புளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்?

புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது.

அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

அவர் அப்படி என்ன செய்தார்? என்று கேள்வி எழுகிறதா? 900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.

பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.

986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது,

நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.


ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.

ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே, முழு முகவரியினைக் காட்டும்.

இரு வகையான முகவரிகளை ஜிமெயில் நினைவில் கொள்கிறது. முதலில் நாம் இதன் முகவரி ஏட்டில் பதிந்து வைத்திடும் முகவரிகள் -- தனி நபர்கள், நிறுவனங்கள், மையங்கள், வலைத்தளங்கள் போன்றவை. இவை எல்லாம் நமக்கு எப்போதும் தேவை இருக்கும் என நாம் நம்முடைய முகவரி ஏட்டில் பதிந்து வைக்கிறோம்.

மற்றவை எல்லாம் நாம் மின்னஞ்சல் அனுப்பும் முகவரிகள். இவற்றை நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் பயன் படுத்தாமலேயே விட்டுவிடுவோம். ஆனால் ஜிமெயில் இதனை நினைவில் வைத்து, அதற்கான எழுத்துக்களை டைப் செய்த வுடன் நமக்கு நினைவூட்டும்.

பலவழிகளில் சிந்தித்தால் இது நல்லதொரு உதவியாகவே தெரியும். ஆனால் சில வேளைகளில் இது நமக்கு எரிச்சலையும் தரும். எடுத்துக்காட்டாக, முகவரி ஏட்டில் நாம் பதிந்து வைத்து, நாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பும் ஒருவரின் முகவரி யில் உள்ள முதல் இரு எழுத்துக்களில், இன்னொருவரின் முகவரியும் தொடங்கி இருக்கும்.

இந்த இரண்டாவது நபர் நமக்குத் தேவை இல்லாதவர். என்றோ ஒருநாள் இவருக்கு அஞ்சல் அனுப்பி இருக்கலாம். அப்படி இருக்கையில், முதலாவதாகக் குறிப்பிட்ட நம் நண்பருக்கு அஞ்சல் அனுப்ப முயற்சிக்கையில், இதனையும் சேர்த்து, அல்லது இரண்டாவது நபரின் முகவரியை, ஜிமெயில் காட்டும்.

அவசரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து நம் நண்பருக்கு அனுப்ப வேண்டிய அஞ்சலை அனுப்பி விடுவோம். இதனைத் தவிர்க்க, அந்த இரண்டாவது முகவரியை நீக்க எண்ணுவோம். ஆனால், எப்படி நீக்குவது? தெரிந்து கொள்வோமா!

ஜிமெயில் இணைய தளத்தில், மேல் இடது மூலையில் Gmail என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Contacts என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது சர்ச் (search) கட்டத்தில் நீங்கள் நீக்க விரும்பும் முகவரியை டைப் செய்திடத் தொடங்கவும்.

தேவையற்ற அந்த முகவரி தென்பட்டவுடன், அதனைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது, அந்த முகவரியை உங்கள் தொடர்பு முகவரி ஏட்டில் பதியக் கூடிய அல்லது திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய பக்கம் கிடைக்கும். இங்கு நீங்கள் பெயரினை இணைக்கலாம், மாற்றலாம், முகவரியைத் தரலாம், பிறந்த நாளினைக் குறிக்கலாம், ஏன், போட்டோவினைக் கூட போட்டு வைக்கலாம்.

ஆனால், இங்கு நம் நோக்கம் அது இல்லையே. மொத்தமாக நீக்க அல்லவா முயற்சிக்கிறோம். விண்டோவின் மேலாக உள்ள More மெனுவினைக் கீழாக இழுக்கவும். இங்கு கிடைக்கும் Delete contact என்பதில் கிளிக் செய்திடவும். முகவரி நீக்கப்படும். சில நிமிடங்களுக்குப் பின்னர், முகவரிக்கான எழுத்தினை டைப் செய்தால், முகவரி தரப்பட மாட்டாது.

முகவரியில் பதிந்து வைத்திருப்பதனை நீக்க வேண்டும் எனில், Delete Contact என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். தேவையற்ற அந்த முகவரியில் பெயர் உள்ள கட்டத்தினுள் கிளிக் செய்திடவும். அடுத்து CTRLA கிளிக் செய்திடவும். முகவரி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இப்போது Delete அழுத்தவும். முகவரி நீக்கப்படும்.


எந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம்?

இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும்; பல பிரவுசர்கள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.

பாதுகாப்பு தருவதில் சில பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உங்களுக்கான பிரவுசரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய தேவைகளை முன்னிறுத்தி, அதில் வெற்றி பெற்ற பிரவுசரைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துங்கள். இந்த தேர்வின் போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பிரவுசரும், அது இயக்கப்படும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பைப் பொறுத்தே இயங்கும்.

எனவே, உங்கள் ஹார்ட்வேர் வடிவமைப்புகளையும் கருத்தில் கொண்டு, பிரவுசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் பயன்படுத்திப் பார்க்க எடுத்துக் கொண்டவை அண்மைக் காலத்தில் தரப்பட்ட Chrome 17, Firefox 10, Internet Explorer 9 ஆகிய வையாகும். வேகம், பாதுகாப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் ஆட் ஆன் தொகுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றைத் தரவரிசைப்படுத்தினோம்.

முதல் இடத்தை, அடுத்து வந்த பிரவுசரை மிகக் குறுகிய மதிப்பெண்களில் முந்திக் கொண்டு பிடித்தது கூகுளின் குரோம் பிரவுசர் பதிப்பு 17. இதன் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கம், இணையப் பக்கம் இறங்குவதில் வேகம், சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் இதற்கு முதல் இடத்தை வழங்கியுள்ளன.

மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பதிப்பு 10 அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இதன் எச்.டி.எம்.எல்.5 கிராபிக்ஸ் இயக்கம் மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் கூடுதல் வேகத்தினைத் தருகிறது. இதன் இன்னொரு தனிச் சிறப்பு, இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள். இவற்றின் மூலம் இணையத்தில் உலா வருவது எளிதாகவும், வேடிக்கையான ஓர் அனுபவமாகவும் உள்ளது.

மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, சற்று குறைவான மதிப்பெண் களே பெற்றது. உங்கள் பிரவுசருக்கான தீம் எதனையும் இது தருவதில்லை. இந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தருகிறது.

மேலும் விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தாமல், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பேவரிட் தளங்களின் முகவரிகளை இணைக்க முடியாது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இது சிறப்பாகவே இயங்குகிறது. எச்.டி.எம்.எல். 5 குறியீடுகளை மிக வேகமாக இயக்குகிறது. இந்த இரண்டின் செயல்பாட்டில் இது மற்ற பிரவுசர்களுக்கு இணையாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இனி ஒவ்வொரு பிரவுசரின் நிறை குறைகளைக் காணலாம்.


1. கூகுள் குரோம் பதிப்பு 17:

மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள பிரவுசர். இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை முடங்கிப் போனால் பிரவுசரின் இயக்கத்திறனை நிறுத்தாமல், அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை இந்த பிரவுசர் கொண்டுள்ளது. இதன் பல அடுக்கு பாதுகாப்பு (Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது.

மனதைக் கவராத அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ். ரீடர் இணைத்துத் தரப்படாததனைச் சொல்லலாம்; அடுத்து இதன் டிசைன் மிகவும் அழகாக இல்லாதது இணையப் பயனாளர்களைக் கவர்வதில்லை.

இதன் மற்ற சிறப்பம்சங்கள்:

பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக் கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை. இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப் பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம்.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை, அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது. பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.

வேறு மொழிகளில் உள்ள இணைய தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும், அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.


2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10:

பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான பிரவுசர். எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை. ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள், பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலஹீனமே. மார்ச், 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர், இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன,

மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.


3. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9:

பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற பிரவுசர்கள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.

ஒவ்வொரு தனி நபருக்குமாக, குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப் பதில் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது, பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.


பயர்பாக்ஸில் குக்கீகள்

ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள்.

பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் இயக்குகின்றன.

பொதுவாக வே, பிரவுசர்கள் அனைத்துமே, குக்கீ பைல்களை உருவாக்கிப் பதிப்பதனை மாறா நிலையில் தாங்களாகவே இயக்கி செயல்படுத்தும் வகையில் வைக்கின்றன. இருப்பினும், பயனாளர் எண்ணினால், அவற்றை இயங்காமலும், இயங்கும் நிலையிலும் வைக்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற்றை எப்படிக் கையாளலாம் எனப் பார்க்கலாம்.

டூல்ஸ் (Tools) மெனுவில், ஆப்ஷன்ஸ் (Options) பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Privacy என்ற டேப்பினை இயக்கவும். இதில் History என்ற பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். குக்கீ பைல்களை முழுமையாக இயங்கா நிலையில் வைத்திட, Accept cookies from sites என்ற இடத்தில் இருக்கும் டிக் அடை யாளத்தை எடுத்துவிடவும்.

இதன் மூலம் தர்ட் பார்ட்டி குக்கீ பைல்களையும் எடுத்துவிட முடியும். அல்லது குக்கீ பைல்களை, அவை உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாள்கள் வரை இருக்கட்டும் என எண்ணினால், Keep until என்ற கீழ் விரி மெனுவில் எத்தனை நாட்கள் அவை இருந்து இயங்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு முறை குக்கீகள் உருவாக்கப் படுகையில், அவற்றை வைத்துக் கொள்ளவா ? வேண்டாமா? என்ற ஆப்ஷன் உங்களிடம் கேட்கப் பட வேண்டும் எனில், ask me every time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆனால், இதனைத் தேர்ந்தெடுத்தால், அடிக்கடி இந்த ஆப்ஷன் நம்மிடம் கேட்கப்படும். பின்னர், அதனைக் கண்டு எரிச்சல் படக் கூடாது.

இவை குறித்த கூடுதலான கட்டுப்பாடு வைத்துக் கொள்ள, அல்லது குக்கீகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள என்ற Show Cookies பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் குக்கீகள் அனைத்தையும், அல்லது சிலவற்றை நீக்கலாம், இயக்கலாம், முடக்கலாம் அல்லது கட்டுப்பாட்டில் வைக்கலாம்.


மாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்

தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்:

கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.

2. ஒரே அழுக்கு:

கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லா விட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?

3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல் :

நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால் தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?

4. பேக் அப்பா? அப்படின்னா?

நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக் கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரி கள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)

5. விட்டேனா பார் வீடியோ :

அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடு கிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?

6.ஷட் டவுண்:

லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.

7. படுக்கையே தொழில் கூடமாக:

லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்?

(குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுட னேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)

8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்:

பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்து விடுகின்றனர்.

இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக் கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்ப தில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றை யும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.

9. உங்கள் பாஸ்வேர்ட்:

ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன் படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?

10. பேட்டரி ட்யூனிங்:

லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமை யாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?


புதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் வெளி வரும் போதெல்லாம், முதல் நாளே கடைகளில் பெருங் கூட்டம் அலை மோதும். அன்றே வாங்கியாக வேண்டும் என்பது போல மக்கள் வெறியுடன் கடை முன் கூடி வாங்க முயற்சிப்பார்கள்.

இப்போதெல்லாம், ஆப்பிள் தன் இணைய தளம் மூலமும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை மையங்களில் சென்று வாங்க முடியாமல் திரும்பும் ஏமாற்றத்தினைத் தவிர்க்க, மக்கள் இணைய தளத்தில் புதிய ஐ-பேடிற்குப் பதிந்து வைத்துள்ளனர்.

ஆனால், பதிந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததற்கு மேலாக இருப்பதால், அவர்களுக்கு மார்ச் 16 அன்று வழங்க முடியாத நிலைக்கு ஆப்பிள் தள்ளப் பட்டுள்ளது, இதனால், ஒரு நபர் இரண்டு ஐ-பேட் மட்டுமே ஆர்டர் செய்திட முடியும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

பதிந்தவர்கள் மார்ச் 19 வரை காத்திருக்க வேண்டியதிருக்கும் என்ற தகவலும் தரப்பட் டுள்ளது. இதனால், விற்பனை மையங்களில் கூட்டம் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.

மையங்களில் கூட்டம் கூடுகிறது என்ற தகவல் உண்மையா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சென்ற முறை, ஜனவரி மாதத்தில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், ஐபோன் 4 எஸ் விற்பனை செய்திடும் ஆப்பிள் மையம், அறிவித்தபடி விற்பனையை மேற்கொள்ள முடியாது என அறிவித்த போது, கூடி இருந்தவர்கள், முட்டைகளையும், கற்களையும் கடை மீது எறிந்து சேதப்படுத்தினார்கள்.

2012 ஆம் ஆண்டில், 7 கோடி புதிய ஐ-பேட் விற்பனை செய்யப்படும் என ஆய்வு மையங்கள் எதிர்பார்த்துள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 71% உயர வழி வகுக்கும்.


படங்களைக் கையாள புதிய தளம்

போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற் கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணைய தளங்கள் உள்ளன. சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம்.

படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொலாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப் படுவார்கள்.

இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் காண நேர்ந்தது. அதன் பெயர் இமேஜ் ஸ்பிளிட்டர். இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://imagesplitter.net/.

இந்த தளத்திற்குச் சென்றவுடன், நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட பைலை அப்லோட் செய்திட வேண்டும். பைலின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல் பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு டவுண்லோட் செய்திடக் கிடைக்கும்.

இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன் படுத்தலாம்.

இதில் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்? பார்மட் மாற்றலாம். jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய பார்மட்கள் கையாளப்படுகின்றன. பார்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட, உங்களுக்கு எந்த பார்மட்டில் தேவையோ, அந்த பார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு, எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ, அந்த அளவினை தந்தால் போதும். அளவுகளைத் தந்த பின் “Resize image” என்ற பட்டனில் கிளிக் செய்தால், அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில், நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால், அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.

இந்த தளத்தின் பெயர் படங்களை வெட்டுவது (imagesplitter) என உள்ளது. அதற்கேற்ற வகையில், நாம் தரும் வரையறைகளின் படி, ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல பைல்களாக இந்த தளம் தருகிறது. பட பைல் ஒன்றை அப்லோட் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும்.

அதனை விரித்து, பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.

இதற்குப் பதிலாக, 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில், படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர், நமக்கு ஓகே என்றால், வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம்.

இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம்.

மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை. அக்கவுண்ட் எதனையும் திறக்க வேண்டியதில்லை. பாஸ்வேர்ட் எதுவும் கிடையாது. போகிற போக்கில் தளம் சென்று, நமக்கு வேண்டிய செயல்பாட்டினை மேற்கொண்டு சென்று கொண்டே இருக்கலாம்.


கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்லெட்

கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவருகிறது. இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது.

இந்த டேப்லெட் 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.

கூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது.

இந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்

மொபைல் ஸ்மார்ட் போன் விற் பனைச் சந்தையில், பன்னாட்டளவில் நோக்கியாவின் இடத்தை சாம்சங் கைப்பற்றினாலும், இந்தியாவில் மொத்த மொபைல் போன் விற்பனையில், நோக்கியாதான் முதல் இடத்தில் உள்ளது.

சைபர்மீடியா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் வரவினால், மொத்த மொபைல் போன் விற்பனை, 2011 ஆம் ஆண்டில் 10% உயர்ந்து 18 கோடியே 34 லட்சமாக உயர்ந்தது.

2010 ஆம் ஆண்டில் இது 16 கோடியே 65 லட்சமாக இருந்தது. ஸ்மார்ட் போன்கள் விற்பனை 87% உயர்ந்து, 1 கோடியே 12 லட்சமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 60 லட்சமாக இருந்தது. மற்ற வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் விற்பனை 7% உயர்ந்து 17 கோடியே 22 லட்சமாக இருந்தது. இது 2010 ஆம் ஆண்டில் 16 கோடியே 5 லட்சமாக இருந்தது.

மொத்த மொபைல் போன் விற்பனையில், நோக்கியா 31% பங்கினைக் கொண்டு, முதல் இடத்தைப் பிடித்தது. சாம்சங் இரண்டாவது இடத்தில் 15% பங்கினைக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டில் மட்டும் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், 30 நிறுவனங்கள் 150 மாடல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தன.

நடப்பு 2012 ஆம் ஆண்டில், என்.எப்.சி. மற்றும் முப்பரிமாண கேம்ஸ் ஆகிய புதிய வசதிகளுடன் அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்கள் வரும் என எதிர்பார்க் கலாம். இந்த ஆண்டில், நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7.5 மாங்கோவினைத் தன் மொபைல் போன்களில் தர இருக்கிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில், பல புதிய ஸ்மார்ட் போன்களை, நோக்கியா தரும் என எதிர்பார்க்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிம் இயக்கம் கொண்ட மொபைல் போன்கள், மொத்த எண்ணிக்கையில் 61% இடத்தைக் கொண்டிருந்தன. இது சென்ற ஆண்டில் 57% ஆக இருந்தது. இந்த வகையிலும், நோக்கியா ஜி-பை நிறுவனத்தை முதல் இடத்தில் இருந்து தள்ளிவிட்டது. 13% போன்கள் மூலம் முதல் இடத்தை நோக்கியா பிடித்தது.

சாம்சங் 8% பங்கினை மேற்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த மைக்ரோ மேக்ஸ் மூன்றாம் இடத்தைக் கொண்டது.

2011 ஆம் ஆண்டில் 3ஜி போன்கள் அதிகம் வரப்பெற்றன. 250 மாடல்களை 30 நிறுவனங்கள் வெளியிட்டன. 153% கூடுதலாக, 1 கோடியே 80 லட்சம் மொபைல் போன்கள் வெளியிடப் பட்டன. 3ஜி இன்னும் அதிக மக்களைச் சென்று அடையவில்லை.

மொத்த இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் சந்தாதாரர்களே இந்த வகையை மேற்கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் மிகவும் மோசமான நெட்வொர்க் இணைப்பாகும். பல இடங்களில், 3ஜி நெட்வொர்க் இன்னும் தரப்படவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் தினம் ஒரு தகவலைக் கேட்டு வரும் மக்கள், இந்த ஆண்டில், புதிய நிறுவன இணைப்புகள், முயற்சிகள், கட்டண விகிதங்களை நிச்சயம் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.


கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்

கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.

வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும்.

எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும்.

கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது. 94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.

சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.

ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:

+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா.––netbook
+11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech

* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.

~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன் படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.

.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சி யாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15

ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற ஞீஞுஞூடிணஞு என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக் கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.

குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம்.

ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.

site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இøணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks “Matthew DeCarlo” site:techspot.com எனக் கொடுக்கலாம்.


வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4

வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார்

புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.

புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.

அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.


விண்டோஸ் 8 இயக்க என்ன தேவை?

விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில் மிகவும் எளியது.

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம்.

1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக.

2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும்.

3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி.

4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும்.

நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.


வியப்பைத் தரும் விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.

வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன. அவற்றில் http://news.cnet.com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.

சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார் வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.

ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன.

ஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல தோற்றத்திரை கிடைக்கிறது. இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம்.

இதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் கிடைக்கிறது.

இடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது. அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன.


சார்ம்ஸ் பார் (Charms Bar):

விண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப் பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன. உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர் வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது.

இவை உங்கள் அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க் ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால் போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும். அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டன் இல்லை.


செட்டிங்ஸ்:

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை தரப்பட்டுள்ளன.


கேம்ஸ்:

இரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2) மற்றும் சாலிடேர் கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது. ஆனால் பலரும் விரும்பும் மைன்ஸ்வீப்பர் (Minesweeper) இல்லை.


எக்ஸ்புளோரர்:

பழைய வகை டெஸ்க்டாப் இன்னும் கிடைக்கிறது. குறிப்பாக எக்ஸ்புளோரர் மிக வேகமாக இயங்குகிறது.


எக்ஸ்பாக்ஸ் லைவ்:

சில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும் விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


சீதோஷ்ணநிலை:

அன்றைய சீதோஷ்ண நிலை காட்டும் வசதி, சிஸ்டத்தில் இணைந்து கிடைக்கிறது. சீதோஷ்ண நிலை வரும் நேரத்தில் எப்படி இருக்கும் மற்றும் சீதோஷ்ண நிலைக்கான மேப் ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.

பி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர் தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை எங்கு பார்ப்பது? ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா! அவற்றைப் பார்க்க வேண்டுமா? சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா?

உங்கள் விரலை அல்லது கர்சரை திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள். கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள் காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும்.


செமாண்டிக் ஸூம் (Semantic Zoom):

நீங்கள் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய வேண்டுமா? கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம் கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம் கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம்.

உங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச் செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.


போட்டோ லைப்ரேரி:

போட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும் பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது. எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி, அல்லது மவுஸ் கிளிக் செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக்
கொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு, டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது. திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும் மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர், பின்னணியில் சென்று விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும் வகையில், இது இயங்குகிறது.

கம்ப்யூட்டர் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட, இந்த சிஸ்டத்திலேயே வசதி தரப்பட்டுள்ளது.

இதில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது. நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால், விண்டோஸ் டிபன்டர் பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் விண்டோஸ் 8 ஒரு சோதனைப் பதிப்புதான். இறுதி வெளியீட்டிற்கு முன்னர், நிச்சயம் பயன் தரும் மாற்றங்கள் சில இருக்கும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes