ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை வடிவமைக்க எச்.டி.சி. திட்டமிடுவதாக, இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முதன் முதலில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டது எச்.டி.சி. நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் 8 எக்ஸ் மற்றும் விண்டோஸ் 8எஸ் என இரண்டு மாடல்களை, எச்.டி.சி. முதலில் வெளியிட்டது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது.
எச்.டி.சி. 1 என்ற வரிசையில் மூன்று மாடல்களையும், அனைவரும் வாங்கும் நிலையில் டிசையர் என்ற பெயரில் எட்டு மாடல்களையும் எச்.டி.சி. வெளியிட்டது. வரும் டிசம்பருக்குள், டிசையர் வரிசையில், மேலும் இரண்டு அல்லது நான்கு மாடல்களை, இந்நிறுவனம் கொண்டு வரும்.
இவற்றுடன், எச்.டி.சி. 1 மேக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் ரூ.56,000 என்ற விலையில் வெளியிடப்படும்.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், எச்.டி.சி. நிறுவனத்திற்கு ஐந்து முதல் ஆறு சதவீத பங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில், இந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது 2 கோடியே 60 லட்சமாக உயரும். வரும் 2014ல் இது, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, போன்களின் விலையைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் உள்ளது.
எச்.டி.சி.15 சதவீத சந்தைப் பங்கினைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சித்திக் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment