மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால், கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும், மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாகும்.


வோடபோன் ப்ளூ பேஸ்புக் மொபைல்

பல லட்சக்கணக்கான பேஸ்புக் இணைய தள வாடிக்கையாளர் களை இலக்காகக் கொண்டு வோடபோன் நிறுவனம் அண்மையில் வோடபோன் ப்ளூ என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மொபைல் போன் மூலம் இணைய தளப் பயன்பாடு அதிகரித்து வரும் இந்நாளில், பேஸ்புக் இணையதளம் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த போனில் பேஸ்புக் இணைய தள இணைப்பிற்கு எப் என்ற எழுத்துடன் தனியாக ஒரு கீ பட்டன் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்துவதன் மூலம் பேஸ்புக் இணைய தளத்திற்கு இணைப்பு கிடைக்கிறது. ஓர் ஆண்டிற்கு இலவசமாக இந்த இணைப்பு தரப்படுகிறது.


முன்பு எச்.டி.சி. நிறுவனம் சாச்சா என்ற மொபைல் போனை இதே போல அறிமுகப்படுத்தியது. ஆனால், வோடபோன் ப்ளூவின் அதிக பட்ச விலை ரூ. 4,950 மட்டுமே. எச்.டி.சி. போன் இதனைக் காட்டிலும் மூன்று பங்கு விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சந்தாதாரரின் சேட் மற்றும் செய்திகள் நேரடியாகக் காட்டப்படுகிறது. எத்தனை நண்பர்கள் ஆன்லைனில் உள்ளனர் என்று தகவல் தரப்படுகிறது. இதில் குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது.

திரை 2.4 அங்குல அகலத் திரை, 2 எம்பி கேமரா, ஆப்பரா மினி 3 பிரவுசர், எப்.எம். ரேடியோ, மியூசிக் பிளேயர், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் வடிவம் எச்.டி.சி. சாச்சா போனைப் போலவே உள்ளது. எடுத்துச் செல்ல எளிதாக இருக்கிறது.

இதில் பயன்படுத்தப்படும் சிம் இதில் மட்டுமே இயங்கும். முன் கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 3ஜி இணைப்பு இல்லை. எட்ஜ் தொழில் நுட்பம் செயல்படுத்தப் படுகிறது. பேஸ்புக் இணைய தளம் மூலம் தங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் அனைவரும் இதனை விரும்புவார்கள்.


புதிய தேடுதளம் ஹீலியாட்

கூகுள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் தேடல் தளச் சந்தையில் புதிய, கூடுதல் வசதிகளுடன், மாறுபட்ட வகையில் முடிவுகளைத் தரும் தேடல் தளமாக அறிமுகமாகி யுள்ளது ஹீலியாட்.

தேடல் முடிவுகளைத் தருவதில், புதிய வழிகளை இது மேற்கொள் கிறது. நம் தேடல்களுக்கான முடிவுகளை அப்படியே பட்டியலிடாமல், அவற்றை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் ஒரு வண்ணத்திலான வட்டத்தைக் கொடுத்து, தகவல் களைக் காட்டுகிறது.

இதனால், நாம் என்ன நோக்கத்திற்காக ஒரு சொல் கொண்டு தேடினாலும், அந்த நோக்கம் இங்கு ஏதேனும் ஒரு வகையாகக் காட்டப்படும்.

நமக்குத் தேவைப்படும் வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால், நம் தேவைகளுக்கான தளங்கள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்கள் தேடல்களை வகைப்படுத்திக் காணுங்கள் என்று நமக்கு ஹீலியாட் உதவுவதை உணரலாம்.

எடுத்துக்காட்டாக, Apple என்று தேடியபோது “Stock Quote”, “Products”, “News”, “iPhone”, “iTunes”, “iPad”... எனப் பலவகைகளில் தகவல்களைப் பட்டியல் இடுகிறது.

இவற்றில் நமக்கு எது வேண்டுமோ, அதனை மட்டும் கிளிக் செய்து காணலாம். தளங்கள் அனைத்தையும் பெற்று, சில நொடிகளில் அவற்றை வகைப்படுத்தித் தருவதே இந்த தேடல் சாதனத்தின் சிறப்பம்சம். இந்தத் தேடல் தளத்தின் முகவரி http://www.helioid.com.


ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா! போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப விரும்புபவர்கள், அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர்.

அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. அண்மையில் கோவில் விசேஷ செய்திகளை மின்னஞ்சலில் அனுப்பும் தமிழக இந்து அற நிலையத் துறை இணை ஆணையர், போட்டோக் களுடன் குறிப்புகளை இணைத்து அஞ்சலில் அனுப்ப விரும்புகிறேன்.

எவ்வாறு அனுப்புவது? என்று கேட்டிருந்தார். இந்த கேள்வியுடன், ஜிமெயில் தளத்தை அணுகிப் பார்த்த போது, இதற்கான விடை கிடைத்தது.
ஜிமெயில் தளத்தைத் திறந்து, Gmail Labs செல்லவும். (இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால், ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும்.

இதில் “Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் “Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அப்படியே கீழாகச் சென்று, “Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து, அவற்றை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். போட்டோ குறித்த குறிப்புகளைக் கீழாக எழுதலாம்.

இவ்வாறு போட்டோவினை இணைக்கையில் கூகுள் Remember: Using others’ images on the web without their permission may be bad manners, or worse, copyright infringement” என ஒரு எச்சரிக்கை தரும். ஏனென்றால், போட்டோ மற்றும் படங்களின் உரிமை யாளரின் அனுமதி இன்றி, அவற்றை உங்கள் மெயிலில் பயன்படுத்துவது தவறாகும்.
நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன், ஜிமெயில் அதனை நீங்கள் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக் கிறீர்களோ, அங்கு ஒட்டிவிடும். இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம்.

அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சரி, படத்துடன் குறிப்புகளோடு உங்கள் நண்பருக்கு மின்னஞ்சலை அனுப்பி விட்டீர்கள். அவர் இதனைக் காண முடியுமா? பழைய இமெயில் கிளையண்ட் பயன்படுத்தினால், நிச்சயம் படங்களைக் காண இயலாது.

படத்திற்குப் பதில் ஒரு எக்ஸ் மார்க் அடையாளம் மட்டுமே கிடைக்கும். அவர் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் எச்.டி.எம்.எல். பார்க்கும் வகை இயக்கப் பட்டிருக்க வேண்டும்.


பயர்பாக்ஸ் (Firefox) ரகசியங்கள்

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.

இவை மட்டுமின்றி, பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1.தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள:

பயர்பாக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து, ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம். எடுத்துக் காட்டாக, அமேஸான் டாட் காம் (Amazon.com) தளத்தில் டச்பேட் (“TouchPad”) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட, பயர்பாக்ஸ் பாரில் “amazon touchpad” என டைப் செய்து என்டர் தட்டினால் போதும்.

இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று, அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர், அந்த சர்ச் கட்டத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் “Add Keyword for this search...” என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும்.

இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி, பயர்பாக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட, குறிப்பிட்ட தளத்தில், தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.


2. பல தளங்களுடன் திறப்பு:

வழக்கமாக, நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை, நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம். ஒன்றில்லை, எனக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும்போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பாக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.

பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ் (home page) பீல்டில், நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும்.


3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்:

நீங்கள் அடிக்கடி இணைய தளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால், குறிப் பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால், இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து, அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம்.

பயர்பாக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். “Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ். லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது, எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர், டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.

இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் “Add” என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.


4. விரல் நுனியில் செட்டிங்ஸ்:

இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில், அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தி யிருப்போம். இதனால், மற்ற கம்ப்யூட்டர் களில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது.

பயர்பாக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பாக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை, புதிய கம்ப்யூட்டரில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி, வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும்.

எவ்வாறு ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பல அப்ளிகேஷன் களைப் பதிந்து இயக்கலாம் என கூடுதல் தகவல்கள் வேண்டுவோர் http://howto.cnet. com/830111310_3920080937285/whattodowithyourusbflashdriverunportableapps/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.


5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்:

பயர்பாக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com /enUS/kb/Key board%20shortcuts என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.


GPRS General Packet Radio Service: (ஜி.பி.ஆர்.எஸ்.)


GPRS General Packet Radio Service

(ஜி.பி.ஆர்.எஸ்.)இது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. 

டேட்டா பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் டேட்டாவினைப் பெறலாம்.


டேட்டாவினைப் பெறலாம். டேட்டாவினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.


EDGE Enhanced Data rates for GSM Evolution

இதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ். வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும். 

அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்தைத் தரும். 


இந்தியாவில் கூகுள் குரோம்

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் சென்ற செப்டம்பர் 1ல் தன் மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. இந்தியாவில் இதற்குத் தனி இடம் கிடைத்துள்ளது. இணைய பிரவுசர் பயன்பாட்டில் நம் நாட்டில் இரண்டாவது இடத்தைக் குரோம் பிரவுசர் பிடித்துள்ளது. 


இணைய பயன்பாடுகளைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திடும் ஸ்டேட்கவுண்ட்டர் டாட் காம் (Stat Counter.com) என்னும் நிறுவனம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது. 

முதல் இடத்தில், பயர்பாக்ஸ் பிரவுசர் 32.97% பயன்பாட்டுடன் உள்ளது. குரோம் பிரவுசரின் பங்கு 31.75% ஆக உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 31.33% பங்கினைக் கொண்டுள்ளது. 

தனி பிரவுசர் தொகுப்பாகக் கணக்கில் கொண்டால், குரோம் பதிப்பு 13, இந்தியாவில் 21.28% பங்கினைக் கொண்டுள்ளது. கூகுள் தரும் குரோம் ஆட்டோ அப்டேட் அனைவராலும் விரும்பப்படும் வசதியாக உள்ளது. ஏனென்றால், இது நமக்குத் தெரியாம லேயே பிரவுசர் முழுமையும் அப்டேட் செய்கிறது. 

குரோம் பிரவுசர் இந்தியாவில் பிரபலா மானதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். 1) டிவி சேனல்களில் இது குறித்த விளம்பரம் (டிவிக்கள் தான் மக்களிடையே எதனையும் கொண்டு செல்லும் சாதனமாயிற்றே!) 2) மற்ற கூகுள் சாதனங்கள் மூலம் , இதனைக் கொண்டு செல்லுதல் மற்றும் 3)விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் தன்மை கொண்டிருப்பது (இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் லேட்டஸ்ட் பதிப்பு இயங்காதே!)

2008 ஆம் ஆண்டில், கூகுள் தன் குரோம் பிரவுசரை வெளியிட்ட போது, இணையத்தில் பல புதுமைகளைக் கொண்டு வர திட்டமிட்டது. ஆனால், பல பிரவுசர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த காலத்தில், இதனால் மிக மிகக் குறைவான பங்கினையே கொள்ள முடிந்தது. 

இருப்பினும், இதன் தொழில் நுட்ப சிறப்பம்சங்களை மக்கள் உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கினர். ஒரே ஆண்டில் இதன் பங்கு 10% லிருந்து 22% ஆக உயர்ந்தது. 

குரோம் பிரவுசரின் பயன்பாடு உயர்ந்ததனால், இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் பிரவுசரின் பயன்பாடு 51% லிருந்து 42% ஆகக் குறைந்தது. சிறிதும் மாற்ற மின்றி இருந்த பயர்பாக்ஸ் பயன்பாடு, சற்று குறைந்தது. 

குரோம் வந்த இந்த மூன்று ஆண்டுகளில், இணையம் இயங்கும் தன்மையைச் சற்று மாற்றியுள்ளது.வெகு வேகமாக, குறைந்த கால இடைவெளியில், இதன் மேம்படுத்தப்பட்ட பிரவுசர் பதிப்புகள் வெளியானதால், மற்ற பிரவுசர் நிறுவனங்களும் அவ்வாறே வெளியிட கட்டாயப்படுத்தப்பட்டன. 

பயர்பாக்ஸ் ஆறு மாத கால இடைவெளியில் பதிப்பு 4 முதல் 6 வரை வெளியிட்டுள்ளது. பதிப்பு 3 வெளியாகி 36 மாதங்களுக்குப் பின்னரே, பதிப்பு 4 வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில், குரோம், பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் முதல் இடத்தில் கொடி கட்டிப்பறக்கிறது. 

இன்டர்நெட் பயன்பாடு வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் ஒன்றில், பிரவுசர் என்பது முக முக்கிய புரோகிராமாக மதிக்கப் படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லாவின் பயர்பாக்ஸ், கூகுள் குரோம், சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவை இன்று அதிகமாகப் பரவ லாகப் பயன்படுத்தப்படும் பிரவுசர்களாக உள்ளன. 


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes