ஆச்சரியப்படுத்தும் விண்டோஸ்

சென்ற மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 

பல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.


விண்டோஸ், அதனைத் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக அளித்து வருகிறது. விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே அதன் வருமானத்தின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, முதல் 500 நிறுவனங்களில் முன்னணி இடத்தைப் பெற உதவியுள்ளது.

அண்மைக் காலத்திய கணக்குப்படி, ஏறத்தாழ 136 கோடி பேர் பன்னாட்டளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துகின்றனர். (இவர்களில் காப்பி எடுத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). இது தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மக்களைப் போல ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

விண்டோஸ் 95 வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில், பெரிய விற்பனையைத் தந்தது. முதல் ஆண்டில், 4 கோடி சிஸ்டம் விற்பனையானது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆறு மாதங்களில், 10 கோடி பேர் பெற்றனர். 

2009 ஆம் ஆண்டிலிருந்து, விற்பனையான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 உரிமங்களைக் கணக்கிட்டால், அது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.

பார்ச்சூன் 500 (Fortune 500) நிறுவனப் பட்டியலில், மைக்ரோசாப்ட் 35 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

1983ல் அறிமுகப்படுத்தப்பட்டு, விண்டோஸ் மற்ற கிராபிகல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விண்டோஸ் எக்ஸ்பி கொடி கட்டிப் பறந்த போது, பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், கிட்டத்தட்ட 100 சதவீத இடத்தை எக்ஸ்பி கொண்டிருந்தது எனலாம்.

ஒரிஜினல் எக்ஸ் பாக்ஸ் வாங்கிப் பயன்படுத்தியதன் மூலம், 2 கோடியே 40 லட்சம் பேர், விண்டோஸ் சிஸ்டத்தினையே பயன்படுத்தினர். ஏனென்றால், இதில் பதியப்பட்டு இயக்கப்பட்டது விண்டோஸ் என்.டி. கெர்னல் பதிப்பின், மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும்.

ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு மிக அதிகமான அப்ளிகேஷன்கள், ஏறத்தாழ பத்து லட்சம், இருப்பதாகக் கூறப்படுகிறது. இது விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கான எண்ணிக்கையில் பக்கத்தில் கூட வர முடியாது. 

விண்டோஸ் சிஸ்டம் கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை 40 லட்சம் இருப்பதாக, 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அலுவலர் ஸ்டீவ் பால்மர் அறிவித்தார்.

விண்டோஸ் தான் வந்த காலத்திலிருந்து, இன்று வரை, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes