அன்னையர்கள் தின வரலாறு

"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" என்பதற்கேற்ப இவ்வுலகத்தில் தாயை விட சிறந்த சக்தி எதுவும் கிடையாது.அப்படிப்பட்ட தாய்மையைப் போற்றும் வண்ணம் நாம் அன்னையர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம்.வாருங்கள் இந்த அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. மனிதர்களால் புராணங்களும், அதிசயக்கதைகளும் இதைச் சுற்றி பின்னப்பட்டன. 

ஆசியா மைனர், பிரிஜியாவில் வாழ்ந்த பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களா‌ல் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகும்.

கிரேக்க மக்களும் ரியா என்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வத்தை முழுமுதல் தாய்க்கடவுளாக வணங்கி வழிபட்டு வந்தனர்.

ரோமானியர்களும் தங்களது தாய்-கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர் ரோமானியர்கள் விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

மத்திய- காலங்களில் வேறொரு வகையில் இது கொண்டாடப்பட்டது. குழந்தைகளும், பெண்களும் பொருள் ஈட்ட வெளியூருக்குச் செல்வதனால், ஒரே ஒரு விடுமுறை நாளில்தான் அவர்கள் தங்கள் தாய்மார்களைக் காண வாய்ப்பு கூடும். இந்த ஒரு தின விடுமுறையும் 40 நாள் நோன்பு விழாவின் நான்காவது ஞாயிறன்று என்று வழக்கமிருந்து வந்தது. இப்படித்தான் அ‌ன்னைய‌ர் ‌தினம் என்ற ஒரு தினம் தொடங்கியது.

அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான முதல் ஆசையைத் தெரிவித்தவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜுலியா ஹார்டு ஹோவ் ஆவார்.

அன்னையர் தினம் என்ற தினத்தின் நிறுவனராக அமெரிக்காவை‌ச் சே‌ர்‌ந்த அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியையே குறிப்பிட வேண்டும். இந்தப் பெண்மணி 1864ல் அமெரிக்காவின் மேற்கு வர்ஜுனியா மாவட்டத்தில் உள்ள கிராஃப்டன் கிராமத்தில் பிறந்து வசித்து வந்தார்.

அமெரிக்காவில் சிவில் யுத்தம் முடிவடைந்த நேரத்தில் அன்னா ஜார்விஸ்க்கு ஒரு வயது. அந்தக் காலக்கட்டங்களில் மேற்கு வர்ஜினியாவில் குடும்பங்கள் இடையே பெரும் பகைமை இருந்து வந்தது. அன்னாவின் தாய் அன்னையர் தினம்' என்ற ஒன்று சில காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் கொண்டாடப்படும் என்று திரும்ப திரும்ப அன்னாவிடம் கூறியதாக தெரிகிறது. மேற்கு வர்ஜினியாவின் குடும்பப் பகைமைகள் ஒழிய அன்னையர் தினம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என அன்னாவிற்கு தோன்ற ஆரம்பித்தது.

அன்னாவின் தாய் மரணம் அடைந்தபிறகு, அன்னா அன்னையர் தினம் ஒன்றை உருவாக்க உறுதிபூண்டார். அவரின் இந்த உறுதியை அறிந்து கிராஃப்டன் அமை‌ச்ச‌ர் மே 12 1907ல் அமெரிக்காவில் முதல் அன்னையர் தினம் சேவையைத் துவங்கி வைத்தார்.

அதன் பிறகு தேசிய அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடுவதாக தீர்மானம் இடப்பட்டது. 1909 ல் எல்லா மாநிலங்களும் இந்த சிறப்புத்தினத்தை கொண்டாடத் துவங்கினர். மே 9 1914ல் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாம் ஞாயிறை எல்லா மாநிங்களுக்குமான அன்னையர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அன்னா தொடர்ந்து இது குறித்து கடிதங்கள் எழுதியும், பிரசங்கங்கள் செய்தும் வந்தார். பிறகு அன்னாவே அகில உலக அன்னையர் தின சங்கம் ஒன்றை நிறுவினார். 1948ல் அன்னா இறப்பதற்கு முன்னதாக இந்த தினம் உலகம் முழுவது‌ம் பரவியது. 

இ‌ன்றைய காலக‌ட்ட‌த்‌தி‌ல் ஏராளமான ௦உலக  நாட்டு  ம‌க்க‌ள் அன்னையர் தின‌த்தை கொ‌ண்டாடி ம‌கி‌ழ்‌கி‌ன்றன‌ர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes