3டி (3-D) ஐபோன்கள் விரைவில் அறிமுகம்

கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம்.

தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த முயற்சிவெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.


2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்

அவ்வப்போது இணையத்தில், சில சேவைத் தளங்கள் மிகப் பிரமாதமாக, புதிய கோணங்களில் மக்களுக்கு வசதிகளைத் தருவதற்காகத் தொடங்கப்படும். பல மக்களிடையே பிரபலமாகி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும்.

சில தளங்கள், தொடர்ந்து ஆதரவு இல்லாத நிலையில் முடங்கிப் போகும். அது போல 2010 ஆம் ஆண்டில் இயக்கத்தை நிறுத்திய சில தளங்களை இங்கு காணலாம். இந்த தளங்களில் சில அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் மனதில் அவை என்ன மாதிரியான சேவைக்குத் தொடங்கப்பட்டன என்று தெரிய வரும்.

சில தளங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா என்ற கேள்வியை உங்கள் மனதில் தோற்றுவிக்கும். இங்கு தரப்பட்டுள்ள தளங்கள் குறித்து எண்ணிப் பாருங்கள்.


1. கூகுள் வேவ் மற்றும் பஸ்:

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் வேவ் (Wave) என்று ஒரு சேவையைத் தொடங்கியது. இந்த தளம் இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அல்லது வேர்ட் ப்ராசசர் என எந்த வகைக்கும் உள்ளாக வரவில்லை. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு ஸ்வீட் கொழுக்கட்டையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இதனைப் பயன்படுத்தியவர்கள், இதன் செயல் தன்மை புரிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டனர். அடுத்து ஒரு ஆண்டுக்குப் பின் கூகுள் பஸ் (Buzz) என்று இன்னொரு வசதியைத் தொடங்கியது. இது ஜிமெயிலின் இணைந்த பகுதியாய் ஆக்கப்பட்டது.

பின்னர் இது நீக்கப்பட்டது. கூகுள் அமைத்த வேவ் இன்னும் மூடப்படவில்லை. இதனை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருந்தால், இப்போதும் சென்று பழைய தகவல்களைப் பெறலாம். ஆனால் ஆதத்த் வசதி எடுக்கப்பட்டது.


2. கூல் (Cuil) இணைய தேடுதளம்:

இந்த கூல் தளம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் பெரிதாக எழுதி இருந்தோம். இந்த தளத்தை அமைத்தவர்களும், உலகையே மாற்றும் தேடுதல் தளம் என்று இதனை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் எதனையும் மாற்றவில்லை.

இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலர் இந்த தளத்தை முற்றுகை இட்டதால், அதன் சர்வர் திணறியது. அப்போது இந்த தேடுதல் தளம் தானாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலான முடிவுகளைத் தரத் தொடங்கியது. அறிமுகத்திற்கு முன்னால், இது குறித்து கூல் தளத்தை அமைத்தவர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

12,000 கோடி இணைய தளங்கள் இதனுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கூகுள் 4,000 தளங்களைத்தான் இன்டெக்ஸ் செய்து வைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கூல் தேடுதளம், தளங்களின் பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதாக அறிவித்தது.

கூடுதலாக சார்ந்த தளங்களின் பட்டியலையும் தருவதாகக் கூறியது. ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி ஒருநாள் கூல் தேடுதல் தளம் மூடப்பட்டது.


3. பேஸ் புக் லைட் (Facebook Lite):

2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் பேஸ்புக் தளத்தின் சிறிய அளவிலான சுருக்குத் தளமாக பேஸ்புக் லைட் அறிமுகமானது. இதன் மூலம் வேகம் குறைந்து செயல்படும் இணைய இணைப்பில், வேகமாக பேஸ்புக் தளத்தைக் கையாள முடியும் என பேஸ்புக் திட்டமிட்டது.

lite.facebook.com என்ற தளம் உருவாக்கப்பட்டது. இந்த தளம் சென்றவர்கள், இதில் விளம்பரங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த சேவையும் தளமும் அடுத்த சில மாதங்களிலேயே எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.


4. விண்டோஸ் லைவ் ஸ்பேஸ்:

கூகுள் நிறுவனத்தின் வேவ் போல, மைக்ரோசாப்ட் வழங்கிய லைவ் ஸ்பேஸ் வசதியும் இன்னும் மூடப்படவில்லை. ஆனால், அடுத்த மாதம் முதல் இந்த தளத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம்; புதியதாக எதனையும் இணைக்க முடியாது.

இதற்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் வேர்ட் ப்ரெஸ் தளத்திற்குத் தன் பதிவாளர்களை மாற்றிக் கொள்ளச் செய்தது. மேலே காட்டப்பட்டுள்ள தளங்களைப் போல, பல இணைய சேவைத் தளங்கள் 2010 ஆம் ஆண்டில் மூடப்பட்டன. ஆனால் அவை மக்களிடம் அவ்வளவாகப் பிரபலமாகத தளங்கள் என்பதால், இங்கு குறிப்பிடப்படவில்லை


யு-ட்யூப் பெற்ற புதிய தள முகம்

இணையத்தில் மிக அதிக அளவில் வீடியோ சேவையினை வழங்கி வரும் தள நிறுவனப் பிரிவுகளில் யு-ட்யூப் இணைய தளம், எப்போதும் முதல் இடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.

இரண்டு கோடிக்கும் மேலான வீடியோக்களை தினந் தோறும் மக்களுக்குக் காட்டி வருகிறது. ஆனால் அதன் இணைய தளத்தின் முகப்புத் தோற்றம், எந்தவிதக் கூடுதல் அலங்காரமின்றி மிகச் சாதாரணமாகவே இருந்து வருகிறது.

ஆனால் சென்ற வாரத்தில் இருந்து, யு-ட்யூப் இணைய தளம், பல புதிய சிறப்புகளைத் தன் முகப்பு பக்கத்தில் ஏற்றி சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சங்களை இங்கு காணலாம்.

1.இணைந்த பட்டியல் (Combined List): உங்களுடைய பதிவு, நண்பர்கள் செயல்பாடு, இவை சார்ந்த குறிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த பட்டியலாகத் தரப்படுகிறது.

2. எதனையும் மிஸ் செய்திடாமல்: சேனல் ஒன்று நான்கு வீடியோக்களை ஒரு நாளில் அப்லோட் செய்தால், இறுதியாக அப்லோட் செய்தது மட்டும் காட்டப்படாமல், அன்று அப்லோட் செய்யப்பட்டதை மட்டும் காட்டாமல், அனைத்தையும் காட்டிடும்.

3. எளிதான நீக்கம்: நீங்கள் விரும்பாத வீடியோ எதன் மீதாவது, கர்சரைக் கொண்டு சென்று, உடன் எக்ஸ் அழுத்தினால், அது உடனடியாக நீக்கப்படும்.

4. பார்த்தவற்றில் குறியீடு: ஏற்கனவே பார்த்த வீடியோக்கள் தலைப்பு, கிரே வண்ணத்தில் காட்டப்படும். இதன் மூலம் பார்த்த வீடியோக்களை நீக்க நீங்கள் தேட வேண்டியதில்லை.

5. மீண்டும் காண உதவி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்த வீடியோக்க<ள் மற்றும் நீங்கள் பிரியமானவை எனக் குறித்து வைத்த வீடியோக்களின் பட்டியல் இணைக்கப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் அடிக்கடிக் காண விரும்பும் வீடியோக்களை எளிதில் பிக் அப் செய்திடலாம்.

6. இன்பாக்ஸ் எளிது: உங்கள் இன்பாக்ஸுக்கான தொடர்புகள் (Links) முன்னாலும் நடுவிலும் வைக்கப்பட்டுள்ளன.

7. பழையன மீண்டும் கொண்டு வர: நீங்கள் வெகு காலம் முன்பு பார்த்த வீடியோக்களை முகப்பு தளத்திலிருந்தவாறே பெற்று ரசிக்க அனைத்து வசதிகளும் புதியதாகத் தரப்பட்டுள்ளன.


எப்படிச் செல்வது? இந்த புதிய கோலம் கொண்டுள்ள முகப்பு பக்கத்திற்கு எப்படிச் செல்வது? இந்த புதிய முகப்பு பக்கம் உங்கள் தனிப்பட்ட அனுபவத்திற்குச் செறிவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புதிய முகப்பு பக்கம் கிடைக்கும். அல்லது இப்போது பதிந்து செல்ல வேண்டும். யு-ட்யூப் தளம் சென்றவுடன் “Try a different homepage” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

இது உங்களை இன்னொரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கு உங்கள் பதிவினைக் காட்டினால், புதிய முகப்பு பக்கம் தரப்பட்டு, நீங்கள் பயன்படுத்தக் கிடைக்கும்.

நீங்கள் லாக் இன் செய்திடாமல் இதனைக் காண வேண்டும் எனில் http://www.youtube.com/homepage_experiment என்ற முகவரிக்குச் செல்லவும். ஆனால் புதிய முகப்பு பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் காண முடியாது.


உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்..

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.

அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


தானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த

கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன.

நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன.

இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா?

இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனைhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb963902என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள்.

சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும். தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம்.

இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns போலவே ஆகிய SilentRunners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis(http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும்.

புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும்.

இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை.

இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும்.

அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும்.


சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.


வெடித்து சிதறியது., தோல்வியில் முடிந்த ஜி.எஸ்.எல்.வி.

தகவல் தொடர்பு செயற்கை கோளை (ஜி சாட் -5 பி) சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி., எப்- 6 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்வி காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.


கிரையோஜெனிக் எரிபொருள் வேலை செய்வதில் பிரச்னை இருந்ததால் கிளம்பிய சில நொடிகளில் முதல்கட்டத்தில் இந்த ராக்கெட் திசைமாறி சென்றது. பல பகுதிகளாக வெடித்து

சிதறியது. கட்டுப்பாட்டை இழந்த சில நொடிகளில் கடலில் விழுந்தது.


ஏற்கனவே கடந்த வாரம் 20 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது ஆனால் கவுண்டவுன் துவங்கும் போது திடீர் தொழில் நுட்ப கோளாறு (வால்வில் கசிவு) ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.


கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) மாலை 4மணி 1 நிமிடம் அளவில் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. முன்னதாக இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 10 மணி அளவில் துவங்கியது.


கிளம்பிய சில ‌நிமிட துளிகளில் ராக்கெட் திசைமாறியது. உஉரிய இலக்கு நோக்கி செல்லாமல் கடலில் விழுந்தது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் நிருபர்களிடம் தெரிவிக்கவுள்ளனர்.


செயற்கைகோள் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு துறையை மேம்படுத்த உதவும்.இந்திய விண்வெளி ஆய்வு மையம், எஸ்.எல்.வி., - 3, ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என நான்கு வகையான ராக்கெட்கள் மூலம் இந்திய மற்றும் பிற நாட்டு தயாரிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட் வரிசையில் ஏழாவதாகும்.


இது 51 மீட்டர் உயரமும், 418 டன் எடையும் உடையது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி முன்னோக்கி செலுத்தும் 138 டன் திட எரிபொருளையும், 42 டன் ஹைபர்கோலிக் திரவ எரிபொருளையும் உடையது. இரண்டாம் பகுதி 39.4 ஹைபர்கோலிக் எரிபொருளையும், மூன்றாவது பகுதி 15.2 டன் எடை உடைய திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் பகுதியையும் உடையது.


செயற்கைக்கோள் முழுக்க, முழுக்க தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் தொலைதொடர்பு, தொலை மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியிருக்கும். தற்போதைய தோல்விக்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.இஸ்ரோ விளக்கம் :


ஜி.எஸ்.எல்.வி., எப்-6 ராக்கெட் வெடித்தது குறித்து 25 மற்றும் 26ம் தேதிகளில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே ராக்கெட் வெடித்ததற்கான முழு காரணம் தெரிய வரும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


மேலும் அவர் ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2.5 கி.மீ., தூரம் சென்றதும் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ராக்கெட்டுடனான கட்டுப்பாடு இழந்து விட்டது தோல்விக்கான காரணமாகயிருக்கலாம் எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.


இந்தியா முழுவதும் பேச 25 பைசா

மொபைல் சேவையில், 2.75ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில் ஜி.எஸ்.எம். சேவையை வழங்கி வரும் வீடியோகான் நிறுவனம், சென்ற வாரம் அதிரடியாய், இந்தியா முழுவதும் பேச, நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே கட்டணம் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்ற நவம்பரில், மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த வரவேற்பைப் பெற்றதால், தற்போது இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரி பெய்ட் சிம் மட்டுமே இந்த நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முறை ரீசார்ஜ் செய்கையில், குறைந்த தொகையான ரூ.25 மற்றும் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த திட்டம் தானாக அமல்படுத்தப்படும்.

மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாக 50% உயர்ந்தது என்றும், அதே போல இந்தியா முழுமையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக, இந்நிறுவன முதன்மை விற்பனை அதிகாரி சுனில் டான்டன் கூறினார்.

ட்ராய் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் மொபைல் போன் இணைப்பினை 68 கோடியே 77 லட்சம் பேர் பெற்றிருந்தாலும், அவர்களில் 70% பேர் மட்டுமே தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வருவதாக, தொலைதொடர்பு பிரிவினைக் கட்டுப்படுத்தும் ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.

அதாவது 48.29 கோடி பேர் தொடர்ந்து மொபைல் இணைப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக இந்த பிரிவில் சேவை நிறுவனங்களாக நுழைந்த சிஸ்டமா ஷ்யாம், எஸ்.டெல், யூனிடெக், லூப், வீடியோகான் மற்றும் எடில்சாட் ஆகியவை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, மிகவும் குறைந்த அளவிலேயே கொண்டுள்ளனர்.

இந்த வகையில், பாரதி ஏர்டெல் 90% மற்றும் ஐடியா 88% பேர் தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.


குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட்டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.

பிடிஎப் வியூவர் sandbox என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது. இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான்.

இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும்.

சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விண்டோக்களை வகைப்படுத்த

நீங்கள் அடிக்கடி பைல்களை ஒரு போல்டரிலிருந்து அடுத்த போல்டருக்கு மாற்றுபவரா? நிச்சயம் நாம் அனைவருமே அதனை செய்வோம். அல்லது ஒரு புரோகிராமிலிருந்து இன்னொரு புரோகிராமிற்கு பைலை மாற்றுவோம்.

அதே போல பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து, அடிக்கடி புரோகிராம் மாறி பணியாற்றுவோம். எடுத்துக் காட்டாக, வேர்டில் ஒரு பைலையும், பேஜ் மேக்கரில் ஒரு பைலையும், எக்ஸ்புளோரர் விண்டோவினையும் வைத்துக் கொண்டு பணியாற்று வோம்.

இவற்றில் அடுத்தடுத்துச் செல்ல ஆல்ட் + டேப் உபயோகித்து போல்டருக் கு போல்டர் தாவி பைல் களைக் காப்பி செய்திடுவோம் அல்லது மாற்றுவோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. உங்கள் விண்டோவினை அதற்கேற்ற வகையில் முதலில் சரி செய்து நிறுத்த வேண்டும்.

எந்த விண்டோக்களில் நீங்கள் செயலாற்ற வேண்டுமோ அவை தவிர மற்றவற்றை மினிமைஸ் செய்திடவும். டூல் பாரில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Tile Windows Vertically” அல்லது “Tile Windows Horizontally” என்று எதனையாவது ஒன்றைத் தேர்ந் தெடுகக்வும். அவ்வளவுதான்.

இனி நீங்கள் செயலாற்ற தேர்ந்தெடுத்த விண்டோக்கள் இரண்டும் அருகருகே ஓடு அடுக்கிய மாதிரி நிற்கும். அல்லது படுக்கை வசத்தில் இருக்கும். இரண்டில் உள்ள பைல்களை அப்படியே இழுத்து விடுவதன் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது அடுத்தடுத்து மாறி, மாறிக் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்தலாம்.


30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.

அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.

நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ரோ வெளியானது

ஆண்ட்ரோ ஏ 60 என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது ஒரு டச் ஸ்கிரீன் கொண்ட, 3ஜியில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஆகும். இதன் அதிக பட்ச விலை ரூ.6,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 2.1 பயன்படுத்தப் படுகிறது. 3.2 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. ஸூம் வசதி மற்றும் பிளாஷ் தரப்பட்டுள்ளது.

வைபி, ஆக்ஸிலரோ மீட்டர், கிராவிட்டி சென்சார் ஆகியன தரப்பட்டுள்ளன. புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியன நெட்வொர்க் இணைப்பிற்கு உதவிடுகின்றன. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி தொழில் நுட்பங்கள் இணைந்து இயங்குகின்றன.

ஆடியோ, வீடியோ பிளேயர்கள் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. இதன் உள் நினைவகம் 150 எம்பி திறன் கொண்டது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதி தரப்பட்டுள்ளது. மெமரி அதிகப்படுத்த மெமரி ஸ்லாட் தரப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி 1280 mAh திறன் கொண்டது. எனவே, 600 மணி நேரம் இதன் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது.


யாஹூ மெசஞ்சர் 11

யாஹூ மெசஞ்சர் பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பு அண்மையில் (http://in.messenger.yahoo.com/beta/win) வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் யாஹூ மெயில் சோதனைத் (http://in.features.mail.yahoo.com) தொகுப்பும் வந்துள் ளது.

இவை இரண்டுமே, நண்பர்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய வழிகளைத் தருகின்றன. இணைப்பு பெறுவது, தகவல் பைல் பரிமாறுவது மற்றும் கிடைக்கும் தகவல்களை ஒழுங்கு படுத்தி அமைப்பதில், எளிய வேகமான வழிகள் தரப்பட்டுள்ளன.

இந்த பதிப்பு, நண்பர்களுடன் இணைய இணைப்பில் கேம்ஸ் விளையாடவும் வசதி தரப்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கையில், நண்பர் களுடன் இடம் மாற்றிக் கொண்டும் விளையாடலாம். யாஹூ மெசஞ்சர் உள்ளிருந்தவாறே, பேஸ்புக் இணைப்பும் பெற்று தகவல் பரிமாறலாம்.

மெயில் சோதனைத் தொகுப்பு, இன்பாக்ஸ் அமைப்பு, போட்டோ மற்றும் கோப்புகள் பங்கீடு, குறிப்பாகத் தேடிப் பெறுதல் ஆகியவற்றிற்கான வழிகளைத் தருகிறது. இதுவரை இருந்த தகவல் பரிமாற்ற வேகம் தற்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்பாக்ஸ் உள்ளிருந்தவாறே, போட்டோக்களைக் காணும் வசதி கிடைக்கிறது. இந்த இரண்டும் டெஸ்க்டாப், மொபைல் மற்றும் டேப்ளட் பிசிக்களில் செயல் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இணையத்தில் தகவல் பரிமாற்றம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்டதால், நண்பர் களுடனும், குடும்பத்தின ருடனும், செய்தி, போட்டோ மற்றும் பிறவற்றைப் பங்கிட்டுக் கொள்கையில், எளிய, பாதுகாப்பான சாதன வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவை வடிவமைக்கப் பட்டுள்ளதாக, இவற்றை வெளியிட்டு, அறிமுகப்படுத்தியபோது, யாஹூ நிறுவன நிர்வாக இயக்குநர் அருண் தெரிவித்தார்.


ஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி

கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும்.

அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.

இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது.

இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன.

சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன.


இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்

இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா. தேடுதல் தவிர வரைபடம் மற்றும் விளம்பரம் போன்ற பிற பகுதிகளும் சீனாவில் 'கூகுள்' வளர்ச்சி பெறுவதற்கான இடங்களாக திகழ்கின்றன' என, 'கூகுள்' நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2006ல் 'கூகுள்' நிறுவனம் தனது 'தேடுபொறி'யை சீனாவில் நிறுவியது. மிகக்குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது. இந்நிலையில், 'தியான்மென்' சதுக்கப் படுகொலை போன்ற, கடந்த சீன அரசின் அட்டூழியங்களை குறிக்கும் தகவல்களை தணிக்கை செய்ய வேண்டும் என, சீன அரசு உத்தரவிட்டது.

அதையேற்ற 'கூகுள்' சில விஷயங்களை தணிக்கை செய்தது. ஆனால் சீனா தொடர்ந்து 'கூகுளுக்கு' நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கிடையில் அந்நிறுவனத்தில் இ-மெயில்கள் சில இணையதள திருடர்களால் திருடப்பட்டன.

சீனா இதுகுறித்து விசாரிப்பதாக கூறிவந்ததே ஒழிய, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பிரச்னை ஒரு நிலையில் முற்றி, கடந்த மார்ச் முதல் சீனாவில் தனது 'தேடுபொறி'யை நிறுத்தி விட்டது கூகுள்.

அதையடுத்து கூகுளின் தேடுபொறி, ஹாங்காங்கில் இருந்தபடி செயல்படத் துவங்கியது. இதனால் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பெரும்பகுதியை சீன தேடுபொறி நிறுவனமான 'பெய்டு'விடம் இழந்தது.

அதன்பின் கடந்த ஜூலையில், ஹாங்காங்கிற்கு சேவையை திருப்பி விடுவதை 'கூகுள்' நிறுத்தியது. அதன்பின் சீன அரசு, அந்நிறுவனத்துக்கான உரிமத்தை புதுப்பித்தது.

இந்நிலையில் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் பேசிய அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டேஸ் கூறியதாவது: இணையதளத்தின் எதிர்கால இதயமாக சீனா திகழ்கிறது. தேடுதல் என்பது தவிர, வரைபடம் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது போன்ற எண்ணற்ற துறைகள் இணையதள உலகில் உள்ளன.

அவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சீனாவை பொறுத்தவரை 'கூகுள்' ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரு மகத்தான புரட்சிக்கு அது வழிகாட்டும் என நம்புகிறேன். 'கூகுள்' மீது சீன அரசு தாக்குதல் தொடுத்தது என்ற 'விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவண வெளியீடு பற்றி எங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. இவ்வாறு ஆலன் தெரிவித்தார்.


சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெற

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம்.

முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,

ஒருவேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.

அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள்.

இவர்களுக்காகவே, எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில்AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். அது இந்த வசதியில் ஒரு போனஸ் வசதியாகும்.

இந்த மந்திரத்தை அமைத்து செயல்படுத்திட, File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், இடது பக்கம் உள்ள Saveபிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

வலது பக்கம், Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல், நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பொறுங்கள், எப்படி சேவ் செய்யாத பைலை மீட்டுப் பெறுவது என்று சொல்லவில்லையே! File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில், கீழாக வலது மூலையில், Recover Unsaved Documents என்று ஒரு பட்டன் இருப் பதனைக் காணலாம்.

இந்த பட்டன், உங்களை புரோகிராம் தானாக, நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு, அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். இப்போதாவது ஞாபகமாக சேவ் செய்திடவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes