பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான்.

இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடுகளில் பதிந்து கொள்ளலாம்.

எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற்றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு புரோகிராம் மூலம் பார்மட்டினை மாற்றிப் பின் அதனை பிரசன்டேஷன் பைலில் இணைப்பார்கள்.

MP3 AddIn புரோகிராம் இந்த சிக்கலைத் தீர்க்கிறது. இது பைலில் ஹெடர் ஒன்றை இணைத்து, இதனை வேவ் பைல் போலக் காட்டி, பிரசன்டேஷன் புரோகிராமினை ஏமாற்றுகிறது. வழக்கமாக வேவ் பைலாக மாற்றுகையில், பைலின் அளவு பெரிதாகும்.

இந்த புரோகிராம் பைலில் ஹெடர் ஒன்றை மட்டும் இணைப்பதால், இந்த பிரச்னை எழுவதில்லை. மொத்த பைலின் அளவும் 2 பைட் மட்டுமே அதிகரிக்கிறது.

மேலும் இந்த பிரசன்டேஷன் பைலை மற்றவர்களுக்கு அனுப்புகையில், எம்பி3 பைலையும் தனியே இணைத்து அனுப்ப வேண்டியதில்லை.

பிரசன்டேஷன் பைலுடன் இணைந்தே இசைக் கோப்பும் செல்கிறது.

இந்த MP3 AddIn புரோகிராமினை டவுண் லோட் செய்திடhttp://www.topbytelabs.com/ freestuff/index.php?id=68 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தினந்தோறும் நாம் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பாகும். இதனை எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடிகிறதோ அது நமக்கு மனநிறைவைத் தரும்.

வேர்ட் புரோகிராம் மாறா நிலையில் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல நம் வழக்கமான அல்லது விருப்பமான செயல்பாட்டிற்கு மாறான நிலையில் இருக்கலாம்.

இவற்றை மாற்றி செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை யும் அவற்றை மாற்ற வேண்டியிருக்காது. இதனால், நேரமும் வேலையும் மிச்சமாகும். அப்படிப்பட்ட சில மாறா நிலை அமைப்பினை மாற்றும் வழிகளை இங்கு காணலாம்.


1. வரிகளுக்கு இடையேயான இடைவெளி:

டாகுமெண்ட் தயாரிக்கையில் வரிகளுக்கு இடையேயான இடைவெளியாக வேர்ட் 1.15 எனக் கொண்டுள்ளது. வேர்ட் 2003 தொகுப்பில் இது 1 ஆக இருந்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இதனை 1.15 ஆக மாற்றிவிட்டது.

இருவரிகளுக்கிடையே இந்த அளவு இடைவெளி இருந்தால் தான், படிக்க இலகுவாக இருக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணி இவ்வாறு மாற்றி விட்டது. குறிப்பாக இணைய பக்கங்கள் தயாரிக்கையில் இது போல இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்து இவ்வாறு மாற்றி அமைத்தது.

நாம் இணையப் பக்கங்களை, வேர்ட் தொகுப்பில் தயாரிக்க வில்லை எனில், நமக்கு வேர்ட் 2003ல் இருந்தது போல, இடைவெளி 1 ஆக இருப்பது நல்லது என எண்ணினால், இதனையே மாறா நிலையில் இருக்குமாறு அமைத்துவிடலாம். இந்த மாற்றத்தினை வேர்டின் டெம்ப்ளேட் பைலில் (Normal.dotx) ஏற்படுத்த வேண்டும்.

1. Home டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. Styles Quick காலரியில் Normal என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் இதில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து, Format லிஸ்ட்டில் Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இங்கு கிடைக்கும் Spacing பிரிவில், At செட்டிங் இடத்தில் 1.15 என்று இருப்பதனை 1 என மாற்றவும்.

5. அடுத்து ஓகே யில் கிளிக் செய்திடவும்.

6. அடுத்து New Documents Based On This Template என்ற ஆப்ஷனை டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


2. மேற்கோள்குறி (quotes) அடையாளம்:

வேர்டில் இருவகையான மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தலாம். அவை Smart Quote ("" '') மற்றும் straight quotes (" '') ஆகும். வேர்டில் இணைய தளப் பக்கங்கள் அல்லது அச்சிடுவதற்கான டாகுமெண்ட்கள் தயாரிக்கையில் வேர்ட் தரும் Smart Quoteக்குப் பதிலாக straight quoteயே விரும்புவீர்கள்.

இதனால், ஒவ்வொரு முறையும் இதனை உங்கள் விருப்பப்படி மாற்றுவீர்கள். இது நமக்கு சிரமத்தைத் தரும். சில வேளைகளில் மாற்ற மறந்து விடுவோம். எனவே நாம் விரும்பும் straight quoteயே மாறா நிலையில் அமைத்து விட்டால், இந்த பிரச்னை எழாது.

1. File மெனு கிளிக் செய்து, அதில் Help என்பதன் கீழ் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Option என்பதனை அடுத்து கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Tools மெனுவிலிருந்து, Auto Correct Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, அடுத்த படியாக ஸ்டெப் 4க்குச் செல்லவும்.

2. இடது பிரிவில் Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இங்குள்ள AutoCorrect Options என்ற பிரிவில் AutoCorrect Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இங்கு AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

5. Replace As You Type என்ற இடத்தில் Straight Quotes With Smart Quotes என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பதனை ரத்து செய்திட வும். டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


3. சிறப்பாக ஒட்டுதல் (Paste Special):

வேர்ட் தொகுப்பில் உள்ள வசதி, நாம் எந்த வேறு ஒரு பார்மட் அமைப்பில் இருந்து எடுக்கும் டெக்ஸ்ட்டினை அதே பார்மட்டில் ஒட்டி வைக்க உதவிடுகிறது. ஆனால், பெரும் பாலும் ஒட்டப்படுகின்ற வேர்ட் டாகு மெண்ட்டின் பார்மட்டிற்கேற்ப மாற்று வதற்கு நாம் விருப்பப்படுவோம்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் மாற்ற வேண்டிய திருந்தால், மாறா நிலையில் உள்ள Paste Special வசதியை மாற்றி அமைத்துவிடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட்டிங்ஸ் மாற்றவும்.

1. File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டனில் கிளிக் செய்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இடது பக்கம் உள்ள பிரிவில் Advanced என்பதனைத்தேர்ந்தெடுக்கவும்.

3. Cut, Copy, and Paste என்ற பிரிவில் , Pasting Between Documents When Style Definitions Conflict என்ற கீழ்விரி மெனுவில் Use Destination Styles என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. Pasting From Other Programs என்ற மெனுவில் இருந்து Choose Keep Text Only என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்ட் 2003ல் இந்த செட்டிங்ஸ் சற்று மாறுபடும். டூல்ஸ் மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்க வும். இதில் எடிட் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Cut And Paste என்ற பிரிவில் Settings பட்டன் கிளிக் செய்து மேலே காட்டிய மாற்றங்களை மேற்கொள்ளவும்.


கூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்

கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர், கூகுள் இணைய தளங்களில், அதன் யு-ட்யூப் தளத்தில், தகவல்களை, வீடியோ கிளிப்களை பதியலாம். இந்த சுதந்திரத்தினை கூகுள் அளித்துள்ளது.

ஆனால், அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர் இந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிக்கின்றனர்.

இதனால், பாதிக்கப்படுபவர்கள் கூகுள் நிறுவன நிர்வாகிகளுக்கு அவற்றை நீக்க வேண்டிய காரணத்தினைக் கூறி நீக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். சிலவற்றை நீக்குமாறு அரசே ஆணையிடுகிறது. சிலவற்றை நீக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.

கூகுள் தன் ஆண்டறிக்கையில் எந்த தளங்கள், தகவல்கள் எதற்காக நீக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளன.

இவற்றில் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்பட்டன. பன்னாட்டளவில் பல அரசு நிர்வாகிகள் அரசியல் நோக்கத்திற்காகப் பல தகவல்களை நீக்குமாறு கேட்கின்றனர். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் தகவல்களை மட்டுமே கூகுள் நீக்கிவருகிறது.

நீதிமன்றத்திலிருந்து 461 ஆணைகள் பெறப்பட்டு, இந்த ஆறு மாத காலத்தில், 6,989 பதிவுகள் நீக்கப்பட்டன. ஆணை யிடப்பட்டவற்றில் 68% மட்டுமே நிறை வேற்றப்பட்டன. தனிப்பட்ட முறையில் 546 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 46% நீக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ஈரான் நாட்டு அரசுகள், கூகுள் நிறுவனத்திடம் அறிவிக்காமல் தாங்களே தளங்களை தடை செய்துவிடுகின்றன.

போலந்து நாட்டிலிருந்து ஏஜென்சி ஒன்று குறித்து அவதூறாகவும் தவறாகவும் தகவல் தந்த தளம் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.ஸ்பெயின் நாட்டு நிர்வாகம் 270 வலைமனைகள் மற்றும் அவற்றில் குறிப்பிட்ட லிங்க்குள் யாவும் நீக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டது.

இவை யாவும் பொது வாழ்வில் ஈடுபடுவோரைப் பற்றிய அவதூறு தளங்களாகும். கனடா வழங்கிய பாஸ்போர்ட் மீது ஒருவன் சிறு நீர் கழித்து, அதனை கழிப்பறையில் எறிந்துவிடும் வீடியோ பதிவினை, கனடா நாட்டு அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், கூகுள் இந்த விண்ணப்பங்கள் யாவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் செய்தியாகும்.

ஆனால், தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தினர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட 149 வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டன.

ஏனென்றால், அது தாய்லாந்து சட்டத்திற்கு எதிரானதாகும். தீவிரவாதத்தினைத் தூண்டிய ஐந்து வீடியோ பதிவுகள், பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நீ . அமெரிக்க அரசு அனுப்பிய விண்ணப்பங்களில், 42% வீடியோ பதிவுகள் (187) நீக்கப்பட்டன. இவை யாவும் தனி நபர் குறித்த அவதூறுகளாகும்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC

1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர்.

தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.

இப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டரைத் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹார்ட்வேர் பிரிவில் மவுஸ், கீ போர்ட், வெப் கேமரா போன்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளாக அவ்வப்போது வெளியாகி விற்பனையாயின. ஆனால், முழுமையான கம்ப்யூட்டர் இப்போதுதான் வெளியாகியுள்ளது.

Surface என்ற பெயரில் ஜூன் 18 அன்று விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இரண்டு மாடல் டேப்ளட் கம்ப்யூட்டர்களை, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் அறிமுகப்படுத்தினார்.

இவை இரண்டும் மேக்னீசியத்தில் உருவாக்கிய பாதுகாப்பு கவசத்தில் தரப்படுகிறது. இத்துடன் இணைத்தே அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் இதனை ஒரு லேப்டாப் போல வைத்து இயக்க வசதியைத் தருகிறது. இரு மாடல்கள் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.

சர்பேஸ் புரோ, இன்டெல் கோர் ஐ 5- ஐவி பிரிட்ஜ் ப்ராசசருடன், விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பை இயக்குகிறது. இதனால் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் மெட்ரோ ஸ்டைல் அப்ளிகேஷன்களை இதில் இயக்கலாம். வழக்கம் போல வேர்ட், எக்ஸெல் போன்ற அப்ளிகேஷன்களையும் மெட்ரோ அப்ளிகேஷன்களையும் இதில் இயக்கலாம். போட்டோஷாப் போன்றவற்றையும் இயக்கலாம்.

இன்னொன்றான சர்பேஸ் ஆர்.டி. கம்ப்யூட்டரில், என்வீடியா டெக்ரா 3 சிப் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்டோஸ் 8 ஆர்.டி. சிஸ்டம் செயல்படுகிறது. வழக்கமாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது.

அதற்குப் பதிலாக குறைந்த அளவிலான ஆபீஸ் தொகுப்புகளை (“Office Home & Student”) இயக்கலாம். முந்தையதைக் காட்டிலும் தடிமன் குறைவாக, குறைவான எடையில், சற்றுக் குறைந்த விலையில் (இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை) கிடைக்கும்.

இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முதன்மையாகத் தயாரித்து, அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை எச்.பி. மற்றும் டெல் போன்ற நிறுவனங்களிடம் விட்டு விட்டிருந்த மைக்ரோசாப்ட், முதன் முதலாக, முழுமையான கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்குகிறது.

இதன் மூலம் டேப்ளட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியை அங்கீகாரம் செய்துள்ள மைக்ரோசாப்ட், இந்த இரண்டு சர்பேஸ் டேப்ளட் பிசிக்கள் மூலம் போட்டியில் இறங்குகிறது. இவை விற்பனைக்கு அக்டோபர் மற்றும் அடுத்த ஜனவரியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1. விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ்:

10.6 அங்குல கிளியர் டைப் எச்.டி. டிஸ்பிளே திரை கிடைக்கிறது. இதன் ஆஸ்பெக்ட் ரேஷியோ 16:9 ஆக உள்ளது. இதுதான் தற்போது மானிட்டர் திரையின் எச்.டி. வரை யறைக்கான திரையாகும். 22 டிகிரி கோணத்தில் இதன் திரை முனைகள் உள்ளன.

ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் வழக்கமான திரைக்காட்சியை இது தரும். இதன் எடை 676 கிராம். 9.33 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி., யு.எஸ்.பி., மைக்ரோ எச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 x 2 MIMO antennae 32 அல்லது 64 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 31.5 தீwatthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஆபீஸ் 15 அப்ளிகேஷன்கள், டச் கவர் மற்றும் டைப் கவர் தரப்படுகின்றன. VaporMg Case & Stand இணைக்கப் பட்டுள்ளன. இது தனி நபர் பயன்பாட்டிற்கானது.


2. விண்டோஸ் 8 ப்ரோ சர்பேஸ்:

முந்தைய டேப்ளட் பிசியில் தரப்படும் அதே திரை இதிலும் தரப்பட்டுள்ளது. அதன் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் எடை 903 கிராம், 13.5 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி., யு.எஸ்.பி.3.0., மினி டிஸ்பிளே போர்ட்கள், 2 x 2 MIMO antennae, 64 அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 42 watthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர், நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும்.

இந்த இரண்டு கம்ப்யூட்டர்களுடன் Touch Cover, Type Cover, Pen with Palm Block இணைக்கப் பட்டுள்ளன. VaporMg Case & Stand தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் தரப்படும் டச் கவர் (3mm Touch Cover), மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்குமான புதிய உறவை அமைக்கிறது. ஒரு புதிய தொழில் நுட்பத்தினை, (pressuresensitive technology,) இது செயல்படுத்துகிறது. இதில் தரப்பட்டுள்ள மேக்னடிக் கனெக்டர் கீ அழுத்தல்கள், சைகைகளாக கம்ப்யூட்டர் திரையை அடைகின்றன. இத்துடன் 5 மிமீ தடிமனில் கிடைக்கும் டைப் கவர் மூலம் வழக்கம் போல கீ போர்ட் டைப்பிங் பழக்கத்தினை மேற்கொள்ளலாம்.

இவற்றின் திரைகள், எப்போதும் எந்த நிலையிலும் ஸ்கிராட்ச் அனுமதிக்காமல், புதிய பொலிவுடனேயே இருக்கும். வழங்கப்படும் கீ போர்ட் இரு மடங்காக விரிந்து திரைக்கான கவசமாகிறது. இதில் டச் கண்ட்ரோல்களும் உள்ளன. முதன் முதலாக மக்னீசியம் கலந்த கவசத்தில் அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் இதுதான் என்று பால்மர் தெரிவித்துள்ளார். கீ போர்ட் மட்டுமின்றி ஸ்டைலஸ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடு மற்றும் அசைவு உணர்வுகள் மூலம் இதனை இயக்கும் வகையில் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து இயக்க ஸ்டாண்ட் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. தரப்படும் கீ போர்டையும் இதனுடன் இணைத்து இயக்கலாம்.

உங்கள் கற்பனையில் உருவாக்க, வடிவமைக்க விரும்பும் அனைத்தையும் இவற்றின் மூலமாகவும் மேற்கொள்ளலாம். இவற்றின் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், நடப்பு சந்தையில் உள்ள டேப்ளட் பிசிக்கள் மற்றும் அல்ட்ரா நோட்புக் கம்ப்யூட்டர்களின் விலையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு கம்ப்யூட்டர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனத்தை போட்டியில் வீழ்த்துமா என்பது சந்தேகம் என்றாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று இப்பிரிவில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். தன்னுடைய கேலக்ஸி டேப் மூலம், சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேடை வெற்றி கொள்ள முயன்று முடியாமல் போனது. ஆனாலும் சர்பேஸ் பிசிக்கள் நிச்சயம் ஒரு நல்ல போட்டியைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

இதனைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் தன் டேப்ளட் பிசி கம்ப்யூட்டரை வெளியிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்ளட் பிசிக்களுடன் கூகுள் நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்களும் இந்த சந்தையைக் கலக்க இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆகாஷ், மொபிலிஸ், சிம்ப்யூட்டர் ஆகிய நிறுவனங்கள் டேப்ளட் பிசிக்களைத் தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளன. ஆனால், நம் மக்கள் இவற்றிற்கு அவ்வளவாக ஆதரவினைத் தரவில்லை. 2011ல், இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்பட்டதில், 70% ஐ-பேட் பிசி மற்றும் சாம்சங் டேப்ளட் பிசிக்களாகவே இருந்தன.

இனி இவற்றுடன் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போட்டியிடுகையில், இந்திய தயாரிப்புகள் மக்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் சற்று கூடுதலான வசதிகளையும் விற்பனைக்குப் பின்னர் பராமரிப்பினையும் அளித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம். அரசும் இவர்களை ஆதரிக்கும் வகையில் பல சலுகைகளை அளிக்க வேண்டும்.


Samsung S 6102 காலக்ஸி டூயோஸ்

தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது.

இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது.

போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இது ஒரு 3ஜி போனாகவும் செயல்படுகிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது.

3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன.

அக்ஸிலரோமீட்டர் சென்சார் மற்றும் எககு, அஎககு தொழில் நுட்பம் இயங்குகின்றன. இதன் அதிகபட்ச விலை ரூ. 9,300.


மொபைல் பழக்கங்கள்

மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.

இந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.

கீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.

கடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலை களில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.

பணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.

டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற்கொள்ள வேண்டாம்.

நிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயிருப்பவர் நீங்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.

மொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.

கழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.

சிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது.

நம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.


வேர்டில் பி.டி.எப். பைல்கள்

இனி, பி.டி.எப். பைல்களைப் படிக்க, இன்னொரு புரோகிராமினைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பிலேயே அவற்றைத் திறந்து படிக்கலாம். வியப்பாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.


தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதிக ஆரவாரமின்றி, தன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பு 15 ஐ வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்து வருகிறது.

இதனை ஆபீஸ் 15 எனத் தற்போதைக்கு அழைத்தாலும், இதன் பெயர் பின்னர் வெளியிடப்படுகையில் மாறலாம். 2012ல் வெளி வந்தால், ஆபீஸ் 2012 என இருக்கலாம்; 2013 எனில் அதற்கேற்ப பெயர் மாறலாம்.

சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தொகுப்பின் தொடக்க பதிப்பினை ஒரு சில தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு மட்டும் வழங்கி கருத்து கேட்டுள்ளது. பொதுமக்களுக்கான சோதனை தொகுப்பு விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.

இந்த தொகுப்பு இணையவெளியில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கலாம். இந்த தொகுப்பு குறித்து பால் என்பவர்http://www.winsupersite.com/article/office/office-15-milehigh-view-142847 என்ற இணையப் பக்கத்தில் பல குறிப்புகளைத் தந்துள்ளார். இதிலிருந்து ஆபீஸ் 15 பதிப்பில் தொழில் நுட்ப ரீதியாக இன்னும் பல மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.

இந்த தொகுப்பில் மிக மிக முக்கிய சிறப்பு பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வசதிதான். .doc, .rtf பார்மட் பைல்களைத் திறந்து படிப்பது போல, .pdf பைல்களையும் இதில் திறந்து படிக்கும் வசதி தரப்படுகிறது.

மைக்ரோசாப்ட் அடுத்து தர இருக்கும் தன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10ல் ப்ளாஷ் இணைத்துத் தர இருப்பதால், ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். படிக்கும் வசதி தரப்படுவதில் சிக்கல் இருக்காது. நமக்கு இது மிகவும் பயன் தரும் ஒரு வசதியாக இருக்கும்.

இத்துடன், சென்ற அக்டோபரில் அனுமதிக்கப்பட்ட Open Document Format ODF 1.2 என்ற பார்மட் டாகுமெண்ட் களையும், ஆபீஸ் 15ல் படிக்க இயலும். இதே போல இன்னும் பல சிறிய மாற்றங்கள் இருக்கும். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு, 16:9 பார்மட்டினைத் தன் மாறா நிலையில் கொண்டிருக்கும். பழைய பார்மட்டுகளையும் கையாளலாம்.

ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், ஆபீஸ் 15க்கு மாறுவார்களா என்பது, இது போல பல புதிய அரிய வசதிகளை தருவதன் அடிப்படையிலேயே அமையும் என்பதனை மைக்ரோசாப்ட் உணர்ந்துள்ளது. எனவே தான் இந்த புதிய வசதிகளைத் தரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப் படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது.

எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது.

எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப்பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும்.

பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும்.

இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.


கூகுள் தேடுதலில் கால வரையறை

இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது.

தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும்.

இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.

1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.

2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும்.

3. இதில் “Any time” என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக “Past hour,” “Past 24 hours,” “Past 2 days,” என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.

5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை “From” பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.

6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.

7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.


அச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்

உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா?

அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப் படும்.

* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே!

* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.

* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத் தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.

* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரை வாகத் தயாராகிவிடும். இதனையே மின் சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்;

மை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.


புதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை

அண்மையில் மத்திய அமைச்சரவை, ""புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைத் திட்டம் 2012''க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் புதியதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கும், இணையத் தொடர்பினைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர்களுக் கும், மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கும் இது மகிழ்ச்சி தரும் பல விஷயங்களைத் தந்துள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பாதுகாப்பான, நம்பி செயல்படக் கூடிய, அனைவரும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக் கூடிய உயர்ந்த தரம் மிக்க தொலைதொடர்பு வசதிகளை அளிப்பதாகும்.

இதன் மூலம் சமுதாய பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கிய அம்சங்கள்:

1. கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதிகளை இப்போதைய 39 சதவிகிதத் திலிருந்து 70 சதவிகிதமாக 2017 ஆம் ஆண்டுக்குள் உயர்த்தி, 2010ல் 100% ஆக உயர்த்துவது.

2. குறைந்தது 2 Mbps வேகத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பினை வழங்குவது.

3. இந்தியாவிலேயே தொலை தொடர்பு சாதனங்களைத் தயாரிக்க அடிப்படை வசதிகளையும், தொழில் நுட்ப அறிவையும் அளிப்பது.

4. நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் சாதனங்களை ஒருங்கிணைப்பது.

5. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை, தொலைதொடர்பு துறையின் அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தும் வகையில் அளிப்பது.

6. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினைப் பயன்படுத்த உரிமம் வழங்குவதனை எளிமைப்படுத்தி, இணைய வழியில் விண்ணப்பித்து உரிமம் பெறுவதனை அமல்படுத்துதல்.

7. மொபைல் போன் பயன்பாட்டில், மொத்த இந்தியாவினையும் ஒரு மண்டலமாகக் கொண்டு வருவது; ரோமிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்வது மற்றும் ஒரே எண்ணை எந்த மண்டலத் திற்கும் சென்று, அந்த மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் உரிமை தருதல்.

8. சேவையை மற்றவர்களுக்கு மாற்றி விற்பனை செய்தல்.

9. இன்டர்நெட் வழிமுறை மூலம் பேச வசதி தருதல்.

10. ஐ.பி.வி.6 பெயர் அமலாக்கம் மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையை வளர்த்தல்.

நுகர்வோர் விரும்பும் அனைத்து பிரிவுகளையும் இந்த இலக்குகள் குறி வைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த இலக்குகள் அடையப்பட்டால், நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.


ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை

புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.

ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.

(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.

1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.

5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.


முந்துகிறது குரோம் பிரவுசர்

பிரவுசர்களில் அதிகம் பயன்படுத்தப் படும் பிரவுசர்களில், இதுவரை முதல் இடத்தை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் பிடித்து வந்தது. அண்மையில், ஸ்டார் கவுண்ட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, குரோம் பிரவுசர் முதல் இடத்திற்கு வந்துள்ளது.

மே மாத மூன்றாம் வாரத்தில், குரோம் பிரவுசர் பயன்பாடு 32.8% ஆகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 31.9% ஆகவும் இருந்தது.

அவ்வப்போது குரோம் பிரவுசர் பயன்பாடு சில தினங்களில் மட்டும் கூடுதலாக இருக்கும்.

தற்போது தொடர்ந்து ஒரு வாரம் அதுவே அதிகம் பயன்படுத்தப் படும் பிரவுசர் என இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயர்பாக்ஸ் 25.5% பங்குடன் மூன்றாவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி மற்றும் ஆப்பரா அடுத்தடுத்த இடங் களிலும் இருந்தன.


தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந் துள்ளது.

பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

அந்த முகவரி யில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந் தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும்.

ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச் சலூட்டும் உதவியாக உள்ளது.

நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர் களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.

இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.

1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும்.

2. “Settings” திரை காட்டப்படுகையில், “General” என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.

3.இங்கு கீழாகச் சென்று, “Complete contacts for auto-complete” என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள “I’ll add contacts myself” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

தொடர்ந்து “Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.


Yammer வலை தளத்தை வாங்க Microsoft திட்டம்

பேஸ்புக்கைப் போன்றதொரு சமூக வலை தளமானது தான் யாமர். இது அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. இதனை வாங்க மைக்ரோசப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

2008ல் அமெரிக்காவில் உள்ள டேவிட் சாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது யாமர் சமூக தளம். தற்போது யாமர் சமூக தளத்தை 2 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

யாமரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதனால் விரைவில் யாமர் மைக்ரோசாப்டின் கைகளுக்குள் வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலை தள சந்தையில் யாமரோடு ஜைவ், சாட்டர் மற்றும் அசனா போன்ற வளைத்தளங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மைக்ரோசாப்டின் கையில் யாமர் வந்தால் மேலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்பைஸ் தரும் புதிய இரண்டு சிம் மொபைல்

மொபைல் இன்டர்நெட் நிறுவனமாகப் பெயர் பெற்று வரும் ஸ்பைஸ் நிறுவனம், அண்மையில் Flo Me – M 6868n என்ற பெயரில் புதிய இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வழக்கமான போனாக இல்லாமல், சில எதிர்பாராத சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.

312 MHZ வேகத்தில் இயங்கும் சி.பி.யு. இயங்குகிறது. இதனால், வழக்கமான மொபைல் போன்களைக் காட்டிலும் இந்த போன் 33% கூடுதல் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல 1150 mAh திறன் கொண்ட பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிக நாட்களுக்கு மின்சக்தியைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்கும் கேமரா உள்ளது.

வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்கள், மல்ட்டிமீடியா ரசிகர்கள் விரும்பும் வகையில் இயங்குகின்றன. இதன் ‘Cosmos UI’ என்ற இன்டர்பேஸ், திரையில், பல வசதிகளுக்கான இயக்கத்தைக் காட்டுகிறது.

பல சோஷியல் தளங்களுக்கான நேரடி இணைப்பும் கிடைக்கிறது. இத்தளங்களுக்கான இணைப்பை எளிதாகவும், வேகமாகவும் பெற “S Apps Planet” என்ற அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. வை-பி இணைப்பு மற்றும் எப்.எம். ரேடியோ இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.

டச் ஸ்கிரீன் திரையுடன், மல்ட்டி மீடியா மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு போன்றவற்றுடன் உள்ள மொபைல் போனை நாடும் இளைஞர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளதாக, ஸ்பைஸ் நிறுவன பன்னாட்டு தலைவர் குணால் அஹூஜா தெரிவித்துள்ளார்.

இந்த மொபைல், நாடெங்கும் ஸ்பைஸ் மொபைல் போன்களை விற்பனை செய்திடும் 50,000 மையங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,900 எனக் குறிக்கப்பட்டுள்ளது.


முடக்கப்பட்ட இணையத்தளத்தை பார்க்க வேண்டுமா?

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்ப்பதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் இதன் முலம் பார்க்க முடியாது.

அன் டைனி என்கின்ற தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.

டுவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா?

டுவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.

இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.


Windows 8: விற்பனைக்கு முந்தைய பதிப்பு

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படும் விண்டோஸ் 8 சிஸ்டத்தின், விற்பனைக்கு முந்தைய சோதனை பதிப்பினை, சென்ற மே 31 அன்று, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

இது இறுதி பதிப்பு அல்ல என்றும், இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மைக்ரோசாப்ட் உயர் அதிகாரி சினோப்ஸ்கி தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் தயாரிப் பவர்களுக்கென வழங்கப்படும் ஆர்.டி.எம். (“release to manufacturing”) பதிப்பு இறுதி செய்யப்படும் வரை விண் 8 சிஸ்டம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், கன்ஸ்யூமர் பிரிவியூ என்ற ஒரு தொகுப்பினை சென்ற பிப்ரவரியில் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. வெளியிட்ட 24 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியதாகத் தன் இணைய தளத்தில் அறிவித்தது. இதுவரை அதிக எண்ணிக்கையில், சோதித்துப் பார்க்க என பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுதான் என்றும் கூறியுள்ளது.

கம்ப்யூட்டர் உலகில், விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே அதிகம் எடுத்துக் கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. தற்போது வேகமாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் டேப்ளட் பிசிக்களையும் மையமாகக் கொண்டு விண்டோஸ் 8 களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகும் ஐ-பேட் மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசி சந்தையில், மைக்ரோசாப்ட் இன்னும் தவழும் குழந்தையாகவே உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன், இந்த சந்தையையும் சேர்த்துப் பிடிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.

ஆனால், விண்டோஸ் 8, எந்த அளவிற்கு டேப்ளட் பிசி சந்தையைப் பிடிக்கும் என்பது, வர்த்தக ரீதியாக இந்த சிஸ்டம் வந்த பின்னரே தெரியவரும்.

விண்டோஸ் 8, இதற்கு முந்தைய சிஸ்டங்களின் அடியைப் பின்பற்றி, புதிய சில கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிஸ்டம் அல்ல. முற்றிலும் புதுமையாக, புரட்டிப் போட்டு எடுத்தது போன்ற வசதிகளையும், எதிர்பாராத வடிவமைப்பை யும் கொண்டதாக இது விளங்குகிறது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங் களில் மக்கள் லயித்திடும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக இதனைக் கொண்டு வந்துள்ளது. இதில் இணைக்கப்பட்டு தரப்பட்டிருக்கும் மெட்ரோ அப்ளிகேஷன் மற்றும் தொடுதிரை பயன்பாடு, தன் நிறுவனத்திற்கு ஒரு புதிய திருப்பத்தினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.


மல்ட்டி டச் டச் பேட்:

விண் 8 சிஸ்டத்தில் மூன்று வகையான தொடு உணர் இயக்கம் கிடைக்கிறது. இரு விரல்களைக் குவித்து திரையின் குறிப்பிட்ட பகுதியைப் பெரிதாக் குவது, இரு விரல்களை எக்ஸ் மற்றும் ஒய் அச்சுக்கள் திசையில் இழுத்து காண்பது மற்றும் முனையில் விரல் வைத்து இழுத்து இயக்குவது.

இதில் மூன்றாவதாகத் தரப்பட் டுள்ளது, தொடு உணர் திரை அற்றதில் கூட இயங்கக் கூடியதாக இருக்கும். மவுஸ் மூலம் அதனை இயக்கும் வகையில் சிறப்பு கவனம் மற்றும் வடிவமைப்புடன் மவுஸ் சாதனங்களைத் தயாரிக்கும்படி ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாப்ட் கேட்டுள்ளது.

இப்போதிருந்து அடுத்த ஜனவரி 13 வரை விண்டோஸ்7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இவர்கள், தங்களின் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள 14.99 டாலர் செலுத்தினால் போதும்.

சிலர் விண்டோஸ் 8 சிஸ்டம் இருவித இடை முகங்களுடன் வருவது சரியான வழிமுறை இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகம் மற்றும் தொடு உணர் திரைக்கான மெட்ரோ இடைமுகம் என இரண்டு வகைகள் தரப்படு கின்றன. இது பயனாளர்களுக்கு பிரச்னை யையும் குழப்பத்தினையும் தரும் என்று கருதுகின்றனர்.

நுகர்வோருக்கான பதிப்பை வெளியிட்ட பின்னர் கிடைத்த பின்னூட்டுக்களின் அடிப்படையில், மைக்ரோசாப்ட், பல அப்ளி கேஷன் புரோகிராம்களை மேம்படுத்தியுள்ளது; பலவற்றை புதியனவாக இணைத் துள்ளது. மெயில், போட்டோ மற்றும் மக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பில் கூடுதலாக தனி நபர் அமைப்பினை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இணைப்புகளுக் கான வசதி மேம்பாடு, குழந்தைகள் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாடு கொள்ள கூடுதல் வசதி ஆகியவைகள் இந்த புதிய பதிப்பில் தரப்பட்டுள்ளன.

விண் 8 சிஸ்டத்துடன் தரப்படும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் பல மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடு உணர்வில் செயல்படும் வகையில் அடோப் பிளாஷ் பிளேயர் தரப்பட்டுள்ளது. இது ப்ளக் இன் புரோகிராமாக இல்லாமல், பிரவுசருடன் இணைந்ததாக இயங்குகிறது. பிளாஷ் 11.3 இயக்கம், பிரவுசரில் இணைந்து கிடைக்கிறது. இணைய தளப் பயன்பாட்டில், செல்லும் தளங்களின் ஹிஸ்டரியினை பதிந்து கொள்ளாமல் இருக்கும் வசதி, தொடக்கத்திலேயே இருக்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விண் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் தொடர்ந்து உணர்ந்து ரசிக்கும் விஷயங்களாக, மவுஸ் மற்றும் கீ போர்ட் செயல்பாட்டின் மேம்பாடு இருக்கப் போகிறது. கர்சரை இடது அல்லது வலது மூலைக்குச் சென்று இழுப்பதில், அப்ளிகேஷன் புரோகிராம்களின் இயக்கங்கள் செயல்படுவதாய் உள்ளன.

விண் 8 சிஸ்டத்தின் ஸ்டார்ட் ஸ்கிரீன், ஹோம் பேஜ் போல் செயல்படுகிறது. இதிலிருந்து ஒரு சில கிளிக் செய்தால், நம் புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன.

நுகர்வோருக்கான பதிப்பிற்குப் பின்னர், பல முன்னேற்றங்களை, மேம்பாட்டினை இந்த விற்பனைக்கு முந்தைய பதிப்பில் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. அவற்றை இங்கு பட்டியலிடலாம்.

பிங் தேடல் கருவிக்கான அப்ளிகேஷன்கள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள், விளையாட்டு மற்றும் செய்தி என வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.

Mail, Photos, and People அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டார்ட் ஸ்கிரீனில் கூடுதலாக தனிநபர் செட்டிங்ஸ் அமைக்க வழி தரப்பட்டுள்ளது.

கூடுதல் மானிட்டர் சப்போர்ட் மேம் படுத்தப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டோர் தேடிக் காண்பது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் இயக்கத்திற்கான வழிகள், பெற்றோர் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் கூடுதல் தொடு உணர்வு இயக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.

இருப்பினும் இன்னும் ஒரு சில அப்ளிகேஷன் புரோகிராம்களின் இணைப்பு செம்மைப் படுத்தப்பட்டு எளிமைப் படுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 8, இந்த குறைகளை நிவர்த்தி செய்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் இறுதி சோதனைத் தொகுப்பினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்கள் http://windows.microsoft.com /en-US/windows-8/download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கமான கம்ப்யூட்டரில் பதிந்து இயக்காமல், சோதனைக்கென உள்ள கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்ப்பதே நல்லது. இந்த கம்ப்யூட்டரில், ப்ராசசர் கிளாக் வேகம் குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் தேவை. ராம் நினைவகம் (32 பிட் இயக்கம்) 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக (2 கிகா ஹெர்ட்ஸ் - 64 பிட் இயக்கம்) இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் குறைந்தது 16 ஜிபி / 32 ஜிபி தேவை. டைரக்ட் எக்ஸ் 9 சப்போர்ட் செய்திடும் கிராபிக்ஸ் கார்ட் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனுடன் WDDM ட்ரைவர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சில செயல்பாடுகளுக்கு மல்ட்டி டச் சப்போர்ட், இன்டர்நெட் இணைப்பு, குறைந்தது 1024X768 பிக்ஸெல் திறன் கொண்ட திரை கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டம் இருப்பது நல்லது.

ரிலீஸ் பிரிவியூ (Release Preview) என அழைக்கப்படும் இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பினை http://preview.windows.com என்ற முகவரியில் உள்ள இந்நிறுவனத்தின் தளத்திலிருந்தும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் இடை முகம் 14 மொழிகளில் கிடைக்கிறது.

இந்த தளத்தில், ‘Download’ என்ற லிங்க்கில் கிளிக் செய்தவுடன், “Windows 8 Release Preview Setup” என்ற பைலின் தரவிறக்கம் தொடங்குகிறது. தானாகவே, உங்கள் கம்ப்யூட்டருக்கான, பதிப்பு பதியப்படுகிறது. நீங்கள் சற்று கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தெரிந்தவராகவோ அல்லது ஆர்வமுடையவராகவோ இருந்தால், இந்த செட் அப் பைல் ஐ.எஸ்.ஓ. பைலாகக் கிடைக்கிறது.

டிவிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து கொண்டு பயன் படுத்தலாம். ஆனால், இதிலிருந்து இப் பதிப்பினை இன்ஸ்டால் செய்திட 25 கேரக்டர் கொண்ட கீ ஒன்று தரப்பட வேண்டும். TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF என்பதே அது. இதனை எல்லாரும் பயன்படுத்தலாம்.


அனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்

ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும்.

இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.


1.டேப்களுக்கான சில ஷார்ட்கட் கீகள்:

Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.

Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.

Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.

இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில்

Ctrl+Page Upகீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.

Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.

Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.

Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.

Alt+F4– அப்போதைய விண்டோ மூடப் படும். பிரவுசர்களில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு, இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.


2. மவுஸ் சார்ந்த ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:

Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனை யைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.

Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய பிரவுசர் விண்டோவில் திறக்கப்படும்.

Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.


3. பிரவுசரில் உலா வருதல்:

Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.

Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.

F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.

Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.

Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.

Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.


4. பெரிதாக்குதல்:

Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.

Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.

Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.

F11– மானிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.


5. மவுஸ் உருளை உருட்டுதல்:

Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.

Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.

Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.

End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.

Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.


6. அட்ரஸ் பார்:

Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும்; இதில் டைப் செய்திட ஏதுவாக.

Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும். எடுத்துக்
காட்டாக, dinamalar என மட்டும் அட்ரஸ் பாரில் டைப் செய்திட்டால்,www.dinamalar.com என மாற்றும்.

Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.


7. தேடல்:

Ctrl+K, Ctrl+E – பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். பிரவுசருக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும்.

(இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை; அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)

Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.

Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.

Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.

Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.


8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:

Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப் படும்.

Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப் படும்.

Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.

Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.


9. மற்ற செயல்பாடுகள்:

Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.

Ctrl+S – உங்கள் கம்ப்யூட்டரில், அப்போதைய தளம் பைலாகப் பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.

Ctrl+O –உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் திறக்கப்படும்.

Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட் (source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் திறக்கப்பட மாட்டாது).

F12 – டெவலப்பர்களுக்கான டூல் பாக்ஸ் திறக்கப்படும். (இந்த ஷார்ட்கட் கீ பயர்பாக்ஸ் பிரவுசரில் செயல்படாது.)


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes