கோடையிலும் பலன்தரும் 'மஞ்சம்புல்'

விழுப்புரம் பகுதியில் கோடை காலத்திலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மஞ்சம் புல் (தீவனப் புல்) பயிர் செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கம், காகுப்பம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக பல விவசாயிகள் மஞ்சம் புல் பயிர் செய்து வருகின்றனர்.இதனை நிலையான வருமானமுள்ள தொழிலாக செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர்.

சுற்றுப் பகுதியில் வேறெங்கும் இல்லாத அளவில் 25 ஏக்கர் அளவிற்கும் மேற்பட்ட பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மஞ்சம் புல் பயிரிடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிகளவில் மாடுகள் வைத்திருந்தனர். தற்போது நகரை ஒட்டிய பகுதியான இங்கு விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டு விவசாயம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தொடர்ந்து பெரும்பாலான வீடுகளில் மாடுகள் வைத்திருந்தவர்களுக்கு அவைகளுக்கு வழங்க புற்கள் வைக்கோல் போன்றவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் ஆங்காங்கே இருந்த சிறிய அளவான இடங்களில் மஞ்சம்புற்களை வைத்து தங்களது கால்நடைகளுக்கு அறுத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு பகுதியில் இருந்து மஞ்சம் புல் வாங்க பலர் வந்ததால் இதன் தேவை அதிகரித்தது. அதனால் சிறிய விவசாயிகள் தங்களுக்கு இருந்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் அளவில் புற்களை நிரந்தர பயிராக செய்யத் துவங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் 50 காசு ரூ.1 க்கு ஒரு கட்டு என விற்பனை செய்யத் துவங்கினர். தற்போது அதன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ரூ.3.50 என விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த புற்கள் தொடர்ந்து பயன் தந்து வருகிறது. ஒரு முறை பதியம் வைத்தால் பல ஆண்டுகள் வரை இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும்.

இவ்வாறு வளரும் தளிர்களை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். அறுவடையின் போது நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தால் விவசாய நிலங்களில் புற்கள்கூட கிடைப்பதில்லை. இதனால் மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகள் அவைகளுக்கு உணவாக மஞ்சம் புல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது கூடுதலான மஞ்சம் புல் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலான பகுதியில் புல் விளைச்சலுக்கு பதியம் செய்து வருகின்றனர்.

கோடையாக இருந்தாலும் மழைக்காலமாக இருந்தாலும் அனைத்து சீசன்களிலும் பயன் தரும் இந்த மஞ்சம் புல் பயிர் வகையை விவசாயிகள் செய்து பயன்பெறலாம். இதற்கென அதிகமான இட வசதி தேவையில்லை. சிறிய இடத்தில் கூட பயிர் செய்து தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதோடு வெளியில் விற்பனை செய்து வருவாயும் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அள்ள அள்ள குறையாத செல்வம் என்பதைப் போல அறுக்க அறுக்க வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் பயன்பெறலாமே.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes