யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்

கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன.

கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில்USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன. பழைய வகை சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன.

மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும், வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது, USB 2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

Start –> My Computer சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின்Device Manager ல் கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial Bus controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும்.


உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்குEnhanced Host Controller or USB 2.0 Controller என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும்.

நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும்.

பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா?

வீடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திட, கீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும்.

Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும்.

இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும்.

இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.

யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும்.

அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும்.

இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.


ப்ளாக் பெர்ரி போல்டு 9780

ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக் பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 6 உடன் வடிவமைக்கப்பட்ட முதல் மொபைல் போனாக, பிளாக் பெரி போல்டு 9780 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

2.4 அங்குல அகலத்தில் திரை,400 x 360 ரெசல்யூசனில் காட்சி அமைப்பு, உலகெங்கும் உள்ள 3ஜி நெட்வொர்க் இணைப்பு, வை–பி நெட்வொர்க் இணைப்பு, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கம், ஜியோ டேக்கிங் முறையில் இயங்கும் இடம் கண்டறிந்து காட்டுதல், தொடர்ந்த ஆட்டோ போகஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, பிளாஷ் மற்றும் வீடியோ ரெகார்டிங், 512 எம்.பி. பிளாஷ் மெமரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த ஸ்லாட் வசதி எனப் பல தூக்கலான வசதிகள் கொண்ட இந்த போன் நவம்பர் இரண்டாம் வாரத்தில் இங்கு கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.


நோக்கியா சி 1

இரண்டு சிம்களுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் போன்களை சென்ற மாதம் நோக்கியா வெளியிட்டது.

அப்போது அறிவிக்கப்பட்ட சி1 கேண்டி பார் வடிவ மொபைல் இப்போது சந்தையில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில், இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் வாங்க விரும்புவோருக்கு இந்த போன் உகந்ததாக இருக்கும்.

ஒரு பட்டன் அழுத்தி இரண்டு சிம்களின் இயக்கத்தினை மாற்றிக் கொள்ளலாம். இதன் லித்தியம் அயன் 1020 பேட்டரி தொடர்ந்து 13 மணி நேரம் பயன்படுத்த சக்தி அளிக்கிறது.

இதன் பரிமாணம் 107.1 x 45 x 15 மிமீ . எடை 72 கிராம். 1.8 அங்குல வண்ணத்திரை. எம்பி3 ரிங் டோன், அழைப்பு வருகையில் அதிர்வு, ஸ்பீக்கர் போன், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 500 முகவரிகளுக்கான அட்ரஸ் புக் ஆகியவை உள்ளன.

நெட்வொர்க் இணைப்பிற்கான எந்த வசதியும் தரப்படவில்லை. கேமரா இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். எப்.எம். ரேடியோ, கேம்ஸ் வசதி தரப்பட்டுள்ளது.

நான்கு வண்ணங்களில், ரூ. 1,685 அதிகபட்ச விலையாகக் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகிறது.


ரூ. 7 ஆயிரத்திற்கு நெட்புக்....

இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள டிவிசி ஸ்கைஷாப் நிறுவனம், இம்மாத இறுதியில் நெட்புக்கை ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போதைய அளவில், ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நெட்புக்குகளை காட்டிலும், தங்களது ‌நெட்புக்குகள், விலை குறைந்தது மட்டுமல்லாமல், அதைவிட மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாகவும், இதன்மூலம், மாணவர்கள், விற்பனை பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளிட்டோர்களை கவரும் என்பதில் ஐயமில்லை என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டிவிசி ஸ்கைஷாப் நிறுவன தலைவர் வினோத் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தற்போது மக்களிடையே, லேப்டாப்பின் மோகம் அதிகரித்திருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டே, தாங்கள் நெட்புக் விற்பனையை துவக்கியிருப்பதாகவும், தாங்கள் வெளியிட்டுள்ள நெட்புக்கின் எடை 1 கிலோவிற்கும் குறைவு தான் என்றும்,

இந்தியாவில், தங்கள் நிறுவனத்திற்கு 450க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளதாகவும், இதன்மூலம், நாட்டின் எந்த பகுதிக்கும் 6 மணி நேரத்தில் தங்களால் டெலிவரி செய்ய முடிகிறது என்றும், தங்களின் நெட்புக்கிற்கு 6 மாத கால வாரண்டி அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹை-எண்ட் டச் ஸ்கிரீன் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதன் விலை ரூ. 5,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கேம்கார்டரின் விலை ரூ. 3,990 ஆக விற்பனை செய்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்ட்ராய்ட் பெற்ற லட்சம் அப்ளிகேஷன்கள்

கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு வெளியிடப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மையில் தாண்டியது.

இது கூகுளுக்கு ஒரு சாதனைக் கல் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெளியிடப்பட்டது.

சென்ற ஏப்ரல் மாதம், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. தற்போது ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

ஒரு சிலர் இந்த எண்ணிக்கை கணக்கு தவறு. சந்தையில் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

அதன் ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐபாட் சாதனங்களுக்கான அப்ளிகேஷன் எண்ணிக்கை 2,80,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


3ஜி சேவையை அறிமுகப்படுத்தியது டாடா டொகாமோ

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா டொகாமோ நிறுவனம், மகாராஷ்டிரா சர்க்கிளில் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவன தலைவர் பங்கஜ் சேத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவில் சிறந்து மற்றும் முன்னணியில் திகழும் டாடா குழுமம், தொலைதொடர்பு துறையிலும் மக்களிடையே 3ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற ‌பெருமையை பெறுவதாகவும், இதன்மூலம், மக்களிடையே, தங்கள் நிறுவனத்தின் மீதுள்ள மதிப்பு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : என்டிடி டொகாமோவின் உதவியுடன் தங்கள் நிறுவனம் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்,

இதன்மூலம், 21.1 எம்பிபிஎஸ் வேகத்திலான இண்டர்நெட் வசதியை பெற முடியும் என்றும் அ‌தேபோல், ஹை-டெபனீசன் வாய்ஸ் (ஹெச்டி வாய்ஸ்) வசதியையும் தங்கள் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்‌டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூகுளின் பெரிய செய்திகளை நீக்க...

இணையம் பயன்படுத்தும் யாவரும் இமெயிலுக்கென செல்வது ஜிமெயில் ஆகும். அதிக அளவில் மெயில்களைச் சேர்த்து வைத்திட ஜிமெயில் 7 ஜிபி இடம் தருவதனால், யாரும் வந்த மெயில்களை இன்பாக்ஸிலிருந்து நீக்குவதில்லை.

இருந்தாலும், ஏதேனும் ஒரு நாளில், மொத்தமாகச் சேர்ந்த மெயில்களினால், கூகுளிலும் இடம் இல்லாமல் போய்விடலாம் அல்லவா? ஜிமெயில் தொடங்கிய நாள் முதல் அதனைப் பயன்படுத்தி வருபவர்கள் பலருக்கு, இந்த சூழ்நிலை தற்போது ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் அதிக மெயில்கள் சேர்ந்து, 7 ஜிபி அளவை எட்ட இருக்கையில் “You have run out of space for your Gmail account. You will not be able to send or receive any emails until you delete some items”என ஒரு செய்தி கிடைக்கலாம்.

அப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க, நம் ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மெயில்களில், அதிக அளவு இடத்தைப் பிடித்திருக்கும் மெயில்களைக் கண்டறிந்தால், அவற்றை நீக்கிவிடலாமே! தேவையற்ற இøணைப்புகள், போட்டோக்கள், இமேஜ், வீடியோ கிளிப்கள் என அதிகம் இடம் பிடிக்கும் மெயில்களை எப்படிக் கண்டறிவது என்று இங்கு காணலாம்.

இதற்கு நமக்கு உதவுவது FindBigmai என்னும் சேவையாகும். இந்த சேவை, நம் ஜிமெயில் இன்பாக்ஸினை முழுமையாக ஸ்கேன் செய்து, எந்த எந்த மெயில்கள், அதிக அளவில் இணைப்புகளைக் கொண்டுள்ளன என்று காட்டும். அவற்றைத் தனியே வடிகட்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.

1. முதலில் http://findbigmail.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. அங்கு உங்கள் இமெயில் முகவரியைத் தரச் சொல்லி கட்டம் கிடைக்கும். பின்னர், அருகே உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டில் நுழைய, உங்கள் அனுமதி கேட்கப்படும்.

3. அனுமதி கொடுத்தவுடன், FindBigmail தன் பணியைத் தொடங்கும். பெரிய அளவிலான இணைப்புகள், படங்கள், டாகுமெண்ட்கள் மற்றும் பிற பைல்களைக் காட்டும். உங்கள் மெயில் இன்பாக்ஸைப் பொறுத்து, இந்த பணி முடிய 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த பணி நடக்கையில், நீங்கள் தொடர்ந்து உங்கள் இமெயில் பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.

4. தேடல் நடக்கும்போதே, எத்தனை மெயில்களில் அதிக அளவில் இணைப்புகள் உள்ளன என்ற செய்தி காட்டப்படும். இந்த தேடல் முடியும் வரை, உங்கள் பிரவுசரை மூடக் கூடாது. முடிவில், மிகப் பெரிய மெசேஜ்களின் எண்ணிக்கை, ஓரளவில் இடத்தைப் பிடித்தி ருக்கும் மெயில்களின் எண்ணிக்கை என சார்ட் மூலம் காட்டப்படும்.

அதன் அருகே உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், அவை பட்டியலி டப் படும். அவற்றில் கிளிக் செய்து, படித்துப் பார்த்து, தேவையில்லை என்றால், அவற்றை நீக்கிவிடலாம். இந்த சேவை, பல புதிய லேபிள்களையும் உருவாக்கும்.

அவற்றில் அதிக அளவில் இடம் பிடிக்கும் டாப் 20 இமெயில்கள், பின்னர் அளவின் அடிப்படையில் இடம் கொண்டிருக்கும் இமெயில்களுக்கான லேபிள்கள் இருக்கும். இவற்றை ஜிமெயிலின் பக்கவாட்டில் இருக்கும் சைட்பாரில் காணலாம்.

இவற்றைக் கிளிக் செய்து, மொத்தமாகவும், தனித்தனியாகவும் அழிக்கலாம். மொத்தமாக அழிக்க, Settings > Labels சென்று அழிக்கலாம். ஒவ்வொன்றாகவும் நீக்கலாம். இவற்றை அழிக்கையில், எவ்வளவு இடம் கிடைக்கிறது எனவும் காட்டப்படும். இவ்வளவும் முடிந்த பின்னர், பெரிய வீட்டில் இஷ்டத்திற்கு விளையாடும் குழந்தை போல, உங்கள் ஜிமெயிலை நீங்கள் பயன்படுத்தலாம்.


பேசப்பேச சார்ஜ் ஆகும் மொபைல் போன்

மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும்.

இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.

அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது.

எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்.

இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.


உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்ற‌ன. நவீன மொபைல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.

பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். மொபைல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எறியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு மொபைல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே? இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. 

சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது. இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.

இமெயில் அனுப்ப முடியாது.வை பை வசதி எல்லாம் இல்லை, பேஸ்புக் பார்க்க முடியாது.கேமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியாது. இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.

அவ்வளவே. உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்திருக்கிறது.மொபைல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜான்ஸ்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை. 

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து. 

அலங்கார ரிங்டோன் எல்லாம் இல்லாமல் தொழில்நுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த மொபைல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.

அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும். அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம். 

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில் தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும். 

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய, அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான மொபைல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது. நவீன வாழ்வின் சிக்கல்கள் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.


புதுப் பொலிவு பெற்றது ஏர்டெல்

இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், 2 ஆயிரம் கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், புதி‌ய லோகோவை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து, பார்தி ஏர்டெல் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுனில் பார்தி மிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

ஆசிய மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் 19க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள ஏர்டெல் நிறுவனம், 15 ஆண்டு காலத்‌தை பூர்த்தி செய்துள்ளதாகவும், 2 ஆயிரம் கோடி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வசம் உள்ளதாகவும், இதன்மூலம், சர்வதேச அளவில், தொலைதொடர்பு துறையில் முன்னணி இடத்தைப் பெற்றிருப்பதாகவும், இதனைக் கொண்டாடும் பொருட்டும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகளை அளிக்கும் பொருட்டும், இளைய தலைமுறையினரைக் கவரும் விதமாக புதிய லோகோ வடிவமத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட சிக்னேச்சர் டியூனும் புதுப்பொலிவு பெறுகிறது. 

2007 அக்டோபர் மாதத்தில், 50 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த தங்கள் நிறுவனம், 2009ம் ஆண்டு மே மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்க‌ளையும், கடந்த 18 மாதங்களில், ஏர்டெல் குழுமத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளதாகவும், இதன்மூலம் தான், தாங்கள் முன்னணி இடத்தைப் பெற முடிந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தாண்டின் இறுதி்ககுள், ஏர்டெல் நிறுவனம், 3ஜி சேவையை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


லினக்ஸ் எதிர்ப்பார்ப்புகள்

வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு லினக்ஸ் சிஸ்டம் மிகவும் உதவியாக உள்ளது எனவும் பலர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் லினக்ஸ் உபுண்டு பதிப்பு 10.10, பயன்படுத்துபவருக்கு இயக்க எளிமையாகவும், பயன்கள் பல தருவதாகவும் கூறியுள்ளனர். அதே சமயத்தில் பாதுகாப்பு மற்றும் பயன்களில் சிறிதும் குறைவின்றி இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

ஆனால் புதியதாக லினக்ஸ் பயன்படுத்தும் பலர் தாங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் இதில் இல்லயே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது லினக்ஸின் குற்றம் இல்லை. லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் இப்போது ஒரு புதிய சுதந்திரமான உலகை அனுபவிப்பார்கள்.

அடிக்கடி தொகுப்புகளை மற்றும் அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை, அதிக கட்டணத்தில் மாற்றும் வேலை இல்லை. எது எப்போது கம்ப்யூட்டருக்குள் வந்து, நம் தகவல்களை, பைல்களைத் திருடுமோ என்ற அச்சம் இல்லை. எப்போது சிஸ்டம் முடங்கிப் போய் நம் வேலைகளை நிறுத்துமோ என்ற கவலை இல்லை.

ஆனால், விண்டோஸ் தொகுப்பில் இருந்து மாறியதால், பயனாளர்களுக்குச் சிறிது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது போலத் தோற்றமளிக்கலாம். அவை இதுவரை விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஊறிப்போனதன் விளைவுதான். அவற்றை இங்கு காணலாம்.


1. விண்டோஸ் எதிர்பார்ப்பு:

மனிதர்கள் என்றைக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள். இதனாலேயே உபுண்டு மற்றும் பிற லினக்ஸ் பதிப்பு வழங்குபவர்கள், விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தரும் பயன்களை, லினக்ஸ் பதிப்புகளிலும் புகுத்தியுள்ளனர்.

குறிப்பாக, உபுண்டு பதிப்பு, விண்டோஸ் தரும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால், இவற்றில் சற்று சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்திடும். பழகிய மனமோ, விண்டோஸ் போலவே இல்லை என்று எதிர்பார்ப்பில் சற்று வருத்தப்படுகிறது. இது போகப்போக சரியாகிவிடும்.


2. "ரூட்' வழி தேவையில்லை:

விண்டோஸ் இயக்கத்தின் அட்மினிஸ்ட்ரேட்டர் போல, லினக்ஸ் "ரூட்' வழி கொண்டிருந்தாலும், பயனாளராகப் பலர் இதனை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி முழு சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியும். இந்த வகையில், முழுமையான பாதுகாப்பினை லினக்ஸ் தருகிறது. "ரூட்' வழியாகத்தான் செல்ல வேண்டுமோ என்ற தயக்கம் பலரிடத்தில் உள்ளது. இந்த பயம் தேவையில்லை. தேவையிருப்பின் "ரூட்' வழி செல்ல பாஸ்வேர்ட் பெற்று செல்லலாம். இந்த தேவை எப்போதாவதுதான் ஏற்படும்.

3. சாப்ட்வேர் இலவசம்:

விண்டோஸ் இயக்கத்தில் பழகிய பின்னர், பல சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் ஒரு எல்லைக்குப் பின் இவற்றைக் கட்டணம் செலுத்தியே முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அந்தக் கவலை லினக்ஸில் இல்லை. பெரும்பாலும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும் இலவசமாகவே கிடைக்கின்றன.

ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பும் ஒரு மையத்தைக் கொண்டு இயங்குகின்றன. அங்கு அனைத்து பயன்பாட்டு தொகுப்புகளும் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, உபுண்டு பதிப்பிற்கு, உபுண்டு சாப்ட்வேர் சென்டர் இயங்குகிறது.

4. கட்டளை வரி தயக்கம்:

கமாண்ட் லைன் எனப்படும் கட்டளை வரி, லினக்ஸில் அடிப்படையாக இயங்குகிறது. இது விண்டோஸ் இயக்க பயனாளர்களுக்கு முற்றிலும் புதியதாக உள்ளது. ஆனால் பழகப் பழக, மிகவும் எளிதாக தயக்கம் விலகி பயன்பாடு பயனுள்ளதாக மாறுகிறது.

5. ஒட்டிக் கொள்வீர்:

மாற்றம் எப்போதும் மனிதனுக்குச் சற்று பயத்தையும் தயக்கத்தினையும் தருகிறது. தொழில் நுட்பம் மிக எளியதாக இருந்தாலும், மாற்றம் எப்போதும் சற்று கடினமாகவே தெரிகிறது. ஆனால் எண்ணிப் பாருங்கள்! விண்டோஸ் அல்லது மேக் சிஸ்டம் இயக்கத்தினைத் தொடக்கத்திலிருந்து கற்று தெரிந்தா வந்தீர்கள்? அதே போலத் தான் லினக்ஸ் சிஸ்டம் பழக்கமும்.

இதனால் உங்களுக்குப் பயன்கள் அதிகம் என்றால், போகப் போக இதனைப் பயன்படுத்துவது பிடித்துப் போக, தொடர்ந்து பயன் படுத்தத் தொடங்கி விடுவீர்கள். அல்லது இரண்டையும் பயன்படுத்து வீர்கள்.


புதிய வைரஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும்.

இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும்.

இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும்.

எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கும். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்.


3ஜி தரும் பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது.

தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன.

இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.

1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்:

3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.

2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்:

3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

3. மொபைல் ஒரு முனையமாக:

மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.

4. வீடியோ ஸ்ட்ரீமிங்:

நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.

5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP):

மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.

6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்:

பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.

7. துல்லிய ஒலி அனுபவம்:

சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும்.

உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம்.

இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes