ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது.
ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து மாதங்களுக்கு முன்பு, தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இந்த தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் கொடுத்த பின்னூட்டத்திலும், ஆய்வின் அடிப்படையிலும், இந்த தொகுப்பு மேம்படுத்தப்பட்டு, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் செல்லினம் பதிப்பு 2 ஆக வெளிவந்துள்ளது.
இதனையும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இலவசமாகத் தங்களின் ஆண்ட்ராய்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கெனச் செல்லவேண்டிய இணைய தள முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
இந்த புதிய பதிப்பில் கீழ்க்காணும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.
1. சொற் பிழை தவிர்த்தல்: தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்திடுகையில், நம்மையும் அறியாமல், நாம் சில பிழைகளை ஏற்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டாக, அஞ்சல் கீ போர்ட் மூலம் ""இளமை'' என்ற சொல்லை அமைக்கையில், பிழையாக, ""இலமை'' என அமைக்கலாம். ஷிப்ட் கீ சரியாக அழுத்தப்படாத்தால், இந்த பிழை ஏற்படும். ஆனால், இந்த புதிய பதிப்பில், ""இலமை'' என தட்டச்சு செய்தாலும், அதில் உள்ள பிழையை, செல்லினம் உணர்ந்து கொண்டு ""இளமை'' என்றே அடித்து அமைக்கும்.
2. எண்களை உள்ளிடுதல்: மொபைல் போனில் கிடைக்கும் கீ போர்டில், எண்களை உள்ளிடுகையில், [123] என்ற விசையைத் தட்டி, அதன் பின்னர் கிடைக்கும் அடையாளம் மற்றும் எண்களுக்கான குறியீடு கீ போர்டில் இருந்து எண்களைத் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்திடும் பழக்கம் தற்போது உள்ளது.
புதிய செல்லினம் பதிப்பில், முதல் வரிசையில் உள்ள கீகளைச் சற்று நேரம் தொடர்ந்து அழுத்தி, எண்களை அமைக்கலாம். இதே போல, அஞ்சல் கீ போர்டினைப் பயன்படுத்துபவர்கள், ல/ள, ர/ற, ந/ன/ண, ஆகிய எழுத்துக்களை, கீகளைத் தொடர்ந்து அழுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
3. பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் விரிவு: சொற்களை உள்ளீடு செய்கையிலேயே, உள்ளிடப்படும் சொல், இவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற வகையில், சில சொற்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் கிடைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் இதனை Predictive Text என அழைக்கின்றனர்.
செல்லினம் புதிய பதிப்பில், இந்த பட்டியலை விரித்துத் தெளிவாகப் பார்த்து பயன்படுத்தலாம். பட்டியலின் ஓரத்தில் தரப்படும் கீழ் நோக்கிய அம்புக் குறியினை அழுத்தினால், இது விரிவடையும்.
மேலே காட்டப்பட்ட சிறப்பம்சங்களுடன், மேலும் சில கூடுதல் வசதிகளையும் கொண்டதாக, செல்லினம் பதிப்பு 2 உருவாக்கப்பட்டு கிடைக்கிறது.
தமிழில் சொல் திருத்தியுடன் ஒரு மொபைல் போன் எடிட்டர் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். எச்.டி.சி. மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், தங்கள் மொபைல் சாதனங்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைந்தே செல்லினத்தை வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதல் பதிப்பு வெளியான பத்து மாதங்களில், செல்லினம் தமிழ்ச் செயலியினை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது, இது போல தமிழ்ச் சொற் செயலிகள், மொபைல் போன்களில் தேவைப்படுகின்றன என்பதனை உறுதி செய்கின்றன.
மாநில மொழிகளில் தான் இனி இணையப் பயன்பாடும், இணைய வழி வர்த்தகமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில், இது போன்ற சொல் செயலிகள் அதற்கான அடித்தளத்தினை அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
0 comments :
Post a Comment